Posts Tagged ‘Aamir Khan’

“சமீபத்தில் பாரிஸ் நகரத்தை உலுக்கிய தீவிரவாத செயல் – சார்லி ஹெப்டோ பத்திரிக்கை ஊழியர்கள் மீதான தாக்குதலும் அதனால் நிகழ்ந்த உயிர் சேதமும்…

“சமீபத்தில் வெளியான PK திரைப்படத்தில் எழுப்பப்பட்ட இந்து மதம் பற்றிய கேள்விகளும், அதற்கு அரசியல் கட்சிகளும், சில சாதாரண மக்களும் கொந்தளித்தது, “ஏன் இந்து மதத்த பத்தி மட்டும் பேசறான்…இஸ்லாமிய மதத்துல இல்லாத அராஜகமா?”, என முன்வைக்கப் பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சாதுரியம் என நினைத்துக் கொண்டு இன்னொரு கேள்வியை எழுப்பியவர்கள்…

“இந்து மதத்தை இழிவு படுத்துகிறது”, என பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புத்தகத்திற்கு எழுந்த சர்ச்சை…

“தெரிஞ்சு போச்சுமா…என்ன எழுதப் போறன்னு”, என நக்கலாக சிரிப்பவர்களுக்கு,
இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகள் பற்றியோ, அம்மதத்தின் புனிதப் புத்தகத்தில் கூறப் பட்ட அனைத்தையும் வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்படும் வீணர்களைப் பற்றியோ, ‘சகிப்புத் தன்மை மிகுந்த மதம்’ எனப் போற்றிப் புகழப்படும் இந்து மதத்தினரின் இன்னொரு கோர முகத்தைப் பற்றியோ, நான் எழுத விரும்பவில்லை.

பொதுவில் மதவாதிகள் கூறும் சகிப்புத்தன்மை என்பது என்ன என ஆராய விரும்புகிறேன்.
மதம் குறித்த சகிப்புத் தன்மை என்பதற்கு எல்லை கோடு உண்டா? அவ்வாறான எல்லைக்கோட்டை ஒருவர் ‘மீறும்’ போது, அவருக்கு இழைக்கப் படும் கொடுமைகள் நியாயமானதா?
இதற்கு விடை அறிய, முதலில் சகிப்புத்தன்மை என்பதன் விளக்கம் என்ன?
இரு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் கோழி பிரியாணி பிரியர் இன்னொருவர் மட்டன் பிரியாணி பிரியர். ஒரு நியாயமான உரையாடலில், இருவரும் அவரவர் விருப்பத்திற்கு காரணம் என்ன என்பதை முன்னிருத்துவர்.
“பிரியாணி னா…அது மட்டன் பிரியாணி தான். சிக்கன் எல்லாம் வேலைக்கு ஆகாது, என மட்டன் பிரியர் சொல்லும் போது,
“எனக்கு பிடிச்சிருக்கு…உனக்கு பிடிக்கல. அவ்வளவு தான. ரெண்டு பேரும் friendsனா ரெண்டு பேருக்கும் ஒரே taste இருக்கனுமா என்ன?”, எனக்கூறி முடிப்பது ஒரு நடைமுறைக்கொத்த செயல்.
அப்படி இல்லாமல், சிக்கன் பிரியர், “என்னடா சொன்ன??” என அடிதடி சண்டைக்கு வரிஞ்சிகட்டி நின்றால் எப்படி இருக்கும்??
அந்த சிறுபிள்ளைத்தனம் தான் சார்லி ஹெப்டோ சம்பவத்திற்கோ, PK பட எதிர்ப்பிற்கோ, பெருமாள் முருகன் புத்தக எதிர்ப்பு சம்பவத்திற்கோ காரணம்.

“என் கடவுள் உயர்ந்தவன்”, “அனைவரின் செயலையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்; நேரம் சரியாக இருக்கும் போது, தவறாமல் தண்டிப்பான்”, என நம்புகிறீர்கள்.
அப்படி இருக்க, ஒருவர் உம் மதத்தை கேலி செய்யும் போதோ, மதம் பற்றி கேள்வி எழுப்பும் போதோ, ஏன் நிலை குலைகிறீர்கள்?
யோசித்து பார்த்ததில், அதற்கான காரணம் இவற்றில் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும்.

“துன்பத்தில் இருக்கும் மக்களின் துயர் தீர்க்க உம் கடவுள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக எழும் பழிச்சொற்களை கேட்டு ஆத்திரமடைய அவருக்கு நேரமில்லை. அவரின் பக்தர்களான நீங்கள், அந்த வேலையை கவனித்துக் கொள்கிறீர்கள்”

அல்லது…

“தமிழர்களின் கடவுளுக்கு, அராபிய மொழியோ, ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சு மொழியோ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் பிள்ளைகளான நீங்கள், நான்கு மொழிகள் தெரிந்து வைத்திருப்பதால், அவருக்கு பதிலாக கோபப்படுகிறீர்கள்”

அல்லது…

“நாத்திகர்கள் சொல்வது போல், அவர் வெறும் கல்லே. மனிதனே தன் வசதிக்காக உருவாக்கிய ஒரு பொருள்தான் கடவுள்”, என்பது உண்மையே என புரிந்துகொண்ட நீங்கள், அந்த உண்மை வெளிவராமல் இருக்க எடுக்கும் முயற்சிகளே இந்த மதச் சண்டைகளும், வீர ஆவேசப் பேச்சுகளும்”

