Posts Tagged ‘மாட்டிறைச்சி’

“அது என் வாயில இருக்கற எச்சில் மாதிரி இருக்குமா…அந்த spider க்கு எப்பிடி கிடைச்சது?”, என சுவரோரம் இருந்த சிலந்தி வலையை உற்று கவனித்தபடியே கேள்வி எழுப்பினான் ஆறு வயதான பரிதி.

“அட…சரிதான் பரிதி. ‘spitting spiders’ னு ஒரு வகையான சிலந்தி இருக்கு. அது தன்னோட எச்சில பயன்படுத்தி வலைய பின்னுமாம். ஆனா இது என்ன ரகம்னு தெரியல. அடுத்த தடவ library போகும் போது, spiders பத்தி படிக்கலாம்”, என உற்சாகத்துடன் விடையளித்தாள் மீரா, பரிதியின் தாய்.

“thanks மா”, என கூறியபடி, தன் விளையாட்டினை தொடர்ந்தான் பரிதி.

மதிய உணவு மேசையில்…

“அம்மா அனுமான் சாமி meat சாப்பிட மாட்டாராம்…பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா நேத்து Nat Geo ல, கொரங்கு meat சாப்பிடறத காட்டினாங்க. அப்ப அனுமான் சாமி வேற type of கொரங்கா மா?”, என சற்றே சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, கேள்வி எழுப்பினான் பரிதி.

“அது வந்து…”, என ஏதோ சொல்ல ஆரம்பித்து, “carrot சாப்பிட மறந்துட்ட பாரு. நீ சாப்பிட்டு முடி. அம்மா டேபிள் சுத்தம் பண்ணிட்டு, உனக்கு என்ன பண்ணப்போறேன்?”, என உரையாடலை திசைத்திருப்பினாள் மீரா.

“gingerbread “, என குதூகலத்தில் உரக்கச் சொன்னான் பரிதி.
எதையோ கூறி திசைத்திருப்பி விட்டோமே என எண்ணி சற்றே வேதனை அடைந்தாள் மீரா. அழைப்பு மணி சத்தம் கேட்டு, நுழைவாயிலுக்கு விரைந்தாள்.

அடுத்த நாள் காலை

“அம்மா ஒரு ஐடியா…இன்னிக்கி ஒரு நாள் நான் brush பண்ணாம இருக்கட்டுமா? பக்கத்து வீட்டு அக்காவோட pet dog மணி இருக்கான் ல, அவனுக்கு அவங்க brush பண்ணினதே இல்லையாம்”, என அடுத்த கேள்விக்கணையை தொடுத்தான் பரிதி.
“ம்ம்…உன் ஐடியா க்கு வரேன். அதுக்கு முன்னாடி, ‘the very hungry caterpillar’ கதைல, அந்த caterpillar என்ன சாப்பிடும்?”, என மீரா கேட்க,
“ஒரு chocolate cake , ஒரு sausage, ஒரு salami, ஒரு lollipop, ஒரு muffin, ஒரு cupcake அப்பறம் ஒரு slice of watermelon”, என சட்டென விடையளித்தான் பரிதி.
“good…அன்னிக்கி காலைல அந்த caterpillar பல் தேய்ச்சதா?”, இது மீரா.
“இல்லியே”, இது பரிதி.
“அன்னிக்கி நைட் என்ன ஆகும்?”, இது மீரா.
“அந்த caterpillar க்கு வயித்து வலி வரும்”, இது பரிதி.
“so …காலைல பல் தேய்க்காம அவ்வளவு foods சாப்பிட்டதுனால, அந்த caterpillar க்கு வயித்து வலி வந்தது. இன்னிக்கி நீயும் பல் தேய்க்காம omelette, அப்பறம் gingerbread, பிரியாணி, ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டா, என்ன ஆகும்?”, என சிரிப்பை அடக்கியபடி மீரா கேள்வி எழுப்ப…
“இல்லமா…நான் brush பண்றேன்”, என பற்பசையை கையிலெடுத்தான் பரிதி.

