பிப்ரவரி, 2015 க்கான தொகுப்பு

இந்த ஒளிப்பதிவில் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி ஆபட்ட் (Tony Abbott). தொலைப்பேசியின் அந்த பக்கம் இருப்பது, டோனி பதவிக்கு வர வோட்டு போட்ட ‘common man’. புலம்பல் மிகக் காரசாரமாக இருந்தாலும், சாராம்சம் இதுதான்….”டோனி நீ சரியான வெத்து வேட்டு . நீ போற போக்க பாத்தா, கட்டாயம் லாட்ஜ் சாவிய பில் ஷார்டென் கிட்ட குடுக்க போற…அதுவும் ரொம்ப சீக்கிரமே”. இங்கு ‘லாட்ஜ்’ என்பது, பிரதமருக்கு, அரசு வழங்கும் இல்லம்/இருப்பிடம். நம் ஊரின் ஆளுநர் மாளிகை, லண்டனில் உள்ள ’10 டௌனிங் ஸ்ட்ரீட்’ மாதிரி. பில் ஷார்டென் என்பவர் ஆஸ்திரேலிய  அரசியலில் எதிர் கட்சித் தலைவர்.

இங்குள்ள பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் மகிழ்ந்து பார்க்கும் அதே சமயத்தில், இந்தியாவில் பெருமையாய் பேசப்படும் ஜனநாயகம், பேச்சுரிமைக்கெல்லாம்  என்ன பொருள் என கேட்கத் தோன்றுகிறது.

ஒரு மதத்திற்கு எதிராகவோ, ஒரு அரசியல் தலைவருக்கு எதிராகவோ, ஒரு சராசரி மனிதன் குரல் எழுப்பும் போது, அவன் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள், “என்னடா இது, சர்வாதிகாரம் நிலவுதா இந்த நாட்டுல”, எனக் கேட்கத் தூண்டுகிறது.

வட கொரியாவிலாவது ஒரு சர்வாதிகாரியெனில், இந்தியாவில் ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ போல், சர்வாதிகாரி ஆகும் உரிமை மட்டும் எவன் வேண்டுமெனினும்…தாரளமாக எடுத்துக்கொள்ள முடியும்.

“உன்னைவிட ஜாதியில் தாழ்ந்தவன், பணத்திலோ, பதவியிலோ உன்னை விட உயர்ந்து விட்டால், அவனை தீர்த்துக் கட்டக் கூட உனக்கு உரிமை உண்டு”

“உன் மனைவி உன்னை எதிர்த்து பேச வாய்த்திறந்தால், பளாரென அறையவோ, தாறுமாறாக அவளை அடிக்கவோ உனக்கு உரிமை உண்டு”

“உனக்கு பிரியமான நடிகனை, கிண்டல் செய்யும் எவனையும்….வார்த்தைகளால் சாவடிக்கும் உரிமை உனக்கு உண்டு”

“ஒரு உறுப்படியான காரணம் இல்லாத போதும், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவனா அவன்…அவன் இனப் பெயரைக் காரணம் காட்டியே, ஊரைத் திரட்டி, அவன் இனத்தை அழிக்க உனக்கு உரிமை உண்டு”

“இந்த காட்டுமிராண்டி செயல்கள் அனைத்தையும், உன் பணபலம், செல்வாக்கைப் பயன்படுத்தி நியாப்படுத்தவும் உனக்கு உரிமை உண்டு”

இத்தனை ‘உரிமைகள்’ கொட்டிக் கிடக்கும் இந்த நாட்டில், இவை எதையும் தட்டிக் கேட்கும் பேச்சுரிமை மட்டும், சாதரணமாக கிடைப்பதில்லை.

“அநீதிய தட்டிகேப்பேன்…உன்னால முடிஞ்சத செய்”, என அருந்ததி ராய் மாதிரியோ வினவு பத்திரிகை போலவோ, ஒரு திடமான கொள்கைக் கொண்டிருந்தால், சாத்தியமாக வாய்ப்புகள்  உண்டு.

“எல்லாம் நம்ம தலையெழுத்து”, நல்ல வேளை நாம பொழைச்சோம்”, என இருக்கும் வரையில், தங்கள் ‘உரிமைகளை’ கொண்டாடும் மத வெறியர்களும், ஆணாதிக்க ஓநாய்களும் கொண்டாடிய வண்ணமே இருப்பர் .

