Posts Tagged ‘பெப்பர் சிக்கன்’

அன்னிக்கி நண்பர்களோட ஒரு கேரள வகை உணவகத்துக்கு போய் இருந்தேன். சாதரணமா கும்பலா போனா, ‘starters’னு சொல்ற ‘ஆரம்பத்தீணி’ கட்டாயம் இருக்கும். அன்னிக்கி அப்படி திண்ணதுதான் பெப்பர் சிக்கன். மசாலா, காரம் எல்லாம் சரியான அளவுல இருந்துச்சு…5 பேருக்கு பத்தலன்னுதான் சொல்லனும். அதுக்காக starters மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தா, ‘main course’ நாதி இல்லாம போயிடுமேன்னு ‘மீண்டும் starters’ யோசனைய கை விட்டுட்டோம்.

அதுக்கு அப்பறம் போன வாரம், சிக்கன் சமைக்கலாம்னு நினைச்ச போது, பெப்பர் சிக்கன் செஞ்சா என்னனு ஒரு பொறி கெளம்பிச்சு. இது வரைக்கும் வீட்ல செஞ்சதே இல்ல…அதுனால இணையத்தின் உதவிய நாடினேன். ஒரு இணையதளத்துல இருக்கற சமையல் குறிப்புக்கு ஏத்த மாதிரி வீட்ல எல்லா பொருளும் இருக்காது. அதுனால ஒரு ரெண்டு மூணு தளத்த பாத்துட்டு, வீட்ல இருக்கற பொருட்களுக்கு ஏத்தா மாதிரி, கொஞ்சம் என்னோட ‘ஆக்கமுடைமையும்’ கலந்து சமைக்கறதுதான் என் இஸ்டைல் 🙂

பாத்த பல தளங்கள், ஒரு 30 நிமிஷத்துல இருந்து 2 மணி நேரத்துக்கு மசாலா பொருட்கள சேத்து, சிக்கென ஊறவைக்க சொன்னது. 8:௦௦ மணிக்கு இரவு சாப்பாடு என்னனு முடிவு பண்ணி, 9:00-9:15குள்ள சமைச்சு, 9:30 மணிக்கு சாப்பிட உக்காரனும்னா…இது மாதிரி ‘marinate’னு சொல்ல படற ஊற வைக்கற ஜோலி எல்லாம் வேலைக்கே ஆகாது.
அப்ப…பெப்பர் சிக்கன்…பெப்பரப்பனு போச்சான்னு தான கேக்க போறீங்க…அதுதான் இல்ல. அப்படியே அந்த உணவகத்துல சாப்பிட்டா மாதிரியே இருந்ததுங்க! நம்ப மாட்டேன்னு சீன் போட்டீங்கன்னா…நீங்களே செஞ்சு பாருங்க…நம்புவீங்க!!

எவ்வளவு பேர் சாப்பிடலாம்
: அது சாப்பிடறவங்களோட ‘பசி’ மற்றும் ‘சிக்கன் பிரியத்த’ பொருத்தது; சரி சரி…இதோட என் மொக்கைய நிறுத்திக்கறேன்!! 2 பேர் தாராளமா சாப்பிடலாங்க

தேவையான பொருட்கள்
:

கோழிக்கறி(chicken breast)-300 gm

வெங்காயம்(brown onion)-2, நல்லா பொடிபொடியா நறுக்கிக்குங்க

வெள்ளை பூண்டு(garlic cloves)-4 பல்(இதையும் பொடிபொடிய நறுக்கிக்குங்க; அந்த அளவுக்கு பொறுமை இல்லனா…பெருசாவே வெட்டிக்குங்க (எப்படியும் அரைக்கத்தான் போறோம்)

