ஜூலை, 2012 க்கான தொகுப்பு

அன்று ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். அருகிலிருந்த பெரியவர் கூறியதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் அதிகமாவே சத்தம் வர சிரித்தேன். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் பெரியவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு இறங்கினேன். வீட்டிற்கு நடந்து வரும் வழியில் சட்டென நம் ஊரில் கூறப்படும் ஒரு ‘பொன்மொழி’ நினைவிற்கு வந்தது.
“பொம்பளை சிரிச்சா போச்சு….புகையில விரிச்சா போச்சு”!! “பெண்ணியமா…பாப் வச்சுகிட்டு பேண்ட் சட்டை போட்டிருக்கறவங்க பேசறதுதான…”, என நினைத்த காலங்களில் கூட…இந்த ‘பொன்மொழி’ எனக்குள் ஒரு வெறுப்பை உண்டாக்கியது எனலாம். இதை நினைத்த மாத்திரத்தில்…பாலினத்திற்கு ஏற்றவாறு, நம் சமூகத்தின் அணுகுமுறை மாறுபடும் பல தருணங்கள் நினைவிற்கு வந்தது. அவற்றை பதிவாய் பதிவு செய்தால் என்ன என தோன்றிற்று…தயாரானேன்.

சூழ்நிலை 1- திருமண பேச்சு வீட்டில் அடிபடும் சமயம்
ஒரு ஆண் ‘இப்பொழுது வேண்டாம்’ என தட்டிக்கழிக்கும் போது, “புரியுதுப்பா…நீ மேல படிக்கணும்னு ஆசை படற…எங்களுக்கும் வயசு ஆகுது. பேரன் பேத்திய பாக்கனும்னு ஆசை இருக்காதா…யோசிச்சு பாரு”, இது பொதுவாக பெற்றோரின் பதிலாக இருக்கும்
ஒரு பெண் ‘தள்ளி போடலாமே’ என கூறும் போது, “என்னடி லவ் கிவ்வுனு எதாவதா…25 வயசு ஆயாச்சு….இன்னும் பொண்ண வீட்லியே வச்சிருக்கனு ஒவ்வொருத்தன் கேக்கும் போது பக்கு பக்குன்னு இருக்கு. இன்னும் வயசாக வயசாக…மாப்பிள்ளை கெடைக்கறது ரொம்ப கஷ்டமா போயிடும்”
சமூகத்தின் குப்பன் சுப்பன்களின் பேச்சிற்கு ‘மதிப்பு’ கொடுக்கும் பெற்றோர், அவர்கள் மகளின் விருப்பத்திற்கு செவி மடுக்க மறுப்பது…வருத்தத்திற்குரிய ஒன்றே

சூழ்நிலை 2 – மாப்பிள்ளை அல்லது பெண்ணின் கல்வித்தகுதி
“ரொம்ப படிச்ச பொண்ணெல்லாம் வேண்டாம்ப்பா…திமிரும் கூடவே சேந்து வரும். வீட்டுக்கு அடங்கி இருக்க சொன்னா…எதித்து பேசுவா”
“பொண்ணு நல்லா படிச்சிருக்கு…அவள விட ஜாஸ்த்தியா படிச்ச பையன் தான் சரிப்பட்டு வரும். இல்லென்னா பொண்ணு ஒரு வார்த்தை அதிகமா பேசினா…பஜாரி, அடங்காதுன்னு எல்லாம் பேச்சு வரும். நல்ல M.S. படிச்ச மாப்பிள்ளையா பாரு ஓய்”
இதில் இரு வீட்டாருமே ஒற்றுமை கடைப்பிடிப்பது…நல்ல விஷயம் போல் தோன்றிடினும், இல்லற வாழ்க்கையில், இரு வீட்டாருமே, பெண்ணானவள் அதிகமாய் படித்திருக்க கூடாது என்றே விரும்புகின்றனர்.

