ஜூன், 2014 க்கான தொகுப்பு

இரண்டு வாரங்களுக்கு முன், வேலையில் நண்பர் ஒருவர், அவர் விரும்பி கேட்ட போட்காஸ்ட் (podcast) ஒன்றை நான் கேட்கும் படி விருப்பம் தெரிவித்தார். englishtamil தளத்தின் podcast, RJ பாலாஜியின் திரை விமர்சனங்கள், மருதையன் பேச்சுக்கள் தவிர பெரிதாக போட்காஸ்ட் கேட்டதில்லை என்பதனால், தளத்தின் முகவரியை வாங்கிக்கொண்டேன்; வெகுவிரைவில் கேட்டு என் கருத்தை கூறுகிறேன் என்ற வாக்குறுதியுடன். போட்காஸ்டின் சாராம்சத்தை கூறாமல், பெண்ணியம் பற்றிய கலந்துரையாடல் என மட்டும் கூறி இருந்தார். வேலை விட்டு வீடு திரும்பும் போது கேட்க முடிவுசெய்தேன்.

நைஜீரியாவில் நடக்கும் பள்ளி மாணவிகளின் கடத்தல் பற்றிய பேச்சுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்க, 15வது நிமிடத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிய பேச்சுக்கள் துவங்கின.
சீனா, இந்தியா, ஸ்வீடன் நாடுகளில் பெண்களின் நிலைமை பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடலில் இடம் பெற்றன. Neo liberalism (புதிய தாராளமயமாக்கல்) எப்படி குடும்ப வன்முறைக்கு (domestic violence) அடித்தளம் போடுகிறது என்ற விளக்கங்கள் மெய் சிலிர்க்க வைத்தன. இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவலை தூண்டிய ஒன்று, ஸ்வீடனில் பாலின சமன்நிலைக்கு அறிமுகப்படுத்த பட்டுள்ள Bechdel சோதனை. Bechdel சோதனை என்பது முதலில் தொலைகாட்சி தொடர்களுக்கு ஒரு அளவுகோலாக அறிமுகப் படுத்தப்பட்டது.
தொடரில் ஒரு காட்சியிலாவது பெண்கள் கூட்டம், ஆண்கள் இல்லாத ஒரு தலைப்பைப் பற்றி பேசுவது போல் அமைந்திருந்தால் அத்தொடருக்கு, நம் ஊரின் U /A,U போன்று, ‘Bechdel’சான்றிதழ் வழங்கப் பட்டது. அதையே பின்னர் திரைப்படங்களுக்கும் பொறுத்த ஆரம்பித்தனர்.
அந்த சான்றிதழ் வழங்கும் முறை தமிழ் திரையுலகில் புகுத்தப்பட்டால், எத்தனை படங்கள் தேறும் என யோசித்தேன்.
“ஆண்கள் இல்லாத பேச்சு தான…நகை, பொடவை, சமையல், கொழந்தை வளர்ப்பு பத்தி பேசிட்டு இருங்கன்னா, பேசிகிட்டே இருப்பாங்க. ரெண்டு நிமிஷம் என்ன சார், ஒரு முழு நீள படமே எடுக்கலாம்”, போன்ற ‘தமாஷ்’ பின்னூட்டங்களில் இருக்கும் அறியாமை சொல்லி விளக்க வேண்டியதன்று.
பாடல்கள் அல்லாத காட்சிகளில் பெண்களை பார்ப்பதே ஒரு அரிய விஷயமாக இருக்கும் போது, 2 நிமிடத்திற்கு பெண்கள் மட்டும் கலந்துரையாடும் காட்சிகளா? “கட்டுபடி ஆகாதுங்க” அல்லது, “அதெல்லாம் யாரு பாக்க போறாங்க சார்” போன்ற ரெடிமேட் விடைகள் தயாராக இருக்கும்.

