“இருங்கப்பா ஒரு சமயத்துல ஒருத்தர் பேசுங்க…ராக்கி யாருப்பா? நீ ஆரம்பி”, என மனு வாங்கும் அதிகாரி கூச்சலை அடக்க முயன்றார்.
“எங்க குப்பத்துல இருந்து ஒரு 10 நிமிஷம் நடந்தா ஒரு பெருமாள் கோயில் இருக்குது சார்…அது வழியா எங்க வீட்டு பொம்பளை புள்ளைங்க நடந்து போகவே சங்கடப் படறாங்க. எப்ப பாரு சொக்காய் இல்லாம ஒரு நாலு அஞ்சு பேரு உலாத்திக்கிட்டே இருக்காங்க…பொம்பளை பசங்க வந்து போற எடத்துல கொஞ்சம் உடம்ப மறைச்சிகிட்டு இல்லாம!! நாங்க ஆம்பளைங்க ஒரு ரெண்டு பேரு மொதல போய், யாரும் இல்லன்னு சிக்னல் குடுக்கவேண்டியிருக்கு. இத சரி செய்ய நீங்க தான் மேல பேசணும் சார்”

தன் வாய் வெகு நேரம் திறந்திருந்ததை உணர்ந்து, சற்றே அதை அடைத்தார் மனு வாங்கும் அதிகாரி. “உங்க சங்கடம் புரியுது தம்பி…ஆனா அந்த அய்யர்மாருங்க வழி வழியா அப்படி தான சாமி கும்பிடறாங்க”, என குழைந்தார்.
“இது சும்மா வெட்டிப் பேச்சுங்க…நாங்க எல்லாம் கோயிலுக்கு போகணும்னா…கண்ண கட்டிகிட்டா போறது? நாங்க எல்லாம் சட்டைய கழட்டாமத் தான சாமி கும்பிடறோம்”, என உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்தினான் ராக்கி

“சரிப்பா கோவப்படாத…என்ன செய்யலாமுன்னு பாக்கறேன்; தினேஷ் யாருப்பா”, என சமாதானம் செய்து விட்டு, அடுத்த குறையை கூறும்படி சைகை செய்தார் மனு வாங்கும் அதிகாரி.

தொண்டையின் கரகரப்பை சரி செய்தபடி, “இந்த அய்யர் பசங்க பேசற தமிழ், தமிழே இல்லீங்க…கேக்கவே நாராசமா இருக்கு. அவா வருவாளா, இவா போறாளா, வருவாநோனோனு தமிழ கொலை பண்றாங்க சார். எங்க வீட்டு பசங்களும், வித்யாசமா இருக்குனு அதை பேச ஆரம்பிக்கறாங்க..இத நிறுத்த ஒரு முடிவு எடுத்தே ஆகணும் சார்”, என தமிழ்ப்பற்று ததும்ப குறையை முன் வைத்தான் தினேஷ்.
“என்னப்பா இது…ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்கப் போல…அவங்க பேச்சு வழக்கம்பா அது. அத மாத்த சொன்னா எப்படி”?, என தலையை சொரிந்தார் மனு வாங்கும் அதிகாரி.

இது விபரீதமான விவகாரம் என தோன்றிடில், சமீபத்தில் நிகழ்ந்த இதை விட கொடுமையான சம்பவம் தான் இப்பதிவு எழுத என்னைத் தூண்டியது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கச் செல்லும் பார்ப்பனர்களுக்கு ஒரு அநீதி நிகழ்ந்து விட்டதாம். நெய், பண்ணீர் போன்ற நறுமணங்களை மட்டுமே நுகர்ந்த அவர்கள் மூக்குகளுக்கு கருவாடு வாடையை அறிமுகப்படுத்தி அநீதி இழைத்து விட்டதாம் அந்த மார்க்கெட்.

