மே, 2014 க்கான தொகுப்பு

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சே அழைக்கப் பட்டதும், அதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் செய்திகளில் நிரம்பி இருக்க, இரு இன ஒழிப்பு ஜாம்பவான்கள் சந்தித்தால், உரையாடல் எப்படி இருக்கும்…ஒரு கற்பனை (“யதார்த்தத்த போட்டுட்டு…கற்பனைன்னு மூடி மறைக்கற பாத்தியா”னு சொல்ல போறீங்கனா…அது உங்க இஷ்டம்!!)

scene 1

scene 2

scene 3

scene 4

தாலியின் பெருமைகளை தமிழ் மெகா சீரியல்கள் அக்கு அக்காய் பிரித்து வைக்கும் போதெல்லாம் அது பற்றிய என கருத்துக்களை எழுத தோன்றிய போதும், சமீபத்தில் மேற்கொண்ட இந்திய பயணம் அந்த நோக்கத்தை இன்னும் திறன் பட செய்தது.

பெரிதாய் ஆர்வம் இல்லாத காரணமா இல்லை என் சோம்பேரித்தனமா தெரியாது, ஆடம்பரமாக அலங்கரித்துக் கொள்வதிலோ, தங்க நகைகள் அணிவதிலோ பெரிதாக விருப்பம் இருந்ததில்லை. அப்படியே ஒரு திருமணத்திற்கு அல்லது உறவினர் வீட்டிற்கோ செல்லும் போது தங்க நகை அணிவது கட்டாயம் ஆனதெனில், இருப்பதிலேயே மெலிசான ஒரு சங்கிலி அணியவே விரும்பியதுண்டு.

திருமண பேச்சு அடிபட ஆரம்பித்த போதெல்லாம், அந்த படபடப்பு, மகிழ்ச்சி அனைத்தும் இருந்த போதிலும், அந்த தடியான தாலி கொடி கழுத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டுமா என்ற ஒரு கடுப்பு நிச்சயம் இருந்தது; ஏதாவது பேசி ஒரு மெலிசான தாலிக்கு சீக்கிரம் மாறி விட வேண்டும் என முடிவு செய்தேன்.

அனால் மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்த காலத்தில் கூட அந்த தாலியில் என் கணவனின் உயிர் ஊசல் ஆடுகிறது என நினைத்ததில்லை. என்னை ‘தொட்டு தாலி கட்டியவருக்கும்’ தாலி போன்ற சடங்குகளில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அந்த தாலிக் கொடியை கழற்றினேன்.
திருமணத்திற்குப் பிறகு, பகுத்தறிவு சிந்தனைகள் மெல்ல தலை தூக்க ஆரம்பித்த போது, பெரியாரின் பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை விரும்பி படிக்க ஆரம்பித்தேன். பண்பாடு, கலாச்சாரம் என்ற பேரில் ஒரு பெண்ணுக்கு 1008 அடக்குமுறைகளை இந்த சமூகம் செவ்வனே அமைத்திருந்தது புரிந்தது.

பல முறை இந்த ஆணாதிக்க சமூகம் அடைந்துள்ள மாபெரும் வெற்றியை நினைத்து வியந்தது உண்டு.
அந்நேரங்களில் எல்லாம் நினைவுக்கு வருவது இந்த கதை (யாரும் சொல்லிகேட்டதா இல்லை படித்ததா அல்லது மூக்கணாங்கயிறு என யாரோ போட்ட கோட்டில் நான் போட்ட ரோடா என நினைவில்லை!!!)
மாட்டு வண்டி தன் கட்டுப்பாட்டில் இருக்க, வண்டி ஓட்டுபவர் மாட்டிற்கு மூக்காணங்கயிறு அணிவிக்கிறார்; தினந்தோறும் காலையில் இவ்வேலை நிகழ்கிறது. அவர் அதை ஒரு நாள் அணிவிக்க மறக்கும் போது, மாடு அதனை எடுத்து வந்து கொடுக்கிறது; இப்படி அவர் தொடர்ந்து மறப்பதால், அந்த மாடும் இனி இதை கழற்ற வேண்டாம் என தன் மூக்கிலேயே மாட்டிக்கொள்கிறது. சிறிது நாட்களில் தன் வேகத்தின் மீது உள்ள நம்பிக்கை மறைகிறது; அந்த மூக்கணாங்கயிறும் அதை லாவகமாக அசைக்கும் வண்டி ஓட்டுனரும் தான் தன்னை நல் வழி நடத்துகின்றனர் என நம்ப ஆரம்பிக்கிறது.
சில சமயங்களில், வேகமாக செல்லவோ அல்லது வேறு விஷயங்கள் மேல் இருக்கும் கோவத்தை வெளிப்படுத்தவோ, ஓட்டுனர், சாட்டையினால் அடித்தால், அதையும் பொறுத்துக்கொள்ள தன்னை தயார் செய்து கொள்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள், மாட்டு பொங்கல், சில சமயங்களில் சும்மாவேனும் ஓட்டுனர் ஜொலிக்கும் ரிப்பன்களையும் மணிகளையும் மாட்டும் போது, “பரவாயில்லையே என்னமா கவனிச்சுக்கறாரு”, என பெருமிதம் கொள்ள ஆரம்பிக்கிறது.