சூழ்நிலை 3 – திருமண அழைப்பு
வழக்கமாக மாப்பிள்ளை ‘அணியவேண்டியவை’ என ‘வரையறுக்க’ப்பட்டுள்ள ஆடைகளுக்கு மாறாக மாப்பிள்ளை உடைகள் அணியும் போது, “பாத்தியால்ல…வழக்கத்துல இருந்து மாப்பிள்ளை மாறி நிக்கற அழக….அது அவனோட தனித்துவத்த காட்டுதுல”
பெண் அப்படி அணிய வேண்டும் என நினைக்கும் போதே, “வெளங்கிடும்…வர்றவங்க எல்லாம் “த்து…சரியான கஞ்சனா இருப்பான் போலவே பொண்ணோட அப்பன். பொண்ணுக்கு ஒரு ஜீன்ஸ் t-ஷர்ட் போட்டு வேலைய முடிச்சிட்டான்”னு காரித்துப்புவாங்க”
இது மாதிரி ஒரு சூழ்நிலையில் நானோ என் தோழிகளோ இருந்ததில்லை. எனினும், என் நண்பன் அவனின் திருமண அழைப்பின் போது, தன் விருப்பப்படி உடை அணிந்ததை பார்த்து விட்டு…தோன்றியது இந்த சூழ்நிலை.

சூழ்நிலை 4 – 21 வயதிற்கு பிறகு தன் விருப்பப்படி முடிவெடுப்பது
ஒரு ஆண் அப்படி முடிவெடுக்கும் போது, “பெருமையா இருக்கு தம்பி…உனக்கு சரின்னு பட்டா அத செய். எங்க சப்போர்ட் எப்பவும் உனக்கு உண்டு”
ஒரு பெண் தன் விருப்பத்தை முன்வைக்கும் போதே, “இதெல்லாம் எப்படி…சரிப்பட்டு வருமா? இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணனும், பொண்ண வீட்ல வச்சிருக்கறது, வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கறா மாதிரி. கல்யாணம் பண்ணிக்க…புருஷன் ஓகே சொன்னா…யாரு தடுக்க போறாங்க சொல்லு”
சமூகம் ஆட்டிவைக்கும் பொம்மையாய் அந்த கணவனும் இருக்கும் போது, அவனின் ‘கட்டுப்பாடு பட்டியலும்’ அப்பெண்ணின் விருப்பத்திற்கு இடம் அளிக்கப்போவதில்லை.

சூழ்நிலை 5 – கணவன் அல்லது மனைவி இறந்த பிற்பாடு, மனைவியோ அல்லது கணவனோ மறுமணம் செய்துகொள்ளும் போது…
“என்னதான் பொண்டாட்டி போன துயரம் இருந்தாலும்….ஒரு துணை இல்லாம எப்படி. ஊர் உலகத்துல சகஜமா நடக்கறது தானே…”
“புருஷன் செத்து ஒரு வருஷம் கூட ஆகல…அதுக்குள்ள இருப்பு கொள்ளல..அதுதான் அவசரம்”

சூழ்நிலை 6 – கண்ணீர் வடிக்கும் தருணங்களில்…
“சிங்கம் மாதிரி இருப்பான்…பாவம்…மனிஷன் எவ்வளவு நேரம் தான் உள்ள போட்டே புழுங்கிகிட்டு இருப்பான் சொல்லு ”
“ஆரம்பிச்சுட்டாடா…எதுக்கெடு ஒரு அழுகை. இத வச்சே இந்த பொண்ணுங்க பொழைச்சுப்பாளுங்க”

சூழ்நிலை 7 – வேலை உயர்வு கிடைக்கும் தருணங்கள்
“எனக்கும் தெரியும்…இவன் இல்லாம வேற எவனுக்கு கொடுப்பாங்க சொல்லு…அவன் வேலை அவ்வளவு கச்சிதமா இருக்கும்”
“அப்பவே சொல்லல…அவ மினுக்கிக்கிட்டு daily ஆபீஸ்க்கு வர்றதும் 32 பல்லும் தெரிய சிக்கறதும், இந்த promotion கெடைக்காம இருந்தாத்தான் ஆச்சரியம் ”

