ஒக்ரோபர், 2012 க்கான தொகுப்பு

டீ கடை வாசல்

அறிவிப்பு பலகையில்
“கடைல பாக்கி வச்சிருக்கவங்க அம்புட்டு பேரும்…இந்த மாசத்துக்குள்ள பாக்கிய செட்டில் பண்ணிடு. இல்லாட்டி உன் safety க்கு அண்ணாச்சி பொறுப்பில்ல”

அதை படித்த படியே, டீ கடையினுள் நுழைந்த செந்தில், “மச்சி வெளில போர்டு படிச்சியா…செம காமெடி பண்றாரு அண்ணாச்சி”, என நக்கலாய் சிரித்தபடி குழுமி இருந்த கூட்டத்துடன் இணைந்தான்.
“அத எங்க கிட்ட கேக்காத….அண்ணாச்சியவே கேளு…சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. சங்கர் வேற நாங்க சிரிக்கறத பாத்துட்டு செம கடுப்புல இருக்கான்”, என வந்த சிரிப்பை அடக்கியபடி பதிலளித்தான் தினேஷ்.
“என்ன அண்ணாச்சி ரொம்ப பில்ட் up குடுக்கறாங்க பசங்க….என்ன சங்கதி”, என கல்லாவில் இருந்த அண்ணாச்சியிடம் வினவினான் செந்தில்.
“நீயும் சிரிப்பனு தெரியும் தம்பி…எதுக்கு வெட்டி பேச்சு. பாக்கி ஏதாவது இருந்துச்சுனா இந்த வாரத்துக்குள்ள செட்டில் பண்ண பாரு”, என ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய்’ பதிலளித்தார் டீ கடை அண்ணாச்சி.

“என்ன அண்ணாச்சி…இப்பிடி சொல்லிட்டீங்க. ஏதோ பிரச்சனை உங்களுக்கு. ஒரு அக்கறையோட கேக்க வந்தா…இப்படி பண்றீங்களே”, என வருத்தப்பட்டான் செந்தில்.

“நேத்து என் friend ஒரு சாமிய பாக்க கூட்டிகிட்டு போனான் தம்பி. அவர் சொல்றாரு….உலகம் Dec 21 ஓட அழிஞ்சிடுமாம். அதுதான் இந்த மாசத்துக்குள்ள கொஞ்சம் பைசா தெரட்டி, பசங்கள கூட்டிகிட்டு பழனிக்கு போலாமுன்னு வீட்டுல சொன்னாங்க”, என சோகம் கலந்த குரலில் ‘அறிவிப்பு பலகையின்’ காரணத்தை விளக்கினார் அண்ணாச்சி.

“பக்கத்து ஊர்ல வீடு கட்ட நெலம் வாங்கி இருக்கீங்க அண்ணாச்சி….அத என்ன பண்ண போறீங்க”, என தினேஷ் கேள்வி எழுப்ப, பெஞ்சில் அமர்ந்திருந்த அனைவரும் ‘கொள்’ என சிரிக்க ஆரம்பித்தனர்..சங்கரை தவிர்த்து.
“அண்ணாச்சி…புது வருஷத்துல ஒரு நேத்தி கடன் முடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க…அதையும் சீக்கிரமா முடிக்கனும்ல”, என மேசையில் அமர்ந்திருந்த இன்னொரு நண்பர் கேலி செய்தார்.

அனைவரின் நக்கல் பேச்சுகளையும் கேட்ட படி அமைதி கடைப்பிடித்தார் அண்ணாச்சி.

“நிறுத்துங்கப்பா…மனிஷன் பாவம் நெஜமாவே பயந்து போயிருக்காரு…நீங்க என்னடானா…இன்னும் அவர ஏத்திவிட்டுக்கிட்டு”, என டீ கடை பெஞ்ச்சினை அமைதியாய் இருக்கும்படி சொல்லிவிட்டு,

“அண்ணாச்சி…இதெல்லாம் போட்டு மனச கொழப்பிக்காதீங்க. அமெரிக்கால ஒரு கும்பல் Oct 21 ஓட உலகம் அழிஞ்சிடுமுனு சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க….இப்ப தேதி 24 …ஒன்னும் ஆகல. அடிச்சுகிட்டு சாவறவன் செத்துகிட்டு தான் இருக்கான், தன் வேலைய கவனிச்சுகிட்டு இருக்கறவன் அவன் வேலைய பாத்துகிட்டு இருக்கான்”, என அண்ணாச்சியை ஆறுதல் படுத்தினான் செந்தில்.

