Posts Tagged ‘நரேந்திர மோடி’

இந்த ஒளிப்பதிவில் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி ஆபட்ட் (Tony Abbott). தொலைப்பேசியின் அந்த பக்கம் இருப்பது, டோனி பதவிக்கு வர வோட்டு போட்ட ‘common man’. புலம்பல் மிகக் காரசாரமாக இருந்தாலும், சாராம்சம் இதுதான்….”டோனி நீ சரியான வெத்து வேட்டு . நீ போற போக்க பாத்தா, கட்டாயம் லாட்ஜ் சாவிய பில் ஷார்டென் கிட்ட குடுக்க போற…அதுவும் ரொம்ப சீக்கிரமே”. இங்கு ‘லாட்ஜ்’ என்பது, பிரதமருக்கு, அரசு வழங்கும் இல்லம்/இருப்பிடம். நம் ஊரின் ஆளுநர் மாளிகை, லண்டனில் உள்ள ’10 டௌனிங் ஸ்ட்ரீட்’ மாதிரி. பில் ஷார்டென் என்பவர் ஆஸ்திரேலிய  அரசியலில் எதிர் கட்சித் தலைவர்.

இங்குள்ள பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் மகிழ்ந்து பார்க்கும் அதே சமயத்தில், இந்தியாவில் பெருமையாய் பேசப்படும் ஜனநாயகம், பேச்சுரிமைக்கெல்லாம்  என்ன பொருள் என கேட்கத் தோன்றுகிறது.

ஒரு மதத்திற்கு எதிராகவோ, ஒரு அரசியல் தலைவருக்கு எதிராகவோ, ஒரு சராசரி மனிதன் குரல் எழுப்பும் போது, அவன் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள், “என்னடா இது, சர்வாதிகாரம் நிலவுதா இந்த நாட்டுல”, எனக் கேட்கத் தூண்டுகிறது.

வட கொரியாவிலாவது ஒரு சர்வாதிகாரியெனில், இந்தியாவில் ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ போல், சர்வாதிகாரி ஆகும் உரிமை மட்டும் எவன் வேண்டுமெனினும்…தாரளமாக எடுத்துக்கொள்ள முடியும்.

“உன்னைவிட ஜாதியில் தாழ்ந்தவன், பணத்திலோ, பதவியிலோ உன்னை விட உயர்ந்து விட்டால், அவனை தீர்த்துக் கட்டக் கூட உனக்கு உரிமை உண்டு”

“உன் மனைவி உன்னை எதிர்த்து பேச வாய்த்திறந்தால், பளாரென அறையவோ, தாறுமாறாக அவளை அடிக்கவோ உனக்கு உரிமை உண்டு”

“உனக்கு பிரியமான நடிகனை, கிண்டல் செய்யும் எவனையும்….வார்த்தைகளால் சாவடிக்கும் உரிமை உனக்கு உண்டு”

“ஒரு உறுப்படியான காரணம் இல்லாத போதும், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவனா அவன்…அவன் இனப் பெயரைக் காரணம் காட்டியே, ஊரைத் திரட்டி, அவன் இனத்தை அழிக்க உனக்கு உரிமை உண்டு”

“இந்த காட்டுமிராண்டி செயல்கள் அனைத்தையும், உன் பணபலம், செல்வாக்கைப் பயன்படுத்தி நியாப்படுத்தவும் உனக்கு உரிமை உண்டு”

இத்தனை ‘உரிமைகள்’ கொட்டிக் கிடக்கும் இந்த நாட்டில், இவை எதையும் தட்டிக் கேட்கும் பேச்சுரிமை மட்டும், சாதரணமாக கிடைப்பதில்லை.

“அநீதிய தட்டிகேப்பேன்…உன்னால முடிஞ்சத செய்”, என அருந்ததி ராய் மாதிரியோ வினவு பத்திரிகை போலவோ, ஒரு திடமான கொள்கைக் கொண்டிருந்தால், சாத்தியமாக வாய்ப்புகள்  உண்டு.

