Posts Tagged ‘முதலாளித்துவம்’

மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பியதிலிருந்து, ரயில் பயணம் போது, தவறாமல் கண்ணில் படும் ஒரு காட்சி, கோட் சூட் போட்டவர்கள் (பெரும்பாலும் இந்தியாவிலிருந்து குடிப்பெயர்ந்தவர்கள்/அல்லது இங்கு வேலை நிமித்தமாக வந்தவர்களாக இருக்கலாம்), ரயிலில் ஏறிய உடன், பையிலிருந்து மடிக்கணினியை எடுத்து வேலை செய்ய ஆரம்பிப்பர். நினைவில் இருக்கட்டும்…இது காலை 6:01 ரயில்!!

ஆஸ்திரேலியா வரும் முன்னர், இந்தியாவில் இந்த காட்சி கண்ணில் படும்போதெல்லாம், அவ்வாறு வேலை செய்யும் நபர்கள் மேல் ஒரு தனி மதிப்பும், “இது மாதிரி நாமளும் ஒரு நாள் வரணும்”, என்ற எண்ணமும் தோன்றும்.
“பெரிய வேலைல இருக்காரு போல; என்ன கடமை உணர்வு!!”, எனக் கூட நினைத்ததுண்டு.

வேலை உயர்வு கிடைத்து, மடிக்கணினி கொடுக்கப்பட்ட போதெல்லாம், மகிழ்ச்சியில் திளைத்தேன். பெருமையில், ‘சும்மா சும்மா’ வேலையே இல்லையெனினும், மடிக்கணினியை திறந்து வைத்துக் கொள்வேன். அய்யோ, என் அம்மாவோ அப்பாவோ நான் அமர்ந்திருக்கும் அறைக்கு வந்துவிட்டால், நான் போடும் சீன் ஒரு 10 மடங்காகப் பெருகும்!!
இந்தியாவில் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், வேலை நிமித்தமாக அமெரிக்கா, லண்டன் சென்றிருந்த போதுகூட, அவர்கள் ஊர் ரயிலில் பயணம் செய்யும் போது, மடிக்கணினியில் வேலை செய்வேன். “எல்லாரும் என்ன பத்தி பெருசா நினைப்பாங்க”, என நானே யோசித்தபடி பெருமிதம் கொள்வேன்.

மடிக்கணினி ‘scene’ இல்லாத நேரத்தில், மிகவும் கடுமையாக வேலை செய்வேன். விப்ரோவில் வேலை செய்துக்கொண்டிருந்த போது, அலுவலக வளாகத்தில், ஒரு சத்திரம் (dormitory) இருக்கும். மெத்து மெத்தென படுக்கை, அபாரமான குளிர்சாதன வசதிகள் என நல்ல தூக்கத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும்.

அதை பார்த்து நிறைய முறை, “ச என்னமா பாத்துக்கறாங்க ஊழியர்கள! பைஸாவே குடுக்காட்டிக் கூட வேலை செய்யலாம், இது மாதிரி முதலாளிக்கு”, என பெருமிதம் கொள்வேன்.

அணித்தலைவியாக வேலை செய்துக் கொண்டிருந்த போது, ‘six sigma’ எனப்படும் தரம் (Quality) சம்பந்தப்பட்ட பயிற்சி ஒன்று எடுத்தேன். அதை வெற்றிகரமாக முடித்தேன் என்ற சான்றிதழ் வாங்க ஒரு திட்டப்பணி (project) முடிக்க வேண்டும்.

யோசித்து பாருங்களேன்…என் அணிக்கு பெரும்பாலும் இரவு சுழற்சி (night shift) தான் அமையும். இரவு 9:00 மணி மாதிரி ஆரம்பிக்கும் சுழற்சி, அடுத்த நாள் 5:00 மணிக்கு முடியும். என் அணி உறுப்பினர்கள் மாதிரி, சுழற்சி முடிந்த உடன், வீட்டுக்குக் கிளம்ப முடியாது. அணித்தலைவியாக அத்தினத்துக்கு முடிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றை முடிக்க வேண்டும். அவற்றை முடிக்க ஒரு 7:00 மணி ஆகி விடும். அதன் பிறகு 1 மணி நேரம் பயணம் செய்து வீடு திரும்ப வேண்டும். பின்னர் காலை உணவு உண்டு, படுக்கச் சென்று, என் அணியின் அடுத்த நாள் சுழற்சி ஆரம்பிப்பதற்கு ஒரு 2 மணி நேரம் முன்னர் வந்தால் தான், என் தரத் திட்டப்பணிக்கு நேரம் செலவழிக்க முடியும்!!

