Posts Tagged ‘நீயா நானா’

இந்த பதிவு எழுத காரணமாய் இருந்த நிகழ்வுகள் இரண்டு. ஒன்று சில வாரங்கள் முன் ஒளிபரப்பான நீயா நானா; இன்னொன்று சென்ற மாதம் அதிர்ச்சி தகவலாய் வந்த என்னுடன் வேலை செய்பவரின் மரணம்.

அன்று நீயா நானாவில் எடுத்துக்கொண்ட விவாதம், “புகழ்வதில் தவறொன்றும் இல்லையே” என்பவர்களுக்கும், “புகழ்ச்சி எல்லாம் வெட்டிப் பேச்சு” என்பவர்களுக்கும். நிகழ்ச்சியில், பாராட்டுதலுக்கும் வெட்டிப் புகழ்ச்சிக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை ஒருவர் கூட எடுத்துக் கூறாதது முதல் நெருடல்.
‘ஒருவரை புகழ்வது என்பது, பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்ற சமயங்களில் மட்டும் நிகழும்’ என்ற பிம்பத்தை அன்றைய நிகழ்ச்சி உருவாக்கியது. இதனால் அலுவலகத்திலோ அல்லது வெளி இடங்களிலோ நிகழும் ‘பலன் எதிர்பாராத’ பாராட்டு பற்றிய கருத்துக்கள் எட்டிப்பாரக்கவே இல்லை.
அதிகாரியின் ‘மொக்கை காமெடி’க்கு சிரிப்பதும், அவர் முன் உட்கார தயங்குவதும், அவர் செய்யும் செயல் அனைத்தையும் கண்மூடித்தனமாக புகழ்ந்து தள்ளுவதும் ‘அலுவலகத்தில் முன்னேறுவதற்கான மூன்று வழிகள்’ என பெரும்பாலானோர் புகழ்ந்தது இன்னொரு நெருடல்.

இதற்கு நேர் எதிரான வகை மனிதர்களும் உண்டு. “என்ன சார்…குடுக்கற சம்பளத்துக்கு வேலை செய்யறாங்க. இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு…”, என பாராட்டு முத்துக்கள் வாயிலிருந்து விழுந்து விடக் கூடாது என மிகவும் கவனமாக இருப்பவர்கள்.
ஒரு சமூகத்தில் இவ்விரு அணுகுமுறையும் ஆபத்தானதே.

இந்த கும்பிடு போட்டு முன்னேறலாம் என நினைக்கும் மனிதர்கள், சுய மரியாதையை கழற்றி வீட்டில் வைத்து விட்டு வேலைக்கு வருவார்களோ என்ற சந்தேகம் மட்டுமே தலைதூக்குகிறது.
ஒருவர் படித்த படிப்பையும், அவரின் வேலை அனுபவத்தையும் பார்த்து தரப்படவேண்டிய பதவி உயர்வுகள்…மேலதிகாரிக்கு பால் கார்டு வாங்கிக்கொடுப்பதன் மூலமும், ரேஷனனில் சர்க்கரை உஷார் செய்வதன் மூலமும் அமைவதெனில்..அது அந்த உழைப்பாளியின் கீழ்த்தனமான கூனிக்குறுகும் போக்கையும், மேலதிகாரியின் திறமையற்ற நிலமையையுமே காட்டுகிறது.
நம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் அடிமைத்தனமும், ‘வயசாகி இருந்தா இல்ல வேலைல நெறைய வருஷம் இருந்தா…அவங்க சொல்றது எல்லாம் சரி’, என்ற கருத்தும், இந்த ‘சலாம்’ போடும் மனப்பான்மைக்கு தீனி போடுகிறது.
நான் செய்யும் வேலையை மதிக்கிறேன். பல முறை அவ்வேலையால் வேலையிடத்தில் நிகழும் மாற்றங்கள் பார்த்து பெருமை அடைகிறேன். இந்த சுய மரியாதை காரணமாக, மேலதிகாரிகளிடம் ‘சலாம்’ போடத் தோன்றியதில்லை. அவ்வாறு செய்வதையும் தன்மானத்திற்கு இழைக்கும் ஒரு இழிவாய் பார்க்கிறேன்.
இதனால் தன்னலத்திற்காக மட்டும் புகழ்வதில் நற்பலன்கள் இருக்கிறதா, அதை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதில் நேரத்தை வீணாக்காமல், அடுத்த வகையான மக்களுக்கு தாவுகிறேன்.

‘பாராட்ட மாட்டேன் சார்’ என கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்களின் வாழ்க்கை இன்னும் கடினமென நினைக்கிறேன்.
அலுவலகத்தில் ஒரு முக்கிய கூட்டம், வண்டி மக்கர் செய்த காரணத்தினால் டாக்ஸி எடுக்கிறீர்கள். வாகன நெரிசலை அழகாக சமாளித்து உங்களை சரியாக வேலையில் கொண்டு வந்து சேர்க்கிறார் ஓட்டுனர். வேலையில் நீங்கள் முடிக்க வேண்டியிருந்த ஒரு காரியத்தை நண்பர் முடித்துக் கொடுக்கிறார். இந்த இடங்களில் “அதுக்கு தான டாக்ஸி க்கு காசு குடுக்கறோம்”, “அடுத்த மொறை அவருக்கு ஒரு தேவைனா நானும் செய்வேன்” போன்ற சப்பக்கட்டுகள் அபத்தம். இது மாதிரி தருணங்களில் பாராட்டை வாரி இரைக்காமல் பொத்தி வைப்பது சிறிது ‘காமெடி’ ஆகவும் உள்ளது.
பாராட்ட தயக்கம் தலைதூக்குவதாலோ என்னவோ, ஒருவரை மனமுவந்து பாராட்டும் போது, அதை ஏற்றுக்கொள்ளவும் ஒரு தயக்கம் நிலவுகிறது.
இம்முறை இந்தியா சென்ற போது, மக்களின் இறுக்கத்தையும் அதன் காரணமாய் வறண்டு கிடந்த பாராட்டு பரிமாற்றங்களையும் துல்லியமாக பார்க்க முடிந்தது. கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் ஹோட்டல் சர்வர்களின் சேவையை சிரித்து பாராட்டி மகிழும் போது, ஏதோ ஒரு புதிய முகபாவனையை பார்ப்பது போல் பார்க்கின்றனர். அனைத்துமே வியாபாரம் ஆகி விட்ட காரணத்தினால், “கார் தான ஓட்டினோம்…எதுக்கு பாராட்டறாங்க”, “அவங்க குடுத்த காசுக்கு தோசை…இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம்”, என நினைக்கவும் வாய்ப்புகள் உண்டு.
இந்த இடத்தில் 2007இல் வேலை விஷயமாக நியூயார்க் போயிருந்த போது நடந்த ஒரு நிகழ்வு தான் நினைவிற்கு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பப் போகிறேன் என்ற களிப்பில், மூட்டை மூட்டையாக இனிப்புகள் வாங்கிக் குவித்தேன். அந்த பைகளுடன், என் மடிக்கணினியையும் ஏந்தியபடி என் தோழியுடன் ரயிலில் ஏறினேன். 20 நிமிட பயணத்திற்குப் பிறகு என் நிறுத்தம் வர, இறங்கினேன்…என் தோழியிடம் மடிக்கணினி இருக்கு என்ற நம்பிக்கையில். ரயில் கிளம்பிய ஒரு 5 நிமிடம் கழித்து, அவளிடம் என் மடிக்கணினி இல்லை என தெரிய வருகிறது.என்னதான் ஆங்கிலம் தெரிந்திருந்த போதும், புது ஊரில் என்ன செய்வதென தெரியாமல், ரயில் நிலையத்தில் நின்றேன்…அழவும் ஆரம்பித்தேன். பெரிதாக நம்பிக்கை இல்லாத போதும், அங்கிருந்த காவல் துறை அலுவலகத்திற்கு விரைந்தேன். தேம்பித் தேம்பி அழுது கொண்டே என் கைய்யறு நிலையை விளக்கினேன். அங்கிருந்த அதிகாரி சிறிதும் பதட்டப்படாமல், என்னை இருக்கையில் அமரச் சொன்னார்.

இங்கு நடந்த கலவரத்தில், ரயில் ஒரு 5-6 நிறுத்தங்கள் தாண்டி இருக்கும்….இவர் இப்படி அநியாயத்திற்கு அமைதியாக இருக்கிறாரே என ஒரு பக்கம் கோபமும் வந்தது. 45 நிமிடம் அங்கு அமர்ந்திருப்பேன்…இன்னொரு காவல் அதிகாரி என் மடிக்கணினியுடன் உள்ளே நுழைந்தார்!!! எனக்கு அந்த நிமிடம் களிப்பும், அதன் காரணமான இளிப்பும், பயங்கரமாக அழுததனால் மூக்கில் சளியும் வந்தது மட்டும் தெளிவாக நினைவில் உள்ளது. சரியாக என்ன சொன்னேன் என நினைவில்லை, ஆனால் சரமாரியாக நன்றிகள் உரைத்தேன். வைத்திருந்த இனிப்பு மூட்டையிலிருந்து இரண்டு பொட்டலங்களை அளித்தேன். அதற்கு அவசியமில்லை என கூறினார்…அப்பொழுதும் அதே அமைதியான சிரிப்புடன். அறிவாற்றலா அல்லது தகவல் அழைப்பு மையத்தில் (call centre) வேலை செய்த அனுபவமா தெரியவில்லை…அந்த காவல் துறை அதிகாரியின் மேல் அதிகாரியின் மின்னஞ்சல் முகவரியை வாங்கிக்கொண்டேன். குடியிருந்த ஹோட்டலுக்கு வந்த உடன் ஒரு வாழ்த்து மின்னஞ்சல் அனுப்பினேன்.
இதைபற்றி நண்பர்களிடம் சொன்ன போது, பெரும்பாலானோர் பாராட்டிய போதும், ஒரு சிலர், “அவங்க ரயில்வே போலீஸ், அதுதான் அவங்க வேலை.ஈமெயில் எல்லாம் கொஞ்சம் ஓவர்”, என்றனர். அந்த இடத்தில் வாதாடவில்லை எனினும், “உங்களுக்கு புரிய வைக்கறது ரொம்ப கஷ்டம்”, என அலுத்துக்கொண்டது நினைவில் உள்ளது.
அடுத்து திரும்ப அமெரிக்கா செல்லும் போது, அந்த ரயில் நிலையத்திற்கு செல்வேனா என தெரியாது. அப்படியே சென்றாலும், அந்த நபரை பார்ப்பேனா என தெரியாது. பின்னர் அந்த மின்னஞ்சல் எதற்கெனில், “அந்த மேலதிகாரிக்கு அவர் அணி நபரின் நற்செயலை உயர்த்தி உரைக்க, அந்த மின்னஞ்சலை அவ்வூழியர் பார்க்கும் போது அவர் பெருமிதத்துடன் புன்னைகைக்க…இவை அனைத்திற்கும் மேல் என் திருப்திக்கு.

இங்கு என் நண்பர் Chris பற்றி பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் அணியில் இல்லையெனினும், என் வேலை நிமித்தமான தரவு செயலாக்கங்களுக்கு (data mining) உதவும் அணியில் இருந்தவர். தன் வேலையை மிகவும் விரும்பிச் செய்பவர்; விடுமுறை எடுத்து வெளிநாடுகள் செல்ல விருப்பம் இருந்த போதிலும், வேலை மீது இருந்த அளவு கடந்த பிரியத்தினால் விடுமுறைகள் பெரிதாக எடுத்ததில்லை. சென்ற மாதம் Vietnam சுற்றிப்பார்க்க விடுமுறை எடுத்திருந்தார்.

