அவன் ஆம்பளைம்மா…ஒன்னும் கேக்க முடியாது!

Posted: ஜூலை 28, 2012 in பிதற்றல்
குறிச்சொற்கள்:, , , , , ,

அன்று ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். அருகிலிருந்த பெரியவர் கூறியதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் அதிகமாவே சத்தம் வர சிரித்தேன். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் பெரியவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு இறங்கினேன். வீட்டிற்கு நடந்து வரும் வழியில் சட்டென நம் ஊரில் கூறப்படும் ஒரு ‘பொன்மொழி’ நினைவிற்கு வந்தது.
“பொம்பளை சிரிச்சா போச்சு….புகையில விரிச்சா போச்சு”!! “பெண்ணியமா…பாப் வச்சுகிட்டு பேண்ட் சட்டை போட்டிருக்கறவங்க பேசறதுதான…”, என நினைத்த காலங்களில் கூட…இந்த ‘பொன்மொழி’ எனக்குள் ஒரு வெறுப்பை உண்டாக்கியது எனலாம். இதை நினைத்த மாத்திரத்தில்…பாலினத்திற்கு ஏற்றவாறு, நம் சமூகத்தின் அணுகுமுறை மாறுபடும் பல தருணங்கள் நினைவிற்கு வந்தது. அவற்றை பதிவாய் பதிவு செய்தால் என்ன என தோன்றிற்று…தயாரானேன்.

சூழ்நிலை 1- திருமண பேச்சு வீட்டில் அடிபடும் சமயம்
ஒரு ஆண் ‘இப்பொழுது வேண்டாம்’ என தட்டிக்கழிக்கும் போது, “புரியுதுப்பா…நீ மேல படிக்கணும்னு ஆசை படற…எங்களுக்கும் வயசு ஆகுது. பேரன் பேத்திய பாக்கனும்னு ஆசை இருக்காதா…யோசிச்சு பாரு”, இது பொதுவாக பெற்றோரின் பதிலாக இருக்கும்
ஒரு பெண் ‘தள்ளி போடலாமே’ என கூறும் போது, “என்னடி லவ் கிவ்வுனு எதாவதா…25 வயசு ஆயாச்சு….இன்னும் பொண்ண வீட்லியே வச்சிருக்கனு ஒவ்வொருத்தன் கேக்கும் போது பக்கு பக்குன்னு இருக்கு. இன்னும் வயசாக வயசாக…மாப்பிள்ளை கெடைக்கறது ரொம்ப கஷ்டமா போயிடும்”
சமூகத்தின் குப்பன் சுப்பன்களின் பேச்சிற்கு ‘மதிப்பு’ கொடுக்கும் பெற்றோர், அவர்கள் மகளின் விருப்பத்திற்கு செவி மடுக்க மறுப்பது…வருத்தத்திற்குரிய ஒன்றே

சூழ்நிலை 2 – மாப்பிள்ளை அல்லது பெண்ணின் கல்வித்தகுதி
“ரொம்ப படிச்ச பொண்ணெல்லாம் வேண்டாம்ப்பா…திமிரும் கூடவே சேந்து வரும். வீட்டுக்கு அடங்கி இருக்க சொன்னா…எதித்து பேசுவா”
“பொண்ணு நல்லா படிச்சிருக்கு…அவள விட ஜாஸ்த்தியா படிச்ச பையன் தான் சரிப்பட்டு வரும். இல்லென்னா பொண்ணு ஒரு வார்த்தை அதிகமா பேசினா…பஜாரி, அடங்காதுன்னு எல்லாம் பேச்சு வரும். நல்ல M.S. படிச்ச மாப்பிள்ளையா பாரு ஓய்”
இதில் இரு வீட்டாருமே ஒற்றுமை கடைப்பிடிப்பது…நல்ல விஷயம் போல் தோன்றிடினும், இல்லற வாழ்க்கையில், இரு வீட்டாருமே, பெண்ணானவள் அதிகமாய் படித்திருக்க கூடாது என்றே விரும்புகின்றனர்.

