Posts Tagged ‘Europe’

வெகு நாட்கள், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கெடப்பில் கிடந்த பதிவு இது. சென்ற வருடம் நவம்பர் மாதம் மேற்கொண்ட ஐரோப்பா பயணம் போது எழுதியது. தூசு தட்டி இப்பொழுது வலைச்சரத்தில்,

“மூன்று வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு வெளிநாட்டுப் பயணம். விடுமுறை ஒன்று வந்தால், வீட்டில் முடங்கி கிடக்க மட்டுமே விரும்பிய பள்ளி-கல்லூரி காலங்களை நினைக்கையில், சிறிது வருத்தம் உண்டு. திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட மன மாற்றம், அந்த வருத்தத்தை ஈடுகட்டியது. நல்ல சத்துள்ள உணவும், உடற்பயிற்சியும் போல, “ஒரு பளிச்சென்ற காலை வேளையில், சூரியன் சுளீரென இல்லாமல் இதமாக ஒளிரும் போது மேற்கொள்ளும் விடுமுறை பயணம்” தரும் களிப்பும் புத்துணர்ச்சியும், ஈடு இணையற்றது.
பல்வேறு காரணங்களினால் கடந்த மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவில் பயணங்கள் மேற்கொண்ட போதும், வெளிநாட்டுப் பயணம் மட்டும் கைக்கூடவில்லை.
அந்த விதத்தில், இந்த ஐரோப்பா பயணம், எனக்குள் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் உள்ள நாடுகளை திரைப்படங்களிலும், பாடப் புத்தகங்களிலும் பார்த்தது மட்டும் தான். அவற்றின் அழகை கண் முன் பார்க்கப் போகிறேன் என்ற எண்ணம், ஆவலையும், காரணம் அறியா ஒரு பதட்டத்தையும் உருவாக்கியது.
இந்த பயணம் மற்ற பயணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது; காரணம் இதை நாங்கள் ஒரு சுற்றுலா நிறுவனம் வழியாக செய்கிறோம். உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் லண்டனில் அணி திரண்டு, இந்த பயணம் துவங்கும்.
ஐரோப்பாவில் 9 நாடுகளில் சுற்றுப்பயணம்; ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சொகுசுப் பேருந்தில் பயணம். அந்த பயணங்களின் போது…என் கைக்கணிணியில் சேகரித்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், வியந்த விஷயங்கள், வருத்தப் பட வைத்த தருணங்கள்…இவை அனைத்தின் தொகுப்பே இப்பதிவு.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் லண்டனில் குழும, அங்கிருந்து பயணம் துவங்கியது. நாங்கள் வசிக்கும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, சிங்கபூர் ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் இந்த பயணத்தில் பங்கேற்றனர்.
தனியே ஒரு பெண் மட்டும், தனியே ஒரு ஆண் மட்டும், ஒரு அம்மாவும் அவரின் 16 வயது மகனும், இரண்டு அமெரிக்க வாழ் இந்திய கணவன்-மனைவி ஜோடிகள், 50 வயதில் மறுமணம் செய்துக் கொண்டு தேன்நிலவிற்கு வந்திருந்த புது மணத் தம்பதியர், அம்மா – அப்பா – பதின் வயது மகளும், மகனும் கொண்ட ஒரு குடும்பம், 60 வயது கடந்த தம்பதியர், 70 வயது கடந்த தம்பதியர், 60 வயது பெண்மணியும் அவரின் 87 வயது அம்மாவும், என பயணக் குழு களை கட்டியது.
பயணத்தில் பங்கேற்ற பல உறவுகள், எனக்கு புதிதாக இருந்தது. இவர்களுடன் பேசும் போது, அவர்களின் குடும்பச் சூழ்நிலை, சுற்றுலா பயணங்கள் பற்றிய அவர்களின் எண்ணம், அனைத்தும் வியப்பை அளித்தன.

50 வயது கடந்த தம்பதியர், அவர்களின் கடந்த திருமணத்தில் இருந்து 3+3 பெண் குழந்தைகள் பெற்றிருந்தனர். ஒரு வருடம் பழகி, திருமணம் செய்துக் கொள்ள விரும்பிய போதும், பிள்ளைகள் என்ன நினைப்பர் எனத் தயங்கினர். ஆனால் மகள்கள் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, இரண்டு வாரங்கள் முன்னர் திருமணம் நிகழ்ந்தது.

