Posts Tagged ‘feminism’

சமீபத்தில் நீயா நானாவில் இடம் பெற்ற பெண்ணியம் தொடர்பான விவாதத்தில், வெகுவாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர், “கணவனே கண் கண்ட தெய்வம்” என்ற விதிமுறையை தன் மகிழ்ச்சிக்கு காரணமாய் நினைத்த ஒரு பெண் (பெண்ணியவாதிகள் அல்லாத அணியில் இருந்த பெரும்பாலானோர் அவ்வாரே நினைத்திருப்பர்)

அந்த பெண்ணின் வெகுளித்தனமான பேச்சும், தன் கணவன் மீது வைத்திருந்த காதலையும் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பர். ஒரு இடத்தில், கணவன் தன் அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலையை நள்ளிரவு வரை செய்து கொண்டிருந்த போது , அந்த பெண்ணும் அவருடன் அமர்ந்திருந்ததாக கூறி மகிழ்ந்தாள். “உன் வேலைக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தவங்க…நீ உக்காந்திருக்கனு ஒரே காரணத்துக்காக…தூங்காம கண் முழிச்சுகிட்டு இருக்காங்க…அது ஒனக்கு பெருமையாடா?”, என கேட்க தோன்றிய போதும், “அவர் பாவம்…கண் முழிச்சுகிட்டு இருக்காரு…நான் மட்டும் கொறட்டை விட்டு தூங்கினா நல்லாவா இருக்கும்”, என சட்டென பதிலளிக்க இருக்கும் பெண்ணிற்கு, இக்கேள்விகள், கணவனை ‘இழிவு’ படுத்தும் பெண்ணிய பேத்தல்.

எதிர் அணியில் இருந்த பல பெண்ணியவாதிகள் பேசியவை, “என்னம்மா…இது கூட தெரியாம இருக்க”, “உன் தலைல society நல்லா மொளகாய் அறைக்குது”, மாதிரியான தோரணையில் இருந்த போது, ஓவியா அவர்களின் வார்த்தைகள், எதிர் அணியில் உள்ள பெண் யோசிக்க வேண்டும் என்ற ஒரு ஆதங்கத்தில் வெளிவந்ததாகவே எனக்கு தோன்றியது.
கணவனை கொண்டாடிய பெண்ணை, கோபி உட்பட அனைவரும் கைதட்டி புகழ்ந்த போது ,ஓவியாவின் ஒரு வாக்கியம், சாட்டையடி
“கணவன் மனசு நோகாம நடந்துகறீங்க சரி…அப்படியே அவர் அடிக்கறதையும் தாங்கிகிட்டு இருந்தா…உங்க பொண்ணும் அதுல ஒன்னும் தப்பில்லைன்னு தான் நினைப்பா”.
அந்த பெண் கூறியவை அனைத்தையும் “சூப்பர்ங்க …மனசுல பட்டத பேசறாங்க; சந்தோஷமா தான் இருக்காங்க”, என கூறியவாறு புகழ்ந்து தள்ளிய கோபிநாத், ஓவியா அவர்களின் இவ்வாக்கியத்திற்க்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுக்காதது வருத்தமே.
“புருஷன் தான..”, “பாவம் என்ன tension ஓ”,என கணவன் செய்யும்’சரியற்ற’செயல்கள் அனைத்தையும் பொருத்துக்கொள்ளும் பெண்கள், ஒரு நிமிடம், இந்த ஒரு சூழ்நிலையை யோசிக்க வேண்டும்.

homemaker எனவும் வீட்டின் மகாலட்சுமி எனவும் புகழப்படுகிறீர்கள். ஒரு நாள் பிள்ளைகளின் பிடிவாதம் பொருக்க முடியாமல் போகிறது. வீட்டிற்கு வரும் கணவன், ஏதோ சாதாரணமான கோரிக்கையை முன் வைக்கும் போது, உங்களுக்கு எரிச்சல் அதிகமாகி, கணவனை அறைந்து விடுகிறீர்கள். “வீட்ல இருக்கற டென்ஷன் ல அடிச்சிட்டா”, என உங்கள் கணவர் பொருத்துக் கொள்ளப் போகிறாரா?

‘Tension’இல் என்றாவது உங்கள் கணவர் அவர் மேலதிகாரியையோ, அவர் கூட வேலை செய்பவர்களையோ அடித்துள்ளாரா? சக மனிதனை அடிப்பது என்பதே ஒரு கேவலமான செயல் எனில், வீட்டிற்கு வெளியில் ஏற்படும் டென்ஷன் அனைத்தும், வீட்டிலிருக்கும் மனைவியை அடித்தால் சரியாகும் என நினைக்கும் ஒரு ஆண் மகன் கோழை! தன் பிரச்சனைகளை பிறருக்கு தீங்கு இழைத்தே தீர்த்துக்கொள்ள நினைப்பவன் அறிவிலி.

