செப்ரெம்பர் 4, 2010 க்கான தொகுப்பு

சென்ற சனிக்கிழமை ‘பீப்ளி (லைவ்)'(Peepli(Live)) என்ற ஒரு ஹிந்தி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பீப்ளி என்ற கிராமத்தில் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலை, அவர்களின் அவலத்தில் குளிர்காயும் வெகுஜன ஊடகங்களின் கூச்சல், விவசாயிகளின் துயரம்பால் அரசியல்வாதிகள் கொண்டுள்ள ‘அக்கறை’, இவையனைத்தையும் யதார்த்தமாய் நம் கண்முன் கொண்டு வரும் கதை. படம் இயக்கப் பட்ட விதம் அருமை! கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு, அவர்களின் துன்ப இன்பங்களின் (?) வெளிப்பாடு – இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் ஒரு சபாஷ்!

நமக்கு பிடித்த பொருள் இன்னொருவரிடம் இருக்கும்பொழுது நம்மிடமும் இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் இயல்பே. அந்த படம் பார்த்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய எண்ணமும் இதுவே. தமிழில் இப்படி சமுதாய சீர்க்கேடுகளை விளக்கடித்து காட்டும் படங்கள்…விரல் விட்டு எண்ணக்கூடியவையே. கடைசியாக என்னதான் வந்தது என யோசிக்கையில் ‘அங்காடி தெரு’உம், ‘கற்றது தமிழ்’உம் தான் சட்டென நினைவுக்கு வந்தது.
ஏன் இது போன்ற படங்கள் வருவதில்லை என சில ‘நல்ல’ இயக்குனர்களை கேட்க விரும்பினேன்.

“இப்ப கொஞ்சம் பிஸி…அப்பறம் வேணும்னா பாக்கலாம்”, என தட்டிக்கழித்தனர். அப்படி என்னதான் செய்கின்றனர் என விசாரித்து பார்த்ததில், ஒருவர் தன் முந்தைய படங்களை விட அதிகம் செலவு செய்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம். ‘உலகத்தரத்திற்கு’ நிகராய் தமிழ் படங்கள் இருக்குவேண்டும் என்ற அவா…இரவு பகல் பாராமல் உழைக்கிறாராம். கோடிக்கணக்கில் செலவு செய்து, ஒரு நிகழ்வை மேலோட்டமாக படம் பிடிப்பதே நம் இயக்குனர்களின் அகராதியில் ‘உலகத்தரத்திற்கு நிகர்’ என புரிந்துக்கொண்டேன்.

மற்றவர்கள் வீட்டில் என்ன கொதிக்கிறது என எட்டிப்பார்த்த எனக்கு, “அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைக்க முடியுமா சார்…எவ்வளவு காலத்துக்குத்தான் வருமைய பத்தியும், சாதிச்சண்டைய பத்தியும், பெண் விடுதலை பத்தியும் படம் எடுக்கறது சொல்லுங்க; ‘காதல்’ என்ற ஒரு புனிதமான உணர்வ இன்னொரு கோணத்துல, யாருமே இதுவர எடுக்காத ஒரு கோணத்துல எடுக்கறோம். 100 நாள் உறுதி சார்”, என்ற காய்ந்து போன ரொட்டித்துண்டே கிடைத்தது.
கொஞ்சம் அக்கறை கலந்த குரலில்,”இல்ல சார்…சமுதாயத்துல இருக்கற அவலங்கள படங்கள்ல காட்டும் போது தான மக்களுக்கு தங்கள சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியும்; அந்த புரிதல் இருந்தாத்தான தவறுகள தட்டிக்கேக்கும் துணிச்சல் அவங்களுக்கு வரும்”, என கேட்டு முடிப்பதற்குள்,

“என்ன பேசறீங்க சார்…நாங்க படங்கள்ல காட்டாத சமுதாய பிரச்சனைகளா?? நடக்கற தப்ப மட்டும் காட்டிட்டு நிறுத்தாம அதுக்கான தீர்வையும் சொல்றோமே “, என வந்தது வீராவேச பதில்.

“தப்பு செய்யறவங்க குடி உரிமைய பறிச்சிடனும், பண வசதி படைச்சவங்க அவங்கவங்க விருப்பத்துக்கு ஏத்தபடி கிராமங்கள தத்தேடுக்கனும், குழாய்ல தண்ணி வரலைனா, வீட்டுல ஏதாவது திருட்டு போச்சுனா துண்டு சீட்டு எழுதி ரோட்டோர டப்பால போடணும், வருமைய ஒழிக்கணும்னா எழைகள ஒழிக்கணும், அதுக்கு அவங்களுக்கு ‘இறப்பு’னு ஒரு சன்மானத்த வழங்கணும்…இதுமாதிரியான காலனாக்கு பயனில்லாத தீர்வுகளை தான சொல்றீங்க; படத்துல பாத்து வேணும்னா கைத்தட்டுவாங்க சார்…நடைமுறைக்கு சாத்தியமாக வேண்டாமா? பிரச்சனைய காட்டுங்க சார்…தீர்வு என்னனு அவங்க முடிவு பண்ணிக்கட்டும்”, என நொந்துக்கொண்டேன்.