“இல்ல தம்பி…நல்லவங்க மட்டும் உயிரோட இருப்பாங்களாம்….தப்பு செஞ்சவங்க எல்லாம் செத்திடுவாங்களாம். பால் கம்மியா இருக்கும் போது சில சமயத்துல தண்ணி சேத்திருக்கேன்…டீ தூள் அடித்தட்டும் போது…சில நேரத்துல…சில நேரத்துல தான், காபி பொடிய கலந்திருக்கேன். எனக்கென்னவோ நான் ‘தப்பு செஞ்சவங்க லிஸ்ட்’ல தான் இருப்பேன்னு தோணுது”, என மனம் ஒடிந்தார் அண்ணாச்சி.

“நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு…யாரு இங்க முடிவெடுப்பாங்க. நீங்க ஒரு காரியம் செய்யறீங்க..என்ன பொறுத்த மட்டும் அது தப்பா இருக்கலாம்…ஆனா நீங்க அத நல்ல காரியமா நெனைச்சு தான் செய்யறீங்க. கொள்ளை அடிக்கறவன் கூட அவன் வேலைய நியாயப்படுத்துவான் அண்ணாச்சி. அத விடுங்க…
காலைல 5 மணிக்கு கடைய தொறந்து…ராத்திரி 11 மணி வரைக்கும் ஓயாம டீ ஆத்தறீங்க. கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து நகுந்து, இந்த கடைல ஒரு டீயும் தம்மும் அடிக்கறதுல கெடைக்கற நிம்மதிக்கு equal ஆ ஒன்னும் இருக்கறா மாதிரி எனக்கு தெரியல…இந்த IT பார்க்ல வேலை செய்யறவன் ஒவ்வொருத்தனும் இதத்தான் சொல்லுவான். உங்க பசங்க ரெண்டும் நல்லா படிக்கணும்னு சிறுக சிறுக சேத்து வைக்கறீங்க., இதெல்லாம் கணக்குல எடுத்துக்காம…என்னைக்கோ ஒரு நாள் சேத்த தண்ணியையும் காபி தூளையும் சாக்கு காட்டி சாவடிக்கிற உங்க கடவுளுக்கு எவ்வளவு ‘பெரிய’ மனசு இருக்கணும்!”, என கூறியபடி அண்ணாச்சியின் தோளை தட்டிக்கொடுத்தான் செந்தில்.

“எனக்கு கூட இது தோணிச்சு தம்பி…ஆனா அங்க இருந்த கூட்டத்த பாத்தா…அத்தனை பேரும் அவர நம்பறாங்கனு தான் தோணுது. நெறைய பேரு காணிக்கை எல்லாம் போட்டு…ஏதோ சொல்லுவாங்களே…பரிகாரம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. என்கிட்ட அப்ப பைசா இல்ல….அதுனால நாளைக்கி திரும்ப போகலாமுன்னு வந்துட்டேன்”, என நொந்துகொண்டார் அண்ணாச்சி.