“எல்லாம் நம்ம தலையெழுத்து”, நல்ல வேளை நாம பொழைச்சோம்”, என இருக்கும் வரையில், தங்கள் ‘உரிமைகளை’ கொண்டாடும் மத வெறியர்களும், ஆணாதிக்க ஓநாய்களும் கொண்டாடிய வண்ணமே இருப்பர் .

அப்படி  வீணர்களின் உரிமை கொண்டாடும் செயல் உங்களுக்கு தீங்கு விளைவித்தால், “அய்யோ இதுக்கு கொரல்  குடுக்க யாரும் வர மாட்டாங்களா”, என புலம்புவது பயனற்றது.

இன்னொருவர் பிரச்னைக்கு நீங்கள் குரல் கொடுக்காத போது, உங்கள் பிரச்சனைக்கு மற்றவரின் வரவை எதிர்பார்ப்பது கொஞ்சம் ‘இடிக்குதே’!!

“புது ஆளுக்கு வோட்டு போட்டிருக்கோம்…அவன் பாத்துப்பான்”, என மீண்டும் இன்னொருவரிடம் தீர்வை நிர்ணயிக்கும் உரிமையை கொடுப்பது….எந்த வித சுமூக முடிவிற்கும் வழி வகுக்காது.

உரிமைகளை இனிதே கொண்டாட, அது மறுக்கப் படும் போது , குரல் எழுப்பி எதிர்ப்பு பதிவு செய்வது ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஆனால் நம் ஊரில் மட்டும் அது ஒரு தேவையற்ற செயலாகவே பார்க்கப் படுகிறது.

அவ்வாறு குரல் எழுப்புவர்களும், “வேலை வெட்டி இல்லாம திரிஞ்சுகிட்டு இருக்குதுங்க”, என்ற ஏசல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது.

“என்ன மா பேசற…அதுக்காக மோடி இல்ல வேற மினிஸ்டர் interview  நடக்கும் போது , மல்லுகட்ட சொல்லறியா?”, எனக்கேட்பவர்கள், மீண்டும் பதிவின் துவக்கத்தில் உள்ள ஒளிப்பதிவை பார்த்தால் நன்று. அதில் கேள்வி எழுப்புவர்..உங்களைப் போன்றே ஒரு சாதாரண குடிமகன் தான்.

“பாக்கறதுக்கு நல்லாத் தான் இருக்கு…அதுக்காக மோடி கிட்ட எல்லாம்…”, என குழைபவர்களுக்கு,

modi's suit

நீங்கள் போட்ட வோட்டினால் ஒரு பதவிக்கு வந்து, உங்கள் வரிப்பணத்தில், முழுக்க முழுக்க தன் பெயர் பதித்த ஒரு சட்டையை போட்டு மினிக்கிக் கொள்ளும் ஒரு ‘அரசாங்க வேலைக்காரன்’, உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் இல்லை என்பீர்களா?

குடியரசு தினங்கள், சுதந்திர தினங்கள் போது  மட்டும், “உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகம்”, என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை, அதை நாட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும் நிலைநாட்ட வேண்டும்”, என்பதை தன்னல பேர்வழிகளுக்கு உங்களின் செயலால் புரிய வைய்யுங்கள் .

உங்களுக்கு கொஞ்சம் பதட்டமாக உள்ளதா…புரிகிறது. ‘மக்களின் குரல்’ என பெருமையாய் விளம்பரம் செய்யும் ஊடங்கங்களை உங்களின் குரலை மதித்து, அதற்கு தேவையான வேளைகளில் ஈடுபடச் சொல்லுங்கள்.

“இல்லமா….யோசிச்சு பாத்தோம்; இதெல்லாம் வேலைக்கு ஆகாது. எதித்து கேள்வி கேட்டா தேவை இல்லாத பிரச்சனை வரும்”, என தலைவிதியை துணைக்கு அழைக்கப் போகிறவர்களுக்கு, “ஒன்னும் பிரச்சனை இல்லங்க….நீங்க எதுவும் எத்தனிக்காத வரைக்கும், பதிவோட ஆரம்பத்துல இருக்கற ஒளிப்பதிவுல என்னிக்கும் ஒரு மோடியோ, விஜயகாந்த்தோ, ஜெயலலிதாவோ இருக்க மாட்டாங்க. அதெல்லாம் மேற்குல மட்டுமே நடக்கற ஒரு விஷயமா இருக்கும்”.

