அந்த இனம் புரியாத பயம்:

“எங்க அனு …கொழந்தை எல்லாம் ஆனதுக்கு அப்பறம் பார்ட்டி எல்லாம் no chance. மனிஷனுக்கு குளிக்க டைம் கெடைச்சா…அதுவே பெரிய விஷயம்”
“இல்லப்பா நான் வரல…கொழந்தைக்கு பால் ரெடி பண்ணனும், நேரத்துக்கு தூங்க போடணும். இன்னொரு 5 வருஷம் கழிச்சு வேணும்னா பாக்கலாம்”
“தண்ணியா…காமெடி கீமடி பண்றியா அனு? கொழந்தை எப்ப வந்ததோ, அப்பவே என் ‘கொ.மு’…அதாவது கொழந்தைக்கு முந்தைய லூட்டி எல்லாம் மூட்டை கட்டியாச்சு”
இவை தாய் பதவி ஏற்ற என் தோழிகளின் புலம்பல்கள். பலவேறு காரணங்களுக்காக குழந்தையின் வரவை ஒத்தி வைத்திருந்தாலும், கூடுதலாக இந்த புலம்பல்கள் ஒரு இனம் புரியாத பயத்தை நிச்சயம் உண்டாக்கியது.
குழந்தையின் சிரிப்பு, அதன் மழலை போன்ற அழகு நிறைந்த விஷயங்களை பார்க்க, எனக்கு பிடித்தமான விஷயங்களில் நேரம் செலவழிப்பதை குறைத்துக் கொள்ள அல்லது முற்றிலுமாய் நிறுத்திக் கொள்ள வேண்டும் என யோசித்த போதே வயிற்றை பிரட்டியது.

பெண்ணியம் பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்னமே, பள்ளி படித்த காலத்தில், ஒரு பொருளற்ற நெருடலாய் இருந்த விஷயம்…நம் ஊரில் தாய்மார்கள் அழைக்கப்படும் விதம். எங்கள் காலனியில் பரணியின் தாய் பரணி அம்மா, என் தாய் அனு அம்மா, ஜவஹரின் தாய் ஜவஹர் அம்மா என்றும் அழைக்கப் பட்டனர். மேலோட்டமாக பார்த்தால், “இதுல என்ன இருக்கு” என தோன்றிடினும், ஒரு பெண்ணின் அடையாளம் இன்னொரு முறை அவளிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டதோ என தோன்றுகிறது. திருமணம் முடிந்த பின் ‘திருமதி.பழனிச்சாமி’, திருமதி.முருகன் என அழைக்கப்படும் பெண், குழந்தை பிறப்பின் பின், ‘இன்னாரின் அம்மா’, ‘இன்னாரின் தாய்’ என அழைக்கப்படுவது, அந்த பெண்ணை, கூட இருப்பவர்களை சார்ந்த ஒரு பொருளாய் மட்டுமே பார்ப்பது போல் தோன்றுகிறது.
என் திருமணத்திற்குப் பிறகு, பெயருக்குப் பின் கணவன் பெயரை இணைக்கவோ, பெயருக்கு முன் ‘திருமதி’ பட்டத்தை இணைத்துக் கொள்ளவோ நிர்பந்தம் ஏற்படவில்லை.
அப்படி இருக்க, தாய் என்ற பொறுப்பு வந்த உடன், என் அடையாளம் தொலைந்துவிடுமோ என்ற பயம் மட்டும் பின் மண்டையில் ஓடிய வண்ணமே இருந்தது.

திறனின் வருகை:

மிகுந்த மகிழ்ச்சியுடன், திறனின் வருகை நடந்தது. குடும்பத்தில் புது வரவாக இருந்த போதிலும், வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே, பசக்கென எங்களில் ஒருவனான். அவன் வருகைக்கு காத்துக் கொண்டிருந்த போது, வேலையில் இருந்தவர்கள், குழந்தை வளர்ப்பு டிப்ஸ் கொடுத்ததோடு, ‘காரணம் எதவும் இன்றி கூட குழந்தைகள் அழும்’ என ‘heads up’ வழங்கினர். இருந்த போதிலும், சில சமயங்களில் அவனின் அழுகையை பார்த்து, “இல்லங்க…நல்லா பாருங்க, பையன் பொறக்கும் போது , கூடவே ஏதாவது குறிப்பு புத்தகம் வந்திருக்கும். எடுக்க மறந்துட்டீங்களா?”, என மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்கலாமா என தோன்றியதுண்டு.
ஆனால்….அழுகை என்னும் புரியாத புதிருக்கு, திறனின் அம்மா அப்பாவாக விடை கண்டுப்பிடிப்பது, அழகிய பொழுதுபோக்காக மாறியது ஒரு இன்ப அதிர்ச்சி!
முதல் 3-4 வாரங்கள், குழந்தையின் தேவைகளை புரிந்துக் கொள்வது, தாய்ப்பால் கொடுத்து பழகுவது என நகர்ந்தது.

