திசெம்பர், 2011 க்கான தொகுப்பு

அன்னிக்கி நண்பர்களோட ஒரு கேரள வகை உணவகத்துக்கு போய் இருந்தேன். சாதரணமா கும்பலா போனா, ‘starters’னு சொல்ற ‘ஆரம்பத்தீணி’ கட்டாயம் இருக்கும். அன்னிக்கி அப்படி திண்ணதுதான் பெப்பர் சிக்கன். மசாலா, காரம் எல்லாம் சரியான அளவுல இருந்துச்சு…5 பேருக்கு பத்தலன்னுதான் சொல்லனும். அதுக்காக starters மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தா, ‘main course’ நாதி இல்லாம போயிடுமேன்னு ‘மீண்டும் starters’ யோசனைய கை விட்டுட்டோம்.

அதுக்கு அப்பறம் போன வாரம், சிக்கன் சமைக்கலாம்னு நினைச்ச போது, பெப்பர் சிக்கன் செஞ்சா என்னனு ஒரு பொறி கெளம்பிச்சு. இது வரைக்கும் வீட்ல செஞ்சதே இல்ல…அதுனால இணையத்தின் உதவிய நாடினேன். ஒரு இணையதளத்துல இருக்கற சமையல் குறிப்புக்கு ஏத்த மாதிரி வீட்ல எல்லா பொருளும் இருக்காது. அதுனால ஒரு ரெண்டு மூணு தளத்த பாத்துட்டு, வீட்ல இருக்கற பொருட்களுக்கு ஏத்தா மாதிரி, கொஞ்சம் என்னோட ‘ஆக்கமுடைமையும்’ கலந்து சமைக்கறதுதான் என் இஸ்டைல் 🙂

பாத்த பல தளங்கள், ஒரு 30 நிமிஷத்துல இருந்து 2 மணி நேரத்துக்கு மசாலா பொருட்கள சேத்து, சிக்கென ஊறவைக்க சொன்னது. 8:௦௦ மணிக்கு இரவு சாப்பாடு என்னனு முடிவு பண்ணி, 9:00-9:15குள்ள சமைச்சு, 9:30 மணிக்கு சாப்பிட உக்காரனும்னா…இது மாதிரி ‘marinate’னு சொல்ல படற ஊற வைக்கற ஜோலி எல்லாம் வேலைக்கே ஆகாது.
அப்ப…பெப்பர் சிக்கன்…பெப்பரப்பனு போச்சான்னு தான கேக்க போறீங்க…அதுதான் இல்ல. அப்படியே அந்த உணவகத்துல சாப்பிட்டா மாதிரியே இருந்ததுங்க! நம்ப மாட்டேன்னு சீன் போட்டீங்கன்னா…நீங்களே செஞ்சு பாருங்க…நம்புவீங்க!!

எவ்வளவு பேர் சாப்பிடலாம்
: அது சாப்பிடறவங்களோட ‘பசி’ மற்றும் ‘சிக்கன் பிரியத்த’ பொருத்தது; சரி சரி…இதோட என் மொக்கைய நிறுத்திக்கறேன்!! 2 பேர் தாராளமா சாப்பிடலாங்க

தேவையான பொருட்கள்
:

கோழிக்கறி(chicken breast)-300 gm

வெங்காயம்(brown onion)-2, நல்லா பொடிபொடியா நறுக்கிக்குங்க

வெள்ளை பூண்டு(garlic cloves)-4 பல்(இதையும் பொடிபொடிய நறுக்கிக்குங்க; அந்த அளவுக்கு பொறுமை இல்லனா…பெருசாவே வெட்டிக்குங்க (எப்படியும் அரைக்கத்தான் போறோம்)

