Posts Tagged ‘கல்யாணம் முதல் காதல் வரை’

சமீபத்தில் பார்க்க ஆரம்பித்த தொலைக்காட்சித் தொடர்களில், என் மனதை வெகுவாகக் கவர்ந்தது ‘Orange is the Black’. பெண் கைதிகளால் நிரம்பிய ஒரு அமெரிக்க சிறைச்சாலையே இத்தொடரின் கதைக்களம்.

ORANGE

பெண்ணியத்திற்கும் தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அனைவரும் அறிந்த ஒன்றே. கணவன்(அ) காதலன் அன்பிற்கும் காதலுக்கும் ஏங்கித் தவிக்கும் அல்லது குடும்பங்களின் அடுத்த வாரிசை சுமக்கும் கருவியாகவும் மட்டும் உலா வரும் பெண்கள் சரமாரியாகக் கொட்டிகிடக்கும் ஊடகம் தமிழ் சினிமா. தொலைக்காட்சி தொடர்கள் ஒரு படி மேலே சென்று, சமயம் கிடைக்கும் போதெல்லாம் மாமியார் மருமகள் சண்டைகளை புகுத்தி விட மறப்பதில்லை. இது கூட பரவாயில்லை என நினைக்க வைப்பவை, இவூடகங்களின் பெண்ணியம் சம்பந்தமான கருத்துக்களும் கதாபாத்திரங்களும்.

இந்த புளித்துப்போன சுற்றத்திலிருந்து ஒரு விடுதலையாய், தொலைக்காட்சியில் ஒரு வெளிச்சமாய் என் கண்ணில்பட்டது இந்த ‘Orange is the Black’ தொடர்.
பெண்கள் நிறைந்த கதைக்களத்தை உருவாக்கியது ஒரு பாராட்டுக்குரிய விஷயமெனில், தத்ரூபமாக நடிக்கும் நடிகர் நடிகையரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தது, படைப்பாளியின் படைப்பாற்றலுக்கு கிடைத்த வெற்றியே!

முதன்முறையாக பெண்விழை பெண்களின் உறவினை, ஒரு யதார்த்த சூழலில் பார்க்க வழிவகுத்தது இந்த தொடர். சமூகத்தின் கேவலமான பார்வைகளை பொருட்படுத்தாமல், தன் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு திருநங்கையின் கதை விவரிக்கப் படும் விதம், அந்த கதாபாத்திரத்தின் மேல் ஒரு மரியாதையை வரவழைக்கிறது.
நான் பார்த்த சிறந்த அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்கள் போலவே இதிலும் ஒரு பிழையற்ற திரைக்கதை.
கதையின் நாயகி, திருமணம் நிச்சயமான தருணத்தில், சிறையடைக்கப் படும் ஒரு நிலை. அவளுக்கும் அவளின் காதலனுக்கும் இடையிலான சிக்கல்களும் உணர்வு போராட்டங்களும் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தன.
இந்த கதாப்பாத்திரங்கள் அனைத்தின் உருவாக்கத்திலும், தெளிவாய் ஒரு விஷயம் மட்டும் ஓங்கி நிற்கிறது. ‘இவ நல்லவ’, ‘இவ கெட்டவ’ என யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஒருவரிடம் நற்குணங்களை வெளிப்படுத்தும் பாத்திரம் இன்னொருவருடன் வெறுப்பை உமிழும்.
மனிதர்களின் யதார்த்த போக்கும் இதுதான் என்பேன்.

பெரும்பாலான தமிழ் திரைப்படங்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும், ஏதாவது ஒரு பாத்திரம்…ஊருக்கு நல்லது மட்டுமே செய்வது போல் அமையும் அல்லது பார்ப்பவரிடமெல்லாம் கடிந்து கொள்ளும் பாத்திரமாக இருக்கும். இதனாலேயே வில்லன்களாய் தொடர் படங்களில் உலா வந்தவர்கள், திடீரென ஒரு படத்தில் நல்லவானாய் நடந்துகொள்ளும் போது , கடைசியில் இவன் தான் கேட்டவன் என்பது ரசிகர்களுக்கு தெரிந்துவிடும்.
அந்த விதத்தில் இத்தொடரில் ஒரு அத்தியாயத்தில் ‘கெட்டவளாய்’ நடந்துக்கொள்ளும் பெண்ணை கடிந்துக் கொள்ள ஆரம்பிக்கும் போது, அடுத்த அத்தியாயம் அவளின் நல்குணம் ஒன்றை வெளிக்கொணரும்.

