Posts Tagged ‘தேசப்பற்று’

வெகு நாட்கள், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கெடப்பில் கிடந்த பதிவு இது. சென்ற வருடம் நவம்பர் மாதம் மேற்கொண்ட ஐரோப்பா பயணம் போது எழுதியது. தூசு தட்டி இப்பொழுது வலைச்சரத்தில்,

“மூன்று வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு வெளிநாட்டுப் பயணம். விடுமுறை ஒன்று வந்தால், வீட்டில் முடங்கி கிடக்க மட்டுமே விரும்பிய பள்ளி-கல்லூரி காலங்களை நினைக்கையில், சிறிது வருத்தம் உண்டு. திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட மன மாற்றம், அந்த வருத்தத்தை ஈடுகட்டியது. நல்ல சத்துள்ள உணவும், உடற்பயிற்சியும் போல, “ஒரு பளிச்சென்ற காலை வேளையில், சூரியன் சுளீரென இல்லாமல் இதமாக ஒளிரும் போது மேற்கொள்ளும் விடுமுறை பயணம்” தரும் களிப்பும் புத்துணர்ச்சியும், ஈடு இணையற்றது.
பல்வேறு காரணங்களினால் கடந்த மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவில் பயணங்கள் மேற்கொண்ட போதும், வெளிநாட்டுப் பயணம் மட்டும் கைக்கூடவில்லை.
அந்த விதத்தில், இந்த ஐரோப்பா பயணம், எனக்குள் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் உள்ள நாடுகளை திரைப்படங்களிலும், பாடப் புத்தகங்களிலும் பார்த்தது மட்டும் தான். அவற்றின் அழகை கண் முன் பார்க்கப் போகிறேன் என்ற எண்ணம், ஆவலையும், காரணம் அறியா ஒரு பதட்டத்தையும் உருவாக்கியது.
இந்த பயணம் மற்ற பயணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது; காரணம் இதை நாங்கள் ஒரு சுற்றுலா நிறுவனம் வழியாக செய்கிறோம். உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் லண்டனில் அணி திரண்டு, இந்த பயணம் துவங்கும்.
ஐரோப்பாவில் 9 நாடுகளில் சுற்றுப்பயணம்; ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சொகுசுப் பேருந்தில் பயணம். அந்த பயணங்களின் போது…என் கைக்கணிணியில் சேகரித்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், வியந்த விஷயங்கள், வருத்தப் பட வைத்த தருணங்கள்…இவை அனைத்தின் தொகுப்பே இப்பதிவு.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் லண்டனில் குழும, அங்கிருந்து பயணம் துவங்கியது. நாங்கள் வசிக்கும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, சிங்கபூர் ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் இந்த பயணத்தில் பங்கேற்றனர்.
தனியே ஒரு பெண் மட்டும், தனியே ஒரு ஆண் மட்டும், ஒரு அம்மாவும் அவரின் 16 வயது மகனும், இரண்டு அமெரிக்க வாழ் இந்திய கணவன்-மனைவி ஜோடிகள், 50 வயதில் மறுமணம் செய்துக் கொண்டு தேன்நிலவிற்கு வந்திருந்த புது மணத் தம்பதியர், அம்மா – அப்பா – பதின் வயது மகளும், மகனும் கொண்ட ஒரு குடும்பம், 60 வயது கடந்த தம்பதியர், 70 வயது கடந்த தம்பதியர், 60 வயது பெண்மணியும் அவரின் 87 வயது அம்மாவும், என பயணக் குழு களை கட்டியது.
பயணத்தில் பங்கேற்ற பல உறவுகள், எனக்கு புதிதாக இருந்தது. இவர்களுடன் பேசும் போது, அவர்களின் குடும்பச் சூழ்நிலை, சுற்றுலா பயணங்கள் பற்றிய அவர்களின் எண்ணம், அனைத்தும் வியப்பை அளித்தன.

50 வயது கடந்த தம்பதியர், அவர்களின் கடந்த திருமணத்தில் இருந்து 3+3 பெண் குழந்தைகள் பெற்றிருந்தனர். ஒரு வருடம் பழகி, திருமணம் செய்துக் கொள்ள விரும்பிய போதும், பிள்ளைகள் என்ன நினைப்பர் எனத் தயங்கினர். ஆனால் மகள்கள் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, இரண்டு வாரங்கள் முன்னர் திருமணம் நிகழ்ந்தது.