அன்று வீட்டில் இருந்து வேலை செய்துக் கொண்டிருந்தேன். அவர் தயாரித்த ஒரு ஆய்வறிக்கையை (Presentation) படித்துக்கொண்டிருந்த போது, என் அணித்தலைவர் ஒரு அவசரக்கூட்டத்திற்கு அணியை அழைத்தார். கலந்துகொண்ட எங்களுக்கு அவர் அளித்த திடிக்கிடும் தகவல், விடுமுறைக்கு சென்றிருந்த இடத்தில், உடல் உபாதை காரணமாக Chris இறந்து விட்டார் என்பது. எனக்கு அந்த செய்தி மனதில் பதியாத படியே நின்றது. தொலைப்பேசி இணைப்பை துண்டித்து, Chris தயாரித்த ஆய்வறிக்கையை வெகு நேரம் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
அடுத்த நாள் Chris குடும்பத்திற்கு கொடுக்க இருந்த புகழுரைகளில் (tributes) பங்களித்ததில் ஒரு நிம்மதி கிடைத்த போதிலும் அவரின் ஈமச்சடங்கில் பங்கேற்க மட்டும் எனக்கு மனத்துணிவு வரவில்லை. சில வாரங்களுக்கு முன் அவருடன் மதிய உணவு கூடத்தில் சிரித்து பேசிக்கொண்டிருந்ததும், வெகு நாட்கள் கழித்து தன் துணைவியுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாய் சொல்லி அவர் களிப்படைந்ததும் கண் முன் வந்தவாறே இருந்தது. இதற்கு ஒரு சுமூகமான முடிவு (closure) கிடைக்க கடைசியாக பார்த்து வர வேண்டும் என நினைத்த போது,
“நீ ஒரு உதவி கேட்டு வந்தா…Chris மத்த வேலை எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு உனக்கு உதவுவான்”, என Chris இன் அணியில் இருந்த ஒரு பெண் கூற, என்னையும் மீறி கண்கள் கலங்கின. ஈமச்சடங்கில் உணர்ச்சிவசப் பட்டு விடுவேன் என புரிந்தது…போகும் யோசனையை முழுவதுமாய் கைவிட்டேன்.

இன்று இந்த பதிவு எழுதும் போது தோன்றுவதெல்லாம் இந்த வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை தான். அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்த வருடம் என்ன நிலைமையில் இருப்போம் என்பது நம் கைவசம் இல்லாத போது, “பாத்துக்கலாம்…அவன் மேனேஜர் நம்ம கருத்த கேட்டா பாத்துக்கலாம்”, “சரிதான்…சுமூகமா முடிச்சான். அதுக்கென்ன…பாராட்டினா தலைக்கு மேல ஏறிடும் சார்”, மாதிரியான தடுப்புச் சுவர்களை போட்டுக்கொள்வது பயனற்றதே.
அந்த விதத்தில், வசூல்ராஜா MBBS திரைப்படத்தில் கமல் ஒரு இடத்தில் ஆஸ்பத்திரியை சுத்தம் செய்பவரை கட்டி அணைத்தபடி, “நம்ம வேலைய பாராட்ட முதலாளியா வரப்போறாரு…இது மாதிரி நம்ம தான் ஒருத்தர ஒருத்தர் பாராட்டிக்கணும்”, என கூறும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. பெரிய IT நிறுவனங்களில், மேல் தளத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு, கடை நிலை ஊழியனை பாராட்டுவதற்க்கான மனம் இருக்குமா என்பதை விட, நேரம் இருக்காது என்பது தெளிவு.

அந்நிலையில் நம் கூட வேலை செய்பவர் செய்யும் வேலையின் மதிப்பு தெரிந்த நாமும், “அந்த வேலைய செய்யத் தானப்பா சம்பளம்….இதுல பாராட்டு என்ன கொசுறு”, என இருந்து விட்டால், வேலை இடம் மனித எந்திரங்கள் நிறைந்த வெற்றிடமாக மட்டும் இருக்கும். மற்றவரின் வேலையை மதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் அவர்கள் செலுத்தும் அக்கறையை உணர ஆரம்பிக்கும் போது, பாராட்டுக்களும் தானாக பின் தொடரும். “வெட்டி பந்தா, ஜம்பத்த எல்லாம் விட்டுட்டு, கூட இருக்கறவங்கள மனசு விட்டு பாராட்டுங்க சார். நாளைக்கி என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. நீங்க ஆரம்பிங்க….அந்த பாராட்டு சங்கிலி தொடரும் பாருங்க. மனிஷங்க நாம….நாமளே மனிதத்த வளக்கலனா யாரு செய்யப்போறாங்க சொல்லுங்க”

“இதெல்லாம் சுத்த பேத்தல்…போன வாரம் கூட, 5 பவுணுக்கு ஒரு சங்கிலி வாங்கிக்கொடுத்தேன். இன்னும் ரெண்டு வாரத்துல எங்க கல்யாண நாள். அதுக்கு சாமூத்ரிகா பட்டு பொடவை கேட்டிருக்கா. எனக்கு இந்த பெண்ணியவாதிகள் பேச்சுல அர்த்தம் இருக்கறா மாதிரி தெரியல”, என புலம்பித்தள்ளினான் அருண்.
“தாறுமாறான விவாதம் போல…அருண் உங்க முகம் அப்படி செவந்து போயிருக்கு”, என கண்ணடித்தபடி, விவாத ஜோதியில் ஐக்கியமானான் சதீஷ்.
“இல்லப்பா…நம்ம ஜேம்ஸ் இன்னிக்கி 2 hour permission …ஏதோ பெண்ணியவாதிகள் கூட்டத்துக்கு போயிட்டு வருவாராம்”, என அருணின் கோபத்திற்கு காரணத்தை உரைத்தான் ஆறுமுகம்.
“யப்பா…பெண் விடுதலையா…’ஆண்கள் தான் அவங்கள அடக்கி ஆளறாங்க’னு இந்த பெண்ணியவாதிகள் அடிக்கற கூத்து, தாங்க முடியலடா சாமி. நம்ம வீட்டுக்கு எல்லாம் வந்து பாக்கணும், அப்ப தெரியும். நாம வாங்கற ஒரு 500 ரூவா சட்டைக்கு, அவங்க ஒரு 5000 ரூவாய்க்கு பொடவை வாங்கறாங்க; எந்த ஊர்ல இது அடிமைத்தனம்னு தெரியலியே”, என தன் பங்குக்கு அலுத்துக்கொண்டான் சதீஷ்.
“நேத்து ஏதோ பேசிட்டு இருக்கும் போது, கொஞ்சம் கோவத்துல அடிச்சிட்டேன்…லைட்டா தான்ப்பா. அதுக்கு வீட்ல போட்ட கூச்சல பாக்கனுமே….எங்க அம்மா அப்பா கூட என்ன அடிச்சது இல்ல…அது இதுனு. சமாதானம் செஞ்சு படுக்க போகும் போது, மணி 12”, இது மீண்டும் அருண்.
ஜேம்ஸ் வருவதை பார்த்து அனைவரும் அமைதி ஆகினர்.
“என்ன பாஸ்…இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. நீங்க இது மாதிரி மீட்டிங் எல்லாம் போறது, எங்கள எல்லாம் கெட்டப் பசங்களா காட்டுதுல”, என மெதுவாய் தாக்குதலை துவங்கினான் அருண்.
“பார்றா…போன weekend நீங்க எல்லாரும் ‘நவீன சரஸ்வதி சபதம்’பாக்க போனீங்க..நான் வரல. நீங்க அந்த படத்த பாத்து என்ன கெட்டப் பையனா காட்டறீங்கனு சொன்னா…அது எவ்வளவு அபத்தமா இருக்கும். உங்களுக்கு பிடிச்சிருக்கு நீங்க பாக்கறீங்க. என்னதான் பேசறாங்கன்னு பாக்க ஆசையா இருந்துச்சு …நான் போனேன்”, என தன் தரப்பு வாதத்தை முன் வைத்தான் ஜேம்ஸ் .
“பாயிண்ட் சரி மாதிரி தான் இருக்கு…இருந்தாலும்”, என தலையை சொரிந்தான் அருண்.
“பெண் விடுதலை பத்தி பெண்ணியவாதிகள் ‘நீயா நானா’ல பேசி கேட்டிருக்கேன்…இப்போ அவங்க மீட்டிங் ஒன்னுத்துக்கு போக வாய்ப்பு கெடைச்சது…எதுக்கு விடனும்னு…ஆனா நெஜமாவே ரொம்ப புதுசா இருந்தது அருண். இதெல்லாம் தெரியாமலே இருந்துட்டோமேனு கூட தோணிச்சு”, என தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டான் ஜேம்ஸ்.

“ஏதோ சொல்ல வரீங்கன்னு புரியுது…ஆனா வெளங்கலியே. பெண்ணியம் எல்லாம் பொம்பளைங்க சம்பந்தப்பட்ட விஷயம்ல. அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்”, என அருண் கேள்வி எழுப்ப, கூட்டத்தில் இருந்த அனைவரும் கேள்வியை ஆமோதித்தனர்.
“இதே கேள்விய அந்த மீட்டிங்லயும் ஒருத்தர் எழுப்பினாரு. அதுக்கு மேடைல இருந்தவங்க ரொம்ப பொறுமையா ஒரு example வச்சு வெளக்கினாங்க. நம்ம கூட வேலை பாக்கறாரு ஒருத்தர். அவர எப்பவும் சுத்தி இருக்கறவங்க நக்கல் செய்யறதும், அவங்க வேலை எல்லாத்தையும் அவர் தலைல கட்றதுமா இருக்காங்க. கொஞ்சம் பயந்த சொபாவம் அவருக்கு…தன் பக்கம் நியாயம் இருந்தா கூட, குரல உயர்த்தி பேசமாட்டாரு. நாம சத்தமா பேசிட்டா நம்மள பத்தி ஆபீஸ்ல தப்பா நினைப்பாங்கன்னு அவரும் தட்டிக்கழிச்சுகிட்டே இருக்காரு. உங்களுக்கு அவர பத்தி நல்லா தெரியும்..அவர் மேனேஜர் உங்க friend. உங்களுக்கு ஒரு சான்ஸ் கெடைச்சா, உங்க friendகிட்ட அந்த விஷயத்த பத்தி பேசுவீங்களா மாட்டீங்களா? அவர் நாசமா போகணும்னு எண்ணம் இருந்தா, அது வேற விஷயம். so matter என்னனா…அந்த பயந்து பயந்து வாழற ஊழியர மாதிரி தான் பெண்களும், எல்லா பெண்களுமே அப்படி இல்லாட்டியும், பெரும்பாலும் அப்படிதான் இருக்காங்க. ஒரு பொண்ணுக்கு சின்ன வயசுல இருந்தே, ‘அடங்கி தான் போகணும்’, ‘புருஷன் மனசு நோகாம நடந்துக்கணும்’, ‘அடிக்கறாரா…டென்ஷன்ல அடிச்சிட்டாரு, பொறுத்துக்கணும்’, ‘அவர் இல்லனா உனக்கு வாழ்க்கை பூஜியம்தான்’னு வீட்ல இருக்கற பெரியவங்க அறிவுரை குடுத்தே வளக்கறாங்க. அவ அவ்வளவு மழுங்கடிக்கப்படும் போது , எந்த படிப்பும் அந்த மழுங்கடிப்ப சரிப்பண்ண முடியாது”, என ஒரு நீண்ட பதிலை வழங்கிய ஜேம்ஸ், சதீஷ் கொட்டாவி விடுவதை பார்த்து,
“செமையா மொக்கை போடறேன்ல..’இதெல்லாம் ஏன்டா நமக்கு தெரியாம போச்சு’னு தோணின பல விஷயங்கள்..அதுதான் பகிர்ந்துக்கனும்னு தோணிச்சு”, என தன் இருக்கை நோக்கி நடக்க எத்தனித்தான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க, எனக்கும் இதெல்லாம் புதுசா இருக்கு. முன்னமே தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேன்; நீங்க மேல சொல்லுங்க”, என ஜேம்சின் பையை வாங்கி மேசை மீது வைத்தான் அருண்.

