Posts Tagged ‘dowry’

இந்த பதிவ எழுதனும்னு நினைச்சது…வினவுல சமீபத்துல வெளிவந்த ஒரு பதிவ படிச்சபிறகு. நம்ம ஊர்ல குவிஞ்சு கெடக்கும் எண்ணிலடங்கா கொடுமைகள்ல ஒன்னான வரதட்சணை கொடுமை பத்தியது.

“இவங்கள எல்லாம் என்ன பண்ணலாம்”, “ஜெயில்ல தான் போடணும்”, “தூக்கு தண்டனை கொடுக்கணும்”னு நடைமுறைக்கு சாத்தியமே ஆகாதா யோசனைகள பட்டியலிட்டு உங்க நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்க விரும்பலங்க.

திருமணத்துல சம்பந்தப்பட்ட பொண்ணும் பையனும் சேந்து, அவங்களுக்கு சரின்னு தோன்ற முடிவ எடுக்கரவரைக்கும் இந்த கேவலமான கல்யாண வியாபாரம் நடந்துகிட்டே தான் இருக்கும். ‘உனக்கு எதெல்லாம் நல்லதுன்னு தோணுதோ, அது எல்லாத்தையும் சந்தேகக்கண்ணோட பாக்கற சமூகத்த…திருப்திபடுத்தவே முடியாது. அத புரிஞ்சிக்காம…மாமாவ சந்தோஷப்படுத்தறேன், சித்தப்பாவ திருப்திபடுத்தறேன்னு தொடங்கினா…ஒரு நிமிஷம் நின்னு பாக்கும்போது …உன்னோட ‘இலையுதிர் காலத்த’ ரீச் பண்ணியிருப்ப. அந்த ‘நலன் விரும்பி’ சமூகம் குத்தம் கண்டுபுடிக்கறத மட்டும் நிறுத்தி இருக்காது. இதெல்லாம் தெரிஞ்சும் ‘கலாச்சாரத்த காப்பாத்தறேன் கள்ளச்சாராயத்த காச்சறேன்’னு இருக்கும் சில பேர்வழிங்க இன்னும் எத்தனை ‘வரதட்சனை கொடுமை’ கதைகள படிச்சாலும் திருந்தாதுங்க.

பெண் விடுதலை, முதலாளித்துவம், சமத்துவம்னு எந்த திசைல இருந்து தாக்கினாலும் சமுதாயம், பண்பாடுன்னு ஒரே தேஞ்சு போன ரெகார்ட ஓட்டுவாங்க. வினவு வெளிச்சம் போட்டு காட்டின சதீஷ் மாதிரியான பொணந்திண்ணி நாய்கள கையாள, அதுங்க மாதிரியேத்தான் யோசிக்கணும். தலைய அடமானம் வச்சாவது பொண்ணுக்கு ஊர் மெச்சரா மாதிரி கல்யாணம் பண்ணியேதீருவேன்னு நினைக்கற அம்மா அப்பாக்கள் பின்வரும் யோசனையா வேணும்னா பரிசீலனை பண்ணலாம்.

ஒரு ரெண்டு நாள் முன்னாடி பாத்த தொலைகாட்சி தொடர் தான் நினைவுக்கு வருது. சேர்ந்து வாழற ஆணும், பெண்ணும், திருமணம் செஞ்சுக்கலாம்னு முடிவு பண்றாங்க. பொண்ணோட அம்மாவுக்கு பையன் மேல முழுசா நம்பிக்கை வரல. பொண்ணுகிட்ட ஒரு ‘மணத்தின்-முன்னான ஒப்பந்தம்’ (pre – nuptial agreement ) போட்டுக்க சொல்றாங்க. இது மேற்கு உலகத்துல பரவலா பாக்ககூடிய ஒன்னு. கல்யாணத்துக்கு அப்பறம் ஏதாவது பிரச்சனைனால பிரிஞ்சா இந்தந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பிரியணும்னு முடிவு எடுப்பாங்க. ஒரு விவாகரத்தின் எல்லா அம்சங்களும் இதுலயும் இருக்கும். என்ன வித்யாசம்னா…பிரச்சனை ஏற்பட்டத்துக்கு அப்பறம் வர்றது விவாகரத்து; பிரச்சனை வர்றதுக்கு முன்னாடியே வந்தா என்ன பண்ணலாம்னு பட்டியலிடறது இந்த ‘pre – nuptial agreement ‘. இந்த ஒப்பந்தம் சரியா தவறானு பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு சொல்லப்போறேன்னு நினைச்சீங்கனா…நெவெர்!!

