ஜூலை, 2011 க்கான தொகுப்பு

‘வாகை சூட வா’

இந்த படப்பாடல்கள கேட்டதுல இருந்து…கட்டாயம் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு ஒரு சபாஷ் தெரிவிக்கிறா மாதிரி பதிவு எழுதனும்னு ஆசைப்பட்டேன்.
“என் பதிவுலக வரலாற்றில் இது புதிய முயற்சி”னு எல்லாம் தம்பட்டம் அடிக்கலீங்க!!
ஏதோ நல்ல விஷயங்கள் கேட்டா, படிச்சா, மத்தவங்களோட பகிர்ந்துகிட்டா என்ன தப்புன்னு…எழுத உக்காந்துட்டேன்.

எவ்வளவோ படங்கள் இருக்கும் போது இந்த படத்தோட பாடல்கள் மட்டும் ஏன்னு கேட்டீங்கன்னா, ரெண்டு மூணு காரணங்கள் சொல்லலாம்…

முதல்ல ஒரு புது திறமை வெளிச்சத்துக்கு வந்திருக்கறதுல ஒரு சந்தோஷம்.

அடுத்தது அந்த பாடல் வரிகள்; சாதரணமா தெரியாத மொழியா இருந்தா இசைய ரசிப்பேன்…நம்ம மொழில பாடல்கள கேக்கும் போது, நல்லிசையோட சேந்து நல்ல பாடல் வரிகளும் இருந்தா அவ்வளவு சந்தோஷப்படுவேன்.

சாதரணமா கிராமத்து பின்னணில எடுக்கற படங்கள்ல கதாநாயகிகள் (கதையின் நாயகிகள் இல்லீங்க….படத்துல வரும் மத்த பொண்ணுங்கள விட ரெண்டு மூணு சீன் ஜாஸ்தியா வரும் பெண்கள்) பாடற பாடல்கள்ல ‘தாலிய குடு’, ‘தூக்கு கயிற குடு’, ‘இன்னும் பத்து ஜென்மத்துக்கும் உன் கழுத்ததான் அறுக்கணும்’னு ஆம்பளைங்க முதுக சொறிஞ்சிட்டு இருப்பாங்க. அந்த மாதிரியான நெருடல்கள் இந்த பட பாடல்கள்ல தென்படவே இல்லன்னு தான் சொல்லணும்.

பிஞ்சு உள்ளங்களின் ஏக்கம், காதலியின் கிண்டல் கலந்த காதல், ஏழை மக்களின் கைய்யறு நிலை…மாதிரியான பல தருணங்கள, பாடல் வரிகளா வைரமுத்து சமைச்சிருகாருனா…இசைஅமைப்பாளர் ஜிப்ரான், அத பாடல்களா தங்கத்தட்டுல பரிமாறி இருக்காருன்னுதான் சொல்லணும்.

ஒவ்வொரு பாடல பத்தியும், அத கேக்கும் போது கெடைச்ச ஆனந்தத்த பத்தியும் எழுதறதுக்கு முன்னாடி நண்பர் கார்த்திக்கு (milliblog தளத்தில் பாடல் விமர்சனங்கள் எழுதுபவர்) நன்றி சொல்லணும்.

ஒரு புது ஹோட்டெல பாக்கறோம்….அங்க சாப்பாடு try பண்ணலாமா வேணாமானு ஒரு கொழப்பம் இருக்கும். நண்பர் ஒருவர் வந்து, “தாறுமாறா இருக்குங்க…அந்த கோழி பிரியாணி taste இன்னும் நாக்குல இருக்குனா பாருங்களேன்”,னு சொல்றாரு. அங்க சாப்பிட்டதுக்கு அப்பறம்…”நண்பர் சொன்னா மாதிரி ஒன்னும் பெருசா இல்ல”னு தோணும். ஆனா நண்பர் சுவைச்சு பாத்து சொன்னதுனாலதான…உங்களுக்கு “செரி try பண்ணி தான் பாப்போமே”னு தோணிச்சு??

