அன்று வேலைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். வாரத்தின் இரண்டாவது நாள் தான் என்ற போதிலும், ஒரு வாரம் வேலை செய்த அசதியுடன் பயணம் செய்து, நான்காவது நிறுத்தத்தில் அருகிலிருந்த ஜன்னலில் சாய்ந்தபடி தூங்கியும் விட்டேன். சாதரணமாக இங்கு ரயில்களில் ‘கப்சிப்’ அமைதி இல்லாத போதும், அவரவர் அவர்கள் வேலையை கவனிப்பதனால், நாமும் நம் தூக்கத்தை பெரிய தடங்கல் எதுவும் இன்றி தொடரலாம்.

“இல்லங்க…அதுக்குத்தான போன் பண்றேன்…என்னால கட்ட முடியாது. கொஞ்சம் நாள் குடுங்க…பைசாவ கட்டறேன். என்னது திரும்ப holdல போடப் போறீங்களா??? இது மூணாவது தடவை”, என அருகில் இருந்த நபர் உரக்க கத்துவதை கேட்டு வெடுக்கென என் தூக்கம் கலைந்தது.
ஆழ்ந்த உறக்கம் போல, எழுந்த அந்த நொடி, அவர் இருக்கைக்கு சென்று, “என்ன சார்…இவ்வளவு மெதுவா பேசினா அந்த கம்பெனிகாரனுக்கு எப்படி கேக்கும்? இன்னும் கொஞ்சம் குரல உயர்த்தினா…போனே தேவை இல்ல. பில்லும் கம்மியாகும் பாருங்க”, என விளாசிவிட்டு வர வேண்டும் என தோணிற்று.
இங்கு பெரும்பாலும் அடுத்தவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என மக்கள் தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை. அதனாலேயே ரயில்களில் உரக்க பேசுபவர்கள் ஒரு விசித்திர பிறவியாகத் தான் பார்க்கப் படுகின்றனர்.
நான் பார்த்தவரையில் ரயிலில் மட்டும் அல்லாது, பிற பொது இடங்களிலும் இது மாதிரி குரலை உயர்த்தி பேசுபவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருப்பர்.
அது அலைப்பேசியிலோ அல்லது நேருக்கு நேரோ , ஹிந்தி தெரிந்தவர்களுக்கு பேசுபவரின் வாழ்க்கை அச்சு பிசகாமல் புரிந்துவிடும்.
நேற்று கூட இரவு உணவிற்கு சென்றிருந்த உணவகத்தில், ஒரு வட இந்திய தம்பதியரும் அவர்களின் குழந்தையும் வந்திருந்தனர்.
குழந்தை தன் இருக்கையை விட்டு ஓட, குழந்தையின் தாய் வீடுகளில் கத்துவதைப் போல், குழந்தையை இருக்கைக்கு திரும்பி வரும்படி பலத்த குரலில் அழைத்தார். அதுவும் ஆங்கிலத்தில் வந்த போது, என் மனதில் தோன்றியதெல்லாம், “இத்தனை கறாரான தாயெனில், குழந்தை பயத்தின் காரணமாகவே இருக்கையை விட்டு நகராமல் இருக்கும்; பயமின்றி ஓடுகிறதெனில்…”, “கோபமாக பேசும்போது, சாதரணமாக தாய் மொழி தான் முன் வந்து நிற்கும் என்பர்….ஆனால் இந்த தாயிற்கு..”
அருகில் மேசைகளில் இருந்த மக்கள் (எங்கள் மேசை உட்பட) திரும்பி பார்த்த போதும், மிரட்டல் குறையாத வண்ணமே இருந்தது. இம்முறை குழந்தையின் அப்பாவும் சேர்ந்துகொண்டார்….அவரும் ஆங்கிலத்தில்.
கோவத்தை வெளிப்படுத்துகிறார்களா அல்லது அவர்களுக்கு ஆங்கிலத்தில் வைய்யத் தெரியும் என பொது மேடையில் நிரூபிக்க விரும்பினார்களா என தெரியவில்லை.

நம் ஊரில் கூட, பொது இடங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என பாரபட்சமின்றி அனைத்திலும் கோவத்தை வெளிப்படுத்தவோ, அடுத்தவர் மேல் இருக்கும் வெறுப்பை காட்டவோ, குரலை உயர்த்தி பேசுவது ஒரு சாதாரண விஷயம். நண்பர்களிடையே சண்டை, கணவன்-மனைவி இடையே சண்டை என வாக்குவாதங்கள் இடம் பெரும் இடங்கள் அனைத்திலும் உரக்க பேசுவது தவிர்க்க முடியாத ஒரு தேவையாகவே ஆகிவிட்டது.