அப்படி  வீணர்களின் உரிமை கொண்டாடும் செயல் உங்களுக்கு தீங்கு விளைவித்தால், “அய்யோ இதுக்கு கொரல்  குடுக்க யாரும் வர மாட்டாங்களா”, என புலம்புவது பயனற்றது.

இன்னொருவர் பிரச்னைக்கு நீங்கள் குரல் கொடுக்காத போது, உங்கள் பிரச்சனைக்கு மற்றவரின் வரவை எதிர்பார்ப்பது கொஞ்சம் ‘இடிக்குதே’!!

“புது ஆளுக்கு வோட்டு போட்டிருக்கோம்…அவன் பாத்துப்பான்”, என மீண்டும் இன்னொருவரிடம் தீர்வை நிர்ணயிக்கும் உரிமையை கொடுப்பது….எந்த வித சுமூக முடிவிற்கும் வழி வகுக்காது.

உரிமைகளை இனிதே கொண்டாட, அது மறுக்கப் படும் போது , குரல் எழுப்பி எதிர்ப்பு பதிவு செய்வது ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஆனால் நம் ஊரில் மட்டும் அது ஒரு தேவையற்ற செயலாகவே பார்க்கப் படுகிறது.

அவ்வாறு குரல் எழுப்புவர்களும், “வேலை வெட்டி இல்லாம திரிஞ்சுகிட்டு இருக்குதுங்க”, என்ற ஏசல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது.

“என்ன மா பேசற…அதுக்காக மோடி இல்ல வேற மினிஸ்டர் interview  நடக்கும் போது , மல்லுகட்ட சொல்லறியா?”, எனக்கேட்பவர்கள், மீண்டும் பதிவின் துவக்கத்தில் உள்ள ஒளிப்பதிவை பார்த்தால் நன்று. அதில் கேள்வி எழுப்புவர்..உங்களைப் போன்றே ஒரு சாதாரண குடிமகன் தான்.

“பாக்கறதுக்கு நல்லாத் தான் இருக்கு…அதுக்காக மோடி கிட்ட எல்லாம்…”, என குழைபவர்களுக்கு,

modi's suit

நீங்கள் போட்ட வோட்டினால் ஒரு பதவிக்கு வந்து, உங்கள் வரிப்பணத்தில், முழுக்க முழுக்க தன் பெயர் பதித்த ஒரு சட்டையை போட்டு மினிக்கிக் கொள்ளும் ஒரு ‘அரசாங்க வேலைக்காரன்’, உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் இல்லை என்பீர்களா?

குடியரசு தினங்கள், சுதந்திர தினங்கள் போது  மட்டும், “உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகம்”, என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை, அதை நாட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும் நிலைநாட்ட வேண்டும்”, என்பதை தன்னல பேர்வழிகளுக்கு உங்களின் செயலால் புரிய வைய்யுங்கள் .

உங்களுக்கு கொஞ்சம் பதட்டமாக உள்ளதா…புரிகிறது. ‘மக்களின் குரல்’ என பெருமையாய் விளம்பரம் செய்யும் ஊடங்கங்களை உங்களின் குரலை மதித்து, அதற்கு தேவையான வேளைகளில் ஈடுபடச் சொல்லுங்கள்.

“இல்லமா….யோசிச்சு பாத்தோம்; இதெல்லாம் வேலைக்கு ஆகாது. எதித்து கேள்வி கேட்டா தேவை இல்லாத பிரச்சனை வரும்”, என தலைவிதியை துணைக்கு அழைக்கப் போகிறவர்களுக்கு, “ஒன்னும் பிரச்சனை இல்லங்க….நீங்க எதுவும் எத்தனிக்காத வரைக்கும், பதிவோட ஆரம்பத்துல இருக்கற ஒளிப்பதிவுல என்னிக்கும் ஒரு மோடியோ, விஜயகாந்த்தோ, ஜெயலலிதாவோ இருக்க மாட்டாங்க. அதெல்லாம் மேற்குல மட்டுமே நடக்கற ஒரு விஷயமா இருக்கும்”.