சூழ்நிலை 8 – சமைக்கத்தெரியாது என ஒப்புக்கொள்ளும் பொழுது…
“இதுல என்ன இருக்கு. ஆம்பளைங்க கரண்டி தூக்க பொறக்கலப்பா…வீட்டுக்கு சம்பாதிச்சு வந்து கொட்டறோம்ல”
“ஏம்மா…வீட்ல அம்மா சொல்லிக்கொடுக்கலியா…எங்க… வீட்ல கூடமாட இருந்து ஹெல்ப் செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கும். எப்பவும் அது என்ன…Facebook தான…”

சூழ்நிலை 9 – சமூகப்பிரச்சனைகளில் தன் கருத்தையோ அல்லது பலர் ஒத்துப்போகும் கருத்திற்கு மாற்று கருத்து தெரிவிக்கும்போது…
“பரவாயில்ல மச்சி…சுத்தி நடக்கற விஷயங்கள நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. இந்த angleல நான் இதுவரைக்கும் யோசிக்கவே இல்லியே”
“அதுசரி…இப்பெல்லாம் இத பத்தி கூட குங்குமத்துல போடறானா…ஏதோ தீயற நாத்தம் வருது பாரு. அடுப்புல என்ன வச்சிருக்க?”

சூழ்நிலை 10 – வேறு சாதியில் திருமணம் செய்து கொள்வது
“அந்த காலத்துல இருந்தே அவன் நாத்திகம் தான் கடைபுடிச்சான். பெரியாரோட books தான் படிப்பான். அப்படியே நடந்தும் காட்டிட்டான். சபாஷ் டா மாப்பிள்ள”
“அப்படி என்ன அவசரமோ அந்த பொண்ணுக்கு…அம்மா அப்பாவ தலைகுனிய வச்சுட்டு சந்தோஷமா இருந்திடுவா…?”, சாதிக்கே இப்படி ஒரு ‘பங்கத்த’ விளைவித்தப் பிறகு, இந்த வார்த்தைகளை கேட்க, அந்த பெண் உயிருடன் இருப்பாளா என்பது அடுத்த கேள்வி.

சூழ்நிலை – 11 – கணவன் அல்லது மனைவியை ‘டா’ ‘டீ’ போட்டு பேசுவது
“இதுல என்ன இருக்கு? அவன் தொட்டு தாலி கட்டி இருக்கான். ரோட்ல போறவளையா ‘டீ’ போட்டு கூப்பிட்டான்?
“கட்டின புருஷன ‘டா’ போட்டு கூப்பிடறான்னா…ரொம்ப நெஞ்சழுத்தம் இருக்கணும். படிச்சுட்டாளாம்…எல்லாம் பெத்தவள சொல்லணும்”

சூழ்நிலை – 12 : திருமணமாகி ஒரு வருடமாகி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருத்தல்
“அவனுக்கு ஏதாவது டார்கெட் இருக்கும். வீடு வாங்கிட்டு பாத்துக்கலாம்னு இருக்கானோ என்னவோ”
“அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட போக சொன்னேன். நான் பாத்துக்கறேன்னு திமிரா பதில் சொல்றா”

மக்களின் மனதளவில் இருக்கும் இந்த வேறுபாடுகளும், சமத்துவமின்மையும் நீங்காத வரையில், பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கான அரசுத்திட்டங்கள் போன்றவை எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவத்தை நிஜமாக்குமென்பது…விடையறியா கேள்வியே!

 

சில பல காரணங்களினால் ஆறு மாதங்கள் சைவ உணவில் மட்டும் ‘stuck’ ஆகியிருந்த என்னை, விடுவித்த ‘steak’கிற்கு இந்த அந்தாதி சமர்ப்பணம்!!

வெகு நாட்களுக்குப் பிறகு…’deli’யில் உன்னை பார்த்தேன்.
“Hi steak …I am அனு. நான் இத சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு tasty!! இங்க எவ்வளவு எவ்வளவு ருசியா ஒரு …இவ்வளவு ருசிய சுவச்சிருக்க மாட்டாங்க…and I am in love ” என சொல்லத் துடித்தேன்.