இங்கு தான் என் முதலாளி அமைத்து வைத்திருந்த குளுகுளு சத்திரமும், ‘வசந்த பவன்’ உணவகமும் என் உதவிக்கு வருகிறது.

“சூப்பர்…’ஊழியர்கள் நல்லா சாப்பிட்டு, தூங்கி எழுந்து வேலை செய்யட்டு’ம்னு என்ன ஒரு நல்ல எண்ணம்”, என நிறைய முறை விப்ரோவின் கோ.ப.செ வாகவே மாறி இருக்கிறேன்!!
“சொக்காய் மாத்த வேண்டாமா மா??”, எனக் கேட்பவர்களுக்கு…

வீட்டிலிருந்து ‘pick up’ செய்து ‘drop’ செய்ய, அலுவலகத்தில் கார்கள் உண்டு. ஓட்டுனர்களுடன் நல்ல நட்பு இருந்ததால், என் வீடு வழியாக வரும் கார், என் வீட்டிலிருந்து மாற்று உடைகளை எடுத்து வந்து விடும்! சத்திரத்தில் குளித்துவிட்டு, அடுத்த நாளுக்கு தயார்!

இரண்டு மூன்று தடவை இவ்வாறு நான் மணிக்கணக்காக என் இருக்கையில் இருப்பதைப் பார்த்து, உயர் அதிகாரி ஒரு முறை என்னை அழைத்து, “என்ன அனு, வீட்ல ஏதாவது பிரச்சனையா? ஆஃபீசிலியே இருக்கே?”, என வினவினார்.
அப்பொழுதும் கூட எனக்கு மகிழ்ச்சிதான். “பரவாயில்ல நாம கஷ்டப்பட்டு உழைக்கறத ‘Center head’ பாத்துட்டாரு”, என!!

இப்பொழுது அதையெல்லாம் பற்றி எழுதும் போதும், யோசித்துப் பார்க்கும் போதும், “எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன்”, எனத் தோன்றும்.

“நீ மாடு மாதிரி உழைக்க வேண்டும்; அதன் மூலம் உன் முதலாளிக்கு தாறுமாறாக பணம் $$ இல் குவியும். அதிலிருந்து சில 1000 ரூபாய்களை செலவு செய்து உனக்கு ‘ஆனந்தம்’ எனும் பிம்பத்தை உருவாக்குகிறான்”.

“நீ செய்யும் 8 மணி நேரத்துக்குத் தான் அவன் தரும் சம்பளம்; அதற்கு வெளியே நீ வேலை சம்பந்தமாக செலவு செய்யும் ஒவ்வொரு நொடியும், நீ இலவசமாக அவனுக்கு வேலை செய்கிறாய்”

திருமணத்திற்குப் பிறகு படிக்க ஆரம்பித்த வினவு தளத்தின் பதிவுகள், இவ்வூர் மக்கள் (பெரும்பாலானோர்) லாவகமாக கடைப்பிடிக்கும் ‘work-life balance’ அனைத்தும் என் பின்தங்கிய எண்ணங்களை, கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

இன்று இந்த கோட் சூட் போட்டுக் கொண்டு வேலை செய்யும் நபர்களை பார்க்கும் போது, “நான் அவர பத்தி பெருமையா நினைப்பேன்னு சீன் போடறாரா இல்ல நெஜமாவே குடுத்த காசுக்கு வேலை செய்யறாரா??”, எனது தோன்றுகிறது.

“எனக்கு வந்தது மூனே letters; I still remember my first letter…’, என்ற ‘கற்றது தமிழ்’ படத்தின் பாடல் என் அலைப்பேசியில் ஒலிக்க ஆரம்பிக்க, என் உளப்பகுப்பாய்வை (psycho analysis) கைவிட்டு, ரயில் ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் 😉

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சே அழைக்கப் பட்டதும், அதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் செய்திகளில் நிரம்பி இருக்க, இரு இன ஒழிப்பு ஜாம்பவான்கள் சந்தித்தால், உரையாடல் எப்படி இருக்கும்…ஒரு கற்பனை (“யதார்த்தத்த போட்டுட்டு…கற்பனைன்னு மூடி மறைக்கற பாத்தியா”னு சொல்ல போறீங்கனா…அது உங்க இஷ்டம்!!)