தம்பதியராய் நியூசிலாந்தில் இருந்து வந்தவர்கள், தங்கள் பிள்ளைகள், தம்மைத்தாமே பார்த்துக் கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டதாகவும், இனி இப்படி ஊர் சுற்றி பார்க்க எந்த தடையும் இல்லை எனவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்னொரு தம்பதியருக்கு பிள்ளைகள் இல்லை. கணவன்-மனைவி இருவருக்கும் பயணம் செய்ய பிடித்த காரணத்தினால், உலகில் தென் அமெரிக்கா தவிர அனைத்து கண்டங்களுக்கும் பயணம் செய்து விட்டனர். வெகு விரைவில் தென் அமெரிக்க பயணமும் கைக்கூட உள்ளது 🙂

87 வயதில் ஒரு பாட்டி. 65 வருட திருமண வாழ்க்கை, 3 குழந்தைகள். அமெரிக்காவிற்கு வெளியிலான முதல் சுற்றுப் பயணம்; பேசும் பொழுது அந்த அளவு கடந்த மகிழ்ச்சியும், குதூகலமும் அவர் பேச்சிலும், முகத்திலும் தெளிவாகத் தெரிந்தது.

“பசங்களுக்கு கல்யாணம் ஆயாச்சு…இனி பேரன் பேத்திய கொஞ்சறது தான் வேலை”, “என்னதான் படிக்க வச்சுட்டாலும், நமக்கு அப்பறம் சொத்துன்னு ஏதாவது விட்டுட்டு போகணும்; எல்லாத்தையும் நாம ஊர் சுத்தி செலவழிச்சா, ஊர் என்ன சொல்லும்”, போன்ற ஒரே மாதிரியான வாக்கியங்களை நம் ஊர் பெற்றோரிடம் இருந்து கேட்ட என் காதுகளுக்கு, இவை இன்னிசையாய் இருந்தது. “அங்க வெளிநாட்டுல நெறைய வசதி இருக்கு”, “வேலைக்கு போகாம வீட்ல இருக்கற wife போல”, போன்ற சப்பக்கட்டுகள், சமூகம் போட்டு வைத்துள்ள கட்டமைப்பினுள் சிக்கிக்கொண்டுள்ள கைய்யறு நிலையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது.
இந்த பயணத்தில் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நியமிக்கப் பட்டவர், நேற்று சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.
“மிகவும் நிச்சயமற்ற வாழ்க்கை இது; முடிந்த வரையில் அதை ரசிப்பது, அனுபவிப்பது, நம் கையில் மட்டுமே உள்ளது”
இறக்கும் போது , “ஊர் ஆசைப்பட்டது போல் வாழ்ந்தேன்; ஊர் சரியென நினைத்தபடி என் பிள்ளைகளை வளர்த்தேன்; ஊர் மனசு நோகாதது போல் என் முடிவுகளை அமைத்துக்கொண்டேன்” எனக்கூருவதோ, “எங்கள் விருப்பபடி இல்வாழ்க்கையை கழித்தோம்; எங்கள் மகனை அவன் விருப்பப்படி படிக்க வைத்தோம், மகனை தன் காலில் நிற்க உதவி முடித்து, பார்க்க வேண்டும் என நினைத்த நாடுகளுக்கெல்லாம் சென்றோம்”, எனக்கூருவதோ அவரவர் விருப்பம். விருப்பம் மட்டுமின்றி, அவ்வாழ்வை வாழ முயல்வதும் அவர்கள் கையில் மட்டுமே.

