Posts Tagged ‘சுமங்கலி பூஜை’

“பவி எழுந்திருமா….நேரம் ஆகுதுல. போய் சமத்தா குளிச்சுட்டு வருவியாம்..அம்மா கண்ணுக்கு புடிச்சதெல்லாம் செஞ்சு தருவேனாம்…சீக்கிரம் சீக்கிரம்”, என பவித்ராவை படுக்கையை விட்டு எழுப்ப முயன்றாள் தனலட்சுமி.
“கொஞ்சம்…கொஞ்சம் தூங்கறேன் மா”, என மழலை கலந்த குரலில், தூக்கம் சற்றும் விடைபெறாத நிலையில், சிணுங்கினாள் பவி.
“அம்மாக்கு நேரமாச்சு பாரு…இன்னிக்கி பவிக்கு புடிச்ச உளுந்து வடை, பாயாசம் எல்லாம் தயாரா இருக்கு…குளிச்சிட்டு வந்தா எல்லாம் உண்டு”, என அன்பு கட்டளையிட்டாள் தனம்.
“வடையா…இன்னிக்கி என்னம்மா….சாமிக்கு பர்த்ரேயா”, என சட்டென தோன்றிய உத்வேகத்தில் கேள்வி எழுப்பினாள் பவி.
“பர்த்டே இல்லடி என் கண்ணு…சுமங்கலி பூஜை செய்ய போறோம் சாமிக்கு”, என் பதிலளித்தாள் தனம்.
திருதிருவென பவி விழிப்பதைக்கண்டு, “உனக்கு சைக்கிள், பொம்மை எல்லாம் யாரு வாங்கி தராங்க….அப்பாதான…அதுதான் சாமிகிட்ட அப்பாவ நல்லா பாத்துக்க சாமின்னு கேக்க போறோம்…அதுக்கு தான் சாமிக்கு புடிச்ச வடை, பாயாசம் எல்லாம்”, என பவியை அணைத்தபடி முத்தங்களை உதிர்த்தாள் தனம்.
“ஐ…சாமிக்கும் என்ன மாதிரி புடிக்குமா? எனக்கு இருக்குல மா?”, என ஏக்கத்தில் பவி கேட்க,
“ஒனக்கு இல்லாமயாடி என் தங்கமே…குளிச்சு புது சொக்கா போட்டுக்கிட்டு வருவியாம், அம்மா எல்லாம் குடுபேனாம்”, என தனம் சமயலறைக்கு நடந்தபடியே பதிலளித்தாள்.

குளித்து முடித்து, புத்தாடையில் மிடுக்காய் சமையலறையினுள் நுழைந்த பவி, தனத்தின் சேலையை லேசாக இழுத்தாள்.
சற்றே குனிந்தபடி, பவியை தழுவிக்கொண்டு, கையில் ஒரு வடையை கொடுத்தாள் தனம்.
“சாமிக்கு குடுக்கட்டுமா…அப்பத்தான் அப்பாக்கு பைசா தருவாரு, அப்பா எனக்கு அந்த கொரங்கு பொம்மை வாங்குவாரு”, என பூசையறை நோக்கி ஓடினாள் பவி.
“சாமிக்கு குடுத்தாச்சுடி கண்ணு…இது ஒனக்குத்தான்”, என கூறியபடி கழுத்தில் இருந்த தாலிகொடிக்கு மஞ்சள் தேய்த்தாள் தனம்.
“எனக்கு மா…புதுசு chain”, என பவி தனத்தின் கையை இழுக்க,
“இதுவா கண்ணு….என் செல்லக்குட்டிக்கு கல்யாணம் ஆகும்போது அம்மா போடுவாங்களாம்”, என பவியின் தலையை தடவிக்கொடுத்தாள் தனம்.
சில நொடிகள் ஏதோ யோசித்து, “மணி கூட விளையாடறேன் மா ப்ளீஸ்”, என கோரிக்கையை தனம் முன் வைத்தாள் பவி.
“அஞ்சலி அக்கா பிஸியா இருப்பாங்க…டிவில dora பாரு…பாத்துகிட்டே இரு…அப்பா வந்துடுவாரு, அப்பறம் நாம பீச்க்கு போவோம்; அங்க அப்பா என்ன வாங்கித்தறேன்னு சொன்னாரு…”, என எதிர் வீட்டிற்கு போவதை தடுக்க வழிதேடினாள் தனம்.
“ப்ளீஸ் மா…ப்ளீஸ்….கொஞ்ச நேரம்…அப்பா வண்டி சத்தம் கேட்டா வரேன்”, என சொல்லிகொண்டே வாசலுக்கு விரைந்தாள் பவி.
இனி ஒன்றும் செய்யலாகாது என தோல்வியை ஒப்புக்கொண்ட தனம், மீண்டும் சமையலறையினுள் நுழைந்தாள்