இஞ்சி (ginger)-ஒரு சிறு துண்டு (5cm அளவு சரியா இருக்கும்) (இத விட தெளிவா தமிழ்ல எப்படி எழுதறதுனு தெரியலங்க!!)
பெருஞ்சீரகம் – 1 Tbsp (பெருஞ்சீரகம் taste நல்லாவே பிடிக்கும்னா…1.5 ஆக்கிக்குங்க)
சீரகம் – 1 Tbsp
மஞ்சள்பொடி – 2 சிட்டிகை
மிளகு – 2 Tbsp(காரம் கொஞ்சம் தூக்கால வேணும்னா, 2.5 Tbsp சரியா இருக்கும்)
கருவேப்பிலை – 2 கொத்து (10-15 இலை இருக்கறா மாதிரி எடுத்துக்குங்க)
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
எண்ணெய் – 4-5 Tbsp (பொறிக்கவும் கூடாது…நல்லா ருசியாவும் இருக்கனும்னா, 5 Tbsp எண்ணெயானு வாய பொளக்காதீங்க!!)
உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:
–> சிக்கன கழுவிக்குங்க; சின்ன சின்னதா நறுக்கிக்குங்க (‘bite size pieces’ சொல்லுவாங்க…அது மாதிரி)
–> கொஞ்சம் மஞ்சபொடியும், உப்பும் போட்டு, வேக வைய்யுங்க
–> சிக்கன் வேகற நேரத்துல, ஒரு பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் ஊத்திக்குங்க (1.5 Tbsp சரியா இருக்கும்)
–> நல்லா சூடான உடனே, சீரகம், பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, கருவேப்பிலை (எடுத்து வச்சதுல பாதி), மிளகு எல்லாத்தையும் எண்ணெய்ல வதக்குங்க
–> மிளகு, கிராம்பு வெடிக்க ஆரம்பிக்கும் போது, நறுக்கி வச்ச வெங்காயத்துல பாதி, நறுக்கி வச்ச பூண்டு, இஞ்சிய சேருங்க
–> வெங்காயம் நல்லா செவப்பான உடனே, அடுப்ப நிறுத்தீடுங்க
–> சூடாறினதுக்கு அப்பறம், மின் அம்மில (mixie) ரொம்ப கம்மியா தண்ணி ஊத்தி அரைச்சுக்குங்க. ஒரு துவையல் பதத்துல இருக்கட்டும். ரொம்ப தண்ணி ஊத்தினா, அப்பறம் சிக்கனோட போட்டு கலக்கும் போது, பெப்பர் தனியா சிக்கன் தனியா சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்!
–> தேவையான உப்பு போட்டு, ஒரு சுத்து அரைய விடுங்க
–> அதே பொரித்தட்டுல, ஒரு 3.5-4 Tbsp எண்ணெய் விடுங்க. சூடான உடனே, மிச்சம் இருக்கற நறுக்கி வச்ச வெங்காயத்த சேருங்க. ஒரு சிட்டிகை மஞ்சபொடி இங்க சேத்துக்கலாம்
–> வெங்காயம் கொஞ்சம் நல்லாவே செவப்பாகட்டும் (கருகாம பாத்துக்குங்க); அப்பறம் மிச்சம் இருக்கற கருவேப்பிலைய சேருங்க
–> கருவேப்பிலை கொஞ்சம் மொருமொருப்பு வந்த உடனே, வேக வச்சு, வடிகட்டின சிக்கன் துண்டுகள பொரித்தட்டுல போடுங்க
–> ஏற்கனவே வெந்ததுனால, ரொம்ப வதக்கனும்னு அவசியமில்ல. அரைச்சு வச்ச விழுதையும் போட்டு, நல்லா சிக்கன் துண்டுகளோட சேருங்க
–> அவ்வளவுதான்!! அடுப்ப சின்னதாக்கிட்டு, ஒரு 2-3 நிமிஷம் விட்டுடுங்க. சுடசுட சூப்பர் பெப்பர் சிக்கன் தயார்!!

நாங்க அன்னிக்கி இரவு சாப்பாட்டுல குழம்புக்கு தொட்டுகிட்டோம்; ஆனா, அடுத்த மொறை, தண்ணி அடிக்கும் போது, வீட்ல சைடு டிஷ் செஞ்சா…கட்டாயம் ‘பெப்பர் சிக்கன்’ தான்னு முடிவு செஞ்சுட்டேன்!!