கனவு கோட்டைகள்…வாடகைக்கு

Posted: ஜூன் 25, 2011 in பிதற்றல்
குறிச்சொற்கள்:, , , , , ,

வீட்டின் எத்திக்கிலும் எனக்கு பிடித்த பொருட்கள்;
தீபாவளி, பொங்கலுக்கு எடுத்த துணிகள் தொடங்கி, அலமாரியில் உள்ள திண்பண்டங்கள் வரை,
அனைத்தும் என் விருப்பத்தை பூர்த்தி செய்பவை;
“வீட்டின் ஒரே பெண் நீ…அதுதான் இத்தனை கவனிப்பு”, என தோழிகள் கூறும்போது,
அளவுகடந்த கர்வம்; இனம்புரியாத மகிழ்ச்சி.

அன்று என் இருபத்திமூன்றாம் பிறந்தநாள்…
இன்னும் நினைவில் உள்ளது….அந்த சிவப்பு நிற பாவாடை;
துணிக்கடையில் இரண்டு நாள் முன்பு உருப்படிவம் அணிந்திருந்தது;
பார்த்த மாத்திரத்தில், “இது என்னை அலங்கரிக்க வேண்டியதாயிற்றே”, என தோன்றிற்று.
மகிழ்ச்சியில் நான் திளைத்தவண்ணம் இருக்க,
எதையோ பறிகொடுத்தது போல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள் என்னை ஈன்றவள்.
என்னாயிற்று என நான் வினவ, “அடுத்த பிறந்தநாளை இன்னொருவனின் மனைவியாக கொண்டாடுவாய்; அம்மாவை நினைவில்கொள்வாயோ”, என
கண்கள் கலங்கியபடி என்னை அணைத்துக்கொண்டாள்.
அம்மாவை அணைத்துக்கொண்டு ஆறுதலாய் தட்டிக்கொடுத்த அதே வேளையில்,
என் கனவு கோட்டைக்கு தளம்போட ஆரம்பித்தேன்.
‘ஜில்லுனு ஒரு காதல்’ சூர்யா மாதிரி ஒரு ஆண்மகன் தான் என் உயரத்திற்கும், நிறத்திற்கும்,
சரியான பொருத்தம் என முடிவு செய்தேன்.

எங்கு வீடு வாங்குவோம், என்ன நிறத்தில் மகிழுந்து வைத்திருப்போம், முதலில் எந்த நாட்டிற்கு
சுற்றுப்பயணம் மேற்கொள்வோம் என, முதல் மாடி, இரண்டாவது மாடி என கோட்டை வான்நோக்கி உயர்ந்தது.
மொத்தத்தில் ஒரு புதுவிதமான உல்லாச வாழ்க்கை கண்முன் நிற்பதாகவே நான் நம்பினேன்.
அம்மா என்னிடம் வந்து உனக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என கேட்டால்,
எதையும் மறந்துவிடாமல் பட்டியலிட பல முறை ஒத்திகை பார்த்தேன்;
தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட…ஒரு நெருடல் கூட இல்லாமல் சொல்லும் வண்ணம் தயாரானேன்.

