Posts Tagged ‘பெண் விடுதலை’

நிறைய நாட்கள் கழித்து…மீண்டும் பிதற்றல் பக்கம் தலை வைக்கிறேன்!! இம்முறையும் எதுவும் புதிதாக எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், சமீபத்தில் tamiltalkies தளத்தில், இறைவி பட விமர்சனத்திற்கு இட்ட பின்னூட்டத்தையே பதிவாக பதிக்க உள்ளேன்.

Tamiltalkies தளத்தில் இடம்பெற்ற இறைவி படத்தின் திரைவிமர்சனம் இது…

என் ஆதங்கம் கலந்த பின்னூட்டம் பின் வருமாறு…

வணக்கம் தமிழ் டாக்கீஸ்! நானும் என் கணவனும் நீங்க திரை விமர்சனம் செய்ய ஆரம்பிச்ச காலத்துல இருந்து விமர்சனங்கள பாத்துட்டுவரோம். முழுக்க முழுக்க உங்க விமர்சனங்கள்ல உடன்பாடு இல்லாட்டியும், பெரும்பாலான படங்கள்ல ஒத்துப்போவோம். சில படங்களுக்கு எல்லாம் பயங்கர ‘hype’ இருக்கும் போது …உங்க குழு என்ன சொல்றாங்கனு விரும்பிப் பாப்போம். அந்த மாதிரி பாத்து புடிச்ச விமர்சனங்கள் பட்டியல்ல…’கடல்’, ‘ஜில் ஜங் ஜக்’ சொல்லலாம்.

பெரும்பாலும் நீங்க வியாபார கோணத்துல தான் விமர்சனம் பண்ணுவீங்கனு தெரியும்…ஆனா இந்த படத்த நேத்து பாத்ததுக்கு அப்பறம் உங்க கருத்து என்னனு தெரிஞ்சிக்க…விமர்சனத்த பாத்தோம். கர்ணன் பட விநியோகஸ்த்தர் நினைக்கறேன்…அவரோட உரையாடல், தேர்தல் போது இடம்பெற்ற தொகுப்பு எல்லாம் பாத்துட்டு…ஏனோ, நீங்க ஒரு விரிவான சமூக சிந்தனை உள்ளவங்க, ஒரு நல்ல முயற்சில இருக்கற தப்புகள சுட்டிக்காட்டுவீங்க…ஆனா எடுத்த முயற்சிய பாராட்டுவீங்கனு நினைச்சுட்டேன்!

இந்த படத்துல இடம்பெற்ற பெண் கதாப்பாத்திரங்கள பத்தி நீங்க விமர்சிச்சது, உங்க குழு மேல வச்சிருந்த மரியாதைய ரொம்ப கீழ கொண்டுவந்துடுச்சு.

பூஜா கதாப்பாத்திரத்த பத்தி பேசும் போது…”ரொம்ப தவறான முறைல செயல் படுது” னு சொல்றீங்க. ஆனா அதே மாதிரியான ஒரு கதாப்பாத்திரதுல மாதவன் இறுதிச் சுற்றுல வரும் போது, அது பத்தின பேச்சே இல்ல. அது எப்படி, “ஆண்கள் செஞ்சா…ஒரு விஷயமே இல்ல…ஆனா அதே ஒரு பொண்ணு செஞ்சா…அது அராஜகமா?” அவ வாழ்க்கைய எப்படி நடத்தனும்னு சமூகத்து கிட்ட கேட்டு தான் அவ முடிவு எடுக்கனுமோ??

அப்பறம் பெண்கள பத்தி பேசும் போதெல்லாம்…”பண்ணுது”, “செய்யுது”…னு ஒரு வாயில்லா பொருள பத்தி பேசறா மாதிரி விமர்சிக்கிறீங்க….ஆனா S.J. சூரியா கதாப்பாத்திரம் பத்தி சொல்லும் போது…”அவரு”, “செஞ்சாரு” னு மரியாதை. இதுல அந்த கதாபாத்திதோட குடிப் பழக்கத்துக்கு ஒரு சப்பக்கட்டு கட்றீங்க பாருங்க….செமையா இருக்கு! அது எப்படி..”இவ்வளவு மாசங்கள், வருஷங்கள் குடிச்சா தான் அவன் ஒரு குடிகாரன்…அப்ப தான் அவன் பொண்டாட்டிக்கு சண்டை போடற உரிமை இருக்கு. பத்து நாள், ஒரு மாசம் எல்லாம் ஒரு matter ஏ இல்ல, அதுவும் எவ்வளவு மனசு ஒடிஞ்சு போய் இருக்காரு…அதுக்கெல்லாம் மேலையும் கீழையும் குதிச்சா அது தப்பு ல?”

அப்பறம் அஞ்சலி கதாப்பாத்திரம்…”புருஷன எதித்து கேட்டு…அவளே அவ மரியாதைய கெடுத்துகிட்டா”! அது எப்படிங்க…ஒரு கேவலமான ஆளு அவன் (விஜய் சேதுபதி கதாப்பாத்திரம்)…வீட்ல இருக்கற பொண்டாட்டிய பத்தி கவலை படாம….நண்பர்களுக்காக ஜெயிலுக்கு போறான். அவன மதிச்சு, அவன் எவ்வளவு கீழ்த்தனமான கேள்வி கேட்டாலும்…அதுக்கு அவ “ஆமாங்க…இல்லீங்க” னு பதில் அளிக்கனுமா? இதே மாதிரி தான் கல்யாணம் ஆன புதுசுல…அவன் அவகிட்ட..”நான் இப்படி தான்…புடிச்சா இரு”னு சொல்லுவான். அத நீங்க “அவனையே நம்பி வந்த பொண்ண இப்படி நடத்தறானே”னு விமர்சிக்கல…..அப்ப இங்க மட்டும் எதுக்கு?

பத்தோட பதினொன்னா இருக்கப் போகுது இந்த பின்னூட்டம்னு தெரிஞ்சும்….ஏன் எழுதறேன்னு தெரியல. ஏதோ இவ்வளவு நாளா பாத்துட்டு இருக்கோமே…நம்ம கருத்தையும் பதிப்போம்னு ஒரு ஆதங்கம் தான்.

இதுல என்ன காமெடினா…சில படங்கள் விமர்சிக்கும் போது, heroine எப்பவும் போல…லூசு மாதிரி வந்துட்டு ‘போகுது’னு விமர்சிக்கறீங்க….ஆனா அவளுக்கு சரின்னு படறத பேசும் போது , தப்பானவ, மரியாதை தெரியாதவ னு சொல்றீங்க!

உங்க விமர்சனக் குழுவுல…”அச்சம் மடம் நாணம்….இவை பெண்களுக்கு அவசியமானவை”, “புருஷன மதிக்க தெரியாதவ….நல்ல பொண்டாட்டியே இல்ல” மாதிரியான கருத்துக்கள முழுமையா நம்பும் ஆண்களும் அதுக்கு சப்பக்கட்டு கட்டும் பெண்களும் தான் இருக்காங்க போல. ‘முற்போக்கு சிந்தனை’னு சொன்னா…”ஓ அடுத்த வாரம் release ஆற படமா”னு கேப்பாங்க போல! எப்ப பாரு…”சமுதாயத்துல சரி னு சொல்றத மட்டும்…வேதவாக்கா எடுத்துகிட்டு, அது படி இருக்கற படம் தான் நல்ல படம்…இல்லனா தேறாது” மாதிரியான நிலைப்பாடு வேணாமே.

அரைச்சு மாவையே அரைக்காம புதுசா வர்ற படங்களே ரொம்ப கம்மி நம்ம கோலிவுட் ல. அதையும்…”எதுக்கு தம்பி…வேற வேலை இருந்தா பாரு” னு நீங்க தட்டி கழிச்சா…அப்பறம் உங்க விமர்சனத்த பாத்துட்டு, பாக்க போறவனும் வேணாம்னு முடிவு செய்வான், அப்பறம் என்ன ஆகும்னு உங்களுக்கே தெரியும்.

அதுக்காக இந்த படம். “ஒரு trendsetter ‘, ‘இத விமர்சிக்க ஒரு தனி அறிவு வேணும்”னு எல்லாம் நான் சொல்லல. இந்த படத்துல, கடசில திணிக்கப் பட்ட பெண்ணிய கருத்துக்களாகட்டும், படத்தோட நீளம் ஆகட்டும், ரொம்ப சுமாரான பாடல்களாகட்டும், நெறைய விஷயங்கள் எங்களுக்கும் கசப்பாத் தான் இருந்தது. அதுக்காக ரெண்டு மூணு கொறைய வச்சு, படத்தையே தள்ளுபடி செய்யறது சரி இல்ல.

நாலு லைன் எழுதுவேன்னு நினைச்சேன்…ஒரு கதையே எழுதிட்டேன். எனக்கு சொல்லனும்னு தோணினத சொல்லிட்டேன். நன்றி!

தாலியின் பெருமைகளை தமிழ் மெகா சீரியல்கள் அக்கு அக்காய் பிரித்து வைக்கும் போதெல்லாம் அது பற்றிய என கருத்துக்களை எழுத தோன்றிய போதும், சமீபத்தில் மேற்கொண்ட இந்திய பயணம் அந்த நோக்கத்தை இன்னும் திறன் பட செய்தது.

பெரிதாய் ஆர்வம் இல்லாத காரணமா இல்லை என் சோம்பேரித்தனமா தெரியாது, ஆடம்பரமாக அலங்கரித்துக் கொள்வதிலோ, தங்க நகைகள் அணிவதிலோ பெரிதாக விருப்பம் இருந்ததில்லை. அப்படியே ஒரு திருமணத்திற்கு அல்லது உறவினர் வீட்டிற்கோ செல்லும் போது தங்க நகை அணிவது கட்டாயம் ஆனதெனில், இருப்பதிலேயே மெலிசான ஒரு சங்கிலி அணியவே விரும்பியதுண்டு.

திருமண பேச்சு அடிபட ஆரம்பித்த போதெல்லாம், அந்த படபடப்பு, மகிழ்ச்சி அனைத்தும் இருந்த போதிலும், அந்த தடியான தாலி கொடி கழுத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டுமா என்ற ஒரு கடுப்பு நிச்சயம் இருந்தது; ஏதாவது பேசி ஒரு மெலிசான தாலிக்கு சீக்கிரம் மாறி விட வேண்டும் என முடிவு செய்தேன்.

அனால் மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்த காலத்தில் கூட அந்த தாலியில் என் கணவனின் உயிர் ஊசல் ஆடுகிறது என நினைத்ததில்லை. என்னை ‘தொட்டு தாலி கட்டியவருக்கும்’ தாலி போன்ற சடங்குகளில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அந்த தாலிக் கொடியை கழற்றினேன்.
திருமணத்திற்குப் பிறகு, பகுத்தறிவு சிந்தனைகள் மெல்ல தலை தூக்க ஆரம்பித்த போது, பெரியாரின் பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை விரும்பி படிக்க ஆரம்பித்தேன். பண்பாடு, கலாச்சாரம் என்ற பேரில் ஒரு பெண்ணுக்கு 1008 அடக்குமுறைகளை இந்த சமூகம் செவ்வனே அமைத்திருந்தது புரிந்தது.

