Posts Tagged ‘ரயில் பயணம்’

வெகு நாட்கள் கழித்து பதிவு எழுத தருணம்/அவா வந்தது. அதற்கு ஒரு தலைப்பும் யோசித்திருந்திருந்தேன். ஆனால் எழுத ஆர்மபிக்க ஒரு 5 நிமிடம் முன்னர், “ரொம்ப நாள் கழிச்சு எழுதறோம். ரொம்ப serious ஆ எதுவும் வேண்டாம்”, என எண்ணம் தோன்ற, அந்த தலைப்பை ஓரம் கட்டி விட்டு, மகப்பேறு விடுப்பு முடித்து வேலைக்கு போகும் அனுபவத்தைப் பற்றி எழுதலாம் என முடிவு செ-ய்தேன்.

[ஒரு முழு நீள பதிவு எழுதி 7 மாதங்களுக்கு மேல் ஆனதனால், பேனாவை பேப்பரில் வைக்கும் போது, அது சரிந்து போகும் அழகே அழகு 😦 ரயிலில் என் அருகில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு தமிழே தெரிந்திருந்தாலும், என் கோழி கிறுக்கலை பார்த்துவிட்டு, ஏதோ ஒரு புதிய மொழி என நினைக்க வாய்ப்புகள் நிறைய உண்டு!!!]

kirukkal

திறனுக்கு (என் மகன்) ஒரு வயது ஆகிவிட்டது. நானும் மகப்பேறு விடுப்பு ஆரம்பித்து, 1 வருடம் ஆகிவிட்டது. சரி, வேலைக்கு கிளம்புவோம் என முடிவு செய்து, திறனை மழலையர் காப்பகத்தில் சேர்த்து விட்டோம். என் கணவன் திறனை காலையில் கொண்டு விட, நான் மாலையில் அவனை அழைத்து வருவதை எங்கள் புது வழக்கமாக்கிக் கொண்டோம்.

இந்த வழக்கம் தடம் புரளாமல் இருக்க, நான் காலையில் 6:01 ரயிலை எடுத்து, 7:00 மணிக்கு வேலையை ஆரம்பிக்கிறேன்.

“இதுல என்ன இருக்கு?”, என வினவுபவர்களுக்கு…எங்களின் ‘தி.மு’ (திறனுக்கு முன்) வழக்கம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை! திறனின் வருகைக்கு முன்னர், வேலைக்கு போகும் நாட்களில் 7:30 மணிக்கு முன்னர் நாங்கள் எழுந்தது கிடையாது. 9:30 மணி ரயிலை எடுத்து, நான் 10:30 மணிக்கு வேலையை ஆரம்பிப்பேன்.
ஆனால் இப்போதெல்லாம், 10:30 மணிக்கு, வேலையில் நான் ஒரு 3 மணி நேரங்கள் ஏற்கனவே கழித்திருப்பேன்!!

நான் வேலைக்குப் போக ஆரம்பித்தது செப்டம்பர் மாத துவக்கத்தில். இங்கு மாதங்கள் கணக்கு படி, குளிர் காலம் முடிந்திருந்தாலும், குளிர் குறைய இன்னொரு 1 மாதத்தில் இருந்து 1.5 மாதங்கள் வரை ஆகும். அதிலும் காலையில் 5:00 மணிக்கெல்லாம் கேட்கவே வேண்டாம்! பல் தேய்க்க சுடுதண்ணீர் குழாயிலிருந்து வரும்வரை நடுங்கி கொண்டிருக்கும் அவல நிலை!

முதல் நாள் (செப் 7) இன்னும் தெளிவாக நினைவில் உள்ளது. அரைத்தூக்கத்தில் 5:00 மணிக்கு எழுந்து பல் தேய்த்துவிட்டு, வேலைக்கு கிளம்ப எத்தனிக்கிறேன். அருகில் உள்ள வீடுகள் ஏதோ ஒன்றிலிருந்து கார் கிளம்பும் சப்தம்!