‘தொட்டு தாலிகட்டின பொண்டாட்டிய அடிக்கறதுல தப்பொன்னும் இல்லையே’ என நினைக்கும் போது, அவன் அந்த பெண்ணை ஒரு சக மனிஷியாகக் கூட மதிக்கவில்லை என்பது தெளிவு பெறுகிறது. அதை தட்டிக்கேட்காமல் ‘சுமதாங்கியா’ பொருத்துக்கொள்ளப் போகிறவர்கள், உங்கள் செல்ல மகளுக்கு நல்ல வாழ்க்கை பாடம் தான் சொல்லித் தருகிறீர்கள்.

ஓவியாவின் வார்த்தைகளை கேட்ட பொழுது, நினைவிற்கு வந்தது 1991இல் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘பெண்’ தொடரும், அதில் இடம் பெற்ற, ‘ராஜி மாதிரி பொண்ணு’ கதையும் தான். சமீபத்தில் You tube வழியாக அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்…

sofa அருகே தரையில் அமர்ந்தபடி, சிவந்த கண்களுடன் அழுது கொண்டிருந்தாள் லலிதா. அம்மா எதற்கு அழுகிறாள் புரியாது, மௌனமாய் லலிதா மடியில், பொம்மையை அழுத்தி பிடித்தபடி படுத்திருந்தாள் கமலி, வீட்டின் செல்ல மகள்.

“Drama queen டீ .நீ.light ஆ அடிச்சதுக்கு, என்ன சீன் போடறாடா சாமி. அழுது முடிச்சதுக்கு அப்பறம்…பூரி கெழங்கு செய்ய மறக்காத… familyயோட முரளி evening வரான். கமலி செல்லம்… அப்பா போயிட்டு வரேன்…see you டா”, என கார் சாவிகளை எடுத்தபடி நுழைவாயில் நோக்கி நடந்தான் கருணாகரன்.

“வலிக்குதா மா…”, என பயந்த கண்களுடன், அம்மாவிடம் வினவினாள் கமலி.
” இல்ல டி செல்லம்…நீ horlicks குடிச்சியா”, என கண்களை துடைத்த படி, கமலியை கட்டி அணைத்துக் கொண்டாள் லலிதா.

“அம்மா…பாட்டி”, என லலிதாவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, வாசலில் வந்திருந்த லலிதாவின் தாயை நோக்கி ஓடினாள் கமலி.
“இங்க ப்ளௌஸ் தைக்க குடுக்க வந்தேன்…அதுதான்”, என சொல்லிக்கொண்டே லலிதாவின் கண்களைப் பார்த்த மகேஸ்வரி,
“என்னடி…கண்ணெல்லாம் செவந்திருக்கு…அழுதியா”, என வாழறைக்கு விரைந்தாள் மகேஸ்வரி.

அம்மா கேட்ட உடன், கண்ணீர் அருவி போல ததும்ப, மகேஸ்வரியை கட்டிப்பிடித்துக்கொண்டு,
“இன்னிக்கி திரும்பவும் அடிச்சாரு மா…ரொம்ப சின்ன விஷயம். அவர் friends வராங்களாம்…தடபுடலா சமைக்கனுமாம். இன்னிக்கி சினிமாக்கு போகலாமுன்னு ரெண்டு நாள் முன்னாடியே பேசிட்டோம், அத கேட்டேன். அதுக்கு அப்படி கோவப் படறாரு மா…”எனக்கு friendsஅ விட படம் ஒன்னும் முக்கியமில்ல”, னு சொன்னாரு. “இன்னிக்கி சினிமாக்கு போகலாம்…அவங்க weekend வரலாம்ல”,னு கேட்டதுக்கு, சுளீர்னு அடிச்சுட்டாரு மா. “ஒன்ன யாரோ ஐடியா கேட்டா மாதிரி ஆஜராகர…மூடிகிட்டு இரு. அட நேத்து நீயா நானா பாத்ததோட effect…பெண்ணியம், வெங்காயம் எல்லாம் பேசறதுக்கு சூப்பர் ஆ இருக்கும். ரியல் life க்கு எல்லாம் சரிபட்டு வராது”னு ஒரே காட்டு கத்தல்”, என முழு கதையையும் அச்சு பிசகாமல் அம்மாவிற்கு எடுத்துரைத்தாள் லலிதா.

“வேணாம் டி…அழாத டி. புருஷன் தான அடிச்சாரு. அவருக்கு ஆபீஸ்ல என்ன tension ஒ..சாயங்காலமே வந்து sorry கேப்பாரு பாரு. evening dinner க்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா..?”, என லலிதாவிற்கு ஆறுதல் கூறிவிட்டு,
“கமலி குட்டி…பாட்டி என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு”, என பையில் இருந்த பிஸ்கெட்டை வெளியில் எடுத்தாள். கமலி அதனை கையில் வாங்கிக்கொள்ள, சமையலறைக்குள் நுழைந்தாள் மகேஸ்வரி.

ஏதோ யோசித்தபடி, கையில் இருந்ததை மேசை மீது வைத்து விட்டு, லலிதாவை நோக்கி ஓடினாள் கமலி.
“பாட்டி என்னமா சொல்லறாங்க..யாராவது அடிச்சா ஏன் அடிக்கறாங்கன்னு கேக்க சொன்னல…பாட்டி பரவாயில்லைன்னு சொல்றாங்க. எனக்கு marriage அப்பறம்…husband அடிச்சா நீ கேக்க மாட்டியா?”, என மழலை கலந்த குரலில் ஒரு பதட்டத்துடன் வினவினாள்.