பல முறை இந்த ஆணாதிக்க சமூகம் அடைந்துள்ள மாபெரும் வெற்றியை நினைத்து வியந்தது உண்டு.
அந்நேரங்களில் எல்லாம் நினைவுக்கு வருவது இந்த கதை (யாரும் சொல்லிகேட்டதா இல்லை படித்ததா அல்லது மூக்கணாங்கயிறு என யாரோ போட்ட கோட்டில் நான் போட்ட ரோடா என நினைவில்லை!!!)
மாட்டு வண்டி தன் கட்டுப்பாட்டில் இருக்க, வண்டி ஓட்டுபவர் மாட்டிற்கு மூக்காணங்கயிறு அணிவிக்கிறார்; தினந்தோறும் காலையில் இவ்வேலை நிகழ்கிறது. அவர் அதை ஒரு நாள் அணிவிக்க மறக்கும் போது, மாடு அதனை எடுத்து வந்து கொடுக்கிறது; இப்படி அவர் தொடர்ந்து மறப்பதால், அந்த மாடும் இனி இதை கழற்ற வேண்டாம் என தன் மூக்கிலேயே மாட்டிக்கொள்கிறது. சிறிது நாட்களில் தன் வேகத்தின் மீது உள்ள நம்பிக்கை மறைகிறது; அந்த மூக்கணாங்கயிறும் அதை லாவகமாக அசைக்கும் வண்டி ஓட்டுனரும் தான் தன்னை நல் வழி நடத்துகின்றனர் என நம்ப ஆரம்பிக்கிறது.
சில சமயங்களில், வேகமாக செல்லவோ அல்லது வேறு விஷயங்கள் மேல் இருக்கும் கோவத்தை வெளிப்படுத்தவோ, ஓட்டுனர், சாட்டையினால் அடித்தால், அதையும் பொறுத்துக்கொள்ள தன்னை தயார் செய்து கொள்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள், மாட்டு பொங்கல், சில சமயங்களில் சும்மாவேனும் ஓட்டுனர் ஜொலிக்கும் ரிப்பன்களையும் மணிகளையும் மாட்டும் போது, “பரவாயில்லையே என்னமா கவனிச்சுக்கறாரு”, என பெருமிதம் கொள்ள ஆரம்பிக்கிறது.

மூக்கணாங்கயிறுக்கு பதில், ஒரு பெண்ணை அடக்க தாலியை பயன்படுத்துவோம் என முடிவு செய்து, “அய்யோ இவளால வாய் பேச முடியுமே, கொஞ்சம் சிந்திச்சு ஏதாவது கேட்டுட்டா”, என பதறுகிறது ஆண் ஆதிக்க சமூகம்.
ஒரு படி மேலே சென்று, “ஒரு பெண்ணுக்கு அழகு…அச்சம் மடம் நாணம்”, “அடக்கமா இருந்தா அந்த பொண்ண எல்லாரும் கைக்கூப்பி வணங்குவாங்க”, மாதிரியான கோட்பாடுகளை பரப்புகிறது. அதிலிருந்து சிறிது விலகும் பெண்ணை, தூற்றி, ‘பெண் குலத்திற்கே ஒரு இழுக்கு’ என அவளுக்கு பட்டம் கட்டுகிறது. அவளை ‘ஒரு குடும்பப் பெண் எப்படி இருக்கக்கூடாது’ என்பதற்கு ஒரு உதாரணமாய் வருங்கால சந்ததியருக்கு போதிக்கிறது.
முளையிலேயே கிள்ளி விட்டதனால், அந்த குழந்தையே மாற்றுக் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் வரை, சமூகமும் அதன் வழி நடக்கும் பெற்றோரும் வாழ்வியல் கற்பிக்கும் ஆசான், அவர்கள் வகுத்த கோட்பாடுகளே வேதவாக்கு!!

இந்த தெளிவு கிடைத்த பிறகு, அந்த தாலி கயிறும் அது சம்பந்தப்பட்ட சடங்குகளும் பெண்மைக்கு ஒரு இழுக்காக மட்டுமே எனக்கு தெரிகிறது. அதனால் இம்முறை இந்தியா செல்ல தயாரான போதும், அந்த தாலி கயிறுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

‘எதுக்கும் இருக்கட்டும்’ என கைப்பையில் திருமண சான்றிதழை வைத்துக்கொண்டேன் (ஆண் ஆதிக்க அறிவிலி பேய்கள் பிரச்னை செய்தால், பெண் விடுதலை பற்றி பாடம் எடுக்க விரும்பவில்லை)

இந்தியாவில் நான் பார்த்த திருமணமான பெண்கள் நவ நாகரீக உடையோ அல்லது புடவையோ…எது அணிந்திருந்த போதும், கழுத்தில் அந்த தாலி மட்டும் கட்டாயம் தொங்கியது.
நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த பெண்களும், உறவினர் குழுக்களில், ஒரு பெருமையுடன் தாலிக்கொடியினை வெளியே எடுத்த படி அதற்கு கும்குமம் வைப்பதை கண்டேன்.
ஆண்களும் “அது பொம்பளைங்க பிரச்சனை; என் தலைய போட்டு உருட்டாம இருந்தா போதும்”, என நினைப்பார்களோ என்னவோ, அந்த தாலி கயிறுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தான் இருந்தனர். இந்த இடத்தில், “இல்லையே நானே விரும்பித் தான் அத போட்டுக்கறேன்; அந்த தாலி என்ன ஒரு முழு பொண்ணா ஆக்குது”, என பெருமிதம் அடையும் வேறு கிரகத்து பெண்கள் பற்றி எனக்கு பெரிதாக கருத்து இல்லை.

யோசித்து பார்த்தேன்…ஒரு பெண்ணை அடிமைப் படுத்த மட்டும் கண்டுபிடிக்கப் பட்ட இந்த மஞ்சள் நிற மூக்கானங்கயிற்றின் பயன் தான் என்ன…யோசனையின் விளைவு இனி…

குறிப்பு: பின்வரும் வரிகளில், ‘வேலி’ என்ற சொல், ‘செல்வம்’, ‘பாதுகாப்பு’, ‘சப்பக்கட்டு’, ‘அடக்குமுறை’ என பல பொருள் பட்டு வரும். விருப்பத்திற்கு ஏற்ப பொருள் எடுத்துக் கொள்வது வாசகர் விருப்பம்.

தாலி

“லாக்கர்களில் வளையல்களும், அட்டிகைகளும் பதுங்கிக் கிடக்க,
பளபள வென கழுத்தில் மின்னும்போது, கொள்ளை அடிப்பவருக்கு வேலி.

குழந்தைகளின் கல்வி, சொந்த வீடு என சிறுக சிறுக காசை சேர்த்து வைப்பவருக்கு, ‘கடுகு அளவு தங்கம் இன்னிக்கி வாங்கினா, கடல் அளவுக்கு பெருகும்” என அட்சைய திரிதியை என்ற நன்னாளை அறிமுகப்படுத்தியே முதலாளிகளுக்கு வேலி

“அவள் கழுத்தில் தொங்கும் தாலி…நம் உயிர் பத்திரமாக படுத்து தூங்கும் தூளி”, என
100% நம்பிக்கை உடைய அவதாரபுருஷர்களுக்கு வேலி

“வெள்ளை காகம் குட்டிப்போட்டது, தாலிக்கு ஆபத்தாக முடியும்;
பரிகாரம் செய்தாக வேண்டும்”, என குறிசொல்லி, மனைவியரின்
‘அறியாமை கண்களை’ திறந்து வைக்கும் ஜோதிட சிரோன்மணிகளுக்கு வேலி

“என்னதான் ஜீன்ஸ், குர்தா எல்லாம் போட்டாலும், வழி வழியா வரும்
கலாச்சாரத்த கைவிட முடியுமா?? தடியா ஒரு மாடல் கொடி ஒன்னு , மெலிசா செயின் மாதிரி இன்னொன்னு”
என பாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் மங்கையரின் ‘நற்சேவை’யில்
நேரத்தை முதலீடு செய்யும் பொன்கொல்லர்களுக்கு வேலி

“அவ கழுத்துல தாலி போடறது என் ஜோலி…அத பாத்துட்டும் அவள சைட் அடிக்கறவன்
ஆவான் காலி”, என நிம்மதி பெருமூச்சு விடும் தொடநடுங்கி கணவர்களுக்கு வேலி

“அவ முகத்துல முழிச்சாலே பாவம்; வீட்ல ஒரு ஓரமா உக்கார வேண்டியது தான”, என விஷம் கக்கி,
மனிதத் தோலில் உலாவும் பீதிண்ணி நாய்கள், கைம்பெண்களுக்கு போடும் வேலி

“கும்குமம் மஞ்சள அந்த தாலி மேல வைக்கும் போது, அவர் தலை மேல
எம்பெருமான் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வைப்பாரு”, என அனுபவசாலிகளின்
அருள்வாக்கை கேட்டு தலையாட்டும் மனைவியருக்கு வேலி

“தாலி நான் போடமாட்டேன்…என் புருஷன் போடலியே”னு அளக்கரா…எல்லாம் திமிரு”,
என உருப்படியான வேலை எதுவும் இல்லாது ஊர் வம்பு
பேசும் துருப்பிடித்த மூளைக்காரர்களுக்கு வேலி

இப்படி அந்த தாலிக்கொடியுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு ‘நன்மை’ இருக்கும் போது, அந்த சங்கிலி ஒரு திருமணமான, அதிலும் பெண் கழுத்தில் மட்டும் தான் தொங்க வேண்டும் என்பது ஒரு நெருடல். இன்னும் சிறிது யோசித்து பார்த்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த நன்மையும் அந்த பெண்ணிற்கு காலனாவிற்கு பயன்படாது; பின்னர் ஒரு விலங்காய் மட்டும் விளங்கும் அந்த தாலி கொடியை, உயிரைப் போல் பாதுகாக்கும் பெண்களின் வினோத மனப்பான்மை இன்னொரு பெரிய நெருடல்.