‘ஒரு பெண்ணானவள் ஆணுக்கு ஒரு போகப் பொருளே; சமையலறை ஒரு பெண்ணின் ‘திறமையை’ வெளிப்படுத்த உருவாக்கப் பட்ட ஒரு இடம்; வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் வீட்டில் முக்கிய முடிவுகளில் மூக்கை நுழைக்க மாட்டாள்”, “எதிர்த்து பேச எத்தனிப்பாள் …”நீ இல்லனா நான் எங்க போவேன்”, “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”, என நீ புகழ்ந்து தள்ளியவுடன், பொட்டிப் பாம்பாய் அடங்குவாள்”, இவை ‘ஒரு பெண்ணின் குணாதிசயங்கள்’ என சினிமா வலியுறுத்துபவை. நகைமுரண் இதுதான்…சினிமா யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதனாலோ என்னவோ, நிஜ வாழ்க்கையிலும் சமூகத்தில் ஒரு பெண்ணின் ‘பங்களிப்பு’ இந்த குறுகிய வட்டத்திற்குள் தான் அடங்குகிறது.
“வேலைக்கு போகணும், வீட்ல சமைக்கணும், கொழந்தைகள பாத்துக்கணும்…எனக்குன்னு டைம் செலவழிக்கறதே குதிரை கொம்பா இருக்கு…இதுல அரசியல் பத்தின பேச்சா…காமெடி கீமடி பண்ணலியே”, என்ற மனைவியரின் புலம்பல், மீண்டும் சமூகத்தின் ஆண் ஆதிக்க மனநிலையையும், பாலின ஏற்றத்தாழ்வையையும் உறுதி படுத்துகிறது.
அவளைப் போல், அவனும் திருமணமனாவன், அவனுக்கும் குழந்தைகள் உண்டு, அவனும் வேலை பார்கிறான்; அவனுக்கு அரசியல் பற்றியும், நாட்டு நடப்பு பற்றியும் பேச ‘சந்தர்ப்பம்’ கிடைக்கிறது; ஆனால் அதே தகுதிகள் உடைய பெண்ணுக்கு பொது கருத்துக்கள் பற்றிய உரையாடல்கள், வெட்டிப்பேச்சாக தெரிகிறது.

சிறு வயதிலிருந்தே ஒரு சிறுமி வீட்டில் பார்க்கும் காட்சி இதுதான்…அம்மாதான் அப்பாவிற்கு எல்லா பணிவிடையும் செய்கிறாள்.
வீட்டிலோ அல்லது வெளி தளங்களிலோ சமூகப் பிரச்சனைகள் பற்றிய பேச்சுக்கள் அரங்கேறும் போதெல்லாம், கூட்டத்தில் ஆண்களே உள்ளனர். “அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்”, என்ற பேச்சுக்கள் அவள் காதில் ஒலித்த படியே இருக்கிறது.
அம்மா அரசியலில் இடம் பெறுவது தேர்தல் நேரங்களில் மட்டும்…அதுவும் அப்பா கூறும் கட்சிக்கே அம்மாவின் வோட்டு! அரசியல் மட்டுமின்றி, சமூகம் பற்றிய எந்த கருத்து பரிமாற்றமும் பெரியம்மா, சித்தி, அம்மா கூடி அரட்டை அடிக்கும் போது இடம் பெறுவதில்லை. இதையே பிரதிபலிக்கும் சினிமாக்களிலும், பெண்கள் கூட்டமாய் பேசுவதெல்லாம் ஒன்று ‘கண்ணை பறிக்கும்’ ஆண்மகன், நகை அல்லது ஆடை பற்றியே இருக்கிறது. கொசுறுக்கு, ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘வேலை வெட்டி இல்ல…அதுதான் அரசியல் பேசிட்டு இருக்காங்க”, போன்ற உப்புச்சப்பற்ற மேலோட்டமான கருத்துக்கள்.
பள்ளியில் இவை பாடமாக இல்லாத போதும், சுற்றி நடக்கும் விஷயங்கள் அந்த பெண்ணின் ‘நான் பெரியவள் ஆன பின் , எப்படி இருக்க வேண்டும்”, என்ற கேள்விக்கு செவ்வனே பதில் அளிக்கிறது. அவளுக்கு தெரியாமலே அவளை அந்த ‘வட்டத்திற்குள்’ வாழ தயார் படுத்துகிறது சமூகம்.