இவை எதுவுமே காரணம் இல்லையெனில், இதுவாக மட்டும் தான் இருக்க முடியும்

“உங்கள் வாரிசுகளின் மதம் பற்றிய புரிதலை நினைத்து அஞ்சுகிறீர்கள்”

உதாரணத்திற்கு, சார்லி ஹெப்டோ சம்பவத்தை பார்த்துவிட்டு, உங்கள் மகள், “வாப்பா…நான் உங்கள சரமாரியா கிண்டல் அடிச்சுகிட்டே இருக்கேன்; ஆனா நீங்க என்னிக்கும் கோவிச்சுகிட்டதே இல்ல; சைக்கிள், சாக்லேட் அது இதுனு வாங்கித் தரீங்க. அப்ப அல்லா மட்டும் ஏன்ப்பா…அவர கிண்டல் செஞ்சவங்கள கொன்னுட்டாரு?”, என கேட்டால்,

PK திரைப்படத்தை பார்த்து விட்டு, உங்கள் மகன், “எனக்கும் அப்படி தானம்மா…அப்பா சைக்கிள் வாங்கித் தரணும்னு எவ்வளவு pray பண்ணினேன் தெரியுமா? first rank எடுத்தேன், ‘ஸ்ரீ ராமஜெயம்’ 108 டைம்ஸ் எழுதினேன், டெய்லி 6:00 மணிக்கு எழுந்து சாய் பாபா கோயிலுக்கு போனேன்.ஆனா அப்பா அடுத்த வருஷம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு. சாமிக்கு வேற என்னம்மா வேணும்?”, எனக் கேட்டால்,

சமீபத்தில் செய்திகளில் பேசப்பட்டு வரும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புத்தகத்தின் சர்ச்சையை படித்துவிட்டு, உங்களின் பதின்வயது மகள், “பெருமாள் முருகனோட புக் ல சொல்லி இருக்கறா மாதிரி, உங்க காலத்துல, கல்யாணம் ஆகி கொழந்தை பொறக்கலனா, வேற யாருகிட்ட வேணும்னாலும் relationship வச்சுக்கலாமா மா? இந்து மதத்துல இதெல்லாம் கூட இருக்கா?!”, எனக் கேட்டால், பதில் சொல்ல இயலாமல் நிலை தடுமாறுவீர்கள் என்ற பயமாகத் தான் இருக்க வேண்டும்.

உங்களின் இந்த அபத்தமான அச்சமும், ஆபத்தான மதப் பூசல்களும் உம் பிள்ளைகளுக்கு புரியும் போது , அன்று வழங்க இருக்கும் விடையினை இப்பொழுதே தயார் செய்துக் கொள்ளுங்கள். “சின்ன பையன்…அவனுக்கு இதெல்லாம் புரிய இன்னும் வருஷம் ஆகும்”, என நினைப்பது வீணே. ஊடக வளர்ச்சி போய்க்கொண்டிருக்கும் வேகத்தில், அந்த கேள்வி-பதில் சம்பவம் நாளையே கூட நடக்கலாம். எல்லாம் தெரிஞ்ச ஒரு சான்றோன் ஆகணும்னு தான நீங்களும் விரும்பறீங்க??

அந்த நேரத்தில், “கொழந்தையா லட்சணமா இரு…விதண்டாவாதம் பேசாத”, எனக் கூறி, உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள் என்பது என் வேண்டுகோள்.

இந்த பதிவு எழுத தூண்டுதலாக இருந்ததெனில்…நிறைய விஷயங்களை சொல்லலாம். ‘நண்பன்’ திரைப்படம், அதன் 100 வது நாள் திருவிழா , சாதாரணமாகவே ஷங்கரின் திரைப்படங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எனினும், என் கருத்துக்களை, பதிவாக பதிவு செய்ய தூண்டியதெனில், ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியை சொல்லலாம்.
‘சத்யமேவ ஜெயதே’ அதாவது ‘உண்மை மட்டுமே கடைசியில் வெல்லும்’ – இந்த வரியில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை. அதனால், இந்த தலைப்பு கொண்ட நிகழ்ச்சி பார்ப்பதிலும், பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. ஒளிபரப்பு ஆக ஆரம்பித்ததிலிருந்து தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் அது பற்றிய பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்த போதிலும், ஒரு வாரமாவது பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. அன்று மருத்தவரை பார்க்க காத்திருந்த போது..நேரம் கழிக்க படித்த பதிவு இது