சூழ்நிலை 3 – திருமண அழைப்பு
வழக்கமாக மாப்பிள்ளை ‘அணியவேண்டியவை’ என ‘வரையறுக்க’ப்பட்டுள்ள ஆடைகளுக்கு மாறாக மாப்பிள்ளை உடைகள் அணியும் போது, “பாத்தியால்ல…வழக்கத்துல இருந்து மாப்பிள்ளை மாறி நிக்கற அழக….அது அவனோட தனித்துவத்த காட்டுதுல”
பெண் அப்படி அணிய வேண்டும் என நினைக்கும் போதே, “வெளங்கிடும்…வர்றவங்க எல்லாம் “த்து…சரியான கஞ்சனா இருப்பான் போலவே பொண்ணோட அப்பன். பொண்ணுக்கு ஒரு ஜீன்ஸ் t-ஷர்ட் போட்டு வேலைய முடிச்சிட்டான்”னு காரித்துப்புவாங்க”
இது மாதிரி ஒரு சூழ்நிலையில் நானோ என் தோழிகளோ இருந்ததில்லை. எனினும், என் நண்பன் அவனின் திருமண அழைப்பின் போது, தன் விருப்பப்படி உடை அணிந்ததை பார்த்து விட்டு…தோன்றியது இந்த சூழ்நிலை.

சூழ்நிலை 4 – 21 வயதிற்கு பிறகு தன் விருப்பப்படி முடிவெடுப்பது
ஒரு ஆண் அப்படி முடிவெடுக்கும் போது, “பெருமையா இருக்கு தம்பி…உனக்கு சரின்னு பட்டா அத செய். எங்க சப்போர்ட் எப்பவும் உனக்கு உண்டு”
ஒரு பெண் தன் விருப்பத்தை முன்வைக்கும் போதே, “இதெல்லாம் எப்படி…சரிப்பட்டு வருமா? இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணனும், பொண்ண வீட்ல வச்சிருக்கறது, வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கறா மாதிரி. கல்யாணம் பண்ணிக்க…புருஷன் ஓகே சொன்னா…யாரு தடுக்க போறாங்க சொல்லு”
சமூகம் ஆட்டிவைக்கும் பொம்மையாய் அந்த கணவனும் இருக்கும் போது, அவனின் ‘கட்டுப்பாடு பட்டியலும்’ அப்பெண்ணின் விருப்பத்திற்கு இடம் அளிக்கப்போவதில்லை.

சூழ்நிலை 5 – கணவன் அல்லது மனைவி இறந்த பிற்பாடு, மனைவியோ அல்லது கணவனோ மறுமணம் செய்துகொள்ளும் போது…
“என்னதான் பொண்டாட்டி போன துயரம் இருந்தாலும்….ஒரு துணை இல்லாம எப்படி. ஊர் உலகத்துல சகஜமா நடக்கறது தானே…”
“புருஷன் செத்து ஒரு வருஷம் கூட ஆகல…அதுக்குள்ள இருப்பு கொள்ளல..அதுதான் அவசரம்”

சூழ்நிலை 6 – கண்ணீர் வடிக்கும் தருணங்களில்…
“சிங்கம் மாதிரி இருப்பான்…பாவம்…மனிஷன் எவ்வளவு நேரம் தான் உள்ள போட்டே புழுங்கிகிட்டு இருப்பான் சொல்லு ”
“ஆரம்பிச்சுட்டாடா…எதுக்கெடு ஒரு அழுகை. இத வச்சே இந்த பொண்ணுங்க பொழைச்சுப்பாளுங்க”