“இதெல்லாம் சுத்த பேத்தல்…போன வாரம் கூட, 5 பவுணுக்கு ஒரு சங்கிலி வாங்கிக்கொடுத்தேன். இன்னும் ரெண்டு வாரத்துல எங்க கல்யாண நாள். அதுக்கு சாமூத்ரிகா பட்டு பொடவை கேட்டிருக்கா. எனக்கு இந்த பெண்ணியவாதிகள் பேச்சுல அர்த்தம் இருக்கறா மாதிரி தெரியல”, என புலம்பித்தள்ளினான் அருண்.
“தாறுமாறான விவாதம் போல…அருண் உங்க முகம் அப்படி செவந்து போயிருக்கு”, என கண்ணடித்தபடி, விவாத ஜோதியில் ஐக்கியமானான் சதீஷ்.
“இல்லப்பா…நம்ம ஜேம்ஸ் இன்னிக்கி 2 hour permission …ஏதோ பெண்ணியவாதிகள் கூட்டத்துக்கு போயிட்டு வருவாராம்”, என அருணின் கோபத்திற்கு காரணத்தை உரைத்தான் ஆறுமுகம்.
“யப்பா…பெண் விடுதலையா…’ஆண்கள் தான் அவங்கள அடக்கி ஆளறாங்க’னு இந்த பெண்ணியவாதிகள் அடிக்கற கூத்து, தாங்க முடியலடா சாமி. நம்ம வீட்டுக்கு எல்லாம் வந்து பாக்கணும், அப்ப தெரியும். நாம வாங்கற ஒரு 500 ரூவா சட்டைக்கு, அவங்க ஒரு 5000 ரூவாய்க்கு பொடவை வாங்கறாங்க; எந்த ஊர்ல இது அடிமைத்தனம்னு தெரியலியே”, என தன் பங்குக்கு அலுத்துக்கொண்டான் சதீஷ்.
“நேத்து ஏதோ பேசிட்டு இருக்கும் போது, கொஞ்சம் கோவத்துல அடிச்சிட்டேன்…லைட்டா தான்ப்பா. அதுக்கு வீட்ல போட்ட கூச்சல பாக்கனுமே….எங்க அம்மா அப்பா கூட என்ன அடிச்சது இல்ல…அது இதுனு. சமாதானம் செஞ்சு படுக்க போகும் போது, மணி 12”, இது மீண்டும் அருண்.
ஜேம்ஸ் வருவதை பார்த்து அனைவரும் அமைதி ஆகினர்.
“என்ன பாஸ்…இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. நீங்க இது மாதிரி மீட்டிங் எல்லாம் போறது, எங்கள எல்லாம் கெட்டப் பசங்களா காட்டுதுல”, என மெதுவாய் தாக்குதலை துவங்கினான் அருண்.
“பார்றா…போன weekend நீங்க எல்லாரும் ‘நவீன சரஸ்வதி சபதம்’பாக்க போனீங்க..நான் வரல. நீங்க அந்த படத்த பாத்து என்ன கெட்டப் பையனா காட்டறீங்கனு சொன்னா…அது எவ்வளவு அபத்தமா இருக்கும். உங்களுக்கு பிடிச்சிருக்கு நீங்க பாக்கறீங்க. என்னதான் பேசறாங்கன்னு பாக்க ஆசையா இருந்துச்சு …நான் போனேன்”, என தன் தரப்பு வாதத்தை முன் வைத்தான் ஜேம்ஸ் .
“பாயிண்ட் சரி மாதிரி தான் இருக்கு…இருந்தாலும்”, என தலையை சொரிந்தான் அருண்.
“பெண் விடுதலை பத்தி பெண்ணியவாதிகள் ‘நீயா நானா’ல பேசி கேட்டிருக்கேன்…இப்போ அவங்க மீட்டிங் ஒன்னுத்துக்கு போக வாய்ப்பு கெடைச்சது…எதுக்கு விடனும்னு…ஆனா நெஜமாவே ரொம்ப புதுசா இருந்தது அருண். இதெல்லாம் தெரியாமலே இருந்துட்டோமேனு கூட தோணிச்சு”, என தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டான் ஜேம்ஸ்.

“ஏதோ சொல்ல வரீங்கன்னு புரியுது…ஆனா வெளங்கலியே. பெண்ணியம் எல்லாம் பொம்பளைங்க சம்பந்தப்பட்ட விஷயம்ல. அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்”, என அருண் கேள்வி எழுப்ப, கூட்டத்தில் இருந்த அனைவரும் கேள்வியை ஆமோதித்தனர்.
“இதே கேள்விய அந்த மீட்டிங்லயும் ஒருத்தர் எழுப்பினாரு. அதுக்கு மேடைல இருந்தவங்க ரொம்ப பொறுமையா ஒரு example வச்சு வெளக்கினாங்க. நம்ம கூட வேலை பாக்கறாரு ஒருத்தர். அவர எப்பவும் சுத்தி இருக்கறவங்க நக்கல் செய்யறதும், அவங்க வேலை எல்லாத்தையும் அவர் தலைல கட்றதுமா இருக்காங்க. கொஞ்சம் பயந்த சொபாவம் அவருக்கு…தன் பக்கம் நியாயம் இருந்தா கூட, குரல உயர்த்தி பேசமாட்டாரு. நாம சத்தமா பேசிட்டா நம்மள பத்தி ஆபீஸ்ல தப்பா நினைப்பாங்கன்னு அவரும் தட்டிக்கழிச்சுகிட்டே இருக்காரு. உங்களுக்கு அவர பத்தி நல்லா தெரியும்..அவர் மேனேஜர் உங்க friend. உங்களுக்கு ஒரு சான்ஸ் கெடைச்சா, உங்க friendகிட்ட அந்த விஷயத்த பத்தி பேசுவீங்களா மாட்டீங்களா? அவர் நாசமா போகணும்னு எண்ணம் இருந்தா, அது வேற விஷயம். so matter என்னனா…அந்த பயந்து பயந்து வாழற ஊழியர மாதிரி தான் பெண்களும், எல்லா பெண்களுமே அப்படி இல்லாட்டியும், பெரும்பாலும் அப்படிதான் இருக்காங்க. ஒரு பொண்ணுக்கு சின்ன வயசுல இருந்தே, ‘அடங்கி தான் போகணும்’, ‘புருஷன் மனசு நோகாம நடந்துக்கணும்’, ‘அடிக்கறாரா…டென்ஷன்ல அடிச்சிட்டாரு, பொறுத்துக்கணும்’, ‘அவர் இல்லனா உனக்கு வாழ்க்கை பூஜியம்தான்’னு வீட்ல இருக்கற பெரியவங்க அறிவுரை குடுத்தே வளக்கறாங்க. அவ அவ்வளவு மழுங்கடிக்கப்படும் போது , எந்த படிப்பும் அந்த மழுங்கடிப்ப சரிப்பண்ண முடியாது”, என ஒரு நீண்ட பதிலை வழங்கிய ஜேம்ஸ், சதீஷ் கொட்டாவி விடுவதை பார்த்து,
“செமையா மொக்கை போடறேன்ல..’இதெல்லாம் ஏன்டா நமக்கு தெரியாம போச்சு’னு தோணின பல விஷயங்கள்..அதுதான் பகிர்ந்துக்கனும்னு தோணிச்சு”, என தன் இருக்கை நோக்கி நடக்க எத்தனித்தான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க, எனக்கும் இதெல்லாம் புதுசா இருக்கு. முன்னமே தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேன்; நீங்க மேல சொல்லுங்க”, என ஜேம்சின் பையை வாங்கி மேசை மீது வைத்தான் அருண்.

ஒரு மெல்லிய சிரிப்புடன், “அம்மா அப்பா சொல்றது கேட்டுகிட்டு, அப்பறம் புருஷன் நிழல்ல இருக்கறதுதான் பெருமைன்னு சொல்லியே பொண்ண வளக்கறாங்க. என் wife கல்யாணத்துக்கு முன்னாடி sterlite corporationல chemical engineer; ஒரிசால வேலை பாத்தா. ரெண்டு வருஷம் ‘Employee of the year’ விருது வாங்கினா.
கல்யாணத்துக்கு முன்னால…அவள போன்ல புடிக்கறதே கஷ்டம்…வேலை மேல அவ்வளவு ஈர்ப்பு அவளுக்கு. ஆனா கல்யாணத்துக்கு அப்பறம், ‘ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி’னு பெருசுங்க சொல்கேட்டு, வேலைய resign செஞ்சா. இங்க சென்னைல வீட்டு வேலைய பாத்துக்கிட்டு கொழந்தைகள கவனிச்சுக்கறா. நான் படிச்சவன் தான, ஆனா ஒன்னுமே பேசாம “அம்மா மனசு நோகாம நடந்துக்கோ”ன்னு, என் வேலைய பாத்துகிட்டு இருக்கேன். இங்க தான் ஆம்பளைங்களுக்கு பெண்ணியம் தேவை படுது”, என ஜேம்ஸ் முடிக்கும் முன்,
“இல்ல பாஸ்…வேலை பாக்கறதுல எல்லாம் விருப்பம் இருந்தா அவங்க ஏன் வீட்ல இருக்காங்க. அவங்களுக்கு சமைக்கறது, கொழந்தைங்கள பாத்துக்கறது, டிவில ரெண்டு சீரியல் பாத்து அழறது, beauty parlor போய் அழகு செஞ்சுக்கறது…இதெல்லாம் தான் பிடிச்சிருக்கு”, என ஆறுமுகம் முந்தி அடித்தான்.
“நீங்களே உங்க wife சொல்லி கேட்டீங்களா…?? சுத்தி இருக்கற பெண்கள பாத்துட்டு, இது தான் அவங்களுக்கு பிடிச்சிருக்கு போலன்னு நாம நினைக்கறோம். அவங்களும் நண்பர்கள், உறவினர் கூட்டத்துல இருக்கற லேடீஸ் எல்லாம் ‘இல்லத்தரசி’யா கொழந்தை வளர்ப்பு, கணவனுக்கு புடிச்ச சாப்பாடு சமைக்கறதுன்னு இருக்கறத பாத்துட்டு இதெல்லாம் முடிக்கவே ஒரு நாள் முழுக்க தேவை போலவே…இதுக்கு மேல வேலையா…நோ நோ னு அவங்களையே நம்ப வச்சுக்கறாங்க”, என ஜேம்ஸ் விடையளிக்க,
“ஆனா பாஸ்…சில லேடீஸ் வேலைக்கு முன்னபின்ன போயிருக்கவே மாட்டாங்க. அவங்கள force பண்ணி வேலைக்கு போன்னு எப்படி சொல்றது”, என யதார்த்தமாய் வினவினான் சதீஷ்.
“நீங்களே யோசிங்க…அவங்களுக்கு மட்டும் அது என்னங்க தனி சலுகை? அவங்க இன்ஜினியரிங் படிக்கறாங்க, நாமளும் படிக்கறோம், ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் நாம கட்டாயம் வேலைக்கு போகணும். அவங்க வீட்ல இருக்கணும்னு முடிவு செஞ்சா பரவாயில்லையா?
இன்னொன்னு…வெளில போய் வேலை செய்யும் போது, ஊர் நடப்பு பத்தி தெரிஞ்சுப்பாங்க. ஈஸியா முடிக்க வேண்டிய விஷயத்துக்கு எல்லாம் உங்கள நம்பி இருக்க மாட்டங்க. எல்லாத்துக்கும் மேல…வீட்ல ரெண்டு சம்பளம். ஒரு வீடோ, பசங்களுக்கு நல்ல ஸ்கூல்ல admissionஓ ஆசை பட்டீங்கனா, finance கொஞ்சம் இடிக்காது. அவங்க ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்களையே நம்பி இருக்கும் போது, வீட்ல எந்த பெரிய முடிவுலயும் அவங்க பங்கு இருக்காது. ஆரம்பத்துல இருந்து நீங்க தான் மண்டைய போட்டு பிச்சுக்கணும். நம்ம ஆபீஸ்லியே பாக்கறோம்….நாம வெளிப்படையா பாராட்டலனாலும், சாரதா, கீதா…அவங்க சாதுரியம் எவ்வளவு தடவை நமக்கு ஹெல்ப் பண்ணி இருக்கு. ஆம்பளைங்க தான் புத்திசாலிங்க…பொண்ணுங்க எல்லாம் குருட்டாம்போக்குல மனப்பாடம் செஞ்சு பரிட்ச்சைல வாந்தி எடுப்பாங்கனு ஒரு கேவலமான கருத்துனால, அவங்கள ஒரு பொருட்டா நாம மதிச்சு எதுவும் கேக்கறதில்ல.
அவங்களும் ‘கேட்டா பாத்துக்கலாம்’னு சும்மா இருக்கறாங்க”, என கூறியபடியே அருண் பக்கம் பார்வையை திருப்பிய ஜேம்ஸ்,
“அருண் என்ன ஆச்சு…ஏன் திடீர்னு upset ஆய்ட்டீங்க”, என கேட்டான்.
“கொஞ்சம் guiltyயாத்தான் இருக்கு பாஸ்…ஏதாவது பிரச்சனைல கொழம்பிட்டு இருப்பேன்…அவ கிட்ட ஷேர் பண்ணி அவ கருத்த கேக்கனும்னு தோணினா கூட, “அது எப்படி ஒரு பொட்டச்சிகிட்ட அட்வைஸ் கேக்கறதா”னு தட்டி கழிச்சிருக்கேன்”, என அருண் முடிப்பதற்குள்,
“நான் இன்னும் மோசம் பாஸ்…அவ கொழந்தைங்க ஸ்கூல் projectsல ஹெல்ப் பண்ணும் போதெல்லாம், அவ ideas செம அசத்தலா இருக்கும்..’நமக்கு அது தோணவே இல்லியே’னு நினைப்பேன்…பாராட்டனும்னு தோணும்; ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளையே வச்சுப்பேன்”, என ஆறுமுகம்.
“இதுல எல்லாம் ஒரு ஆறுதல் என்னனா…நம்ம யாரும் பொண்ணுங்க மேல ஒரு வெறுப்புல இத பண்ணல. வழி வழியா இப்படி தான் வளக்கப் படறோம். ஒரு வேளை நம்ம அப்பாக்கோ தாத்தாக்கோ இந்த மாதிரி ஒரு புரிதல் கெடைச்சிருந்தா…நாம இப்ப இந்த விஷயத்த பத்தி பேசிட்டு இருக்கவே மாட்டோம். இப்ப இந்த விவரம் புரிஞ்சதுக்கு அப்பறம், நம்ம கொழந்தைங்கள இப்படி வளக்க மாட்டோம்; ‘படுக்கையறைல போகப் பொருள், சமையலறைல சமையல்காரி தான பொண்ணு”னு ஒரு கீழ்த்தனமான எண்ணம் அவங்களுக்கு இருக்காது”, என ஒரு நிம்மதி பெருமூச்சுடன் முடித்தான் ஜேம்ஸ்.