feminism and bechdel

“இல்லையே…’அவள் அப்படித்தான்’, அவள் ஒரு தொடர்கதை மாதிரியான படங்கள், பொண்ண ஒரு தையிரியமான கதாப்பாதிரத்துல தான காட்டி இருக்கு”, என கூற இருப்பவர்களுக்கு,
முதலில்,
இன்னும் 1970களில் வந்த படத்தை 2014 இலும் ஒரு விவாதத்தில் பயன்படுத்துவது, தமிழ் சினிமாவின் ஹிமாலய தோல்வியை தெளிவாக காட்டுகிறது. இவ்விரு படங்களும், அக்காலக் கட்டத்தில் (இந்த காலத்திலும்) விதிவிலக்காக இருந்த (இருக்கும்) போதும், இவ்விரு திரைப்படங்களின் முடிவிலும், கதையின் நாயகி விரும்பி ஆசைப்பட்டது கிடைக்காமல் ‘விதியின்’ நாடகத்திற்கு பலி ஆகிறாள்.
இந்த முடிவினால், படம் முழுக்க அவள் வெளிப்படுத்தும் துணிச்சலும், தனக்கு இழைக்கப் படும் அநீதியை தட்டிக்கேட்பதும், ‘தோல்விக்கான ஏணிப்படிகளாகவே’ பார்ப்பவர் மனதில் பதிகிறது.
சிறு வயதில், அவள் ஒரு தொடர்கதையோ அது மாதிரியான துணிச்சல் மிகுந்த கதாநாயகி இருக்கும் திரைப்படமோ பார்த்த நியாபகம். முயற்சி என்ற ஒன்று இருந்தால், வெற்றி போன்று தோல்வியும் சகஜமே. அப்படி அத்திரைப்படத்திலும் நாயகிக்கு ‘தோல்வி ஏற்படுகிறது. “என்னமா ஆட்டம் போட்டா…அதுதான்; நல்லா வேணும்”, இது என் வீட்டு பெரியவர்கள். அங்கு யாரும் எனக்கு “இப்படி இருக்கக்கூடாது”, என சொல்லித் தரவில்லை. ஆனால்
“உனக்கு சரியென படும் கருத்து, சமூகத்திற்கு எதிராய் இருந்தால், அதை அப்படியே பொத்தி வைக்கவேண்டும். வெளி வராமல் இருக்கவோ, முற்றிலுமாக மறக்கவோ முடிந்த வரை முயல வேண்டும்” என்ற ‘பாடம்’ மட்டும் தெளிவாக விளங்கியது.
இந்த இடத்தில் என்னை ஏமாற்றியது என் சுற்றம் மட்டும் இல்லை…அந்த திரைப்பட இயக்கனுரும் தான்.
சினிமாக்களில் இப்படி எனில், இதர சமூக ஊடங்கங்களிலும், அவள் தலை தூக்க நினைக்கும் போது, நறுக்கென குட்ட தயாராக இருக்கிறது சமுதாயம் (ஆணாதிக்கத்தை பெருமையுடன் நிலைநிறுத்த விரும்பும் ஆண்களும், பெண்ணடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பெண்களும்); அந்த மானிட பதர்களை பொருட்படுத்தாமல் தம் கருத்துக்களை எடுத்துரைக்கும் பெண்களும் இருப்பது ஒரு ஆறுதல்.
இப்படி ஒரு தனி மனிஷியாக தலையெடுக்கவே தடுமாறும் பெண்ணினம், ஒரு அணியாய் திரண்டு சமூக பிரச்சனைகளை பேசுவது, சமூகத்தில் ஜீரணிக்க முடியாத ஒன்று தான்.