மூக்கணாங்கயிறுக்கு பதில், ஒரு பெண்ணை அடக்க தாலியை பயன்படுத்துவோம் என முடிவு செய்து, “அய்யோ இவளால வாய் பேச முடியுமே, கொஞ்சம் சிந்திச்சு ஏதாவது கேட்டுட்டா”, என பதறுகிறது ஆண் ஆதிக்க சமூகம்.
ஒரு படி மேலே சென்று, “ஒரு பெண்ணுக்கு அழகு…அச்சம் மடம் நாணம்”, “அடக்கமா இருந்தா அந்த பொண்ண எல்லாரும் கைக்கூப்பி வணங்குவாங்க”, மாதிரியான கோட்பாடுகளை பரப்புகிறது. அதிலிருந்து சிறிது விலகும் பெண்ணை, தூற்றி, ‘பெண் குலத்திற்கே ஒரு இழுக்கு’ என அவளுக்கு பட்டம் கட்டுகிறது. அவளை ‘ஒரு குடும்பப் பெண் எப்படி இருக்கக்கூடாது’ என்பதற்கு ஒரு உதாரணமாய் வருங்கால சந்ததியருக்கு போதிக்கிறது.
முளையிலேயே கிள்ளி விட்டதனால், அந்த குழந்தையே மாற்றுக் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் வரை, சமூகமும் அதன் வழி நடக்கும் பெற்றோரும் வாழ்வியல் கற்பிக்கும் ஆசான், அவர்கள் வகுத்த கோட்பாடுகளே வேதவாக்கு!!

இந்த தெளிவு கிடைத்த பிறகு, அந்த தாலி கயிறும் அது சம்பந்தப்பட்ட சடங்குகளும் பெண்மைக்கு ஒரு இழுக்காக மட்டுமே எனக்கு தெரிகிறது. அதனால் இம்முறை இந்தியா செல்ல தயாரான போதும், அந்த தாலி கயிறுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

‘எதுக்கும் இருக்கட்டும்’ என கைப்பையில் திருமண சான்றிதழை வைத்துக்கொண்டேன் (ஆண் ஆதிக்க அறிவிலி பேய்கள் பிரச்னை செய்தால், பெண் விடுதலை பற்றி பாடம் எடுக்க விரும்பவில்லை)

இந்தியாவில் நான் பார்த்த திருமணமான பெண்கள் நவ நாகரீக உடையோ அல்லது புடவையோ…எது அணிந்திருந்த போதும், கழுத்தில் அந்த தாலி மட்டும் கட்டாயம் தொங்கியது.
நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த பெண்களும், உறவினர் குழுக்களில், ஒரு பெருமையுடன் தாலிக்கொடியினை வெளியே எடுத்த படி அதற்கு கும்குமம் வைப்பதை கண்டேன்.
ஆண்களும் “அது பொம்பளைங்க பிரச்சனை; என் தலைய போட்டு உருட்டாம இருந்தா போதும்”, என நினைப்பார்களோ என்னவோ, அந்த தாலி கயிறுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தான் இருந்தனர். இந்த இடத்தில், “இல்லையே நானே விரும்பித் தான் அத போட்டுக்கறேன்; அந்த தாலி என்ன ஒரு முழு பொண்ணா ஆக்குது”, என பெருமிதம் அடையும் வேறு கிரகத்து பெண்கள் பற்றி எனக்கு பெரிதாக கருத்து இல்லை.