scene 1

scene 2

scene 3

scene 4

போன வாரம் வியாழகிழம வீட்டுக்கு வர்ற வழில, பேப்பர்ல படிச்ச செய்தி இது
ஒரு வரில இந்த பதிவ சுருக்கணும்னா, “உலகத்துல 9வது மகிழ்ச்சியான தேசம் ஆஸ்திரேலியானு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கற ‘World Happiness Report’ சொல்லுது.
கண் கூடா இந்த ஊர் மக்களையும், அவங்க பழக்க வழக்கங்களையும் பாத்ததுனால, இந்த செய்தி ரொம்ப பெரிய ஆச்சரியமா எனக்கு படல.
இந்த செய்தில மகிழ்ச்சிக்கு காரணிகளா, ‘degree of personal freedom'(தனி மனித சுதந்திரம்), ‘resisting hyper-commercialism'(கூடுதலான வணிகமயமாக்கலுக்கு எதிர்ப்பு) மாதிரியான விஷயங்கள பாக்கும் போது,இதுக்கு எதிர்மாறா நம்ம ஊர்ல நான் சந்திச்ச பல விஷயங்க தான் நினைவுக்கு வந்தது.
அன்னிக்கி வீட்டுக்கு வந்து மடிக்கணினில வினவு பதிவு செஞ்சிருந்த,
“கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லை” என்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?’ பதிவ படிச்சேன்.

அதுல சொல்ல பட்டிருந்த, “நாம் வாழும் சூழல், நமது வர்க்கப் பின்புலம் போன்றவற்றின் அடிப்படையிலேயே நமது கருத்துக்களும் பிறக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் நமக்கு இந்த உலகத்தை அறிமுகம் செய்கிறது. நல்லது-கெட்டது, சரி – தவறு என்பதையெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.” வரியும்,
“‘தனிப்பட்ட’ நம்பிக்கை என்பதே இப்படி வெளியே நடக்கும் உரசிப் பார்த்தல்களின் அறியாமை பலத்தில் தான் உயிர்வாழ்கிறது எனும் போது அதில் ‘தனிப்பட்டு’ மிஞ்சுவது தான் என்ன?”, வரியும், என் பதிவுல நான் சொல்ல நினைச்ச கருத்தோட ஒத்து போறா மாதிரி இருந்தது.