“இது point…பரிகாரம் செய்ய காசு கட்டினவங்க dec 22 அன்னிக்கி அந்த சாமிகிட்ட வந்தா…”அட பரிகாரம் வேலை செஞ்சிடுச்சு”னு announcement…அப்பறம் சாமியோட கல்லா நிரம்பி வழியும்.
பரிகாரமே பண்ணலனாலும், dec 21 உங்களுக்கு ஒன்னும் ஆகலைனா…இருக்கவே இருக்கு, “தம்பி…அன்னிக்கி இங்க வந்தபாரு…அதுனால என் வேண்டுகோளுக்கு இணங்க…உன் தப்புகள எல்லாம் கடவுள் மன்னிச்சு விட்டுட்டாரு”…so எப்படி பாத்தாலும் சாமியோட காட்டுல மழைதான்”, என செந்தில் யதார்த்தமாய் விளக்க, ஒரு தெளிவு கலந்த புன்னகை அண்ணாச்சி முகத்தில் சிறிதே எட்டிப் பார்த்தது.
“இப்பனு இல்ல அண்ணாச்சி…பல வருஷமா வேற வேற நாடுகள்ல இப்படி சொல்லிக்கிட்டு திரியற கிறுக்கனுங்க இருக்கறானுங்க. போன வருஷம் கூட அமெரிக்கால ஒரு நாதாரி, மே மாசாத்தோட உலகம் அழிஞ்சிடும்னு பிரச்சாரம் செஞ்சான். அத உண்மைன்னு நம்பி நெறைய பேர் வேலைய விட்டுட்டு, இருந்த சொத்துக்கள எல்லாம் வித்துட்டு, வந்த பைசால அவங்களால முடிஞ்ச வரைக்கும் இந்த கருத்த பரப்பினாங்க”, என அண்ணாச்சியின் பயம், அவசியமற்றது என விளக்கினான் செந்தில்.

“நான் இன்னிக்கி வந்த காரணத்தையே மறந்துட்டேன். dec 23 எங்க ஆபீஸ்ல christmas பார்ட்டி. சரக்கு, சாப்பாடு எல்லாத்தையும் கம்பெனி பாத்துக்கும். சாப்பாடு முடிச்சு அண்ணாச்சியோட மசாலா டீ அடிச்சா…சூப்பரா இருக்கும்னு நான் சொன்னேன். அதுதான் உங்க கிட்ட பேசி rate விஷயத்த கேட்டுகிட்டு வர சொன்னாங்க”, என டீ கடை விஜயத்தின் காரணத்தை விளக்கினான் செந்தில்.

“தம்பி…எனக்கு என்ன சொல்லனும்னு தெரியல…”, என அண்ணாச்சி தலையை சொரிய,
“அண்ணாச்சி…ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்படியே dec 21 உலகம் அழிஞ்சா கூட…நீங்க சொர்க்கத்துல இருப்பீங்க…நான் அடிச்ச லூட்டிக்கெல்லாம் சேத்துவச்சு நரகத்துல எங்களுக்கு இடம் நிச்சயம். சொர்க்கமும் நரகமும் பக்கத்துபக்கத்துல தான் இருக்கும். என்ன punishment குடுத்தாலும், 2 மணி நேரத்துக்கு ஒரு பிரேக் எடுத்து, அங்க சொர்க்க வாசல்ல நிக்கறோம். உங்க மசாலா டீய குடுங்க. இப்ப contractஅ எடுத்துக்குங்க பாஸ்”, என நகைச்சுவையாய் பேசியபடி கல்லா நோக்கி வந்தான் தினேஷ்.

“சரி செந்தில் தம்பி…நீங்க மதிய சாப்பாட்டுக்கு வரும்போது…நான் கணக்கு போட்டு குடுக்கறேன்…”, என செந்திலிடம் கூறியபடி, பைசா கொடுக்காமல் தினேஷ் வெளியேறுவதை கவனித்த அண்ணாச்சி,
“தம்பி…டீ போண்டாக்கு காசு?'”, என வினவ,

“accountல எழுதிக்குங்க அண்ணாச்சி…அப்பறம் இந்த போர்ட மறக்காம எடுத்து உள்ள வைங்க”, என அமைதியாய் சிரித்தபடி, விடைப்பெற்றான் தினேஷ்.