யோசித்து பார்த்தேன்…ஒரு பெண்ணை அடிமைப் படுத்த மட்டும் கண்டுபிடிக்கப் பட்ட இந்த மஞ்சள் நிற மூக்கானங்கயிற்றின் பயன் தான் என்ன…யோசனையின் விளைவு இனி…

குறிப்பு: பின்வரும் வரிகளில், ‘வேலி’ என்ற சொல், ‘செல்வம்’, ‘பாதுகாப்பு’, ‘சப்பக்கட்டு’, ‘அடக்குமுறை’ என பல பொருள் பட்டு வரும். விருப்பத்திற்கு ஏற்ப பொருள் எடுத்துக் கொள்வது வாசகர் விருப்பம்.

தாலி

“லாக்கர்களில் வளையல்களும், அட்டிகைகளும் பதுங்கிக் கிடக்க,
பளபள வென கழுத்தில் மின்னும்போது, கொள்ளை அடிப்பவருக்கு வேலி.

குழந்தைகளின் கல்வி, சொந்த வீடு என சிறுக சிறுக காசை சேர்த்து வைப்பவருக்கு, ‘கடுகு அளவு தங்கம் இன்னிக்கி வாங்கினா, கடல் அளவுக்கு பெருகும்” என அட்சைய திரிதியை என்ற நன்னாளை அறிமுகப்படுத்தியே முதலாளிகளுக்கு வேலி

“அவள் கழுத்தில் தொங்கும் தாலி…நம் உயிர் பத்திரமாக படுத்து தூங்கும் தூளி”, என
100% நம்பிக்கை உடைய அவதாரபுருஷர்களுக்கு வேலி

“வெள்ளை காகம் குட்டிப்போட்டது, தாலிக்கு ஆபத்தாக முடியும்;
பரிகாரம் செய்தாக வேண்டும்”, என குறிசொல்லி, மனைவியரின்
‘அறியாமை கண்களை’ திறந்து வைக்கும் ஜோதிட சிரோன்மணிகளுக்கு வேலி

“என்னதான் ஜீன்ஸ், குர்தா எல்லாம் போட்டாலும், வழி வழியா வரும்
கலாச்சாரத்த கைவிட முடியுமா?? தடியா ஒரு மாடல் கொடி ஒன்னு , மெலிசா செயின் மாதிரி இன்னொன்னு”
என பாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் மங்கையரின் ‘நற்சேவை’யில்
நேரத்தை முதலீடு செய்யும் பொன்கொல்லர்களுக்கு வேலி

“அவ கழுத்துல தாலி போடறது என் ஜோலி…அத பாத்துட்டும் அவள சைட் அடிக்கறவன்
ஆவான் காலி”, என நிம்மதி பெருமூச்சு விடும் தொடநடுங்கி கணவர்களுக்கு வேலி

“அவ முகத்துல முழிச்சாலே பாவம்; வீட்ல ஒரு ஓரமா உக்கார வேண்டியது தான”, என விஷம் கக்கி,
மனிதத் தோலில் உலாவும் பீதிண்ணி நாய்கள், கைம்பெண்களுக்கு போடும் வேலி

“கும்குமம் மஞ்சள அந்த தாலி மேல வைக்கும் போது, அவர் தலை மேல
எம்பெருமான் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வைப்பாரு”, என அனுபவசாலிகளின்
அருள்வாக்கை கேட்டு தலையாட்டும் மனைவியருக்கு வேலி

“தாலி நான் போடமாட்டேன்…என் புருஷன் போடலியே”னு அளக்கரா…எல்லாம் திமிரு”,
என உருப்படியான வேலை எதுவும் இல்லாது ஊர் வம்பு
பேசும் துருப்பிடித்த மூளைக்காரர்களுக்கு வேலி

இப்படி அந்த தாலிக்கொடியுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு ‘நன்மை’ இருக்கும் போது, அந்த சங்கிலி ஒரு திருமணமான, அதிலும் பெண் கழுத்தில் மட்டும் தான் தொங்க வேண்டும் என்பது ஒரு நெருடல். இன்னும் சிறிது யோசித்து பார்த்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த நன்மையும் அந்த பெண்ணிற்கு காலனாவிற்கு பயன்படாது; பின்னர் ஒரு விலங்காய் மட்டும் விளங்கும் அந்த தாலி கொடியை, உயிரைப் போல் பாதுகாக்கும் பெண்களின் வினோத மனப்பான்மை இன்னொரு பெரிய நெருடல்.