நினைச்சு பாத்தீங்கனா…ஒரு கொழந்தை பொறக்கும் போது, ஒரு அரசியல் கட்சிக் கொடிய கட்டிகிட்டோ, சாமி படத்த டாலரா கழுத்துல மாட்டிகிட்டோ பொறக்கறதில்ல. அந்த கொழந்தையோட அம்மா, அப்பா, உறவுங்க கன்னத்துல போட்டுக்கற சாமி சிலை…அவன் இல்ல அவளோட ‘குல சாமி’ ஆகுது; ‘நல்ல’ அரசியல் கட்சி, ‘நல்ல’ குணங்கள், ‘கெட்ட’ பழக்கங்கள் பத்தி அந்த கொழந்தைய சுத்தி சொல்ல படற கருத்துக்கள்….அந்த கொழந்தையோட கருத்துக்கள் ஆகுது.
ஏதோ அம்மா அப்பா செலவுல வளந்துகிட்டு இருக்கறதுனால, அவங்க சொல்ற கருத்துக்கள்ல விருப்பம் இருக்கோ இல்லியோ…அத கடைபுடிச்சுத்தான் தீர வேண்டி இருக்கு.
பெத்தவங்கள சார்ந்து இருக்கும் போது…அந்த பையனோ பொன்னோ ‘personal freedom’ வேணும்னு கேக்கறது கொஞ்சம் நெருடலாத்தான் இருக்கும். அப்ப ‘பையனுக்கு வயசு பத்தாது’, ‘ஏதோ படத்துல வர்றத பாத்துட்டு உளர்றான்’னு ‘பெரியவங்க’ சொல்றதும் யதார்த்தம் தான்.
எங்க பிரச்சனை வருதுனா…ஒரு 24-25 வயசு ஆனதுக்கு அப்பறமும், தனக்குன்னு ஒரு குடும்பம், வேலைன்னு ஆனதுக்கு அப்பறமும், “அனுபவத்துல நாங்க உன்ன விட பெரியவங்க”, “நல்லது கெட்டது நாலுத்தையும் நாங்க பாத்திருக்கோம்”, “உனக்கு எது நல்லது எது சரிபட்டு வராதுன்னு எங்களுக்கு தெரியும்”னு இந்த ‘அனுபவசாலி’ங்க’ பேசும் போதுதான்…அந்த மகன் இல்ல மகளோட ‘personal freedom’ தடை படுதுன்னு நினைக்கறேன்.
“என்ன செய்ய…அம்மா ஆசை படறாங்க; வயசாச்சுல”, “அப்பா சொன்னாரு சார்…சொந்த ஊருக்கு திரும்பற மாதிரித்தான் பிளான்”, “பெரியவங்க…அவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்; இந்த வயசெல்லாம் கடந்து தான வந்திருக்காங்க”னு நண்பர்கள், தெரிஞ்சவங்க சொல்லும் போது,
“அவங்க கடந்து வந்துட்டாங்க சரி…உங்களுக்கு இந்த முதிர்பருவத்த (adulthood) உங்க இஷ்டப்படி வாழ்ந்துபாக்கனும்னு ஆசை இல்லையா…மிஞ்சி மிஞ்சி போனா என்ன ஆகும்…நீங்க எடுக்கற முடிவு தப்பா இருக்கும்…அத நீங்க சரி செய்யும் போது, அது உங்களோட அனுபவமா இருக்கும்ல; ஒன்னு நினைச்சு பாத்தீங்கனா, உங்க அம்மா அப்பா சொல்ற ‘உத்தி’ அவங்களுக்கு வேணும்னா சரியா வேலை செஞ்சிருக்கலாம்..உங்களுக்கும் வேலை செய்யும்னு என்ன நிச்சயம்? So, இன்னொருத்தர் சொன்னத கண் மூடித்தனமா நம்பி கடைப்புடிக்கறதுக்கு பதில்…உங்க மூளைய நம்பி ஒரு காரியத்துல இறங்கும் போது, இன்னும் கொஞ்சம் உந்துதலோட செயல் பட மாட்டீங்க? நினைச்சு பாருங்க…வெற்றி அடைஞ்சா…உங்க முதுகத்தான் தட்டிக்க போறீங்க; அடுத்த முடிவு எடுக்கும் போது…இன்னும் கொஞ்சம் நம்பிக்கையோட செயல் படுவீங்க…சரிதான??”னு விரிவுரை குடுக்கத் தோணும்.
இந்த ஊர்ல அந்த ‘என் வாழ்க்கை…எனக்கு எது சரின்னு தோணுதோ அத செய்வேன்’ விஷயத்த மக்கள் கடைப்புடிக்கறத நல்லாவே பாக்க முடியும்.
நம்ம ஊர்லதான் ஒரு ‘நல்ல குடும்பம்’னா…
–> ‘ஆண்மைக்கு இலக்கணமா’ விளங்கும் ஒரு பையனும், ‘குடும்ப விளக்கா’ திகழும் ஒரு பொண்ணும் சேந்து நடத்தறது தான் நல் இல்வாழ்க்கை.
–> கல்யாணம் நடந்தாச்சுல…வீட்ல அடுத்த ஒரு நபருக்கு வித்திடனும்
–> கல்யாணம், கொழந்தை எல்லாம் ஆயாச்சுல….இனி என்ன அழகு பராமரிப்பு எல்லாம்….ஒரு தாயா உன் கடமைய நிறைவேத்தினாலே…ஒன்ன உலகம் புகழும்

இதுவும் இன்னும் பல ‘நன்நெறிகளையும்’ சமூகம் சொல்லுது…ஒவ்வொரு பிரஜையும் கேட்டு நடக்கறான்!!