ஒன்றுமே பேசாமல் உரையாடலை மட்டும் கேட்டுக்கொண்டிருந்த தினகர், “எல்லாம் சரிதான் பாஸ்..ஆனா கொஞ்சம் முக்கியத்துவம் குடுக்கறத வச்சு, ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்கனா என்ன பண்றது…அதுவேற, “சரி தீனா, இன்னிக்கி நீ கொஞ்சம் சமையல கவனி”னு சொல்லிட்டா…”, என வினவ,
“அட ஆமாம்ல..”, என சதீஷும், ஆறுமுகமும்.
“நீங்க இருங்க ஜேம்ஸ் …இதுக்கு நான் பதில் தரேன். கிட்டத்தட்ட 25 வருஷமா யாருக்காவது அடங்கியே இருந்திருக்காங்க…அந்த புதுசா கெடைச்ச விடுதலைய கொஞ்சம் அனுபவிச்சாத்தான் என்ன. அப்பறம்…சமையல் செய்யறதுல என்ன பாஸ் கேவலம்..இந்த கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி பாக்க ஆரம்பிச்சதுல இருந்து, எனக்கும் கிச்சன்ல அசத்தனும்னு ஆசை வந்திருக்கு. வீட்ல சொன்னதில்ல…ஆனா இப்ப ‘எனக்குள் இருக்கும் நளனை வெளிக்கொணரும் சமயம் வந்துவிட்டது”, என நிமிர்ந்த தலையுடன் பெருமையாய் விடையளித்தான் அருண்.
“இன்னொன்னு…நீங்க இவ்வளவு மாறும் போது, அவங்களும் அத நிச்சயம் பாராட்டுவாங்க. உங்க ரெண்டு பேர் நடுவுல இருக்கற சமூகம் விதித்த தடை ஒடைஞ்சதுக்கு அப்பறம்…கலந்துரையாடல்ஸ் ஈஸியா நடக்கும்”, மீண்டும் அருண்.
‘salute’ அடிக்கும் தோரணையில் அருணை பார்த்த ஜேம்ஸ், “பொண்ணுங்க மாதிரியே நாமளும் ஒரு 25 வருஷம் இந்த ஈகோவ கட்டிகிட்டே வளந்துட்டதுனால…ஆரம்பத்துல கொஞ்சம் கடியாத்தான் இருக்கும். சொல்லும் போதே எனக்கு வயித்த பொறட்டுது”, என சற்றே பயந்த கண்களுடன் செல்ல எச்சரிக்கை விடுத்தான் ஜேம்ஸ்.
“நான் கெளம்பறேன் பாஸ்”, என நழுவ எத்தனித்தான் ஆறுமுகம்.
“போன் தான நோண்டிகிட்டு இருந்தீங்க…யாருக்கு இவ்வளவு அவசரமா…”, என ‘கலாய்க்க’ ஆரம்பித்தான் சதீஷ்.
“என்ன தப்பு பாஸ்…wifeக்கு call பண்ணனும்னு உங்க எல்லாருக்கும் தோணிச்சு. நான் செயல்ல எறங்கிட்டேன்”, என ஒரு கோபம் கலந்த குரலில் விடையளித்தான் ஆறுமுகம்.
“யப்பா…பையனுக்கு மூக்கு மேல கோவம் வருது. சாரி பாஸ்..நானும் ஏதாவது surprise குடுக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா என்னனு தான் தெரியல. நகை, சினிமா டிக்கெட் இல்லாம வேற ஏதாவது புதுசா யோசிக்கணும்”, என யோசிக்கும் முகபாவனையுடன், குழுவில் இருந்து விலகினான் சதீஷ்.
“ரொம்ப நன்றிங்க ஜேம்ஸ். எதெல்லாம் மாத்திக்க போறேன், எத மொதல மாத்திக்க போறேன்…எதுவும் தெரியல; ஆனா ஏதோ ஒரு புத்துணர்ச்சி! உங்களுக்கு குடுத்திருக்கற அந்த code testing …இனி என் பொறுப்பு”, என ஜேம்சை தட்டிக்கொடுத்தான் அருண்.
“உங்க திறந்த மனசு தான் முக்கியமான காரணம் அருண். ’25 வருஷமா நமக்கு தெரியாததையா சொல்லிட போறான்’னு நீங்க இந்த பேச்சு வார்த்தைய நிறுத்தி இருந்தா, எப்பவோ இந்த கூட்டம் கலைஞ்சிருக்கும். அப்பறம் coding எல்லாம் வேணாம்…இன்னிக்கி வேலை செய்யற mood இல்ல. நாயர் கடைல ஒரு டி, மசால் வடை சாப்பிட்டா சூப்பரா இருக்கும்; ஒரு 10 நிமிஷத்துல lift பக்கம் மீட் பண்றேன்”, என ‘thumbs up’ செய்கை செய்தபடி, தன் இருக்கைக்கு நடந்தான் ஜேம்ஸ், முகத்தில் ஒரு காதல் கலந்த சிரிப்புடன், மனைவிக்கு அலைபேசியில் ஒரு குறுந்தகவல் type செய்தபடி.

அன்று வெகு மாதங்களுக்குப் பிறகு ‘சிங்காரவேலன்’திரைப்படம் பார்த்தேன். பள்ளியிலோ அல்லது கல்லூரியில் படிக்கும் பொழுதோ…இந்த படம் பற்றி என்ன நினைத்தேன் என தெரியவில்லை. ஆனால் இம்முறை பார்க்கும் போது, ஒரு வெறுப்பு கலந்த வருத்தம் தான் மிஞ்சியது. பகுத்தறிவு கருத்துக்களை தன் மேடை பேச்சுகளில் சரமாரியாக பொழியும் கமல்ஹாசன் கூட திரைப்படங்களில் ‘அடங்கி இருக்க வேண்டியவ பொண்ணு…ரொம்ப ஆடினா…அடக்க வேண்டியது ஒரு ஆணோட கடமை’ மாதிரியான பிற்போக்கு கருத்துக்களை பிரச்சாரம் செய்வார் என்ற ‘உலகறிந்த உண்மையை’ புரிய வைத்தது அந்த படம். இன்னொரு விதத்தில் உதவியதெனில், இந்த பதிவு எழுத தூண்டியதெனலாம்.

சமீபத்தில் திறன்பேசியில் (smart phone) கேட்ட பல இளையராஜா பாடல்களில் ஒன்று,’அழகு மலராட’,’வைதேகி காத்திருந்தாள்’லிருந்து
பாடலின் சில வரிகள், ஒரு இளம்பெண்ணின் கைய்யறு நிலையை தெளிவாக எடுத்துக்காட்டுபவை. மேலும் சமூகத்தில் ஒரு விதவைப்பெண் எதிர்க்கொள்ள வேண்டிய அவலம், கணவனை பிரிந்த உடன்…அவளின் விருப்பங்களை குழி தோண்டி புதைத்ததாக வேண்டிய கட்டாயம்…அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியது.

சமூகம் தான் அந்த பெண்ணை தவிக்க விட்டதெனில், ‘நானும் சமூகத்தின் அங்கமே’ என அந்த இயக்குனரும், கடைசி வரையில், அவ்விதவைப்பெண்ணை அவ்வாறே இருக்கும் படி கதைகளத்தை நகர்த்துகிறார். நகைமுரண் இதில் என்னவெனில், இப்பாடலுக்கு ரேவதி நடனம் ஆடுவது…சாமி கற்சிலைகள் நிறைந்த கோயில் மண்டபத்தில். இயக்குனரின் ‘தாராள மனதின்’ வெளிப்பாடு….அப்பெண்ணுக்கு ‘தற்காலிக ஆனந்த படலம்’…’இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ பாடல்.