இந்த பதிவு எழுத காரணமாய் இருந்த நிகழ்வுகள் இரண்டு. ஒன்று சில வாரங்கள் முன் ஒளிபரப்பான நீயா நானா; இன்னொன்று சென்ற மாதம் அதிர்ச்சி தகவலாய் வந்த என்னுடன் வேலை செய்பவரின் மரணம்.

அன்று நீயா நானாவில் எடுத்துக்கொண்ட விவாதம், “புகழ்வதில் தவறொன்றும் இல்லையே” என்பவர்களுக்கும், “புகழ்ச்சி எல்லாம் வெட்டிப் பேச்சு” என்பவர்களுக்கும். நிகழ்ச்சியில், பாராட்டுதலுக்கும் வெட்டிப் புகழ்ச்சிக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை ஒருவர் கூட எடுத்துக் கூறாதது முதல் நெருடல்.
‘ஒருவரை புகழ்வது என்பது, பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்ற சமயங்களில் மட்டும் நிகழும்’ என்ற பிம்பத்தை அன்றைய நிகழ்ச்சி உருவாக்கியது. இதனால் அலுவலகத்திலோ அல்லது வெளி இடங்களிலோ நிகழும் ‘பலன் எதிர்பாராத’ பாராட்டு பற்றிய கருத்துக்கள் எட்டிப்பாரக்கவே இல்லை.
அதிகாரியின் ‘மொக்கை காமெடி’க்கு சிரிப்பதும், அவர் முன் உட்கார தயங்குவதும், அவர் செய்யும் செயல் அனைத்தையும் கண்மூடித்தனமாக புகழ்ந்து தள்ளுவதும் ‘அலுவலகத்தில் முன்னேறுவதற்கான மூன்று வழிகள்’ என பெரும்பாலானோர் புகழ்ந்தது இன்னொரு நெருடல்.

இதற்கு நேர் எதிரான வகை மனிதர்களும் உண்டு. “என்ன சார்…குடுக்கற சம்பளத்துக்கு வேலை செய்யறாங்க. இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு…”, என பாராட்டு முத்துக்கள் வாயிலிருந்து விழுந்து விடக் கூடாது என மிகவும் கவனமாக இருப்பவர்கள்.
ஒரு சமூகத்தில் இவ்விரு அணுகுமுறையும் ஆபத்தானதே.

இந்த கும்பிடு போட்டு முன்னேறலாம் என நினைக்கும் மனிதர்கள், சுய மரியாதையை கழற்றி வீட்டில் வைத்து விட்டு வேலைக்கு வருவார்களோ என்ற சந்தேகம் மட்டுமே தலைதூக்குகிறது.
ஒருவர் படித்த படிப்பையும், அவரின் வேலை அனுபவத்தையும் பார்த்து தரப்படவேண்டிய பதவி உயர்வுகள்…மேலதிகாரிக்கு பால் கார்டு வாங்கிக்கொடுப்பதன் மூலமும், ரேஷனனில் சர்க்கரை உஷார் செய்வதன் மூலமும் அமைவதெனில்..அது அந்த உழைப்பாளியின் கீழ்த்தனமான கூனிக்குறுகும் போக்கையும், மேலதிகாரியின் திறமையற்ற நிலமையையுமே காட்டுகிறது.
நம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் அடிமைத்தனமும், ‘வயசாகி இருந்தா இல்ல வேலைல நெறைய வருஷம் இருந்தா…அவங்க சொல்றது எல்லாம் சரி’, என்ற கருத்தும், இந்த ‘சலாம்’ போடும் மனப்பான்மைக்கு தீனி போடுகிறது.
நான் செய்யும் வேலையை மதிக்கிறேன். பல முறை அவ்வேலையால் வேலையிடத்தில் நிகழும் மாற்றங்கள் பார்த்து பெருமை அடைகிறேன். இந்த சுய மரியாதை காரணமாக, மேலதிகாரிகளிடம் ‘சலாம்’ போடத் தோன்றியதில்லை. அவ்வாறு செய்வதையும் தன்மானத்திற்கு இழைக்கும் ஒரு இழிவாய் பார்க்கிறேன்.
இதனால் தன்னலத்திற்காக மட்டும் புகழ்வதில் நற்பலன்கள் இருக்கிறதா, அதை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதில் நேரத்தை வீணாக்காமல், அடுத்த வகையான மக்களுக்கு தாவுகிறேன்.