“இந்த தெருவிலேயே முதலில் வேலைக்கு கிளம்புபவள் நானாகத் தான் இருப்பேன்”, என்ற என் ‘silly ‘நம்பிக்கை தூள் தூளாக உடைந்தது. ஒட்டிக்கொண்டிருந்த ஒரு சிறு தூண்டும், ரயில் நிலையம் போய் சேர்ந்த போது , காற்றோடு கலந்தது.
“6:00 மணிக்கெல்லாம் யார் ரயில் ஏறப்போகிறார்கள்? வண்டி நிறுத்த நிறைய இடம் இருக்கும், பிடித்த இடத்தில் நிறுத்த வேண்டியது தான்”, என கனவு கண்ட படி, போய் சேர்கிறேன்… அங்கு திரை அரங்குகளில் டிக்கெட் கிடைக்காமல் அல்லாடும் கூட்டம் போல், கார்கள் அங்கும் இங்குமாய் நிறுத்தக் காத்துக்கொண்டிருந்தன! ‘சப்’ என கனவு அப்பளமாய் நொறுங்க, மிஞ்சி இருந்த இடங்களில் ஒன்றை முடிவு செய்து வண்டியை நிறுத்தினேன்.

6:00 மணிக்கு இத்தனைபேர் வேலைக்கு செல்கிறீர்களா என அதிர்ச்சியில் ரயில் ஏறினேன். அங்கிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்து, 5:43 மணிக்கு இன்னொரு ரயில் ஏற்கனவே கிளம்பி விட்டது என அறிந்துக் கொண்டேன்!

பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகமே இருந்துவிட்டது என நினைக்குமாம். அது மாதிரியான என் போலி பிம்பம், வேலைக்குப் போக ஆரம்பித்த முதல் நாளிலேயே தரைமட்டம் ஆனது!

“இது பொய்யாவதற்கு வாய்ப்பே இல்லை”, என நான் நினைத்த இன்னொரு விஷயம்…

“7:30 மணிக்கு முன்னர் எழுந்து பழக்கம் இல்லாத நான், இப்போது 5:00 மணிக்கு எழுந்திருக்கிறேன். ரயில் எரிய உடன், பொத்தென ஆழ்ந்த தூக்கத்திற்குள் செல்வேன்”, என்ற திடமான எண்ணம்.

பையை இறக்கி வைத்து, தேனீர் அருந்தியபடி ரயில் பெட்டியில் அமர்கிறேன். தூக்கம் மட்டும் கண் இமை அடியிலிருந்து எட்டிப் பார்க்கவே இல்லை. நாமே கண்ணை மூடி, கண்களுக்கு நினைவு படுத்துவோம் என நான் எடுத்த முயற்சி மீண்டும் தோல்வியை சந்தித்தது.
என் வேலை சம்பந்தமான ஒரு இணையவழி பரப்பலை (podcast) கேட்டு முடிக்கும் போது , என் நிறுத்தம் வந்தது.

இப்படியே 3 வாரங்கள் வெற்றிகரமாக கழித்து விட்டேன். என்னை பார்த்து, இந்த சூரியனும் சற்று சீக்கிரமாகவே எழுந்திருக்க ஆரம்பித்துவிட்டது 😉
இப்பொழுதெல்லாம் 5:45 மணிக்கே, சூரியனின் ‘தூங்குமூஞ்சி’ வெளிச்சம் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறது.

இத்தனை சீக்கிரம் வேலை ஆரம்பிப்பதன் பலன், மாலையில் 3:00 மணிக்கெல்லாம் வேலையை முடித்து, 4:30 மணிக்கு திறனையும் காப்பகத்திலிருந்து கூடி வந்து விடுகிறேன்!

நேற்று, இணையவழி பரப்பல்களுக்கு ஒரு இடைநிறுத்தம் போட்டு விட்டு, இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன். இன்று வீட்டில் எழுதி முடிக்கிறேன். இப்படி பல பதிவுகளுக்கு என் இந்த விடியற்காலை ரயில் பயணம் நிச்சயம் பயன்படும் என தீவிரமாய் நம்புகிறேன்!