“அந்த காலத்துல சமூகம் அப்படி…அப்பறம் சமூகமும் மாறிடிச்சு; படங்களும் மாறிகிட்டே தான இருக்கு…உதாரணத்துக்கு ‘ரிதம்’ இருக்கு ‘ஆனந்த பூங்காற்றே’ இருக்கு…”, என தமிழ் சினிமாவின் ‘வளர்ச்சியினை’ கூர்ந்து கவனிப்பவர்கள் கவனத்திற்கு…
மேலோட்டமாக இந்த படங்களின் இயக்குனர்கள் ‘முற்போக்குச் சிந்தனையாளர்கள்’ தோலில் உலவினாலும், படங்களில், துல்லியமாக சுட்டிக்காட்டும் ஒரு விஷயம், “கதாநாயகி…திருமணம் ஆகி விதவையானாலும் , இன்னும் கன்னி கழியாதவளே”, என்பதையே.

அந்த விஷயத்தில், இல்வாழ்க்கையில் இடம்பெற்று, திருமணம் முறிந்த ஒரு பெண்ணை கதாநாயகியாக பார்த்ததென்னவோ , கௌதமின் ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில்தான்.
திருமணம் என்பது அவள் வாழ்வில் ஒரு பாகமே தவிர, அதன் முறிவு…எந்த விதத்திலும் அவள் மொத்த வாழ்க்கையையும் பாதிக்க கூடாது என்ற யதார்த்த கருத்தை கெளதம் அழகாக கையாண்டுள்ளார்.
இந்த யதார்த்த கருத்து, கேவலமான சில சமூக சடங்குகள், பழக்கவழக்கங்களுக்கு அடியில் புதையுண்டு கிடக்கிறது.அதன் முகத்திரையை கிழித்து மக்களுக்கு காட்டும் அந்த துணிவு கூட இயக்குனர்களிடம் இல்லாதது ஒரு வருத்தமே.

இங்கும் ஒரு நகைமுரண்…சிங்காரவேலன் திரைப்படத்தில், ‘இப்படித்தான் ஒரு பெண்ணானவள் இருக்க வேண்டும்’ என அறிவுரை வழங்கி, முதல் இரவு படுக்கையில், சாட்டையை வீசி, குஷ்பூவை வளைக்க நினைக்கும் கமலஹாசன், இப்படத்தில் எடுத்து விடும் ஒரு வசனம்,
“பொம்பளைங்கள அடிக்க கூடாதுன்னு சின்ன வயசுல சொல்லி குடுக்கல உங்க அம்மா ….I hate violence against women even if it isn’t my jurisdiction”
துணிச்சல் பற்றி பேசும் போது, சமீபத்தில் படித்த ஒரு ஆங்கில பதிவும், பார்த்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படமும் நினைவுக்கு வருகிறது.
// Balachander states in an interview that he did not intend to make fully political movies but “wanted to touch a political backdrop” while foregrounding human relationships.[147] Still, Balachander’s vociferous distrust of politics is palpable, an excess of which was seen in the family melodrama, Achamillai Achamillai (“No Fear,” 1984)where the life of an ideal married couple is turned upside down by the husband’s venture into politics.//

அப்பதிவு சொல்வது போன்ற ‘வீராவேசமான’ அரசியல் மீதிருக்கும் அவநம்பிக்கை படத்தில் வெளிப்பட்டாலும், ஆரம்பகாட்சியில் வரும் ஒரு அறிவிப்பு (1:28 – 3:12), “நான் ஒரு வியாபாரி; நான் விற்கும் பொருள்…எல்லா விதமான ரசிகனுக்கும் போய் சேர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது ஒரு நல்ல வியாபாரியின் கடமை”, என்ற இயக்குனரின் ‘கொள்கையை’ திடமாக நிலைநிறுத்துகிறது.

பாலச்சந்தரின் இந்த படம் பார்த்த பிறகு, பெண் விடுதலை, பெண்ணடிமை போன்ற சமூக இன்னல்கள் எந்த அளவிற்கு அவர் படங்களில் கையாளப்பட்டிருக்கிறது என அறிய நினைத்தேன்.

ஒரு பெண்ணை ‘திமிரான’, ‘பிரச்சனைகளை கையாளும் யுக்தி தனக்கு மட்டுமே தெரியும்’ என்ற ‘பகட்டான’ தோரணைகளில் காட்டிய புகழ் அவரையே சாரும். ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதாவாகட்டும், ‘ப்ரேமி’ ரேணுகாவாகட்டும் இல்லை பாலசந்தர் தயாரிப்பில் உருவெடுத்த ‘அண்ணி’ மாளவிகா அவினாஷாகட்டும், மற்றவர் பிரச்சனைகளை அழகாக ஆராய்ந்து, தீர்வும் கண்டுபிடிப்பர்.அத்திரைப்படங்களிலும் சரி, தொலைக்காட்சி தொடர்களிலும் சரி, கதாநாயகி அல்லாத இதர கதாபாத்திரங்கள் அனைவருமே அறிவிலும், ‘ஆராய்ந்து முடிவெடுக்கும்’ தன்மையிலும் சற்று குறைந்தவர்களாகவே இருப்பர்.
இவ்வாறு ஒரு பெண்ணை ‘எல்லாம் தெரிந்தவள்’, ‘அவளால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை’ என்ற ஒப்பனையில் காட்டும் பாலச்சந்தரிடம் பெண் உதவி இயக்குனர்கள் இருந்ததில்லை என்ற செய்தி சற்று வியப்பினை அளித்ததெனலாம்

Outlook பத்திரிக்கையின் ஒரு நேர்க்காணலின் போது கேட்க பட்ட இந்த கேள்விக்கான, அவரின் ‘வழவழ கொழகொழ’ பதில் பின்வருமாறு…
// But your feminism was limited to cinema. You never had women as assistant directors.
Here there are no women directors. They don’t come forward to take up these roles. Why, our Parliament cannot get around to okaying 33 per cent reservation for women!//

பெரும்பாலான இயக்குனர்கள், தங்கள் கதையின் நாயகிகளை ‘door mat’ஆக மட்டும் சித்தரிக்கும் வேளையில், தன் கதையின் நாயகிகளை, யதார்த்திற்கு புறம்பான கதாபாத்திரங்களில், ‘self righteous’ஆக காட்டி, தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார் பாலசந்தர்.

// in Tamil cinema women are still treated and portrayed as a doormat, lover or wife of a larger-than-life hero. They have not moved beyond unidimensional caricatures of unreal women in the mainstream Tamil entertainment scenario. The woman is either an amazingly self-righteous person with a single-minded dedication for the well-being of her family or a girl lusting after the hero, dressed in minimal clothes and always singing songs in Swiss Alps or Pollachi landscapes with lewd lyrics.//

இந்த பதிவின் இன்னும் சில வரிகள், எனக்கு விஜய் நடித்த சில பல ‘ஹிட்’ திரைப்படங்களையும், ‘சூப்பர் ஹிட்’ பாடல்களையும் நினைவு படுத்தியது.

// The typical heroine found in only Tamil cinema-
A rich, educated upper class girl falling for the hero who is an illiterate rowdy, goonda and a vagabond. The guy humiliates her in public, makes indecent remarks about her clothes (remember that she wears revealing outfits before they fall in love) and it is always the heroine who lusts after the macho hero. Watch the recent crop- Maja, Sivakasi, Aaru, Idaya Thirudan, Chithirem Pesuthedi, Thambi . //

“இந்த பாரு…பொண்ணா லட்சணமா இழுத்து போத்திகிட்டு வந்த வச்சுக்க…ஆம்பளைங்க ஒன்ன பொண்ணா இல்ல மகாலட்சுமியா நினைச்சு கையெடுத்து கும்புடுவாங்க”, என ரசிகர்களின் விசில் சத்தத்திற்கு நடுவில், வசனத்தை அவிழ்த்துவிடும் விஜய்,

“அளவான ஒடம்புகாரி, அளவில்லா கொழுப்புகாரி, இருக்குது இருக்குது வாடி ஒனக்கு ராத்திரி கச்சேரி”, என பாடல் ஒன்றில் குத்தாட்டம் போட்டு கும்மாளம் அடிக்கிறார்.
“அவர் அந்த படத்துல நடிக்கராருங்க…இயக்குனர் சொல்லுவாரு…அவர் அதுக்கு திரைல உயிர் கொடுக்கறாரு”, என சப்பக்கட்டு கட்டுபவர்களுக்கு,
அறிமுக பாடல்களில், ‘ஒன்னோட உயர்வுக்கு ஒன்னோட வேர்வை…என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை; யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா”
“சொன்னா புரியாது…சொல்லுக்குள்ள அடங்காது…நீங்கெல்லாம் என் மேல வச்ச பாசம்; ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது நான் ஒங்க மேல எல்லாம் வச்ச நேசம்”
போன்ற வரிகள், ரசிகர்களுக்கு தன் ‘அறிவுரை’ போலவும், தன் ‘அன்பினை’ வெளிகாட்டும் யுக்தியாகவே வெளிப்படுகிறது.

அத்தனை பொறுப்புள்ளவரெனில். சமூக நலன்களில் அக்கறை உள்ளவரெனில், எடுத்தவுடன் முற்போக்கு கருத்துக்களை தூக்கி நிறுத்தாவிடினும்…முடிந்த வரையில், பிற்போக்கு கருத்துக்கள் தன் படங்களில் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள முயலலாம் என்றே தோன்றுகிறது .


இதே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்…’வண்டி சோலை சின்னராசு’ படத்தின், ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ பாடலும், படையப்பா படத்தில், ரம்யா கிருஷ்ணனுக்கு ரஜினி வழங்கும் ‘அறிவுரையும்’, வல்லவன்/மன்மதன் படங்களில் பெண்களின் குணங்களை பொதுமைப்படுத்தும் வசனங்களும்.
இந்த இடத்தில் சமீபத்தில் படித்த ஒரு ஆங்கில பதிவின் சில வரிகளை பகிர்ந்துகொள்ள விருப்பம்…
இப்பதிவு 1973 ஆம் ஆண்டு வந்த ‘அரங்கேற்றத்திலிருந்து, 2008 இல் வெளியான ‘யாரடி நீ மோகினி’ வரையிலான படங்களில், வேலைக்கு செல்லும் பெண் சித்தரிக்கப்படும் விதத்தை ஆராய்கிறது.

//the tendency towards an imagined traditionalism where the woman is excluded from the professional sphere is largely distanced from the reality of the labor force.//

தமிழ் சினிமாக்களில், தொழில் துறையிலிருந்து விலகி இருக்கும் பெண்ணின் மரபுவாதம் என்பது…உண்மையான, யதார்த்த சூழ்நிலைக்கு புறம்பானது.
இதுவே, மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு.

‘Real life’s reflection on silver screen is Reel Life’ என்பது அப்பட்டமான பொய். அந்த பிம்பத்திலிருந்து வெளிவரும்போது தான்…யதார்த்தமான, நிஜ வாழ்க்கையை ஒத்த திரைப்படங்கள் சாத்தியமாகும். கதாப்பாத்திரங்கள் யதார்த்தமாக இருக்கும் போது, கதைக்களம் கையாளும் பிரச்சனையும் யதார்த்தமாக இருக்கும். ஒரு தீர்வு காணலுக்கு வழி வகுக்கும்.

