ஜனவரி 14, 2012 க்கான தொகுப்பு

அன்னிக்கி வேலை முடிச்சிட்டு வர்றதுக்கு 7:30 மணி ஆயிடிச்சு. இருந்த அசதிக்கு, வீட்ல சமைக்கவே மனசில்ல. அப்பத்தான் மத்திய பிரதேசத்தின் சூடான செய்தி ஒன்னு காதுக்கு எட்டினது. எங்க இருந்து அந்த உத்வேகம் பொறந்துச்சு தெரியல…மாட்டிறைச்சி வச்சு ஏதாவது செய்யனும்னு முடிவு செஞ்சேன்.
மேற்கு உலகத்துல…ஆட்டிறைச்சிய இந்திய கறிமசாலா பொருட்கள வச்சு செய்யற ஒரு கறி ‘lamb madras’. அதே மாதிரி ‘பீப் மெட்ராஸ்’னு ஏதாவது இருக்குமான்னு இணையத்த தேடினேன். அப்படி எதுவும் கண்ணுல தென்படல…லாம்ப் மெட்ராஸ் கறிய, மாட்டிறைச்சி வச்சு செய்ய முடிவு செஞ்சேன். எப்பவும் போல…என் படைப்பாற்றலும் அங்க அங்க தென்படும்…:)

தேவையான பொருட்கள்:
மாட்டிறைச்சி, துண்டு துண்டா வெட்டியது (diced) – 500 gm
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
உளுத்தம் பருப்பு – 2 Tbsp
வெந்தயம் – 2 tsp
ஏலக்காய் – 4
பெருஞ்சீரகம் – 1 Tbsp
கிராம்பு – 3
கருவேப்பிலை – 10-15
மிளகாய் வற்றல் – 4-5
வெங்காயம் (பொடிபொடியா நறுக்கிக்குங்க) – 2
பூண்டு – 5 பல்லு
இஞ்சி – 1 சின்ன துண்டு
கடுகு – 2 tsp
சீரகம் – 2 tsp
தேங்காய் பால் – 200 ml
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 Tbsp

செய்முறை விளக்கம்:
1. மாட்டிறைச்சிய கொஞ்சம் மஞ்சள்பொடி சேத்து வேக வச்சுக்குங்க. ரொம்ப வெந்தா ரப்பர் மாதிரி ஆகிடும். உங்களுக்கு அப்படித்தான் பிடிக்கும்னா மட்டும் கொஞ்சம் அதிகமாவே வேகவிடுங்க
2. ஒரு பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் விட்டு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கிராம்பு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் சேத்து வதக்குங்க. வெந்தயம் கருகாம பாத்துக்குங்க.
3. உளுந்து கொஞ்சம் செவக்கும் போது, நறுக்கி வச்ச வெங்காயம் (நறுக்கினதுல பாதி எடுத்துக்குங்க), இஞ்சி, பூண்டு சேத்து திரும்பவும் வதக்குங்க
4. வெங்காயம் ஒரு சிவப்பு நிறத்துலஆன உடனே, அடுப்ப நிருத்தீடுங்க. நல்லா சூடாறின உடனே, மின் அம்மில, கொஞ்சமா தண்ணிவிட்டு அரைச்சுக்குங்க; ஒரு துவையல் பதமா இருந்தா போதும்
5. ஒரு இருப்புச்சட்டில, எண்ணெய் ஊத்தி, சூடான உடனே, கொஞ்சம் கடுகு சேருங்க.
6. கடுகு வெடிக்கும்போது, கொஞ்சம் சீரகம், மிச்சம் இருக்கற கருவேப்பிலைய சேருங்க
7. கருவேப்பிலை கொஞ்சம் மொருமொருன்னு ஆனதுக்கு அப்பறம், வேக வச்சு வடிகட்டின மாட்டிறைச்சிய சேருங்க
8. கொஞ்சம் வதக்கினதுக்கு அப்பறம், அரைச்சு வச்ச விழுத சேருங்க
9. இந்த கலவையோட, தேங்காய்பால் சேருங்க; தேவையான அளவு தண்ணி சேத்து கொதிக்க விடுங்க
10. கடசியா உப்பு சேத்து, நல்லா கொதிச்ச உடனே, அடுப்ப அணைச்சிடுங்க

அப்பறம்…அப்பறம் என்ன…தட்டுல சோறு எடுத்துக்குங்க, ஒரு கரண்டி பீப் மெட்ராஸ் ஊத்திக்குங்க, உருளைக்கிழங்கு வறுவல் இருந்தா அதையும் எடுத்துக்குங்க…அவ்வளவுதான்…ஜமாயுங்க!!
ஒரு ‘change’க்கு – மசாலா பொருட்கள வதக்கும் போது, கொஞ்சம் வித்தியாசமா சுவை வேணும்னா, 2 Tbsp வறுத்த வேர்க்கடலையோ இல்ல 2 Tbsp எள்ளோ சேத்துக்குங்க. துருவின தேங்காய் இருந்தா, அத ஒரு 2 Tbsp சேத்து வறுத்து, அரைச்சு, மாட்டிறைச்சியோட சேத்து கொதிக்க விடுங்க…மடக்கு மடக்குனு சோத்தோட தொண்டைக்குள்ள இறங்கும் பாருங்க…வாரத்துல ரெண்டு நாள் இனி பீப் மெட்ராஸ் தான்னு முடிவு பண்ணினா கூட ஆச்சரியமில்ல!!