என்ன விடையளிப்பது என அறியாது, கமலியின் கன்னத்தை கிள்ளியபடி, “அந்த உருளை வெந்துடுச்சுனா …அடுப்ப அனைச்சுடுமா”, என கூறிக்கொண்டே சமையலறை நோக்கி விரைந்தாள் லலிதா, கமலியின் வார்த்தை கனத்தை தாங்க இயலாது.

“Thanks முரளி…நான் பஸ்ல வந்துடறேன். நீ கெளம்பு”,என கூறியபடி, மளிகைப் பொருட்களை, காரின் பின்பகுதியில் ஏற்றினாள் ராஜி
“அட தமிழ் பேசறாங்க”, என நினைத்தபடி, இடதுபக்கம் நிறுத்தப்பட்டிருந்த கார் நோக்கி பார்வையை திருப்பினாள் லட்சுமி.
“ஓய் ராஜி…Sorry…you looked like one of my school friends”, என ‘அவசரப்பட்டு விட்டோமே’ என்ற வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டாள் லட்சுமி.
“பார்ரா …madam இங்கிலீஷ் எல்லாம் பேசறாங்க. ஏய் லட்சமி…நான் ராஜி தான் டி”, என கையிலிருந்த பையை காரில் வைத்துவிட்டு, லட்சுமியை கட்டி அணைத்துக்கொண்டாள் ராஜி
“என்னடி…நீ இங்க…எப்ப Melbourne வந்த? ஸ்கூல் முடிச்சிட்டு பெங்களூர் ல செட்டில் ஆயிட்டேன்னு கேள்வி பட்டேன்”, என லட்சுமி வினவ,
“1999 ல 12th முடிச்சிட்டு, பெங்களூர் போனோம். அங்கயே மேல் படிப்பு, வேலைன்னு செட்டில் ஆயிட்டோம். இப்ப கூட ஒரு onsite assignmentக்காக தான் Melbourne வந்தேன். நீ எப்படி படிக்கவா…வேலையா??”, என வினவினாள் ராஜி.
“நான் கல்யாணமாகி இங்க வந்தேன் 2007ல. இப்ப இங்க வேலை பாத்துகிட்டு இருக்கேன். கழுதை கெட்டா குட்டிச்சுவறு மாதிரி நானும் 12th முடிச்சிட்டு engineering படிச்சேன். அப்பறம் ஒரு 5 வருஷம் அங்க சென்னைல வேலை பாத்தேன். அப்பறம் கல்யாணம், Melbourne life “, என மூன்றே வரிகளில் தன் 10 வருட வாழ்க்கைச் சுருக்கத்தை சொல்லி முடித்தாள் லட்சுமி.
“நான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல. வேலை வேலைன்னு workaholic ஆவே இருந்துட்டேன் .ஞானோதயமா என்னனு தெரியல…அம்மா அப்பா சொல்றது கொஞ்சம் கரெக்டா இருக்கறா மாதிரி இருந்துச்சு…அதுதான் ‘I am ready’னு பச்சை கொடி காட்டிட்டேன் “, என்றாள் ராஜி.
“வாழ்த்துக்கள் டீ …மாப்பிள்ளை எங்க ஆஸ்திரேலியாவா இல்ல நம்ம ஊரா?”, என ஆவலுடன் வினவினாள் லட்சுமி.
“Thanks டீ …இங்க Melbourne தான். பையன் நல்ல வேலைல இருக்கானாம். இந்த onsite assignment ஒரு விதத்துல ஹெல்ப் பண்ணுது…இந்த weekend மீட் பண்ணலாமுன்னு பிளான் பண்ணியிருக்கோம்”, சொன்னாள் ராஜி.
“ஓய் சூப்பர் …பையனுக்கு எங்க வேலை…எங்க வீடு “, என 32 பல்லும் தெரியும்படி குதூகலத்தில் சிரித்தாள் லட்சுமி.
“Telstraல network engineerஆ இருக்காராம். வீடு eppingல “, என ராஜி கூற,
“இரு இரு…Telstra, eppingஆ …பையன் பேரு தினேஷ் னு மட்டும் சொல்லிடாத…அப்பறம் நான் மயக்கம் போட்டு விழுந்துடுவேன்”, என ஒரு பதபதப்புடன் வினவினாள் லட்சுமி.
“நீ மயக்கம் போட்டு விழு…நான் புடிச்சிக்கறேன் “, என கண்ணடித்தாள் ராஜி.
“ஏய் என்னடீ சொல்ற…நானும் தினேஷும் காலேஜ்ல classmates. போன வாரம் get together போது கூட ஒன்னும் சொல்லல அவன்”, என மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் கலந்த ஒரு முக பாவனையுடன் விடைக்கு காத்திருந்தாள் லட்சுமி.
“அவர் சொல்லலனா.அவரத்தான் நீ கேக்கணும். நாங்களும் பெருசா ரொம்ப பேசினதில்ல. ரெண்டு பேரும் வேலைல பிஸியா இருந்துட்டோம்.
புது ஊரு…கொஞ்சம் jittery யாத்தான் இருந்தது. I am so relieved டீ”, என நிம்மதி பெருமூச்சு விட்டாள் ராஜி.