//In Kudumbam Oru Kadambam (1981), a married woman Sumalatha has an office job, and her promotion makes her husband insecure both professionally and personally as he starts imagining she is having an affair with a white man (i.e. a position of authority he cannot possibly challenge!). Worse, her being at work causes her daughter to suffer, she eventually gives up her job and the family regains its happiness.//

//The first kind of male-replacement situation is when a woman runs a business. In such cases, she has usually inherited the business from a husband or father (thus did not build it by her own sweat). She is frequently unable to run it by herself… Alternately, the businesswoman/heiress is a rich conceited person such as Nadiya in Sandai (2008), Ramya Krishna in Arumugam (2009) and is eventually tamed by being pushed into greater femininity by the hero.//

//the absence of an able and authentic Tamil male justifies the woman’s search for the secretarial job – in Vasantha Maligai, the girl’s father is disabled, in Priyamanavale the father is dead, and in Sigappu Rojakkal, the brother is an airline pilot – established as a modern thinking man who is absent a lot of the time and letting his sister work. This last case is in fact a very important means of establishing a lack of Tamil values in a working woman’s family.//

மேல்கண்ட வரிகளின் சாரம் இதுவே…ஒரு பெண், வீட்டில் குடும்பத்தலைவன் இல்லாத ஒரே காரணத்திற்காகத்தான் வேலைக்கு செல்வாள். அப்படி அவள் வேலையில் ஈடுபடும் போது, குடும்ப சூழ்நிலை சொல்லத் தேவையின்றி கெட்டு விடும். அதனையும் ‘ஒழுங்கு’ படுத்த ஒரு ஆண் மகன் தேவை படுகிறான்.

ஒரு பெண்ணை அவளின் யதார்த்த பாத்திரத்தில் காட்டிய (காட்டியதாக நான் நினைத்த) ‘அவள் அப்படித்தான்’ பற்றி இப்பதிவு கூறுவதாவது…
//In the film, the lead protagonist is portrayed as a man-hater, who drops relationships and moves on when it does not suit her. Her attitude is explained by her background -growing up in a dysfunctional family with a mother who had affairs with other men. This idea of the multi-generational negative outcomes of a married woman’s poor judgment is a frequently repeated theme, including with Sigappu Rojakkal. //

ஒரு பெண்ணின் ‘தவறான’ மதிப்பீடுகள் (poor judgement), அவள் வழிவழியாக கடந்து வந்த கசப்பான அனுபவங்களின் தாக்கமே.
ஒரு பெண் ‘தவறான’ முடிவுகள் எடுப்பதற்கும், ஒரு ஆண் அவ்வாறு செய்வதற்கும், தமிழ் சினிமா முன்வைக்கும் காரணங்கள் வியப்பூட்டுகின்றன.அவன் தவறுகள் //யானைக்கும் அடி சறுக்கும்// என்றும், அவளின் ‘தப்பான முடிவுகள்’ அவள் வளர்ப்பின் காரணம் என்றும் நிலைநிறுத்தப் படுவது…முட்டாள்தனம்.

இதை ஒரு நெருடலாக அந்த பதிவு முன்னிறுத்தி இருந்தாலும், அப்படத்தில் சொல்ல பட்ட பல கருத்துக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தே ஆக வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் கடைசி காட்சி இது…

1978 இல் வெளிவந்த படம் இது. இன்றும் இப்படம் முற்போக்குக் கருத்துக்களுக்கு ஒரு உதாரணமாக பயன்படுத்த படுகிறது என்பது தமிழ் சினிமாவின் துயர நிலையையே பறைசாற்றுகிறது

சமூக பிரச்சனைகள் பற்றி பேச ஆரம்பிக்கும் போதெல்லாம், நான் பெரும்பாலும், பெண் அடிமை, பெண் விடுதலை பற்றியே பேசுகிறேனோ என்ற எண்ணம் தோன்றும். தவறொன்றும் இருப்பதாய் தெரியவில்லை. ஒரு சமுதாயத்தில் இருக்கும் இரு சாராருக்கு நடுவிலேயே பல வேறு பாகுபாடுகள் இருக்கும் போது, இருவரும் சேர்ந்து இதர சமூக இன்னல்களுக்கு தீர்வு காண்பது என்பது நாய் வாலை நிமிர்த்தும் ‘பலனற்ற’ வேலையே.

இந்த சமத்துவம் வந்த பிறகு, எந்த பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண்பது என்று யோசிக்க வேண்டிய தேவையே இல்லை. அதையும் சுலபமாக்குகிறது தமிழ் சினிமா…தீண்டாமை, சாதி கொடுமை என பல பிரச்சனைகளை மேன்மைப்படுத்திக் காட்டி இருக்கிறது…அவற்றை மக்களிடம் வெற்றிகரமாக விற்கவும் செய்திருக்கிறது. அடுத்து, தமிழ் சினிமா கொண்டாடும் தேவர் மகன்களையும், சின்ன கௌண்டர்களையும் பற்றி தெளிவு பெற வேண்டும்…அடுத்த பதிவில் 🙂

அன்று ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். அருகிலிருந்த பெரியவர் கூறியதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் அதிகமாவே சத்தம் வர சிரித்தேன். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் பெரியவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு இறங்கினேன். வீட்டிற்கு நடந்து வரும் வழியில் சட்டென நம் ஊரில் கூறப்படும் ஒரு ‘பொன்மொழி’ நினைவிற்கு வந்தது.
“பொம்பளை சிரிச்சா போச்சு….புகையில விரிச்சா போச்சு”!! “பெண்ணியமா…பாப் வச்சுகிட்டு பேண்ட் சட்டை போட்டிருக்கறவங்க பேசறதுதான…”, என நினைத்த காலங்களில் கூட…இந்த ‘பொன்மொழி’ எனக்குள் ஒரு வெறுப்பை உண்டாக்கியது எனலாம். இதை நினைத்த மாத்திரத்தில்…பாலினத்திற்கு ஏற்றவாறு, நம் சமூகத்தின் அணுகுமுறை மாறுபடும் பல தருணங்கள் நினைவிற்கு வந்தது. அவற்றை பதிவாய் பதிவு செய்தால் என்ன என தோன்றிற்று…தயாரானேன்.

சூழ்நிலை 1- திருமண பேச்சு வீட்டில் அடிபடும் சமயம்
ஒரு ஆண் ‘இப்பொழுது வேண்டாம்’ என தட்டிக்கழிக்கும் போது, “புரியுதுப்பா…நீ மேல படிக்கணும்னு ஆசை படற…எங்களுக்கும் வயசு ஆகுது. பேரன் பேத்திய பாக்கனும்னு ஆசை இருக்காதா…யோசிச்சு பாரு”, இது பொதுவாக பெற்றோரின் பதிலாக இருக்கும்
ஒரு பெண் ‘தள்ளி போடலாமே’ என கூறும் போது, “என்னடி லவ் கிவ்வுனு எதாவதா…25 வயசு ஆயாச்சு….இன்னும் பொண்ண வீட்லியே வச்சிருக்கனு ஒவ்வொருத்தன் கேக்கும் போது பக்கு பக்குன்னு இருக்கு. இன்னும் வயசாக வயசாக…மாப்பிள்ளை கெடைக்கறது ரொம்ப கஷ்டமா போயிடும்”
சமூகத்தின் குப்பன் சுப்பன்களின் பேச்சிற்கு ‘மதிப்பு’ கொடுக்கும் பெற்றோர், அவர்கள் மகளின் விருப்பத்திற்கு செவி மடுக்க மறுப்பது…வருத்தத்திற்குரிய ஒன்றே

சூழ்நிலை 2 – மாப்பிள்ளை அல்லது பெண்ணின் கல்வித்தகுதி
“ரொம்ப படிச்ச பொண்ணெல்லாம் வேண்டாம்ப்பா…திமிரும் கூடவே சேந்து வரும். வீட்டுக்கு அடங்கி இருக்க சொன்னா…எதித்து பேசுவா”
“பொண்ணு நல்லா படிச்சிருக்கு…அவள விட ஜாஸ்த்தியா படிச்ச பையன் தான் சரிப்பட்டு வரும். இல்லென்னா பொண்ணு ஒரு வார்த்தை அதிகமா பேசினா…பஜாரி, அடங்காதுன்னு எல்லாம் பேச்சு வரும். நல்ல M.S. படிச்ச மாப்பிள்ளையா பாரு ஓய்”
இதில் இரு வீட்டாருமே ஒற்றுமை கடைப்பிடிப்பது…நல்ல விஷயம் போல் தோன்றிடினும், இல்லற வாழ்க்கையில், இரு வீட்டாருமே, பெண்ணானவள் அதிகமாய் படித்திருக்க கூடாது என்றே விரும்புகின்றனர்.

சூழ்நிலை 3 – திருமண அழைப்பு
வழக்கமாக மாப்பிள்ளை ‘அணியவேண்டியவை’ என ‘வரையறுக்க’ப்பட்டுள்ள ஆடைகளுக்கு மாறாக மாப்பிள்ளை உடைகள் அணியும் போது, “பாத்தியால்ல…வழக்கத்துல இருந்து மாப்பிள்ளை மாறி நிக்கற அழக….அது அவனோட தனித்துவத்த காட்டுதுல”
பெண் அப்படி அணிய வேண்டும் என நினைக்கும் போதே, “வெளங்கிடும்…வர்றவங்க எல்லாம் “த்து…சரியான கஞ்சனா இருப்பான் போலவே பொண்ணோட அப்பன். பொண்ணுக்கு ஒரு ஜீன்ஸ் t-ஷர்ட் போட்டு வேலைய முடிச்சிட்டான்”னு காரித்துப்புவாங்க”
இது மாதிரி ஒரு சூழ்நிலையில் நானோ என் தோழிகளோ இருந்ததில்லை. எனினும், என் நண்பன் அவனின் திருமண அழைப்பின் போது, தன் விருப்பப்படி உடை அணிந்ததை பார்த்து விட்டு…தோன்றியது இந்த சூழ்நிலை.

சூழ்நிலை 4 – 21 வயதிற்கு பிறகு தன் விருப்பப்படி முடிவெடுப்பது
ஒரு ஆண் அப்படி முடிவெடுக்கும் போது, “பெருமையா இருக்கு தம்பி…உனக்கு சரின்னு பட்டா அத செய். எங்க சப்போர்ட் எப்பவும் உனக்கு உண்டு”
ஒரு பெண் தன் விருப்பத்தை முன்வைக்கும் போதே, “இதெல்லாம் எப்படி…சரிப்பட்டு வருமா? இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணனும், பொண்ண வீட்ல வச்சிருக்கறது, வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கறா மாதிரி. கல்யாணம் பண்ணிக்க…புருஷன் ஓகே சொன்னா…யாரு தடுக்க போறாங்க சொல்லு”
சமூகம் ஆட்டிவைக்கும் பொம்மையாய் அந்த கணவனும் இருக்கும் போது, அவனின் ‘கட்டுப்பாடு பட்டியலும்’ அப்பெண்ணின் விருப்பத்திற்கு இடம் அளிக்கப்போவதில்லை.