சூழ்நிலை 7 – வேலை உயர்வு கிடைக்கும் தருணங்கள்
“எனக்கும் தெரியும்…இவன் இல்லாம வேற எவனுக்கு கொடுப்பாங்க சொல்லு…அவன் வேலை அவ்வளவு கச்சிதமா இருக்கும்”
“அப்பவே சொல்லல…அவ மினுக்கிக்கிட்டு daily ஆபீஸ்க்கு வர்றதும் 32 பல்லும் தெரிய சிக்கறதும், இந்த promotion கெடைக்காம இருந்தாத்தான் ஆச்சரியம் ”

சூழ்நிலை 8 – சமைக்கத்தெரியாது என ஒப்புக்கொள்ளும் பொழுது…
“இதுல என்ன இருக்கு. ஆம்பளைங்க கரண்டி தூக்க பொறக்கலப்பா…வீட்டுக்கு சம்பாதிச்சு வந்து கொட்டறோம்ல”
“ஏம்மா…வீட்ல அம்மா சொல்லிக்கொடுக்கலியா…எங்க… வீட்ல கூடமாட இருந்து ஹெல்ப் செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கும். எப்பவும் அது என்ன…Facebook தான…”

சூழ்நிலை 9 – சமூகப்பிரச்சனைகளில் தன் கருத்தையோ அல்லது பலர் ஒத்துப்போகும் கருத்திற்கு மாற்று கருத்து தெரிவிக்கும்போது…
“பரவாயில்ல மச்சி…சுத்தி நடக்கற விஷயங்கள நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. இந்த angleல நான் இதுவரைக்கும் யோசிக்கவே இல்லியே”
“அதுசரி…இப்பெல்லாம் இத பத்தி கூட குங்குமத்துல போடறானா…ஏதோ தீயற நாத்தம் வருது பாரு. அடுப்புல என்ன வச்சிருக்க?”

சூழ்நிலை 10 – வேறு சாதியில் திருமணம் செய்து கொள்வது
“அந்த காலத்துல இருந்தே அவன் நாத்திகம் தான் கடைபுடிச்சான். பெரியாரோட books தான் படிப்பான். அப்படியே நடந்தும் காட்டிட்டான். சபாஷ் டா மாப்பிள்ள”
“அப்படி என்ன அவசரமோ அந்த பொண்ணுக்கு…அம்மா அப்பாவ தலைகுனிய வச்சுட்டு சந்தோஷமா இருந்திடுவா…?”, சாதிக்கே இப்படி ஒரு ‘பங்கத்த’ விளைவித்தப் பிறகு, இந்த வார்த்தைகளை கேட்க, அந்த பெண் உயிருடன் இருப்பாளா என்பது அடுத்த கேள்வி.

சூழ்நிலை – 11 – கணவன் அல்லது மனைவியை ‘டா’ ‘டீ’ போட்டு பேசுவது
“இதுல என்ன இருக்கு? அவன் தொட்டு தாலி கட்டி இருக்கான். ரோட்ல போறவளையா ‘டீ’ போட்டு கூப்பிட்டான்?
“கட்டின புருஷன ‘டா’ போட்டு கூப்பிடறான்னா…ரொம்ப நெஞ்சழுத்தம் இருக்கணும். படிச்சுட்டாளாம்…எல்லாம் பெத்தவள சொல்லணும்”

சூழ்நிலை – 12 : திருமணமாகி ஒரு வருடமாகி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருத்தல்
“அவனுக்கு ஏதாவது டார்கெட் இருக்கும். வீடு வாங்கிட்டு பாத்துக்கலாம்னு இருக்கானோ என்னவோ”
“அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட போக சொன்னேன். நான் பாத்துக்கறேன்னு திமிரா பதில் சொல்றா”

மக்களின் மனதளவில் இருக்கும் இந்த வேறுபாடுகளும், சமத்துவமின்மையும் நீங்காத வரையில், பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கான அரசுத்திட்டங்கள் போன்றவை எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவத்தை நிஜமாக்குமென்பது…விடையறியா கேள்வியே!