“சுச்சு…என்னடா”, என நாய்க்குட்டியை கொஞ்சியபடி, “அக்கா…வடை சாப்பிடுவானா இவன்”, என ஆர்வத்துடன் அஞ்சலி வீட்டினுள் நுழைந்தாள் பவி.
“குடு குடு…என்ன விசேஷம் வீட்ல”, என அஞ்சலி வினவ,
“அப்பா நல்லா இருக்கணும்னு சாமிக்கு செஞ்சாங்க”, என அஞ்சலிக்கு பதிலளித்தபடி, நாய்குட்டிக்கு வடையை கொடுத்தாள் பவி.
“சரி மணிக்கு குடுத்துட்டு இங்க வா…உனக்கு புடிச்ச முறுக்கு வாங்கி வச்சிருக்கேன் பாரு”, என கூறியபடி வாழறை நோக்கி நடந்தாள் அஞ்சலி.
“சூப்பர்..சூப்பரா இருக்குக்கா; நேத்து கூட ஸ்கூல்க்கு கிரண் கொண்டுவந்தான்”, என ரசித்து தின்றபடி, வாழறையை நோட்டமிட்டாள் பவி.
சுவற்றில் மாட்டி இருந்த, அஞ்சலி மற்றும் அவள் கணவரின் புகைப்படத்தை பார்த்த மாத்திரத்தில், “அக்கா உங்களுக்கு கல்யாணம் ஆச்சுதான. ஆனா செயின் ஒன்னுமே போடல; அம்மா போட்டிருக்காங்க”, என கேள்வி எழுப்பினாள் பவி.
“உங்க அப்பா ஏன் போட்டுக்கல”, என சிரிப்பை அடக்கியபடி எதிர் கேள்வி கேட்டாள் அஞ்சலி.
“நான் அம்மா கிட்ட கேக்கறேன்…இன்னிக்கி நீங்க சாமிக்கு ஒன்னும் குடுக்கலியா”, என அடுத்த தலைப்பிற்கு தாவி குதித்தாள் பவி.
“அண்ணனுக்கா…அவரே பாத்துப்பாரு பவி; அவர் என்ன குட்டி பாப்பாவா சொல்லு”, என பவியின் கன்னத்தை கிள்ளினாள் அஞ்சலி.
மணி சற்றே தூங்க தயாராவது கண்டு, “வீட்டுக்கு போறேன்கா…அம்மா தேடுவாங்க”, என கிளம்ப எத்தனித்தாள் பவி.

“அம்மா…நீ செயின் போட்டிருக்கல. அப்பா என் போட்டுக்கல”, என அஞ்சலியின் கேள்வியை மறுஒலிபரப்பு செய்தாள் பவி.
இனி கடிந்து பேசியாவது…பக்கத்து வீட்டிற்கு போகாமல் பார்த்து கொள்ளவேண்டும் என மனதில் நினைத்தபடி, “அப்பாவும் போட்டிருக்காரு கண்ணு….சட்டை போட்டிருக்காருல, அதுதான் வெளிய தெரியல”, என மழுப்பினாள் தனம்.
“சரி…அப்பா வந்துடுவாரு…வெளிய எட்டி பாத்துகிட்டு இரு”, என அடுத்த கேள்விக்கணை பாய்ந்து வருவதை தடுக்க முயன்றாள் தனம்.
மீண்டும் தோல்வி!!
“அம்மா…அஞ்சலி அக்கா இன்னிக்கி சாமிக்கு ஒன்னுமே செய்யல; நான் கேட்டேன்…சாமி எல்லாம் தேவையில்ல…மகேஷ் அண்ணாவே பாத்துப்பாங்களாம், நீ எதுக்குமா அப்பாக்கு பண்ற?”, என தனத்தின் வார்த்தைகளை காதில் வாங்காமல், அடுத்த சந்தேகத்தை முன் வைத்தாள் பவி.
“அது வந்து கண்ணு…”, என தனம் ஆரம்பிக்க, யாரோ கதவை தட்டுவது கேட்டது.

“என்னங்க…என்னாச்சுங்க…இவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்கீங்க…என்னாச்சுங்க”, என தாரை தாரையாய் கண்ணீர் வடிய, புலம்பியபடி, கணவரை வாழறைக்கு அழைத்துச் சென்றாள் தனம்.
“இங்க தான்க்கா…colony உள்ள நொழையும் போது ஒரு truck இடிச்சிடுச்சு”, என துணைக்கு வந்திருந்த அஞ்சலி கூறினாள்.
“என்னங்க இது…பாத்து வரக்கூடாதா…உறுப்படுவானா அவன்…எங்க பாத்துகிட்டு ஓட்டுறானுங்க”, என புலம்பித்தள்ள,
“ஏதோ நல்ல வேளை…கையில தான் fractureனு டாக்டர் சொன்னாரு. ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லி இருக்காரு”, என தனத்தை அமைதி படுத்தினாள் அஞ்சலி.
“அந்த பாளையத்தம்மன் தான் பாத்துக்கிட்டு இருக்கா. ஏதோ தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு”, என பெருமூச்சுவிட்டாள் தனம்.

நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பவி, மெதுவாக வாயை திறந்து, “என்னமா சாமி அப்பாவ பாத்துக்கும்னு சொன்ன…இப்படி ரத்தம் வருது? சாமிக்கு வடை புடிக்கலியா?”, என அழுகையும், குழப்பமும் கலந்த குரலில் வினவினாள்.
“அது வந்து கண்ணு…”, என விடையறியாது அஞ்சலியை பார்த்தாள் தனம்.