சூழ்நிலை 5 – கணவன் அல்லது மனைவி இறந்த பிற்பாடு, மனைவியோ அல்லது கணவனோ மறுமணம் செய்துகொள்ளும் போது…
“என்னதான் பொண்டாட்டி போன துயரம் இருந்தாலும்….ஒரு துணை இல்லாம எப்படி. ஊர் உலகத்துல சகஜமா நடக்கறது தானே…”
“புருஷன் செத்து ஒரு வருஷம் கூட ஆகல…அதுக்குள்ள இருப்பு கொள்ளல..அதுதான் அவசரம்”

சூழ்நிலை 6 – கண்ணீர் வடிக்கும் தருணங்களில்…
“சிங்கம் மாதிரி இருப்பான்…பாவம்…மனிஷன் எவ்வளவு நேரம் தான் உள்ள போட்டே புழுங்கிகிட்டு இருப்பான் சொல்லு ”
“ஆரம்பிச்சுட்டாடா…எதுக்கெடு ஒரு அழுகை. இத வச்சே இந்த பொண்ணுங்க பொழைச்சுப்பாளுங்க”

சூழ்நிலை 7 – வேலை உயர்வு கிடைக்கும் தருணங்கள்
“எனக்கும் தெரியும்…இவன் இல்லாம வேற எவனுக்கு கொடுப்பாங்க சொல்லு…அவன் வேலை அவ்வளவு கச்சிதமா இருக்கும்”
“அப்பவே சொல்லல…அவ மினுக்கிக்கிட்டு daily ஆபீஸ்க்கு வர்றதும் 32 பல்லும் தெரிய சிக்கறதும், இந்த promotion கெடைக்காம இருந்தாத்தான் ஆச்சரியம் ”

சூழ்நிலை 8 – சமைக்கத்தெரியாது என ஒப்புக்கொள்ளும் பொழுது…
“இதுல என்ன இருக்கு. ஆம்பளைங்க கரண்டி தூக்க பொறக்கலப்பா…வீட்டுக்கு சம்பாதிச்சு வந்து கொட்டறோம்ல”
“ஏம்மா…வீட்ல அம்மா சொல்லிக்கொடுக்கலியா…எங்க… வீட்ல கூடமாட இருந்து ஹெல்ப் செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கும். எப்பவும் அது என்ன…Facebook தான…”

சூழ்நிலை 9 – சமூகப்பிரச்சனைகளில் தன் கருத்தையோ அல்லது பலர் ஒத்துப்போகும் கருத்திற்கு மாற்று கருத்து தெரிவிக்கும்போது…
“பரவாயில்ல மச்சி…சுத்தி நடக்கற விஷயங்கள நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. இந்த angleல நான் இதுவரைக்கும் யோசிக்கவே இல்லியே”
“அதுசரி…இப்பெல்லாம் இத பத்தி கூட குங்குமத்துல போடறானா…ஏதோ தீயற நாத்தம் வருது பாரு. அடுப்புல என்ன வச்சிருக்க?”

சூழ்நிலை 10 – வேறு சாதியில் திருமணம் செய்து கொள்வது
“அந்த காலத்துல இருந்தே அவன் நாத்திகம் தான் கடைபுடிச்சான். பெரியாரோட books தான் படிப்பான். அப்படியே நடந்தும் காட்டிட்டான். சபாஷ் டா மாப்பிள்ள”
“அப்படி என்ன அவசரமோ அந்த பொண்ணுக்கு…அம்மா அப்பாவ தலைகுனிய வச்சுட்டு சந்தோஷமா இருந்திடுவா…?”, சாதிக்கே இப்படி ஒரு ‘பங்கத்த’ விளைவித்தப் பிறகு, இந்த வார்த்தைகளை கேட்க, அந்த பெண் உயிருடன் இருப்பாளா என்பது அடுத்த கேள்வி.

சூழ்நிலை – 11 – கணவன் அல்லது மனைவியை ‘டா’ ‘டீ’ போட்டு பேசுவது
“இதுல என்ன இருக்கு? அவன் தொட்டு தாலி கட்டி இருக்கான். ரோட்ல போறவளையா ‘டீ’ போட்டு கூப்பிட்டான்?
“கட்டின புருஷன ‘டா’ போட்டு கூப்பிடறான்னா…ரொம்ப நெஞ்சழுத்தம் இருக்கணும். படிச்சுட்டாளாம்…எல்லாம் பெத்தவள சொல்லணும்”

சூழ்நிலை – 12 : திருமணமாகி ஒரு வருடமாகி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருத்தல்
“அவனுக்கு ஏதாவது டார்கெட் இருக்கும். வீடு வாங்கிட்டு பாத்துக்கலாம்னு இருக்கானோ என்னவோ”
“அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட போக சொன்னேன். நான் பாத்துக்கறேன்னு திமிரா பதில் சொல்றா”

மக்களின் மனதளவில் இருக்கும் இந்த வேறுபாடுகளும், சமத்துவமின்மையும் நீங்காத வரையில், பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கான அரசுத்திட்டங்கள் போன்றவை எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவத்தை நிஜமாக்குமென்பது…விடையறியா கேள்வியே!

“மொத்தம் ரெண்டு suitcase, ரெண்டு hand baggage and ஒரு laptop; பாத்து…விழ போகுது பாரு; நான் கியூல போய் இடம் புடிக்கறேன்”, என மளிகை கடை பட்டியல் படிப்பது போன்ற தோரணையில் கூறிக்கொண்டே சுங்கத்தீர்வை (customs) வரிசை நோக்கி நடந்தேன்.
நீங்க husband and wifeல”, என கடவுச்சீட்டை பார்த்த படி, வினவினார் கடவுச்சீட்டு அதிகாரி.
“ஆமாம் சார், என சுருக்கமாய் நான் பதிலளித்தேன்.
என் கழுத்தை பார்த்தபடியே, உங்க ரெண்டு பேர் surname ஒண்ணா இல்லியே”, என தன் ‘C.I.D.ஷங்கர்’ வேலையை துவங்கினார்.
“பேர் மாத்திக்கணும்னு எனக்கு தோணல சார்”, என மீண்டும் சுருக்கமான பதிலளித்தேன்.
“தம்பி..உங்க கிட்ட marriage certificate, bank statement மாதிரி ஏதாவது இருக்கா? எனக்கு இது சரியா படல”, என்றார் நம் கடவுச்சீட்டு அதிகாரி.
வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
சிறிது எரிச்சல் தலை தூக்க ஆரம்பித்த நேரத்தில், “அந்த marriage certificate, property documents நடுவுல இருக்கும்”, என அமைதியாய் பதிலளித்தான் ராஜ்.
அதிகாரியிடம் சான்றிதழ் கொடுக்க, “எப்பவுமே இத கைலியே வச்சுகிட்டு சுத்தறீங்க போல…இதுக்கு தான் கழுத்த சுத்தி ஒரு தாலின்னு ஒன்னு போட்டுக்கணும்”, என நக்கலாக சிரித்தபடி ‘அறிவுரை’ வழங்கினார் நூற்றாண்டு கிழவர்…அதாவது நம் கடவுச்சீட்டு அதிகாரி.
3 வருடங்கள் கழித்து இந்தியா போவதனால், என் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அன்று மாலை என்னை பார்க்க வந்திருந்தனர்.
“ரெண்டு பேர் தான் வந்திருக்கீங்க…ஜூனியர் அனு, ஜூனியர் சிவா எல்லாம் எங்க?”, என வீண் பேச்சு மாநாட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டாள் ஒரு ‘அனுபவசாலி’.
“ஊர்லியே விட்டுட்டு வந்துட்டோம்னு சொன்னா நம்பவா போறீங்க…மெதுவா வருவாங்க”, என மெலிதாய் புன்னகைத்தபடி பதிலளித்தேன்.
“நாளைக்கி எல்லாரும் வரீங்க தானே”, என ஒருத்தி வினவியபடி, என் அம்மாவை பார்த்து ஏதோ சைகை செய்தாள்
“நான் பாத்துக்கறேன்”, என சைகையால் கூறியபடி, “அனுக்குட்டி…மாமியோட சித்தி பேத்திக்கு நாளைக்கி கல்யாணம். அந்த தாலி கொடிய போட்டுக்கோம்மா. வெளில எல்லாம் எடுத்து காட்ட வேண்டாம். யாரும் எதுவும் பேசாம இருக்கணும்…அதுக்குத்தான்”, என கனிவாய் கேட்டுக் கொண்டாள் என் தாய்.
நான் பேச்சை தட்ட மாட்டேன் என நினைத்தோ என்னவோ, “அப்பறம் மாமி…van நாளைக்கி இங்க வீட்டு வாசலுக்கே வந்திடும்ல”, என பேச்சுத்தலைப்பை மாற்றினாள் என் தாய்.
“கட்டின புருஷன ‘டா’ போட்டு பேசற. ‘வாங்கோ போங்கோ’ பழக்கமே இல்லையோ”, என தோழி ஒருத்தி வினவினாள்
“என்ன பிரியா…ஷங்கர் ஒன்ன ‘டி’ போட்டுதான கூப்பிடறான்”, என நான் கேட்க,
“என்னவோ போ…அம்மா கூப்பிடறா மாதிரி இருக்கு…நான் வரேன்”, என நழுவினாள் அவள்.
“ஏம்மா…இங்க அம்மன் கோயில்ல கூழுத்தறாங்க. ஒரு 2 minutes wait பண்ணினீங்கன்னா…அம்மன பாத்திட்டு..”, என அந்த ஆட்டோக்காரர் கேட்டார்.
“பிரச்சனை இல்லீங்க…தாராளமா”, என பதிலளித்தேன்.
“அம்மனுக்கு மஞ்ச கலர் புடவை சூப்பரா இருந்துச்சுமா. குங்குமம் எடுத்துக்குங்க”, என குங்குமத்தை நீட்டினார் ஆட்டோக்காரர்.
“என்னம்மா நெத்தி காலியா இருக்கு..நீங்க முஸ்லிமா?”, என அவர் கேட்டது சற்றும் எதிர்பாராத ஒன்று.
சற்றே தயக்கத்துடன், “அதெல்லாம் இல்லீங்க. பெருசா இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல”, என பதிலளித்தேன்.
“உங்க அப்பா மாதிரி நினைச்சுக்கம்மா. இந்த பாளையத்தம்மன் ரொம்ப powerful .ஏதோ பிரச்சனை இருக்குனு நினைக்கறேன். ஆத்தா துணை இருப்பா”, என ‘ஆறுதல்’ அளித்தார் ஆட்டோக்காரர்.
“ஆகட்டும்…நன்றிங்க”, என கூறியபடி வீட்டினுள் நுழைந்தேன்.
“அனுக்குட்டி…மாமா கிளம்பறாரு பாரு”, என அம்மா கூற,
“போயிட்டு வாங்க. Melbourne வந்தா கட்டாயம் வீட்டுக்கு வரணும்”, என வழி அனுப்பினேன்.
ஒரு சில வினாடிகள் நிலவியது…ஒரு அசவுகரியமான நிசப்தம்.
“நீ கால்ல விழுவன்னு மாமா வெயிட் பண்ணினாரு”, என வெறுப்பு கலந்த சோகத்துடன் அலுத்துக்கொண்டாள் என் தாய்.