“அய்யோ…கன்னாபின்னான்னு இன்ப அதிர்ச்சி குடுக்கறியே ராஜி…இங்க பக்கத்துல Lindt இருக்கு. Hot chocolate & macaron சாப்பிடறோம். My shout “, என அன்புக்கட்டளையிட்டாள் லட்சுமி.
“Happy news கேட்ட நீயே இவ்வளவு happyனா …happy news குடுத்த நான் எவ்வளவு happyஆ இருப்பேன்?? So it is my shout”, என தீர்மானமாய் பதிலளித்தாள் ராஜி.
“சரிம்மா…you win! மிச்சத்த அங்க உக்காந்து பேசுவோம்”,என கிளம்ப எத்தனித்தாள் லட்சுமி.
Lindtஇல்
“அப்பறம் சொல்லு….அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க? ஒரே குஷியா பொண்ணு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்னு ?”, என கேட்டாள் லட்சுமி.
“அத ஏன் கேக்கற …தல கால் புரியாம ஆடறாங்க”, என அலுத்துக்கொண்டாள் ராஜி.
“இவ்வளவு வருஷம் வளத்த பொண்ணுக்கு கல்யாணம்னா…சந்தோஷம் தான படுவாங்க. அப்பறம் நீ சொல்லு…இங்க அப்படியே onsite project லியே continue செய்ய போறியா ?, என லட்சுமி வினவ,
“கிண்டலா…இத்தனை வருஷம் வேலைய கட்டிக்கிட்டு அழுதாச்சு …வேலையெல்லாம் மூட்டைகட்டிட்டு வீட்லியே ஒரு homemaker ஆ இருக்க முடிவு செஞ்சுட்டேன்”, என ராஜி பதிலளித்தாள்
“சும்மாத்தான சொல்ற….அந்த வேலை கொஞ்சம் hecticஆ இருந்துச்சுனா வேற employer. workforceல இருந்தே விலக போறியா என்னடீ ராஜி”, என ஒரு வருத்தம் கலந்த குரலில் தன் ஆதங்கத்தை தெரிவித்தாள் லட்சுமி.
“இல்லடீ career womanஆ இருந்தா…வீட சரியா பாத்துக்க முடியாது. கொழந்தைங்க எல்லாம் ஆனதுக்கு அப்பறம், ரொம்ப கஷ்டமா போயிடும் . போதும்டீ அம்மா அப்பாக்கு நல்லா சம்பாதிச்சு குடுத்தாச்சு. பையனும் நல்ல வேலைல இருந்தா பிரச்சனை இல்ல பாரு”, என ஒரு தெளிவுடன் பதிலளித்தாள் ராஜி
“interesting டீ …கல்யாணத்துக்கு அப்பறம் ரெண்டு பேர் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒரு முடிவ…நீ என்னடானா…
சரி இத சொல்லு வீடு, வேலை, கொழந்தைங்க எல்லாத்தையும் ஒரே சமயத்துல சமாளிக்கறது கஷ்டம்னு யாரு சொன்னது”, என லட்சுமி பேசிக்கொண்டே இருக்கும் போது,
“ஓய் …counterல தான் order place பண்ணனும் போல…உனக்கு என்ன”, என வினவினாள் ராஜி.
“ஒரு hazelnut hot chocolate, அப்பறம் ஒரு pistachio macaron”, என தன் விருப்பத்தை கூறினாள் லட்சுமி.
ராஜிக்கு காத்திருந்த நேரத்தில் …லட்சுமியின் நினைவலைகள் get together களத்திற்கு பயணித்தன.
“என் life partner ஒரு working lady ஆத்தான் இருக்கணும். ஒவ்வொன்னுத்துக்கும் என்ன நம்பி இருக்க மாட்டாங்க பாரு”, என்றான் தினேஷ்.
“அது அவங்க இஷ்டம்பா…நீ எப்படி dictate பண்ணலாம்?”, என ஒரு கேலி சிரிப்புடன் கேள்வி எழுப்பினாள் லட்சுமி.
“மணல் கயிறு S.V.சேகர் மாரி list of conditions போடுவான் போல பையன்”, என குழுவிலிருந்த கண்ணன் தன் பங்கிற்கு ‘கலாய்த்தான்’.
“ஹலோ ஹலோ…ஒன்னு புரிஞ்சுக்குங்க . அவங்களுக்கு வீட்லதான் இருக்கணும்னு ஆசைனா…I cannot be her partner..அவ்வளவுதான் சொல்றேன். என் life partner …அவங்க அம்மா பேச்சையும், என் அம்மா பேச்சையும் கேட்டுகிட்டு, அதுதான் வேதவாக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம். சுயமா சிந்திக்கனும், ஊர்ல உலகத்துல என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்க ஆசை இருக்கணும். வேலைக்கு போகும்போது…இதெல்லாம் possible ஆகும்ல”, என தன் கருத்துக்களை புட்டு புட்டு வைத்தான் தினேஷ்.
“உன் ஆசை நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள் தம்பி”, என கூறியபடி…