இங்கு தான் நல்ல திரைப்படங்களின் பங்களிப்பு தேவைப் படுகிறது.
சினிமா என்பது மிகவும் வலிமையான ஒரு ஊடகம்; வளமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க துணை புரியும் ஒரு கருவி சினிமா.
கதாநாயகர்கள் புகை பிடிக்கும் ‘ஸ்டைல்’ஐ ரசித்து, நாமும் முயற்சிக்க வேண்டும் என விபரீத முடிவு எடுத்த இளைஞர் கதைகளும், அவர் “இனி புகைப் பிடிக்க மாட்டேன்’ என முடிவெடுத்த போது, அப்பழக்கத்தை அறவே துரந்த இளைஞர் கதைகளும் உண்டு.
“தணிக்கை குழுவின் நெருக்கடியான விதிமுறைகளுக்கு உற்பட்ட படம் ஒன்று எடுக்க வேண்டும், பணம் போட்ட தயாரிப்பாளருக்கு கேளிக்கை வரி போன்று பிரச்சனைகள் வரமால் பார்த்துக் கொள்ளவேண்டும்”, என இன்னும் பல தடங்கலும் இன்னலும் இருக்கும் வரையில், எங்க ‘கற்பனை குதிரை’ ஓடற வேகத்துக்கெல்லாம் படம் எடுக்க முடியாது..அந்த நெலமை மாறர வரைக்கும், அரைச்ச மாவையே அரைப்போம்; சிங்கம், போக்கிரி, ஒஸ்தி, சிவகாசி மாதிரி படத்த எடுத்துவிட்டுகிட்டே இருப்போம்”, என தப்பித்துக்கொள்ள நினைக்கும் இயக்குனர்கள், நம் கண்முன்னமே மறைவர் என்பதில் ஐயமில்லை.

இந்த இடத்தில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம் பெற்ற இயக்குனர் ராமின் நேர்க்காணல் தான் நினைவுக்கு வருகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை பற்றி பேசும் போது, அதில் சத்யராஜ் கதாப்பாத்திரத்திற்கு அவர் மகள் வேற்று சாதி பையனை விரும்புவது தெரிய வருகிறது. சமூகத்தை திருப்தி படுத்த கோவத்தில் அவளை கொன்றுவிட்டதாக கூறும் அதே வேளையில், பெண்ணையும் பையனையும் ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாமல் குடிவைக்கிறார். ஊருக்காக வேண்டுமெனில், ஒரு தந்தை சாதி கட்டுப்பாடுகளை கட்டிக்காப்பது போல் வேஷம் போட்டாலும், செல்ல மகளின் விருப்பமா, சமூக விதிமுறைகளா என வரும் போது, விதிமுறைகள் விசிறி அடிக்கப் படுகின்றன. தெளிவான கருத்து என்ற போதிலும், படத்தின் முடிவில் மட்டுமே வெளிச்சத்துக்கு வரும் ஒரு உண்மை இது. எத்தனை பேருக்கு விளங்கி இருக்கும் என்றால், அது பார்ப்பவரின் சமூக நிலைமையை பொருத்தது. ராமின் நேர்காணல் பார்க்கும் வரை எனக்கும் அந்த படம் இன்னொரு ‘நகைச்சுவை என்ற பெயரில் 3 மணி நேர பொழுது வீணாக்கல்’ என்றே தோன்றியது. இதையே சத்யராஜ் மாதிரியான ஒரு தந்தை பார்க்கும் போது, சமூகத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டும் என நினைத்திருந்தால் அந்த முடிவை மறு ஆலோசனை செய்ய வாய்ப்புகள் உண்டு; முடிவை மாற்றிக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.
இதே போன்று சமூகத்தின் பல்வேறு தளங்களில் பெண்ணின் பிரச்சனைகளுக்கு, பாதிக்கப் பட்ட பெண்ணே தீர்வு காணும் போது, நிஜ வாழ்க்கையிலும் அந்த பிரச்னையை சந்திக்கும் பெண்ணுக்கு, அந்த கதையின் நாயகி ஒரு நம்பிக்கை ஒளியாய் தெரிகிறாள். ‘விதி விட்ட வழி’ என்பதை மீறி, இன்னொரு வழியும் உண்டு என உணர்கிறாள்.