இரவு உணவு மேசையில்…

“அம்மா…அஸ்வின் வீட்ல beef சாப்பிட மாட்டங்களாம். ஆனா lamb , சிக்கன், fish எல்லாம் சாப்பிடுவாங்க,. cow சாமியாம்…அதுனால kill பண்ண கூடாதாம். எனக்கு ஆனா beef ரொம்ப பிடிக்குமே.. நாமளும் இனி சாப்பிட மாட்டோமா?”, என ஏக்கத்துடன் வினவினான் பரிதி.

“பரிதி நீ சாப்பிட்டு போய் நைட் டிரஸ் போட்டுக்கோ. அம்மா வந்து ஸ்டோரி படிக்கறேன்”, என ஒரு வெறுப்பு கலந்த கோபத்தில் விடையளித்தாள் மீரா.

சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜகன் சற்று அதிர்ச்சியுடன் மீராவை பார்த்தான்.

பரிதி அவன் அறைக்கு சென்ற உடன், நாற்காலியில் அமர்ந்த படி, அழ ஆரம்பித்தாள் மீரா.
“என்ன ஆச்சு மீரா?”, என நிதானமாய் வினவினான் ஜகன், மீராவின் கணவன்.

“இல்ல ஜகன் , ரெண்டு மூணு நாளாவே பரிதிய ரொம்ப ஏமாத்தறேனோனு ஒரு feeling. சாமி பத்தி இல்ல meat சாப்பிடறத பத்தி கேள்வி கேக்கும் போது, அதுக்கு answer பண்ணாம, topic அ மாத்தறேன் இல்ல அவன் கிட்ட கோவப்படறேன். “அப்பிடி எல்லாம் கேக்கக்கூடாது , சாமி கண்ண குத்தும்”, “அது எல்லாம் அப்பிடித்தான்” மாதிரியான answers கொடுக்கவும் விருப்பமே இல்ல”, என இரண்டு நாட்களாக புழுங்கிக் கொண்டிருந்த விஷயத்தை போட்டு உடைத்தாள் மீரா.

ஒரு சிறிய புன்னகையுடன், “நான் தான் பாக்கறேனே, அவன் எப்படா கேள்வி கேப்பான்னு காத்திட்டு இருக்க நீ! அவன் எதையாவது பாத்து excite ஆறத விட, அத அவனுக்கு explain பண்றதுல நீ excite ஆறதுதான் அதிகமா இருக்கு.

ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ மீரா…, நம்ம பையன எப்பிடி வளக்கணும்னு நினைக்கறோமோ, அப்பிடியே வளப்போம். இப்ப உனக்கு ஒரு விஷயத்துல உடன்பாடு இல்லனா, ஊருக்காக உன் கருத்த மாத்திக்க மாட்ட. சரிதான?
பரிதியையும் அப்பிடி தான் வளக்க நினைக்கறோம்னா, அவன் மட்டும் எதுக்கு ஊர் கருத்தோட ஒத்து போகணும் சொல்லு?”, என எடுத்துரைத்தான் ஜகன்.

சற்றே யோசித்த மீரா, “கரெக்ட் ல; thanks ஜகன். ஊருக்கு பயந்து பயந்து நான் அவதி பட்ட நிலைக்கு அவனையும் தள்ள பாத்தேன் ல! சரி நீ போய் படு. நான் அவனுக்கு ஸ்டோரி படிச்சிட்டு வரேன்”, என ஒரு நிம்மதி கலந்த புன்னகையுடன் விடையளித்தாள் மீரா.

பரிதியின் அறையில்…

“அம்மா இன்னிக்கி Rainbow Rob படிப்போமா?”, என கதைப்புத்தகத்தை நீட்டினான் பரிதி.

“நானும் அத படிக்கனும்னு தான் நினைச்சேன்”, என நினைத்தபடியே, புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தாள் மீரா.

