மார்ச், 2015 க்கான தொகுப்பு

திருமணம், திருமணத்தில் அமையும் கணவன் மனைவி உறவு…இவைகள் என்றோ ஒரு முறை நகைச்சுவையாய் கிண்டல் அடிக்கப்படும் போது , உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைக்கும். அதுவே, நகைச்சுவை என்றாலே திருமணங்களை கிண்டல் செய்வது தான், என்றாகும் போது, சற்று அதிகமாகவே சலிப்பு தட்டுகிறது.

திரைப்படங்களில் மட்டும் அல்லாது, whatsapp, facebook என அனைத்து சமூகத்தளங்களிலும்…அவை உலா வரும் போது , “திருமணம் என்ற ஒரு உறவு, நையாண்டி செய்யப் படக் காராணம் யார்”, எனக் கேட்கத் தோன்றுகிறது.
யோசித்து பார்த்தால், அந்த மாதிரியான ‘காமெடி’ காட்சிகளுக்கு சிரிப்பவர்கள் பெரும்பாலும், தம் தரப்பிலிருந்து, அவர்களின் திருமணம் வெற்றி அடைய முயற்சிகள் எதுவும் எடுக்காதவர்களே.
இந்த பதிவு, நம் ஊரில் நடக்கும் திருமணம் என்ற சடங்கில் இருக்கும் கேவலங்கள் என்ன, மேற்கில் அதற்கு ஒரு மாற்றுச் சடங்கு உள்ளதா, என வாதிக்காது. தான் விரும்பிய படிப்பைப் படித்து, தனக்கு விருப்பமான வேலையில் இருந்தும் கூட, நம்மூரின் சிலரால், தம் மண வாழ்க்கையை தம் விருப்பத்திற்கு ஏற்ப ஏன் மாற்றிக்கொள்ள முடிவதில்லை என்பது பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி. பதிவு சற்று நீளமாகிவிடும் என்பதனால், ஒவ்வொரு காரணமாக எடுத்துக்கொண்டு, பதிவுத் தொடர் ஒன்றை கொடுக்க விரும்புகிறேன்.

>> “பெரியவங்க பேச்சுக்கு மரியாதை குடுக்கணுமா வேண்டாமா ..?”

21 வயது கடந்தவர்களுக்கு நாட்டை யார் ஆள வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை அளிக்கப் படுகிறது. ஆபாசமோ, வன்முறையோ…திரைப்படங்களில் இடம்பெறும் போது, அதை ஆராய்ந்து உட்கொள்ளும் சுதந்திரமும் ‘adults’ என அழைக்கப் படும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப் படுகிறது.
அதுவே ஒரு குடும்பச் சூழலில் வரும் போது , பெண்ணுக்கோ ஆணுக்கோ அந்த ‘adult’ பதவி வழங்கப் படுவதில்லை.

பள்ளிப் பருவத்திற்குப் பிறகு படிக்க வேண்டுமா வேண்டாமா, ஆசைப் பட்டால் என்ன படிக்க வேண்டும், திருமணம் வேண்டுமா வேண்டாமா, வேண்டுமெனில் எந்த வயதில் செய்துக் கொள்ள வேண்டும், யாரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் அவசியமா, பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், எந்த வயதில் பெற்றுக் கொள்ள வேண்டும், எத்தனை பெற்றுக்கொள்ள வேண்டும் மாதிரியான ஒரு ஆணோ பெண்ணோ அவர்கள் விருப்பத்திற்கு மட்டும் ஏற்ப எடுக்க வேண்டிய முடிவுகள், பெரும்பாலும் பெற்றோர்களால் மட்டுமே முடிவு செய்யப் படுகிறது.
அதற்கு கொடுக்கப் படும் ‘விளக்கங்கள்’ பல…

“புடிச்ச பொம்மையும், புடிச்ச சைக்கிளும் வாங்கிக்கொடுத்த அப்பாக்கு உனக்கு புடிச்ச மாப்பிள்ளைய பாக்க தெரியாதா”?

“பெத்தெடுத்து, படிக்க வச்சிருக்கோம்…இது வரைக்கும் ஒன்னும் கொறை வைக்கலியே. இப்ப என்ன புதுசா, “நான் பாத்துக்கறேன்”னு சொல்ற?”