10 வருடங்களுக்கு ஒன்றாய் இல்லாமல் அவ்வப்போது இது மாதிரியான படம் வெளிவரும் போது, மகளிரின் ‘வெறுமனே’ உரையாடல்களுக்குள் அவை நுழைய வாய்ப்புகள் அதிகரிக்கும். கூட்டத்தில் அதே மாதிரியான பிரச்சனை பேசப்படும் போது, “அந்த படத்துல வர்றா மாறி செஞ்சா என்ன?”, என கூட்டம் பகுத்தறிய ஆரம்பிக்கும். சமூகம் சாமியாக வழிபட வலியுறுத்தும் வீட்டின் ஆண்மகன் துணையின்றி பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க ஒரு துணிவு பிறக்கும். “சரி ஆரம்பிச்சுடுவோம்” என கதையின் நாயகனுக்கு பதில் ஒரு நாயகியை வைத்து, ‘அந்நியன்’, ‘நான் கடவுள்’, ‘சிடிசன்’ மாதிரியான படம் எடுக்க இயக்குனர்கள் விரைவது,
“விடிய விடிய சாதி ஒழிப்பு பற்றி பேசிவிட்டு, சாதி கொடுமையை அழிக்க வந்த விடிவெள்ளி மோடி” என்பது போன்றது. தமிழ் திரையுலகில் இல்லையெனினும், இதர ஊடங்கங்களில் ஆறுதல் கிடைக்கத்தான் செய்கிறது.
“இது படம்” என பெருமிதம் கொள்ள வைத்தது, சமீபத்தில் பார்த்த ஹிந்தி படம் ‘queen’. வெளி உலகை முதன் முதலாய் பார்க்கும் நாயகி, தன் வாழ்வை தன் விருப்பத்திற்க்கேற்ப மாற்றிக்கொள்ளும் கதை.
இதை போன்று, YouTubeஇல் கண்டு ரசித்தவை ‘Havells’சமையல் உபகரணங்களுக்கான விளம்பரங்கள்.

“இது சரியில்லையே”, என முடிவு செய்து, சமூகத்தை எதிர்த்து குரல் எழுப்பும் பெண்கள் மற்றும் ‘பெண் விடுதலை அவசியம்’ என நினைக்கும் சில ஆண்கள் உதவியுடன், பெண்ணடிமைத்தனம் சிறுக சிறுக அழிவது நிச்சயம். இந்த தருணத்தில், தெளிவான பெண்ணிய கருத்து நிறைந்த திரைப்படங்கள், தட்டுத்தடுமாறி முன்னேறி வரும் பெண்ணினத்திற்கு, இன்னொரு ஏணிப்படியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

என் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஆள் குறைப்பு, 5 வருடங்களுக்கு மேல் என்னுடன் வேலை செய்தவர்கள் வேலை விட்டு சென்றது, திடீரென வேலை இல்லாமையால் நண்பர்களின் ‘அடுத்தென்ன செய்வது’ என்ற பதட்ட நிலை, “அழுது கொண்டும் புலம்பி கொண்டும் இருப்பதனால் வேலை திரும்ப கிடைத்துவிட போவதில்லை” என்ற யதார்த்தமும் இந்த பதிவு எழுத தூண்டியது
.
தேம்பித் தேம்பி அழும் ‘நற்குணம்’ சிறுவயதில் என்னை தொற்றிக்கொண்ட நோய் எனலாம். குணப்படுத்தவே முடியாத நோய் இல்லை என்பதனால், கடந்த 2 வருடங்களாக குணமடைந்து வருகிறேன். ‘எந்த பொண்ணு தான் அழல’ என்பவர்களுக்கு, அந்நோயின் வீரியத்தை இங்கு நிச்சயம் விளக்க வேண்டும்.