அதே மாதிரிதான்….இங்க பாட்டு விஷயத்துல நண்பரா வந்து கைக்கொடுக்கராறு நம்ம milliblog கார்த்திக்.

சரி திரும்ப விஷயத்துக்கு வரேன்…
முதல்ல நம்ம சின்மயீ தேன கலந்து கொடுக்கற ‘சர சர சாரகாத்து’ பாட்டு…
இந்த பாட்ட கேட்ட மாத்திரத்துல, ‘கிளிமஞ்சாரோ’ பாடினவங்களா இவங்கன்னு ஆச்சரியம் கட்டாயம் தோணும்.
ரொம்ப ஆடம்பரம் எதுவும் இல்லாம, மெல்லிய காத்துபோல ஒரு பாட்டுனா….படத்துல இத சொல்லலாம்.

“சர சர சாரகாத்து வீசும்போது
சார பாத்து பேசும்போது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே”

அப்பறம் நடுவுல ஒரு எடத்துல,

“…மொடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்கறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்”

என்னத்த சொல்ல…பாட்டு முடிவுல யாரு கிறங்கினாங்கன்னு தெரியல….ஆனா நான் கிறங்கி விழுந்துட்டேன்!!

அடுத்தது ‘செங்க சூளை காரா’…

இந்த பாட்ட அனிதானு ஒரு பாடகி பாடி இருக்காங்கன்னு நான் நம்பவே இல்ல. நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு அனுராதா ஸ்ரீராம புடிச்சு தொங்கிகிட்டு இருந்தேன். முக்கியமா நடுவுல வர்ற…

“…சுட்டும் சுட்டும் மண்ணு கல்லாச்சு; நட்ட நட்ட கல்லு வீடாச்சு” வரிகள கேக்கும் போது,
எனக்கு நம்ம ஆதி படத்துல வர்ற ‘ஒல்லி ஒல்லி இடுப்பே’ பாட்டும் அதுல அனுராதா ஸ்ரீராம் பாடற “…சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வர்றதேதுக்கு” வரிகளும் தான் நினைவுக்கு வந்தது.

இந்த பாட்டுல ரொம்ப பிடிச்ச இன்னொரு அம்சம்…

1.42 நிமிஷத்துல வரும் வரிகள்…

“அய்யனாரு சாமி.. அழுது தீத்து பாத்தோம்
சொரணை கெட்ட சாமி, சோத்ததான கேட்டோம்”

அப்பறம் 2.50 நிமிஷத்துல வரும் வரிகள்…

“அய்யனாரு சாமி கண்ண தொறந்து பாரு
எங்க சனம் வாழ உன்ன விட்டா யாரு”

“சாமின்னு ஏத்துக்கவும் முடியல…கல்லுன்னு ஒதுக்கவும் முடியல”னு அந்த மக்களோட கைய்யறு நிலைய, வரிகள்ல அழுத்தமா சொல்லி இருக்கற விதம்…கவிப்பேரசுக்கே உரிய ஒரு திறமை.
பாடல் வரிகளும், பாடிய குரலும், ஜிப்ரானின் இசையும்…சரியான கலவைல அமைஞ்சு, பாட்டுக்கு உயிர கொடுத்திருக்கு.

அடுத்தது கொழந்தைங்க பாடற ‘ஆனா ஆவன்னா’ பாட்டு…
A.R.ரெஹ்மான் இசையமைச்ச ‘அச்சம் அச்சம் இல்லை’….மாதிரியான ஒரு பாட்டு.
அந்த இந்திரா பட பாடல்ல, கொழந்தைங்க உலக அமைதிய பத்தி, நாளைய தினம் நல்லா அமையும்னு பாடறதெல்லாம், ஒரு நெருடலாவே பட்டது.