கதையின் கடைசி வரிகளை படித்தபடியே, பரிதியை கட்டி அனைத்துக் கொண்டாள்; “நீ யாரு மாதிரியும் இருக்கணும்னு அவசியம் இல்ல பரிதி; உனக்கு ஒன்னு பிடிச்சிருக்கு and அது உனக்கு danger எதுவும் கொடுக்கலெனா, அத தயங்காம பண்ணு. அஸ்வினோட அம்மா அவன தான beef சாப்பிடக் கூடாதுனு சொன்னாங்க. உனக்கு beef புடிக்கும்னு எனக்கு நல்லா தெரியுமே. அதுனால தான் நாளைக்கி உனக்கு meatballs பண்ணப்போறேனே”, என குதூகலத்துடன் உரைத்தாள் மீரா.

“சூப்பர் மா”, என கூறியபடியே, கண்களை கசக்கினான் பரிதி.

“சரி கன்னுக்குட்டிக்கு தூக்கம் வந்தாச்சு. நல்லா தூங்கு; goodnight”, என பரிதியை படுக்கையில் படுக்க வைத்து முத்தமிட்டாள் மீரா.

விளக்கை அணைத்தபடி, அறையை விட்டு வெளியே வந்தாள், மீண்டும் அதே நிம்மதியும் பெருமிதமும் கலந்த புன்னகையுடன்.

கதையின் ஒலி வடிவம்:

ஒரு முன்கதை நிச்சயம் இங்கு தேவை. மாட்டிறைச்சி அந்தாதியும், கோழிக்கறி அகவலும் பாடிய எனக்கு, கடல் வாழ் உயிரினங்களான மீன்கள் மீது ஒரு சின்ன வெறுப்பு இருந்த வண்ணமே இருந்தது. இன்று அவைகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்த பிறகு, ஏன் இத்தனை வெறுப்பு என பல சமயங்களில் யோசித்ததுண்டு.

திரும்ப திரும்ப நினைவுக்கு வருவதெல்லாம், நான் பள்ளிப்பருவத்தில் குடியிருந்த காலனியும் அங்கு பெரும்பாலும் சனி-ஞாயிறு நாட்களில் மிதிவண்டியில் வரும் இறால் கூடைகளும் தான். அதனை விற்று வருபவர் எழுப்பும் ‘எற ரா எற ரா ஏற ராஉ’ கூப்பாடும், அதனை என் தம்பி கிண்டல் செய்வதும் வேடிக்கையாக இருந்திருக்கு. ஆனால் அந்த இறால் கூடை திறந்திருக்கும் போது வெளியேற்றும் நாற்றம் என் வயிற்றை பிரட்டிய தருணங்கள் என்னை ஒரு முடிவுக்கு வரவழைத்தது. “கடல்/நதி வாழ் உயிரினங்கள் அனைத்துமே இந்த குமட்ட வைக்கும் வாசம் உடையவையே”

திருமணத்திற்கு பிறகு, கணவனும் என் நண்பர்களும் பல முறை மீன் ருசியின் துதி பாடிய போதும், என் முடிவில் திடமாக நின்றேன். மாட்டிறைச்சி, கோழிக்கறி சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன் திமிராக உரைத்த அதே உப்பு சப்பற்ற வாக்கியம், “இல்ல எனக்கு பிடிக்காது…சைவ சாப்பாடுல இருக்கற சுவை போதும்; மைசூர் ரசத்துல இல்லாத சுவையா மாமிசத்துல வரப் போகுது”. இந்த வாக்கியத்தை கேட்ட பலரும் மனதில் மட்டும் நினைத்திருப்பர்…வாய்விட்டு கேட்டதென்னவோ என் கணவன் மட்டும் தான், “நீ சாப்பிட்டதே இல்லன்னு சொல்ற, அப்பறம் அது பிடிக்காதுன்னு எப்படி சொல்லுவ” . என் ஈகோ அன்று சுளீரென அறை வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது. சப்பக்கட்டு கட்ட எதுவும் யாரும் துணை இல்லாத காரணத்தினால், தோல்வியை ஒத்துக்கொண்டேன். அன்று அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால், சிக்கன் 65, beef rendang, மட்டன் பிரியாணியின் சுவைகளை என் நாவு ருசிக்காமலே இருந்திருக்கும்.