தம்பதியராய் நியூசிலாந்தில் இருந்து வந்தவர்கள், தங்கள் பிள்ளைகள், தம்மைத்தாமே பார்த்துக் கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டதாகவும், இனி இப்படி ஊர் சுற்றி பார்க்க எந்த தடையும் இல்லை எனவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்னொரு தம்பதியருக்கு பிள்ளைகள் இல்லை. கணவன்-மனைவி இருவருக்கும் பயணம் செய்ய பிடித்த காரணத்தினால், உலகில் தென் அமெரிக்கா தவிர அனைத்து கண்டங்களுக்கும் பயணம் செய்து விட்டனர். வெகு விரைவில் தென் அமெரிக்க பயணமும் கைக்கூட உள்ளது 🙂

87 வயதில் ஒரு பாட்டி. 65 வருட திருமண வாழ்க்கை, 3 குழந்தைகள். அமெரிக்காவிற்கு வெளியிலான முதல் சுற்றுப் பயணம்; பேசும் பொழுது அந்த அளவு கடந்த மகிழ்ச்சியும், குதூகலமும் அவர் பேச்சிலும், முகத்திலும் தெளிவாகத் தெரிந்தது.

“பசங்களுக்கு கல்யாணம் ஆயாச்சு…இனி பேரன் பேத்திய கொஞ்சறது தான் வேலை”, “என்னதான் படிக்க வச்சுட்டாலும், நமக்கு அப்பறம் சொத்துன்னு ஏதாவது விட்டுட்டு போகணும்; எல்லாத்தையும் நாம ஊர் சுத்தி செலவழிச்சா, ஊர் என்ன சொல்லும்”, போன்ற ஒரே மாதிரியான வாக்கியங்களை நம் ஊர் பெற்றோரிடம் இருந்து கேட்ட என் காதுகளுக்கு, இவை இன்னிசையாய் இருந்தது. “அங்க வெளிநாட்டுல நெறைய வசதி இருக்கு”, “வேலைக்கு போகாம வீட்ல இருக்கற wife போல”, போன்ற சப்பக்கட்டுகள், சமூகம் போட்டு வைத்துள்ள கட்டமைப்பினுள் சிக்கிக்கொண்டுள்ள கைய்யறு நிலையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது.
இந்த பயணத்தில் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நியமிக்கப் பட்டவர், நேற்று சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.
“மிகவும் நிச்சயமற்ற வாழ்க்கை இது; முடிந்த வரையில் அதை ரசிப்பது, அனுபவிப்பது, நம் கையில் மட்டுமே உள்ளது”
இறக்கும் போது , “ஊர் ஆசைப்பட்டது போல் வாழ்ந்தேன்; ஊர் சரியென நினைத்தபடி என் பிள்ளைகளை வளர்த்தேன்; ஊர் மனசு நோகாதது போல் என் முடிவுகளை அமைத்துக்கொண்டேன்” எனக்கூருவதோ, “எங்கள் விருப்பபடி இல்வாழ்க்கையை கழித்தோம்; எங்கள் மகனை அவன் விருப்பப்படி படிக்க வைத்தோம், மகனை தன் காலில் நிற்க உதவி முடித்து, பார்க்க வேண்டும் என நினைத்த நாடுகளுக்கெல்லாம் சென்றோம்”, எனக்கூருவதோ அவரவர் விருப்பம். விருப்பம் மட்டுமின்றி, அவ்வாழ்வை வாழ முயல்வதும் அவர்கள் கையில் மட்டுமே.

நானும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு திருமணம், இரண்டு குழந்தைகள், சொந்த வீடு, குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல இடத்தில் அவர்களுக்கு திருமணம் …ஆகியவற்றை டிக் செய்து முடித்தால், ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்து முடித்திருப்போம் என நினைத்தேன். திருமணத்திற்குப் பிறகு…ஆஸ்திரேலியாவில் குடியேறினேன்.மேற்கின் பழக்க வழக்கங்கள் முதலில் புதியதாய் இருந்தது. அவ்வாழ்க்கை வாழும் மக்களை பார்க்கும் போது , அதில் இருக்கும் ‘பூமில அடுத்த பிறவின்னு ஒன்னு இருக்கா இல்லையான்னு தெரியாது; இருக்கற வரைக்கும் ஆசைப்படி வாழ வேண்டியது”, என்ற உண்மையும் விளங்கியது.