இந்திய அரசியலை அவ்வப்போது கவனிப்பவர்கள் 2007இல் வெளிவந்த இந்த ஒளிப்பதிவை பார்த்திருப்பர் . இது 2002இல் கோத்ராவில் நடந்த சம்பவம் பற்றி தெஹெல்கா பத்திர்க்கை ரகசியமாக பதிவு செய்த ஒளிப்பதிவுகள் .

2002இல் கோத்ராவில் நடந்த ரயில் தீவைப்பிற்கு பழி வாங்குவதாய், ஜன்சேவக் ஹிந்து வெறியர்கள், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை உயிருடன் எரித்த சம்பவம் இது. அந்த கோரச் செயலை வழி நடத்திய பாபா பஜ்ரங்கின் பெருமை ததும்பும் ‘வாக்குமூலம்’ இந்த ஒளிப்பதிவு

இது போன்றே ஒரு ரகசிய ஒலிப்பதிவு நம் ஜகஜால இயக்குனர் சங்கருடன் செய்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன்…கற்பனை இனி பதிவாக…

ஷங்கரின் இல்லத்திற்கு வெளியில்,

“எதுவும் பயப்படாத…ஏற்கனவே நீ இன்னிக்கி புது assistantஆ வரப் போறன்னு அவனுக்கு தெரியும். சாதரணமா உள்ள போ, பேச ஆரம்பி, நல்லா நம்பிட்டான்னு தெரிஞ்சதுக்கு அப்பறம், மெதுவா உன் கெள்விகள ஆரம்பி”, என ஒலிநாடாக்களை சரி செய்துக் கொண்டிருந்தவர்கள் ஆறுதல் கூற,

“பயமெல்லாம் ஒன்னும் இல்லப்பா…ரொம்ப நாளா எதிர்பாத்த ஒரு விஷயம் இது; உணர்ச்சிவசப்பட்டு கை ஓங்கிடுவேனொன்னு தான்”, என ஷங்கரின் வீட்டினுள் நுழையத் தயாராகும் கண்ணன் கூறினான்.
சட்டையினுள் இருந்த ஒளிப்பதிவு செய்யும் இயந்திரத்தை சரி செய்தபடி, ஷங்கர் வீட்டின் வாழறையை அடைந்தான் கண்ணன்.

“சார்”, எனக் கூறியபடி, வாழறையில் ஏதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த ஷங்கர் அருகே சென்றான்.
“யாருப்பா….வாசல்ல செக்யூரிட்டி இல்ல?”, என வாசலை நோக்கி பார்வையை திருப்பினான் ஷங்கர்.
“இல்ல சார்…நான் தான் கண்ணன்; நேத்து போன்ல உங்க assistant கிட்ட பேசி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கினோம். இன்னிக்கி 1 மணிக்கு வரச் சொன்னாங்க”, என கண்ணன் எடுத்துரைக்க,
“ஓ …நீ தானா அது. என்ன விஷயம்? 45 நிமிஷத்துக்கு மேல நேரம் ஒதுக்க முடியாது. அடுத்த பட வேலையெல்லாம் தலைக்கு மேல இருக்கு”, என ஒரு அவசரம் கலந்த குரலில் பதிலளித்தான் ஷங்கர்.

“இல்ல சார்…உங்க ஐ படத்த நாலாவது தடவையா இன்னிக்கி பாத்தேன். என்ன படம் சார்…எப்படியாவது மீட் பண்ணி பாராட்டனும்னு முடிவு பண்ணினேன். அது சம்பந்தமா ரெண்டு நிமிஷம் பேசிட்டு என் நடைய கட்டுவேன். அப்பறம் இன்னொரு நாள்…உங்கள இம்ப்ரெஸ் செஞ்சு, assistant சான்ஸ் கேக்கலாமுனு…”, என தலையை சொரிந்தான் கண்ணன்.