பின்னூட்டங்கள்
 1. Anand Ramu சொல்கிறார்:

  really very brilliant work anu.. your very much talented writer….keep your good work…

 2. vijay சொல்கிறார்:

  Nalla padhivu Anu……

 3. சேக்காளி சொல்கிறார்:

  ரொம்ப பயங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கரமா அடி வாங்குன மாதிரி இருக்கு.இருந்தாலும் நீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவடீ.பதிலை பார்த்து பெற்றவளை குறை சொல்ல மாட்டேன்.

  • அனு சொல்கிறார்:

   //ரொம்ப பயங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கரமா அடி வாங்குன மாதிரி இருக்கு.இருந்தாலும் நீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவடீ.பதிலை பார்த்து பெற்றவளை குறை சொல்ல மாட்டேன்.//
   வழக்கம் போல் இம்முறையும் உம் பின்னூட்டத்தின் பொருள் விளங்கவில்லை. //பயங்கரமா அடி வாங்கின மாதிரி இருக்கு// – இந்த பதிவுலியே ஒரு 12 சூழ்நிலை போட்டிருக்கேன்…அதுல எந்த சூழ்நிலைய சுட்டிக்காட்டறீங்கனு தெரியல 😦

   • சேக்காளி சொல்கிறார்:

    12 சூழ்நிலையையும் அனுபவித்தவர்களுக்கு அதை அனுபவிக்க நேர்ந்த தருணங்கள் கஷ்டமானதாகவே இருந்திருக்கும். அதனால் தான் அந்த “பயங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கரமா”. அப்புறம் “நல்லவடீ” என்ற பதத்தில் இருக்கும் “டீ” யினால் எனக்கு “டா” தொனிக்கும் பதில் வரும். அதற்கு உங்களை பெற்றவளை(ரை) குறை சொல்ல மாட்டேன் எனவும் எண்ணி பின்னூட்டமிட்டிருந்தேன். நீங்கள் “பொருள் விளங்கவில்லை” என்று பதிலளித்து புரியும் படி எழுத அறிவுருத்தியிருக்கிறீர்கள். இனிமேற்கொண்டு புரியும் படி எழுத முயற்சிக்கிறேன்.

   • அனு சொல்கிறார்:

    // நீங்கள் “பொருள் விளங்கவில்லை” என்று பதிலளித்து// – உண்மை என்னவோ அதுதான்…உங்களின் இந்த பொருள்விளக்கம் பாத்துட்டு…”அட…இது நமக்கு புரியவே இல்லியே”ன்னு தான் நினைச்சேன்!! பதிவெழுதறதுக்கு நேரம் செலவழிக்கறா மாதிரி இனிமே பின்னூட்டங்கள ஒழுங்கா புரிஞ்சுக்கவும் நேர ஒதுக்கணும் போல…மீண்டும் வருகைக்கு நன்றி சேக்காளி 🙂

 4. துளசி கோபால் சொல்கிறார்:

  சபாஷ் அனு!
  அத்தனையும் உண்மை.

  இன்னும், சம்பாதிக்கிறோம் என்ற திமிரு சூழ்நிலை வரலையே:-))))

  • அனு சொல்கிறார்:

   நன்றி துளசி 🙂
   // சம்பாதிக்கிறோம் என்ற திமிரு சூழ்நிலை வரலையே // – எல்லா இல்லற வாழ்க்கையிலும் இந்த பிரச்சனை இருக்குனு சொல்ல வரல…இந்த எண்ணம் இன்னும் நிலவிட்டு இருக்கற சில இருண்ட மனங்களத்தான் சுட்டிக்காட்ட விரும்பினேன். பக்கத்து நாட்டுலதான் இருக்கீங்கன்னு வலைப்பதிவு முகவரில இருந்து தெரிஞ்சுது. வருகைக்கு நன்றி 🙂

 5. தணல் சொல்கிறார்:

  Mr. Sekkali should learn to mind his words!