இஞ்சி (ginger)-ஒரு சிறு துண்டு (5cm அளவு சரியா இருக்கும்) (இத விட தெளிவா தமிழ்ல எப்படி எழுதறதுனு தெரியலங்க!!)
பெருஞ்சீரகம் – 1 Tbsp (பெருஞ்சீரகம் taste நல்லாவே பிடிக்கும்னா…1.5 ஆக்கிக்குங்க)
சீரகம் – 1 Tbsp
மஞ்சள்பொடி – 2 சிட்டிகை
மிளகு – 2 Tbsp(காரம் கொஞ்சம் தூக்கால வேணும்னா, 2.5 Tbsp சரியா இருக்கும்)
கருவேப்பிலை – 2 கொத்து (10-15 இலை இருக்கறா மாதிரி எடுத்துக்குங்க)
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
எண்ணெய் – 4-5 Tbsp (பொறிக்கவும் கூடாது…நல்லா ருசியாவும் இருக்கனும்னா, 5 Tbsp எண்ணெயானு வாய பொளக்காதீங்க!!)
உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:
–> சிக்கன கழுவிக்குங்க; சின்ன சின்னதா நறுக்கிக்குங்க (‘bite size pieces’ சொல்லுவாங்க…அது மாதிரி)
–> கொஞ்சம் மஞ்சபொடியும், உப்பும் போட்டு, வேக வைய்யுங்க
–> சிக்கன் வேகற நேரத்துல, ஒரு பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் ஊத்திக்குங்க (1.5 Tbsp சரியா இருக்கும்)
–> நல்லா சூடான உடனே, சீரகம், பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, கருவேப்பிலை (எடுத்து வச்சதுல பாதி), மிளகு எல்லாத்தையும் எண்ணெய்ல வதக்குங்க
–> மிளகு, கிராம்பு வெடிக்க ஆரம்பிக்கும் போது, நறுக்கி வச்ச வெங்காயத்துல பாதி, நறுக்கி வச்ச பூண்டு, இஞ்சிய சேருங்க
–> வெங்காயம் நல்லா செவப்பான உடனே, அடுப்ப நிறுத்தீடுங்க
–> சூடாறினதுக்கு அப்பறம், மின் அம்மில (mixie) ரொம்ப கம்மியா தண்ணி ஊத்தி அரைச்சுக்குங்க. ஒரு துவையல் பதத்துல இருக்கட்டும். ரொம்ப தண்ணி ஊத்தினா, அப்பறம் சிக்கனோட போட்டு கலக்கும் போது, பெப்பர் தனியா சிக்கன் தனியா சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்!
–> தேவையான உப்பு போட்டு, ஒரு சுத்து அரைய விடுங்க
–> அதே பொரித்தட்டுல, ஒரு 3.5-4 Tbsp எண்ணெய் விடுங்க. சூடான உடனே, மிச்சம் இருக்கற நறுக்கி வச்ச வெங்காயத்த சேருங்க. ஒரு சிட்டிகை மஞ்சபொடி இங்க சேத்துக்கலாம்
–> வெங்காயம் கொஞ்சம் நல்லாவே செவப்பாகட்டும் (கருகாம பாத்துக்குங்க); அப்பறம் மிச்சம் இருக்கற கருவேப்பிலைய சேருங்க
–> கருவேப்பிலை கொஞ்சம் மொருமொருப்பு வந்த உடனே, வேக வச்சு, வடிகட்டின சிக்கன் துண்டுகள பொரித்தட்டுல போடுங்க
–> ஏற்கனவே வெந்ததுனால, ரொம்ப வதக்கனும்னு அவசியமில்ல. அரைச்சு வச்ச விழுதையும் போட்டு, நல்லா சிக்கன் துண்டுகளோட சேருங்க
–> அவ்வளவுதான்!! அடுப்ப சின்னதாக்கிட்டு, ஒரு 2-3 நிமிஷம் விட்டுடுங்க. சுடசுட சூப்பர் பெப்பர் சிக்கன் தயார்!!

நாங்க அன்னிக்கி இரவு சாப்பாட்டுல குழம்புக்கு தொட்டுகிட்டோம்; ஆனா, அடுத்த மொறை, தண்ணி அடிக்கும் போது, வீட்ல சைடு டிஷ் செஞ்சா…கட்டாயம் ‘பெப்பர் சிக்கன்’ தான்னு முடிவு செஞ்சுட்டேன்!!