இந்தியாவில் Orbiter விண்கலம் விண்ணில் செலுத்தப் பட்டபோது எழுத நினைத்த பதிவு இது. பல வேறு உப்புச்சப்பற்ற காரணங்களுக்காக தள்ளிப்போனது.

மோடியின் ஆஸ்திரேலியா விஜயம் செய்திகளில் சரமாரியாக பேசப் பட்டதை பார்த்த போது, மீண்டும் நினைவுக்கு வந்தது இந்த பதிவு. இந்தியாவின் ‘வளர்ச்சி’ எனக் கூறப்படும் IT சோலைகளும், அணு உலைகளும், வளர்ந்த வண்ணமே இருக்க, விவசாயி தற்கொலைகளும் அதே சமயத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பெரிதளவுக்கு நாட்டு நடப்பில் மாறுதல் எதுவும் இல்லாததனால், இன்றும் பொருந்தும்…என்பதனால் பதிவை பதிவு செய்ய முடிவு செய்தேன்.

farmer and orbiter

படித்த இளைஞன் – “என்ன குப்புசாமி…நியூஸ் பாத்தியா? ஒரு புது ராக்கெட் விட்டிருக்கோம் இந்தியால இருந்து; அது நம்ம உலகத்துல இருந்து வெளிய போய், பக்கத்து கிரகத்துல உக்காரப் போகுது. உலகத்திலேயே இது தான் மொதல் மொறை ஒரு நாடு, முதல் முயற்சியிலேயே வெற்றிகரமா ஒரு ராக்கெட்ட மார்ஸ் கிரகத்துக்கு விட்டிருக்கு.

விவசாயி ஒருவர் – அப்பிடியா? (என சொரத்தையே இல்லாமல் பதில் அளிக்க,)

படித்த இளைஞன் – என்னப்பா…ஊரே அல்லோல கல்லோல படுது…நீ என்னனா, ‘அப்படியா’னு கேக்கற? வீட்டுக்கு வரியா…அந்த ராக்கெட் போட்டோ வ காட்டறேன்

விவசாயி – தேவை இல்லப்பா…நம்ம ஊர்ல இருந்து பக்கத்துல திண்டிவனம் போகவே அரை நாள் ஆகுது. இந்த ராக்கெட் நம்ம உலகத்துல இருந்து அந்த கிரகத்துக்கு போக…ஒரு ரெண்டு மூணு நாள் ஆகாது?
நான் அரசுக்கு போட்ட கருணை மனுவுக்கு இன்னிக்கி பதில் வரும். மின் வெட்டு, வறண்ட நிலம் இது எதுக்கும் ஒரு முடிவு கெடைக்கலனா …குடும்பத்தோட உலகத்த விட்டு போக வேண்டியது தான். அப்ப போட்டோ என்ன…அந்த ராக்கெட்ட நேர்லியே பாத்துக்கறோம்”

இந்த பாகுபாடையும், எது வளர்ச்சி எது வெறும் வீக்கம் என்பதை ‘கற்றது தமிழ்’ படத்தின் இந்த காட்சி அழகாய் பறைசாற்றும்.

(ஒலி ஒளி ஒரு சேரும் படியான நிகழ்படம் கிடைக்காததனால், கீழ்கண்ட விழியத்தை இணைக்கிறேன்)

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சே அழைக்கப் பட்டதும், அதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் செய்திகளில் நிரம்பி இருக்க, இரு இன ஒழிப்பு ஜாம்பவான்கள் சந்தித்தால், உரையாடல் எப்படி இருக்கும்…ஒரு கற்பனை (“யதார்த்தத்த போட்டுட்டு…கற்பனைன்னு மூடி மறைக்கற பாத்தியா”னு சொல்ல போறீங்கனா…அது உங்க இஷ்டம்!!)

scene 1

scene 2

scene 3

scene 4