அன்று மாலை வாழறையில் திருமணமண்டபம் பற்றி நடந்த உரையாடல் என் செவிக்கு எட்டியது.
ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட உணர்வு; கனவு கோட்டையில் சிறு விரிசல்கூட விழக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்; வாழரைக்கு விரைந்தேன்.
“மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்ய வேண்டாமா…மண்டபம் பற்றிய பேச்சு இப்பொழுதெதற்கு”, என எரிச்சல் கலந்த கோபத்துடன் சீறினேன்.
பட்டாசு சரம் வெடிக்க ஆரம்பித்ததைபோல…சுமார் 5 நிமிடங்களுக்கு சிரிப்பொலி காதைப்பிளந்தது.
என்னை தவிர அனைவரும் சிரிப்பது கண்டு…ஆத்திரத்தில் என் முகம் சிவந்தது.
“ராசாத்தி….உன்னை மணக்க வருகிறான் ஒரு திருமகன்”
“8 பொருத்தம் அமைந்தால் போதும் என கூறிக்கேட்டிருப்பாய்…உம் விஷயத்தில் பன்னிரண்டு பொருத்தங்களும் இனிதே அமைந்துள்ளது என ஜோதிடர் வியந்தார்”
“இது போன்ற ஜாதகப் பொருத்தம் அமைவது திருமாலின் கருணையே”, என ஆளுக்கொருபுறமாய் என்னை மணக்க இருக்கும் ‘சூர்யா’ புகழ் பாடினர் உறவினர்.
என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் முடிவெடுத்தது ஒரு நெருடலாகவே இருந்தது.
அப்பாவின் முகத்தில் குதூகலம் பூத்துக்குலுங்கியது; அம்மா திருமணம் முடிந்த கையுடன் போக வேண்டிய திருத்தலங்கள் பட்டியலை சரிபார்த்துக்கொண்டிருந்தாள்.
என் திருமணத்தை பார்ப்பதற்காக மட்டுமே அமெரிக்காவிலிருந்து என் மாமா வருவதாக பேசிக்கொண்டனர்.

‘புரியாத புதிர்’ ரகுவரனாகவோ, ‘ஆசையில் ஒரு கடிதம்’ ஆனந்த் மாதிரியோ ‘சூர்யா’ இருந்துவிட்டால்…என நினைத்து திடுக்கிட்டேன்.
எனக்கு பிடித்ததை மட்டுமே வாங்கித்தரும் அம்மா அப்பா, மாப்பிள்ளை பார்ப்பதில் மட்டும் குறை வைத்துவிட போகிறார்களா என்ன? கூடவே ஜாதகம் கச்சிதமாக பொருந்துகிறது என அனைவரும் சொல்லும் போது…

இன்னொரு கனவு கோட்டைக்கு தளம்போட ஆரம்பித்தேன். திருமணத்திற்கு எங்கு புடவை எடுக்கலாம், மாப்பிள்ளை அழைப்பிற்கு என்ன மாதிரி உடை அணியலாம் போன்ற கேள்விகள் என் மூளையை துளைக்கத் தொடங்கின.

திருமண நாளும் மிக தெளிவாக நினைவில் உள்ளது, ‘டும் டும் டும்’ படத்தில் ‘ரகசியமாய்’ பாடலில் ஜோ அணியும் திருமண உடைதான் வேண்டும் என முடிவு செய்தேன். அவ்வாறே திருமண மேடையில் வீற்றிந்த தருணம்…32 பற்கள் வெளியே தெரிய சிரித்தது மறக்க முடியாதது!!

அம்மா அழுவதை பார்த்து அழுகை தோன்றிடினும், கண் மை கலைந்து, வந்தவர்கள் முன் அலங்கோலமாய் இருக்குமே என பயந்தததை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது.

அன்று கண் மை கலையக்கூடாது என அழாமல் இருந்ததுதான் தப்போ என இப்பொழுது தோன்றுகிறது. அதன் பிறகு நான் அழாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தமிழ் படங்களைப்போல் ஒரு நாள் அனைத்தும் சுமூகமாய் முடியும் என நினைத்து நான் கடத்திய நாட்கள் எண்ணிலடங்காதவை.