அதன் பிறகு….இந்நிகழ்ச்சி பற்றிய இன்னும் பல பதிவுகளை படித்தேன். பெண் கருக்குழவிச்சிதைவு (female foeticide) பற்றி ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலையும் பார்த்தேன்.
இத்தலைப்பு பற்றிய உரையாடலை பார்ப்பதற்கு முன், படித்த பதிவுகள் மற்றும் அவற்றிற்கு அளிக்க பட்ட பின்னூட்டங்களில் பெரும்பாலும் பார்த்த கருத்து, “என்னதான் ஆமிர் அத பத்தி ஒன்னும் சொல்லல…இதுக்கு ஒரு வழி சொல்லல’னு சொன்னாலும்….யாருமே பேச தயங்கற ஒரு தலைப்ப தைரியமா டிவில பேசினதுக்கு, ஆமிருக்கு ஒரு சபாஷ்”
20-30 வருடங்களாக…இந்த சமூகக் கொடுமையைப் பற்றி பேசுபவர்களும், விவாதிப்பவர்களும் இருந்த வண்ணம் இருக்க…ஆமிர் கானின் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த பாராட்டுக்கள்….சிறிது ஆச்சரியத்தை தான் தருகிறது.
உதாரணத்திற்கு, இந்த இரு ஒலிபரப்புகளும், பெரியார் பெண் விடுதலை, திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமை படுத்தும் தமிழ் சமூகத்தின் நிலைப்பற்றி (1970 களில்) பேசும் தொகுப்புகள். நகைமுரண் என்னவெனில், இவை இன்றைய சமூக சூழலுக்கும் பொருந்தும் என்பதே.


‘பால் நிர்ணயம்'(sex determination) செய்யும் மருத்துவமனைகளை மூடினால்…இந்த சமூகக் கொடுமைக்கு தீர்வு கண்டுவிட முடியும்…என்ற ஆமிர்கானின் அணுகுமுறை, ஒரு நெருடல். இதுவே இந்நிகழ்ச்சி மீது ஒரு நம்பிக்கையின்மையை வரவழைக்கிறது.
சமூக பிரச்சனைகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி எனில், அது சமூகத்தில் உள்ள சிக்கலை, சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் தரப்பிலிருந்தும் ஆராய்ந்து, அந்த பிரச்சனையை உருவாக காரணமாய் இருந்த விஷயங்களையும், அப்பிரச்சினையால் சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளையும், மக்கள் முன்னிறுத்த வேண்டும். பார்க்கும் மக்கள்…இவற்றை உள் வாங்கி, தம் தரப்பிலிருந்து, அப்பிரச்சனையை தீர்க்க முடிந்தவற்றை செய்ய முன் வர வேண்டும் (ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால்)
இம்மாதிரியான நிகழ்ச்சிகளிலும், சமூகத்தில் வேரூன்றி இருக்கும் பிரச்சனைகளுக்கு, திரைப்பட கதாநாயகர்கள் போல், ‘இதுவே சரியான தீர்வு’ என தண்டோரா அடித்து…மக்களின் யோசித்து முடிவெடுக்கும் திறமையை மழுங்கடிப்பது…நிகழ்ச்சியின் சரிவே!!
இந்நிகழ்ச்சி மூலம், ஆமிர் அளிக்கும் ‘fast food’ தீர்வுகளுக்கும், ‘Rich gets richer,poor gets poorer’ பிரச்சனைக்கு, ஷங்கர், தன் ‘சிவாஜி’ திரைப்படத்தில் அளிக்கும் தீர்வுக்கும், வித்யாசம் பூஜ்ஜியமே.

சாதரணமாக, சமூக இன்னல்கள் பற்றிய நிகழ்ச்சிகள் பார்க்கும் போது அல்லது இணையத்தில் படிக்கும் போது, நம் தமிழ் திரைஉலகம் இது பற்றி தெரிவித்த கருத்து என்ன என நினைப்பேன்.
பெண் சிசு கொலை, பெண் எனும் ஒரு பிறவியை ஒரு பாரமாக, தேவையற்ற பொருளாக இச்சமூகம் பார்ப்பதை கண்டித்தோ அல்லது அது ஒரு பிற்போக்கான எண்ணம் என்றோ…சாடியதாக ‘கருத்தம்மா’ தவிர எந்த படமும் நினைவுக்கு வரவில்லை.
ஒரு பெண்ணை சமூகத்தில் ஒரு சக மனிஷியாக மதிப்பது, அவளின் விருப்பு வெறுப்புகளுக்கு மரியாதை கொடுப்பது…போன்ற யதார்த்தமான விஷயங்களை, வெள்ளித்திரையில் கொண்டு வந்த படங்கள் எனில், சட்டென நினைவுக்கு வருபவை ‘வீடு’ மற்றும் ‘அவள் அப்படித்தான்’
இது வருத்தமான நிலையெனில், பெண்களை கேலிப்பொருளாக, சிற்றின்பப்பொருளாக மட்டுமே திரைப்படங்களில் சித்தரிப்பது…மிகவும் ஆபத்தானது.
அந்த விஷயத்தில்…ஒரு படம் விடாது, தன் அனைத்து படங்களிலும், பெண்களை அல்லது பெண்ணின் உடல் அங்கங்களை கேலி செய்வதையோ, அல்லது அவர்களுக்கு ‘அறிவுரை’ வழங்குவதையோ வழக்கமாக கொண்டுள்ள இயக்குனர் ஷங்கர் முதலிடம் வகிக்கிறார் என்பதில் ஐயமில்லை.