பின்குறிப்பு – அன்று மார்ஸ் கிரகத்தில் இறங்கிய ‘curiosity’ ஏவுகணை பற்றிய ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நடுவில், ‘உலகம் இந்த வருடம் அழியப்போகிறது” போன்ற மூட எண்ணங்களும் பரவிக்கொண்டிருப்பதை நினைத்தேன்.’கூகிள்’ செய்தபோது, கண்ணில் பட்ட படம் இது…

அடுத்த பதிவு…இதை ஒட்டியே…என முடிவு செய்தேன் 🙂

“குங்குமம் எடுத்துக்கோ…அம்மனுக்கு இன்னிக்கி பட்டு பொடவ கட்டி இருந்தாங்க”, என கையை நீட்டினாள் அனு

“எங்க…குங்குமம் மட்டும் குடுக்கற…விபூதி எங்க”, என குங்குமத்தை விரலில் எடுத்தபடி வினவினாள் அனு.

“சிவன் கோயில்ல இருந்து என்னிக்கி விபூதி கொண்டு வந்திருக்கோம்…’சிவன் சொத்து குல நாசம்’னு தெரியும்ல”, என அனுவின் தலையில் கொட்டினாள் அனு.

“ஏய்…அப்பனா யாருக்கும் தெரியாம சொத்துல ஒரு 0.1 % சுட்டியா? நெத்தில வச்சிருக்கறதுக்கு கணக்கு காட்டினியா?”, என கண்ணடித்தாள் அனு.
“ஜோக்கா…எனக்கு சிரிப்பே வரல”, என முகத்தை திருப்பிக்கொண்டாள் அனு.

“கோவிச்சுக்காதடீ…இன்னிக்கி என்ன விசேஷம்…கோயில் பக்கம்?”, என அனு கேட்க,
“தம்பிக்கு exam …first rank எடுக்க prepare பண்ணீட்டானாம் …ஆனா ஒரு பொண்ண நினைச்சாத்தான் பயமா இருக்காம். “போயும் போயும் ஒரு பொண்ணுக்கு போய் பயப்படற”னு சொன்னேன். சரி சாமி கிட்டயும் ஒரு கோரிக்கை வச்சிடலாமுனு…”, என கோயில் விஜயத்திற்கான காரணத்தை விளக்கினாள் அனு.

“ஏன்டீ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல ஒனக்கு. நீ first rank வாங்கின போதெல்லாம், “பையன்னா…ரெண்டு கொம்பு மொளைச்சிருக்கா என்ன…நல்லா படிச்சா யாரு வேணும்னாலும் first rank வாங்கலாம்”னு வாய் கிழிய பேசுவ..உன் தம்பிக்குனா…கதை அப்படியே about turn …பாவம்டீ உன் சாமி…confuse ஆக மாட்டாரு?”, என ‘சீரியஸ்’ஆக முகத்தை வைத்தபடி கேள்வி எழுப்பினாள் அனு.
“அய்யியே…இந்த பொண்ணு நடவடிக்கையே சரி இல்லியே. இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்றோம், ஏதாவது sensational விஷயங்கள பேசுவான்னு பாத்தா…சாமி சானி போடுமா, சாமி சாயம் பூசுமான்னு கேட்டுகிட்டு இருக்கே”, என சிறிது அதிகமாகவே குரலை உயர்த்தினாள் அனு.

“சரிடீ நீ சொல்லு…சூடான நியூஸ் ஏதாவது படிச்சியா”, என அமைதியாய் அனு கேள்வி எழுப்ப, சாலையில் மிகுந்த சத்தத்துடன் கடந்து சென்ற மோட்டார் வாகனத்தை பார்த்து முகம் சுழித்தாள் அனு.
“இதோ இத பத்தி ஒன்னு படிச்சேன். பைக்குக்கு ஆசைப்பட்டு ஒரு சின்ன கொழந்தைய கழுத்த நெறிச்சு கொன்னிருக்கானுங்க ரெண்டு பாழாப்போன பசங்க…teenage அதுவும்”, என தலையில் அடித்துக்கொண்டாள் அனு.