இத்தனை புகழ் பாடும் போது, நிச்சயம் பதிவு தலைப்பின் காரணத்தையும் முன்வைக்க வேண்டும்.
இந்த தொடரை என் கணவனுடன் பார்க்க ஆரம்பித்தேன். அவனுக்கும் வெகுவாக ஆரம்பத்தில் பிடித்திருந்தாலும், அத்தியாயங்கள் நகர நகர கொஞ்சம் கதையே இன்றி நகர்வது போல் உள்ளது என விமர்சித்தான். எனக்கும் அதே கருத்து தோன்றிடினும், முடிந்த வரையில் தொடருக்கு வக்காளத்து வாங்கியபடி இருந்தேன். “பாத்தியா…பொண்ணுங்க base பண்ணின கதைனால biased ஆ இருக்க பாரு; பெருசா twists எதுவும் இல்லாம கதை நகருது. உனக்கும் அது தெரியும்”, என யதார்த்தமாய் விமர்சித்தான். அந்த பதிலே பதிவின் தலைப்புக்கு வழி வகுத்தது. எனது அந்த பாரபட்சத்தில் தவறொன்றும் இல்லை என்பதே என் கருத்து.

சமீபத்தில், பெண்கள் மட்டும் கதையை நகர்த்துவது போன்ற ஒரு திரைப்படத்தையோ, தொலைக்காட்சித் தொடரையோ பார்த்ததாய் நினைவில்லை. ‘கல்யாண அகதிகள்’ என்ற பாலச்சந்தரின் திரைப்படம் ஒன்று சமீபத்தில் பார்த்திருந்தாலும், அதில் வரும் ஒவ்வொரு பெண் கதாப்பாத்திரமும், சமூகத்திற்கோ, காதலனுக்கோ, கணவனுக்கோ…அடங்கி இருப்பதைத்தான் தலையாய கடமையாக பார்த்தனர்.

அனால் ஒரு ஆண் நண்பர் கூட்டம் சமூக அநீதிகளால் அவதிப் படுவதையும், அதற்கு எதிராக குரல் எழுப்புவதையும், பல படங்களில் பார்த்துள்ளோம். அப்படங்களில் எல்லாம், பெண் கதாப்பாத்திரங்கள், வெறும் காட்சியை நிரப்ப மட்டும் உலா வருவர். ‘சத்யா’, ‘கோலிசோடா’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பாய்ஸ்’ என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
அதனாலேயே ‘Orange is the Black’ ஒரு பரிச்சயமற்ற களத்தை அறிமுகம் செய்த போது, என் மனதை கவரத் தவறவில்லை.
இன்னும் ரெண்டு மூன்று அத்தியாயங்கள் நத்தை வேகத்தில் நகர்ந்தால், இது நான் பார்க்கும் ஒரே தொடர் என்பது மாறி, பார்க்கும் 5 தொடர்களில் இதுவும் ஒன்றாய் இருக்கும். ஆனால் ஏதாவது கடுப்பேற்றும் தமிழ் படத்தையோ, தொலைக்காட்சித் தொடரையோ பார்த்துவிட்டு….அந்த சித்திரவதையில் இருந்து, தப்பிக்கத் தவிக்கும் போது , ‘Orange is the Black’ இன் சமீபத்திய அதியாயமோ அல்லது பழைய அதியாயன்களோ துணை இருக்கும் என்பதில் ஐயமில்லை.

என் பாரபட்சத்தில் தவறே இல்லை என திரும்பத் திரும்ப உணர்த்துபவை…இது போன்ற காட்சிகள்…

அன்று வேலைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். வாரத்தின் இரண்டாவது நாள் தான் என்ற போதிலும், ஒரு வாரம் வேலை செய்த அசதியுடன் பயணம் செய்து, நான்காவது நிறுத்தத்தில் அருகிலிருந்த ஜன்னலில் சாய்ந்தபடி தூங்கியும் விட்டேன். சாதரணமாக இங்கு ரயில்களில் ‘கப்சிப்’ அமைதி இல்லாத போதும், அவரவர் அவர்கள் வேலையை கவனிப்பதனால், நாமும் நம் தூக்கத்தை பெரிய தடங்கல் எதுவும் இன்றி தொடரலாம்.