‘அழுமூஞ்சி’ அனு என நிச்சயம் எனக்கு பட்டப்பெயர் இருந்திருக்கும் பள்ளி காலங்களில்.
கொஞ்சம் நன்றாக படிப்பேன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்குவது மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த, ‘ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த’ மாணவி (அந்த படிப்பை மட்டுமே கட்டி அழுததனால், சிறு வயதில் மட்டுமே அனுபவிக்கக் கூடிய கலாட்டாக்கள், செல்லச் சண்டைகள் அனைத்தையும் தவற விட்டேன் என்பது இன்னொரு பதிவுக்கு!!!)
எழுதும் போதே சிரிப்பும் சிறிது கோபமும் வந்தாலும், 25ற்கு 24.5 வாங்கினால் அழுவேன்; என்னை விட .5 அதிகமாக வேறொரு மாணவனோ மாணவியோ வாங்கி இருந்தால் அழுவேன்; எனக்கு பிடிக்காத செயலை யாரேனும் செய்தால் அழுவேன் (எனக்கு பிடிக்காத உணவில் இருந்து, எனக்கு பிடிக்காத வார்த்தைகள் பயன்பாட்டில் இருந்து…விதிவிலக்கின்றி); சரியாக படித்து எழுதாதனால் குறைவான மதிப்பெண் எடுத்தால் அழுவேன்; சில சமயங்களில் விபரீதமாக, ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாக அழுவேன். ஒரு நொடி தெனாலி படத்தின் ‘எல்லாம் சிவ மயம் என்பர்; எனக்கு எல்லாம் பய மயம் ‘ வசனம் நினைவுக்கு வருவது சகஜமே!!

பள்ளிப்பருவத்தில் நிகழ்ந்த இந்த ‘அழுகை காண்டம்’ இந்தியாவில் வேலை பார்த்த சில மாதங்கள் வேறொரு உருவம் எடுத்தது. கைய்யறு நிலைகளின் ஆயுதமாக மாறியது கண்ணீர். அணி தலைவியாக இருந்த போது, என் அணி நன்றாக சேவை செய்தபோதும், நுகர்வோர் அதிருப்தி தெரிவித்தால் அழுவேன். வேலைக்கு தினம் இத்தனை பேர் வர வேண்டும் எனும் போது, அளவிற்கு அதிகமாக அணி நபர்கள் வராத போது அழுவேன்.

திருமணத்திற்குப் பிறகு இந்த அழுகை தொடர்ந்த போதிலும், ‘எதற்கு அழுகிறேன்’ என்ற கேள்வி முதல் முறையாக மனதில் பல முறை தோன்ற ஆரம்பித்தது.
“எப்படி திடீர் நியானோதயம்”என்றால், என் கணவன் அதை எழுப்பாத வரையில் எவரும் அந்த கேள்வியை கேட்டதில்லை. பள்ளி படிக்கையில் ஓரிரண்டு ஆசிரியர்கள், “அனு கம்மியான மார்க் வாங்கினா எப்படி feel பண்றானு பாருங்க…நீங்க யாரும் உங்க மார்க் பாத்து feel பண்றா மாதிரியே தெரியல” சிறுவயதில், இதை விட ஒரு பெரிய நம்பிக்கை தரும் வாக்கியம் தேவையா??
“தன் மேல தப்பு இருந்தா…அனு அழவே மாட்டா; அதுவே அவ மேல தப்பில்லனா அழுது தீத்துடுவா”, இது என் அம்மா. இப்படி அழுத பக்கமெல்லாம், அந்த அழுகைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்ததன் பிறகு, பிரச்சனை வந்தால் அழுகை என்பது ஒரு அனிச்சை செயலாக மாறியது.
“ஏன் அழுகிறேன்” என்ற கேள்வியை தொடர்ந்து, “அப்படி நடக்காமல் இருக்க நான் என்ன செய்திருக்க வேண்டும்”, “நடந்து விட்டது…இனி திரும்ப நடக்காமல் இருக்க என்ன செய்வது”, “அவன்/அவள்/அவர் செய்வது எனக்கு பிடிக்கவில்லை…எப்படி அதை வெளிப்படுத்துவது”, “அழுததனால் இப்பொழுது பிரச்சனை தீர்ந்தததா”, “என் மீது கொண்ட பரிதாபம் தான் கண்ணீராய் கொட்டுகிறதோ”, “கண் மை அழிந்து கண்ணாடியில் பார்க்க முடியாத படி முகத்தை மாற்றிக் கொள்கிறேனே…இதற்கா அழுகிறேன்”, என சரமாரியாக கேள்விகள் வரிசைக்கட்ட ஆரம்பித்தன.