அளவிற்கு அதிகமாக மது அருந்தி விட்டு உளறுபவர்கள் பெரும்பாலும் கத்தி பேசுவர். தன்னிலை மறந்த ஒரு தருணம் அது. அந்த சமயங்களில் கத்துபவரின் பேச்சை யாரும் பெரிதாக மதிக்க மறுப்பர். நான் இந்தியாவில் வேலை செய்த போது கூட, இரு முறை வேலை செய்யும் பெண்கள் என் மீது கோவத்தில கத்தியதுண்டு. அப்பொழுது அனிச்சையாக செய்தேனா அல்லது தெரிந்து செய்தேனா என தெரியவில்லை…ஒன்றும் பேசாமலே நின்றேன். அவர்களின் சில வார்த்தைகள், வாக்கியங்களை கேட்கும் போது, “என்ன உளறரா”, “அப்ப இவ்வளவு நாளா சிரிச்சு சிரிச்சு பேசினதுக்கு பின்னால இத்தனை வெறுப்பு இருந்திருக்கா”, என பல விஷயங்கள் தெளிவானது. அந்த இடத்தில், அவர்களுக்கு நிகராக நானும் கத்தி பேசி இருந்தால், பிரச்சனை தீர்ந்திருக்குமோ இல்லையோ என் சக்தி முழுவதுமாய் காய்ந்திருக்கும்!

தனிப்பட்ட முறையில் எனக்கு இப்படி ‘சத்தமாய் பேசுவதனால், தன் கருத்துக்கள் அனைத்தும் சரி’ என நினைத்துக்கொண்டு சரமாரியாக கத்துபவர்கள் மேல் ஒரு வெறுப்பே உண்டாகும். உன் பக்கம் நியாயம் இருக்கிறது எனும் போது , அதை பொறுமையாய் எடுத்துரைக்க தானே விரும்ப வேண்டும்? இதை எழுதும் போது கண் முன் வந்து போவதெல்லாம் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் தான். அதில் குயிலியின் கதாப்பாத்திரம் சாதாரணமாய் பேசும்போதும் ஒரு உயர்த்திய குரலில் பேசுவது ஒரு எரிச்சல். அதை நகைச்சுவைக்காக வைத்திருந்தால், நகைச்சுவையின் ஒரு சாயல் கூட இல்லாத கதாப்பாத்திரம் அது. அந்த பாத்திரம் திரையில் வந்த உடன் ஒன்று, டிவியின் சத்தத்தை குறைத்து விடுவேன் அல்லது வேகமாய் ஓட்டும் அம்சம் இருந்தால் அதை செய்து விடுவேன்.

நிறைய பேர் கத்தி பேசுவதை கூர்ந்து கவனித்தால், அவர்களின் தவறை மறைக்கவோ அல்லது எதிரில் உள்ளவரை பீதியில் ஆழ்த்தவோ தான் அவ்வாறு செய்வர்.
என் இந்த பதிவு மூலம் என் விருப்பு, வேண்டுகோள் எலாம் ஒன்று தான்

“உங்கள் வீட்டில் கொட்டிக்கிடக்கும் குப்பை பற்றி எனக்கு கவலை இல்லை, அதை பொது இடத்தில் பரப்பியே தீருவேன் என நினைத்தால், புதன் கிரகத்திற்கு புலம் பெயற எத்தனியுங்கள் (அங்கும் வெகு விரைவில் மக்கள் கூட்டம் பெருக ஆரம்பிக்கும்…அதுவரைக்கும் வேண்டுமெனில்..)”

“என்னுடன் வாக்குவாதம் செய்ய வேண்டுமெனில், குரலை உயர்த்தி பேச நடவடிக்கை எடுப்பதற்கு பதில், விவாதத்திற்கு பயன்படும் விஷயங்களில் உங்கள் புத்தியை தீட்டிக்கொள்ளுங்கள்”

“உங்களுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, சீன மொழி என எந்த மொழி தெரிந்திருந்தாலும், அதில் உங்களின் புலமையை பாராட்டி யாரும் விருது தரப்போவதில்லை; அலைப்பேசிகள் மிகவும் முன்னேறி விட்டன, முனுமுனுத்தாலும் கூட உரையாடலின் அந்த பக்கம் இருப்பவர்க்கு தெளிவாய் கேட்கும்; அதனால் உங்கள் தொண்டைத் தண்ணியை சேகரித்து வைப்பதில் கவனம் செலுத்துங்கள்”

“ரயிலில் தூங்குபவர்கள் களைப்பில் தூங்குகிறார்களோ அல்லது ‘சும்மாவேனும்’ தூங்குகிறார்களோ….உங்களின் வெண்கல குரலினால் அவர்களின் கனவுகளை கலைக்காதீர்கள்”

வாயை மூடி பேசும்படி கேட்கவில்லை; யாரிடம் பேசுகிறீர்களோ அவருக்கு மட்டும் கேட்கும் படி பேசவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s