திறனின் வரவுக்குப் பின் நான்…

வேலை, நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது, கணவனுடன் திரையரங்கில் படங்கள் பார்ப்பது என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், வெளியில் சுற்றித் திரிந்த நான், 3 வாரங்கள் வீட்டிலியே அடைந்து கிடந்தது…சற்று நெருடலாகவே இருந்தது. அந்த நெருடல் ஓரிரண்டு முறை….கண்ணீராகவும் வெளி வந்தது (ஆனால் எதற்கு அழுகிறோம் என்று புரியாமலே!)
இந்த மனப் புழுக்கத்தை சரியாய் உணர்ந்த ராஜ் (என் கணவன்), திறனை என் பெற்றோரிடம் விட்டுவிட்டு, மகிழுந்தில் ஒரு சுற்று அழைத்துச் சென்றான். வெளியில் வந்த அந்த தருணம்….4 வாரங்கள் எதை தவற விட்டேன் என்பதை உணர்த்தியது. அந்த நேரம் என் அம்மா கூறிய நம் ஊரின் ஒரு வினோத பழக்கம் நினைவுக்கு வந்தது. குழந்தை பெற்றெடுத்த உடன், அந்த தாயானவள், குழந்தையுடன் 6 மாதங்களுக்கு வீட்டினுள் அடைந்திருக்க வேண்டுமாம். அவளுக்கு வீட்டில் உள்ளவர்கள், வேளைக்கு உணவு அளிப்பார்களாம். அவளும் அதை உண்டுவிட்டு ,குழந்தைக்கு தாய்ப்பால் குடுத்துக் கொண்டு, காலத்தை கழிக்க வேண்டுமாம். 6 மாதங்கள் முடிந்து வரும் போது , அந்த பெண் ஒரு 3 மூன்று சுற்று பெருத்திருப்பாளாம். நம் ஊரில் இருந்த வரை ‘Post natal depression ‘என்பது ஒரு புரியாத ஒன்றாகவே இருந்தது. இங்கு மகப்பேறு வகுப்புகள் போனதின் விளைவாகவும், குழந்தை பெற்றெடுத்த காரணத்தினாலும், இதன் பொருள் நன்றாகவே புரிந்தது.
குழந்தைப் பிறப்பிற்கு பின், இப்படி ஒரு மனரீதியான பிரச்சனை பெண்ணுக்கு நிகழும், சரியான குடும்பச் சூழல் அமைந்து, அந்த பெண்ணின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போது , அந்த பிரச்சனை விலகி ஓடும், என்ற பல விஷயங்கள் எனக்கு விளங்கியது. அவைப் பற்றிய ஒரு பதிவு நிச்சயம் எழுதுவேன்.
அதுவரை…

அன்று மகிழுந்தில் சென்று வந்த உத்வேகமா தெரியவில்லை, சில பெற்றோர் கூறுவது போல், “ஒரு குழந்தை வந்த உடன், வாழ்க்கை அதைச் சுற்றித்தான்”, என்ற கருத்து எனக்கு ஏற்றதில்லை என முடிவு செய்தேன். midwifes எனப்படும் மகப்பேறு செவிலியர்கள் உதவியுடன், குழந்தை வளர்ப்பை சீர் படுத்த எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ‘குழந்தையை நிதமும் அதே சமயத்தில் தூங்கப் போடவேண்டும்’, ‘எல்லா அழுகையும் பசிக்கான அழுகை இல்லை’, ‘உணவு-விளையாட்டு-தூக்கம்’ என்ற வழக்கத்தை கடைப் பிடிக்கவேண்டும்’ போன்ற குறிப்புகள் கேட்கும் போது எளிமையாக இருந்த போதும், செயல் படுத்தும் போது, “என்னடா இது”, என கடுப்பாய் இருந்தது. ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதை செயல் படுத்திய உடன், எனக்கென செலவழிக்க நேரம் மெதுவாய் கிடைக்க ஆரம்பித்தது. குழந்தை பிறப்பிற்கு முன்னிருந்த அளவிற்கு இல்லை எனினும், இதோ இப்பொழுது இந்த பதிவு எழுத நேரம் கிடைத்தது. ராஜ் வீட்டில் இருந்த ஒரு நாள், முடியை குட்டையாய் வெட்டிக்கொள்ள செல்ல முடிந்தது. 3 வாரங்களுக்கு முன், திறனையும் அழைத்துக் கொண்டு, திரையரங்கில் ‘தனி ஒருவன்’ பார்த்தோம்.