சரி திரும்ப பதிவு தலைப்புக்கு…
இறாலால் நீர் வாழ் உயிரினங்களையே வெறுத்த நான்…முதன் முதலில் உண்டதென்னவோ இறால் தான்.
இங்கு சிறப்பு அங்காடிகளில் (supermarket), கடல் உணவு (sea food) வாங்கும் இடத்தில் வரிசையில் நிற்கும் போது, பெரும்பாலும் இறால் வாங்காமல் வந்ததில்லை. இறால் தொக்கு, இறால் fried rice, சிம்பிள் இறால் stir fry என அன்று சமைக்கும் moodக்கு ஏற்றது போல், இறால் பதார்த்தமும் மாறும். இறாலை பொடி பொடியாய் நறுக்கும் போது அந்த தெளிந்த நீரோடையின் வாசம்…ஒரு நிமிடம், நம் சமையலறை தான்…குளக்கரைக்கு நகர்ந்து விட்டதோ என நினைக்கத் தூண்டும். ஆனால் இன்றும் அந்த கூடையில் இருந்த இறால் மட்டும் அத்தனை துர்நாற்றத்தை ஏன் வெளியேற்றியது என்பது புரியாத புதிர்:(

Prawns

என்னதான் கோழிக்கறி ருசியானது எனினும், ‘சும்மா சும்மா’ கோழி குழம்பையும், கோழி பிரியாணியையும் உண்ண முடியாது. அதே போன்று, இறாலுடன் நிறுத்தி விட்டால் கடல் அன்னையின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும் என பயந்து, என் நாவிற்கு அறிமுகம் செய்தவை…கெண்டை, காள, கெளத்தி போன்ற மீன் வகையறாக்கள். ஒரு மீன் வகையென கூறி இன்னொன்றை கொடுத்தால் தெளிவாக வித்தியாசம் சொல்ல முடியுமா தெரியாது, ஆனால் முடிந்த வரையில் புதுப்புது வழிகளில் மீனை சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக உள்ளேன்.
அன்று அப்படித்தான்…basa எனும் மீன் வகை (கெளத்தியா என சரியாய் தெரியவில்லை) வாங்கி, இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என இணையத்தை புரட்டிக்கொண்டிருந்த போது, கண்ணில் பட்டது தான் basa fish cake.
கொஞ்சம் வேலைப்பாடு இருந்த போதிலும் (முதலில் மீனை ஓவனில் bake செய்து, அதனை உதிர்த்து, வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் போடி, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து வடை போல் தட்டி, பொறிப்பதே fish cake செய் முறை)
இரவு சாப்பாட்டிற்கு வேலை பளு அதிகம் என்ற போதிலும், ரைஸ் noodles உடன் அந்த basa fish cake கூட்டணி வெற்றிக் கூட்டணி!

basa fish cakes with asian noodles

கடல் உணவின் இன்னொரு சிறப்பம்சம், அதனை சமைக்க எடுக்கும் நேரம். 2 மணி நேரம் மசாலா வகைகளை தயார் செய்ய எடுத்துக்கொண்டாலும், அந்த மீன் துண்டுகளை சட்டியில் போட்ட 10வது நிமிடம், “நான் தயார்”, என பல்லிளித்தப்படி காட்சி அளிக்கும்.
சாதாரணமாக உறைந்த (frozen) மாட்டிறைச்சி அல்லது கோழிக்கறி, குறைந்தது அரை நாளாவது உருக வைக்க வேண்டி இருக்கும். ஆனால் மீனோ, 2 மணி நேரத்தில், “சமையலுக்கு நான் தயாருங்கோ”, என நிற்கும்.
எல்லாவற்றையும் விட முக்கிய சிறப்பம்சம், அதில் இருக்கும் சத்தும், உண்பதனால் கிடைக்கும் நல் பயன்களும். கோழி இறைச்சியில் கொழுப்பு நிறைந்த வகை, கொழுப்பு குறைந்த வகை என இரண்டு உண்டு. அதே போன்று மாடு, ஆடு இறைச்சியிலும் உண்டு. ஆனால் பெரும்பாலான மீன் வகைகளில், கொழுப்பு என்பது மிகவும் குறைவு, புரதச்சத்தில் குறைவேதும் இல்லாமல். பிறகென்ன, மீன் குழம்பு தாறுமாறாக இருக்கும் தருணத்தில், இரண்டு மூன்று துண்டு அதிகமாக உண்டாலும், தீங்கொன்றும் இல்லை…(ஏற்கனவே 10-12 துண்டுகள் உள்ளே போய் விட்டதெனில், இன்னும் அதிகம் திணிக்க வேண்டுமா என்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம்)