‘பாராட்ட மாட்டேன் சார்’ என கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்களின் வாழ்க்கை இன்னும் கடினமென நினைக்கிறேன்.
அலுவலகத்தில் ஒரு முக்கிய கூட்டம், வண்டி மக்கர் செய்த காரணத்தினால் டாக்ஸி எடுக்கிறீர்கள். வாகன நெரிசலை அழகாக சமாளித்து உங்களை சரியாக வேலையில் கொண்டு வந்து சேர்க்கிறார் ஓட்டுனர். வேலையில் நீங்கள் முடிக்க வேண்டியிருந்த ஒரு காரியத்தை நண்பர் முடித்துக் கொடுக்கிறார். இந்த இடங்களில் “அதுக்கு தான டாக்ஸி க்கு காசு குடுக்கறோம்”, “அடுத்த மொறை அவருக்கு ஒரு தேவைனா நானும் செய்வேன்” போன்ற சப்பக்கட்டுகள் அபத்தம். இது மாதிரி தருணங்களில் பாராட்டை வாரி இரைக்காமல் பொத்தி வைப்பது சிறிது ‘காமெடி’ ஆகவும் உள்ளது.
பாராட்ட தயக்கம் தலைதூக்குவதாலோ என்னவோ, ஒருவரை மனமுவந்து பாராட்டும் போது, அதை ஏற்றுக்கொள்ளவும் ஒரு தயக்கம் நிலவுகிறது.
இம்முறை இந்தியா சென்ற போது, மக்களின் இறுக்கத்தையும் அதன் காரணமாய் வறண்டு கிடந்த பாராட்டு பரிமாற்றங்களையும் துல்லியமாக பார்க்க முடிந்தது. கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் ஹோட்டல் சர்வர்களின் சேவையை சிரித்து பாராட்டி மகிழும் போது, ஏதோ ஒரு புதிய முகபாவனையை பார்ப்பது போல் பார்க்கின்றனர். அனைத்துமே வியாபாரம் ஆகி விட்ட காரணத்தினால், “கார் தான ஓட்டினோம்…எதுக்கு பாராட்டறாங்க”, “அவங்க குடுத்த காசுக்கு தோசை…இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம்”, என நினைக்கவும் வாய்ப்புகள் உண்டு.
இந்த இடத்தில் 2007இல் வேலை விஷயமாக நியூயார்க் போயிருந்த போது நடந்த ஒரு நிகழ்வு தான் நினைவிற்கு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பப் போகிறேன் என்ற களிப்பில், மூட்டை மூட்டையாக இனிப்புகள் வாங்கிக் குவித்தேன். அந்த பைகளுடன், என் மடிக்கணினியையும் ஏந்தியபடி என் தோழியுடன் ரயிலில் ஏறினேன். 20 நிமிட பயணத்திற்குப் பிறகு என் நிறுத்தம் வர, இறங்கினேன்…என் தோழியிடம் மடிக்கணினி இருக்கு என்ற நம்பிக்கையில். ரயில் கிளம்பிய ஒரு 5 நிமிடம் கழித்து, அவளிடம் என் மடிக்கணினி இல்லை என தெரிய வருகிறது.என்னதான் ஆங்கிலம் தெரிந்திருந்த போதும், புது ஊரில் என்ன செய்வதென தெரியாமல், ரயில் நிலையத்தில் நின்றேன்…அழவும் ஆரம்பித்தேன். பெரிதாக நம்பிக்கை இல்லாத போதும், அங்கிருந்த காவல் துறை அலுவலகத்திற்கு விரைந்தேன். தேம்பித் தேம்பி அழுது கொண்டே என் கைய்யறு நிலையை விளக்கினேன். அங்கிருந்த அதிகாரி சிறிதும் பதட்டப்படாமல், என்னை இருக்கையில் அமரச் சொன்னார்.

