Posts Tagged ‘aversion towards food’

இப்பொழுது எனக்கு சாப்பிடுவது எவ்வளவுக்கு எவ்வளவு பிடிக்குமோ, அவ்வளவுக்கு அவ்வளவு வெறுத்திருக்கிறேன், என் பள்ளிப் பருவங்களில்!

சரியாக நினைவில்லையெனினும், 4-5வது வகுப்பில் இருந்திருப்பேன். என் தாய் வேலைக்குச் செல்லும் பெண் என்பதனால், பள்ளியில் ஒரு ஆயாவிடம், எனக்கு மதிய உணவு ஊட்டும் வேலையை கொடுத்தாள். லட்சுமி ஆயா எனத்தான் நாங்கள் அவரை அழைப்போம். சோறு சரியில்லையா அல்லது எனக்கு பசித்ததில்லையா தெரியாது, ஆனால் சோற்றை ‘கொதப்பிக்’ கொண்டே இருப்பேனாம்! லட்சுமி ஆயா இரு கன்னங்களிலும் குத்தி குத்தி, உணவை உள்ளிருக்கருவாராம் 😦 என் தாயை பார்க்கும் போதெல்லாம், “கொதப்பிக்கிட்டே இருக்கு இந்த பொண்ணு. சோறு குடுத்து முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது” என ஆயா கூறுவாராம்!

வீட்டில் மட்டும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. நான் ஒரு 8-9வது படிக்கும் போதெல்லாம், சாப்பிட உட்காரும் போது, ஒரு சொம்பு நிறைய தண்ணீரை வைத்துக் கொள்வேனாம் (அது மட்டும் சற்று நன்றாகவே நினைவில் உள்ளது) கொஞ்சம் சோறு வாய்க்குள் போன உடன், பற்கள் தங்கள் அரைத்தல் வேலையைத் துவங்கும். அரைத்து விழுங்கும் பதம் வந்த உடன், கை, தானாக சொம்பை வாய் நோக்கி கொண்டு செல்லும்!!! இதில் எந்த உணவு வகையும் விதிவிலக்கே இல்லை. அனைத்தும் இந்த ‘உற்பத்திமுறையை’ (Production line) கடந்து தான் செல்ல வேண்டும்.

அய்யோ மறந்துவிட்டேன்… கேரட்க்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு.அது கண்ணுக்கு நல்லது எனக் கூறி, என் தாய் வெவ்வேறு விதமாக எங்கள் உணவில் அதை சேர்க்கப் பார்ப்பாள். துருவல், இஞ்சி பூண்டு சதைத்துப் போட்டு செய்யும் வகை, தேங்காய் துருவிப் போட்டு செய்யும் வகை…என பற்பல வகைகள்! ஆனால் சோறுடன் கேரட் சாப்பிட வேண்டிய நிலை அமைந்தால், ‘உற்பத்திமுறையில் ஒரு சிறிய மாற்றம் இருக்கும் – ‘அரைத்தல்’ படி (step) முற்றிலுமாய் நீங்கிவிடும். கேரட் வாய்க்குள் சென்ற உடன், சொம்பிலிருந்து தண்ணீர் கட கடவென பின் தொடரும்.!!
கல்லூரி படித்த காலத்திலும் எதுவும் பெரிதாக மாறவில்லை. இந்தியாவில் வேலை பார்த்த காலத்தில் இன்னும் கேவலமாக, ‘கழுதை தேய்ந்து கட்டை எறும்பு ஆனது’!!

வணிக நடைமுறை ஒப்பந்தசேவையில் (BPO) அணித்தலைவி வேலை செய்து கொண்டிருந்த போது, இரவு சுழற்சிகள் (night shifts)இருக்கும். இரவு உணவை உண்ணும் நேரத்தை ‘சாதுரியமாக மிச்சப்படுத்தி’, வேலையை தொடர்வேன். ஒரு தருணத்துக்கு மேல் பொறுமையை இழந்து வயிறும், “என்னம்மா ஏதாவது சோறு குடுக்கப் போறியா இல்லியா?”, என குரல் எழுப்பும். விற்பனைப்பொறியிலிருந்து (vending machine)லாவகமாக ஒரு ‘உருளைக்கிழங்கு வறுவல்’ பொட்டலத்தை எடுத்து, கணினி முன் அமர்ந்தபடியே தின்று, வயிற்றின் வாயை அடைப்பேன்!

“பசியை போக்க உருளைக்கிழங்கு வருவலா??”
“உங்க கதையை கேக்கும் போதே, எங்குளுக்கு கொமட்டிக்கிட்டு வருது”, எனவெல்லாம் வீராவேசம் அடையப் போகிறீர்களா?
தப்பே இல்லை…என் திருமணத்துக்கு முந்தைய கேவலமான உணவு பழக்கங்களைப் பற்றி நினைக்கும் போது, எனக்கும் அதே வெறுப்பு தான்…குமட்டல் தான்!

இந்த பதிவு எழுதி முடிக்கும் போது , ஒரே ஆறுதல் என்னவெனில், இப்பதிவில் கூறிய அனைத்தும் என் ‘இறந்த காலத்தின்’ நிலைதான்! எழுதும் போது, கடிந்து கொண்டாலும், இவற்றிற்கு நேர் எதிரான உணவு பழக்கங்களை என் மகனுக்கு புகட்டி உள்ளேன் என நினைக்கும் போது, ஒரு திருப்தி. அடுத்த பதிவு அதைபற்றித் தான்!