“என்ன சொல்ல வர…அப்ப ஒரு 30-40 வயசு இருந்திருந்தா பரவாயில்லையா…அந்த கொழந்தைய கொலை பண்ணினது கொடூரம் தான்…ஆனா அந்த பசங்கள அப்படி செய்ய தூண்டறது…சமுதாயம் அவங்க மேல செலுத்தற pressure தான? ஏற்றத்தாழ்வு நம்ம சமூகத்துல இருந்திருக்கு தான்….ஆனா globalization வந்ததுக்கு அப்பறம் அது பன்மடங்கா பெருகிருச்சே”, என கவலையுடன் பதிலளித்தாள் அனு.
“என்னடி சொல்ற…பிஞ்சு கொழந்தைய ஒருத்தன் கொலை செய்யறான்னா…எவ்வளவு ஒரு காட்டுமிராண்டியா இருக்கணும் அவன். நீ என்னடான்னா…சமுதாயம் அது இதுனு சப்பகட்டு கட்டற”, என சிறிது கோபத்துடன் சீறினாள் அனு.

“சரி விடு…இத பத்தி எல்லாம் இன்னொரு நாள் நிதானமா பேசலாம். எங்க வீட்டுக்கு தான”, என பேச்சுத்தலைப்பை மாற்றினாள் அனு.
“இல்லடீ…மனசே காலைல இருந்து சரி இல்ல. எல்லாமே அபசகுனமா நடந்துகிட்டு இருக்கு. காலைல என்னனா உடைச்ச தேங்காய் அழுகி இருந்துச்சு. தூசி தட்டிகிட்டு இருக்கும் போது, டிவி மேல வச்சிருந்த flower vase கீழ விழுந்து ஓடைஞ்சிடுச்சு. அதுதான் ஜோசியர பாத்துட்டு போலாமுன்னு..”, என முகத்தில் கவலை ததும்ப விடையளித்தாள் அனு.
“அடி பாவி…ஏதோ சின்ன வயசுலதான் யாரு சொன்னாலும் நம்பிகிட்டு இருந்தனா…இன்னும் அதத்தான் கட்டிகாத்துகிட்டு இருக்கியா? தேங்காய் அழுகினதுக்கும், flower vase ஒடைஞ்சதுக்கும் என்ன சம்பந்தம் டீ…இந்த ரெண்டுத்துக்கும் உன் life க்கும் என்ன சம்பந்தம்??? கோயில்ல இருந்து தான வர…நிம்மதி கெடைக்கற ஒரே இடம் அது இதுனு கதை விடுவ…ஒன்னை பாத்தா எதுவும் கெடைச்சா மாதிரி தெரியலியே”, என அக்கறையுடன் வினவினாள் அனு.

“யம்மா தாயே ஆள விடு…நீயும் வேணும்னா என்னோட வா…பக்கத்துல இருக்கற முருகன் கோயில்ல தான் அந்த ஜோசியர் இருக்காரு. மந்திரிச்சு விட்டா எல்லாம் சரியா போயிடும்” , என கிளம்ப எத்தனித்தாள் அனு.
“ஏய்…இரு டீ…எதுக்கெடு சுருக்கு சுருக்குனு கோவம். நான் வீட்டுக்கு போகணும்…போற வழிலதான் கோயில். நான் drop பண்றேன். மயில் வாகனன பாக்க இந்த மயிலோட வாகனத்துல வரலாம்ல”, என கிண்டலான புன்னகையுடன் தன மோட்டார் வண்டியில் ஏற செல்லக் கட்டளையிட்டாள் அனு.

பின்குறிப்பு : சென்ற வாரம் ‘Looper’ என்ற ஆங்கில படம் பார்த்தேன். அப்படத்தில், கதையின் நாயகன் (Joseph Gordon), 30 வருடத்திற்கு பிறகான தன்னையே (Bruce Willis) சந்திக்கும் நிலை ஏற்படும். அப்பொழுது அவர்கள் இருவர் (Joseph மற்றும் Bruce) நடுவிலான உரையாடல் அமைப்பு, படம் பார்த்து இரண்டு நாட்களுக்குப் பிறகும், என்னை தொற்றிக்கொண்டிருந்தது. அதே போன்ற ஒரு அமைப்பில் நான் இருந்து, 5 வருடத்திற்கு முன்னதான என்னையே சந்திக்க நேர்ந்தால்….உரையாடல் என்னவாக இருக்கும் என நினைத்தேன்….பதிவாய் இங்கே.