 6. Sutharshini சொல்கிறார்:

  உண்மையோ உண்மை… என் மனசில இருக்கிற நிறைய விசயங்கள எழுத்தில பார்த்த திருப்தி எனக்கு… நல்ல பதிவு…

  • அனு சொல்கிறார்:

   நன்றி சுதர்ஷினி 🙂 உங்க சமீபத்திய விளம்பரங்கள் பத்தின பதிவு பாத்தேன். அந்த பொம்மி நைட்டி தொல்லை தாங்கலைங்க…அத பதிவா பதிச்சதுக்கு வாழ்த்துக்கள்!

   • வருண் சொல்கிறார்:

    ***மக்களின் மனதளவில் இருக்கும் இந்த வேறுபாடுகளும், சமத்துவமின்மையும் நீங்காத வரையில், பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கான அரசுத்திட்டங்கள் போன்றவை எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவத்தை நிஜமாக்குமென்பது…விடையறியா கேள்வியே!***

    You have not seen any situations which are fair and acceptable to you? I mean, where women are treated equal or greater than men?

    NO??

    Then, you are yet to see the world, I believe. Don’t conclude anything, yet!

   • அனு சொல்கிறார்:

    உம் வருகைக்கு நன்றி வருண். பதிவின் தொடக்கத்தில் இருக்கும்,
    //பாலினத்திற்கு ஏற்றவாறு, நம் சமூகத்தின் அணுகுமுறை மாறுபடும் பல தருணங்கள் நினைவிற்கு வந்தது//
    வரியையோ அல்லது பின்னூட்டங்களில் இருந்த
    //எல்லா இல்லற வாழ்க்கையிலும் இந்த பிரச்சனை இருக்குனு சொல்ல வரல…இந்த எண்ணம் இன்னும் நிலைவிட்டு இருக்கற சில இருண்ட மனங்கலத்தான் சுட்டிக்காட்ட விரும்பினேன்//
    வரியையோ நீர் கவனிக்கவில்லையோ என தோன்றுகிறது

    But since you have brought this up, maybe you can provide some instances where you think equality or ‘women being granted an upper pedestal’ prevails in the Indian society!

 7. வருண் சொல்கிறார்:

  ***எல்லா இல்லற வாழ்க்கையிலும் இந்த பிரச்சனை இருக்குனு சொல்ல வரல…இந்த எண்ணம் இன்னும் நிலைவிட்டு இருக்கற சில இருண்ட மனங்கலத்தான் சுட்டிக்காட்ட விரும்பினேன்***

  Anu: The bottomline is you did not show any such situations- நீங்க அப்படி சூழல் பார்த்திருந்தாலும். I dont know what good will it do, if I show such situations I encountered?

  Anyway, what I would say is, if men dont know how to treat or respect women the way they should be, it is THEIR IGNORANCE. You should feel sorry for them. Your responsibility is that when you bring up a boy, he should never become such kind of man! That’s all you can do other than posting this article in web!

  • அனு சொல்கிறார்:

   //if men dont know how to treat or respect women the way they should be, it is THEIR IGNORANCE. You should feel sorry for them.// – நீங்க சொல்றது எப்படி இருக்குனா….”‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’…பெண்கள ஒரு சக மனிஷியா மதிக்காம ஒருத்தன் இருந்தா…அந்த குணத்த மாத்தவே முடியாது”
   இது ஆண்கள stereotyp பண்றா மாதிரி இருக்கு.
   அதுல எனக்கு உடன்பாடு இல்லீங்க…தன் சுற்றுசூழலுக்கு வெளில என்ன நடக்குது, அதுல ஏதாவது நல்லது இருக்கா, அத ஏன் இவ்வளவு நாளா நாம கடைபுடிக்கலன்னு ஒரு மனிஷன் யோசிக்க ஆரம்பிக்கும் போது…அவன் சமூக பார்வை விரிவடையும்; மாற்றம் உண்டாகும்.
   பெண்களும் ஆண்களுக்கு பாவ பட்டுகிட்டு, ‘அவங்க ignorance …மாத்த முடியாது’னு நினைச்சிருந்தா இன்னிக்கி அவங்களுக்கு கெடைச்சிருக்கற பல உரிமைகள் சாத்தியமே ஆகி இருக்காது.