25 வருடங்களாக கட்டி காத்த ஒரு பாரம்பரியத்தை கைவிட வேண்டுமா? வெற்றிக்கு ‘உறுதுணையாய்’ இருந்த ஜலசக்தியை மலையேற்ற வேண்டுமா? போன்ற கேள்விகளை முன்னிறுத்தியதுடன், தோல்வியை ஏற்றுக்கொள்ள என் மனம் தயாராகவே இல்லை. அந்த நெருடலை கணவனிடம் கூறும் போதும் அழுதேன் எனது தெளிவாக நினைவில் உள்ளது!!
கண்ணீரை அடக்கி ஒரு சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என நினைத்த போதெல்லாம்…ஒரு நிராயுதபாணியாக உணர்தேன். ஓரிரண்டு தடவை அழுகை இல்லாத வழிமுறைகளை கையாண்டு, சுமூக தீர்வு கண்ட போதும், “இதெல்லாம் சும்மா உப்புக்கு சப்பாணி; பெரிய பெரிய பிரச்சனை வரும் போது, அழுகை இல்லாம ஒரு அணுவும் அசையாது”, என என் அகந்தை மட்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

அந்த ‘நியானோதயம்’ பிறந்து 2 வருடங்கள் பக்கம் ஆகி விட்டது. முழுதாக குணமடைந்து விட்டேனா எனில், நோய் கிருமியின் சில துணுக்குகள் இன்னும் மிஞ்சி இருக்கிறது.
அடிக்கடி இல்லையெனினும் ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் ஏதாவது ‘சப்பை’ காரணத்திற்க்காக அழுவது உண்டு.
பகுத்தறிவும் இந்த நோய் குறைப்புக்கு நிச்சயம் உதவியது எனலாம். “நல்லவங்களுக்கு எப்பவுமே நல்லது தான் நடக்கும்”, “உன்னால் முடிந்ததை செய்…மிச்சத்தை அவன் பார்த்துக் கொள்வான்”, “எல்லாம் விதி…நம்ம தலைல என்ன எழுதி இருக்கோ, அதுதான் நடக்கும்”, போன்ற ‘பொன்மொழிகளில்’ இருக்கும் போலித் தனம் புரிந்தது. அதனால் அப்பொன்மொழிகளை பொய்ப்பிக்கும் படி நிகழ்வுகள் இருக்கும் போது, கண்ணீர் தலை தூக்க மறுத்தது.

இனி நிகழ்காலத்திற்கு,
வேலைநீக்கம் செய்தி வழங்கப்பட்ட அடுத்த நாள், முந்தைய நாள் நிகழ்வுகளை பற்றிய பேச்சு மட்டுமே ஒவ்வொரு இருக்கையிலும்; ஆட்குறைப்பினால் பாதிக்கப் பட்டவர்களுடன் பேசும் போதெல்லாம், வருத்தம் தொண்டையை அடைத்த போதும், அழ தோன்றவில்லை. அனிச்சையாய் நிகழ்ந்ததா அல்லது, “நான் அழுது அவர்களின் வருத்தத்தை பெருக்கக்கூடாது”, என்ற எண்ணத்தின் பேரில் நிகழ்ந்ததா என தெரியவில்லை.
யதார்த்தம் மெதுவாக படர ஆரம்பித்த போது, எங்கள் அணியில் இருந்து வேலை இழந்தவர்களுக்கு, பிரியாவிடை கொடுப்பது பற்றிய பேச்சு துவங்கியது.
அவர்கள் வேலையில் இருக்கும் கடைசி நாளன்று மதிய உணவு, மதிய தேநீர், வேலை முடிந்த பின் மதுபானக் கடைக்கு செல்லலாம் என ஆலோசனைகள் வந்தவாறு இருக்க, தோழி ஒருத்தி, “அதன் பின் இந்த இடமே முற்றிலும் மாறி இருக்கும்” என யதார்த்தத்தை உரைத்தாள். அப்போது எனக்கு வேலை விட்டு செல்லும் ஒவ்வொருவிரடமும் நான் பகிர்ந்து கொண்ட நட்பு சட்டென நினைவுக்கு வந்தது. ஒரு தோழியிடம் ஆஸ்திரேலிய அரசியல் பற்றி சதா சர்வ காலமும் கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருப்பேன். வேலையில் எந்த பிரச்சனை வந்தாலும், புலம்பித் தள்ள வேண்டும் எனத் தோன்றும் போதெல்லாம் செவி மடுத்தவள் இன்னொரு தோழி.
அப்பொழுது, கசப்பான யதார்த்தை போட்டு உடைத்த தோழியின் கண்கள் கலங்கின. அதற்காகவே என் கண்கள் காத்திருந்தது போல், கண்ணீர் பொள பொளவென பொங்கியது. சமாதானம் செய்ய இன்னொரு அணியில் இருந்து வந்த பெண்ணின் கண்களும் கலங்கின.
என் இருக்கையில் நின்றபடி நாங்கள் விசும்பிக் கொண்டிருந்ததை மற்ற ஊழியர்கள் பார்ப்பதை கவனித்து, சந்திப்பு கூட்ட அறை (meeting room) தேடி நடந்தோம். ஒன்றுமே கிடைக்காததனால், மாற்று திறனாளிகளுக்கான கழிப்பறையில் நுழைந்தோம். வெக்கி வெக்கி அழுதேன்; புலம்பினேன்; அவர்கள் பங்குக்கு தோழிகளும் புலம்பினர். மாற்றி மாற்றி அழுவதும் சமாதானம் செய்வதுமாய், 10 நிமிடம் கழித்து அமைதி ஆனோம்.