ஒரு மெல்லிய சிரிப்புடன், “அம்மா அப்பா சொல்றது கேட்டுகிட்டு, அப்பறம் புருஷன் நிழல்ல இருக்கறதுதான் பெருமைன்னு சொல்லியே பொண்ண வளக்கறாங்க. என் wife கல்யாணத்துக்கு முன்னாடி sterlite corporationல chemical engineer; ஒரிசால வேலை பாத்தா. ரெண்டு வருஷம் ‘Employee of the year’ விருது வாங்கினா.
கல்யாணத்துக்கு முன்னால…அவள போன்ல புடிக்கறதே கஷ்டம்…வேலை மேல அவ்வளவு ஈர்ப்பு அவளுக்கு. ஆனா கல்யாணத்துக்கு அப்பறம், ‘ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி’னு பெருசுங்க சொல்கேட்டு, வேலைய resign செஞ்சா. இங்க சென்னைல வீட்டு வேலைய பாத்துக்கிட்டு கொழந்தைகள கவனிச்சுக்கறா. நான் படிச்சவன் தான, ஆனா ஒன்னுமே பேசாம “அம்மா மனசு நோகாம நடந்துக்கோ”ன்னு, என் வேலைய பாத்துகிட்டு இருக்கேன். இங்க தான் ஆம்பளைங்களுக்கு பெண்ணியம் தேவை படுது”, என ஜேம்ஸ் முடிக்கும் முன்,
“இல்ல பாஸ்…வேலை பாக்கறதுல எல்லாம் விருப்பம் இருந்தா அவங்க ஏன் வீட்ல இருக்காங்க. அவங்களுக்கு சமைக்கறது, கொழந்தைங்கள பாத்துக்கறது, டிவில ரெண்டு சீரியல் பாத்து அழறது, beauty parlor போய் அழகு செஞ்சுக்கறது…இதெல்லாம் தான் பிடிச்சிருக்கு”, என ஆறுமுகம் முந்தி அடித்தான்.
“நீங்களே உங்க wife சொல்லி கேட்டீங்களா…?? சுத்தி இருக்கற பெண்கள பாத்துட்டு, இது தான் அவங்களுக்கு பிடிச்சிருக்கு போலன்னு நாம நினைக்கறோம். அவங்களும் நண்பர்கள், உறவினர் கூட்டத்துல இருக்கற லேடீஸ் எல்லாம் ‘இல்லத்தரசி’யா கொழந்தை வளர்ப்பு, கணவனுக்கு புடிச்ச சாப்பாடு சமைக்கறதுன்னு இருக்கறத பாத்துட்டு இதெல்லாம் முடிக்கவே ஒரு நாள் முழுக்க தேவை போலவே…இதுக்கு மேல வேலையா…நோ நோ னு அவங்களையே நம்ப வச்சுக்கறாங்க”, என ஜேம்ஸ் விடையளிக்க,
“ஆனா பாஸ்…சில லேடீஸ் வேலைக்கு முன்னபின்ன போயிருக்கவே மாட்டாங்க. அவங்கள force பண்ணி வேலைக்கு போன்னு எப்படி சொல்றது”, என யதார்த்தமாய் வினவினான் சதீஷ்.
“நீங்களே யோசிங்க…அவங்களுக்கு மட்டும் அது என்னங்க தனி சலுகை? அவங்க இன்ஜினியரிங் படிக்கறாங்க, நாமளும் படிக்கறோம், ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் நாம கட்டாயம் வேலைக்கு போகணும். அவங்க வீட்ல இருக்கணும்னு முடிவு செஞ்சா பரவாயில்லையா?
இன்னொன்னு…வெளில போய் வேலை செய்யும் போது, ஊர் நடப்பு பத்தி தெரிஞ்சுப்பாங்க. ஈஸியா முடிக்க வேண்டிய விஷயத்துக்கு எல்லாம் உங்கள நம்பி இருக்க மாட்டங்க. எல்லாத்துக்கும் மேல…வீட்ல ரெண்டு சம்பளம். ஒரு வீடோ, பசங்களுக்கு நல்ல ஸ்கூல்ல admissionஓ ஆசை பட்டீங்கனா, finance கொஞ்சம் இடிக்காது. அவங்க ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்களையே நம்பி இருக்கும் போது, வீட்ல எந்த பெரிய முடிவுலயும் அவங்க பங்கு இருக்காது. ஆரம்பத்துல இருந்து நீங்க தான் மண்டைய போட்டு பிச்சுக்கணும். நம்ம ஆபீஸ்லியே பாக்கறோம்….நாம வெளிப்படையா பாராட்டலனாலும், சாரதா, கீதா…அவங்க சாதுரியம் எவ்வளவு தடவை நமக்கு ஹெல்ப் பண்ணி இருக்கு. ஆம்பளைங்க தான் புத்திசாலிங்க…பொண்ணுங்க எல்லாம் குருட்டாம்போக்குல மனப்பாடம் செஞ்சு பரிட்ச்சைல வாந்தி எடுப்பாங்கனு ஒரு கேவலமான கருத்துனால, அவங்கள ஒரு பொருட்டா நாம மதிச்சு எதுவும் கேக்கறதில்ல.
அவங்களும் ‘கேட்டா பாத்துக்கலாம்’னு சும்மா இருக்கறாங்க”, என கூறியபடியே அருண் பக்கம் பார்வையை திருப்பிய ஜேம்ஸ்,
“அருண் என்ன ஆச்சு…ஏன் திடீர்னு upset ஆய்ட்டீங்க”, என கேட்டான்.
“கொஞ்சம் guiltyயாத்தான் இருக்கு பாஸ்…ஏதாவது பிரச்சனைல கொழம்பிட்டு இருப்பேன்…அவ கிட்ட ஷேர் பண்ணி அவ கருத்த கேக்கனும்னு தோணினா கூட, “அது எப்படி ஒரு பொட்டச்சிகிட்ட அட்வைஸ் கேக்கறதா”னு தட்டி கழிச்சிருக்கேன்”, என அருண் முடிப்பதற்குள்,
“நான் இன்னும் மோசம் பாஸ்…அவ கொழந்தைங்க ஸ்கூல் projectsல ஹெல்ப் பண்ணும் போதெல்லாம், அவ ideas செம அசத்தலா இருக்கும்..’நமக்கு அது தோணவே இல்லியே’னு நினைப்பேன்…பாராட்டனும்னு தோணும்; ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளையே வச்சுப்பேன்”, என ஆறுமுகம்.
“இதுல எல்லாம் ஒரு ஆறுதல் என்னனா…நம்ம யாரும் பொண்ணுங்க மேல ஒரு வெறுப்புல இத பண்ணல. வழி வழியா இப்படி தான் வளக்கப் படறோம். ஒரு வேளை நம்ம அப்பாக்கோ தாத்தாக்கோ இந்த மாதிரி ஒரு புரிதல் கெடைச்சிருந்தா…நாம இப்ப இந்த விஷயத்த பத்தி பேசிட்டு இருக்கவே மாட்டோம். இப்ப இந்த விவரம் புரிஞ்சதுக்கு அப்பறம், நம்ம கொழந்தைங்கள இப்படி வளக்க மாட்டோம்; ‘படுக்கையறைல போகப் பொருள், சமையலறைல சமையல்காரி தான பொண்ணு”னு ஒரு கீழ்த்தனமான எண்ணம் அவங்களுக்கு இருக்காது”, என ஒரு நிம்மதி பெருமூச்சுடன் முடித்தான் ஜேம்ஸ்.

ஒன்றுமே பேசாமல் உரையாடலை மட்டும் கேட்டுக்கொண்டிருந்த தினகர், “எல்லாம் சரிதான் பாஸ்..ஆனா கொஞ்சம் முக்கியத்துவம் குடுக்கறத வச்சு, ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்கனா என்ன பண்றது…அதுவேற, “சரி தீனா, இன்னிக்கி நீ கொஞ்சம் சமையல கவனி”னு சொல்லிட்டா…”, என வினவ,
“அட ஆமாம்ல..”, என சதீஷும், ஆறுமுகமும்.
“நீங்க இருங்க ஜேம்ஸ் …இதுக்கு நான் பதில் தரேன். கிட்டத்தட்ட 25 வருஷமா யாருக்காவது அடங்கியே இருந்திருக்காங்க…அந்த புதுசா கெடைச்ச விடுதலைய கொஞ்சம் அனுபவிச்சாத்தான் என்ன. அப்பறம்…சமையல் செய்யறதுல என்ன பாஸ் கேவலம்..இந்த கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி பாக்க ஆரம்பிச்சதுல இருந்து, எனக்கும் கிச்சன்ல அசத்தனும்னு ஆசை வந்திருக்கு. வீட்ல சொன்னதில்ல…ஆனா இப்ப ‘எனக்குள் இருக்கும் நளனை வெளிக்கொணரும் சமயம் வந்துவிட்டது”, என நிமிர்ந்த தலையுடன் பெருமையாய் விடையளித்தான் அருண்.
“இன்னொன்னு…நீங்க இவ்வளவு மாறும் போது, அவங்களும் அத நிச்சயம் பாராட்டுவாங்க. உங்க ரெண்டு பேர் நடுவுல இருக்கற சமூகம் விதித்த தடை ஒடைஞ்சதுக்கு அப்பறம்…கலந்துரையாடல்ஸ் ஈஸியா நடக்கும்”, மீண்டும் அருண்.
‘salute’ அடிக்கும் தோரணையில் அருணை பார்த்த ஜேம்ஸ், “பொண்ணுங்க மாதிரியே நாமளும் ஒரு 25 வருஷம் இந்த ஈகோவ கட்டிகிட்டே வளந்துட்டதுனால…ஆரம்பத்துல கொஞ்சம் கடியாத்தான் இருக்கும். சொல்லும் போதே எனக்கு வயித்த பொறட்டுது”, என சற்றே பயந்த கண்களுடன் செல்ல எச்சரிக்கை விடுத்தான் ஜேம்ஸ்.
“நான் கெளம்பறேன் பாஸ்”, என நழுவ எத்தனித்தான் ஆறுமுகம்.
“போன் தான நோண்டிகிட்டு இருந்தீங்க…யாருக்கு இவ்வளவு அவசரமா…”, என ‘கலாய்க்க’ ஆரம்பித்தான் சதீஷ்.
“என்ன தப்பு பாஸ்…wifeக்கு call பண்ணனும்னு உங்க எல்லாருக்கும் தோணிச்சு. நான் செயல்ல எறங்கிட்டேன்”, என ஒரு கோபம் கலந்த குரலில் விடையளித்தான் ஆறுமுகம்.
“யப்பா…பையனுக்கு மூக்கு மேல கோவம் வருது. சாரி பாஸ்..நானும் ஏதாவது surprise குடுக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா என்னனு தான் தெரியல. நகை, சினிமா டிக்கெட் இல்லாம வேற ஏதாவது புதுசா யோசிக்கணும்”, என யோசிக்கும் முகபாவனையுடன், குழுவில் இருந்து விலகினான் சதீஷ்.
“ரொம்ப நன்றிங்க ஜேம்ஸ். எதெல்லாம் மாத்திக்க போறேன், எத மொதல மாத்திக்க போறேன்…எதுவும் தெரியல; ஆனா ஏதோ ஒரு புத்துணர்ச்சி! உங்களுக்கு குடுத்திருக்கற அந்த code testing …இனி என் பொறுப்பு”, என ஜேம்சை தட்டிக்கொடுத்தான் அருண்.
“உங்க திறந்த மனசு தான் முக்கியமான காரணம் அருண். ’25 வருஷமா நமக்கு தெரியாததையா சொல்லிட போறான்’னு நீங்க இந்த பேச்சு வார்த்தைய நிறுத்தி இருந்தா, எப்பவோ இந்த கூட்டம் கலைஞ்சிருக்கும். அப்பறம் coding எல்லாம் வேணாம்…இன்னிக்கி வேலை செய்யற mood இல்ல. நாயர் கடைல ஒரு டி, மசால் வடை சாப்பிட்டா சூப்பரா இருக்கும்; ஒரு 10 நிமிஷத்துல lift பக்கம் மீட் பண்றேன்”, என ‘thumbs up’ செய்கை செய்தபடி, தன் இருக்கைக்கு நடந்தான் ஜேம்ஸ், முகத்தில் ஒரு காதல் கலந்த சிரிப்புடன், மனைவிக்கு அலைபேசியில் ஒரு குறுந்தகவல் type செய்தபடி.