   //Your responsibility is that when you bring up a boy, he should never become such kind of man! That’s all you can do other than posting this article in web!// – என் பொறுப்புகள சுட்டிக்காட்டினதுக்கு ரொம்ப நன்றி வருண். ‘என் குடும்பம், என் வாரிசுகள் மட்டும் நல்லா இருந்தா போதும்’னு இருக்கற ஒரு சுயநலத்துல எனக்கு விருப்பமில்ல

   • வருண் சொல்கிறார்:

    ***”‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’…பெண்கள ஒரு சக மனிஷியா மதிக்காம ஒருத்தன் இருந்தா…அந்த குணத்த மாத்தவே முடியாது”
    இது ஆண்கள stereotyp பண்றா மாதிரி இருக்கு.
    அதுல எனக்கு உடன்பாடு இல்லீங்க…***

    என்னங்க நீங்க, மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 சூழ்நிலைகளும் அதைத்தானே சொல்லுது? இன்னும் தொட்டில்ல பழகுனதையேதான் வச்சிக்கிட்டு இருக்காங்கனு? உங்களுக்கு உடன் பாடு இல்லை சரி, அதைத்தானே 12 சூழ்நிலையிலும் காட்டுறீங்க?

    அதெல்லாம் அறியாமைதான்!!

    ***என் பொறுப்புகள சுட்டிக்காட்டினதுக்கு ரொம்ப நன்றி வருண். ***

    ஒரு 50 வருடம் முன்னாலேயே ஒவ்வொரு அம்மாவும் தன் மகனை 12 சூழ்நிலையில் இருப்பதுபோல் முட்டாளா இருக்காதேனு எடுத்துச்சொல்லி வளர்த்திருந்தால், இன்னைக்கு உங்களுக்கு ஒரு சூழ்நிலைகூட மாட்டாது!

    ஆண்கள் எங்கேயிருந்து குதிக்கிறாங்க?

    ஒரு தாயின் மகந்தானே எல்லாரும்? அந்தத்தாயை மதிப்பவன், தாய் சொல்வதை மந்திரமாக எடுப்பவந்தானே மகன்?

    எங்கம்மாவுக்கே நான் சொல்ல வேண்டியது வருது.. “இதுபோல் பெண்களுக்கு தேவையான இடங்களில் வக்காலத்து வாங்காமல் நீங்க பொறுப்பில்லாமல் பேசுறது தப்பும்மா”னு

    அவங்க என்னைப் பார்த்து சிரிச்சுட்டு அதே மாதிரித்தான் இருக்காங்க!

    Women dont do what they supposed to do to correct men. Are you with the solution? Or you are part of the problem? The latter is the TRUTH!

    ***‘என் குடும்பம், என் வாரிசுகள் மட்டும் நல்லா இருந்தா போதும்’னு இருக்கற ஒரு சுயநலத்துல எனக்கு விருப்பமில்ல***

    If every mom is selfish and corrects her own son only, that is enough to resolve the problem! Some moms dont do the job right. They are not responsible. That is why you could come up with 12 situations!

    I dont see selfishness here when I look at the issue carefully. If everyone corrects themselves the world will be perfect! Why do you say that as “selfish”??

   • அனு சொல்கிறார்:

    //என்னங்க நீங்க, மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 சூழ்நிலைகளும் அதைத்தானே சொல்லுது? இன்னும் தொட்டில்ல பழகுனதையேதான் வச்சிக்கிட்டு இருக்காங்கனு?//
    “ஆண்கள் ஒரு பொண்ண மதிக்கலனா..அது அவனோட ignorance …அத மாத்த முடியாது”னு நீங்க சொல்லி இருந்தீங்க. அதுல தான் எனக்கு உடன்பாடில்லன்னு சொன்னேன். ஒரு சமூகம்னா அது ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான். என் பதிவிலயும், சமூகத்தின் பார்வைன்னு சொல்லும் போது, ஒரு ஆணுடையுதுனு எங்கயுமே நான் சுட்டிக்காட்டல. அது என் நோக்கமும் இல்ல.