“இல்லங்க…அதுக்குத்தான போன் பண்றேன்…என்னால கட்ட முடியாது. கொஞ்சம் நாள் குடுங்க…பைசாவ கட்டறேன். என்னது திரும்ப holdல போடப் போறீங்களா??? இது மூணாவது தடவை”, என அருகில் இருந்த நபர் உரக்க கத்துவதை கேட்டு வெடுக்கென என் தூக்கம் கலைந்தது.
ஆழ்ந்த உறக்கம் போல, எழுந்த அந்த நொடி, அவர் இருக்கைக்கு சென்று, “என்ன சார்…இவ்வளவு மெதுவா பேசினா அந்த கம்பெனிகாரனுக்கு எப்படி கேக்கும்? இன்னும் கொஞ்சம் குரல உயர்த்தினா…போனே தேவை இல்ல. பில்லும் கம்மியாகும் பாருங்க”, என விளாசிவிட்டு வர வேண்டும் என தோணிற்று.
இங்கு பெரும்பாலும் அடுத்தவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என மக்கள் தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை. அதனாலேயே ரயில்களில் உரக்க பேசுபவர்கள் ஒரு விசித்திர பிறவியாகத் தான் பார்க்கப் படுகின்றனர்.
நான் பார்த்தவரையில் ரயிலில் மட்டும் அல்லாது, பிற பொது இடங்களிலும் இது மாதிரி குரலை உயர்த்தி பேசுபவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருப்பர்.
அது அலைப்பேசியிலோ அல்லது நேருக்கு நேரோ , ஹிந்தி தெரிந்தவர்களுக்கு பேசுபவரின் வாழ்க்கை அச்சு பிசகாமல் புரிந்துவிடும்.
நேற்று கூட இரவு உணவிற்கு சென்றிருந்த உணவகத்தில், ஒரு வட இந்திய தம்பதியரும் அவர்களின் குழந்தையும் வந்திருந்தனர்.
குழந்தை தன் இருக்கையை விட்டு ஓட, குழந்தையின் தாய் வீடுகளில் கத்துவதைப் போல், குழந்தையை இருக்கைக்கு திரும்பி வரும்படி பலத்த குரலில் அழைத்தார். அதுவும் ஆங்கிலத்தில் வந்த போது, என் மனதில் தோன்றியதெல்லாம், “இத்தனை கறாரான தாயெனில், குழந்தை பயத்தின் காரணமாகவே இருக்கையை விட்டு நகராமல் இருக்கும்; பயமின்றி ஓடுகிறதெனில்…”, “கோபமாக பேசும்போது, சாதரணமாக தாய் மொழி தான் முன் வந்து நிற்கும் என்பர்….ஆனால் இந்த தாயிற்கு..”
அருகில் மேசைகளில் இருந்த மக்கள் (எங்கள் மேசை உட்பட) திரும்பி பார்த்த போதும், மிரட்டல் குறையாத வண்ணமே இருந்தது. இம்முறை குழந்தையின் அப்பாவும் சேர்ந்துகொண்டார்….அவரும் ஆங்கிலத்தில்.
கோவத்தை வெளிப்படுத்துகிறார்களா அல்லது அவர்களுக்கு ஆங்கிலத்தில் வைய்யத் தெரியும் என பொது மேடையில் நிரூபிக்க விரும்பினார்களா என தெரியவில்லை.

நம் ஊரில் கூட, பொது இடங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என பாரபட்சமின்றி அனைத்திலும் கோவத்தை வெளிப்படுத்தவோ, அடுத்தவர் மேல் இருக்கும் வெறுப்பை காட்டவோ, குரலை உயர்த்தி பேசுவது ஒரு சாதாரண விஷயம். நண்பர்களிடையே சண்டை, கணவன்-மனைவி இடையே சண்டை என வாக்குவாதங்கள் இடம் பெரும் இடங்கள் அனைத்திலும் உரக்க பேசுவது தவிர்க்க முடியாத ஒரு தேவையாகவே ஆகிவிட்டது.