“ஒவ்வொரு வரனையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா…நீ ஆசைபடும் போது , ஒரு நல்ல வரன் கெடைக்காது”

“என்ன செட்டில் ஆகணும்…செட்டில் ஆகணும்னு பொலம்பிகிட்டு இருக்க? நானும் உன் அப்பாவும் அப்படி நெனைச்சிருந்தா, நீங்க பொறந்திருக்கவே மாட்டீங்க. ஏனா இன்னிக்கி வரைக்கும் ஒரு சொந்த வீடு கெடையாது. சம்பாதிச்சத எல்லாம் உங்க படிப்புக்கே செலவழிச்சாச்சு”

“உன் கூட படிச்சவங்க எல்லாம் கல்யாணம் ஆகி, ரெண்டு கொழந்தைங்க வச்சிருக்காங்க…நீ என்னனா, பாத்துக்கலாம், பாத்துக்கலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்க”

“உங்க ஆசை இருக்கட்டும்…எங்களுக்கு பேரன் பேத்திய கொஞ்சனும்னு ஆசை இருக்காது? நம்ம வம்சம் தழைக்க வேண்டாமா?”

இப்படியான ’emotional blackmail’ வசனங்களை கேட்கும் போது, “நெஜமாவே உங்க புள்ள பாசத்துக்கு அர்த்தம் தான் என்ன”, என கேட்கத் தோன்றுகிறது.

“அவங்க விருப்பப் படி dress போடட்டும், friends கூட நல்லா கும்மாளம் அடிக்கட்டும்…இதுக்கு மேல என்ன சுதந்திரம் வேணும்? அந்த புள்ள மேல பாசம் இருக்கறதுனால தான, என்ன வேணும்னாலும் வாங்க காசு குடுக்கறேன்”, என்ற ‘புள்ள பாசம்’ பொருள் விளக்கம் சற்று நெருடலாகவே உள்ளது.
“அவங்களுக்கு புடிச்சதெல்லாம் வாங்கித் தரோம். அப்ப எங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கணும், கொழந்தை பெத்துக்கனும்னு ஆசை படறதுல தப்பென்ன”, என நீங்கள் கூறுவது,
“புல்லு கட்டும், தீவனமும் போட்டு வளக்கறேன்…பலி குடுக்கறது என் உரிமை”, போன்றுள்ளது.

emotional blackmailக்கு ஆயுதமாய் பயன்படுத்தப்படும் இன்னொரு பயங்கரமான ஆயுதம், பெற்றோரின் அழுகை.
அதன் கூட,

“ஒரு வேளை சோறு கூட வீட்டுல இருக்காது…ஆனா பையன் பசி தாங்க மாட்டான்னு, கடன ஒடன வாங்கி வடிச்சு போடுவேன்”

“அப்பா ஒரு ஓட்டை சைக்கிள் வச்சிருந்தாரு. ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கினது கெடையாது. ஆனா பொண்ணு கூட்ட நெரிசல்ல காலேஜ் போறாளேனு வண்டி வாங்கிக்கொடுத்தோம்”

“கல்யாணம் காட்சிக்கு போனா…அவ அவ பாட்டி ஆயிட்டேன், பொண்ணு பிரவசத்துக்கு வந்திருக்கான்னு அளக்கறா. நான் அவங்க முன்னாடி வாய மூடிட்டு இருக்க வேண்டியிருக்கு.”

சமூகத்தின் ‘கெட்டப் பெயரை’ சம்பாதித்துவிடக் கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் செயல்படும் பெற்றோரிடம், வாய் திறந்து பேசவோ, விளக்கவோ முயற்சிக்காத போது, பதிவின் துவக்கத்தில் கூறப்படும் ‘சண்டை சச்சரவு நிறைந்த திருமணங்கள்’, ‘உற்றார் உறவினருக்காக குழந்தைகள்’ போன்ற கசப்பான நிகழ்வுகள் நிதர்சனம் ஆகும்.

இவ்வாறு சமூகத்தின் தேவைகேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கணவன் மனைவியரே, திரைப்படங்களில் வரும் சிவகார்த்திகேயன்கள், சூரிகளின் ‘காமெடி’களுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
“ஏதோ…நாம மட்டும் அவதி படல. கல்யாணம் பண்ணிட்டவன் எவனுமே இந்த நெலமைல தான் இருக்கான்”, என தங்களை திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம்?