நெறைய விஷயங்கள கடந்து வரும்போது இத பத்தி எழுதனும்னு நெனைப்பேன். அப்படி கடந்து வந்ததுல ஒன்னுதான் ‘மயக்கம் என்ன’
செல்வராகவன் படங்கள்ல பாத்தீங்கனா கதையின் நாயகிகள் பெரும்பாலும் வலிமையானவங்களா காட்டப்படுவாங்க. ‘7G ரெயின்போ காலணி’ சோனியா அகர்வால், ‘துள்ளுவதோ இளமை’ ஷெரின், ‘மயக்கம் என்ன’ ரிச்சா இவங்கள சொல்லலாம். ரொம்ப முற்போக்குவாதிகளாவோ இல்ல பகுத்தறிஞ்சு செயல் படற மாறி இல்லனாலும், அவங்க வாழ்க்கைல வரும் ஆண்கள், துவண்டு போற தருணங்கள்ல…தேவையான துணிச்சல இல்ல நம்பிக்கைய குடுக்கும் கதாப்பாத்திரங்களா உலா வந்திருப்பாங்க.
இதுல என்னமா இருக்கு…நல்ல விஷயம் தானேன்னு கேப்பீங்க. கதையின் நாயகன ஒரு துணிச்சல் இல்லாதவனா, சமுதாயம் இழைக்கற தப்ப தட்டி கேக்க தைரியம் இல்லாதவனா காட்டும் போது, அவன ‘திருத்தற’ கதாப்பாத்திரம்…எப்பவுமே ஒரு பொண்ணா இருக்கறதுதான் ஏன்னு புரியல.
‘காதல் கொண்டேன்’ படத்துல நாகேஷ் இல்ல ‘மயக்கம் என்ன’ படத்துல தனுஷோட நண்பன் இல்ல 7G ரெயின்போ காலணில விஜயன்…இவங்க நாயகனுக்கு தெளிவு ஏற்படுத்தற மாதிரி ஏன் அந்த கதைகள் வடிவமைக்கப்படல? செல்வா கட்ட நினைச்ச கதைக்களம் அது மாதிரின்னு சொல்லப்போறீங்க…சரியா?
யாரோ ஒருத்தர் வந்து ‘திருத்தறது’ இருக்கட்டும்; கதாநாயகனே, தன் நிலையறிஞ்சு, எங்க தப்பு செய்யறோம், எங்க சரி செஞ்சுக்கணும்னு முடிவு எடுக்கறா மாதிரி…ஏன் எந்த ஒரு கதைக்களமும் அமையல?
யோசிச்சு பாத்ததுல ‘behind every successful man there is a woman’னு சொல்லுவாங்கல …அத
மெய்ப்பிக்கற நோக்கத்தோடயே எடுத்தா மாதிரித்தான் இருக்கு.
இந்த ‘பொன்மொழி’யே ஒரு நெருடல்; அப்ப அத அடிப்படையா வச்சு படங்கள் வரும் போது…அந்த நெருடல தூக்கிப்போட்டுட்டு படத்த ரசிக்கறது ஒரு நெருடலாத்தான் இருக்கு!!
செல்வா மட்டும் இல்ல…பாலசந்தர் படங்கள்ல கூட, ஒரு பொண்ண ‘தடம் மாறிப்போகும் ஆண்மகனை திருத்தும்’ கலங்கரைவிளக்கமா காட்றது புதுசில்ல
இந்த மாதிரி படங்கள பாக்கும்போது…நம்ம தமிழ் சமூகத்துல வழிவழியா இருந்துட்டு வர்ற ஒரு ‘பெண்ணின் தலையாய கடமைகள்’ல ஒன்னான ‘தலைவனை நல்வழி படுத்துவது’ தான் நினைவுக்கு வருது.
இது மாதிரி தருணங்கள்ல, ‘தலைவன்’ எனப்படும் அந்த ஆண்மகன் என்ன நெனைப்பானு தோணும். அந்த பெண்ணானவள் திட்டும் போதும், ‘அத செய்யாதீங்க’, ‘இத செய்யாதீங்க’னு சொல்லும் போதும்…அந்த ஆண் அத எப்படி உள்வாங்குவான்னு கற்பனை செஞ்சுபாப்பேன். கற்பனை இப்ப பதிவா…