“எங்க மூக்குகளுக்கு நாங்க இன்சூரன்ஸ் எடுக்கல…இந்த பாழாப்போன கருவாடு நாத்தத்துனால ஏதாச்சும் ஆயிடுத்துனா…treatmentக்கு காசு நீங்க தருவேளா”, என பரிதாபமாக முகத்தை வைத்தபடி அரசிடம் முறையிட்டுள்ளனர். கருணையின் முழு வடிவான தமிழகத்தின் பார்ப்பனிய அரசும், “ரெண்டு சூமோல போங்க..மார்க்கெட்ல இருக்கற கருவாடு கடை எல்லாத்தையும் மூடுங்கடா”, என ஆணை பிறப்பித்துள்ளது.

இது பற்றி வினவு தளம் வழி தெரிய வந்தது. சாதி வெறியில் ஊறிப் போன இரண்டு ‘பெரியவா’ளின் முனகலுக்கு இவ்வளவு மதிப்பா…என நினைத்தத் தருணத்தில், “வெள்ளந்தியா இருக்கியேமா…சப்போர்ட்க்கு ஒரு பார்ப்பனிய செய்தித்தாளும், பார்ப்பனியத்தை உயிர் நாடியாக நினைக்கும் அரசாங்கமும் இருக்கும் போது, மனு நீதி தோத்துப் போகுமா??”, என வலியுறுத்தியது வினவின் இந்த பதிவு.

வினவு தளத்தை அவ்வப்போது கவனிப்பதனால், கண்ணில் பட்டது, ‘கருவாடு’ ஆவணப் படத்தின் முன்னோட்டம்.

“இதெல்லாம் ஒரு மேட்டர்னு ஆவணப்படம் பண்றாங்க….நீங்களும் அதப்பத்தி பதிவு எழுதறீங்க”, என அலுத்துக் கொள்பவர்கள், இதில் உள்ள சாதி வெறியினை மறுக்க நினைக்கின்றனர் அல்லது மறைக்கத் தவிக்கின்றனர்.
புலால் உண்பது என்பது, பார்ப்பன ஜாதியினரால் ஒரு கீழ் தனமான உணவு பழக்கமாகப் பார்க்கப் படுகிறது.
புலால் உண்பதே பார்ப்பனர் அல்லாத மக்களின் தீய செயல்களுக்கு காரணம் எனக் கூறும் அபத்தமும் சிறு வயதில் என் கண் முன் நிகழ்ந்துள்ளது. அத்தருணங்களில், “அப்ப brahmins பண்ற தப்புக்கெல்லாம் காரணம் என்ன”, என கேட்கத் தோன்றியதில்லை. கேட்டிருந்தாலும், ‘விதண்டாவாதம் பேசாத….பெரியவங்க சொல்றத கேட்டுக்கோ” என்ற விடைதான் வந்திருக்கும்; பளாரென அறையொன்று விழுந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

மேலே மருதையன் கூறும் கருத்தை, நான் வேறு சில இணைய தளங்களிலும் படித்துள்ளேன். இன்று சைவ உணவு உண்பதை ஒரு பெருமையாகவும், தங்களை உயர்த்தி காட்டும் ஒரு குணாதிசயமாகவும் பார்க்கும் பார்ப்பனர்கள், அவர்களின் மூதாதையர்கள், மாமிசத்தை ரசித்து புசித்துள்ளனர் என்ற செய்தியை எவ்வாறு எடுத்துக்கொள்வர் என பல முறை நான் யோசித்ததுண்டு.
இப்படி இருக்குமா???

“அடப்பாவி அப்பா…நீ சாப்பிடலன்னு, சாதி பேர சொல்லி, என்னையும் சாப்பிட விடாம பண்ணிட்டியே”

“அப்பவே தெரியும் எனக்கு….பக்கத்து வீட்ல கோழி பிரியாணி செய்யும் போதெல்லாம் என் நாக்கு ஊறும். genesல இருக்கறதுனால தான, நாக்குக்கு அந்த taste இன்னும் நினைவிருக்கு”

“போங்கடா…ரெண்டு நாள் முன்னாடி இந்த பதிவ போட்டிருக்க கூடாது??தந்தூரி சிக்கன் நேத்து buffet டேபிள்ல தாறு மாறா இருந்துச்சே “

அல்லது இப்படி இருக்குமா??