ஒரு பெருமிதம் கலந்த சிரிப்புடன், “அது இல்லப்பா…என்ன பேர் சொன்ன, கண்ணன்…இன்னிக்கி அடுத்த படத்தோட கதை டிஸ்கஷனுக்கு assistant ரெண்டு பேர வரச் சொல்லி இருக்கேன். ஐ படத்துக்கு மக்கள் கிட்ட வரவேற்பு பெருக, பெருக, producers கிட்ட இருந்து அடுத்த படத்துக்கான ப்ரெஷரும் பெருகீட்டே போகுது. மீட்டிங்க்கு இன்னும் ஒரு 45 நிமிஷம் இருக்கு…நீ சொல்லு”, என புகழாரத்திற்கு அலைவது தெரியாதது மாதிரி அலைந்தான் ஷங்கர்.
“என்ன படம் சார் அது….மெரிசலாயிட்டோம் நாங்க. படத்துல பெஸ்ட் சீன் எதுன்னு பட்டியலிட ஆரம்பிச்சு, படத்துல இருக்கற எல்லா சீனயும் எழுதிட்டோம்னா பாருங்க. ஏமி ஜாக்சன் தான் இனி பசங்களோட கனவுக் கன்னி…அவங்க நெஜமாவே அவ்வளவு அழகா, இல்ல அதுவும் உங்க கைவண்ணம் தானா?”, என முதல் ஐஸ் கட்டி இறக்கினான் கண்ணன்.
தொலைப்பேசியில் யாரிடமோ பேசி, இருவருக்கும் காபி கொண்டு வரும்படி கூறிவிட்டு, “போட்ட கதாநாயகியையே திரும்ப திரும்ப போட்டா, நம்ம படத்துக்கான தனித்துவம் கொறைஞ்சிடுமே. அதுதான், ஒரு foreign பொண்ண இந்த தடவை use பண்ணலாமுன்னு”, என பல்லிளித்தான் ஷங்கர்.
“அப்பறம் அந்த ரஜனி ஐடியா எப்படி தோணிச்சு? அதுதான் படத்துல நெத்தியடி”, என அடுத்த அம்பை தொடுத்தான் கண்ணன்.

“செம பஞ்ச்ல அது…அதுல இருக்கற காமெடிய ரசிக்காம, “எங்கள எப்படி ஷங்கர் நக்கல் பண்ணலாம்”…அது இதுனு கூச்சல் போடுதுங்க. ஐ படத்த பாக்காத நெறைய பேருக்கு இவங்க போட்ட கூச்சலுக்கு அப்பறம் தான் இது மாதிரி காமெடி இருக்குனு தெரிய வந்துச்சு. அதுக்கெல்லாம் ரோஸ் வகையறாக்கு தான் thanks சொல்லணும்”, என பெருமூச்சு விட்டான் ஷங்கர்.

இந்த உரையாடலை வெளியில் ரகசிய ஒளியேற்றி (microphone) வழி கேட்டுக்கொண்டிருந்த கண்ணனின் கூட்டாளிகள், எந்த வித ஆச்சரியமோ, கோபமோ வெளிப்படுத்தாமல், அடுத்த கேள்விக்கு காத்துக் கொண்டிருந்தனர்.

“ஆனா உங்களுக்கு அமைஞ்ச நடிகர்களோட wavelength பக்காவா மேட்ச் ஆச்சுல…இல்ல விக்ரம் ஏதாவது எதிர்ப்பு தெரிவிச்சாரா?”, என முகத்தை ‘சீரியஸ்’ ஆக வைத்தபடி அடுத்த கேள்விய முன்வைத்தான் கண்ணன்.
“எதிர்ப்பா…காமெடியா பண்ற…? ரெண்டு மூணு எடத்துல அவரே improvise பண்ணினாரு. சந்தானம் தம்பி தான் செம காமெடி. அந்த ‘ரூம் 9’ காமெடி எல்லாம் அந்த தம்பியோடது தான். தியேட்டர்ல கன்னாபின்னான்னு விசில் சத்தம் பறந்துச்சு”, என 1000 வாட் பல்பு கணக்கில் முகம் மலர பெருமிதம் அடைந்தான் ஷங்கர்.