சமீபத்தில் நீயா நானாவில் இடம் பெற்ற பெண்ணியம் தொடர்பான விவாதத்தில், வெகுவாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர், “கணவனே கண் கண்ட தெய்வம்” என்ற விதிமுறையை தன் மகிழ்ச்சிக்கு காரணமாய் நினைத்த ஒரு பெண் (பெண்ணியவாதிகள் அல்லாத அணியில் இருந்த பெரும்பாலானோர் அவ்வாரே நினைத்திருப்பர்)

அந்த பெண்ணின் வெகுளித்தனமான பேச்சும், தன் கணவன் மீது வைத்திருந்த காதலையும் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பர். ஒரு இடத்தில், கணவன் தன் அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலையை நள்ளிரவு வரை செய்து கொண்டிருந்த போது , அந்த பெண்ணும் அவருடன் அமர்ந்திருந்ததாக கூறி மகிழ்ந்தாள். “உன் வேலைக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தவங்க…நீ உக்காந்திருக்கனு ஒரே காரணத்துக்காக…தூங்காம கண் முழிச்சுகிட்டு இருக்காங்க…அது ஒனக்கு பெருமையாடா?”, என கேட்க தோன்றிய போதும், “அவர் பாவம்…கண் முழிச்சுகிட்டு இருக்காரு…நான் மட்டும் கொறட்டை விட்டு தூங்கினா நல்லாவா இருக்கும்”, என சட்டென பதிலளிக்க இருக்கும் பெண்ணிற்கு, இக்கேள்விகள், கணவனை ‘இழிவு’ படுத்தும் பெண்ணிய பேத்தல்.

எதிர் அணியில் இருந்த பல பெண்ணியவாதிகள் பேசியவை, “என்னம்மா…இது கூட தெரியாம இருக்க”, “உன் தலைல society நல்லா மொளகாய் அறைக்குது”, மாதிரியான தோரணையில் இருந்த போது, ஓவியா அவர்களின் வார்த்தைகள், எதிர் அணியில் உள்ள பெண் யோசிக்க வேண்டும் என்ற ஒரு ஆதங்கத்தில் வெளிவந்ததாகவே எனக்கு தோன்றியது.
கணவனை கொண்டாடிய பெண்ணை, கோபி உட்பட அனைவரும் கைதட்டி புகழ்ந்த போது ,ஓவியாவின் ஒரு வாக்கியம், சாட்டையடி
“கணவன் மனசு நோகாம நடந்துகறீங்க சரி…அப்படியே அவர் அடிக்கறதையும் தாங்கிகிட்டு இருந்தா…உங்க பொண்ணும் அதுல ஒன்னும் தப்பில்லைன்னு தான் நினைப்பா”.
அந்த பெண் கூறியவை அனைத்தையும் “சூப்பர்ங்க …மனசுல பட்டத பேசறாங்க; சந்தோஷமா தான் இருக்காங்க”, என கூறியவாறு புகழ்ந்து தள்ளிய கோபிநாத், ஓவியா அவர்களின் இவ்வாக்கியத்திற்க்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுக்காதது வருத்தமே.
“புருஷன் தான..”, “பாவம் என்ன tension ஓ”,என கணவன் செய்யும்’சரியற்ற’செயல்கள் அனைத்தையும் பொருத்துக்கொள்ளும் பெண்கள், ஒரு நிமிடம், இந்த ஒரு சூழ்நிலையை யோசிக்க வேண்டும்.

homemaker எனவும் வீட்டின் மகாலட்சுமி எனவும் புகழப்படுகிறீர்கள். ஒரு நாள் பிள்ளைகளின் பிடிவாதம் பொருக்க முடியாமல் போகிறது. வீட்டிற்கு வரும் கணவன், ஏதோ சாதாரணமான கோரிக்கையை முன் வைக்கும் போது, உங்களுக்கு எரிச்சல் அதிகமாகி, கணவனை அறைந்து விடுகிறீர்கள். “வீட்ல இருக்கற டென்ஷன் ல அடிச்சிட்டா”, என உங்கள் கணவர் பொருத்துக் கொள்ளப் போகிறாரா?

‘Tension’இல் என்றாவது உங்கள் கணவர் அவர் மேலதிகாரியையோ, அவர் கூட வேலை செய்பவர்களையோ அடித்துள்ளாரா? சக மனிதனை அடிப்பது என்பதே ஒரு கேவலமான செயல் எனில், வீட்டிற்கு வெளியில் ஏற்படும் டென்ஷன் அனைத்தும், வீட்டிலிருக்கும் மனைவியை அடித்தால் சரியாகும் என நினைக்கும் ஒரு ஆண் மகன் கோழை! தன் பிரச்சனைகளை பிறருக்கு தீங்கு இழைத்தே தீர்த்துக்கொள்ள நினைப்பவன் அறிவிலி.

‘தொட்டு தாலிகட்டின பொண்டாட்டிய அடிக்கறதுல தப்பொன்னும் இல்லையே’ என நினைக்கும் போது, அவன் அந்த பெண்ணை ஒரு சக மனிஷியாகக் கூட மதிக்கவில்லை என்பது தெளிவு பெறுகிறது. அதை தட்டிக்கேட்காமல் ‘சுமதாங்கியா’ பொருத்துக்கொள்ளப் போகிறவர்கள், உங்கள் செல்ல மகளுக்கு நல்ல வாழ்க்கை பாடம் தான் சொல்லித் தருகிறீர்கள்.

ஓவியாவின் வார்த்தைகளை கேட்ட பொழுது, நினைவிற்கு வந்தது 1991இல் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘பெண்’ தொடரும், அதில் இடம் பெற்ற, ‘ராஜி மாதிரி பொண்ணு’ கதையும் தான். சமீபத்தில் You tube வழியாக அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்…