இனம் இனத்தோடு சேரும் – இனியும் இது சரிப்பட்டு வருமா???

அமெரிக்க வாழ் இரு இந்திய ஜோடிகள் வந்திருந்தனர். சுற்றுப்பயணத்தின் 12 நாட்களும், அந்நால்வரும் யாருடனும் பெரிதாக பேசவில்லை. அவர்களுக்கு இடையில் மட்டுமே இருந்தன அவர்களின் உரையாடல்கள். இவை எனக்கு சிறிது குழப்பமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. “இது தான் விருப்பமெனில், இந்த அமைப்புள்ள சுற்றுலா நிறுவனத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என பல முறை வியந்ததுண்டு.
பிற நாட்டு மக்களுடன் பேசிப் பழகும் போது, அவர் நாட்டு உணவு, பழக்க வழக்கங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நம் நாட்டில் ‘இது தான் சரி’ என காலகாலமாக இருந்து வரும் பல விஷயங்கள், அவர்கள் ஊரில் கேள்விப்பட்டது கூட இல்லை என தெரிய வரும். உதாரணத்திற்கு சமீபத்தில் இங்கு தலைப்புச் செய்தியான விஷயம், ஒரு பெண் தன் உறவில் ஒரு பையனை திருமணம் செய்துக்கொண்டது.
“இதுல என்னமா புதுசு”, எனக் கேள்வி கேட்பவருக்கு,
நம் ஊர்களில், பிறந்ததில் இருந்தே, அத்தை மகன், மாமன் மகன் இருந்தால், ஒரு பெண்ணுக்கு அவர்கள் ஒரு முறை மாமன் என்றே அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றனர். இங்கு சிறு வயதிலிருந்தே, சகோதர சகோதரியாய் பழகுவதனால், அவர்களுக்கு நடுவிலான திருமணம் என்பது புதிதாகவும், சில சமயங்களில் கீழ்த்தனமாகவும் பார்க்கப்படுகிறது. பிற நாட்டு மக்களின் சாதனைகளை கேட்கையில், “இந்தியா தான் டாப்”, “இங்கு இருப்பவங்க மட்டும்தான் அதி புத்திசாலிங்க”, “நம் மூளை வளத்தில தான்…உலகமே தடுக்கி விழாம சுத்திகிட்டு இருக்கு”, போன்ற பத்து காசுக்கு பயனற்ற நம்பிக்கைகள் தூள் தூளாகப் போகும்.
இப்படி பல விஷயங்களில், நம் ஊருக்கு மாறான வழக்கங்கள் பற்றி அறியும் போது , அந்த ‘குண்டு சட்டியினுள் குதிரை ஓட்டும்’ மனப்பான்மை மாறும்.

“என் ஊரில் இல்லாததா அங்க இருக்கப் போகுது”, என்ற எண்ணத் தடை உயர்ந்து நிற்கும் போது , பிற நாட்டவரிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் நமக்கு தெரியாமலே போகிறது. அந்த விதத்தில், இந்த ஐரோப்பா சுற்றுப்பயணம், பல்வேறு நாட்டுமக்களின் அறிமுகத்தை கொடுத்தது; அவர்களின் வாழ்க்கையில் உள்ள பல சுவாரசியமான விஷயங்களையும் அறிய உதவியது. அடுத்தப் பகுதியில், சுற்றுப்பயணத்தின் போது கண்டு வியந்த ஐரோப்பியர்களின் தாய் மொழி விருப்பம், செல்வச் செழுமை என்பது ஊர் வைத்த கணக்கு படி வாழ்வதன்று போன்றவைகளைப் பற்றி எழுத ஆசை.

இவ்வாக்கியத்தை ஒவ்வொரு முறை கேட்கும் போதும், அதை கூறுபவர் நிஜமாகவே வருந்தித்தான் சொல்கிறாரா அல்லது அது போலித்தனம் மட்டுமே நிறைந்த ஒரு வாக்கியமா என சந்தேகங்கள் எழுந்ததுண்டு. அது பற்றி ஒரு பதிவு எழுதவும் நினைத்ததுண்டு.

