Posts Tagged ‘முட்டைகோஸ் பஜ்ஜி கறி’

என் இனிய தமிழ் மக்களே!!!

முட்டைகோஸை கண்டாலே 10 அடி தூரம் தள்ளி நிற்கும் என் போன்றவர்களுக்கு, இந்த பதிவு சமர்ப்பணம்!

மத்தவங்க எஸ் ஆகணும்னு சொல்லலீங்க…ஏதோ பாரதிராஜா touch குடுக்கலாம்னு பாத்தா…

ஸ்கூல், காலேஜ், படிக்கற காலங்கள்ல, நானும் காய்கறிகளும் டிபிகல் மாமியார் மருமகள் மாதிரி. குடுமிபுடி சண்டை நடக்கும்போது கணவன்மார்கள் வந்து சண்டைய தீத்து வைக்கறா மாதிரி எனக்கு அந்த நேரங்கள்ல துணை இருந்தது, பக்கத்துல இருந்த தண்ணி சொம்புதான். அதுவும் வீட்ல carrot பொறியல் இல்ல கோஸ் பொறியல் பண்ணினாங்க….அன்னிக்கி தண்ணி ஒரு ரெண்டு மூணு சோம்பு காலி பண்ணுவேன். அந்த சமயங்கள்ல என்ன பெத்தவ பட்ட பாடு…சொல்லி மாளாது.

அப்பெல்லாம் சமையல்கட்டுக்கு நொறுக்கு தீனிய தேடி கண்டுபுடிக்க, இல்ல மூணு விசில் சத்தம் கேட்டா அடுப்ப அணைக்கவோ தான் போயிருக்கேன். அந்த ‘அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கும் தருணங்கள்’ல வீட்ல கோஸ் சமைச்சிருந்தாங்க….அவ்வளவுதான். வடிகட்டின தண்ணில ‘ஊற்றெடுக்கும்’ அந்த (துர்)நாற்றம் இருக்கு பாருங்க…அப்படியே மூக்கு வழியா பயணத்த கெளப்பி, மூச்சு குழாய் bypass வழியா, சிறுகுடல், பெருங்குடல் கொண்டை ஊசி வளைவுகள(hairpin bend )தாண்டி, வயித்து கதவ தட்டி,…”மவனே பசிக்குதுனு சத்தம் போட்ட…முட்டகோஸ வச்சே சாத்துவேன். அப்பறம் ஐயோ அம்மானு கத்தினா…கேக்க யாரும் வர மாட்டாங்க”,னு ஒரு அறிக்கை விடும். இதுக்கு அப்பறம் வாயே பரவாயில்லைனாலும், அந்த நாத்தம், கோஸ் கறிக்கும், வாய்க்கும் நடுவுல நந்தி மாதிரி நிக்கும்!!!

உங்களுக்கு இந்த வெறுப்பு கொஞ்சம் ஓவராவே தோணலாம்; யதார்த்தந்தாங்க…ஏனா பட்டவன் வலி பாக்கறவனுக்கு தெரியாது பாருங்க!!!

சரி மேட்டேர்க்கு வரேன்…

கீர்த்தனாரம்பத்திலே காய்கறிகளின் பரமவிரோதியாய் இருந்த அனு….கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு ‘U ‘ turn அடித்த கதை….பெருங்கதை!!

‘சுத்தமா பிடிக்காது’ல இருந்து தாவி, ‘சுமாரா பிடிக்கும்’ கட்டத்துக்கு வந்து…இப்ப ‘சூப்பராவே பிடிக்கும்’ கட்டத்துல வந்து நிக்கறேன்.

இவ்வளவு மாறினதுக்கு அப்பறமும் அந்த கோஸின் ‘ghost’ மட்டும் என்ன விடாம தொறத்திட்டு இருந்தது 😦

நானா முட்டகோஸானு பாத்துடுவோம்னு முடிவு பண்ணினேன். சனிகிழம அரை கிலோ கோஸ் வாங்கினேன்.

ஒரு சமையல் குறிப்பு பதிவுல, cauliflower வச்சு பொறியல் குறிப்பு ஒன்னு போட்டிருந்தது. ரெண்டு மூணு தடவை வீட்ல செஞ்சு பாத்திருக்கேன். அன்னிக்கி அது பட்டுன்னு நெனவுக்கு வந்தது.

கோஸ் உள்ளே…cauliflower வெளியே!! அப்பறம் கொஞ்சம் என் ஆக்கத்திறன சேத்து இரவு சாப்பாட்டுக்கு side dish தயார்!!!