“இத பாருங்க.. மக்கள் என்ன பாக்கனும்னு விரும்பராங்களோ அதத்தான் நாங்க எடுக்கறோம். நாங்களும் இங்க பத்து தலைமுறைக்கு சொத்து வச்சுட்டு படம் எடுக்க வரல சார்…எங்களுக்கும் பொண்டாட்டி புள்ளங்க இருக்குல”, என தங்கள் பக்கம் உள்ள ‘நியாயத்தை’ முன் வைத்தனர்.

“தம்பி.. 8 மணி நேரம் உழைச்சிட்டு வரோம், நிம்மதியா உக்காரும் போது நாட்டுல ஏதோ ஒரு மூலைல நடக்கற சாதிச்சண்டை, தற்கொலைகள காட்டி இது நல்லதுக்கில்லை, இப்படியே போனா நாடு கதி அதோகதிதான்னு சொன்னா மனிஷன் tension ஆகமாட்டான்??ரெண்டு குத்து பாட்டு, வடிவேலு காமெடி, சென்னைல உக்காந்துக்கிட்டே foreign ல ஒரு டூர்… படம் முடிச்ச உடனே சரவண பவன்ல சாப்பாடு, அப்பறம் நிம்மதியா கட்டைய கடத்தணும்…இதுக்கு மேல வேற என்ன வேணும் தம்பி”, என ஒரு ‘common man ‘இன் இயல்பான தேவைகளை எடுத்து வைத்தார் ஒரு common man .

அதுவும் சரிதான்…8 மணிநேரம் ஏசி யிலியே அமர்ந்திருப்பதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெட்டிக்கதை அடிப்பதும், வீட்டில் இருக்கநேர்ந்தால் தவறாமல் மெகா சீரியல்கள் பார்ப்பதும், “உங்க வீட்ல இன்னிக்கி என்ன சமையல்”, “இந்த புடவை எங்க வாங்கினது”, போன்ற மிக அவசியமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும்…எத்தனை மன உளைச்சலை உண்டாக்கும். இதுனாலதான் மலம் அள்ளரவனுக்கும், கொளத்து வேலை செய்யறவனுக்கும் கொடுக்கற சம்பளத்த விட office ல வேலை பாக்கறவங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கறாங்களா??…இப்பத்தான சங்கதி புரியுது!!

“அப்படியே நாட்டு நடப்ப பத்தி தெரிஞ்சிக்கணும்னா newspaper இருக்கு; நியூஸ் பாக்கறோம். ஒரு பரபரப்ப உருவாக்கனும்னு சாதாரண விஷயத்த ஊதி பெருசாக்காதீங்க தம்பி”, திரும்பவும் நம் common man .

“உள்ளத உள்ளபடி சொல்றோம் சார்…நாட்டுத்தலைவர்கள் மக்களுக்கு சொல்ல ‘விரும்பும்’ கருத்துக்கள ஒரு தூதுவனா இருந்து அவங்க living room க்கே கொண்டுபோய் சேக்கறோம்”, என தங்கள் பொதுநல கோட்பாட்டை முன்வைத்தார் பத்திரிக்கையாளர் ஒருவர்.

“நாட்டுத்தலைவர்கள் சொல்றதெல்லாம் எப்பவுமே உண்மையா இருக்கறதில்லையே; எந்த பிரச்சனையையும் மூடி மறைக்கறா மாதிரி தான பேசறாங்க…உண்மை நிலைமைய மக்களுக்கு சொல்ல வேண்டியது உங்க கடமைன்னு உங்களுக்கு தோணலியா?”, என பணிவாகத் தான் கேட்டேன்.

அதற்கு,” நாட்டு நடப்பெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தான் இப்படி கேக்கறீங்களா…நித்யானந்தா அடிச்ச லூட்டிய தெள்ளத்தெளிவா மக்களுக்கு படம்புடிச்சு காட்டினோம்; அம்மா சேத்து வச்ச சொத்துக்கள அக்குஅக்கா பிரிச்சு வச்ச பெருமை எங்க சேனலையே சேரும்; தேர்தல் நேரத்துல எந்த கட்சி ஜெயிக்கும்னு வாக்கு எண்ணி முடிக்கறதுக்குள்ள 1008 analysis செஞ்சு துல்லியமா கணிக்கறோம்…இப்படி அடுக்கிகிட்டே போகலாம் சார்”, என நாட்டிற்கு மிக ‘அவசியமான’ நிகழ்வுகளை படம்பிடித்தமைக்காக சேனல் சார்பில் பெருமிதம் அடைந்தார் நம் பத்திரிக்கையாளர்.