“ஓய் …என்ன ஒரே ஆழ்ந்த சிந்தனை போல”, என கூறிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள் ராஜி.
“ஒன்னும் இல்லடீ…order place பண்ணிட்டியா ” ,என வினவினாள் லட்சுமி.
“All done …நீ சொல்லு. எப்படி manage பண்றடீ ..வேலை, வீடு…செம exhausting ஆ இல்ல?”, என ராஜி வினவ,
“exhaustingனு சொல்ல மாட்டேன்.weekdays நல்லா பிஸியா இருக்கு. பையன நான் office போகும் போது, childcareல drop பண்ணுவேன்…பரணி வேலைல இருந்து வரும் போது , பையன pick up பண்ணிடுவான். By the way, பரணி என் அன்பான கணவர்”, என ஒரு புன்னகையுடன் முடித்தாள் .
“நீ எப்பவாவது உடம்பு சரியில்லாம ரெண்டு மூணு நாள் வீட்ல இருந்திருக்கியா…அதுவே கடினா, day in day out வீட்லயா…யப்பா நினைச்சாலே மண்டை காயுது ”
“ம்”, என யோசித்தபடி, தேநீரை மெல்ல மெல்ல பருகினாள் ராஜி.
“ஓய் …simple thing. சும்மா நடந்து போகும் போது …ஒரு dress பாக்கற…வாங்கனும்னு ஆசை இருக்குனு வை. உனக்கு எப்படி தெரியல…கல்யாணத்துக்கு முன்னாடி கூட…எனக்கு புடிச்ச பொருள என் salary ல வாங்கறதுல ஒரு குட்டி சந்தோஷம். நாளைக்கே ஒரு வீடு வாங்கப்போறீங்கனு வைங்க..அப்ப உன் contribution உம் இருந்தா நல்லா இருக்கும்ல”
“ம்”, மீண்டும் ராஜி.
“என்னடீ கண்ணா தொறந்துகிட்டே தூங்கறியா….lecture குடுக்கறா மாதிரி இருக்கா”, என உயர்த்திய புருவங்களுடன் கடிந்துக் கொண்டாள் லட்சுமி.
“யோசிக்கிறேன் டீ ..நீ ஒன்னு நோட்டீஸ் பண்ணினியா தெரியல…இன்னும் நான் ஸ்கூல் ல இருந்த மாதிரியேத்தான். நான் புடிச்ச முயலுக்கு மூனு கால்தான். நீ சொல்ற perspectiveல நான் யோசிக்கவே இல்ல”, என யதார்த்தமாய் பேசினாள் ராஜி.
“என்ன வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலியே…யோசிக்கறனு நினைச்சா சந்தோஷமா இருக்குடீ …சொல்ல வேண்டாம்னு நெனைச்சேன் …but தினேஷ் also prefers a more independent life partner”, என்றாள் லட்சுமி.
“ஏ லட்சுமி…thanks டீ”, என ஒரு பெருமிதத்துடன் புன்னகைத்தாள் ராஜி.
“ஹே …c’mon டீ. சரி வீட்டுக்கு கெளம்பனும். பரணி தான் இன்னிக்கி சமையல். waxing முடிச்சிட்டு 1 hour ல வந்துடறேன்னு சொன்னேன். 3 hours பக்கம் ஆகபோகுது. நான் அப்படியே எஸ் ஆறேன் “, என கைகடிகாரத்தை பார்த்தாள் லட்சுமி.
“இன்னும் கொஞ்ச நேரம் இருடீ…பரணி சார் கிட்ட நான் சொல்றேன். So what do you think …உன் friendக்கு என்ன பிடிக்குமா”, என ஒரு சிறு ஏக்கத்துடன் கேட்டாள் ராஜி.
“sorry மா …என்ன ஆள விடு. weekend பேசப்போறீங்கல. ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன். openஆ பேசு…அவன impress பண்றதா நெனைச்சு உன் opinion அ hide பண்ணாத…Good luck”, என அருள் வழங்கும் பாணியில் கையை உயர்த்தினாள் லட்சுமி.
“மிக்க நன்றி குருவே …சரி எனக்கும் ஒரு குட்டி வேலை இருக்கு. அத முடிச்சிட்டு நடைய கட்டறேன். தினேஷ் கிட்ட பேசிட்டு, உனக்கு call பண்றேன்”, என car நோக்கி நோக்கி நடந்தாள் ராஜி.