food pics - collage

வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது கடல் உணவு உண்பது நல்லது என டாக்டர்களும் கூறும் போது, வேறு என்ன விளக்கம் தேவை?
இத்தனை நற்குணங்களையும் தன் உள் கொண்டு, வாய்ப்பேசா ஜீவனாக நீரினுள் மூழ்கி இருக்கும்…கடல் வாழ் வள்ளல்களுக்கு, ஒரு புகழாரம் செலுத்தாது பதிவினை முடிப்பது நல்லதன்று.
“உன்னை வெறுத்தேன்;
உன்னை உண்பவரை கடிந்தேன்
வாழக்காய் பஜ்ஜி இருக்க இந்த
கடல் வாழ் பட்சி எதற்கு என திமிரில் அலைந்தேன்
தரையில் உள்ளவையைத்தான் விடவில்லை, கடல் நதியில் திரிவதையுமா என ‘சைவ’ சித்தாந்தம் பேசினேன்
பருப்பு வகையறாக்களில் கிடைக்காத புரதச் சத்தா, என புலம்பித் தள்ளினேன்
“என் மேல் இறக்கம் இல்லையா”, என இறால் குரல் எழுப்பும் வரையில்.
கொழுப்பின்றி புரதமா என வியந்தேன்
இரண்டே மணி நேரத்தில் தடபுடல் சமையல் தயாராவதைக் கண்டு திகைத்தேன்
இரவு சாப்பாட்டிற்கு செய்த மீன் குழம்பு அடுத்த நாள்
அதிக ருசியாய் இருப்பதை கண்டு கொஞ்சம் நிலை தடுமாறினேன்
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமும் என முடிவு செய்தேன்
மடிக்கணினியில் ஒரு பதிவும் எழுதி முடித்தேன்”

 

சில பல காரணங்களினால் ஆறு மாதங்கள் சைவ உணவில் மட்டும் ‘stuck’ ஆகியிருந்த என்னை, விடுவித்த ‘steak’கிற்கு இந்த அந்தாதி சமர்ப்பணம்!!

வெகு நாட்களுக்குப் பிறகு…’deli’யில் உன்னை பார்த்தேன்.
“Hi steak …I am அனு. நான் இத சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு tasty!! இங்க எவ்வளவு எவ்வளவு ருசியா ஒரு …இவ்வளவு ருசிய சுவச்சிருக்க மாட்டாங்க…and I am in love ” என சொல்லத் துடித்தேன்.

அந்த இக்கட்டான நிலையில், உன் கண்களை சந்திக்கும் தைரியம் மட்டும் எனக்கு இல்லை. தற்செயலாக நம் கண்கள் ரெண்டும் முட்டிக்கொண்டன. அப்பொழுது, இருவரின் நடுவில் நடந்த உணர்ச்சிப் போராட்டம்….

“steak இல்லாம இருந்து காட்டறேன்னு தான இப்படி செஞ்ச”, என நீ கண்ணில் செந்நீருடன் வினவ,

“அதெல்லாம் இல்ல…என்ன நம்பு please…நான் இருந்த நெலம அப்படி”, என நான் சப்பக்கட்டு கட்ட,

“ஏதோ திரும்பி வந்தியே…அதுவே போதும்”, என கூறியபடி, தராசிலிருந்து என் கைகளில் தாவினாய்! அந்த நொடி….’God Particle’ கண்டுபிடித்த ‘Higgs Boson’ தோற்றார்.