அந்த தொடர்ல பையனுக்கு விஷயம் தெரியவந்து…அவங்க திருமணம் நின்னுபோகுது.
“அட இந்த பொண்ணு என்னடா நம்ம ஊருக்கு ‘pre-nuptial agreement’ எல்லாம் யோசனையா கொடுக்குது”னு பொலம்பும் ‘கலாச்சார பாதுகாவலர்கள்’ மேலே படிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!!
பெருசா நம்ம ஊர்ல சட்டம், நீதிமன்றங்கள் மேல எல்லாம் மக்களுக்கு நம்பிக்கை இல்லாட்டியும், போலீஸ் விசாரணை அதுல எல்லாம் இன்னும் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்யுது. பயத்த விட “எவன்டா கோர்ட்க்கும் ஸ்டேஷன்க்கும் எறங்கி ஏறீட்டு இருப்பான்”னு ஒரு எரிச்சல்னு சொல்லலாம்.

கல்யாணமே ஒரு வியாபாரம் ஆனதுக்கு அப்பறம்…ஒரு வியாபாரத்துல இருக்கற விதிமுறைகள கடைப்புடிக்கற்துல தப்பிருக்கறா மாதிரி எனக்கு தோணல.
தன் சொந்த காசுல அனுபவிக்க முடியாத சொகுசுகள், அவங்க பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்து தொலைச்ச காசு…எல்லாத்தையும் வீட்டுக்கு வரும் பலிகடாகிட்ட கரக்கனும்னு நினைக்கற எச்சைகள நாய்ங்க…எவ்வளவு கெடைச்சாலும் நிறுத்த போறதில்லை. இந்த சதீஷ் கதை மாதிரி முதல்ல 100 சவரன் கேப்பாங்க. ஓகே சொன்னா…’பரவாயில்லையே ஒன்னும் சொல்லாம ஒத்துகிட்டாங்களே…கம்மியா கேட்டுட்டோமோ”னு நினைப்பாங்க.
இந்த எடத்துலதான் நம்ம ‘pre-nuptial agreement’ உதவிக்கு வருது. என்ன வேணும்னு கேக்கட்டும், பொண்ணு வீட்டுக்காரங்க செரிப்பட்டு வந்தா ஒத்துகட்டும். ஒரு ஒப்பந்தத்துக்கு வந்த உடனே பத்திரம் போடலாம். ‘final and binding’னு சொல்லுவாங்கல…அது மாதிரி. இத அப்பறம் ஒரு வக்கீல்கிட்ட கொடுத்துட்டு….கல்யாண வேலைய தொடங்க வேண்டியதுதான்.
மவனே…ஒப்பந்தம் போட்டதுக்கு அப்பறம் இன்னொரு கார் கொடு, மேல ஒரு 50 சவரன் போடுங்கனு கேட்டே…வக்கீலும் போலிசும் வந்து உன் கணக்க சரி பண்ணுவாங்க!!
“இதெல்லாம் எப்படிங்க சரிபட்டு வரும். சமூகம் என்ன சொல்லும், பொண்ணுக்கு அப்பறம் எப்படி இன்னொரு வரன் வரும்”னு கேக்கறீங்களோ…
கதையா இருக்கே… அம்பத்தூர்ல ஒரு வீடு வாங்க கெறையபத்திரம் எழுதறீங்க…ஏதாவது பிரச்சனை ஏற்பட்டா கைகழுவிட்டு ஆவடில பாக்க மாட்டீங்க…? அதுமாதிரி தான் இதுவும். என்ன… வீட்டுக்கு பதில் இங்க உங்க வீட்டு பொண்ணு. வேற வீடுதேட ஆரம்பிக்கும்போது அம்பத்தூர் வீட்டு செங்கல் ஒவ்வொன்னு கிட்டயும், “உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே”னு கேக்கவாபோறீங்க…? அதே டீலிங்தான் உங்க பொண்ணுக்கும். என்ன…அந்த செங்கலுக்கும் உங்க வீட்டு பொண்ணுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்…அப்பப்ப வாய் தொறப்பா…சாப்பிடறதுக்கும் கொட்டாவி விடறதுக்கும். அட பரவாயில்லைங்க…வீட்டுக்கு அடங்கின கழுதைதானே…அம்மா அப்பா என்ன சொன்னாலும் கேட்டுக்கும். நாம மேட்டர்க்கு திரும்ப வருவோம்.
உங்க பொண்ணுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சீங்கன்னா…prenuptial agreementல ஒரு ரெண்டு மூணு annexure சேத்துக்கோங்க. நிச்சயத்துக்கு முன், நிச்சயத்துக்கு பின், கல்யாணத்துக்கு பின், கல்யாணம் முடிஞ்சு ஒரு 5 , 10 வருஷத்துக்கு பெறகுனு வேறவேற தோரணைல பட்டியலிடுங்க. கடசீல விவாகரத்து ஏற்பட்டா, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் சேத்து போடுங்க.
தலை தீபாவளி சீர், பேரனுக்கு வெள்ளி அரணாக்கொடி…அப்படி இப்படின்னு பிரச்சனை தலதூக்கிட்டே இருக்கும். ஒரு தொலைநோக்கு பார்வையோட இப்ப செயல்பட்டா எல்லாத்துக்கும் ஒரே வக்கீல வச்சு வேலைய முடிச்சிடலாம்.