“ஏன் ஷங்கர்…பேரரசு, K.S.ரவிக்குமார்,..எல்லாருமே அப்படித்தான படம் எடுக்கறாங்க”, என சீறிப் பாய்பவர்களுக்கு
“என் படங்கள் வழியா மக்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லணும்”…இவ்வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் திரு.ஷங்கர் அவர்கள். தன் படங்கள் பற்றிய தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும், அவரின் நேர்க்காணல்களிலும், இவ்வாக்கியம் இடம் பெறாமல் இருந்ததில்லை.
அவர் படங்கள் பார்த்தவரையில், அந்த ‘நல்ல மெசேஜ்’ என்னவென்று இது வரை எனக்கு புரிந்ததில்லை.
“தம்பி…உன்னால சுத்தி நடக்குற அனியாயங்கள தட்டி கேக்க முடியலனா…உனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கற alter ego (மாற்று அகம்)வ எழுப்பு; அவன் கொலை ஏதாவது செஞ்சா கூட, உன்ன மனநல காப்பகத்துல ரெண்டு வருஷம் வச்சுட்டு…வெளியேத்திடுவாங்க”
“சுத்தி இருக்கற வருமைய பாத்து உன் ரத்தம் கொதிக்குதா…நல்ல பைசா வச்சிருக்கற கஜானால கொள்ளை அடி…ஏழைகளுக்கு உதவி செய்”
இவ்வாறு காலனாவிற்க்கு பயனற்ற, யதார்த்த வாழ்க்கைக்கு எள்ளளவும் சரிபட்டு வராத விஷயங்களை…ஆங்கில பட உலகில் ‘fantasy’ என கூறுவர். இந்த ரகம் சார்ந்த ஆங்கில படங்களுக்கும், ஷங்கரின் ‘100 கோடி’ செலவு செய்து ‘நல்ல மெசேஜ்’ வழங்கும் படங்களுக்கும், வித்யாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
“ஏதோ…தினசரி பிரச்சனைகள்ல இருந்து…ஒரு 3 மணி நேரம் விடுதலை குடுக்கறாரு…அத போய் குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கியே”,என கேள்வி எழுப்புபவர்களுக்கு…
உப்புச்சப்பற்ற படங்களை வாரி வழங்கும் ‘low budget’ இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்கள் கிடைப்பதனால் மட்டும், பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் ஷங்கருக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு எறும்பு வெல்லம் சுமந்தபடி மலை ஏறுகிறது…என வெள்ளித்திரையில் காட்டுவது ‘low budget’ இயக்குனர்கள் எனில், அந்த எறும்பிற்கு ‘Peter England’ சொக்காய் அணிவித்து, ‘roller skates’ அணிந்த படி, வெளிநாட்டு இனிப்பு பண்டத்தை தூக்கி போகும்படி ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்’இல் காட்டுவது ஷங்கர். தேவையற்ற பிரம்மாண்டங்களை துண்டித்து விட்டால், அந்நியன், இந்தியன், சிடிசன், சமுராய், ரமணா…அனைத்துமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
இத்தனை பாராட்டுக்கள் ஒரு எரிச்சல் எனில், அவரின் படங்களில் ‘நகைச்சுவை’ என்ற பேரில் இடம் பெரும் சில காட்சிகள்…. சகித்துக்கொள்ள முடியாதவை.
‘Gentleman ‘ திரைப்படத்தில் இடம்பெறும் செல்ல விளையாட்டு என்ற பேரில், பெண்ணை சிற்றின்பப்பொருளாக காட்டும் காட்சிகள், ‘Boys’ திரைப்படத்தில், பெண்ணின் மார்பகங்கள் பற்றி ‘நகைச்சுவையாய்’ பேசப்படும் வெட்டிப் பேச்சுக்கள்…இவை எவையுமே சமூகத்திற்கு தேவையற்றது என தணிக்கைக் குழு முடிவு செய்யாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இவை இயக்குனரின் அறியாமையையும், ‘ஆம்பளை பசங்க இத மட்டும் தான் ரசிப்பாங்க’ என பொதுமைப்படுத்தும் மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.
“இவ்வளவு சீரியஸா எடுத்துக்க வேணாமே”, என ஷங்கருக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு,
“நாலு பொண்ணுங்க…குட்டிச்சுவர்ல உக்காந்துகிட்டு, நடந்து போற நாலு பசங்கள…அவங்க ஆண் குறி சைசுக்கு ஏத்தா மாதிரி…தரம் பிரிச்சு, படுக்கைல எவனுக்கு வீரியம் ஜாஸ்த்தியா இருக்கும்னு ஆலோசிக்கறாங்க”, என ஷங்கரின் எந்த ‘திரைக்காவியங்களிலும்’, ஏன் எந்த தமிழ் இயக்குனரின் படைப்பிலும் பார்த்ததாய் நினைவில்லை.
‘நகைச்சுவை’ ததும்ப படம் எடுக்கிறார் எனில், படம் பார்க்க வரும் ஒரு சாராரை மட்டும் கேலி செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என புரியவில்லை.
“அது எப்படி,’ என இழுப்பவர்களுக்கு…
கேலி செய்வதில் ‘சமத்துவம்’ சரிப்பட்டு வராதெனில் , ஒரு பாலினத்தவரை மட்டும் நகைச்சுவை பொருளாக சித்தரிப்பதை நிறுத்துவது தானே முறை.