“அது எப்படி சார் கரெக்டா audience எதுக்கு சிரிப்பாங்கனு தெரிஞ்சு காமெடி track எழுதறீங்க? சிவாஜி படத்துல கருப்பான பொண்ணுங்கள கிண்டல் அடிக்கறது ஆகட்டும், பாய்ஸ் படத்துல பொதுவா பொண்ணுங்கள கிண்டல் செய்யறது ஆகட்டும், இப்ப ஐ ல திருநங்கைகள ஆகட்டும், எல்லாத்துக்கும் தியேட்டர் அப்படியே அதிருது. அதுக்கான secret என்ன சார்?”, என கூர்ந்து கவனித்தபடி அடுத்த கேள்வியை முன்வைத்தான் கண்ணன்.
“அய்யய்யே secret எதுவும் இல்ல…சமூகத்த புரிஞ்சு வச்சிக்கறது தான் அதுக்கு மெயின் காரணம். இப்ப பாரு….ஆண்-பெண் சமம் எல்லாம் சரியான பேத்தல். அத சீரியஸா எடுத்துக்கற பசங்கள, வெரல் விட்டு எண்ணிடலாம். பெரும்பாலான ஆம்பள பசங்க…ஒரு பொண்ணுனா அவனுக்கு கட்டுபட்டுத் தான் இருக்கணும்னு நினைக்கறானுங்க; சடனா அவன் வேலைலயும், ஸ்கூல்லயும், காலேஜ்லயும், அவன விட ஒரு பொண்ணு நல்லா வர்றத பாக்கறான். அவள தோக்கடிக்க அறிவோ, வாய் சாதுரியமோ அவனுக்கு இல்ல. அதுதான் படங்கள்ல அவள நக்கல் பண்ணும் போது, வயிறு வலிக்கற மாதிரி சிரிக்கறான். அது அவன் வைத்தெரிச்சலோட வெளிப்பாடு மட்டும் தான். ஒன்னு சுய புத்தி இருக்கணும்…இல்ல சொல் புத்தி இருக்கணும்.
அவனோட அந்த mindset தப்புன்னு உணர்த்த யாரும் இல்ல. அப்பன்காரனும் சேர்ந்து சிரிக்கிறான்; அவன் அம்மாவுக்கு சமையல் கட்டுல அடுத்த வேளை சாப்பாடு பத்தின தீவிர சிந்தனை.இந்த நெலை மாறாம இருக்கற வரைக்கும் என் கல்லா நெறைஞ்சுகிட்டே தான் இருக்கும்.

கருப்பா இருக்கற பொம்பள புள்ளைங்கள கிண்டல் பண்றதுக்கும், சமூகத்தோட வரவேற்பு இருக்கு. கருப்பா இருக்கறது கேவலமுனு காலகாலமா லேடீஸ்க்கு கற்பிக்கப் பட்டிருக்கு. புருஷனோ, அம்மா அப்பாவோ, கலர் பத்தி எல்லாம் கவலை படாதனு சொன்னா கூட, சமுதாயமும் மீடியாவும் அவள அத ஏத்துக்க விடாது. அவளே அத உணர்ற வரைக்கும், fair & lovelyயும், fairever கிரீமும் மார்க்கெட்ல கொடிகட்டிப் பறக்கும்.

இந்த நெலமைல, கலர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கற பொண்ணுங்க…”அப்பாடா…நான் அப்படி கருப்பா இல்ல”னு நினைச்சு சந்தோஷப் படறாங்க. அதுதான் கருப்பான பொண்ணுங்கள கிண்டல் அடிக்கும் போது, அவங்களுக்கும் அந்த கேவலத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி சிரிக்கிறாங்க. பசங்கள பத்தி கேக்கவே வேணாம்… பொண்களோட எந்த qualityய கிண்டல் அடிச்சாலும் தனக்கே கெடைச்ச வெற்றி மாதிரி சிரிப்பானுங்க. இந்த நெலை சீக்கிரம் மாறும்னு நினைக்கற?? No chance!
அப்ப அவங்க மாற மாட்டாங்க….நான் மட்டும் ஏன் என் அப்ரோச்ச மாத்திக்கணும்?”, என ஒரு முழு நீள விளக்கத்தை தந்து முடித்தான் ஷங்கர்.

அந்த விடையினை சற்றும் எதிர்பார்க்காத கண்ணன், “என்ன சொல்றதுனே தெரியல சார்…அப்ப ஒரு நாள் மக்கள் மாற ஆரம்பிச்சா, உங்க காமெடி டிராக்ஸ்க்கு தீவனம் இல்லாம போயிடாது??” என அடுத்த கேள்வியை எழுப்பினான்.
“அது அப்படி மாறும்போது…கவலைப்பட வேண்டிய விஷயம். அப்ப ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் எடுக்கறத இன்னும் கொஞ்சம் இழுத்து, 3 வருஷம் ஆக்கிட வேண்டியதுதான்”, என சாதரணமாக விடை அளித்தான் ஷங்கர்.