“நல்லாத்தான் இருக்கு…ஆனா…கொஞ்சம் சிக்கல் இருக்கும் போலவே…என்ன இருந்தாலும் திருமணம் ரெண்டு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்”ன்னு மண்டைல ஒரு ஓரத்துல தோணிச்சுனா…ஒரு சுலபமான யோசனை கூட இருக்கு. நீங்க சந்தோஷமா இருக்கும் போது குத்தம் கண்டுபுடிச்சு, பிரச்சனை வரும்போது, இருக்கற இடம் தெரியாம ஓடிப்போற சமூகம் பத்தின கவலைய விட்டுத்தள்ளுங்க. நீங்க ஆசையா வளத்த பொண்ணு, அவளோட ஆசைய கொஞ்சம் கேளுங்க. வீட்டுல வரவு செலவுக்கு ஏத்தா மாதிரி திருமணத்த முடிங்க. யோசிச்சு பாத்தீங்கன்னா, உங்க பொண்ண சந்தோஷ படுத்தத்தான் இப்படி சிறுக சிறுக சேமிச்சு தடபுடலா கல்யாணம் பண்றீங்க. கம்மி செலவுல அது நடக்குதுனா…வேற என்ன வேணும் சொல்லுங்க…?

இப்பெல்லாம் திங்கட்கிழமை ஆனா ஞாயித்துக்கிழமை ஒளிபரப்பான ‘நீயா நானா’ பாக்கறது வழக்கமா போச்சு. இந்த எடத்துல ‘techsatish ‘ இணையத்தளத்துக்கு ஒரு thanks சொல்லிக்கறேன்.

சமீப காலமா சமூக கண்ணோட்டத்தோட தலைப்புகள் தேர்ந்தெடுக்க படுதுன்னு தான் சொல்லணும். அதுக்காக முழுக்க முழுக்க சூப்பர் தலைப்புகள்னு சொல்ல முடியாது…சில சமயங்கள்ல சொத்தை தலைப்புகளும் இடம் பெற தான் செய்யுது. உதாரணத்துக்கு அடுத்த வாரம் காதல பத்தி ஒன்னு.