அன்று ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். அருகிலிருந்த பெரியவர் கூறியதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் அதிகமாவே சத்தம் வர சிரித்தேன். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் பெரியவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு இறங்கினேன். வீட்டிற்கு நடந்து வரும் வழியில் சட்டென நம் ஊரில் கூறப்படும் ஒரு ‘பொன்மொழி’ நினைவிற்கு வந்தது.
“பொம்பளை சிரிச்சா போச்சு….புகையில விரிச்சா போச்சு”!! “பெண்ணியமா…பாப் வச்சுகிட்டு பேண்ட் சட்டை போட்டிருக்கறவங்க பேசறதுதான…”, என நினைத்த காலங்களில் கூட…இந்த ‘பொன்மொழி’ எனக்குள் ஒரு வெறுப்பை உண்டாக்கியது எனலாம். இதை நினைத்த மாத்திரத்தில்…பாலினத்திற்கு ஏற்றவாறு, நம் சமூகத்தின் அணுகுமுறை மாறுபடும் பல தருணங்கள் நினைவிற்கு வந்தது. அவற்றை பதிவாய் பதிவு செய்தால் என்ன என தோன்றிற்று…தயாரானேன்.

சூழ்நிலை 1- திருமண பேச்சு வீட்டில் அடிபடும் சமயம்
ஒரு ஆண் ‘இப்பொழுது வேண்டாம்’ என தட்டிக்கழிக்கும் போது, “புரியுதுப்பா…நீ மேல படிக்கணும்னு ஆசை படற…எங்களுக்கும் வயசு ஆகுது. பேரன் பேத்திய பாக்கனும்னு ஆசை இருக்காதா…யோசிச்சு பாரு”, இது பொதுவாக பெற்றோரின் பதிலாக இருக்கும்
ஒரு பெண் ‘தள்ளி போடலாமே’ என கூறும் போது, “என்னடி லவ் கிவ்வுனு எதாவதா…25 வயசு ஆயாச்சு….இன்னும் பொண்ண வீட்லியே வச்சிருக்கனு ஒவ்வொருத்தன் கேக்கும் போது பக்கு பக்குன்னு இருக்கு. இன்னும் வயசாக வயசாக…மாப்பிள்ளை கெடைக்கறது ரொம்ப கஷ்டமா போயிடும்”
சமூகத்தின் குப்பன் சுப்பன்களின் பேச்சிற்கு ‘மதிப்பு’ கொடுக்கும் பெற்றோர், அவர்கள் மகளின் விருப்பத்திற்கு செவி மடுக்க மறுப்பது…வருத்தத்திற்குரிய ஒன்றே

சூழ்நிலை 2 – மாப்பிள்ளை அல்லது பெண்ணின் கல்வித்தகுதி
“ரொம்ப படிச்ச பொண்ணெல்லாம் வேண்டாம்ப்பா…திமிரும் கூடவே சேந்து வரும். வீட்டுக்கு அடங்கி இருக்க சொன்னா…எதித்து பேசுவா”
“பொண்ணு நல்லா படிச்சிருக்கு…அவள விட ஜாஸ்த்தியா படிச்ச பையன் தான் சரிப்பட்டு வரும். இல்லென்னா பொண்ணு ஒரு வார்த்தை அதிகமா பேசினா…பஜாரி, அடங்காதுன்னு எல்லாம் பேச்சு வரும். நல்ல M.S. படிச்ச மாப்பிள்ளையா பாரு ஓய்”
இதில் இரு வீட்டாருமே ஒற்றுமை கடைப்பிடிப்பது…நல்ல விஷயம் போல் தோன்றிடினும், இல்லற வாழ்க்கையில், இரு வீட்டாருமே, பெண்ணானவள் அதிகமாய் படித்திருக்க கூடாது என்றே விரும்புகின்றனர்.

சூழ்நிலை 3 – திருமண அழைப்பு
வழக்கமாக மாப்பிள்ளை ‘அணியவேண்டியவை’ என ‘வரையறுக்க’ப்பட்டுள்ள ஆடைகளுக்கு மாறாக மாப்பிள்ளை உடைகள் அணியும் போது, “பாத்தியால்ல…வழக்கத்துல இருந்து மாப்பிள்ளை மாறி நிக்கற அழக….அது அவனோட தனித்துவத்த காட்டுதுல”
பெண் அப்படி அணிய வேண்டும் என நினைக்கும் போதே, “வெளங்கிடும்…வர்றவங்க எல்லாம் “த்து…சரியான கஞ்சனா இருப்பான் போலவே பொண்ணோட அப்பன். பொண்ணுக்கு ஒரு ஜீன்ஸ் t-ஷர்ட் போட்டு வேலைய முடிச்சிட்டான்”னு காரித்துப்புவாங்க”
இது மாதிரி ஒரு சூழ்நிலையில் நானோ என் தோழிகளோ இருந்ததில்லை. எனினும், என் நண்பன் அவனின் திருமண அழைப்பின் போது, தன் விருப்பப்படி உடை அணிந்ததை பார்த்து விட்டு…தோன்றியது இந்த சூழ்நிலை.