அந்த இக்கட்டான நிலையில், உன் கண்களை சந்திக்கும் தைரியம் மட்டும் எனக்கு இல்லை. தற்செயலாக நம் கண்கள் ரெண்டும் முட்டிக்கொண்டன. அப்பொழுது, இருவரின் நடுவில் நடந்த உணர்ச்சிப் போராட்டம்….

“steak இல்லாம இருந்து காட்டறேன்னு தான இப்படி செஞ்ச”, என நீ கண்ணில் செந்நீருடன் வினவ,

“அதெல்லாம் இல்ல…என்ன நம்பு please…நான் இருந்த நெலம அப்படி”, என நான் சப்பக்கட்டு கட்ட,

“ஏதோ திரும்பி வந்தியே…அதுவே போதும்”, என கூறியபடி, தராசிலிருந்து என் கைகளில் தாவினாய்! அந்த நொடி….’God Particle’ கண்டுபிடித்த ‘Higgs Boson’ தோற்றார்.

கீரை மற்றும் காய்கறி வகைகளில் மட்டுமே துவண்டு போயிருந்த என நாக்கை…குத்தாட்டம் போட வைத்தாய்;

கோழிக்கறியின் கொ.ப.செ வாக இருந்த என்னை, கட்சித்தாவல் செய்ய செய்தாய்;

Grillலின் மேலிருந்து ‘ருசி ருசி’ என ‘சிக்னல்’ கொடுத்து, ‘பசி பசி’ என வயிற்றை அலற வைத்தாய்;

mushroom sauce மற்றும் mashed potato உடன் சேர்ந்து நீ தட்டின் மேல் வீற்றிருந்த கோலம்…காண கண்ணிரண்டு போதவில்லை.

வாயினுள் ஒரு துண்டு போன அந்த நிமிடம்….பல முடிவுகளுக்கு வந்தேன்!

“வந்தேன்டா பால்காரன்” பாடலை எழுதியவர்….ஒன்று பாடல் வரிகளுக்கு அரைகுறையாக ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும் …அல்லது மாட்டிறைச்சி உண்ணும் பாக்கியம் இல்லாதாவராய் இருந்திருக்க வேண்டும்.
பின்ன,

“அட மீன் செத்தா கருவாடு….நீ செத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க”
என்ற வரிகள் இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்கும்…அவர் கீழ்கண்ட படத்தினை பார்த்திருந்தால்…

மேற்கண்ட படம் T .ராஜேந்தர் கண்ணில் பட்டதே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

“தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ”

“இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்”

“கலை நிலா மேனியிலே…சுளை பலா சுவையை கண்டேன்”

ஒரு பெண்ணின் அழகை இத்தனை ரசனையுடன் அக்கு அக்காய் பிய்த்து வைப்பவர், மேல்கண்ட படத்தை பார்த்திருந்தால்….புகழ்ந்து தள்ளி இருப்பார்.

‘மைதிலி என்னை காதலி’யை தொடர்ந்து, ‘மாட்டிறைச்சி என்ன மாத்திறிச்சி’ என ஒரு படம் எடுத்து, அதன் வெள்ளி விழாவில், பசுமாட்டினை மேடை ஏற்றி இருப்பார்.

“ரொம்ப புகழறீங்களே”, என நீ அந்த சாதுவான முகத்துடன் குழைவது புரிகிறது
அந்தாதியை பாதியில் நிறுத்த கடியாகத்தான் இருக்கிறது
எனினும் நீ கேட்டுக்கொள்ளும் பொருட்டு…

தோறனையில் (oven) நுழைய ‘Beef & Mushroom Pie’ தயாராக இருக்கிறது. பைய்யுடன் சர்க்கரைவள்ளி வருவலையும் சேர்த்து இரவு சாப்பாடு களைகட்ட உள்ளது.
தின்று முடித்து ஒரு திருப்தி ஏப்பத்தை விட்டு….உளமாற நன்றி கூறி முடித்துக்கொள்கிறேன்!!