இங்க வேலைல, என் அணில இருக்கறவங்க எல்லாருமே ஒரே மாதிரியான வேலை செஞ்சாலும்…அவங்க சொந்த வாழ்க்கைல ஒவ்வொருவரும் வெவ்வேற மாதிரிதான்; ரெண்டு பேருக்கு கல்யாணமாகி 3-4 கொழந்தைங்க இருக்கு; ஒருவர் கொழந்தைங்க எல்லாம் வேணாம்னு, செல்ல பிராணி நாய் மேல அளவு கடந்த அன்பு வச்சிருக்காங்க; ஒருவர் காதலிச்சு, சடங்குகள் எதுலயும் பெருசா நம்பிக்கை இல்லாததுனால, கல்யாணம் எதுவும் பண்ணிக்கல, போன மாசம், அவருக்கு ஒரு கொழந்தை பொறந்திருக்கு, இது தவிர பெண்விழைபெண்கள், ஆண்விழைஆண்கள்னு சகஜமா அவங்க வாழ்க்கைய அவங்க இஷ்டப்படி நடத்தறாங்க.
அந்த ‘சமூகம்’னு சொல்ல படற பக்கத்து வீட்டுக்காரனும், ‘நலன் விரும்பிகளும்’, பெற்றோரும், இவங்க சொந்த விஷயத்துல தலையிடறதில்ல; தலையிட உரிமையும் அவங்களுக்கு இல்லன்னு தான் சொல்லணும்
இந்த ‘personal freedom’னு சொல்ல படற ‘தனி மனித சுதந்திரம்’, தனி மனிதன், “இது தான் எனக்கு பிடிச்சிருக்கு; உனக்கு விருப்பம் இல்லியா…அது உன் பிரச்சனை; நான் உனக்காக வாழல”னு அந்த ‘நலன் விரும்பிகளுக்கு’ பதிலளிக்கும் போது…தானா வரும்.
அடுத்து அந்த அறிக்கைல மகிழ்ச்சிக்கு காரணியா சொல்ல படற…’resistance to hyper-commercialism’…
முதலாளித்துவதோட நோக்கம்…மக்கள் வாய பொளந்துகிட்டு, பெரும் முதலாளிங்க விக்கற பொருள பாக்கணும், எப்படியோ மக்கள் மனசுல அதுக்கான ‘தேவைய’ உருவாக்கணும்…அந்த மக்கள கடைக்குள்ள வர வைக்கணும்.
அந்த கோட்பாடுக்கும், ‘கல்யாணமாகி ஒரு வருஷத்துல கொழந்தை பொறக்கலனா ஊர் தூத்தும்’, ‘கடவுள் மறுப்பு எல்லாம்…வழி தவறி போறவங்க பேசற வீண் பேச்சு’…மாதிரியான புளிச்சு போன ‘சமூக அறிவுரைகளுக்கும்’ வித்தியாசமே இல்ல.
பிந்தையது எப்படி ஒரு தனி மனிதனோ இல்ல ஒரு கணவன்-மனைவியோ முடிவெடுக்க வேண்டிய விஷயமோ…அதே மாதிரிதான் முந்தையதும்
பெரும் முதலாளிங்க, “அக்ஷய திரிதியை அன்னிக்கி தங்கம் வாங்கினா…உங்க வீட்டு அண்டா குண்டா எல்லாம் தங்கமா மாறிடும்”, “ஒன்னுமே இல்லாத பொட்டல் காடு மாதிரி தான் இருக்கும்…உண்மைல பூமா தேவிங்க…வாங்கி ரெண்டு வருஷத்துல, உங்க பொண்ணு கல்யாணம், பையன் மேல்நாட்டு படிப்பு எல்லாம் கைக்கூடி வரும்…பாக்கத்தான் போறீங்க”,னு திரை உலக நட்சத்திரங்கள வச்சு கூவி கூவி விப்பாங்க.
“பாக்கற எடத்துல எல்லாம் ‘இத வாங்குங்க; அத வாங்குங்க’னு அவங்க தூண்டில் போடும் போது, அதுல மாட்டாம இருக்கறது கொஞ்சம் கஷ்டம் தாங்க”,னு சொல்ல போறதுனாலும், “அவன் முதலீடு பன்றான்யா….விற்பனை ஆகணும்னு உயிர குடுத்து கூவறான்; எனக்கு அவசியம் இல்லியே….பவர் ஸ்டார் கன்னாப்பின்னான்னு பைசா செலவு பண்ணி ஒரு படம் எடுக்கறாரு; ‘பாவம் மனிஷன்…இரவு பகல் பாக்காம உழைச்சிருக்காரு’னு சொல்லிட்டு திரையரங்குக்கு போனா…பண இழப்பு யாருக்கு”னு சொல்ல போறதுனாலும்….முடிவு என்னவோ அந்த முடிவெடுக்கற தனி மனிதன் கைல தான் இருக்கணும்.
“என்ன தான் சொன்னாலும்…பெரியவங்க மனச புண்படுத்தறது எனக்கு சரியா படல”, “எல்லாம் சர்வே செஞ்சு, மக்களுக்கு அது எந்த அளவுக்கு உதவியா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டு தாங்க…ஒரு பொருள மார்க்கெட்ல விற்பனை பண்றாங்க; அத நமக்கு தெரிய படுத்த விளம்பரம் செய்யறாங்க…அத என்னவோ ‘பகல் கொள்ளை’, ‘நம்ம பணத்த சொரண்ட நடத்தற சதி’னு நீங்க சொல்றது…தப்போன்னு தோணுது” னு சொல்ல போறீங்கனா, உங்க முடிவ கேள்வி கேக்கற உரிமை எனக்கு இல்ல….ஏன்னா அது உங்க தனிப்பட்ட விருப்பம்…அதுல மூக்க நொழைக்க எனக்கு அனுமதி இல்ல.