கீரை மற்றும் காய்கறி வகைகளில் மட்டுமே துவண்டு போயிருந்த என நாக்கை…குத்தாட்டம் போட வைத்தாய்;

கோழிக்கறியின் கொ.ப.செ வாக இருந்த என்னை, கட்சித்தாவல் செய்ய செய்தாய்;

Grillலின் மேலிருந்து ‘ருசி ருசி’ என ‘சிக்னல்’ கொடுத்து, ‘பசி பசி’ என வயிற்றை அலற வைத்தாய்;

mushroom sauce மற்றும் mashed potato உடன் சேர்ந்து நீ தட்டின் மேல் வீற்றிருந்த கோலம்…காண கண்ணிரண்டு போதவில்லை.

வாயினுள் ஒரு துண்டு போன அந்த நிமிடம்….பல முடிவுகளுக்கு வந்தேன்!

“வந்தேன்டா பால்காரன்” பாடலை எழுதியவர்….ஒன்று பாடல் வரிகளுக்கு அரைகுறையாக ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும் …அல்லது மாட்டிறைச்சி உண்ணும் பாக்கியம் இல்லாதாவராய் இருந்திருக்க வேண்டும்.
பின்ன,

“அட மீன் செத்தா கருவாடு….நீ செத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க”
என்ற வரிகள் இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்கும்…அவர் கீழ்கண்ட படத்தினை பார்த்திருந்தால்…

மேற்கண்ட படம் T .ராஜேந்தர் கண்ணில் பட்டதே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

“தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ”

“இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்”

“கலை நிலா மேனியிலே…சுளை பலா சுவையை கண்டேன்”

ஒரு பெண்ணின் அழகை இத்தனை ரசனையுடன் அக்கு அக்காய் பிய்த்து வைப்பவர், மேல்கண்ட படத்தை பார்த்திருந்தால்….புகழ்ந்து தள்ளி இருப்பார்.

‘மைதிலி என்னை காதலி’யை தொடர்ந்து, ‘மாட்டிறைச்சி என்ன மாத்திறிச்சி’ என ஒரு படம் எடுத்து, அதன் வெள்ளி விழாவில், பசுமாட்டினை மேடை ஏற்றி இருப்பார்.

“ரொம்ப புகழறீங்களே”, என நீ அந்த சாதுவான முகத்துடன் குழைவது புரிகிறது
அந்தாதியை பாதியில் நிறுத்த கடியாகத்தான் இருக்கிறது
எனினும் நீ கேட்டுக்கொள்ளும் பொருட்டு…

தோறனையில் (oven) நுழைய ‘Beef & Mushroom Pie’ தயாராக இருக்கிறது. பைய்யுடன் சர்க்கரைவள்ளி வருவலையும் சேர்த்து இரவு சாப்பாடு களைகட்ட உள்ளது.
தின்று முடித்து ஒரு திருப்தி ஏப்பத்தை விட்டு….உளமாற நன்றி கூறி முடித்துக்கொள்கிறேன்!!

அன்னிக்கி வேலை முடிச்சிட்டு வர்றதுக்கு 7:30 மணி ஆயிடிச்சு. இருந்த அசதிக்கு, வீட்ல சமைக்கவே மனசில்ல. அப்பத்தான் மத்திய பிரதேசத்தின் சூடான செய்தி ஒன்னு காதுக்கு எட்டினது. எங்க இருந்து அந்த உத்வேகம் பொறந்துச்சு தெரியல…மாட்டிறைச்சி வச்சு ஏதாவது செய்யனும்னு முடிவு செஞ்சேன்.
மேற்கு உலகத்துல…ஆட்டிறைச்சிய இந்திய கறிமசாலா பொருட்கள வச்சு செய்யற ஒரு கறி ‘lamb madras’. அதே மாதிரி ‘பீப் மெட்ராஸ்’னு ஏதாவது இருக்குமான்னு இணையத்த தேடினேன். அப்படி எதுவும் கண்ணுல தென்படல…லாம்ப் மெட்ராஸ் கறிய, மாட்டிறைச்சி வச்சு செய்ய முடிவு செஞ்சேன். எப்பவும் போல…என் படைப்பாற்றலும் அங்க அங்க தென்படும்…:)