சூழ்நிலை 4 – 21 வயதிற்கு பிறகு தன் விருப்பப்படி முடிவெடுப்பது
ஒரு ஆண் அப்படி முடிவெடுக்கும் போது, “பெருமையா இருக்கு தம்பி…உனக்கு சரின்னு பட்டா அத செய். எங்க சப்போர்ட் எப்பவும் உனக்கு உண்டு”
ஒரு பெண் தன் விருப்பத்தை முன்வைக்கும் போதே, “இதெல்லாம் எப்படி…சரிப்பட்டு வருமா? இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணனும், பொண்ண வீட்ல வச்சிருக்கறது, வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கறா மாதிரி. கல்யாணம் பண்ணிக்க…புருஷன் ஓகே சொன்னா…யாரு தடுக்க போறாங்க சொல்லு”
சமூகம் ஆட்டிவைக்கும் பொம்மையாய் அந்த கணவனும் இருக்கும் போது, அவனின் ‘கட்டுப்பாடு பட்டியலும்’ அப்பெண்ணின் விருப்பத்திற்கு இடம் அளிக்கப்போவதில்லை.

சூழ்நிலை 5 – கணவன் அல்லது மனைவி இறந்த பிற்பாடு, மனைவியோ அல்லது கணவனோ மறுமணம் செய்துகொள்ளும் போது…
“என்னதான் பொண்டாட்டி போன துயரம் இருந்தாலும்….ஒரு துணை இல்லாம எப்படி. ஊர் உலகத்துல சகஜமா நடக்கறது தானே…”
“புருஷன் செத்து ஒரு வருஷம் கூட ஆகல…அதுக்குள்ள இருப்பு கொள்ளல..அதுதான் அவசரம்”

சூழ்நிலை 6 – கண்ணீர் வடிக்கும் தருணங்களில்…
“சிங்கம் மாதிரி இருப்பான்…பாவம்…மனிஷன் எவ்வளவு நேரம் தான் உள்ள போட்டே புழுங்கிகிட்டு இருப்பான் சொல்லு ”
“ஆரம்பிச்சுட்டாடா…எதுக்கெடு ஒரு அழுகை. இத வச்சே இந்த பொண்ணுங்க பொழைச்சுப்பாளுங்க”

சூழ்நிலை 7 – வேலை உயர்வு கிடைக்கும் தருணங்கள்
“எனக்கும் தெரியும்…இவன் இல்லாம வேற எவனுக்கு கொடுப்பாங்க சொல்லு…அவன் வேலை அவ்வளவு கச்சிதமா இருக்கும்”
“அப்பவே சொல்லல…அவ மினுக்கிக்கிட்டு daily ஆபீஸ்க்கு வர்றதும் 32 பல்லும் தெரிய சிக்கறதும், இந்த promotion கெடைக்காம இருந்தாத்தான் ஆச்சரியம் ”

சூழ்நிலை 8 – சமைக்கத்தெரியாது என ஒப்புக்கொள்ளும் பொழுது…
“இதுல என்ன இருக்கு. ஆம்பளைங்க கரண்டி தூக்க பொறக்கலப்பா…வீட்டுக்கு சம்பாதிச்சு வந்து கொட்டறோம்ல”
“ஏம்மா…வீட்ல அம்மா சொல்லிக்கொடுக்கலியா…எங்க… வீட்ல கூடமாட இருந்து ஹெல்ப் செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கும். எப்பவும் அது என்ன…Facebook தான…”

சூழ்நிலை 9 – சமூகப்பிரச்சனைகளில் தன் கருத்தையோ அல்லது பலர் ஒத்துப்போகும் கருத்திற்கு மாற்று கருத்து தெரிவிக்கும்போது…
“பரவாயில்ல மச்சி…சுத்தி நடக்கற விஷயங்கள நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. இந்த angleல நான் இதுவரைக்கும் யோசிக்கவே இல்லியே”
“அதுசரி…இப்பெல்லாம் இத பத்தி கூட குங்குமத்துல போடறானா…ஏதோ தீயற நாத்தம் வருது பாரு. அடுப்புல என்ன வச்சிருக்க?”

சூழ்நிலை 10 – வேறு சாதியில் திருமணம் செய்து கொள்வது
“அந்த காலத்துல இருந்தே அவன் நாத்திகம் தான் கடைபுடிச்சான். பெரியாரோட books தான் படிப்பான். அப்படியே நடந்தும் காட்டிட்டான். சபாஷ் டா மாப்பிள்ள”
“அப்படி என்ன அவசரமோ அந்த பொண்ணுக்கு…அம்மா அப்பாவ தலைகுனிய வச்சுட்டு சந்தோஷமா இருந்திடுவா…?”, சாதிக்கே இப்படி ஒரு ‘பங்கத்த’ விளைவித்தப் பிறகு, இந்த வார்த்தைகளை கேட்க, அந்த பெண் உயிருடன் இருப்பாளா என்பது அடுத்த கேள்வி.

