Posts Tagged ‘இங்கிலீஷ்’

இத பத்தி எழுதனும்னு பல தருணங்கள்ல தோணி இருக்கு. ஆனா பூனை குறுக்குல வந்திருக்கும் இல்ல சகுனம் சரி இல்லாம போயிருக்கும்; எழுதற வாய்ப்ப நழுவ விட்டிருப்பேன். இதெல்லாம் நம்ப மாட்டீங்கன்னு நம்பறேன். சோம்பேறித்தனமே தவற வேற ஒன்னும் இல்ல.

நேத்து மீனா கந்தசாமியோட tweet ல இருந்த ஒரு குறும்படம் பாத்தேன். அப்ப திரும்பவும் ஒரு பொறி கெளம்பிச்சு. இப்ப ஜோதியா கொழுந்து விட்டு எரியுது.
ரொம்ப ஓவரா இருக்குல…சரி விஷயத்துக்கு வரேன். இந்த தமிழ் தெரிஞ்சும் ஆங்கிலத்துல உயிரை வாங்கற ஜீவன்கள பத்தி தான் எழுதனும்னு…

இத எழுத தூண்டிய பல மனிதர்கள்ல நம்ம ‘நீயா நானா’ கோபி பெரும்பங்கு ஆற்றுகிறார். அவரோட தமிழுக்கு நான் அடிமைன்னு சொல்லறதுல எனக்கு வெக்கமே இல்ல. அவ்வளவு அழகா, சரளமா கடைசி ரெண்டு நிமிஷம் பேசுவாரு பாருங்க…குப்பை தலைப்பா இருந்தாலும், அவர் பேசறத கேக்கறதுக்காகவே அந்த நிகழ்ச்சிய பாக்கலாம். சமீபத்துல அவர் பேச்சுல இருந்து கத்துக்கிட்ட ஒரு தமிழ் சொல்…’நகைமுரண்’. தமிழ்ல பேசும்போது ஒரு நாள் கூட ‘irony’னு சொல்லறோமே…அதுக்கு தமிழ்ல என்ன சொல்லனும்னு யோசிச்சதே இல்ல.

நல்லா தமிழ்ல பேசிகிட்டு இருக்கும் போது நடுவுல ஆங்கிலத்த திணிச்சு உயிரை வாங்குவாரு பாருங்க…அப்படியே பத்திக்கிட்டு வரும்!!
“இல்ல கோபி…அவன் அவன் பேச சான்ஸ் கெடைச்சா போதும்னு தத்தக்கா புத்தக்கானு ஆங்கிலத்துல பேசறான்னா..அவனுக்கு தமிழும் அரைகொறை ஆங்கிலமும் அரைகொறை; உங்களுக்கு தான் தமிழ் தலைகீழ் பாடமாச்சே…நீங்களும் ஏன் அந்த வீணா போன ஆங்கிலத்த பயன்படுத்த நினைக்கறீங்க?”,னு கேக்கத் தோணுது.

இந்த ஆங்கில மோகம் நம்ம ஊர போட்டு ஆட்டறத பாத்தா…ரொம்ப கவலையா தான் இருக்கு.

ரெண்டு வருஷம் முன்னாடி சென்னைக்கு போயிருந்தோம். அப்ப ‘Palimar’னு ஒரு உணவகத்துல சாப்பிட போனோம். நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட போறோம்னு அவ்வளவு மகிழ்ச்சி!!
‘Menu card’ பாத்து முடிவும் பண்ணினோம். ஆர்டர் எடுக்க வந்தவரு…ஆங்கிலத்துல வரவேற்கற்தும், ‘specials’ பட்டியல சொல்றதும்…
எனக்கு எரிச்சல்…சரி நமக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சாரு போலன்னு நான் சரளமா தமிழ்லியே பேசினேன். அவர் என்னடானா அந்த ஆங்கிலத்த விடராமாதிரி தெரியல. “சரி..முதலாளி சொல்லி இருப்பான்..அதுதான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆங்கிலத்துல பேசறாரு”னு freeயா விட்டுடோம்.
ஆனா, “என்ன கொடுமை சார் இது! ஏதோ தமிழ் தெரியாதவங்க கிட்ட ஆங்கிலத்துல பேசினா பரவாயில்லை; தமிழ் நல்லா பேசறவங்ககிட்டயும் ஆங்கிலத்துல கழுத்தறுக்கனுமா?”னு அந்த முதலாளிய விளாசனும் போல இருந்தது…

நாங்க இருக்கும் பகுதில அதிகம் வடஇந்தியர்கள் நடத்தற மளிகை கடைதான். இது வரைக்கும் போன எல்லா கடைகள்லயும் எங்கள பாத்த உடனே கல்லால இருக்கற அம்மாவோ அய்யாவோ ஹிந்தில டசுபுசுனு பேச ஆரம்பிப்பாங்க. ஹிந்தி எல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு ஆங்கிலத்துல பேசுவோம். எதுக்கு சொல்ல வரேன்னா…இவங்க இப்படி இருக்காங்க…நம்ம மக்கள் என்னடானா தமிழ் பேசறதயே ஒரு இழிவாவும், இங்கிலிஷ்ல பேசினாத்தான் ஒரு கெத்துனும் நினைக்கறாங்க!