இப்பெல்லாம் என் திறமை மேலயே எனக்கு சந்தேகம் வருது. திருமணத்துக்கு முன்ன இப்படி நெனைச்சேனா தெரியல; ஆனா திருமணத்துக்கு அப்பறம் ரொம்பவே அதிகமாயிருக்கு.
“என்னங்க இத செஞ்சீங்களா?”, “என்னங்க அத வாங்கிட்டு வர மறக்காதீங்க”, “friends சேந்தா குடிச்சே தீரணுமா?”, “எனக்கு பாத்தாலே கொமட்டிக்கிட்டு வருது…உங்களுக்கு பிடிச்சிருக்கா?”னு சரமாரியான அவளோட கேள்விகள்…”நாம தான் எதையோ தப்பா செய்யறோமோ?”னு என்னையே கேட்டுக்க தூண்டுது.
27 வருஷங்கள்ல அம்மா அப்பாக்கு நல்ல புள்ளையா, friendsக்கு நல்ல நண்பனா, வேலைல நல்ல தொழிலாளியா, நல்ல முதலாளியா இருந்துட்டு வரேன். “அவனுக்கு என்ன விருப்பமோ, அத அவனே பாத்துப்பான்”, “மச்சி நக்கல் பண்ணல…ஒரு பிரச்சனைன்னு வந்தா உனக்கு call பண்ணனும்னு தான் தோணுது; solution கிடைக்காட்டியும், நீ குடுக்கற tips வச்சு பிரச்சனைய வேற மாதிரி approach பண்ண முடியுது”, “சார்கிட்ட ஒரு தடவை சொல்லியாச்சுல; அவர் பாத்துப்பாரு”, மாதிரியான பாராட்டுகள கேட்டே பழகிப்போன எனக்கு, என்ன பத்தி பெருசா ஒன்னும் தெரியாத ஒரு பொண்ணு, திருமணம் முடிஞ்ச உடனே என்னைய ‘நல்வழி’ படுத்தறேன், ‘திருத்தறேன்’னு ‘பொறுப்பா’ நடந்துக்கும் போது கொஞ்சம் எரிச்சலாத்தான் இருக்கு.
என் தோழி ஒருத்தியோட இத பத்தி பேசிட்டு இருந்தேன். அந்த நேரத்துல அவ முன்வச்ச சில பல கருத்துக்கள், இந்த பிரச்சனை எங்க இருந்து தொடங்கியிருக்கும்னு ஒரு hint குடுத்துச்சு.
திருமணத்துக்கு முன்ன ஒரு பொண்ணுக்கு, அவ அம்மாவும், குடும்பத்துல இருக்கற மத்த ‘அனுபவம் நிறைந்த’ பெருசுகளும், குடுக்கற ரெண்டு மூணு ‘அறிவுரைகள்’ இதெல்லாம்…
“மாப்பிள்ளை அங்க இங்கனு மேயாம பாத்துக்கறது உன் கையில தான் இருக்கு; தலையணை மந்திரம் போடு…குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வருவாரு”
“சாமி எல்லாம் இல்ல”; “கல்லுதான் வந்து சோறுபோடுமா”, அது இதுனு சொல்றதுதான் பசங்களுக்கு இப்ப fashion. அதெல்லாம் சரி செய்யத்தான் நீ இருக்க”
“அவர் friends குடிச்சிட்டு கும்மாளம் அடிப்பாங்க…அதுதான் சந்தோஷம்னு உளறுவாங்க; இவரும் “நானும் போறேன்”னு அடம் புடிப்பாரு. ‘பேசமாட்டேன்’னு சொல்லு, கோபப்பட்டு பாரு, கொஞ்சம் அழுதுபாரு…எதுக்கும் வளைஞ்சு கொடுக்கலியா…அந்த மந்திரத்துல கை வச்சுடு; பொட்டிப்பாம்பா அடங்குவாரு”
“இதுல என்ன இருக்கு? ஏதோ வழித்தவறி போன உங்கள சரி பண்றோம். அம்மாக்கள் கொழந்தை சாப்பிடனும்னா மிட்டாய் வாங்கித்தரேன்னு சொல்றதில்லை…அது மாதிரிதான்”னு அளக்க போறீங்கனா, உங்களுக்கு இந்த பிரச்சனையோட தீவிரம் புரியல; இல்ல இது பிரச்சனைனே உங்களுக்கு தெரியல.
இது எப்படி இருக்குனு சொல்லுங்க.
உங்களுக்கு ஒரு வேலை கெடைச்சிருக்கு. நீங்க ரொம்ப நாளா அந்த மாதிரி ஒரு வேலைலதான் உக்காரணும்னு நெனைச்சீங்க. வேலைக்கு போறீங்க..நீங்க சேந்தபோது சேந்த இன்னொரு பொண்ணு, உங்கள இத செய், அத செய்னு வேலை வாங்கறா. ரெண்டு பேரும் வேலைக்கு புதுசு, ஒரே சம்பளம்தான். ஒரு நாள் தெரிய வருது சங்கதி…மேலதிகாரியோட உறவுக்கார பொண்ணு அவ. கடுப்பா இருக்காது உங்களுக்கு? “என்னடா இது…ஆசை ஆசையா, நெறைய எதிர்பார்ப்போட வந்தா…எவளோ ஒருத்தி வந்து, இத இப்படி செய், அத செய்யாதன்னு sound உட்றா”னு நெனைக்க மாட்டீங்க??
“சின்ன விஷயத்த ரொம்ப பெருசாக்கறீங்க; உங்க நல்லதுக்குத்தான் இதெல்லாம்”னு தொடர போறீங்கனா…இந்த பதிவ நீங்க தொடர்ந்து படிக்கறதுல அர்த்தமே இல்ல.