தேவையான பொருட்கள்:
மாட்டிறைச்சி, துண்டு துண்டா வெட்டியது (diced) – 500 gm
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
உளுத்தம் பருப்பு – 2 Tbsp
வெந்தயம் – 2 tsp
ஏலக்காய் – 4
பெருஞ்சீரகம் – 1 Tbsp
கிராம்பு – 3
கருவேப்பிலை – 10-15
மிளகாய் வற்றல் – 4-5
வெங்காயம் (பொடிபொடியா நறுக்கிக்குங்க) – 2
பூண்டு – 5 பல்லு
இஞ்சி – 1 சின்ன துண்டு
கடுகு – 2 tsp
சீரகம் – 2 tsp
தேங்காய் பால் – 200 ml
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 Tbsp

செய்முறை விளக்கம்:
1. மாட்டிறைச்சிய கொஞ்சம் மஞ்சள்பொடி சேத்து வேக வச்சுக்குங்க. ரொம்ப வெந்தா ரப்பர் மாதிரி ஆகிடும். உங்களுக்கு அப்படித்தான் பிடிக்கும்னா மட்டும் கொஞ்சம் அதிகமாவே வேகவிடுங்க
2. ஒரு பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் விட்டு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கிராம்பு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் சேத்து வதக்குங்க. வெந்தயம் கருகாம பாத்துக்குங்க.
3. உளுந்து கொஞ்சம் செவக்கும் போது, நறுக்கி வச்ச வெங்காயம் (நறுக்கினதுல பாதி எடுத்துக்குங்க), இஞ்சி, பூண்டு சேத்து திரும்பவும் வதக்குங்க
4. வெங்காயம் ஒரு சிவப்பு நிறத்துலஆன உடனே, அடுப்ப நிருத்தீடுங்க. நல்லா சூடாறின உடனே, மின் அம்மில, கொஞ்சமா தண்ணிவிட்டு அரைச்சுக்குங்க; ஒரு துவையல் பதமா இருந்தா போதும்
5. ஒரு இருப்புச்சட்டில, எண்ணெய் ஊத்தி, சூடான உடனே, கொஞ்சம் கடுகு சேருங்க.
6. கடுகு வெடிக்கும்போது, கொஞ்சம் சீரகம், மிச்சம் இருக்கற கருவேப்பிலைய சேருங்க
7. கருவேப்பிலை கொஞ்சம் மொருமொருன்னு ஆனதுக்கு அப்பறம், வேக வச்சு வடிகட்டின மாட்டிறைச்சிய சேருங்க
8. கொஞ்சம் வதக்கினதுக்கு அப்பறம், அரைச்சு வச்ச விழுத சேருங்க
9. இந்த கலவையோட, தேங்காய்பால் சேருங்க; தேவையான அளவு தண்ணி சேத்து கொதிக்க விடுங்க
10. கடசியா உப்பு சேத்து, நல்லா கொதிச்ச உடனே, அடுப்ப அணைச்சிடுங்க

அப்பறம்…அப்பறம் என்ன…தட்டுல சோறு எடுத்துக்குங்க, ஒரு கரண்டி பீப் மெட்ராஸ் ஊத்திக்குங்க, உருளைக்கிழங்கு வறுவல் இருந்தா அதையும் எடுத்துக்குங்க…அவ்வளவுதான்…ஜமாயுங்க!!
ஒரு ‘change’க்கு – மசாலா பொருட்கள வதக்கும் போது, கொஞ்சம் வித்தியாசமா சுவை வேணும்னா, 2 Tbsp வறுத்த வேர்க்கடலையோ இல்ல 2 Tbsp எள்ளோ சேத்துக்குங்க. துருவின தேங்காய் இருந்தா, அத ஒரு 2 Tbsp சேத்து வறுத்து, அரைச்சு, மாட்டிறைச்சியோட சேத்து கொதிக்க விடுங்க…மடக்கு மடக்குனு சோத்தோட தொண்டைக்குள்ள இறங்கும் பாருங்க…வாரத்துல ரெண்டு நாள் இனி பீப் மெட்ராஸ் தான்னு முடிவு பண்ணினா கூட ஆச்சரியமில்ல!!