இங்க அதிகம் பாக்கற இன்னொரு விஷயம், இந்திய குடும்பங்கள்…முக்கியமா நம்ம தென்னிந்திய குடும்பங்கள்ல வளரும் பசங்க, அவங்க அம்மா அப்பா கிட்ட ஆங்கிலத்துல தான் பேசுவாங்க. ஏன் அப்படி..தமிழ் இல்ல தெலுங்கு சொல்லி கொடுக்கலியானா, “எங்க அனு…ஸ்கூல்ல இங்கிலீஷ்லியே பேசி பழகுதுங்க…வீட்டுக்கு வந்தா அதே தான் continue ஆகுது”,னு அலுத்துக்கறாங்க.
என் கூட வேலை செய்யறவங்க…ரெண்டு மூணு பேற தவிர மத்தவங்க எல்லாம் வேற நாடுகள்ல இருந்து இங்க குடிபெயர்ந்த குடும்பங்கள சேர்ந்தவங்க. இங்கயே சின்ன வயசுல இருந்து படிச்சு வளர்ந்தாலும், வீட்ல என்ன பேசுவீங்கனா, “chinese”, “mandarin”, “french”, தான் சொல்லுவாங்க.

இப்ப உலகமயமாக்கம் தலை விரிச்சாடும் சூழ்நிலைல, அதுல பொழைக்கத் தேவையான ஆயுதங்கள்ல ஒன்னான ஆங்கில மொழிய தெரிஞ்சு வச்சுக்கறதுதான் யதார்த்தம்.
ஆனா ஆங்கிலத்துல பேசறது மட்டும் தான் ஒருவனின் அறிவ காட்டும்னு நினைக்கறாங்க பாருங்க…அது கட்டாயமா கண்டனத்துக்குரியது.
அப்படி பேசறவங்கள பாத்து, “டேய் கொஞ்சம் நிறுத்திக்கடா…ஏதோ உங்க அப்பன் ஆத்தா சம்பாதிச்சு conventலயும், matric இஸ்கூல்லயும் படிக்க வச்சதுனால மட்டும் தான் ஒரு ரெண்டு வார்த்தை இங்கிலிப்பிஸ் பேசறே; ஏதோ lotus பூல குந்திக்கிட்டு இருக்கற சாமி வந்து உன் நாக்குல பச்சை குத்தினா மாதிரி குதிக்கிற…அடங்குடா!!”னு சொல்லிட்டு பளார் பளார்னு கன்னத்துல குடுக்கணும் போல இருக்கு!
கோபி மாதிரி ஊடகங்கள்ல பிரபலமா இருக்கறவங்க, “ஆங்கிலம் என்பதும் தமிழ் மாதிரி ஒரு சாதாரண மொழி; அது தெரியலனா பெருசா எதுவும் நீ இழக்கல; படிக்கனும்னா இருக்கவே இருக்கு அதுக்கு வகுப்புகள், புத்தகங்கள்; ஆங்கிலத்த எங்க பயன்படுத்தனுமோ அங்க மட்டும் use பண்ணிட்டு…மத்த நேரங்கள்ல உன் மொழிய பேசப்பா”, போன்ற கருத்துக்கள அவங்க செயல்ல காட்டினா, மாறனும்னு நினைக்கறவன் மாறிட்டு போறான்.
அதே சமயத்துல நடிக்கிற almost எல்லா படங்கள்லயும், தமிழ இழிவா நினைக்கறவங்கள சாடறேண்டா பேர்வழினு, “மெல்ல தமிழ் இனி சாகும்”னு நக்கல் பண்ற கோஷ்டிகளோட பெருசா எனக்கு உடன்பாடில்ல.
“தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்”, மாதிரியான தமிழ்வெறி எல்லாம் தேவையில்லை;
ஏதோ “என் மக்களோட பேசி உறவாட, என் மொழி போதும்பா…வேற மொழிகள கொண்டு வந்து குட்டைய கொழப்ப விரும்பல”, மாதிரி ஒரு புரிதல் தலைதூக்கினா நல்லா இருக்கும்ல!!