இங்கு நடந்த கலவரத்தில், ரயில் ஒரு 5-6 நிறுத்தங்கள் தாண்டி இருக்கும்….இவர் இப்படி அநியாயத்திற்கு அமைதியாக இருக்கிறாரே என ஒரு பக்கம் கோபமும் வந்தது. 45 நிமிடம் அங்கு அமர்ந்திருப்பேன்…இன்னொரு காவல் அதிகாரி என் மடிக்கணினியுடன் உள்ளே நுழைந்தார்!!! எனக்கு அந்த நிமிடம் களிப்பும், அதன் காரணமான இளிப்பும், பயங்கரமாக அழுததனால் மூக்கில் சளியும் வந்தது மட்டும் தெளிவாக நினைவில் உள்ளது. சரியாக என்ன சொன்னேன் என நினைவில்லை, ஆனால் சரமாரியாக நன்றிகள் உரைத்தேன். வைத்திருந்த இனிப்பு மூட்டையிலிருந்து இரண்டு பொட்டலங்களை அளித்தேன். அதற்கு அவசியமில்லை என கூறினார்…அப்பொழுதும் அதே அமைதியான சிரிப்புடன். அறிவாற்றலா அல்லது தகவல் அழைப்பு மையத்தில் (call centre) வேலை செய்த அனுபவமா தெரியவில்லை…அந்த காவல் துறை அதிகாரியின் மேல் அதிகாரியின் மின்னஞ்சல் முகவரியை வாங்கிக்கொண்டேன். குடியிருந்த ஹோட்டலுக்கு வந்த உடன் ஒரு வாழ்த்து மின்னஞ்சல் அனுப்பினேன்.
இதைபற்றி நண்பர்களிடம் சொன்ன போது, பெரும்பாலானோர் பாராட்டிய போதும், ஒரு சிலர், “அவங்க ரயில்வே போலீஸ், அதுதான் அவங்க வேலை.ஈமெயில் எல்லாம் கொஞ்சம் ஓவர்”, என்றனர். அந்த இடத்தில் வாதாடவில்லை எனினும், “உங்களுக்கு புரிய வைக்கறது ரொம்ப கஷ்டம்”, என அலுத்துக்கொண்டது நினைவில் உள்ளது.
அடுத்து திரும்ப அமெரிக்கா செல்லும் போது, அந்த ரயில் நிலையத்திற்கு செல்வேனா என தெரியாது. அப்படியே சென்றாலும், அந்த நபரை பார்ப்பேனா என தெரியாது. பின்னர் அந்த மின்னஞ்சல் எதற்கெனில், “அந்த மேலதிகாரிக்கு அவர் அணி நபரின் நற்செயலை உயர்த்தி உரைக்க, அந்த மின்னஞ்சலை அவ்வூழியர் பார்க்கும் போது அவர் பெருமிதத்துடன் புன்னைகைக்க…இவை அனைத்திற்கும் மேல் என் திருப்திக்கு.

இங்கு என் நண்பர் Chris பற்றி பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் அணியில் இல்லையெனினும், என் வேலை நிமித்தமான தரவு செயலாக்கங்களுக்கு (data mining) உதவும் அணியில் இருந்தவர். தன் வேலையை மிகவும் விரும்பிச் செய்பவர்; விடுமுறை எடுத்து வெளிநாடுகள் செல்ல விருப்பம் இருந்த போதிலும், வேலை மீது இருந்த அளவு கடந்த பிரியத்தினால் விடுமுறைகள் பெரிதாக எடுத்ததில்லை. சென்ற மாதம் Vietnam சுற்றிப்பார்க்க விடுமுறை எடுத்திருந்தார்.