“TV பாத்துக்குட்டே தண்ணி குடும்மானு கேப்பேங்க “break வரட்டும்…கொண்டு வரேன்னு சொல்லுவா”,
“சோறு போட சொல்லி கேட்டா, 10 தடவை கேட்டதுக்கு அப்பறம் மெதுவா எழுந்திருப்பாங்க”. இந்த ஞாயித்துக்கிழமை நீயா நானா பாத்திருந்தீங்கனா…இது ‘எழுத்து வடிவத்தில் மறு ஒளிபரப்பு’னு நினைப்பீங்க. பாக்காதவங்களுக்கு,
இந்த வார தலைப்பு…வீடுகள்ல தொலைகாட்சிகளின் தாக்கம் பத்தினது
வந்திருந்த சில ஆண் சிங்கங்கள் வேலை முடிச்சிட்டோ, கல்லூரில இருந்தோ வீடு திரும்பும் போது, வீட்டுத்’தலைவிகள்’ அதாவது ‘homemakers’, அந்த தொலைக்காட்சிய கட்டிக்கிட்டு அழுதுட்டு இருப்பாங்களாம். அந்த நேரத்துல இந்த ஆண் மகன்கள் அப்படியே நிற்கதியா கவனிப்பார் இல்லாம நின்னுகிட்டு இருப்பாங்களாம். இதுல சிலருக்கு அந்த மாதிரி கோபம் வருமாம்…ஒரு பிரஹஸ்பதி டிவி யவே உடைச்சுட்டானாம்.
இந்த நிகழ்ச்சிய பாக்கும் போது, இங்க என்னோட வேலை செய்யற ஒரு பெண் தோழி அவங்க பையன பத்தி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அவங்க பையனுக்கு ஒரு 7-8 வயசு இருக்கும். அவன் T.V பாத்துக்கிட்டோ இல்ல சும்மா பொழுத கழிச்சுகிட்டு இருக்கும் போது, “ரொம்ப தாகமா இருக்கு”னு சொல்லுவானாம். என் தோழி உடனே, “தண்ணி குடிச்சா தாகம் தணியும்; அங்க டேபிள் மேல தான் இருக்கு”னு சொல்லுவாங்களாம். “சின்ன வயசுல இருந்தே ‘மத்தவங்கள வேலை வாங்கினாத்தான் என்ன’ மாதிரியான எண்ணங்கள வளர விடாம தடுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்; ஆனா parents தான சொல்லி குடுக்கணும்”னு என்கிட்ட சொன்னாங்க.
நினைச்சு பாத்தீங்கனா, நம்ம ஊர்ல ‘கலாச்சார சீரழிவு’ பத்தி எப்பெல்லாம் பேசபடுதோ, அப்பெல்லாம், மேற்கு உலகம், அங்க இருக்கும் பழக்கவழக்கங்கள் பத்தின பேச்சு அடிப்படாம இருக்காது.
‘Aping the west ‘னு சொல்லி கேள்வி பட்டிருப்பீங்க. இந்த நீயா நானா நிகழ்ச்சியிலியே நெறைய தடவை பாக்க முடியும். மேற்கத்திய உடைகள, உணவு பழக்கவழக்கங்கள விரும்பி நம்ம ஊர்ல ஏத்துக்கறத கண்கூடா பாக்கலாம். அத பாக்கும் போதெல்லாம், உணவு உடைகள ஏத்துக்கற மாதிரி, ஏன் மேற்கத்திய குடும்ப அமைப்பு இல்ல அவங்க குழந்தை வளர்ப்பு முறைல இருக்கற நல்ல விஷயங்கள ஏன் ‘ape ‘ பண்ண மாட்றாங்கனு நினைப்பேன்.
“தனி மனிதனா, ஒரு குடும்பமா, ஒரு பொது இடத்துல, சுதந்திரமா இருப்பேன்; சந்தோஷமா இருப்பேன்; ஆனா அது மத்தவங்களுக்கு இடையூறா மட்டும் இல்லாம பாத்துப்பேன்”; இந்த ஊர்ல பெரும்பாலும் மக்கள்கிட்ட இந்த மனப்பானமைய பாக்கலாம். ரயில்ல போகும் போது அலைப்பேசில பேசறதா இருக்கட்டும், இல்ல பயணம் போது பாட்டு கேக்கறதா இருக்கட்டும், பக்கத்துல இருக்கறவங்களுக்கு தொல்லை மட்டும் இருக்காது.
இங்க குழந்தை வளர்ப்புல இவங்களோட அணுகுமுறை ரொம்பவே ஆச்சரிய பட வச்சதுன்னு தான் சொல்லனும்.
இந்தியால இருந்த வரைக்கும் நான் பாத்ததெல்லாம்,
–> ஒரு பொண்ணு கர்ப்பமா இருந்தா…அந்த பத்து மாசத்துக்கு அவ மகாராணிதான். வீட்ல மட்டும் இல்ல…அது ரோடா இருந்தாலும் சரி…கடைகளா இருந்தாலும் சரி. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, யாரா இருந்தாலும்…அந்த பொண்ண ஒரு பூ மாதிரி நடத்தற விதம்…கண் கொள்ளா காட்சி!! ஆனா அந்த குழந்தை வெளிய வந்ததுக்கு அப்பறம்…ஒரு ஈ காக்கா கூட அவள தீண்டாதுங்றது வேற விஷயம்.
–> ஒரு அன்னையானவள்…குடுக்கற அன்பு ரொம்ப அவசியம்; அந்த குழந்தை நல்லவனா இல்ல கெட்டவனா ஆறதுக்கு அவதான் பொறுப்பு”
–> என்னதான் அப்பாக்களுக்கு குழந்தைகள பிடிச்சாலும்…அந்த குழந்தைய வேளாவேளைக்கு சோறு குடுத்து பராமரிக்கறதுல ஒரு தாய அடிச்சுக்க முடியாது”
–> குழந்தைங்கன்னா நல்லா அழத்தான் செய்யுங்க; இது வேணும் அது வேணும்னு அடம் புடிக்கத் தான் செய்யுங்க; மத்தவங்களோட தன் பொம்மையோ, சாப்பாட்டையோ பகிர்ந்துக்கலனா தப்பே இல்ல; சின்ன பசங்க அப்படி தான் இருப்பாங்க
இது மாதிரியான ‘அனுபவசாலிங்களின் அறிவுரைகள’ மட்டும் கேட்டு புளிச்சு போன என் காதுக்கு, என் கூட வேலை செய்யறவங்களோட பேச்சு, ஒரு புது இசையமைப்பாளரோட ராகத்த கேட்ட அனுபவம்!!
நம்ம ஊர்ல குழந்தை பெத்துக்கறதுக்கு, “மாமியாருக்கு வயசாகுது”, “அப்பறம் மலடின்னு ஊர் உலகம் சொல்லும்”, “இப்பவே பெத்துகிட்டாத்தான் பையனோட படிப்பு, கல்யாணம் எல்லாத்தையும் பாக்க முடியும்”, மாதிரியான உப்பு சப்பிலாத, கேக்கவே நாராசமா இருக்கற காரணங்கள சொல்லி கேட்டிருக்கேன். இந்த மாதிரி குப்பைகளுக்கு அடில, ‘ஒரு ஆணும் பொண்ணும்…ஒருவர் மேல ஒருவர் கொண்டிருக்கிற அன்ப வெளிப்படுத்தும் பல வழிகள்ல குழந்தை பெத்துகறதும் ஒன்னு’, என்ற உண்மையான காரணம் பொதைஞ்சே போச்சுனுதான் தோணுது.
அந்த விஷயத்துல மேற்குலகுல தெளிவா இருக்காங்கனுதான் சொல்லனும். அதனால குழந்தை பெத்துக்கணுமா, வேண்டாமா, எப்ப பெத்துக்கணும், மாதிரியான முடிவுகள சம்பந்தப்பட்ட ஆணும் பொண்ணும் மட்டும் எடுக்கறாங்க.
ரெண்டு பேரும் சரின்னு முடிவெடுத்ததுனால…அந்த குழந்தை வளர்ப்புல ரெண்டு பேருக்குமே சம பங்கு இருக்கறதுதான யதார்த்தம்.
அன்னிக்கி என்னோட ஆண் தோழர் ஒருவர், அவரோட குழந்தைய ஆபீஸ்க்கு கொண்டு வந்திருந்தாரு. என்னனு கேட்டதுல, அவர் மனைவியோட மகப்பேறு விடுப்பு (maternity leave )முடிஞ்சு வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்களாம். குழந்தைய ஒரு 6 வாரம் இவர் பாத்துக்கறதா இருக்காராம்.
குழந்தைகளுக்கு இவங்க சொல்லி குடுக்கற மரியாதையாகட்டும் , பழக்க வழக்கங்களாகட்டும், ஒரு பிரமிப்பத்தான் உண்டாக்குது.
இந்தியால என் நண்பர்கள், உறவுகள் வீடுகள்ல 5 -6 வயசு குழந்தைகள பாத்திருக்கேன். தனக்கு ஏதாவது பிடிக்கல, இல்ல கேட்டது வாங்கித்தரலனா, உடனே ஒரு அழுகை இல்ல கோபத்த வெளிப்படுத்தற ஒரு பழக்கம். இங்க மேற்குலகுல, குழந்தைகளுக்கு விரும்பின பொருள் கெடைக்கலனா, அதிருப்திய சாதரணமா அந்த சிறுமியோ, சிறுவனோ பேச்சு வடிவத்துல வெளிப்படுத்துவாங்க. அம்மாவோ அப்பவோ அத அப்பறம் மெதுவா விளக்குவாங்க.
இப்ப சமீபத்துல பாத்த ஒரு வேடிக்கையான விளம்பரம் ஒன்னு நினைவுக்கு வருது; நான் மேல சொன்ன ‘எடுத்து விளக்கர அம்மா அப்பா’ ஒரு ரகம்னா…இந்த அம்மா ஒரு தனி ரகம் 🙂

“என்னம்மா அட்வைஸ் குடுக்கிறியா…கொஞ்சம் அடுப்ப அணைச்சா நல்லா இருக்கும்”,னு பின்னூட்டம் இடப்போறவங்களுக்கு…
நம்ம ஊர்ல வழிவழியா இதுதான் சரி, ‘பெரியவங்க அனுபவத்துல தெரிஞ்சிகிட்டு சொல்றாங்க..தப்பா இருக்காது”னு கடைப்புடிக்க படற பல விஷயங்கள்…இங்க மேற்கு உலகத்துல எவ்வளவு மாறுபட்டு இருக்குனு பாக்கறேன்; அதிசயிக்கறேன்; பதிவா எழுதறேன்.
“இதெல்லாம் வேலைக்கு ஆகாது…படிக்கறதுக்கு வேணும்னா நல்லா இருக்கும்”னு நினைச்சீங்கன்னா free யா விடுங்க.

“இது எப்ப வாங்கினது? ஒரு நாலு பவுன் இருக்குமா…?”, என அனிதாவின் கழுத்துச் சங்கிலியை தொட்டு பார்த்தபடி கேள்விக்கணைகளை தொடுத்தாள் லக்ஷ்மி.
“ஒ அதுவா…மாமியாருக்கு chain வாங்க போயிருந்தோம். நீயும் ஏதாவது வாங்கிக்கன்னு அவர் சொன்னாரு (ஒரு வெட்கத்தில் சற்றே அனிதாவின் தலை குனிந்தது) அதான். இது ஏதோ புது designனு சொன்னாங்க. சரி வாங்குவோமுனு…”, என ‘வாங்கிய பலனை அடைந்துவிட்டோம்’ என்ற பெருமிதம் சிறிதும் வெளியே தெரியாதபடி அலுத்துக்கொண்டாள் அனிதா.

“ஓகே லேடீஸ்….என்னுடைய அடுத்த படைப்பு ரெடி. Blogல update பண்ணீட்டேன். படிச்சிட்டு comments விடுங்க”, என தன் பெருமையை சபையில் சமர்ப்பித்தாள் லீலா.
“இந்த முறை என்னம்மா…திரும்பவும் ஏதாவது வாயில நுழையாத பேர்ல ஸ்வீட்டா?”, என வார்த்தைகளை நெய் போல் ஊற்றி பெருமை தீயை கொழுந்து விட்டு எரியச்செய்தாள் கல்பனா.
“பேர் வாயில நுழையலனா என்ன…அன்னிக்கி kaaju kathliய கட்டு கட்டுன்னு கட்டினது நெனவிருக்குல…? அதுக்கும் இப்படி தான் சொன்ன”, என முழங்கைய்யால் கல்பனாவை லேசாக இடித்தாள் லீலா.

“சரி அதெல்லாம் விடுங்கடி…நம்ம வினோதினி கிசுகிசு ஏதாவது?”, என நிகழ்ச்சி நிரலில் புதியதாய் ஒன்றை நுழைத்தாள் அனிதா.
“அட நான் கூட phone பண்ணி விஷயத்த சொல்லனும்னு நெனச்சேன். அன்னிக்கி அவள பஸ்ல பாத்தேன். அவ புருஷனும் இருந்தான். பஸ் கூட்டமா இருந்ததுனால பேசல. என்னமா கொழையறா புருஷன் கிட்ட. பஸ்ல எல்லாரும் அவங்களத்தான் பாத்துகிட்டு இருந்தாங்க. என்னவோ காதல் ஜோடிங்க மாதிரி…அவன் ஏதோ காதுல சொல்றான்; அவ கெக்கபெக்கன்னு சிரிக்கிறா…சகிக்கல”, என பஸ்ஸின் நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்தாள் லக்ஷ்மி.

“கொஞ்சம் ஓவராவே ஆடராடி அவ…என்னோட அந்த ‘motichoor laddu ‘ recipe ..அதுக்கு comment கூட 150 தாண்டிச்சே!! அதுக்கு ஒரு comment விட்டிருக்கா பாரு…அதுவும் private கமெண்ட்; இரு iphoneல காட்டறேன்”, என தன் அலைபேசியில் அந்த பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் தேடி எடுத்தாள்.
“படிக்கிறேன் கேளு…”லீலா ஒரு ‘சமையல் queen’ஆ மாறிட்டு வர. வாழ்த்துக்கள்!! நெறையா பேர் உன் பதிவுகள follow பண்றாங்கன்னு பாத்தாலே தெரியுது. நீ சமையல் மட்டும் இல்லாம பொது விஷயங்கள் பத்தின உன் கருத்துக்களயும் எழுதலாமே…படிக்க வர்றவங்க அவங்க நினைக்கறத தெரிவிப்பாங்க…அப்படியே ஆரோக்கியமான விவாதங்களுக்கு உன் blog நல்ல தளமா அமையும்னு நான் நினைக்கறேன். சமையல் குறிப்பு அல்லாத விஷயங்களில் உன் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கும் உன் ரசிகை வினோதினி :)”…அம்மா சொல்லிட்டாங்களாம்…நாம கேட்டு நடக்கனுமாம். நான் சொல்லட்டுமா…அவளுக்கு கடுப்பு…வேற ஒன்னும் இல்ல”, என சரமாரியாக வினோதினியை திட்டி முடித்தாள் லீலா.