அடுத்து ஸ்ரீ.ஸ்ரீ. சங்கரானந்தா ‘அறிவுரை’ வழங்கும் படலம்…

‘Gentleman ‘ திரைப்படத்தில் அர்ஜுனின் வசனம் ஒன்று…
//இழுத்து பொத்திகிட்டு நிக்கறாளே சுஷீலா..இவள யாராவது கைய்ய புடிச்சு இழுத்திருக்காங்களா…இல்லியே;
ஏன்..இவ ஒழுங்கா நடந்துக்கறா
சுதந்திரமா இருங்க…சுண்டி இழுக்காதீங்க
சகஜமா இருங்க..சஞ்சலம் படுத்தாதீங்க//

“முற்போக்கு கருத்துக்கள்” என்றால், “என்னதது…கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வச்சு simulate செய்ய முடியுமா” என வினவும் இயக்குனரிடமிருந்து பெண் விடுதலையை சித்தரிக்கும் காட்சிகளை எதிர்பார்க்க முடியாது. கேட்பதெல்லாம்…பிற்போக்குத்தனமான கருத்துக்களையாவது பரப்பாமல் இருக்க முயற்சி செய்யுங்களேன்…என்று.
அடுத்ததாக…அவரின் பொன்னான திரைப்படங்கள்…வெளிச்சம் போட்டு காட்டும் அவரின் ‘நிற வெறி’…
கருப்பு சாயம் பூசிய ஒரு அக்கா, கருப்பு மகள்களான அங்கவை, சங்கவை…இவற்றை ‘நகைச்சுவை’ என வழங்கும் ஒரு இயக்குனர், எவ்வளவு ஒரு கொடூரமான நிறவெறியராக இருக்க வேண்டும்?
கருப்பாக அந்த பெண்ணை கேலிப்பொருளாய் காட்டுவதோடு, அவர் கதாநாயகர்களை வைத்தே ‘இந்த பெண்கள் திருமணச் சந்தையில் விலை போக மாட்டார்கள்’ என அவர்களின் எதிர்காலம் பற்றியும் தன் கருத்தை தெரிவிக்கிறார்.
தமிழ் திரை உலகில், இவரொரு சிறு துளியே!
இது மாதிரியான சமூகப் பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் முடிந்த வரையில் விலகி இருக்க விரும்பும் பல சிகரங்களை பற்றியும் சிரத்தின் ஒரு மூலையில் கூட மூளை என்ற ஒன்று இல்லாத இயக்குனர்கள் பற்றியும் எழுத விருப்பம்தான். இன்னொரு பாகம் எழுத வேண்டும் 🙂

“உலகக்கோப்பை முடிஞ்சுது; இன்னும் IPL ஆரம்பிக்க ஒரு வாரம் கிட்ட இருக்கே…என்ன பண்ணலாம்?”, “நம்ம தேசப்பற்ற ஏதாவது விதத்துல வெளிப்படுத்தீட்டே இருக்கனுமே…என்ன செய்யலாம்?”, என தவித்து கொண்டிருந்த நடுத்தர மற்றும் மேட்டுக்குடி இளைஞர்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்தார் திரு. அன்னா ஹசாரே!!!

கெடைச்சது சான்ஸ்னு ஆளாளுக்கு அவங்க தகுதிக்கு ஏத்தா மாதிரி ஹஜாரேக்கு ஆதரவ காட்ட ஆரம்பிச்சாங்க. இங்க melbourneல ஒரு கும்பல் பட்டினி போராட்டம் இருந்தாங்களாம். ஒரு ரெண்டு மூணு நாளைக்கி facebookல ‘ஹசாரேக்கு சப்போர்ட் பண்ணுங்க…சப்போட்டா பண்ணுங்க”னு உயிர வாங்கினாங்க. இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது…சொல்லறாங்க, “நான் திரு.ஹசாரேவ ஆதரிக்கிறேன்; இத நீங்களும் உங்க நிகழ்நிலையா (Facebook status ) போட்டா நல்லா இருக்கும்; இல்லனா கடவுள்தான் உங்கள காப்பாத்தணும்”.

வேடிக்கை என்னனா பெருமுதலாளிங்க, அரசியல்வாதிங்க, திரையுலக நீதிமான்கள்னு…அவனவன் போட்டி போட்டு ஆதரவு தெரிவிக்கிறான். இது, கொள்ளை அடிச்சதுக்கு அப்பறம் திருடனே வீட்டுகாரன்கிட்ட போய், “வா திருடன தேடி கண்டுபுடிப்போம்”னு சொல்றா மாதிரி இருக்கு.

இதெல்லாம் எதையுமே கண்டுக்காம, தனக்கு ஒரு ‘feel good ‘ feeling கெடைச்சா போதும்னு சுத்திக்கிட்டு இருக்கற ‘தேசபக்தர்கள்’லுக்கு சாட்டையடி கொடுத்தது, வினவு வெளியிட்ட பதிவு.
இந்த சேதிகள படிக்கும் போது மண்டைல உதிச்ச சிறுகதை தான் பின்வருவது…

***************************************************************************************

“அய்யோ அய்யோ அய்யோ…என்னங்க ரத்தினத்த காணோங்க…என் ராசா எங்கப்பா போன?? ஆசை ஆசையா வளத்தேனே!! எந்த படுபாவி கண்ணுபட்டதோ!! இங்க வந்து பாருங்களேன்…என்னங்க…”, என தொண்டை கிழியும் அளவிற்கு கத்தி கூச்சல் போட்டு கொண்டிருந்தாள் குருவம்மா

“யாருடி இவ…மனிஷன தூங்க விடாம…என்னதுடி காலங்காத்தால”, என அரை தூக்கத்தில் திறந்தும் திறக்காத கண்களுடன் வீட்டு வாசலுக்கு வந்தான் முருகேசன்.