மேட்டர்க்கு வருவோம். நான் ரெண்டு நாள் முன்னாடி பாத்த ‘நீயா நானா’ல இடம் பெற்ற தலைப்பு வரதட்சனை பத்தியது. அதுல ஒரு தரப்புல பேசப்பட்ட ஒரு கருத்த பத்தி இல்ல அத அடிப்படையா கொண்டு ஏதாவது எழுதனும்னு தோணிச்சு.

வரதட்சனை வாங்கறது தவறு, அது எனக்கு தேவையே இல்லன்னு சொன்ன பெரும்பாலான ஆண்கள், “வரதட்சனை எல்லாம் எதுவும் வேணாங்க…எனக்கு நம்பிக்கை இருக்கு; நான் சம்பாதிச்சு அவங்கள பாத்துப்பேங்க”, “என்ன நம்பி வரட்டும்..நான் காப்பாத்துவேன்” மாதிரியான கருத்துக்கள பதிவு செஞ்சாங்க. அத சொல்லும் போது அவங்க முகத்துல ஒரு பொறுப்புணர்ச்சி ததும்பிச்சு பாருங்க…

நானும் காத்திருக்கேன் காத்திருக்கேன், ஒருத்தன் கூட, “படிச்சிருந்தா போதுங்க…நானும் அவளும் சம்பாதிச்சு எங்க வாழ்க்கைய பாத்துப்போம்” னு சொல்லல.

இல்ல தெரியாம தான் கேக்கறேன், அந்த “நான் தான் குடும்ப தலைவன்”, “பிரச்சனை ஏதாவது வந்தா குடும்பத்த பாதுகாக்க வேண்டிய கடமை என்னுடையது”, மாதிரியான கருத்துக்கள் எப்படித்தான் ஒரு ஆண் மனசுல பதிஞ்சிடுதோ. அங்க மனைவியா வர்ற பொண்ணு, அவனின் அடைக்கலம் தேடி வந்த ஒரு ஜீவன், அவள காக்க வேண்டியது அவனின் தலையாய பொறுப்புன்னு அவனே அவனுக்கு ஒரு ‘to do ‘ லிஸ்ட் போட்டுக்கறான்.

கண்ணா…உயிரியல் ரீதியா நீ ஒரு பொண்ண விட பலமா இருந்தாலும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்த போறீங்கன்னு ஆனதுக்கு அப்பறம், பிரச்சனைகளையும் சேர்ந்து சமாளிக்கறதுதான செரி!

இந்த “நான் தான் குடும்ப தலைவன்; நான் தான் எல்லா முடிவையும் எடுப்பேன்”னு நினைக்கற ஆண்கள் மத்தியில, ஒரு மாற்று சிந்தனை கொண்ட ஆண்மகன் என்ன மாதிரி பொண்ண எதிர்ப்பாப்பான், அவனுடைய குடும்பம் நடத்தும் பாணி என்னவாக இருக்கும்னு யோசிச்சேன்…அதன் வெளிப்பாடே இனி…