    //அதெல்லாம் அறியாமைதான்!! //
    “நோக்கா நேக்கா பைக்குக்கா”, னு விவேக் கேக்கறா மாதிரி, இங்க அறியாமை எனக்கா, உங்களுக்கா, இல்ல சமூகத்துக்கா?
    எனக்குனு சொல்ல வரீங்கனா…நான் படிச்சது, பாத்தது வச்சு முன்வைத்த சூழ்நிலைகள் இது. ஒருவர் கடந்துவந்த விஷயங்கள பதிக்கும் போது, அது எப்படி அறியாமை ஆகும்னு தெரியல
    உங்களுக்குனு சொல்ல வரீங்கன்னா…”கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு”…ரிலாக்ஸ் 🙂
    சமூகத்துக்குனு சொல்றீங்கனா….என் பதிவும் அதத்தான் சுட்டிக்காடுது!!

    //அந்தத்தாயை மதிப்பவன், தாய் சொல்வதை மந்திரமாக எடுப்பவந்தானே மகன்? //
    நீங்க இப்ப எந்த நூற்றாண்டுல இருக்கீங்கனு ஒரு சின்ன சந்தேகம் தான் வருது. பெரியவங்கள மதிக்கறதுக்கும், அவங்க சொல்றத வேத வாக்கா நினைச்சு நடக்கறதுக்கும் வித்யாசம் இருக்கு. தனக்கு எது சரி எது தவறுன்னு யோசிக்க தெரியாம….’அதுதான் வாழ்ந்து அனுபவப்பட்டுடாங்களே…சொல்றத கேட்டு நடப்போம்’னு நினைக்கறவன/நினைக்கறவள…எப்படி adult னு மதிக்க முடியும்?

    //Women dont do what they supposed to do to correct men //
    நீங்க இங்க என்ன சொல்ல வரீங்கனே எனக்கு புரியல. anyways …”correcting men ‘, ‘புருஷன நீ தான் ‘திருத்தணும்”, ‘அவன ‘நல்வழி படுத்தனும்”….இதெல்லாம் நம்ம ஊருக்கே உரிய கேவலமான ‘அறிவுரைகள்’.

    பொண்ணுங்க திருத்தறதுக்கு ஆணுங்க என்ன மடையன்களா??

    //If every mom is selfish and corrects her own son only, that is enough to resolve the problem! //

    //If everyone corrects themselves the world will be perfect!//

    ரொம்ப ஒரு idealistic world ல வாழணும்னு நினைக்கறீங்க…unfortunately நம்ம உலகம் அப்படி இல்ல.

    உங்களுக்கு என் பதிவோ, வலைப்பூல இருக்கற மற்ற பதிவுகளோ
    ‘waste of time ‘னு தோணிச்சுனா… வலைப்பூ பேர பாத்தீங்கல…free யா விடுங்க 🙂

 8. வருண் சொல்கிறார்:

  ***உங்களுக்கு என் பதிவோ, வலைப்பூல இருக்கற மற்ற பதிவுகளோ
  ‘waste of time ‘னு தோணிச்சுனா… வலைப்பூ பேர பாத்தீங்கல…free யா விடுங்க ***

  அப்படி நெனச்சா நான் ஏங்க பத்தி பத்தியா டைப் அடிக்கிறேன்? இந்தம்மா எதையோ சொல்லிட்டுப் போறாங்கனு ஒதுங்கிப் போயிருப்பேனே? 🙂

  ஒரு விடயத்தை பல கோணங்களில் பார்க்கலாம்னு நான் நம்புறேன். ஆண்கள் பார்க்கும் கோணத்தை உங்களுக்கு எடுத்துக்காட்ட முயன்றேன். இந்த சூழ்நிலையை சரிசெய்ய ஆண்களும் பெண்களும் ஒண்ணா சேர்ந்துதான் முயலனும்னு நான் நம்புறேன்.