“ஆமாங்க தூக்கம் தான் உங்களுக்கு முக்கியம்! அடுத்த வேலை சோத்துக்கு என்ன பண்ண போறோம்…ரத்தினத்த எந்த களவாணி பையனோ இழுத்துகினு பொயிட்டான்”, என புலம்பினாள் குருவம்மா.

“என்னடி சொல்லற…நேத்து நான் தான அவன கட்டி போட்டேன்…எங்கயாவது மேய போயிருப்பான்; வந்திடுவான்”, என ஆறுதல் அளித்தான் முருகேசன்.

இரண்டு மணிநேரம் கழிந்தது. ரத்தினத்தின் வருகைக்கான சாத்தியகூறுகள் எதுவும் தென்படவில்லை. கொஞ்சமாய் பதற்றம் முருகேசன் முகத்தில் படர ஆரம்பித்தது.

“இன்னிக்காவது சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வீடு திரும்பலாம்னு பாத்தா…அவனுக்கு நீ நல்லா வக்கனையா சோறும், கஞ்சியும் ஆக்கி போடு; இப்ப பாரு குண்டிமணல தட்டிட்டு ஊர் மேய பொயிட்டான்”, என எரிந்து விழுந்தான் முருகேசன்.

“என்னை குத்தம் சொல்லணும் உங்களுக்கு…நடக்கற வேலைய பாப்பீங்களா! செல்வி அக்கா வீட்டு பக்கத்துல ஒரு குட்டிசுவரு இருக்குல…அங்க இருக்கானான்னு பாருங்க; அங்க இல்லனா…மறந்துட வேண்டியதுதான்”, என வீண் விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தாள் குருவம்மா.

“நீ வேற ஏன்டீ வவுத்தெரிச்சல கெளப்பற! பையன இஸ்கூலுக்கு கெளப்பு, பக்கத்துல எங்கயாவது இருப்பான்; இழுத்துகிட்டு வரேன்”, என கிளம்பினான் முருகேசன்.

“டேய் சரவணா…எழுந்திருப்பா..”, என கூவிய குருவம்மாவின் குரல் கேட்டு, “என்னடி இவ்வளவு சீக்கிரம் கெளம்பிட்டான் முருகன்? ரத்தினம் சத்தத்தையே காணோம்”, என வம்பு பேச்சை இனிதே துவக்கினாள் எதிர்த்த வீடு கஸ்தூரி.

“அத ஏன் கேக்கறீங்கக்கா…நேத்து கட்டிப்போட்டேனு சொல்றாரு, இன்னிக்கி காணோம்”, என அலுத்துக்கொண்டாள் குருவம்மா.

“அசதில சரியா கட்டியிருக்க மாட்டான்; அது அத்துகினு ஓடி இருக்கும். தேடி போயிருக்கான்ல…வந்துடும். அப்பறம்…”, என அடுத்த ‘topic ‘ற்கு ‘jump ‘ செய்ய நினைத்தாள் கஸ்தூரி.

“பையன ரெடி பண்ணனும்க்கா…மதியமா வரேன்”, என கஸ்தூரியின் ஆசையை முறியடித்தாள் குருவம்மா.

காலை 10 :30 மணி, குழாயடி

“விஷயத்த கேட்டீங்களாடி…ரத்தினத்த காணோமாம்; முருகன் அத தேடிக்கிட்டு போயிருக்கானாம். அது இல்லனா சோத்துக்கு என்ன பண்ணுவாங்க பாவம்; ஏதோ மில் முதலாளி பாத்து ஏதாவது வேலை போட்டு குடுத்தா நல்லா இருக்கும்”, என வருத்தத்துடன் வம்பு ‘session ‘ஐ துவக்கினாள் கஸ்தூரி.

“ரத்தினம்னா…அட போன வருஷம் மழை வரவேண்டி கண்ணாலம் கட்டி வச்சோமே…அந்த கழுதையா”, என ஒருத்தி சுறுசுறுப்பாய் வினவ,

“அதுவேதான்டி…நல்லா ஜம்முனு ராசா மாதிரி இருந்துச்சு”, என கஸ்தூரி விளக்கம் அளித்தாள்.

“நான் அப்ப ஊர்ல இல்ல…என்ன ஆச்சு அப்பறம்? மழை வந்துச்சா?”, என இன்னொருத்தி கேள்வி எழுப்ப,

“எங்க…பக்கத்து ஊரு பரிமளத்துக்கு கட்டி வச்சாங்க; அந்த பொட்டை கழுதை கால்ல ஏதோ தழும்பு இருந்துச்சு போல; சாமி குத்தம் ஆயிடிச்சுன்னு பூசாரி ஐயா சொன்னாரு”, என புலம்பித் தள்ளினாள் கஸ்தூரி.

“அக்கா…ஒரு யோசனை…நமக்காக கண்ணாலம் பண்ணிக்க முன்வந்துச்சே…அது கெடைக்க ஏதாவது செய்யணும்ல”, என குழாயடியின் அறிவுகொழுந்து கூற,

“ச…இது ஏன்டீ எனக்கு தோணாமபோச்சு? இன்னிக்கே ஏதாவது பண்ணுவோம்; கொட்டாய்ல புதுப்பட பொட்டி வரலன்னு பக்கத்து வீட்டு பெருசு சொல்லிச்சு…வெட்டியா தான் இருக்க போறேன்…சரி சொல்லுங்க என்ன பண்ணலாம்”, என தலைவி பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டாள் கஸ்தூரி.