“தனக்கு எல்லாம் தெரிஞ்சா மாதிரி நடப்பான்னு தான் நமக்கு தெரியுமேடி. நீ எதுக்கு தேவையில்லாம tension ஆகற. ஏதோ நம்ம husbands’ friend அவ புருஷன். அந்த ஒரு காரணத்துனால தான் அவள சேத்துக்க வேண்டிய கட்டாயம். if given an option…அவளுக்கு ‘good bye’ சொல்ல நான் எப்பவுமே ரெடி”, என தன் ‘கைய்யறு’ நிலையை நொந்துக்கொண்டாள் கல்பனா.
“இவள பத்தி பேச ஆரம்பிச்சாலே ஒரு bitter endதான் எப்பவும்; சரி எனக்கு டைம் ஆகுது. பையன் ஏதோ video game வேணும்னு கேட்டான். நான் அப்படியே நடைய கட்டறேன்”, என லக்ஷ்மி விடைப்பெற, கோயில் மணி சத்தம் கேட்டு, அனைவரும் கற்பகிரகம் நோக்கித் திரும்பினர்.

“ஆனா கோயில் வந்தா நிம்மதி கெடைக்கும்னு சொல்றது…இதுதான் போல. every week இப்படி உங்களோட பேச chance கெடைக்கறதே கோயில்லதான். ஒரு வாரம் முழுக்க மனசுல புழுங்கிட்டு கெடக்கற விஷயங்கள போட்டு உடைக்கறதுல ஒரு அலாதி சந்தோஷம். எனக்கும் நேரமாச்சு… அவர் வந்துடுவாரு…இன்னிக்கி evening snackக்கு சமோசா செய்யலாமுன்னு இருக்கேன்”, என விடைப்பெற்றாள் கல்பனா.

அலுவலக உண் மேசையில்…

“என்னப்பா இது உங்க பொண்டாட்டிங்க சொல்லி வச்சு பொங்கல் செஞ்சாங்களா? ரெண்டு பெரும் அதையே கொண்டுவந்திருக்கீங்க?”, என உரையாடலுக்கு பிள்ளையார் சுழி போட்டான் கணேசன்.
“இது உனக்கு புரியாது தம்பி. இன்னிக்கி கணவர்களுக்காக மனைவிகள் கடவுளிடம் பிராத்தனை செய்யும் தினம். கட்டின புருஷன் நல்லா இருக்கணும்னு பூஜை செய்வாங்க. வீட்ல வடை, அப்பளம், பொங்கல்…சூப்பர் விருந்து. அதுதான் tiffin box க்கு பதில் இன்னிக்கி 5 அடுக்கு கேரியர்”, என விளக்கம் அளித்தான் சரவணன்.

“இன்னும் என்ன ரெண்டு மாசம் தான…அப்பறம் டும்டும்டும். அதெல்லாம் இப்பவே சொல்லி வச்சுடு கணேசு…அதுவேற இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல…அது இதுனு பேச போறாங்க. நமக்கு க.மு, க.பி ரெண்டும் ஒரே மாதிரி இருக்கணும்னா…நம்ம பொண்டாட்டி நம்ம பேச்ச கேட்டு நடக்கறவளா இருக்கணும். friendsஆ இருக்கலாம், அது இதுனு சொன்னாங்கனு வைய்யு….முதலுக்கே மோசமா போயிடும்”, என ஒரு மனைவியிடம் இருக்க வேண்டிய ‘இன்றியமையாத’ குணாதிசயத்தை முன் வைத்தான் குணசேகரன்.

“சொல்ல மறந்துட்டேனே…’நீயா நானா’ ல அடுத்து ‘கணவன் மனைவி…நண்பர்களாய் இருப்பது சரியா தவறா’னு ஒரு தலைப்பு போல. பங்கேத்துக்க interest இருந்தா தொடர்பு கொள்ள சொல்லி எங்கயோ படிச்சிருக்கா. நானும் போறேங்கன்னு கேட்டா.எனக்கு அப்படியே தூக்கிவாரி போட்டுச்சு. இவ ‘அவர் தான் ஒசத்தி’னு பேசினாலும், அந்த பக்கத்துல இருக்கறவங்க, இல்ல guest பேசறத கேட்டுட்டு வீட்டுக்கு வந்து “நீங்க இன்னிக்கி கொஞ்சம் சமையல பாத்துக்கோங்களேன்”, “கொஞ்சம் தலை வலிக்குது…காபி போட்டு குடுக்க முடியுமா”னு கேட்டாங்க….கதை அதோகதிதான். அதெல்லாம் ஷூட்டிங் அது இதுனு நாள் முழுக்க போயிடும். அப்பறம் tired ஆயிடுவ”னு ஒரு வழியா அவ வாய அடைச்சேன்”, என கரையை தாக்க வந்த புயல் பற்றியும், அது சுமூகமாக கரை கடந்த அழகையும் விவரித்தான் சரவணன்.

“நீங்க ரெண்டு பேரும் சொல்றத பாத்தா…கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போலவே”, என தலையை சொரிந்தான் கணேசன்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு எந்த கோமாளியோ சொல்லிவச்சுட்டான். அதெல்லாம் ஒன்னும் இல்ல. நாம நடந்துக்கறதுல தான் இருக்கு. அவங்க கேக்கறதெல்லாம் வாங்கி கொடுக்கணும். ரொம்ப அன்பா நடந்துக்கணும்…சுமாரா இருந்தாலும் அவங்கள “நீ தான் சூப்பர்…நீ போட்டில இல்லாத ஒரே காரணத்துனால தான் ஐஸ்வர்யா பட்டத்த வாங்கினா”, அது இதுனு அளக்கனும். அவ்வளவுதான்…அப்படியே விழுந்து விழுந்து கவனிப்பாங்க பாரு…”, என உபதேசங்களை சரமாரியாக அவிழ்த்து விட்டான் சரவணன்.

பேசிக்கொண்டே இருக்கையில், கணேசனின் அலைபேசி ‘காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்’ என பாட, “நம்பினா நம்பு…உன்ன பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன்…நீயே கால் பண்ணிட்ட”, என கூறிக்கொண்டே நழுவினான் கணேசன்.

மாலை…சரவணன் வீட்டில்

“கல்புமா…சமோசா தான…வாசனை மூக்கத்தொளைக்குதே”, என கூறியபடி வீட்டினுள் நுழைந்தான் சரவணன்.

“என்னங்க இன்னிக்கி சீக்கிரம் போல…சமொசாவா…ஆமாங்க…ஏதாவது differentஆ பண்ணலாமுன்னு…”, என குழைந்தாள் கல்பனா.
“சரி…கைக்கால் அலம்பிட்டு freshen up ஆகிட்டு வரேன்”, என குளியலறையில் நுழைந்தான் சரவணன்.

சமயலறை நோக்கி நடந்த கல்பனாவின் கண்கள் உண் மேசை பக்கம் திரும்பியது. ஏதோ வண்ண அட்டை தென்பட்டது; கையில் எடுத்தாள். எடுத்து படித்த மாத்திரத்தில்….முகத்தில் ஒரு 1000 watts புன்னகை. “For the sweetest woman in the world” என வாழ்த்து அட்டையின் வரிகளை படித்த படி, “என்னங்க…எனக்கா இது? எதுக்குங்க இதெல்லாம்”…என குளியறையிலிருந்து வந்த சரவணன் நோக்கி ஓடினாள்.

“உனக்கு தான் என் தங்கமே. கணேசன் அவன் would-beக்கு card வாங்கனும்னு சொன்னான். நானும் கூட போனேன். இது அங்க கண்ணுல பட்டது. உன் ஞாபகம் வந்தது. அதுதான்”, என சாதாரணமாய் விடை அளித்தான் சரவணன்.

“போங்க…எனக்கு வெக்கமா இருக்கு”, என தலை குனிந்த படி, கால் விரல்களால் கோலம் போட்ட வண்ணம், வாழ்த்து அட்டையை முத்தமிட்டாள் கல்பனா.

************************************************************************************************

“நீயா நானா”வில் சென்ற வாரம் பார்த்த ஒரு விவாதத்தின் தாக்கம் இச்சிறுகதை. ‘கணவரே கண் கண்ட தெய்வம்’ என வாதாடிய அணியில் இருந்த சில பெண்களின் விவாதங்கள்…சிரிப்பை விட கோபத்தையே வரவழைத்தது. அந்த கோபமானது அப்பெண்களின் மீதானதல்ல என்று மட்டும் தெளிவாக புரிந்தது. ஆரம்பத்தில் ‘கணவனே உன் பாதுகாவலன்’, ‘அவர்களின் விருப்பத்திருக்கு இணங்கி நடப்பது…திருமணத்திற்கு பின் உன் தலையாய கடமை’ என சமூகத்தினால் சாவிக்கொடுத்து பழக்கப்பட்ட பெண்கள்…இன்று எவர் துணையுமின்றி தமக்குத்தாமே விலங்கணிந்துக் கொள்வது….சமூகத்தின் வெற்றியே!!

“நான் சிந்திக்கிறேங்க…அதுனால தான் பாத்திரம் கழுவறது என் வேலை…அவர் செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சிருக்கு”
“நான் M .B .A படிச்சா தான் என்ன…அவர் ஆம்பளை..கட்டாயமா என்னவிட உலகறிவு ஜாஸ்த்தியா இருக்கும்”
“அவர்கிட்ட சரணாகதி அடையறது எனக்கு பிடிச்சிருக்குங்க”, போன்ற வாக்கியங்கள் கேட்டமாத்திரத்தில் ஒரு ஏமாற்றமும் வருத்தமுமே தோன்றியது.

“இப்படி செயல்படுவதே ஒரு ‘குடும்பத்தலைவி’க்கு பெருமை சேர்க்கும்” என மறைமுகமாக போதிக்கும் சமூகமும், அவள் விரும்பி அடிமையாய் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டாத ஆண்மகனும்…அவளின் கிணற்றுத்தவளை கோலம் கலையாமல் இருக்கவே விரும்புகின்றனர்.

இச்சூழ்நிலையில்…அந்த பெண், “தனிமனிஷியாய் எனக்கு என்ன பிடிக்கும்”, “பிறர் திருப்தி அடைய பற்பல வேலைகளை செய்த நான்…எனக்கென என்ன செய்துகொண்டேன்”, போன்ற கேள்விகளை கேட்பதின் மூலமும், அதற்கான விடைகளை அடைய செயல்படுவதின் மூலமுமே அப்பாழ்கிணற்றிலிருந்து விடுபடுகிறாள்.

இத பத்தி எழுதனும்னு பல தருணங்கள்ல தோணி இருக்கு. ஆனா பூனை குறுக்குல வந்திருக்கும் இல்ல சகுனம் சரி இல்லாம போயிருக்கும்; எழுதற வாய்ப்ப நழுவ விட்டிருப்பேன். இதெல்லாம் நம்ப மாட்டீங்கன்னு நம்பறேன். சோம்பேறித்தனமே தவற வேற ஒன்னும் இல்ல.