நான் திரும்ப matterக்கு வரேன்.துள்ளித்திரிஞ்சிகிட்டு இருந்த பொண்ணுக்கு, கல்யாணம்னு ஒன்ன செஞ்சுவச்சு, ‘புருஷன கண்ணும் கருத்துமா பாத்துக்க”, “அவன் தப்பான வழில போகப்போறான்…ஜாக்கரதை”னு வலிய வந்து ‘advise’ குடுக்கற வேலையத்த சமுதாயத்த என்ன செய்யலாம்?
சிந்திச்சு பாத்தா இதுக்கெல்லாம் காரணம் நம்ம சமூக அமைப்புனுதான் தோணுது. திருமணம் நம்ம ஊர் பொறுத்த மட்டும், ரெண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயமாவேத்தான் இன்னும் இருக்கு. இதனால தான் பொண்ணோட அம்மாவாகட்டும், இல்ல மாமியாரோ, நாத்தனாரோ…எல்லாருமே அந்த ‘கணவன்-மனைவி’ உறவுல மூக்க நுழைக்கறத அவங்களோட ‘கடமை’னு நினைக்கறாங்க. இந்த ‘கடமை உணர்வு’னால தான் ..”பொண்ணு, பையன் ரெண்டு பேருமே ‘adults’…அவங்க வாழ்க்கைய எப்படி நடத்த நினைக்கறாங்களோ…அப்படியே செய்யட்டும்”னு ஒதுங்கி இருக்க மறுக்கறாங்க.
கல்யாணத்துக்கு முன்ன friends கூட இதபத்தி பேசும்போதெல்லாம்…படிச்ச பொண்ண கல்யாணம் செஞ்சா பிரச்சனையே இருக்காதுன்னு நினைச்சிருக்கோம்.
ஆனா இப்ப பிரச்சனை இன்னும் இருந்தாலும், ஒண்ணுல மட்டும் தெளிவா இருக்கேன். பகுத்தறியறவனும் கடவுள் நம்பிக்கையும் மாதிரித்தான், இப்ப நாம பேசற பிரச்சனையும், ஒரு தனி நபரின் படிப்பும்…ரெண்டுத்துக்கும் சம்பந்தமே இல்ல.
நீங்க பாத்திருக்க வாய்ப்பு இருக்கு. மாசக்கணக்குல பேசாம இருப்பாங்க; ஏன் பேசாம இருக்கோம்னு கூட மறந்திருப்பாங்க. ஒரு நாள் எதேர்ச்சியா சந்திக்கும் போது, ரெண்டே நிமிஷம் பேசுவாங்க. பிரச்சனை எல்லாம்…காத்தா பறந்துடும்.
நான் பொலம்பிகிட்டு இருக்கற பிரச்சனைக்கு கூட…’மனம் விட்டு பேசாதது’ தான் காரணம்னு தோணுது. “பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”னு அவளும், “நான் பேச ஆரம்பிச்சா கேக்கற நெலமைல அவ இல்ல; ஏதாவது சொல்லி, அவ அழ ஆரம்பிச்சா…ஆள விடுங்கடா சாமி”னு அவனும் இருக்கற வரைக்கும், இந்த பூசல் மட்டும் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துக்கிட்டே இருக்கும்.
“நான் ஏன் first step எடுக்கணும்…அவ பேசட்டும்”, “அவர் பேசினாத்தான் என்ன” மாதிரியான ‘inhibition’னு சொல்ற உளத்தடைய களையும் போது, “ஊர் உலகம் என்ன பேசும்”, “பத்து பேர் என்ன நெனைப்பாங்க” மாதிரியான சொத்தை கவலைங்க, துண்ட காணோம், துணிய காணோம்னு ஓடும்.
அட ஆமாங்க…இதுதான் சரின்னு எனக்கு படுது. இப்ப வரைக்கும் அவளுக்கு என்கிட்ட என்ன பிடிக்காதுன்னு நான் கேட்டதே இல்ல. அவளுக்கு பிடிக்காத விஷயம் எனக்கு ஏன் பிடிக்கும்னு அவளும் கேட்டதில்ல
ஏதோ உங்க கிட்ட பொலம்பி கொட்டினதுல எனக்கு ஒரு solution கெடைச்சிருச்சு. ஆனாலும் அவள ரொம்ப திட்டித்தீட்டுட்டேன். கட்டாயம் ஒரு மன்னிப்பு கேட்டுட்டு, இந்த தனிநபர் விருப்பு வெருப்புகள பத்தியும், சரியான நேரம் பாத்து பேசப்போறேன். யாருக்கு தெரியும்…அவளும் இதே மாதிரி ஒரு தருணத்துக்கு காத்திருக்காளோ என்னவோ?