ஜூலை 31, 2014 க்கான தொகுப்பு

உடற்பயிற்சி கூடங்கள் (gymnasium) போக ஆரம்பித்த காலத்தில், நான் கூட இந்த கேள்வியைத் தான் எழுப்பி இருப்பேன். அந்த காலகட்டத்தில் என் எண்ணம் எல்லாம் இதுதான், “ஒல்லி ஆகணும்னா ஓடனும் இல்ல கார்டியோனு சொல்ற நீச்சல் அடிக்கறது, நடக்கறது மாதிரியான உடற்பயிற்சி செய்யணும். அதுவே நல்ல பயில்வான் மாதிரி ஆகணும்னா எடை தூக்கி பயிற்சி (weights training) பண்ணனும்”

இதனால் திருமணத்திற்குப் பிறகு ராஜ் (என் கணவன்) நிறைய முறை எடைப் பயிற்சியில் ஈடுபட சொன்ன போதுகூட, எனக்கே உரிய, “இல்ல எனக்கு பிடிக்கல…எனக்கு tread millல ஓடினா போதும்”, என்ற வறட்டு பிடிவாத பதிலை அளித்தேன்.
இந்த பிடிவாதம் ஒரு பக்கம் இருந்த போதும், இன்னொரு பக்கம் இங்கு ஒளிபரப்பாகும் தொலைகாட்சித் தொடர்களில் வரும் பெண்களின் ‘இருதலைதசை’ (biceps) பார்த்து வியந்ததுண்டு. சில சமயங்களில், அவர்கள் அதனுடனே பிறப்பர் என்று கூட நினைத்ததுண்டு.
இன்னும் கூட எனக்கு எந்த உந்துதலின் பேரில் எடைப் பயிற்சி ஆரம்பித்தேன் என்பது நினைவுக்கு வரவில்லை.
நிச்சயம் என் கணவனின் பங்களிப்பு இருந்திருக்கும்; நானும் ‘செஞ்சு பாப்போம்…புடிக்கலனா இருக்கவே இருக்கு treadmill”, என ஆரம்பித்தேன்.
வாழ்க்கையில் நானே விரும்பி ஏற்றுக் கொண்ட சில விஷயங்களில் இன்று இந்த எடைப் பயிற்சியும் சேர்ந்துள்ளது.

“ஆம்பளைங்க நல்லா தசை போடணும்னு பண்றாங்க…அங்கயும் சமத்துவப் போட்டியா”, என தட்டிக்கழிக்கப் போகிறீர்களெனில், தனி மனிஷியாய் அடைந்த நற்பலன்கள் இவை:
(நாளை உங்கள் மனைவியோ, தங்கையோ அல்லது தோழியோ, எடைப் பயிற்சி பற்றி கருத்து கேட்டால், இவை உதவக்கூடும்)

## tread மில்லில் நடப்பது/ஓடுவது மகிழ்ச்சியை அளித்த போதும், “எப்படா evening ஆகும் gym க்கு போவோம்”, என்ற எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை. ஆனால் எடைப் பயிற்சி ஆரம்பித்ததில் இருந்து, உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல ஒரு புதிய உத்வேகம் பிறந்தது; தற்பெருமை போல் இருப்பினும், பயிற்சிக் கூடத்தின் எடைப் பயிற்சி பிரிவுக்கு செல்லும் போது, treadmill இல் நடந்துகொண்டிருக்கும் பெண்களில் சிலரும், எடை பயிற்சி செய்து கொண்டிருக்கும் சில ஆண்களும் ஒரு நொடி நிமிர்ந்து என்னை பார்க்கும் போது, ஒரு அலாதி மகிழ்ச்சி! Leg press செய்யும் போது, 10 கிலோ தான் அதிகபடியான எடையாக செய்திருப்பேன்; இந்த கவன ஈர்ப்பின் காரணமாக 15 கிலோவிற்கு உயர்த்துவேன்.

## எடைப் பயிற்சிக்கும், அதிக எடை தூக்குவதற்கும் புரதச் சத்து மிக அவசியம்; எப்பொழுதுமே மாட்டிறைச்சி மீதும் கோழி இறைச்சி மீதும் இருந்த விருப்பு, இதனால் பன்மடங்கு பெருகியது. கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தேடி உண்ண ஆரம்பித்தேன்.