நானும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு திருமணம், இரண்டு குழந்தைகள், சொந்த வீடு, குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல இடத்தில் அவர்களுக்கு திருமணம் …ஆகியவற்றை டிக் செய்து முடித்தால், ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்து முடித்திருப்போம் என நினைத்தேன். திருமணத்திற்குப் பிறகு…ஆஸ்திரேலியாவில் குடியேறினேன்.மேற்கின் பழக்க வழக்கங்கள் முதலில் புதியதாய் இருந்தது. அவ்வாழ்க்கை வாழும் மக்களை பார்க்கும் போது , அதில் இருக்கும் ‘பூமில அடுத்த பிறவின்னு ஒன்னு இருக்கா இல்லையான்னு தெரியாது; இருக்கற வரைக்கும் ஆசைப்படி வாழ வேண்டியது”, என்ற உண்மையும் விளங்கியது.

இனம் இனத்தோடு சேரும் – இனியும் இது சரிப்பட்டு வருமா???

அமெரிக்க வாழ் இரு இந்திய ஜோடிகள் வந்திருந்தனர். சுற்றுப்பயணத்தின் 12 நாட்களும், அந்நால்வரும் யாருடனும் பெரிதாக பேசவில்லை. அவர்களுக்கு இடையில் மட்டுமே இருந்தன அவர்களின் உரையாடல்கள். இவை எனக்கு சிறிது குழப்பமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. “இது தான் விருப்பமெனில், இந்த அமைப்புள்ள சுற்றுலா நிறுவனத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என பல முறை வியந்ததுண்டு.
பிற நாட்டு மக்களுடன் பேசிப் பழகும் போது, அவர் நாட்டு உணவு, பழக்க வழக்கங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நம் நாட்டில் ‘இது தான் சரி’ என காலகாலமாக இருந்து வரும் பல விஷயங்கள், அவர்கள் ஊரில் கேள்விப்பட்டது கூட இல்லை என தெரிய வரும். உதாரணத்திற்கு சமீபத்தில் இங்கு தலைப்புச் செய்தியான விஷயம், ஒரு பெண் தன் உறவில் ஒரு பையனை திருமணம் செய்துக்கொண்டது.
“இதுல என்னமா புதுசு”, எனக் கேள்வி கேட்பவருக்கு,
நம் ஊர்களில், பிறந்ததில் இருந்தே, அத்தை மகன், மாமன் மகன் இருந்தால், ஒரு பெண்ணுக்கு அவர்கள் ஒரு முறை மாமன் என்றே அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றனர். இங்கு சிறு வயதிலிருந்தே, சகோதர சகோதரியாய் பழகுவதனால், அவர்களுக்கு நடுவிலான திருமணம் என்பது புதிதாகவும், சில சமயங்களில் கீழ்த்தனமாகவும் பார்க்கப்படுகிறது. பிற நாட்டு மக்களின் சாதனைகளை கேட்கையில், “இந்தியா தான் டாப்”, “இங்கு இருப்பவங்க மட்டும்தான் அதி புத்திசாலிங்க”, “நம் மூளை வளத்தில தான்…உலகமே தடுக்கி விழாம சுத்திகிட்டு இருக்கு”, போன்ற பத்து காசுக்கு பயனற்ற நம்பிக்கைகள் தூள் தூளாகப் போகும்.
இப்படி பல விஷயங்களில், நம் ஊருக்கு மாறான வழக்கங்கள் பற்றி அறியும் போது , அந்த ‘குண்டு சட்டியினுள் குதிரை ஓட்டும்’ மனப்பான்மை மாறும்.

“என் ஊரில் இல்லாததா அங்க இருக்கப் போகுது”, என்ற எண்ணத் தடை உயர்ந்து நிற்கும் போது , பிற நாட்டவரிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் நமக்கு தெரியாமலே போகிறது. அந்த விதத்தில், இந்த ஐரோப்பா சுற்றுப்பயணம், பல்வேறு நாட்டுமக்களின் அறிமுகத்தை கொடுத்தது; அவர்களின் வாழ்க்கையில் உள்ள பல சுவாரசியமான விஷயங்களையும் அறிய உதவியது. அடுத்தப் பகுதியில், சுற்றுப்பயணத்தின் போது கண்டு வியந்த ஐரோப்பியர்களின் தாய் மொழி விருப்பம், செல்வச் செழுமை என்பது ஊர் வைத்த கணக்கு படி வாழ்வதன்று போன்றவைகளைப் பற்றி எழுத ஆசை.