அன்று மீண்டும் அந்த சின்ன வயதின் நெருடல் நினைவிற்கு வந்தது. என்னையும் மற்றவர், ‘திறன் அம்மா’ என அழைத்தால் கோபித்துக் கொள்வேனா என நினைத்தேன். இல்லையே…குழந்தை வரவின் பின், என் வேலையானது குழந்தை பரமாரிப்பு மட்டுமே என மாறி இருந்தால்….இந்த ‘பட்டம்’, நான் பயந்ததில் தவறே இல்லை என நிரூபித்திருக்கும். ஆனால், குழந்தை பிறப்பிற்கு முன் இருந்த வேலைப் பட்டியலில், இன்னொன்றாய் குழந்தை பராமரிப்பு சேர்ந்திருப்பதால், ‘திறன் அம்மா’…என்ற பட்டம், ஒரு பெண்ணாய் நான் ஏற்றுக்கொண்டிருக்கும் பலவேறு பணிகளில், ஒன்றிற்கு கிடைத்த முகவரியாக எடுத்துக்கொள்கிறேன். மிகுந்த பெருமையுடன்!

பின்னூட்டங்கள்
 1. கீதமஞ்சரி சொல்கிறார்:

  திறனின் அம்மா என்ற பெருமையுடன் அனுவாகவே இருக்க இனிய வாழ்த்துகள். நம் நாட்டில் குழந்தை வளர்ப்பு என்பது முற்றிலும் வித்தியாசமும் கூடுதல் சுமைதருவதுமான ஒன்று. குழந்தையின் போக்குக்கு நாம் போகவேண்டும் என்பார்கள். அழும்போதெல்லாம் பாலைக்கொடுக்கவேண்டும் என்றும் அதற்கு தூக்கம் வரும்போதுதான் தூங்கவைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி நம்மைச் செய்யவைப்பார்கள். அப்படி செய்யவில்லையென்றால் குழந்தை வளர்க்கத்தெரியவில்லை என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால் மேலை நாடுகளில் குழந்தைகள் வளர்க்கப்படும் விதமே தனி. அட்டவணை போட்டு உரிய நேரத்துக்கு உணவு, தூக்கம் என்று குழந்தைகளுக்குப் பிறந்ததிலிருந்தே பழக்கப்படுத்துவதால் நமக்கே நமக்கான நேரம் கிடைப்பது சாத்தியமாகிறது. குழந்தை வளர்ப்பும் எளிதாகிறது. புரிதலுள்ள கணவன் கூடுதல் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் அனு.

  • அனு சொல்கிறார்:

   நன்றிகள் கீதமஞ்சரி! உங்கள் பின்னூட்டத்தில் தமிழின் எளிமையும் தெளிவும் அழகு!

   //குழந்தையின் போக்குக்கு நாம் போகவேண்டும் என்பார்கள். அழும்போதெல்லாம் பாலைக்கொடுக்கவேண்டும் என்றும் அதற்கு தூக்கம் வரும்போதுதான் தூங்கவைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி நம்மைச் செய்யவைப்பார்கள்.//
   இவ்விரு கருத்துக்களையும் உண்மையே என நம்பி…நானும் அவதிப் பட்டுள்ளேன்! ஆனால், மகப்பேறு செவிலியர்களின் உதவியுடன், வெகு விரைவில் அது தவறென புரிந்து கொண்டேன்.

   //அட்டவணை போட்டு உரிய நேரத்துக்கு உணவு, தூக்கம் என்று குழந்தைகளுக்குப் பிறந்ததிலிருந்தே பழக்கப்படுத்துவதால் நமக்கே நமக்கான நேரம் கிடைப்பது சாத்தியமாகிறது. //

   ‘நமக்கென நேரம் கிடைப்பது’ என்பது…இக்கோட்பாட்டின் கடைசி பயன் என்று தான் கூற வேண்டும். பிறந்த குழந்தைக்கு, பசிக்கும், சோர்விற்கும், வித்யாசம் சொல்லத் தெரியாது. அனைத்துக்கும் அழுகையே அதன் தொடர்பாடலாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது, ஆராய்ச்சிகளின் விளைவாக, குழந்தை பராமரிப்பில், ‘உண் – விளையாடு – தூங்கு’ என்ற எளிதான விதியை பின்பற்ற சொல்கின்றனர். திறன் விஷயத்தில், இது 100% பெரும்பாலான சமயங்களில் சரியாகவே இருக்கும். விளையாடி முடித்தப்பின், அவன் அழுதால், என் தாய், “அவனுக்கு மீண்டும் பசிக்கிறது”, என கூறுவதை பொருட்படுத்தாமல், ஒரு அமைதியான இடத்துக்கு கொண்டு சென்று, 10 நிமிடங்கள் தாலாட்டு பாடிய உடன், ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்று விடுவான்.