## cardio பயிற்சிகள் செய்யும் போது கலோரிகள் (calories) குறையும்; 30 நிமிடம் செய்கிறோமெனில், நம் உடல் அமைப்பிற்கு ஏற்றபடி கலோரிகள் குறையும்; செய்து முடிக்கும் போது , கலோரிகள் குறைவதும் நின்று விடுகிறது. அதே 30 நிமிடம் எடை பயிற்சி செய்யும் போது, அந்த 30 நிமிடம் குறையும் கலோரிகளுடன் சேர்த்து, முடித்த பிறகும் கலோரி குறைப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எடைப் பயிற்சியின் தீவிரத்திற்கு ஏற்ப, 1 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை கலோரி குறைப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். 30 நிமிடம் ஒரே treadmill தரையை தேய்ப்பதற்கு பதில், 15 நிமிடம் treadmill, 5 நிமிடம் ‘free weights’, இன்னொரு 10 நிமிடம் ‘machine weights’ செய்யும் போது, உடற்பயிற்சியில் ஒரு ‘variety’ கிடைக்கும், அதே சமயத்தில் அதிகமான கலோரி குறைப்பும் நடக்கிறது.
ரஜினி பட DVD வாங்க காசு குடுக்குகிறீர்கள்; வீட்டிற்கு வந்து பார்த்தால், இலவச இணைப்பாக ஒரு கமல் படமும் அதில் இருந்தால் கிடைக்கும் ஆனந்தம் அது!!

## “எனக்கு லூசா சொக்காய் போடத்தான் புடிக்கும்” என யாராவது முழு மனதோடு கூறி கேட்டிருக்கீர்களா? யாராவது கூறி இருந்தாலும், அதில் ஒரு ஏக்கமும், “நானும் ஒரு நாள் ‘fitting’ உடைகள் அணிவேன் என்ற வீராவேசமும் இருந்திருக்கும். அதே குட்டையில் ஊறியவள் தான் நானும். என்னதான் “யார் என்ன நினைச்சா என்ன….தொப்பை தெரிஞ்சா தான் என்ன…அப்படித்தான் fitting டிரஸ் போடுவேன்”, என திமிருடன் கூறினாலும், உள்ளே என்னவோ, “உடலும் இளைத்து, அதனை மெருகேற்றும் படி உடை அணிந்தால் அது ஒரு தனி இன்பம் அல்லவா”, என நினைப்பேன். அந்த கனவு நினைவாகவும் எடைப் பயிற்சி உதவியது.
“ஒடம்பு கொறையனும்…அவ்வளவுதான அதுக்கு cardio மட்டும் போதுமே”, என்பவர்களுக்கு, கொழுப்பை குறைக்க வேண்டுமெனில் cardio உதவும்; ஆனால் அதே சமயத்தில் தசையையும் வேண்டியபடி வடிவமைக்க எடைப் பயிற்சி மிகவும் அவசியம்.

## திடீரென ஒரு ஹாட் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட தோன்றுகிறது. “இரவு உணவிற்கு pizza சாப்பிடு” என மண்டைக்குள் ஒரு குருவி கொடைகிறது. நீங்களும் அந்த ஆசைக்கு அடிப்பணிகிறீர்கள் . அடுத்த நாள், சாப்பிட்ட கலோரிகள் அனைத்தும் கண் முன் எண்களாய் வந்து நிற்கின்றன; உதாரணத்திற்கு முந்தைய நாள் இரவில் சாப்பிட்ட பொருட்களில் இருந்து 700 கலோரிகள் கிடைத்தது என வைத்துக்கொள்ளலாம். சாப்பிட்ட கைய்யுடன் தூங்கச் சென்றிருந்தால், அந்த கொழுப்பெடுத்த கலோரிகள் அனைத்தும் உடலில் கொழுப்பாய் மாற வாய்ப்புகள் நிறைய உண்டு! இங்கு தான் எடைப் பயிற்சி மீண்டும் உதவி கரம் நீட்டுகிறது.
அந்த 700 கலோரியை கரைக்க, குறைந்தது 1 மணி நேரமாவது tread மில்லில் ஓட வேண்டும்; அல்லது 1.30 மணி நேரம் வேகமாக நடக்க வேண்டும். அதற்கு பதில், 15 நிமிடம் கார்டியோ உடன், ஒரு 20 நிமிடத்திற்கு தீவிர எடைப் பயிற்சி செய்யும் போது, சாப்பிட்ட 700 கலோரிகள் கரையும். பயிற்சி முடிந்த பின்னரும் கலோரி குறைப்பு நிகழ்வதனால், மதிய உணவிற்கு ஒரு கோழி பிரியாணி சாப்பிடுவதாய் இருந்தாலும், எந்த மனக் கசப்புமுமின்றி புசிக்கலாம்!