நேத்து மீனா கந்தசாமியோட tweet ல இருந்த ஒரு குறும்படம் பாத்தேன். அப்ப திரும்பவும் ஒரு பொறி கெளம்பிச்சு. இப்ப ஜோதியா கொழுந்து விட்டு எரியுது.
ரொம்ப ஓவரா இருக்குல…சரி விஷயத்துக்கு வரேன். இந்த தமிழ் தெரிஞ்சும் ஆங்கிலத்துல உயிரை வாங்கற ஜீவன்கள பத்தி தான் எழுதனும்னு…

இத எழுத தூண்டிய பல மனிதர்கள்ல நம்ம ‘நீயா நானா’ கோபி பெரும்பங்கு ஆற்றுகிறார். அவரோட தமிழுக்கு நான் அடிமைன்னு சொல்லறதுல எனக்கு வெக்கமே இல்ல. அவ்வளவு அழகா, சரளமா கடைசி ரெண்டு நிமிஷம் பேசுவாரு பாருங்க…குப்பை தலைப்பா இருந்தாலும், அவர் பேசறத கேக்கறதுக்காகவே அந்த நிகழ்ச்சிய பாக்கலாம். சமீபத்துல அவர் பேச்சுல இருந்து கத்துக்கிட்ட ஒரு தமிழ் சொல்…’நகைமுரண்’. தமிழ்ல பேசும்போது ஒரு நாள் கூட ‘irony’னு சொல்லறோமே…அதுக்கு தமிழ்ல என்ன சொல்லனும்னு யோசிச்சதே இல்ல.

நல்லா தமிழ்ல பேசிகிட்டு இருக்கும் போது நடுவுல ஆங்கிலத்த திணிச்சு உயிரை வாங்குவாரு பாருங்க…அப்படியே பத்திக்கிட்டு வரும்!!
“இல்ல கோபி…அவன் அவன் பேச சான்ஸ் கெடைச்சா போதும்னு தத்தக்கா புத்தக்கானு ஆங்கிலத்துல பேசறான்னா..அவனுக்கு தமிழும் அரைகொறை ஆங்கிலமும் அரைகொறை; உங்களுக்கு தான் தமிழ் தலைகீழ் பாடமாச்சே…நீங்களும் ஏன் அந்த வீணா போன ஆங்கிலத்த பயன்படுத்த நினைக்கறீங்க?”,னு கேக்கத் தோணுது.

இந்த ஆங்கில மோகம் நம்ம ஊர போட்டு ஆட்டறத பாத்தா…ரொம்ப கவலையா தான் இருக்கு.

ரெண்டு வருஷம் முன்னாடி சென்னைக்கு போயிருந்தோம். அப்ப ‘Palimar’னு ஒரு உணவகத்துல சாப்பிட போனோம். நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட போறோம்னு அவ்வளவு மகிழ்ச்சி!!
‘Menu card’ பாத்து முடிவும் பண்ணினோம். ஆர்டர் எடுக்க வந்தவரு…ஆங்கிலத்துல வரவேற்கற்தும், ‘specials’ பட்டியல சொல்றதும்…
எனக்கு எரிச்சல்…சரி நமக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சாரு போலன்னு நான் சரளமா தமிழ்லியே பேசினேன். அவர் என்னடானா அந்த ஆங்கிலத்த விடராமாதிரி தெரியல. “சரி..முதலாளி சொல்லி இருப்பான்..அதுதான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆங்கிலத்துல பேசறாரு”னு freeயா விட்டுடோம்.
ஆனா, “என்ன கொடுமை சார் இது! ஏதோ தமிழ் தெரியாதவங்க கிட்ட ஆங்கிலத்துல பேசினா பரவாயில்லை; தமிழ் நல்லா பேசறவங்ககிட்டயும் ஆங்கிலத்துல கழுத்தறுக்கனுமா?”னு அந்த முதலாளிய விளாசனும் போல இருந்தது…

நாங்க இருக்கும் பகுதில அதிகம் வடஇந்தியர்கள் நடத்தற மளிகை கடைதான். இது வரைக்கும் போன எல்லா கடைகள்லயும் எங்கள பாத்த உடனே கல்லால இருக்கற அம்மாவோ அய்யாவோ ஹிந்தில டசுபுசுனு பேச ஆரம்பிப்பாங்க. ஹிந்தி எல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு ஆங்கிலத்துல பேசுவோம். எதுக்கு சொல்ல வரேன்னா…இவங்க இப்படி இருக்காங்க…நம்ம மக்கள் என்னடானா தமிழ் பேசறதயே ஒரு இழிவாவும், இங்கிலிஷ்ல பேசினாத்தான் ஒரு கெத்துனும் நினைக்கறாங்க!

இங்க அதிகம் பாக்கற இன்னொரு விஷயம், இந்திய குடும்பங்கள்…முக்கியமா நம்ம தென்னிந்திய குடும்பங்கள்ல வளரும் பசங்க, அவங்க அம்மா அப்பா கிட்ட ஆங்கிலத்துல தான் பேசுவாங்க. ஏன் அப்படி..தமிழ் இல்ல தெலுங்கு சொல்லி கொடுக்கலியானா, “எங்க அனு…ஸ்கூல்ல இங்கிலீஷ்லியே பேசி பழகுதுங்க…வீட்டுக்கு வந்தா அதே தான் continue ஆகுது”,னு அலுத்துக்கறாங்க.
என் கூட வேலை செய்யறவங்க…ரெண்டு மூணு பேற தவிர மத்தவங்க எல்லாம் வேற நாடுகள்ல இருந்து இங்க குடிபெயர்ந்த குடும்பங்கள சேர்ந்தவங்க. இங்கயே சின்ன வயசுல இருந்து படிச்சு வளர்ந்தாலும், வீட்ல என்ன பேசுவீங்கனா, “chinese”, “mandarin”, “french”, தான் சொல்லுவாங்க.

இப்ப உலகமயமாக்கம் தலை விரிச்சாடும் சூழ்நிலைல, அதுல பொழைக்கத் தேவையான ஆயுதங்கள்ல ஒன்னான ஆங்கில மொழிய தெரிஞ்சு வச்சுக்கறதுதான் யதார்த்தம்.
ஆனா ஆங்கிலத்துல பேசறது மட்டும் தான் ஒருவனின் அறிவ காட்டும்னு நினைக்கறாங்க பாருங்க…அது கட்டாயமா கண்டனத்துக்குரியது.
அப்படி பேசறவங்கள பாத்து, “டேய் கொஞ்சம் நிறுத்திக்கடா…ஏதோ உங்க அப்பன் ஆத்தா சம்பாதிச்சு conventலயும், matric இஸ்கூல்லயும் படிக்க வச்சதுனால மட்டும் தான் ஒரு ரெண்டு வார்த்தை இங்கிலிப்பிஸ் பேசறே; ஏதோ lotus பூல குந்திக்கிட்டு இருக்கற சாமி வந்து உன் நாக்குல பச்சை குத்தினா மாதிரி குதிக்கிற…அடங்குடா!!”னு சொல்லிட்டு பளார் பளார்னு கன்னத்துல குடுக்கணும் போல இருக்கு!
கோபி மாதிரி ஊடகங்கள்ல பிரபலமா இருக்கறவங்க, “ஆங்கிலம் என்பதும் தமிழ் மாதிரி ஒரு சாதாரண மொழி; அது தெரியலனா பெருசா எதுவும் நீ இழக்கல; படிக்கனும்னா இருக்கவே இருக்கு அதுக்கு வகுப்புகள், புத்தகங்கள்; ஆங்கிலத்த எங்க பயன்படுத்தனுமோ அங்க மட்டும் use பண்ணிட்டு…மத்த நேரங்கள்ல உன் மொழிய பேசப்பா”, போன்ற கருத்துக்கள அவங்க செயல்ல காட்டினா, மாறனும்னு நினைக்கறவன் மாறிட்டு போறான்.
அதே சமயத்துல நடிக்கிற almost எல்லா படங்கள்லயும், தமிழ இழிவா நினைக்கறவங்கள சாடறேண்டா பேர்வழினு, “மெல்ல தமிழ் இனி சாகும்”னு நக்கல் பண்ற கோஷ்டிகளோட பெருசா எனக்கு உடன்பாடில்ல.
“தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்”, மாதிரியான தமிழ்வெறி எல்லாம் தேவையில்லை;
ஏதோ “என் மக்களோட பேசி உறவாட, என் மொழி போதும்பா…வேற மொழிகள கொண்டு வந்து குட்டைய கொழப்ப விரும்பல”, மாதிரி ஒரு புரிதல் தலைதூக்கினா நல்லா இருக்கும்ல!!

இப்பெல்லாம் திங்கட்கிழமை ஆனா ஞாயித்துக்கிழமை ஒளிபரப்பான ‘நீயா நானா’ பாக்கறது வழக்கமா போச்சு. இந்த எடத்துல ‘techsatish ‘ இணையத்தளத்துக்கு ஒரு thanks சொல்லிக்கறேன்.

சமீப காலமா சமூக கண்ணோட்டத்தோட தலைப்புகள் தேர்ந்தெடுக்க படுதுன்னு தான் சொல்லணும். அதுக்காக முழுக்க முழுக்க சூப்பர் தலைப்புகள்னு சொல்ல முடியாது…சில சமயங்கள்ல சொத்தை தலைப்புகளும் இடம் பெற தான் செய்யுது. உதாரணத்துக்கு அடுத்த வாரம் காதல பத்தி ஒன்னு.

மேட்டர்க்கு வருவோம். நான் ரெண்டு நாள் முன்னாடி பாத்த ‘நீயா நானா’ல இடம் பெற்ற தலைப்பு வரதட்சனை பத்தியது. அதுல ஒரு தரப்புல பேசப்பட்ட ஒரு கருத்த பத்தி இல்ல அத அடிப்படையா கொண்டு ஏதாவது எழுதனும்னு தோணிச்சு.

வரதட்சனை வாங்கறது தவறு, அது எனக்கு தேவையே இல்லன்னு சொன்ன பெரும்பாலான ஆண்கள், “வரதட்சனை எல்லாம் எதுவும் வேணாங்க…எனக்கு நம்பிக்கை இருக்கு; நான் சம்பாதிச்சு அவங்கள பாத்துப்பேங்க”, “என்ன நம்பி வரட்டும்..நான் காப்பாத்துவேன்” மாதிரியான கருத்துக்கள பதிவு செஞ்சாங்க. அத சொல்லும் போது அவங்க முகத்துல ஒரு பொறுப்புணர்ச்சி ததும்பிச்சு பாருங்க…

நானும் காத்திருக்கேன் காத்திருக்கேன், ஒருத்தன் கூட, “படிச்சிருந்தா போதுங்க…நானும் அவளும் சம்பாதிச்சு எங்க வாழ்க்கைய பாத்துப்போம்” னு சொல்லல.

இல்ல தெரியாம தான் கேக்கறேன், அந்த “நான் தான் குடும்ப தலைவன்”, “பிரச்சனை ஏதாவது வந்தா குடும்பத்த பாதுகாக்க வேண்டிய கடமை என்னுடையது”, மாதிரியான கருத்துக்கள் எப்படித்தான் ஒரு ஆண் மனசுல பதிஞ்சிடுதோ. அங்க மனைவியா வர்ற பொண்ணு, அவனின் அடைக்கலம் தேடி வந்த ஒரு ஜீவன், அவள காக்க வேண்டியது அவனின் தலையாய பொறுப்புன்னு அவனே அவனுக்கு ஒரு ‘to do ‘ லிஸ்ட் போட்டுக்கறான்.