“நாடு முழுக்க விவசாயிகள் நூத்துக்கணக்குல தற்கொலை செஞ்சுக்கராங்களே…அது பத்தி உங்க கருத்து?”, என நேராக matter க்கு வந்தேன்.

“எல்லாம் விசாரிச்சாச்சு சார்…விஞ்ஞானம் இவ்வளவு வளந்திருக்கு…ஆனா அதோட benefits அ புரிஞ்சிக்கிற படிப்பறிவு இந்த விவசாயிகளுக்கு இல்ல. எடுத்து சொன்னாலும் எங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நழுவீடறாங்க. அரசாங்கம் தான் என்ன செய்யும் சொல்லுங்க. தாகம் எடுத்தா தண்ணிய குடின்னு சொல்லலாம்; வாயில ஊத்தணும்னு எதிர்பாத்தா…சரிப்பட்டுவராதுங்க”, என அலுத்துக்கொண்டார் பத்திரிக்கையாளர்.

“பொத்தாம் பொதுவா பேசக்கூடாது தம்பி. மாடுகள வச்சு உளுதுகிட்டு இருந்தோம்; tractor வண்டிய பயன்படுத்த சொன்னாங்க…செஞ்சோம். பம்ப்செட் போட்டா நீர் பாசனம் சுளுவா முடியும்னு சொன்னாங்க; அதையும் ஏத்துக்கிட்டோம். வருஷக்கணக்கா நெல்லு தான் பயிரிடறோம்; நல்ல மழையும் பேஞ்சு, சரியா பாத்துக்கிட்டோம்னா மகசூலுக்கு கொறையே இல்ல. இப்ப என்னடானா நெல்லு வேணாம், பருத்தி பயிரிடுங்க, காய்கறி வகைங்கள பயிரிடுங்கனு புதுசா ஒன்னு சொல்லுதாங்க. இந்த உரத்த வாங்கு, அந்த பூச்சிக்கொல்லிய தெளின்னு புதுசு புதுசா கொண்டு வராங்க. எங்க அப்பாரு காலத்துல இருந்த மருந்துங்க எதையும் இப்ப சந்தைல பாக்கவே முடியறதில்ல. இதுல அவங்க சொல்லறத செய்யலேனா மானியம் கொடுக்க முடியாதுனு பயம் காட்டுதாங்க;

விளைச்சல் இருக்கோ இல்லியோ வாங்கின கடன் மட்டும் குட்டிபோட்டுக்கிட்டே இருக்கு…இப்படியே போச்சுனா பக்கத்துஊட்டு பரமசிவம் நிலைமைதான். இதுல ஒரு நல்ல விஷயம் என்னனா தம்பி…இவங்க கொண்டுவர்ற பூச்சிக்கொல்லிங்க பயிர் வளர உதவுதோ இல்லியோ…மனிஷன் உயிர் போக்க நல்லாவே உதவுது”, என இன்றைய தினத்தில் ஒரு விவசாயி அனுபவிக்கும் அவலங்களை விவரித்தார் ஒரு பெரியவர்.

“இந்த சினிமா காரங்க ஆட்டோ ஓட்டுதா மாரியும் காய்கறி விக்குதா மாரியும் வேஷம் கட்டுதாங்களே, எங்கள மாரியும் வேஷம் போட்டா, டவுன் சனங்களுக்கும் எங்க கஷ்டம் புரியும்.. அதபாத்துபுட்டு ஆராவது ஏதாவது செஞ்சா நல்லா இருக்கும்ல தம்பி”, என்ற பெரியவரின் வார்த்தைகள்…சுருக்கென குத்தின.

சினிமாகாரர்களுக்கும் ‘common man ‘க்கும் இடையில் இருக்கும் நீண்ட இடைவெளி புரிந்ததுடன், ஏதாவது முயற்சி எடுத்தாலும் மசாலா சேக்கெறேன்னு விவசாயி பூச்சிக்கொல்லி குடிச்சிட்டு சாகறதுக்கு முன்ன ஒரு குத்து பாட்ட வைப்பானுங்க இந்த சினிமாக்காரனுங்க. ஏன்டானா அப்பத்தான் எங்க வீட்டுல உலை கொதிக்கும், மக்கள் கூதுகலம் அடைவாங்கன்னு சொல்லுவான்.

உயிரே போனதுக்கு அப்பறம்…கூதுகலமாவது வெளக்கெண்ணையாவது…நீங்க பீப்ளி (லைவ்) மாதிரியான முயற்சி எல்லாம் எடுக்காம இருக்கறதே நல்லது…யதார்த்ததோட கொஞ்சமும் ஒட்டாத படம் எடுக்கறது தான் உங்களுக்கு சரிப்பட்டு வரும். அத கவனிங்க…வேற எந்த ஆணியயையும் புடுங்க வேணாம்!!