“அக்கா…அன்னதானம் பண்ணலாம்”, என ஒருத்தி,

“ரொம்ப காசு செலவாகும்…கூழ் காச்சலாம்”, என இன்னொருத்தி.

இப்படி சரமாரியான யோசனைகள் வந்த வண்ணம் இருந்தது. தலைவி கஸ்தூரி அனைவரையும் அமைதியாக இருக்க கேட்டுக்கொண்டாள்.

“ஒன்னு பண்ணலாம்…நிழலா இருக்கற இடமா பாத்து எல்லாரும் உக்காருவோம். L .R .ஈஸ்வரி பாட்ட போட்டு விடுவோம்; வீட்டுல இருந்து முறுக்கு, சீடை ஏதாவது கொண்டுவந்து சாப்பிட்டுகிட்டே முருகனுக்கு காத்துட்டு இருப்போம்; என்ன எல்லாருக்கும் ஓகேவா”, என நிகழ்ச்சி நிரலை ஒப்பித்தாள் கஸ்தூரி.
“எனக்கு ஓகேக்கா…நம்ம வீட்ல இருந்தும் வந்தாங்கன்னா…நிறையபேர் மாதிரி இருக்கும்”, என ஒருத்தி யோசனை தெரிவிக்க,

“அதுக்கென்ன…எப்படியும் வேலை முடிச்சு வந்தா, எங்க வீட்ல காத்துவாங்க வாசல்ல உக்காருவாரு; அங்க திண்ணைல உக்காராம இங்க வரசொன்னா போச்சு”, என சுமூகமாய் பிரச்சனைக்கு தீர்வு கண்டாள் கஸ்தூரி.

மாலை 4 :30 மணி; குட்டிசுவரருகே…

பக்கத்து ஊர்காரர்கள் பார்த்தால், திருவிழாவோ என நினைக்க வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு சிறுவர்கள், பெரியவர்கள் என களைக்கட்டியது குட்டிசுவரும் அதன் சுற்றுவட்டாரமும்.

செல்லாத்தாவை செல்லமாய் L .R .ஈஸ்வரி அழைக்க, பஞ்சு மிட்டாய், பலூன் வியாபாரங்கள் அமோகமாய் நடக்க, பட்டு சேலையில் ஜொலித்த கஸ்தூரி முகத்தில் ஒரு பெருமை கலந்த புன்னகை.

“விலகுங்கப்பா…பஞ்சாயத்து தலைவரும் மில் முதலாளியும் வராங்க பாரு”, என ஒரு பெருசு குரலெழுப்ப, அனைவரும் செய்துகொண்டிருந்த வேலையை கைவிட்டு, எழுந்து நின்றனர்.

“என்னப்பா ஏதாவது சேதி கெடைச்சதா முருகன்கிட்டயிருந்து, காலைல போனான்னு சொன்னீங்களேப்பா”, என பொறுப்பான குரலில் கேட்டார் பஞ்சாயத்து தலை பசுபதி.

“இல்லீங்கய்யா, சோறு தண்ணிகூட இல்லாம எங்க அலைஞ்சிக்கிட்டு இருக்கானோ!! குருவம்மா கூட ரொம்ப ‘sad ‘ஆ இருந்துச்சு”, என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் மட்டும் கேட்டது.

“சரி…நான் வீட்லதான் இருக்கேன்; ஏதாவது தெரிஞ்சா வந்து சொல்லுங்க”, என விடைபெற்றான் பசுபதி.

“ஐயாவோட தான் இருப்பேன்பா…எதாவதுனா சொல்லி அனுப்புங்க”, என நழுவினான் தறி மில் முதலாளி கணேசன்.

ஊர் தலைவர்களுக்கு சலாம் போட்டுவிட்டு, ராட்டினத்திற்க்கும், ஜிகிருதண்டா வண்டிகளுக்கும் நடையைகட்டினர் மக்கள்.

பசுபதி வீடு

“ஒய் கணேசு…நீ அங்க கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமுல, இப்ப தேவையில்லாம சந்தேகம் வரும்”, என பசுபதி சலித்துக்கொள்ள,

“அட போங்க பசு…அதுங்கள பாத்தீங்களா…நானே போய், “நான் தான் சுட்டேன்”னு சொன்னா கூட, “மில் முதலாளி தமாஸ் பண்றாரு”னு சொல்லுங்க; இதுங்களாவது சந்தேகப்படறதாவது”, என சமாதனம் செய்தான் கணேசன்.

“ஆனா சும்மா சொல்லகூடாது…கண்ணாப்பின்னான்னு இருந்துச்சுய்யா அந்த கறி; நான் கூட நீ கழுதை கறின்னு சொன்னப்போ..ஏதோ மப்புல உளறுதனு நினைச்சேன். அந்த செல்வம் பையன் கட்டுகட்டுன்னு கட்டிட்டு காலைல
4 :௦௦ மணிக்கு படுத்தவன்யா…”, என கூறியபடி படுக்கையறையை பார்த்தான் பசுபதி.