அன்று அழுததில் ஒரு தன்னிரக்கமோ, சிறுபிள்ளைத்தனமோ இருந்ததாக தெரியவில்லை. அப்பொழுது அழுகை என்பது ‘பிறரின் கைய்யறு நிலையை பார்த்து ஒன்றும் செய்ய முடியாத நம் கைய்யறு நிலையை’ வெளிப்படுத்தவும் உதவும் என்பது புரிந்தது.

ஒரு அமைதி தோன்ற ஆரம்பித்த போது, அந்த கைய்யறு நிலைக்கு உடனடி தீர்வு காண இயலாததெனினும், அந்த தருணத்தை அனைவருக்கும் முடிந்தவரையில் இதமானதாக்க என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தேன்.
அணியின் பண்பாட்டு ஒருங்கிணைப்பாளராக (cultural coordinator) இருந்தேன். அணியில் இருப்பவரின் பிறந்த நாட்களுக்கு, மதிய உணவிற்கோ, தேநீருக்கோ, அணியை ஒன்று சேர்ப்பது, உணவகங்களில் மேசை பதிவு செய்வது, பிறந்த நாள் கொண்டாடுபவர்க்கு வாழ்த்து அட்டை வாங்குவது மாதிரியான வேலைகளை செய்தேன். இது போன்று அணி நபர் திருமணம் அல்லது மகப்பேறுக்கு தயார் ஆகும் போது அதனை கொண்டாட அணியை திரட்டுவதும் என் பொறுப்பு. அன்று வருத்தப்பட பல காரணங்கள் இருந்த போது, பண்பாட்டு ஒருங்கியக்குனாராக எதாவது செய்ய ஆசைப்பட்டேன். ஒரே அணியாய் 3 வருடங்கள் நாங்கள் கழித்த தருணங்களுக்கு உருவாக்கப் பட்ட அழைப்பிதழ்களை சேகரித்தேன். ஒரு காட்சியளிப்பு அளிக்கை (power point presentation) தயாரித்தேன். அதை ஒரு அழைப்பிதழில் இணைத்து, சேர்ந்து இருக்கப் போகும் கடைசி நாளன்று மதிய உணவுக்கு, அணிக்கு அழைப்பு விடுத்தேன். அணி நபர்கள் முகத்தில் அந்த அழைப்பிதழ் கொண்டு வந்த சிறு புன்னகை ஒரு திருப்தியை அளித்தது.
அன்று அழுததை நினைத்து வருத்தப் படுகிறேனா என்றால் நிச்சயம் இல்லை.என்னால் முடிந்ததை செய்யாமல், நானும் அழுத படியே இருந்திருந்தால், கவலை பட்டிருப்பேன். அன்று அழுதது பலவீனத்தின் வெளிப்பாடே இல்லை. மாறாக, சக மனிதனின் வருத்ததில் பங்கேற்க சிந்தும் கண்ணீர் துளிகள் ஒரு பலமே!