## Endorphin என்ற ஒரு இயக்குநீர் (hormone) பற்றி அறிந்திருப்பீர்.உடற்பயிற்சி செய்யும் போது , மூளையில் இது சுரக்கிறது; மன உளைச்சல் பெருமளவில் குறைகிறது. வேலை பளுவின் காரணமாக உடல் உளைச்சலும், மன உளைச்சலும் ததும்ப வீட்டிற்கு வருவேன்; இரவு சாப்பாடு கூட தேவையில்லை…தூங்கினால் போதும் என தோன்றும். அதே சமயத்தில், நண்பர்களுடன் இரவு உணவு அல்லது படம் என மறுக்க முடியாத வேண்டுதல்கள் என் முன் வைக்கப் படும். வேலையின் களைப்புடன் சென்றால், உணவையும் ரசிக்க முடியாது, $20 குடுத்து விட்டு, திரை அரங்கில் தூங்கி விழும் நிலையும் வரும். இங்கு விடிவெள்ளியாய் வருவது மீண்டும் எடைப் பயிற்சியே! சட்டென உடற்பயிற்சி உடைகளை அணிந்து, 30 நிமிடம் பயிற்சி முடித்து வரும் போது, “உளைச்சலா…களைப்பா…யாருக்கு???”, என கேட்கத் தோன்றும்.

## எலும்புகளின் வலிமைக்கும் தசை வலிமை மிக அவசியம் என்று விரிவாய் படித்த போது , இன்னொரு புத்துணர்ச்சி. எப்பொழுதும் புதியதாய் எடுக்கும் முயற்சிக்கு, நம்மிடம் ஏற்கனவே இருக்கும் ஒரு திறமை உதவுமெனில், அளவற்ற மகிழ்ச்சி தானே! அந்த விதத்தில், தசை வலிமைக்காக எடுத்துக் கொண்ட எடைப்பயிற்சி, எலும்பு வலிமைக்கும் வழி வகுக்கும் என தெரிந்த போது, அது சொற்களால் விளக்க முடியாத ஒரு ஆனந்தம்!

## வருடத்தின் ஆரம்பத்தில் கொல்லைப்புறத்தில் (backyard) ஒரு ஷெட் கட்ட முடிவு செய்தோம். இங்கு DIY என்ற முறையின் படி, கட்டுமான பொருட்களை வாங்கி நாமே வேண்டிய பொருளை உருவாக்கலாம். அதன் அடிப்படையில், புல் அறுக்கும் இயந்திரம் (Lawn mower), ஏணி, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படும் pipe வகைகளை பத்திரப்படுத்த ஒரு ஷெட் நல்ல முடிவாய் தெரிந்தது.
கட்டுமான பொருட்களுடன் வந்த ‘instruction manual’ குறைந்தது இருவராவது வேலையில் இறங்கினால் மட்டுமே கட்டி முடிக்க முடியும் என கூறியது. நண்பர்களால் வர முடியுமா என கேட்க நினைத்தபோது, ராஜ் “ஏன் நாம ரெண்டு பேர் போதாதா”, என வினவ, “அட ஆமாம்ல…எடைப் பயிற்சி, தசை வலிமை எல்லாம் எதுக்கு, தேவை ஏற்படும் போது கைக்குடுக்கத்தான”, என துணிச்சலாய் நானும் இறங்கினேன். “வெற்றிக்கொடிகட்டு மலைகளை முட்டும் வரை முட்டு” பாடல் பின்னணியில் ஓடாதது மட்டும் தான் குறை! இருவர் மட்டுமே சனி ஞாயிறு வேலை செய்து, ஷெட் கட்டுமான பணிகளை முடித்தோம்.
6 மாதங்கள் ஆகப் போகிறது; சென்ற மாதம் அடித்த புயல் காற்றில், ஷெட் கதவு மட்டும் சிறிது ஆட்டம் கண்டது…மற்றபடி, ஷெட் கிண்ணென நிற்கிறது!

வேறு என்ன, உடல் எப்பொழுதும் வலிமையாக இருப்பதனால், சோர்ந்து போய் அடிக்கடி டாக்டரிடம் செல்வதில்லை; ஒரு நாளில் முடிக்க நினைக்கும் அனைத்து வேலைகளுக்கும் உடல் ஒத்துழைக்கிறது; “ஒரு பொண்ணுனா…பூ மாதிரி”, என்ற கேவலமான ‘புகழ்ச்சியினை’ தகர்த்தெறிய முடிகிறது.
இதற்கும் மேல் ஏதாவது ‘நற்பலன்கள்’ இருக்கா என எதிர்பார்ப்பது, சோம்பேறியாய் உட்கார தேடும் ஒரு வீண் முயற்சி மட்டுமே!