“அட வந்துட்டீங்களா….கொஞ்சம் கேரா இருந்துச்சு, அதுதான் கண் அசரலாமேன்னு…”, என கட்டிலிலிருந்து இறங்கினான் செல்வம்.

“ஊர் தலைங்க ரெண்டு பேரும் போய் ஆறுதல் சொல்லியாச்சு; கூத்தாடி…ஊருக்கு செல்லபுள்ளை நீ…போலனா தப்பா நினைப்பாங்கல”, என கண்ணடித்தான் கணேசன்.

ஏனோதானோ என செருப்பை அணிந்தபடி கிளம்பினான் செல்வம்.

மீண்டும் குட்டிசுவர், இரவு 8 :௦௦ மணி

கூத்து கும்மாளம் ஓய்ந்தது. அசதியில் சிலர் கட்டையை கடத்திவிட்டனர். இதனால் சிறிது எரிச்சல் அடைந்த கஸ்தூரி, “இங்க பாருங்க…”, என ஆரம்பித்த அந்த நொடி,

“குருவம்மா…குருவம்மா…கிடைச்சிடுச்சுடி…நாள்பூரா தேடினது வீண் போகல”, என குதூகலத்துடன் குட்டிசுவர் நோக்கி ஓடிவந்தான் முருகேசன்.

நிம்மதி பெருமூச்சு விட்டபடி, “வவுத்துல பால வார்த்தீங்க..எங்க இருந்தான்?”, என குருவம்மா வினவ,

“ரத்தினம் இன்னும் கெடைக்கலடி…அவன் விட்டை கெடைச்சது; அப்பறம் என்ன…அவனும் தானா வந்துடபோறான்”, என எகத்தாளமாய் சிரித்தான் முருகேசன்.

குழப்பத்தில் முருகேசன் கையில் இருந்த விட்டையை பார்த்த குருவம்மா, “என்ன சொல்றீங்க…இது நாய்பீங்க…நாள்பூரா சுத்தினது இதுக்குத்தானா! என்னங்க ஆச்சு உங்களுக்கு”, என பரிதாபமாய் அவனின் கையை பிடித்தாள்.

“உளறாதடி…இது நம்ம ரத்தினத்தோட விட்டை தான்”, என முருகேசன் சப்பக்கட்டு கட்ட,

“ஒத்துங்கப்பா…வர்றது யாரு பாருங்க”, என ஒருவன் குரல் எழுப்ப,

“சிந்தனை செம்மல், எங்கள் கிராமத்தின் தெருவிளக்கு, ரஜினியின் திரையுலக வாரிசு….அண்ணன் செல்வம் வராருடோய்”, என துதிபாடல்கள் ஆரம்பித்தன.

அமைதியாக இருக்கும்படி செல்வம் கைகாட்ட, அடங்கியது ரசிக பேரலை.

“பாருங்கய்யா…ரத்தினம் போட்ட விட்டை கெடைச்சிருக்கு…இவ என்னனா இது நாய் போட்டது, அது இதுனு உளறிகிட்டு இருக்கா”, என புலம்பினான் முருகேசன்.

“எங்க காட்டு…அட ஆமாம் இது கழுதை விட்டைதான்…பரவாயில்லை முருகா…இன்னிக்கி முழுக்க நீ தேடினது வீண்போகல”, என முருகேசனை தட்டிக்கொடுத்தான் செல்வம்.

“இனி என்ன பண்ணபோறோம்…தம்பிகளா நீங்க பட்டணம் போய் படிச்சவங்கதான…ஏதாவது யோசனை சொல்லுங்களேன்பா”, என பசுபதி கேட்க,

“ஐயா, எனக்கு என்ன தோணுதுனா, ‘கழுதை கெட்டா குட்டிசுவரு’னு சொல்லுவாங்க. அதுனால ரத்தினம் திரும்பி வந்தாலும், இங்க தான் வரணும்…அப்படி பாத்தா…”, என கூட்டத்தில் இருந்த ‘படித்த மேதை’ கூறி முடிப்பதற்குள்,

“அப்ப அதுதான் செய்ய போறோம்; தினமும் வீட்டுக்கு ஒருத்தர் இங்க வந்து கூடனும்; ரத்தினம் திரும்பி வந்த உடனே…அவன பத்திரமா முருகன் வீட்டுல போய் சேக்கணும்”, என சூளுரைத்தான் செல்வம்.

“இந்த எடத்துல பஞ்சாயத்து தலைவர் கிட்ட ஒரு விண்ணப்பம்…வர்ற ஆடி திருவிழால நம்ம முருகனுக்கு அவனோட திறமைய பாராட்டி ஏதாவது விருது மாதிரி கொடுத்தா நல்லா இருக்கும்”, என செல்வம் கூறி முடிப்பதற்குள்,

“முருகனின் குடி காத்த நம் குலவிளக்கு, ரத்தினத்திற்கு குரல் கொடுத்த விடிவெள்ளி”, என ஒரு விசிறி கோஷம் எழுப்ப, “வாழ்க! வாழ்க!!”, என மந்தையிலிருந்த மற்ற விசிறிகள் சேர்ந்து கொண்டன.

இந்த கூச்சலுக்கு இடையில் செல்வம் விட்ட ஜோரான ‘கழுதை கறி + மசாலா’ ஏப்பம், அருகிலிருந்தவர் காதுக்கு எட்டாதபடி லாவகமாய் காற்றில் கலந்தது.