கண்ணா…உயிரியல் ரீதியா நீ ஒரு பொண்ண விட பலமா இருந்தாலும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்த போறீங்கன்னு ஆனதுக்கு அப்பறம், பிரச்சனைகளையும் சேர்ந்து சமாளிக்கறதுதான செரி!

இந்த “நான் தான் குடும்ப தலைவன்; நான் தான் எல்லா முடிவையும் எடுப்பேன்”னு நினைக்கற ஆண்கள் மத்தியில, ஒரு மாற்று சிந்தனை கொண்ட ஆண்மகன் என்ன மாதிரி பொண்ண எதிர்ப்பாப்பான், அவனுடைய குடும்பம் நடத்தும் பாணி என்னவாக இருக்கும்னு யோசிச்சேன்…அதன் வெளிப்பாடே இனி…

“பாய்ஸ் ஸ்கூலில் படிப்பது ஜாலியாக தான் இருந்தது;
ஒரு ஏழாவது எட்டாவது வரை என் நண்பர்கள், என் கிரிக்கெட் அணி
என ஆண்கள் கூட்டத்திலேயே புழங்கினேன்;
எதையும் மிஸ் செய்ததாக தோன்றவில்லை.
பத்தாவது பதினொன்னாவது காலங்களில்,
பெண்களுடன் பழகுவது எப்படி இருக்கும்,
நம்முடன் சேர்ந்து அவர்களும் வகுப்பு கவனிப்பது எப்படி இருக்கும்,
போன்ற விடை தெரியாத கேள்விகள் தோன்றின.
பள்ளி முடிந்தது கல்லூரி வாழ்க்கை துவங்கியது;
ஒரு இனம் புரியாத பயம்…
திடீரென பெண்கள் கூட்டம் கூட்டமாய்
கல்லூரி வாசலில் நின்று பேசுவது கண்டு…
“மணி என்ன” என கேட்டால் எப்படி பதிலளிப்பது,
“இந்த assignment முடிச்சிட்டியா” என கேட்டால் எப்படி ஆரம்பிப்பது,
போன்ற பல ஒத்திகைகள் நடந்த வண்ணம் இருந்தது;
முதல் நாள் கல்லூரி முதல்வரின் உரை முடிந்தது…
“பெண்களுடன் பழகுவது எப்படி இருக்கும்”, என்ற
எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் மூட்டை கட்டினேன்.
“மவனே பொண்ணு கிட்ட பேசின…செத்தடா”
“அம்மா அப்பாவ கூட்டிட்டு வரணும்”
“அடுத்த செமஸ்டர் எப்படி எழுதறன்னு பாத்துடறேன்”,
என்ற எச்சரிக்கைகள் காதில் ஒலித்த படியே இருந்தன.
“நமக்கு ஏன்டா வம்பு”, என படித்து முடித்தேன்.
இப்பொழுது ஒரு மாதிரி வேலையில் செட்டில் ஆன பிறகு,
ஒரு வாழ்க்கைத்துணை தேவை என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பித்தது.
மீண்டும் கனவுகளை கோபுரமாய் கட்ட ஆரம்பித்தேன்..
.”அவள் எப்படி இருக்க வேண்டும்?”,
“என் குணாதிசயங்கள் எதையாவது மாற்றவேண்டுமோ?”, என
ஏகப்பட்ட கேள்விகள் மூளையை கசக்கின.
“homely யா இருக்கணும்; அடக்கமா குனிஞ்ச தலை நிமிராம இருக்கணும்”, போன்ற
சினிமாத்தனமான விருப்பங்கள் எதுவும் இல்லை.
திருமணத்திற்கு முந்தைய தினம் வரை அவள் வீட்டில்
இருந்த மாதிரியே இருக்க அவள் ஆசை பட வேண்டும்;
நான் சமயலறை பக்கம் போனதே இல்லை…
சுட்டு வைத்த வடை, அப்பங்களை சூறையாட சென்ற தருணங்களை தவிர;
அவளும் அப்படி வளர்ந்திருப்பாள் எனில், ஒரு அட்டவணை போட்டு
வாரத்தில் மூன்று நாள் சமையலறை அவளின் பரிசோதனை கூடம்
இன்னொரு மூன்று நாள் என்னுடையது;
பாக்கி ஒரு நாள்… எங்களின் கூட்டு முயற்சி!
எனக்கு சரி என படுவது அவளுக்கு கேவலமாய் தோன்றும் சமயங்களில்,
சுட்டிக்காட்டுபவளாக இருக்க வேண்டும்;
நானும் அவ்வாறே செய்யும் தருணங்களில், இருவரும் கலந்து பேசி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.
மாத விடாய் சமயத்தில் PMS தலை தூக்கும் பொழுது,
எரிந்து விழுவதும், சொத்தை விஷயங்களுக்கு அழுவதும்,
அவளின் தப்பில்லை என்பதறிந்து, நான் அவளுக்கு துணையாய் பொறுமை காக்க வேண்டும்.
ஒத்த கருத்து இல்லாத விஷயங்களில், விவாதம் இருக்கும் அதே சமயத்தில்,
அடுத்தவரின் கருத்தை மதிக்கும் பக்குவம் இருவருக்கும் வேண்டும்.
இந்த கனவு காணும் படலம் சுகமாய் இருப்பினும்…
இருவரும் சேர்ந்து துவங்க இருக்கும் பயணத்தில்,
விதிமுறைகளையும் விருப்பங்களையும் நான் மட்டும்
பட்டியலிடுவது…கொஞ்சம் நெருடலாக உள்ளது.
“இனியவளே, உன் வருகைக்கு வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்;
வருக; நம் பயணத்தை நம் விருப்பப்படி இனிதே துவங்குவோம்”!!

சென்ற வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ பார்த்தேன். பெண்ணியம் என்ற தலைப்பில், பெண்ணியவாதிகளுக்கும் , பெண்ணியத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையே ஆன விவாதம்.
சல்மா மற்றும் ஓவியா அவர்களின் வார்த்தைகள் பெண்ணடிமைக்கு சாட்டையடி. எனினும் சமூகத்தில் பெண்ணியத்திற்கு ஆதராவாகவும் எதிராகவும் பேசும் ஆண்கள் இருக்கையில், விவாதத்தில் ஒருவர் கூட பங்கேற்காதது வருத்தமே.
“பெண்ணியவாதிகள் குடும்பத்திற்கு உகந்தவர்கள் அல்லர்”, என பேசும் ஆண்கள், ‘சமூகக் கோட்பாடு’, ‘கலாச்சாரம்’ போன்ற ஆயுதங்களால், அவர்கள் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கின்றனர்.
அப்பெண்களும் தம் அடிமை நிலை அறியாது, பெண்ணியம் என்பதையே ஒரு இழுச்சொல்லாக பார்க்கின்றனர்.
இத்தகைய பெண்களின் பின் மறைந்து நின்றபடி குளிர்காயும் கோழைகளுக்கு….

“தொங்கத் தொங்க தாலியோட நடந்து வந்தா…அந்த அம்மனே நேருல வந்தா மாதிரி இருக்கு”, என நீ கூற,
குனிந்த தலை நிமிராமல் வெட்கத்துடன் சிரித்தாள் அவள்;
“அடக்கி வச்சோம்ல…எவன் இனி route உட நெனைப்பான்”, என நிம்மதி பெருமூச்சு விட்டாய்!

“Housewife தான”, என நண்பன் கூற,
“homemaker னு சொல்லு டா”, என்றாய்;
அவள் ‘food-maker ‘ ஆக மட்டும் அடுப்படியில் தேங்கிக்கிடக்க,
‘Pleasure taker ‘ ஆக ஒரு துரும்பும் அசைக்காமல் பல்சுவை உணவினை அனுபவித்தாய்!

“வீட்ல எப்படி இருக்காங்க”, என பெரியவர் விசாரிக்க,
“எங்க வீடு மகாலட்சுமிங்க அவ”, என பெருமிதத்துடன் கூறியபடி அவள் பெயர் கொண்ட கடனட்டையை சட்டைப்பையினுள் திணித்தாய்!

வீட்டுவேலைகளை அவள் கவனிக்க, நீ நண்பர்களுடன் கும்மாளம் அடித்தாய்;
“அவளுக்கும் தோழிகள் உண்டு; அவர்களுடன் நேரம் செலவழிக்க ஆசையும் உண்டு”, என்ற யதார்த்த கருத்துக்கு,
“அதுதான் நான் இருக்கேன்ல…அவளுக்கு துணையா”, என உளறினாய்!

மாதம் பத்து சுமந்து, குழந்தையை ஈன்றெடுத்து, அதற்கு சகல விதமான தேவைகளையும் பூர்த்தி செய்பவள் அவள்;
“உங்க contribution என்ன சார்”, என்றால்,
“என்ன பேசறீங்க…ஆம்பிளை சிங்கம் நான் இல்லேனா அந்த சிங்கக்குட்டி எப்படி சார்”, என வாய் சௌடால் விட்டாய்!

வேலையிலிருந்து வந்ததும் வீட்டுவேலைகளை முடித்து, குழந்தைகளை கவனித்துவிட்டு, படுக்கையறையில் நீ உரச தயாராக இருப்பவள் அவள்;
“எட்டு மணி நேரம் உழைச்சிட்டு வரோம்ல; மனிஷன நிம்மதியா இருக்க விடுங்கப்பா”, என சப்பக்கட்டு கட்டினாய்!

“படிச்சவன் தானப்பா நீ…அந்த பொண்ணும் வேலைக்கு பொயிட்டு வருது…கொஞ்சம் வீட்டு வேலைல ஒத்தாசையா இருக்கக்கூடாது?”, என்ற கேள்வி எழும்பும் முன்னமே,
“இது ஒன்னும் புதுசு இல்லீங்களே…குடும்ப பொண்ணு செய்ய வேண்டிய வேலைங்க தான; எங்க பாட்டி, அம்மா எல்லாம் வழிவழியா செஞ்சுட்டு வர்றதுதானே”, என முந்திக்கொண்டாய்!

ஏன்டா நாயே… கணவன் மனைவிய ‘life partners ‘னு சொல்லி கேட்டதில்லை?
Partnership ல கொடுக்கல் வாங்கல் இருக்கும்னு தெரியும்;
இங்க என்னடானா அவ எல்லாத்தையும் கொடுக்கறா, நீ வக்கனையா சூடு சொரணை இல்லாம வாங்கற!

நீயெல்லாம் கல்யாணம் பண்ணலன்னு யாரு அழுதா…
நீ வித்திட்டு உருவாற வாரிசுகளும் உன்ன போல தான் இருக்கும்!
மானே, தேனே, அம்மா, ஆத்தான்னு ஏமாத்தினது இனி போதும்!

என்ன தயங்கற…ஓ பசிதான…hourly rate மாதிரி மாதந்திர சந்தா இருக்கான்னு பாரு; முடிஞ்சுது ஜோலி!

அவளையும் ஒரு மனிஷியா மதிச்சு, அவளோட உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்து குடும்பம் நடத்த முடிஞ்சா நடத்து…
இல்ல நடைய கட்டு!