“மொத்தம் ரெண்டு suitcase, ரெண்டு hand baggage and ஒரு laptop; பாத்து…விழ போகுது பாரு; நான் கியூல போய் இடம் புடிக்கறேன்”, என மளிகை கடை பட்டியல் படிப்பது போன்ற தோரணையில் கூறிக்கொண்டே சுங்கத்தீர்வை (customs) வரிசை நோக்கி நடந்தேன்.
நீங்க husband and wifeல”, என கடவுச்சீட்டை பார்த்த படி, வினவினார் கடவுச்சீட்டு அதிகாரி.
“ஆமாம் சார், என சுருக்கமாய் நான் பதிலளித்தேன்.
என் கழுத்தை பார்த்தபடியே, உங்க ரெண்டு பேர் surname ஒண்ணா இல்லியே”, என தன் ‘C.I.D.ஷங்கர்’ வேலையை துவங்கினார்.
“பேர் மாத்திக்கணும்னு எனக்கு தோணல சார்”, என மீண்டும் சுருக்கமான பதிலளித்தேன்.
“தம்பி..உங்க கிட்ட marriage certificate, bank statement மாதிரி ஏதாவது இருக்கா? எனக்கு இது சரியா படல”, என்றார் நம் கடவுச்சீட்டு அதிகாரி.
வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
சிறிது எரிச்சல் தலை தூக்க ஆரம்பித்த நேரத்தில், “அந்த marriage certificate, property documents நடுவுல இருக்கும்”, என அமைதியாய் பதிலளித்தான் ராஜ்.
அதிகாரியிடம் சான்றிதழ் கொடுக்க, “எப்பவுமே இத கைலியே வச்சுகிட்டு சுத்தறீங்க போல…இதுக்கு தான் கழுத்த சுத்தி ஒரு தாலின்னு ஒன்னு போட்டுக்கணும்”, என நக்கலாக சிரித்தபடி ‘அறிவுரை’ வழங்கினார் நூற்றாண்டு கிழவர்…அதாவது நம் கடவுச்சீட்டு அதிகாரி.
3 வருடங்கள் கழித்து இந்தியா போவதனால், என் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அன்று மாலை என்னை பார்க்க வந்திருந்தனர்.
“ரெண்டு பேர் தான் வந்திருக்கீங்க…ஜூனியர் அனு, ஜூனியர் சிவா எல்லாம் எங்க?”, என வீண் பேச்சு மாநாட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டாள் ஒரு ‘அனுபவசாலி’.
“ஊர்லியே விட்டுட்டு வந்துட்டோம்னு சொன்னா நம்பவா போறீங்க…மெதுவா வருவாங்க”, என மெலிதாய் புன்னகைத்தபடி பதிலளித்தேன்.
“நாளைக்கி எல்லாரும் வரீங்க தானே”, என ஒருத்தி வினவியபடி, என் அம்மாவை பார்த்து ஏதோ சைகை செய்தாள்
“நான் பாத்துக்கறேன்”, என சைகையால் கூறியபடி, “அனுக்குட்டி…மாமியோட சித்தி பேத்திக்கு நாளைக்கி கல்யாணம். அந்த தாலி கொடிய போட்டுக்கோம்மா. வெளில எல்லாம் எடுத்து காட்ட வேண்டாம். யாரும் எதுவும் பேசாம இருக்கணும்…அதுக்குத்தான்”, என கனிவாய் கேட்டுக் கொண்டாள் என் தாய்.
நான் பேச்சை தட்ட மாட்டேன் என நினைத்தோ என்னவோ, “அப்பறம் மாமி…van நாளைக்கி இங்க வீட்டு வாசலுக்கே வந்திடும்ல”, என பேச்சுத்தலைப்பை மாற்றினாள் என் தாய்.
“கட்டின புருஷன ‘டா’ போட்டு பேசற. ‘வாங்கோ போங்கோ’ பழக்கமே இல்லையோ”, என தோழி ஒருத்தி வினவினாள்
“என்ன பிரியா…ஷங்கர் ஒன்ன ‘டி’ போட்டுதான கூப்பிடறான்”, என நான் கேட்க,
“என்னவோ போ…அம்மா கூப்பிடறா மாதிரி இருக்கு…நான் வரேன்”, என நழுவினாள் அவள்.
“ஏம்மா…இங்க அம்மன் கோயில்ல கூழுத்தறாங்க. ஒரு 2 minutes wait பண்ணினீங்கன்னா…அம்மன பாத்திட்டு..”, என அந்த ஆட்டோக்காரர் கேட்டார்.
“பிரச்சனை இல்லீங்க…தாராளமா”, என பதிலளித்தேன்.
“அம்மனுக்கு மஞ்ச கலர் புடவை சூப்பரா இருந்துச்சுமா. குங்குமம் எடுத்துக்குங்க”, என குங்குமத்தை நீட்டினார் ஆட்டோக்காரர்.
“என்னம்மா நெத்தி காலியா இருக்கு..நீங்க முஸ்லிமா?”, என அவர் கேட்டது சற்றும் எதிர்பாராத ஒன்று.
சற்றே தயக்கத்துடன், “அதெல்லாம் இல்லீங்க. பெருசா இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல”, என பதிலளித்தேன்.
“உங்க அப்பா மாதிரி நினைச்சுக்கம்மா. இந்த பாளையத்தம்மன் ரொம்ப powerful .ஏதோ பிரச்சனை இருக்குனு நினைக்கறேன். ஆத்தா துணை இருப்பா”, என ‘ஆறுதல்’ அளித்தார் ஆட்டோக்காரர்.
“ஆகட்டும்…நன்றிங்க”, என கூறியபடி வீட்டினுள் நுழைந்தேன்.
“அனுக்குட்டி…மாமா கிளம்பறாரு பாரு”, என அம்மா கூற,
“போயிட்டு வாங்க. Melbourne வந்தா கட்டாயம் வீட்டுக்கு வரணும்”, என வழி அனுப்பினேன்.
ஒரு சில வினாடிகள் நிலவியது…ஒரு அசவுகரியமான நிசப்தம்.
“நீ கால்ல விழுவன்னு மாமா வெயிட் பண்ணினாரு”, என வெறுப்பு கலந்த சோகத்துடன் அலுத்துக்கொண்டாள் என் தாய்.