  விவாதம்னு வந்துட்டா I play “devil’s advocate role” at times! அப்போத்தான் ஒரு சில விடயங்களை எல்லோருக்கும் காட்டமுடியும்.

  மற்றபடி நீங்க பதிவுலகுக்கு புதிது போல தோனுது. துளசி டீச்சரை நீங்க ஒருமையில் விளிப்பதை வச்சு சொன்னேன். இல்லைனா அவங்க உங்க க்ளோஸ் ஃப்ரெண்டாக்கூட நீங்க இருக்கலாம் (இது என் அறியாமை).

  So, take it easy and move on, Anu! In the blog world you will often see strange creatures like me! Of course they are pain in the neck! But you need to deal with them! Do write and talk loudly about issues you feel and think as important to address! Dont worry what varuN or anybody thinks about it! And do expect “troubles” like me too! That’s not uncommon in blog world

  No hard feelings or whatsoever, Anu! Again, take it easy! 🙂

  • அனு சொல்கிறார்:

   //ஒரு விடயத்தை பல கோணங்களில் பார்க்கலாம்னு நான் நம்புறேன். ஆண்கள் பார்க்கும் கோணத்தை உங்களுக்கு எடுத்துக்காட்ட முயன்றேன்.// – திரும்பவும் ஆண்கள stereotype பண்றீங்களே! நீங்க பார்க்கும் கோணத்த எடுத்துக்காட்ட முயன்றீங்க சரிதான…ஏன்னா என் ஆண் நண்பர்கள் சிலரோட சமூகம் பற்றிய எண்ணமும் இந்த பதிவுக்கு இணையானது.

   //மற்றபடி நீங்க பதிவுலகுக்கு புதிது போல தோனுது. துளசி டீச்சரை நீங்க ஒருமையில் விளிப்பதை வச்சு சொன்னேன். இல்லைனா அவங்க உங்க க்ளோஸ் ஃப்ரெண்டாக்கூட நீங்க இருக்கலாம் (இது என் அறியாமை).//

   முதல்ல பதிவுலகத்துக்கு புதுசா இருக்கறதுக்கும் ஒருவர ஒருமைல விளிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல. மரியாதைங்கறது ஒருவர ‘வாங்க போங்க’னு கூப்பிட்டாத்தான் வரும்னா…அதுல எனக்கு உடன்பாடில்ல. ஒருத்தர் மேல மரியாதை, அவங்க நடந்துக்கற விதத்துல இல்ல அவங்களோட சமூக நடைமுறை பத்தின நிலைப்பாடுல இருந்து வரணும்..atleast என்ன பொருத்தமட்டும்
   // In the blog world you will often see strange creatures like me! Of course they are pain in the neck! But you need to deal with them! Do write and talk loudly about issues you feel and think as important to address! Dont worry what varuN or anybody thinks about it! And do expect “troubles” like me too! That’s not uncommon in blog world //
   ‘blog world ‘ என்னங்க…யதார்த்த வாழ்க்கைலியே மாற்றுகருத்து உள்ள மக்கள சுலபமா பாக்க முடியும். அவங்கள ‘strange creatures ‘னு கூப்பிடுவேனா தெரியல. ஏனா அவங்க பார்வைக்கு நான் ‘strange creature’ஆ தெரியறதுக்கு நெறைய வாய்ப்புகள் இருக்கு. பல்வேறு கருத்துக்கள் வந்து குவியற இடமா வலைப்பதிவுகள மக்கள் பாக்கும் போது, ஆரோக்கியமான விவாதங்கள் சாத்தியமாகும்…உம் வருகைக்கும் கருத்துபரிமாற்றத்திற்கும் மீண்டும் நன்றி 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s