என் சமையல்கட்டுல உருவான கோஸ் பஜ்ஜி கறி குறிப்பு இனி…

Serves – 4 (இந்த கணக்கு side dishaa சாப்பிட்டா; இத மெயின் டிஷ்ஷா சாப்பிட்டுட்டு, தப்பு கணக்கு போட்டுட்டியேன்னு என்ன குத்தம் சொல்லாதீங்க!!)

தேவையான பொருட்கள்…

முட்டைகோஸ் – 300-400 gm

கடலைமாவு – 4-5 Tbsp

Ginger Garlic பேஸ்ட் – 1 Tbsp

தயிர் (Yoghurt) – 1-1.5 Tbsp

மிளகு தூள் – 1 tsp

மிளகாய் தூள் – 1 Tbsp

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் போடி – 1 tsp

எண்ணெய் – 5-6 Tbsp (‘அட கடவுளே’னு வாய பொளக்காதீங்க….எண்ணெய்ல கறாரா இருந்தா….கறியும் கறாரா கூழ் மாதிரி தான் வரும்)

செய்முறை விளக்கம்…

1 முட்டைகோஸை நீட்ட நீட்டமா (long thin strips) வெட்டிக்கோங்க. கொஞ்சம் மஞ்சள் தூள் சேத்து வேக வைங்க.

2 அது வேகர நேரத்துல, கடலை மாவு கலவைய தயார் பண்ணுங்க. எண்ணெய தவிர மத்த எல்லா பொருட்களையும் சேத்து ஒரு பசை மாதிரி செஞ்சு வச்சுக்கோங்க (தண்ணி ஊத்த தேவை இல்ல)

3 கோஸ் ரொம்ப வேக வேணாம், கொஞ்சம் வெந்த சமயத்துல அடுப்ப அணைச்சிட்டு, வடிகட்டிட்டு, கோச செஞ்சு வச்ச கடலைமாவு பசையோட சேருங்க (அந்த (துர்)நாற்றம் பத்தி ஒன்னுமே சொல்லலியேன்னு நெனைக்கறீங்க…சரிதான…காய்கறி அணில சேந்ததுக்கு அப்பறம், இந்த சின்ன ‘adjustment’ கூட பண்ணிக்கலேனா அணிதர்மத்துக்கு பங்கம் ஏற்படும் பாருங்க..!!!)

4 ஒரு 5 நிமிஷம் கழிச்சு, பொறித்தட்டு (frying pan)ல கொஞ்சம் தாராளமாவே எண்ணெய் ஊத்தி சூடாக்குங்க. சூடான ஒடனே, இந்த கோஸ் கடலைமாவு கலவைய கொஞ்சம் கொஞ்சமா சேருங்க.


5 பொறித்தட்டு ‘non-stick’ பாத்திரமா இருந்தா ரொம்ப நல்லது. தட்டுல போட்ட கலவைய ஒரு கொத்து ரொட்டி பண்ற ஸ்டைல்ல சட்டுவத்தால பிச்சுபோடுங்க (பாத்திரம் நான்-ஸ்டிக்கா இருந்ததுனா…மறந்துகூட stainless steel அகப்பைய பயன்படுத்தாதீங்க!!)

6 அடுப்ப சின்னது பண்ணிட்டு, அப்படியே ஒரு 5 நிமிஷத்துக்கு விட்டுடுங்க. அந்த நேரத்துல சாப்பாடுக்கு தேவையான கொழம்பு வகைறாக்கள தயார் பண்ணுங்க. அப்பப்ப கவனம் பொறியல் மேலயும் இருக்கட்டும்.

7 உப்பு, காரம் சரியா இருக்கானு பாத்துட்டு, தேவையான அளவு முறுமுறுப்பு வந்த ஒடனே அடுப்ப அணைச்சிடுங்க.

அன்னிக்கி கொழம்புக்கு, நீத்து அவங்களோட ‘spicytasty’ பதிவ துணைக்கு சேத்துகிட்டேன். ரெண்டு மூணு மாசம் முன்னாடி, அவங்க பதிவ பாத்து எண்ணெய் கத்திரிக்காய் பண்ணினேன். கன்னாப்பின்னானு இருந்துச்சு. முக்கியமா அந்த வேர்கடலை, எள்ளு போட்டு செஞ்ச கொழம்பு தூள் கெளப்பிச்சு.

சரி கத்திரிக்காய் இல்லேனா என்ன…கொழம்ப மட்டும் செய்வோம்னு முடிவு பண்ணினேன்.

சாதம், கொழம்பு, கோஸ் பஜ்ஜி கறி, உருளைகிழங்கு சிப்ஸ்…என் கண்ணே பட்டுடும்போல இருந்துச்சு 😉 சரி யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்னு….பதிவா இப்ப உங்க முன்னாடி!!