அலைபேசியின் மணி கேட்டு, எடுக்க விரைந்தேன். அந்த பக்கத்தில் ராஜ். வங்கியில் முடிக்க வேண்டிய வேலை முடிந்து விட்டதாகவும், அதற்கு சந்தித்த நபர்கள் பற்றியும் அவன் கூறிக்கொண்டிருக்க, இடையில் குறுக்கிட்டு, “இல்ல ராஜ்…நான் ரெடி இல்ல. இந்தியாக்கு திரும்பி வந்து செட்டில் ஆக நான் ரெடி இல்ல. இல்ல ராஜ் நான் ரெடி இல்ல” என புலம்ப ஆரம்பித்தேன்.
“நீ ரெடி இல்லேன்னு எனக்கும் தெரியும். காபி ரெடி ஆயாச்சு. பல் தேச்சிட்டு வா…சூடார போகுது”, என சமையலறையிலிருந்து குரலெழுப்பிய படி படுக்கையறைக்கு வந்தான் ராஜ்.
சட்டென எழுந்து திருதிருவென விழித்தேன்…ஒரு நிம்மதி பெருமூச்சுடன்.
*******************************************************************************************
சமூகத்தை திருப்திபடுத்த மட்டுமே வாழ்ந்த எனக்கு…மேற்கு உலகம், எனக்கென, என் விருப்பபடி வாழ கற்றுத்தந்தது. இச்சுதந்திரத்தை இழந்து மறுபடியும் சமூகத்தின் கைதியாக தற்போது விருப்பமில்லை.
மேலும் மேற்கில் எனக்கு பிடித்த பல விஷயங்களை, பாராட்டவும், அதன் அழகினை ரசிக்கவும்…துணை புரிந்ததெனில்…இச்சுதந்திரத்தை சொல்லலாம் 🙂

“அம்மா காபி”, என்று தனக்கே உரிய தோரணையில் சுமித்ரா முறையிட, சற்றே நிலை தடுமாறிய மீனா, சமையலறையிலிருந்து படுக்கை அறைக்கு விரைந்தாள்.

“நேத்து போதை உனக்கு தலைக்கு மேல ஏறிடுச்சு; இங்கயே தூங்கட்டும்னு நான்தான்…”, என சுமித்ராவின் ‘நான் எங்கே இருக்கேன்’ என்ற குழப்பத்திற்கு விடையளித்தாள் மீனா.

“போச்சுடா பொண்ண காணோம்னு மேலும் கீழும் குதிப்பாளே ரங்கநாயகி”, என்று கூறிக்கொண்டே வாசலுக்கு விரைந்தாள் சுமித்ரா.

“சாப்பிட்டு போலாமே.. நான் வேணும்னா…”, என்ற மீனாவின் வாரத்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்கானது.

9:00 மணிக்கு முதல் வகுப்பு என்று தெரிந்திருந்தும் ஆடி அசைந்து 11:00 மணிக்கு வகுப்பினுள் நுழைந்தாள் சுமித்ரா.

“என்னடி திருமதி. பழனிசாமி class தான…எங்க ஆள காணோம்”, என நக்கலாய் சுமித்ரா விசாரிக்க,

“அவ புருஷன் துபாய்ல இருந்து வரானாம்…வரவேற்க போய் இருக்கா; செரி நீ சொல்லு, நேத்து செம மப்பு போல…உங்க அம்மாவ காலைல கோயில்ல பாத்தேன்…பொண்ண கொஞ்சம் திருத்துங்கன்னு சொல்லி இருக்கணும்”, என சுமித்ராவை கிண்டல் செய்தாள் நந்தினி.

“அம்மா தாயே அதெல்லாம் எதுவும் செஞ்சுடாதே; ஊருல இருக்கற மாமா, சித்தப்பா எல்லாரையும் கூப்பிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுவாங்க.

‘பெண் விடுதலை’ பத்தி பேசினா…என்னிக்கு வெளியாகுது, யாரு நடிச்சிருக்காங்கன்னு கேக்கறாங்க.

இந்த society என்னிக்கு ஒரு பொண்ணும் தண்ணி அடிக்கலாம், பசங்கள மாதிரி துணி போடலாம், வேலைக்கு போறது, கார் ஓட்டறது எதுவானாலும் ஒரு ஆணுக்கு குறைஞ்சவ இல்லேன்னு உணருதோ… அன்னிக்கித்தான் பெண் விடுதலை சாத்தியமாகும்”, என உணர்ச்சி ததும்ப தன் ‘பரிதாப நிலை’யை விளக்கினாள் சுமித்ரா.

“நீ இப்படியே பேசு…ஒரு நாள் பாருங்கடி…இவ ‘மகளிர் முன்னேற்ற கழகம்’ ஒன்னு ஆரம்பிச்சு ‘பீர் பாட்டில்’ சின்னத்துக்கு வாக்களிக்க சொல்ல போறா”, என கேலி செய்தாள் கலா.

“என்ன தப்புன்னு கேக்கறேன்… கொஞ்சம் modern ஆ துணிபோட்டா, முடிய வெட்டினா உருப்படாதுன்னு ஏசறாங்க; வண்டி ஓட்டினா ‘தெனாவட்டு புடிச்ச கழுதை’னு ஒரு பட்டம். இவங்களோட இந்த கண்ணோட்டம் change ஆற வரைக்கும்… நாம அடிமைகளாவே இருப்போம்”, என தன் தரப்பு வாதத்தை முன் வைத்தாள் சுமித்ரா;

“என் செல்வ செழிப்பை ஊருக்கு தெரியப்படுத்தும் போது நீ குறுக்கிட்டால்…என்னை அடிமை படுத்துகிறாய்; உன் வேலையை கவனி”, என்ற தன் சுயநல கருத்திருக்கு சில பல உதாரணங்களினால் சாயம் பூசி வெளிப்படுத்தினாள்.

“உன் கட்சி வெற்றி பெற எங்கள் நல் வாழ்த்துக்கள்; எனக்கு பசி உயிர் போகுது; யார் வரீங்க canteen க்கு”, என கலா கூற…கலைந்தது பொதுக்கூட்டம்.

6 வருடங்களுக்கு பிறகு

“எவ்வளவு ஆச்சு”, என credit card ஐ நீட்டினாள் சுமித்ரா.

“நீங்க…சுமித்ரா தானே…கே.எம். கல்லூரில படிச்சீங்களா”, என யாரோ பின்னால் இருந்து வினவ, திரும்பினாள் சுமித்ரா.

“ஆமாம் நீங்கே…ஏய் கலா எப்படி இருக்கே. நீ எங்க இங்க. பெங்களூர்லே செட்டில் ஆயிட்டன்னு கேள்விப்பட்டேன்”, என பேச ஆள் கிடைத்த மகிழ்ச்சியை சரமாரியான கேள்விகளால் வெளிப்படுத்தினாள் சுமித்ரா.

“என் கணவருக்கு இடமாத்தம் ஆயிடுச்சு. அதுதான்; இங்க பெசன்ட் நகர்ல தான் இருக்கேன்”, என்றாள் கலா.

தோழிகளின் திருமணங்கள், குழந்தைகள், விவாகரத்துகள் அனைத்தையும் பேசி முடிப்பதற்குள் கடை மூடும் நேரமானது.

“வீட்டுக்கு வர…காபி சாபிட்டுக்கிட்டே பேசறோம்”, என அன்பு கட்டளையிட்டாள் சுமித்ரா.

“நீ மாறவே இல்லே டி…ஆனா ரொம்ப நேரம் இருக்க முடியாது”, என கலா கூற, இருவரும் வெளியில் நின்றிருந்த சுமித்ராவின் toyota car ஐ நோக்கி நடந்தனர்.

“காபி பிரமாதம் சுமி… உன் கணவர் எப்ப வருவாரு…ஒரு வணக்கம் போட்டுட்டு போகலாம்னா…”, என கலா கூறி முடிப்பதற்குள்,

“ஏன்டீ சுமி…எவ்வளவு தடவை இந்த ‘door mat’ அ தூசி தட்ட சொல்றேன்..ஒன்னு சொன்னா உடனே செய்ய உடம்பு வணங்கினாத்தானே. இன்னிக்கி திரும்பவும் தோசை வரட்டி மாதிரி இருந்தது..குழம்புல உப்பே சுத்தமா இல்ல. உன்ன என் தலைல கட்டின அந்த நடராசன சொல்லணும்”, என தன் வருகையையை அறிவித்தான் சேகர்.

“ஏய் சுமி…என்ன பதிலே..”, என பேசிக்கொண்டே வந்த சேகர், கலாவை பார்த்த உடன் அசடு வழிந்தான்; செய்கையினால் ஒரு hello சொன்னான்.

“இந்த சனி-ஞாயிறு பண்ணலாம்னு இருந்தேங்க”, என சேகருக்கு பதில் அளித்துவிட்டு, “கொஞ்ச நேரம் இரு கலா…வீட்ல பண்ணினேன்…சாப்பிட்டு பாரு”, என தோழியை கேசரியுடன் உபசரித்தாள் சுமித்ரா.

“கேக்கறேன்னு தப்பா நினைக்காதே, உன் கணவர் வீட்டு வேலைல help பண்ண மாட்டாரா”, என கலா கேட்டாள்.

“அத ஏன் கேக்கற…நிறைய தடவை சொல்லி பாத்துட்டேன்; office க்கு போயிட்டு வந்து, குழந்தை படிப்ப கவனிச்சு, வீட்டு வேலைய செஞ்சு முடிக்கறதுக்குள்ள… பதினொன்னு-பன்னிரண்டு மணி ஆயிடுது. கொஞ்சம் கோபமா பேசினா…divorce வாங்கிக்கோ, அம்மா வீட்டுக்கு போயிடுனு சொல்றாரு. என்ன பண்ண…வீட்டுக்கு வீடு வாசப்படினு adjust பண்ண வேண்டியதுதான்; infact வேலைய கூட விட்டுடலாமானு பாக்கறேன்”, என அலுத்துக்கொண்டாள் சுமித்ரா.

“பெண் விடுதலை பத்தி…” என ஆரம்பிக்க நினைத்து “நமக்கேன் வம்பு”, என்று அமைதியாய் கேசரியில் முந்திரி வேட்டையை தொடர்ந்தாள் கலா.

“பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?”

—-வினவு இணைய தளத்தில் ‘வாழத்துடிக்கும் பெண்ணினனம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!’ என்ற இடுகையில் இடம்பெற்றுள்ள இவ்வரிகளின் தாக்கமே….கானல் நீர்!