“”மக்கள் அவன் படத்த விரும்பி வந்து பாக்கறாங்க….அப்ப அதையே ஒரு நல்ல வாய்ப்பா பயன்படுத்தி, முற்போக்கு கருத்துக்கள சொல்ல முயற்சிக்கலாம்ல”…நான் இல்ல சார், எங்க க்ரூப்ல ரெண்டு மூணு பேர் சொல்ற கருத்து இது”, என அடுத்த குற்றச்சாற்றை முன்வைத்தான் கண்ணன்.
“அந்த பசங்கள மட்டும் assistant வாய்ப்புக்கெல்லாம் கூட்டிகிட்டு வந்திராத…பொழைக்க தெரியாத பசங்களா இருப்பாங்க போல. நான் இந்த தொழிலுக்கு வந்தது பணம் பண்ண…மக்கள திருத்தறதுக்கு இல்ல. இது மாதிரி societyல இருக்கற சண்டை சச்சரவு தான்…என் படங்களுக்கு தீனி போடுது. அத போய் சரி பண்ண சொல்ற. அதுதான் படத்துக்கு படம் ஒரு மெசேஜ் சொல்றேன்ல”, என ஒரு வெறுப்பு கலந்த குரலில் பதிலளித்தான் ஷங்கர்.

“ஆனா அதெல்லாம் பொது மக்களுக்கு எந்த விதத்துல உதவுதுன்னு நினைக்கறீங்க? லஞ்சம் வாங்கினா, இந்தியன் தாத்தா வந்து உயிர எடுப்பாரு, சட்டத்துக்கு புறம்பா செயல்பட்டா, அந்நியன் வந்து சாவடிப்பான்னு சொல்றதெல்லாம், கொழந்தைங்க கிட்ட, “சோறு தின்னலனா பூச்சாண்டி வந்து புடிச்சிட்டு போவான்”னு அம்மாக்கள் சொல்ற மாதிரி இருக்கே. இதுனால பயன் அடைஞ்சது என்னவோ, அந்த படத்த எடுத்த நீங்க, அதுல நடிச்சவங்க அப்பறம் அந்த படத்த தயாரிச்சவங்க. பைசா குடுத்து பாக்க வந்த மக்களுக்கு உறுப்படியா எதுவுமே கெடக்கலியே”, என கொந்தளித்தான் கண்ணன்.
“அதுதான் சொல்லிட்டேன்ல பிசினஸ் பண்ண வந்திருக்கேன். எது சொன்னா வண்டி ஓடுமோ, அத லாவகமா பயன் படுத்தறேன்…மக்களும் அது போதும்னு சொல்ராங்கல…”, என கூறும் போதே, சற்று யோசித்தபடி, “அமாம் நீ சடனா மாறிட்ட மாதிரி பேசற தம்பி…என்ன நடக்குது இங்க?”, என உயர்த்திய புருவத்துடன் வினவினான் ஷங்கர்.

“இனி எனக்கு சொல்றதுக்கு ஒன்னும் இல்ல சார். நீங்கதான் எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சுட்டீங்களே. இனி இத மக்களுக்கு கொண்டு போய் எப்படி சேக்கறதுனு யோசிக்கணும். அவங்க அத பொருட்படுத்துவாங்களா தெரியல; ஆனா உங்கள மாதிரி, “அவங்க திருந்தட்டும்…அப்பறம் பாத்துக்கலாம்”னு சொல்ல மாட்டோம். நூத்துல ஒரு ரெண்டு பேர் கேட்டாலும், எங்க முயற்சிக்கு கெடைச்ச வெற்றியா நினைப்போம் சார்”, என கூறியபடி சட்டையினுள் மாட்டப் பட்டிருந்த ஒலியேற்றியை கழற்றினான் கண்ணன்.
என்ன நடக்கிறது எனப் புரியாமல், குழம்பிய ஷங்கர், “டேய் நாதாரி நாயே…நில்லு டா. செக்யூரிட்டி இப்ப பாத்து எங்கடா போன…அவன நிறுத்துடா”, என கூவி முடிப்பதற்குள், கண்ணனின் நண்பர்கள் வண்டியை கிளப்பினர்.