“நான் பையனை பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை…அவனின் விருப்பங்களென்ன, எனக்கு பிடிக்காதவை எவை….என ஒருவரை பற்றி ஒருவர் ஒன்றுமே அறியாதபோது…ஜோசியர் எப்படி பன்னிரண்டு பொருத்தங்களை கண்டுபிடித்தார்??”
குமுதம், கல்கியில் வரும் ‘ஆறு வித்தியாசங்களை கண்டுபிடி’ போட்டியில் இரு படங்களின் மேலும் கருப்பு சாயம் பூசி, வித்தியாசத்தை கண்டுபிடிப்பது சொதப்பலென்றால்…இது மகா சொதப்பல்!!
“இரவு சாப்பாட்டுக்கு என்ன பொறியல் வேண்டும், தீபாவளிக்கு என்ன இனிப்புகள் செய்யலாம் என சின்ன சின்ன விஷயங்களிலும் என் விருப்பத்தை கேட்கும் அம்மா, என் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் மட்டும், ‘பெரியவர்கள்’ முடிவு செய்தால் போதும் என ஏன் நினைத்தாள்?”
“நான் விரும்பி ஒன்று கேட்டிருப்பேன்; அது கிடைக்காத காரணத்தினால் அம்மா அதைவிட விலை உயர்ந்த பொருளை வாங்கிவருவாள். எனக்கு பிடித்தே இருப்பினும், அது நான் கேட்டதில்லை என்ற ஒரே காரணத்தினால், அண்டைவீட்டாருக்கு கேட்கும் அளவிற்கு கூச்சல் போடுவேன். சாதாரண விஷயங்களுக்கு ஊரை ரெண்டாக்கிய நான், ஏன் துணைவர் விஷயத்தில் மட்டும் பேசாமல் இருந்தேன்??”

இத்தனை கேள்விகளில் ஒன்றாவது விவாகத்திற்கு முன்பு என் மனதில் தோன்றி இருந்தால்….இந்த விவாகரத்து படலம் வராமல் இருந்திருக்குமோ?
இந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், காயங்கள், மன வருத்தங்கள்…இவை அனைத்திற்கும் காரணம் யார் என்ற கேள்வி மட்டும் என் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது.

சுற்றம் மகிழ்ச்சியாய் இருக்கவும், சமூகத்தில் பெற்றோர் தலை நிமிர்ந்திருக்கவும் மட்டுமே நிகழ்ந்த ஒரு சடங்கிது. எல்லாம் முடிந்த பின்னர், பெண்ணிற்கு இப்படி நடந்து விட்டதே என ஒப்பாரி வைத்தார்கள். எல்லாம் நம் தலையெழுத்து….அடுத்து நடப்பதை கவனிக்க வேண்டியதுதான் என மீண்டும் என் சார்பில் முடிவெடுக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஒரு தலைக்குனிவு ஏற்படக்கூடாது என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருக்கும் அந்த சுயநலம்….எனக்கு விளங்கவே இல்லை.

இம்முறை மாப்பிள்ளை பக்கத்து ஊராம். தங்கமான பையனாம். ஏற்கனவே கேட்டு புளித்துப்போன துதிப்பாடல்கள். முற்போக்குத்தனமாய் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
நிச்சயம் முடிந்த உடன் பையனின் அலைபேசி எண்ணை எனக்கு தருவார்களாம். நாங்கள் பேசி பழகி ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ள….ஒரு நல்ல சந்தர்ப்பமாம்.
“துயரம் மட்டுமே அனுபவித்தேன்; ஏதோ முட்டிமோதி விடுதலை ஆகியுள்ளேன். இனியாவது நிம்மதியாய் அமர்ந்து, நான் செய்ய விரும்புவதைப் பற்றி யோசிக்கவிடுங்கள்”, என கூற ஏங்கினேன். வாயை திறக்காமல் ஏங்க மட்டும் செய்தேன்.

நாளை திருமணம்….கனவு கோட்டை கட்டுமானப்பணிகள் மீண்டும் துவங்கி உள்ளது. என் ஆசைகளையும், கோபங்களையும், வெளியே சொல்ல துணிச்சல் இல்லாத காரணத்தினால்….இம்முறை ஒரே மாடியுடன் முடித்துக்கொள்கிறேன்; விவாரகத்து ஆகாமல் இருந்தால் சரி.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s