   முதல் 3 மாதங்களுக்கு, குழந்தை 12 மணி நேரம் இரவு நேரத்தில் தூங்க வேண்டும்…ஏனெனில் அப்பொழுதுதான், அதன் மூளை வளர்ச்சி நடைபெறுகிறது என ஆராய்ச்சிகள் சொல்கிறது. குழந்தையின் நலனுக்கு ஒரு வழக்கம் நன்மை அளிக்கும் எனும்போது, அதை கடைப்பிடிப்பதே உச்சிதம் என எனக்கு படுகிறது. அந்த வழக்கத்தை செயற்படுத்தும் போது, நமக்கென நேரம் கிடைப்பது…நிச்சயம் ‘Bonus’ தான் 🙂 ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கும் போது, தொடக்கத்தில் இருக்கும் இடைஞ்சல் ஒரு இடைஞ்சலே இல்லை!!

   //அப்படி செய்யவில்லையென்றால் குழந்தை வளர்க்கத்தெரியவில்லை என்று முத்திரை குத்திவிடுவார்கள்.//

   என்ன கொடுமை இது! இதைவிட பெரிய கொடுமை இது… என் தோழி ஒருத்திக்கும் சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவளுக்கு உதவ அவள் அம்மா இந்தியாவில் இருந்து வந்திருந்தார். குழந்தை அழும் போதெல்லாம் பாலை கொடுத்து 4 மாதங்களை கழித்தனர். பின்னர் அவள் அம்மா ஊருக்கு திரும்ப, இவள் அந்த வழக்கத்தை தொடர்ந்தாள், குழந்தையின் புகைப்படம் ஒன்றை இந்தியாவிற்கு அனுப்பி இருந்தாள் . குழந்தை சற்று அதிகமாய் எடை போட்டிருப்பதை பார்த்து விட்டு, “சும்மா சும்மா பால குடுக்காத…அது தான் கொழந்தை இவ்வளவு குண்டா இருக்கு”, என என் தோழியின் தாய் கூறுகிறாள்!!!!

   எல்லா விஷயங்களையும் போல், குழந்தை வளர்ப்பிலும், நான் படித்து, கேட்டு சரியென படுவதை என் குழந்தைக்கு செய்வேன். ஒருவர் ‘அனுபவசாலி’ என்பதனால், அவர் கூறுவதை, கண்மூடித்தனமாக பின்பற்றமாட்டேன்.

 2. கீதமஞ்சரி சொல்கிறார்:

  மறுமொழிக்கு நன்றி அனு. காலத்துக்கேற்றாற்போல் அனுபவங்களும் மாறிக்கொண்டே இருப்பதால் அனுபவசாலிகள் சொல்வதையெல்லாம் நாம் அப்படியே பின்பற்றவேண்டுமென்னும் அவசியம் இல்லை. உண்மையே.. வாழ்த்துகள் அனு.

 3. வேகநரி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.
  //என் தோழி ஒருத்திக்கும் சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவளுக்கு உதவ அவள் அம்மா இந்தியாவில் இருந்து வந்திருந்தார்.//
  அதற்காக அம்மா இந்தியாவில் இருந்து வந்திருக்கார் இப்படி தகவல்கள் தான் நானும் அறியபெற்றதுண்டு.
  நீங்க இப்போ உடற்பயிற்ச்சி சென்ரருக்கு தொடர்ந்தும் செல்கிறீர்களா?

  • அனு சொல்கிறார்:

   //நீங்க இப்போ உடற்பயிற்ச்சி சென்ரருக்கு தொடர்ந்தும் செல்கிறீர்களா?//

   ஆமாம்ங்க…கொழந்தை பொறந்து ஒரு 6 வாரம் வரைக்கும் ஒன்னும் செய்யல. ஆனா இப்போ நடக்கறது, கொஞ்சம் ஓடறது, கொஞ்சம் எடை தூக்கறதுனு, மெதுவா ஆரம்பிச்சிருக்கேன் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s