அதுக்கு மாறா இந்த ‘ஆனா ஆவன்னா’ பாட்டு, ரொம்ப யதார்த்தமா, கீழ்மட்ட நெலமைல இருக்கும் கொழந்தைங்க…அவங்க வாழ்க்கை முன்னேற என்ன வேணுமோ…அத பாடல் வடிவத்துல கேக்கறா மாதிரி அமைஞ்சிருக்கு.

“இளமையில் கல் என்று சொன்னால் அது செங்கல் சுமக்கும் வேலை அல்ல
எழுத்தை நாம் கற்று கொண்டால் இனிமேல் ஏழையல்ல”

அடுத்து ‘போறானே போறானே’ பாட்டு…கேக்க இனிமையான ஒன்னு. யதார்த்தமா அதே சமயத்துல ஒரு அழுத்தத்தோட இருந்த வரிகள்னா…

“பருவம் தொடங்கி ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன்”

கிராமத்து கதைனா…முற்போக்கு சிந்தனை உள்ள வசனங்கள தேடி கண்டு புடிக்க வேண்டியிருக்கும். அப்படியே இருந்தா கூட அத ஊர் தலைவரோ, 70 -80 வயசுல ஒரு தாத்தாவோ இல்ல ஒரு படிச்ச இளைஞனோ தான் சொல்லுவாங்க.இங்க ஒரு change க்கு ஒரு பொண்ணு கடவுள் மறுப்பு பேசறது அழகு.

மத்த ரெண்டு பாடல்களும் குட்டி…அதே சமயத்துல கிண்ணுனு இருக்கும்!

இளையராஜாவால மட்டும்தான் பாடல்கள்ல கிராமத்து வாசனைய கொடுக்க முடியும்னு சொல்லிட்டு சுத்தறவங்க…’தஞ்சாவூர் மாடத்தி’ இன்னும் கேக்காதவங்களா இருப்பாங்க.

கடசியா ‘தைல தைல’….இது எப்படினா…பாட்டு ஆரம்பிக்கும், ‘அருமை’னு ரசிச்சு முடிக்கும் போது பாட்டும் முடிஞ்சிடும் 😦

இங்க வள்ளுவனின் ஒரு குறள் தான் நினைவுக்கு வருது
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்”

மொத்ததுல ‘வாகை சூட வா’, மக்கள் மனசுல திரைப்பட வடிவத்துல வெற்றி வாகை சூடுமான்னு பொறுத்திருந்து பாக்கணும். ஆனா இப்போதைக்கு ‘பாடல்’ வடிவத்துல அபார வெற்றி மட்டும் நிச்சயம்!!

என் இனிய தமிழ் மக்களே!!!

முட்டைகோஸை கண்டாலே 10 அடி தூரம் தள்ளி நிற்கும் என் போன்றவர்களுக்கு, இந்த பதிவு சமர்ப்பணம்!

மத்தவங்க எஸ் ஆகணும்னு சொல்லலீங்க…ஏதோ பாரதிராஜா touch குடுக்கலாம்னு பாத்தா…

ஸ்கூல், காலேஜ், படிக்கற காலங்கள்ல, நானும் காய்கறிகளும் டிபிகல் மாமியார் மருமகள் மாதிரி. குடுமிபுடி சண்டை நடக்கும்போது கணவன்மார்கள் வந்து சண்டைய தீத்து வைக்கறா மாதிரி எனக்கு அந்த நேரங்கள்ல துணை இருந்தது, பக்கத்துல இருந்த தண்ணி சொம்புதான். அதுவும் வீட்ல carrot பொறியல் இல்ல கோஸ் பொறியல் பண்ணினாங்க….அன்னிக்கி தண்ணி ஒரு ரெண்டு மூணு சோம்பு காலி பண்ணுவேன். அந்த சமயங்கள்ல என்ன பெத்தவ பட்ட பாடு…சொல்லி மாளாது.