அலைபேசியின் மணி கேட்டு, எடுக்க விரைந்தேன். அந்த பக்கத்தில் ராஜ். வங்கியில் முடிக்க வேண்டிய வேலை முடிந்து விட்டதாகவும், அதற்கு சந்தித்த நபர்கள் பற்றியும் அவன் கூறிக்கொண்டிருக்க, இடையில் குறுக்கிட்டு, “இல்ல ராஜ்…நான் ரெடி இல்ல. இந்தியாக்கு திரும்பி வந்து செட்டில் ஆக நான் ரெடி இல்ல. இல்ல ராஜ் நான் ரெடி இல்ல” என புலம்ப ஆரம்பித்தேன்.
“நீ ரெடி இல்லேன்னு எனக்கும் தெரியும். காபி ரெடி ஆயாச்சு. பல் தேச்சிட்டு வா…சூடார போகுது”, என சமையலறையிலிருந்து குரலெழுப்பிய படி படுக்கையறைக்கு வந்தான் ராஜ்.
சட்டென எழுந்து திருதிருவென விழித்தேன்…ஒரு நிம்மதி பெருமூச்சுடன்.
*******************************************************************************************
சமூகத்தை திருப்திபடுத்த மட்டுமே வாழ்ந்த எனக்கு…மேற்கு உலகம், எனக்கென, என் விருப்பபடி வாழ கற்றுத்தந்தது. இச்சுதந்திரத்தை இழந்து மறுபடியும் சமூகத்தின் கைதியாக தற்போது விருப்பமில்லை.
மேலும் மேற்கில் எனக்கு பிடித்த பல விஷயங்களை, பாராட்டவும், அதன் அழகினை ரசிக்கவும்…துணை புரிந்ததெனில்…இச்சுதந்திரத்தை சொல்லலாம் 🙂