Posts Tagged ‘வீட்டு சாப்பாடு’

பூசணினு சொன்ன உடனே எனக்கு நினைவுக்கு வர்றதெல்லாம் அதோட அசட்டு தித்திப்பும், எவ்வளவு பெருசு பெருசா வெட்டி வேக வச்சாலும், வச்ச கொஞ்ச நேரத்துலியே, “நான் வெந்துட்டேன்”னு கொழைஞ்சு நிக்கற கோலமும் தான்.
முட்டை கோஸ், காரட் அளவுக்கு பெருசா பூசணி மேல வெறுப்பு இல்லாட்டியும், உருளை, கோவக்காய் அளவுக்கு விருப்பமும் இல்ல.

ஏற்கனவே சொன்ன மாதிரி, கல்யாணத்துக்கு அப்பறம், இந்த மாதிரியான ‘அடிப்படையற்ற’ வெறுப்புகள களைஞ்செறிய நல்லாவே முயற்சி எடுக்கறேன்.

அப்படி ஒரு முயற்சில முளைத்ததுதான் இந்த பூசணி கறியல் (கறியல் பெயர் காரணம் – கறி என துவங்கி…துவையல் பக்குவத்தில் முடிந்ததனால், இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது!)

சமையல்ல நான் பூசணிய சேக்கறது..ஒன்னு கொழம்புல இல்ல கூட்டுல. கூட்டுல காரம் கொஞ்சம் தூக்கலா, இஞ்சி பூண்டு சேத்து என்னென்னவோ செஞ்சு பாத்தேன். அந்த 100 % திருப்தி மட்டும் ஏற்படவே இல்ல!

அன்னிக்கி இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்னு…யோசிச்சுகிட்டே குளிர்ப்பதன பெட்டிய தொறந்தேன்

நமக்கு தெரிஞ்சவங்க…ஆனா பெருசா அவங்க கிட்ட முகம் குடுத்து பேச இஷ்டம் இல்லாத போது, முடிஞ்ச அளவுக்கு அவங்க கண்ண சந்திக்காம இருக்க நினைப்போம்ல. அதே மாதிரியான உணர்வு தான் அன்னிக்கி எனக்கு. ஆனா…இதுமாதிரி ரெண்டு மூணு தடவை, பூசணிய சந்திக்காம இருக்க எடுத்த முயற்சிகள் காரணமாக…பூஞ்சணம் பூத்த பூசணி, குப்பைத்தொட்டிக்கு இறை ஆனதுதான் மிச்சம்.

இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு முடிவு பண்ணினேன். அப்ப ‘அட்றாசக்கை’னு கண்ணுல பட்டது ஒரு புதினா கட்டு.

சரி கூட்டும், புதினா துவையலும் பண்ணலாமுன்னு யோசிச்சுகிட்டே அடுப்பு பக்கம் வர்றதுக்குள்ள..மூளைக்குள்ள ஒரு கசமுசா….பூசணியையும் புதினாவையும் சேத்துவச்சா என்னனு தோணிச்சு; நல் இல்லறத்தின் பலனாக பிறந்தது….நம்ம பூசணி கறியல்!!

இந்த முறை தமிழ்லியே சமையல் குறிப்பும்…

நாங்க ரெண்டு பேரும் இரவு சாப்பாட்டுக்கு எடுத்தது போக, நான் அடுத்த நாள் மதிய உணவுக்கும் கொண்டு போனேன். அதுனால ஒரு 3 பேருக்கு இந்த அளவு பத்தும்.

மஞ்ச பூசணி – 300 – 400 gm
புதினா (நறுக்கி) – ஒரு கட்டு
காய்ந்த மிளகாய் – 4-5
கடலை பருப்பு – 2 Tbsp
உளுத்தம் பருப்பு – 2 Tbsp
உடைத்த வேர்கடலை – 8 -10
வெள்ளை எள் – 1 Tbsp

துருவின தேங்காய் – 2 Tbsp
கடுகு – 1 Tbsp
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை விளக்கம்

1. பூசணிய துண்டு துண்டா வெட்டி கொஞ்சம் மஞ்சள் பொடி, உப்பு சேத்து வேக வைய்யுங்க (துவையலாக்க போறதுனால, கொஞ்சம் நல்லாவே வெந்தா கூட பரவாயில்லை)
2. பூசணி வேகர நேரத்துல, ஒரு பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் ஊத்தி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய வறுக்கணும். உளுத்தம் பருப்பு கொஞ்சம் சிவப்பாகும் போது, வேர்கடலையும், எள்ளும் சேருங்க.
3. கொஞ்சம் வறுத்ததுக்கு அப்பறம், நறுக்கி வச்ச புதினாவ சேருங்க.புதினாவையும் தண்ணி வத்தும் அளவுக்கு வதக்கிட்டு, தேங்காய சேருங்க.
4. கொஞ்சம் தேங்காய் செவப்பான உடனே, அடுப்ப நிறுத்தீடுங்க
5. சூடு தணிஞ்சதுக்கு அப்பறம்,கலவை இயந்தரத்துல (mixer grinder ) கொஞ்சமா தண்ணி விட்டு அரைங்க. கடைசில கொஞ்சம் உப்பும் சேத்து இன்னொரு தடவை அரைச்சுக்குங்க.
6. அதே பொரித்தட்டுல கொஞ்சம் எண்ணெய் ஊத்தி, கடுகு சேருங்க. கடுகு வெடிக்கும் போது, வேக வச்சு வடிகட்டின பூசணிய சேருங்க.
7. இதுல அந்த அரைச்சு வச்ச புதினா கலவைய சேருங்க.
8. பூசணியும் நல்லா வெந்ததுனால, நல்லாவே துவையல் பதத்துக்கு வந்திடும்.
9. எற்கனவே உப்பு சேத்ததுனால, இப்ப தேவை படாது. வேணும்னா இன்னும் கொஞ்சம் சேத்து, தேவையான பதத்துக்கு வந்த உடனே அடுப்ப நிறுத்தீடுங்க

ரெண்டு வாரம் ஆனதுனால, என்ன குழம்பு செஞ்சேன்னு நினைவில்ல. ஆனா வெறும் சாதத்துல கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்தி, இந்த கறியலையும் சேத்து பெசைஞ்சு, அப்பளம் தொட்டு சாப்பிட்டது மட்டும் நினைவிருக்கு. நெசமாவே சொல்றேன்…தாறுமாறா இருந்துச்சு!! இனி பூசணி வாங்கறா மாதிரி இருந்தா…ஒரு கட்டு புதினா வாங்காம வீட்டுக்குள்ள நுழைய மாட்டேன்னு…சபதம் எடுத்துட்டேன்னா பாத்துக்கோங்க!!