அப்பெல்லாம் சமையல்கட்டுக்கு நொறுக்கு தீனிய தேடி கண்டுபுடிக்க, இல்ல மூணு விசில் சத்தம் கேட்டா அடுப்ப அணைக்கவோ தான் போயிருக்கேன். அந்த ‘அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கும் தருணங்கள்’ல வீட்ல கோஸ் சமைச்சிருந்தாங்க….அவ்வளவுதான். வடிகட்டின தண்ணில ‘ஊற்றெடுக்கும்’ அந்த (துர்)நாற்றம் இருக்கு பாருங்க…அப்படியே மூக்கு வழியா பயணத்த கெளப்பி, மூச்சு குழாய் bypass வழியா, சிறுகுடல், பெருங்குடல் கொண்டை ஊசி வளைவுகள(hairpin bend )தாண்டி, வயித்து கதவ தட்டி,…”மவனே பசிக்குதுனு சத்தம் போட்ட…முட்டகோஸ வச்சே சாத்துவேன். அப்பறம் ஐயோ அம்மானு கத்தினா…கேக்க யாரும் வர மாட்டாங்க”,னு ஒரு அறிக்கை விடும். இதுக்கு அப்பறம் வாயே பரவாயில்லைனாலும், அந்த நாத்தம், கோஸ் கறிக்கும், வாய்க்கும் நடுவுல நந்தி மாதிரி நிக்கும்!!!

உங்களுக்கு இந்த வெறுப்பு கொஞ்சம் ஓவராவே தோணலாம்; யதார்த்தந்தாங்க…ஏனா பட்டவன் வலி பாக்கறவனுக்கு தெரியாது பாருங்க!!!

சரி மேட்டேர்க்கு வரேன்…

கீர்த்தனாரம்பத்திலே காய்கறிகளின் பரமவிரோதியாய் இருந்த அனு….கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு ‘U ‘ turn அடித்த கதை….பெருங்கதை!!

‘சுத்தமா பிடிக்காது’ல இருந்து தாவி, ‘சுமாரா பிடிக்கும்’ கட்டத்துக்கு வந்து…இப்ப ‘சூப்பராவே பிடிக்கும்’ கட்டத்துல வந்து நிக்கறேன்.

இவ்வளவு மாறினதுக்கு அப்பறமும் அந்த கோஸின் ‘ghost’ மட்டும் என்ன விடாம தொறத்திட்டு இருந்தது 😦

நானா முட்டகோஸானு பாத்துடுவோம்னு முடிவு பண்ணினேன். சனிகிழம அரை கிலோ கோஸ் வாங்கினேன்.

ஒரு சமையல் குறிப்பு பதிவுல, cauliflower வச்சு பொறியல் குறிப்பு ஒன்னு போட்டிருந்தது. ரெண்டு மூணு தடவை வீட்ல செஞ்சு பாத்திருக்கேன். அன்னிக்கி அது பட்டுன்னு நெனவுக்கு வந்தது.

கோஸ் உள்ளே…cauliflower வெளியே!! அப்பறம் கொஞ்சம் என் ஆக்கத்திறன சேத்து இரவு சாப்பாட்டுக்கு side dish தயார்!!!

என் சமையல்கட்டுல உருவான கோஸ் பஜ்ஜி கறி குறிப்பு இனி…

Serves – 4 (இந்த கணக்கு side dishaa சாப்பிட்டா; இத மெயின் டிஷ்ஷா சாப்பிட்டுட்டு, தப்பு கணக்கு போட்டுட்டியேன்னு என்ன குத்தம் சொல்லாதீங்க!!)

தேவையான பொருட்கள்…

முட்டைகோஸ் – 300-400 gm

கடலைமாவு – 4-5 Tbsp

Ginger Garlic பேஸ்ட் – 1 Tbsp

தயிர் (Yoghurt) – 1-1.5 Tbsp

மிளகு தூள் – 1 tsp

மிளகாய் தூள் – 1 Tbsp

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் போடி – 1 tsp

எண்ணெய் – 5-6 Tbsp (‘அட கடவுளே’னு வாய பொளக்காதீங்க….எண்ணெய்ல கறாரா இருந்தா….கறியும் கறாரா கூழ் மாதிரி தான் வரும்)

செய்முறை விளக்கம்…

1 முட்டைகோஸை நீட்ட நீட்டமா (long thin strips) வெட்டிக்கோங்க. கொஞ்சம் மஞ்சள் தூள் சேத்து வேக வைங்க.