அன்று மீண்டும் அந்த வாக்கியத்தை கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆனால் கூறியவர் வருத்தத்தில் சொல்லவில்லை…மாறாக, அவ்வாறு சொல்பவர்களை கடிந்து கொண்ட ஒரு தோரணையில். வேலை விஷயமாக அன்று வேறொரு ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. வேலை முடிந்து வீடு திரும்ப taxi யில் விமான நிலையத்திற்கு பயணம் செய்தேன். taxi ஓட்டுனர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் ஊழல், பஞ்சாபி butter chicken, சமீபத்தில் வெளிவந்த ‘Bhaag milkha bhaag’ என பல்வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருக்க, அவர் ஓரிடத்தில்…10 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், இவ்வூர் மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார்.

“செய்யற வேலைக்கு இங்க மதிப்பிருக்குங்க…வேலைக்கு தகுந்த ஊதியம்; நல்லா வேலை செஞ்சா அதுக்கு ஏத்த சம்பள உயர்வு அவங்களே பாத்து செய்யறாங்க. நம்ம ஊர் மாதிரி bossக்கு சலாம் போட்டாத்தான் வேலைல வளர்ச்சி…மாதிரி எதுவும் இல்ல இங்க. என் கூட இந்தியால வேலை செஞ்ச ரெண்டு பேர் கூட இங்க வந்துட்டு அந்த நிலைமைல தான் இருக்காங்க…ஆனா”, திடீரென அவர் முகத்தில் ஒரு வெறுப்பு தோன்றுவதை கவனிக்க முடிந்தது.

“என்ன தான் சொல்லுப்பா நம்ம ஊர் மாதிரி வராது”னு அவனுங்க சொல்லும் போது, அவ்வளவு கோவம் வருதுங்க. அங்க ஊர்ல எந்த வேலையும் இல்லாம திரிஞ்சுகிட்டிருந்த நிலைமை மாறி, நாங்க நல்லா இருக்கோம், பசங்க நல்லா படிக்கிறாங்க, நல்ல ஒரு மரியாதையான வாழ்க்கை வாழறோம். இது தானங்க வேணும் மனிஷனுக்கு”…என யதார்த்தை புட்டு புட்டு வைக்கும் போது, ஒரு பெண் குடு குடுவென கார் வருவதை கூட பார்க்காமல் சாலையை கடந்தாள். ஓட்டுனர் brake அழுத்தி வண்டியின் வேகத்தை குறைத்தார். “horn அடிச்சிருக்கனும் நீங்க..ஏதோ நீங்க slow செஞ்சதுனால சரி…வேற யாராவது வேகமா வந்திருந்தா”, என நான் பதற, அவர் மிகவும் நிதானமாக,
“அவங்களுக்கு என்ன அவசரமோ…அத விடுங்க. உங்களுக்கு எப்படி…இங்க புடிச்சிருக்கா…இல்ல இந்தியாக்கு திரும்பனும்னு ஆசையா?”, என என்னை கேட்டார்.

“எனக்கு இங்க தாங்க…என் விருப்பத்துக்கு தகுந்தபடி வாழ முடியுது. “அத ஏன் செய்யற…இத ஏன் பண்ற”னு 1008 கேள்வி கெடையாது. மொத்ததுல…ஒரு adultஆ என்ன மதிக்கிறாங்க. எனக்கு கூட மக்கள் சொந்த ஊர் புகழ பாடிகிட்டே இருந்தா கொஞ்சம் அலுப்பு தட்டுது”, என எனக்கு மனதில் பட்டதை சொன்னேன்.