அளவிற்கு அதிகமாக மது அருந்தி விட்டு உளறுபவர்கள் பெரும்பாலும் கத்தி பேசுவர். தன்னிலை மறந்த ஒரு தருணம் அது. அந்த சமயங்களில் கத்துபவரின் பேச்சை யாரும் பெரிதாக மதிக்க மறுப்பர். நான் இந்தியாவில் வேலை செய்த போது கூட, இரு முறை வேலை செய்யும் பெண்கள் என் மீது கோவத்தில கத்தியதுண்டு. அப்பொழுது அனிச்சையாக செய்தேனா அல்லது தெரிந்து செய்தேனா என தெரியவில்லை…ஒன்றும் பேசாமலே நின்றேன். அவர்களின் சில வார்த்தைகள், வாக்கியங்களை கேட்கும் போது, “என்ன உளறரா”, “அப்ப இவ்வளவு நாளா சிரிச்சு சிரிச்சு பேசினதுக்கு பின்னால இத்தனை வெறுப்பு இருந்திருக்கா”, என பல விஷயங்கள் தெளிவானது. அந்த இடத்தில், அவர்களுக்கு நிகராக நானும் கத்தி பேசி இருந்தால், பிரச்சனை தீர்ந்திருக்குமோ இல்லையோ என் சக்தி முழுவதுமாய் காய்ந்திருக்கும்!

தனிப்பட்ட முறையில் எனக்கு இப்படி ‘சத்தமாய் பேசுவதனால், தன் கருத்துக்கள் அனைத்தும் சரி’ என நினைத்துக்கொண்டு சரமாரியாக கத்துபவர்கள் மேல் ஒரு வெறுப்பே உண்டாகும். உன் பக்கம் நியாயம் இருக்கிறது எனும் போது , அதை பொறுமையாய் எடுத்துரைக்க தானே விரும்ப வேண்டும்? இதை எழுதும் போது கண் முன் வந்து போவதெல்லாம் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் தான். அதில் குயிலியின் கதாப்பாத்திரம் சாதாரணமாய் பேசும்போதும் ஒரு உயர்த்திய குரலில் பேசுவது ஒரு எரிச்சல். அதை நகைச்சுவைக்காக வைத்திருந்தால், நகைச்சுவையின் ஒரு சாயல் கூட இல்லாத கதாப்பாத்திரம் அது. அந்த பாத்திரம் திரையில் வந்த உடன் ஒன்று, டிவியின் சத்தத்தை குறைத்து விடுவேன் அல்லது வேகமாய் ஓட்டும் அம்சம் இருந்தால் அதை செய்து விடுவேன்.

நிறைய பேர் கத்தி பேசுவதை கூர்ந்து கவனித்தால், அவர்களின் தவறை மறைக்கவோ அல்லது எதிரில் உள்ளவரை பீதியில் ஆழ்த்தவோ தான் அவ்வாறு செய்வர்.
என் இந்த பதிவு மூலம் என் விருப்பு, வேண்டுகோள் எலாம் ஒன்று தான்

“உங்கள் வீட்டில் கொட்டிக்கிடக்கும் குப்பை பற்றி எனக்கு கவலை இல்லை, அதை பொது இடத்தில் பரப்பியே தீருவேன் என நினைத்தால், புதன் கிரகத்திற்கு புலம் பெயற எத்தனியுங்கள் (அங்கும் வெகு விரைவில் மக்கள் கூட்டம் பெருக ஆரம்பிக்கும்…அதுவரைக்கும் வேண்டுமெனில்..)”

“என்னுடன் வாக்குவாதம் செய்ய வேண்டுமெனில், குரலை உயர்த்தி பேச நடவடிக்கை எடுப்பதற்கு பதில், விவாதத்திற்கு பயன்படும் விஷயங்களில் உங்கள் புத்தியை தீட்டிக்கொள்ளுங்கள்”

“உங்களுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, சீன மொழி என எந்த மொழி தெரிந்திருந்தாலும், அதில் உங்களின் புலமையை பாராட்டி யாரும் விருது தரப்போவதில்லை; அலைப்பேசிகள் மிகவும் முன்னேறி விட்டன, முனுமுனுத்தாலும் கூட உரையாடலின் அந்த பக்கம் இருப்பவர்க்கு தெளிவாய் கேட்கும்; அதனால் உங்கள் தொண்டைத் தண்ணியை சேகரித்து வைப்பதில் கவனம் செலுத்துங்கள்”

“ரயிலில் தூங்குபவர்கள் களைப்பில் தூங்குகிறார்களோ அல்லது ‘சும்மாவேனும்’ தூங்குகிறார்களோ….உங்களின் வெண்கல குரலினால் அவர்களின் கனவுகளை கலைக்காதீர்கள்”

வாயை மூடி பேசும்படி கேட்கவில்லை; யாரிடம் பேசுகிறீர்களோ அவருக்கு மட்டும் கேட்கும் படி பேசவும்.