“எங்க சாதிக்கும் சைவம் சாப்பிடறதுக்கும் சம்பந்தமே இல்ல. ஒரு உயிர வருத்தி, நம்ம வயித்து பசிய தீத்துக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல”

“அந்த காலத்துல விவசாயம் பெருமளவுக்கு முன்னேறல…அதுனால புலால் உண்ண வேண்டிய நெல இருந்தது”

“எனக்கு பிடிக்கல…மாமிசத்துல கெடைக்கற எல்லா சத்தும் சைவ உணவுலயும் கெடைக்குது”

மேலே பட்டியலிடப்பட்டுள்ள இரு தரப்பு விவாதங்களில் எது சிறந்தது, எது ஆபத்தானது என விவாதிப்பது வீண் வேலை.
ஏனெனில் புலால் உண்பதும் உண்ண மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
இங்கு பிரச்சனையே சைவ உணவு உண்பதை ஒரு உயர்ந்த குணமாக நினைத்துக் கொண்டு, மாமிசம் உண்பவரையோ, அவர் ஜாதியையோ ஒரு கரும் புள்ளியாகப் பார்ப்பது தான்.
இதை அறியாமை என்பதை விட, ஜாதி வெறியில் தன்னிச்சையாக ஊறிப்போன ஈண குணம் என்றே பார்க்க வேண்டும்.
இந்த ஜாதி வெறியின் வெளிப்பாடே, கருவாடு கடைகளை மூட, குரலை உயர்த்தும் ‘பொதுநலம்’

கோயம்பேடு மார்கெட்டில் கருவாடா, அழுகிப்போன காய்கறிகளா…எது அதிகமான துர்நாற்றத்தை வெளிப்படுத்துகிறது என்ற விவாதம், வணிகம் தடைப்பட்ட கடைக்காரரின் புலம்பல். பார்ப்பனிய கோட்பாடுகள் ஊடுருவி இருக்கும் அரசுக்கு இந்த புலம்பல், செவிடன் காதில் ஊதிய சங்கு.

“பார்ப்பனனாய் பிறந்திட நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் அம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்,

“உங்களுக்கு புரியும் விதத்தில் சொல்ல வேண்டுமெனில், உங்களின் வத்தல்குழம்பு மாதிரி தான் பார்ப்பனர் அல்லாதவர்கள் விரும்பி உண்ணும் கருவாடும். பாலும், செழிதேனும், பாகும் உண்ட பின் வயிற்றில் சிறிது இடம் இருந்தால் நீங்கள் வத்தல் குழம்பு பக்கம் திரும்புவீர்கள்; ஆனால் கருவாடும் பழைய சோறும் மட்டுமே நிறைய பேருக்கு தினசரி உணவாய் இருப்பதை நினைவில் கொள்ளவும்.

வாயில்லா ஜீவன்களின் அழிவிற்கு முதலைக் கண்ணீர் விடும் நீங்கள், விலைவாசி கொடுமையால் ஒரு வேளை சோறு கூட கிடைக்காமல் தவிக்கும் மனிதனின் அழிவிற்கு என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்?

“தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத் தான் தெரியும்”! அதன் படி, சமூகத்தின் கீழ் தட்டில் உள்ளவனின் பிரச்சனைகளை அவன் கோணத்தில் இருந்து வாழ்க்கையை பார்க்கும் போதுதான் உங்களுக்குப் புரியும். அதைப் புரிந்துக் கொண்டிருந்தால், ‘பச்ச கொழந்த பொம்மைக்கு அடம் புடிக்கிறா மாதிரி’ வீண் சுதந்திரப் பறிப்பில் இறங்க மாட்டீர்கள். புரிந்துக் கொள்ளும் வரையில்,

“கங்கா ஸ்னானம் செஞ்சுட்டு பெருமாள சேவிச்சுக்கோங்கோ…லோகத்துல நடக்கற அநீதி எல்லாத்தையும் அவன் பாத்துக்கட்டும். இன்னிக்கி பிரசாதம் திருக்கண்ணமுது தரா பாருங்கோ….சீக்கிரம் போங்கோ, அப்பறம் தீந்துட போறது”

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s