“அடுத்த மொறை அது எரிச்சலா இருந்ததுனா…கெளம்ப சொல்லுங்க. நான் அப்படித்தான் “பாஸ்போர்ட் தான் இருக்குல..கெளம்ப வேண்டியதுதான. இங்க உக்காந்துகிட்டு அந்த ஊர் பெருமையா பாடறதுக்கு பதில்…அங்க போய் இருக்க வேண்டியதுதான”, னு ஒரு தடவை சொன்னேன். அதுல இருந்து ஒருத்தன் வாயில இருந்தும் அந்த வார்த்தை வர்றதே இல்ல. மனிஷன் எவ்வளவு நாள் தான் இவங்க பேசறத எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு இருக்கறது சொல்லுங்க”, என சரமாரியாக பேசி முடித்தார் ஓட்டுனர்.
பேசிக்கொண்டே விமான நிலையமும் வந்து சேர்ந்தோம். ஓட்டுனரிடம் விடைப்பெற்றுக்கொண்டு, நான் கிளம்பினேன்; விமான பயணம் கொஞ்சம் களைப்பாக இருந்த போதிலும், அவர் பேசிய விஷயங்கள் நினைவிற்கு வந்த வண்ணமே இருந்தது.

என் நண்பர் கூட்டத்திலும், ஒரு சிலர் இவ்வாறு பேசிக் கேட்டுள்ளேன்; வார்த்தைகளில் வருத்தம், ஏக்கம் என்பதையெல்லாம் தாண்டி.. அது ‘fashionable’ஆக மட்டும் தென்பட்டுள்ளது. மேலும் அப்படி பேசுபவர்கள் அனைவரும் நம் நாட்டவர்கள் மட்டும்தான். இத்தாலிய, கிரேக்க, கென்ய அல்லது ஆப்கான் நாட்டு நண்பர்கள் இப்படி பேசிக்கேட்டதே இல்லை. தம் நாட்டில் உள்ள நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது கூட…அவை தான் தலை சிறந்தவை, அவற்றிற்கு ஈடு இணை இல்லை போன்ற வாக்கியங்கள் உரையாடலில் இடம் பெற்றதில்லை.

இந்தியாவின் பச்சை பசேல் புல்வெளிகளையும்,அங்கு கிடைக்கும் சுவையான உணவு வகைகளையும் மிஸ் செய்வதாக சொல்லும் போதெல்லாம், மாசு கலக்காத இவ்வூரின் சாலைகளும், உயர்ந்து நிற்கும் மலைகளும், காடுகளும், அவற்றை பாதுகாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் நினைவுக்கு வரும். இவ்வூரில் உள்ள வேலைவாய்ப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் அனைத்தையும் பார்த்து, அதனால் பயனடைந்த பின்னரும், ‘என் நாடு மாதிரி வராது’ என சொல்லும் மனப்பாங்கு எனக்கு புரியாத புதிரே! எங்கு திரும்பினும் பரவி இருக்கும் இவ்வூரின் செழுமையையும், குடி இருக்கும் இடங்களில் இருந்து பல கி.மி. தொலைவு சென்றால் மட்டுமே காணக்கிடைக்கும் நம் ஊரின் பச்சை பசேல் புல்வெளிகளையும், ஒரே தளத்தில் வைத்து என்னால் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை.

உலகமயமாக்கலுக்குப் பிறகு, மண் சட்டியில் சமைக்கும் மீன்குழம்பும், தெருவோர கொத்து பரோட்டாக்களும், தமிழ் மக்கள் பரவி இருக்கும் உலகின் எந்த மூலையிலும் கிடைக்க துவங்கி உள்ளன
மனதிற்கு பிடித்த அனைத்து விஷயங்களும் வெளி நாட்டில் கிடைக்கும் போதும், “எங்க தெரு மூலைல கெடைக்கற வாழக்காய் பஜ்ஜி மாதிரி ஒன்னு இந்த உலகத்துல கெடையாது’னு அடம் பிடிக்க போகிறீர்கள் எனில், ஊருக்கு திரும்பி போவதும் போகாமல் இங்கே புலம்பிக்கொண்டே இருப்பதும் உம் விருப்பம், ஆனால் பொதுச்சபையில்…இப்படி பேசி, உம் ‘தேசப்பற்றை’ வெளிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உம்மை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் நீங்கள் அந்த தூய(??) காற்றை சுவாசிக்கவோ, அன்னாச்சிக்கடை எள்ளுருண்டையை தின்னவோ யாரும் இந்தியாவிற்கு டிக்கெட் எடுத்துக்குடுக்கப் போவதும் இல்லை…உம் அம்மாவையோ, பஜ்ஜி போடும் ஆயாவையோ இந்த ஊருக்கு அழைத்து வரப்போவதும் இல்லை.