“பாய்ஸ் ஸ்கூலில் படிப்பது ஜாலியாக தான் இருந்தது;
ஒரு ஏழாவது எட்டாவது வரை என் நண்பர்கள், என் கிரிக்கெட் அணி
என ஆண்கள் கூட்டத்திலேயே புழங்கினேன்;
எதையும் மிஸ் செய்ததாக தோன்றவில்லை.
பத்தாவது பதினொன்னாவது காலங்களில்,
பெண்களுடன் பழகுவது எப்படி இருக்கும்,
நம்முடன் சேர்ந்து அவர்களும் வகுப்பு கவனிப்பது எப்படி இருக்கும்,
போன்ற விடை தெரியாத கேள்விகள் தோன்றின.
பள்ளி முடிந்தது கல்லூரி வாழ்க்கை துவங்கியது;
ஒரு இனம் புரியாத பயம்…
திடீரென பெண்கள் கூட்டம் கூட்டமாய்
கல்லூரி வாசலில் நின்று பேசுவது கண்டு…
“மணி என்ன” என கேட்டால் எப்படி பதிலளிப்பது,
“இந்த assignment முடிச்சிட்டியா” என கேட்டால் எப்படி ஆரம்பிப்பது,
போன்ற பல ஒத்திகைகள் நடந்த வண்ணம் இருந்தது;
முதல் நாள் கல்லூரி முதல்வரின் உரை முடிந்தது…
“பெண்களுடன் பழகுவது எப்படி இருக்கும்”, என்ற
எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் மூட்டை கட்டினேன்.
“மவனே பொண்ணு கிட்ட பேசின…செத்தடா”
“அம்மா அப்பாவ கூட்டிட்டு வரணும்”
“அடுத்த செமஸ்டர் எப்படி எழுதறன்னு பாத்துடறேன்”,
என்ற எச்சரிக்கைகள் காதில் ஒலித்த படியே இருந்தன.
“நமக்கு ஏன்டா வம்பு”, என படித்து முடித்தேன்.
இப்பொழுது ஒரு மாதிரி வேலையில் செட்டில் ஆன பிறகு,
ஒரு வாழ்க்கைத்துணை தேவை என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பித்தது.
மீண்டும் கனவுகளை கோபுரமாய் கட்ட ஆரம்பித்தேன்..
.”அவள் எப்படி இருக்க வேண்டும்?”,
“என் குணாதிசயங்கள் எதையாவது மாற்றவேண்டுமோ?”, என
ஏகப்பட்ட கேள்விகள் மூளையை கசக்கின.
“homely யா இருக்கணும்; அடக்கமா குனிஞ்ச தலை நிமிராம இருக்கணும்”, போன்ற
சினிமாத்தனமான விருப்பங்கள் எதுவும் இல்லை.
திருமணத்திற்கு முந்தைய தினம் வரை அவள் வீட்டில்
இருந்த மாதிரியே இருக்க அவள் ஆசை பட வேண்டும்;
நான் சமயலறை பக்கம் போனதே இல்லை…
சுட்டு வைத்த வடை, அப்பங்களை சூறையாட சென்ற தருணங்களை தவிர;
அவளும் அப்படி வளர்ந்திருப்பாள் எனில், ஒரு அட்டவணை போட்டு
வாரத்தில் மூன்று நாள் சமையலறை அவளின் பரிசோதனை கூடம்
இன்னொரு மூன்று நாள் என்னுடையது;
பாக்கி ஒரு நாள்… எங்களின் கூட்டு முயற்சி!
எனக்கு சரி என படுவது அவளுக்கு கேவலமாய் தோன்றும் சமயங்களில்,
சுட்டிக்காட்டுபவளாக இருக்க வேண்டும்;
நானும் அவ்வாறே செய்யும் தருணங்களில், இருவரும் கலந்து பேசி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.
மாத விடாய் சமயத்தில் PMS தலை தூக்கும் பொழுது,
எரிந்து விழுவதும், சொத்தை விஷயங்களுக்கு அழுவதும்,
அவளின் தப்பில்லை என்பதறிந்து, நான் அவளுக்கு துணையாய் பொறுமை காக்க வேண்டும்.
ஒத்த கருத்து இல்லாத விஷயங்களில், விவாதம் இருக்கும் அதே சமயத்தில்,
அடுத்தவரின் கருத்தை மதிக்கும் பக்குவம் இருவருக்கும் வேண்டும்.
இந்த கனவு காணும் படலம் சுகமாய் இருப்பினும்…
இருவரும் சேர்ந்து துவங்க இருக்கும் பயணத்தில்,
விதிமுறைகளையும் விருப்பங்களையும் நான் மட்டும்
பட்டியலிடுவது…கொஞ்சம் நெருடலாக உள்ளது.
“இனியவளே, உன் வருகைக்கு வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்;
வருக; நம் பயணத்தை நம் விருப்பப்படி இனிதே துவங்குவோம்”!!