2 அது வேகர நேரத்துல, கடலை மாவு கலவைய தயார் பண்ணுங்க. எண்ணெய தவிர மத்த எல்லா பொருட்களையும் சேத்து ஒரு பசை மாதிரி செஞ்சு வச்சுக்கோங்க (தண்ணி ஊத்த தேவை இல்ல)

3 கோஸ் ரொம்ப வேக வேணாம், கொஞ்சம் வெந்த சமயத்துல அடுப்ப அணைச்சிட்டு, வடிகட்டிட்டு, கோச செஞ்சு வச்ச கடலைமாவு பசையோட சேருங்க (அந்த (துர்)நாற்றம் பத்தி ஒன்னுமே சொல்லலியேன்னு நெனைக்கறீங்க…சரிதான…காய்கறி அணில சேந்ததுக்கு அப்பறம், இந்த சின்ன ‘adjustment’ கூட பண்ணிக்கலேனா அணிதர்மத்துக்கு பங்கம் ஏற்படும் பாருங்க..!!!)

4 ஒரு 5 நிமிஷம் கழிச்சு, பொறித்தட்டு (frying pan)ல கொஞ்சம் தாராளமாவே எண்ணெய் ஊத்தி சூடாக்குங்க. சூடான ஒடனே, இந்த கோஸ் கடலைமாவு கலவைய கொஞ்சம் கொஞ்சமா சேருங்க.


5 பொறித்தட்டு ‘non-stick’ பாத்திரமா இருந்தா ரொம்ப நல்லது. தட்டுல போட்ட கலவைய ஒரு கொத்து ரொட்டி பண்ற ஸ்டைல்ல சட்டுவத்தால பிச்சுபோடுங்க (பாத்திரம் நான்-ஸ்டிக்கா இருந்ததுனா…மறந்துகூட stainless steel அகப்பைய பயன்படுத்தாதீங்க!!)

6 அடுப்ப சின்னது பண்ணிட்டு, அப்படியே ஒரு 5 நிமிஷத்துக்கு விட்டுடுங்க. அந்த நேரத்துல சாப்பாடுக்கு தேவையான கொழம்பு வகைறாக்கள தயார் பண்ணுங்க. அப்பப்ப கவனம் பொறியல் மேலயும் இருக்கட்டும்.

7 உப்பு, காரம் சரியா இருக்கானு பாத்துட்டு, தேவையான அளவு முறுமுறுப்பு வந்த ஒடனே அடுப்ப அணைச்சிடுங்க.

அன்னிக்கி கொழம்புக்கு, நீத்து அவங்களோட ‘spicytasty’ பதிவ துணைக்கு சேத்துகிட்டேன். ரெண்டு மூணு மாசம் முன்னாடி, அவங்க பதிவ பாத்து எண்ணெய் கத்திரிக்காய் பண்ணினேன். கன்னாப்பின்னானு இருந்துச்சு. முக்கியமா அந்த வேர்கடலை, எள்ளு போட்டு செஞ்ச கொழம்பு தூள் கெளப்பிச்சு.

சரி கத்திரிக்காய் இல்லேனா என்ன…கொழம்ப மட்டும் செய்வோம்னு முடிவு பண்ணினேன்.

சாதம், கொழம்பு, கோஸ் பஜ்ஜி கறி, உருளைகிழங்கு சிப்ஸ்…என் கண்ணே பட்டுடும்போல இருந்துச்சு 😉 சரி யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்னு….பதிவா இப்ப உங்க முன்னாடி!!