அன்று வீட்டில் இருந்து வேலை செய்துக் கொண்டிருந்தேன். அவர் தயாரித்த ஒரு ஆய்வறிக்கையை (Presentation) படித்துக்கொண்டிருந்த போது, என் அணித்தலைவர் ஒரு அவசரக்கூட்டத்திற்கு அணியை அழைத்தார். கலந்துகொண்ட எங்களுக்கு அவர் அளித்த திடிக்கிடும் தகவல், விடுமுறைக்கு சென்றிருந்த இடத்தில், உடல் உபாதை காரணமாக Chris இறந்து விட்டார் என்பது. எனக்கு அந்த செய்தி மனதில் பதியாத படியே நின்றது. தொலைப்பேசி இணைப்பை துண்டித்து, Chris தயாரித்த ஆய்வறிக்கையை வெகு நேரம் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
அடுத்த நாள் Chris குடும்பத்திற்கு கொடுக்க இருந்த புகழுரைகளில் (tributes) பங்களித்ததில் ஒரு நிம்மதி கிடைத்த போதிலும் அவரின் ஈமச்சடங்கில் பங்கேற்க மட்டும் எனக்கு மனத்துணிவு வரவில்லை. சில வாரங்களுக்கு முன் அவருடன் மதிய உணவு கூடத்தில் சிரித்து பேசிக்கொண்டிருந்ததும், வெகு நாட்கள் கழித்து தன் துணைவியுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாய் சொல்லி அவர் களிப்படைந்ததும் கண் முன் வந்தவாறே இருந்தது. இதற்கு ஒரு சுமூகமான முடிவு (closure) கிடைக்க கடைசியாக பார்த்து வர வேண்டும் என நினைத்த போது,
“நீ ஒரு உதவி கேட்டு வந்தா…Chris மத்த வேலை எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு உனக்கு உதவுவான்”, என Chris இன் அணியில் இருந்த ஒரு பெண் கூற, என்னையும் மீறி கண்கள் கலங்கின. ஈமச்சடங்கில் உணர்ச்சிவசப் பட்டு விடுவேன் என புரிந்தது…போகும் யோசனையை முழுவதுமாய் கைவிட்டேன்.

இன்று இந்த பதிவு எழுதும் போது தோன்றுவதெல்லாம் இந்த வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை தான். அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்த வருடம் என்ன நிலைமையில் இருப்போம் என்பது நம் கைவசம் இல்லாத போது, “பாத்துக்கலாம்…அவன் மேனேஜர் நம்ம கருத்த கேட்டா பாத்துக்கலாம்”, “சரிதான்…சுமூகமா முடிச்சான். அதுக்கென்ன…பாராட்டினா தலைக்கு மேல ஏறிடும் சார்”, மாதிரியான தடுப்புச் சுவர்களை போட்டுக்கொள்வது பயனற்றதே.
அந்த விதத்தில், வசூல்ராஜா MBBS திரைப்படத்தில் கமல் ஒரு இடத்தில் ஆஸ்பத்திரியை சுத்தம் செய்பவரை கட்டி அணைத்தபடி, “நம்ம வேலைய பாராட்ட முதலாளியா வரப்போறாரு…இது மாதிரி நம்ம தான் ஒருத்தர ஒருத்தர் பாராட்டிக்கணும்”, என கூறும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. பெரிய IT நிறுவனங்களில், மேல் தளத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு, கடை நிலை ஊழியனை பாராட்டுவதற்க்கான மனம் இருக்குமா என்பதை விட, நேரம் இருக்காது என்பது தெளிவு.

அந்நிலையில் நம் கூட வேலை செய்பவர் செய்யும் வேலையின் மதிப்பு தெரிந்த நாமும், “அந்த வேலைய செய்யத் தானப்பா சம்பளம்….இதுல பாராட்டு என்ன கொசுறு”, என இருந்து விட்டால், வேலை இடம் மனித எந்திரங்கள் நிறைந்த வெற்றிடமாக மட்டும் இருக்கும். மற்றவரின் வேலையை மதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் அவர்கள் செலுத்தும் அக்கறையை உணர ஆரம்பிக்கும் போது, பாராட்டுக்களும் தானாக பின் தொடரும். “வெட்டி பந்தா, ஜம்பத்த எல்லாம் விட்டுட்டு, கூட இருக்கறவங்கள மனசு விட்டு பாராட்டுங்க சார். நாளைக்கி என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. நீங்க ஆரம்பிங்க….அந்த பாராட்டு சங்கிலி தொடரும் பாருங்க. மனிஷங்க நாம….நாமளே மனிதத்த வளக்கலனா யாரு செய்யப்போறாங்க சொல்லுங்க”