சூழ்நிலை – 11 – கணவன் அல்லது மனைவியை ‘டா’ ‘டீ’ போட்டு பேசுவது
“இதுல என்ன இருக்கு? அவன் தொட்டு தாலி கட்டி இருக்கான். ரோட்ல போறவளையா ‘டீ’ போட்டு கூப்பிட்டான்?
“கட்டின புருஷன ‘டா’ போட்டு கூப்பிடறான்னா…ரொம்ப நெஞ்சழுத்தம் இருக்கணும். படிச்சுட்டாளாம்…எல்லாம் பெத்தவள சொல்லணும்”

சூழ்நிலை – 12 : திருமணமாகி ஒரு வருடமாகி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருத்தல்
“அவனுக்கு ஏதாவது டார்கெட் இருக்கும். வீடு வாங்கிட்டு பாத்துக்கலாம்னு இருக்கானோ என்னவோ”
“அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட போக சொன்னேன். நான் பாத்துக்கறேன்னு திமிரா பதில் சொல்றா”

மக்களின் மனதளவில் இருக்கும் இந்த வேறுபாடுகளும், சமத்துவமின்மையும் நீங்காத வரையில், பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கான அரசுத்திட்டங்கள் போன்றவை எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவத்தை நிஜமாக்குமென்பது…விடையறியா கேள்வியே!

“இது எப்ப வாங்கினது? ஒரு நாலு பவுன் இருக்குமா…?”, என அனிதாவின் கழுத்துச் சங்கிலியை தொட்டு பார்த்தபடி கேள்விக்கணைகளை தொடுத்தாள் லக்ஷ்மி.
“ஒ அதுவா…மாமியாருக்கு chain வாங்க போயிருந்தோம். நீயும் ஏதாவது வாங்கிக்கன்னு அவர் சொன்னாரு (ஒரு வெட்கத்தில் சற்றே அனிதாவின் தலை குனிந்தது) அதான். இது ஏதோ புது designனு சொன்னாங்க. சரி வாங்குவோமுனு…”, என ‘வாங்கிய பலனை அடைந்துவிட்டோம்’ என்ற பெருமிதம் சிறிதும் வெளியே தெரியாதபடி அலுத்துக்கொண்டாள் அனிதா.

“ஓகே லேடீஸ்….என்னுடைய அடுத்த படைப்பு ரெடி. Blogல update பண்ணீட்டேன். படிச்சிட்டு comments விடுங்க”, என தன் பெருமையை சபையில் சமர்ப்பித்தாள் லீலா.
“இந்த முறை என்னம்மா…திரும்பவும் ஏதாவது வாயில நுழையாத பேர்ல ஸ்வீட்டா?”, என வார்த்தைகளை நெய் போல் ஊற்றி பெருமை தீயை கொழுந்து விட்டு எரியச்செய்தாள் கல்பனா.
“பேர் வாயில நுழையலனா என்ன…அன்னிக்கி kaaju kathliய கட்டு கட்டுன்னு கட்டினது நெனவிருக்குல…? அதுக்கும் இப்படி தான் சொன்ன”, என முழங்கைய்யால் கல்பனாவை லேசாக இடித்தாள் லீலா.

“சரி அதெல்லாம் விடுங்கடி…நம்ம வினோதினி கிசுகிசு ஏதாவது?”, என நிகழ்ச்சி நிரலில் புதியதாய் ஒன்றை நுழைத்தாள் அனிதா.
“அட நான் கூட phone பண்ணி விஷயத்த சொல்லனும்னு நெனச்சேன். அன்னிக்கி அவள பஸ்ல பாத்தேன். அவ புருஷனும் இருந்தான். பஸ் கூட்டமா இருந்ததுனால பேசல. என்னமா கொழையறா புருஷன் கிட்ட. பஸ்ல எல்லாரும் அவங்களத்தான் பாத்துகிட்டு இருந்தாங்க. என்னவோ காதல் ஜோடிங்க மாதிரி…அவன் ஏதோ காதுல சொல்றான்; அவ கெக்கபெக்கன்னு சிரிக்கிறா…சகிக்கல”, என பஸ்ஸின் நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்தாள் லக்ஷ்மி.

“கொஞ்சம் ஓவராவே ஆடராடி அவ…என்னோட அந்த ‘motichoor laddu ‘ recipe ..அதுக்கு comment கூட 150 தாண்டிச்சே!! அதுக்கு ஒரு comment விட்டிருக்கா பாரு…அதுவும் private கமெண்ட்; இரு iphoneல காட்டறேன்”, என தன் அலைபேசியில் அந்த பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் தேடி எடுத்தாள்.
“படிக்கிறேன் கேளு…”லீலா ஒரு ‘சமையல் queen’ஆ மாறிட்டு வர. வாழ்த்துக்கள்!! நெறையா பேர் உன் பதிவுகள follow பண்றாங்கன்னு பாத்தாலே தெரியுது. நீ சமையல் மட்டும் இல்லாம பொது விஷயங்கள் பத்தின உன் கருத்துக்களயும் எழுதலாமே…படிக்க வர்றவங்க அவங்க நினைக்கறத தெரிவிப்பாங்க…அப்படியே ஆரோக்கியமான விவாதங்களுக்கு உன் blog நல்ல தளமா அமையும்னு நான் நினைக்கறேன். சமையல் குறிப்பு அல்லாத விஷயங்களில் உன் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கும் உன் ரசிகை வினோதினி :)”…அம்மா சொல்லிட்டாங்களாம்…நாம கேட்டு நடக்கனுமாம். நான் சொல்லட்டுமா…அவளுக்கு கடுப்பு…வேற ஒன்னும் இல்ல”, என சரமாரியாக வினோதினியை திட்டி முடித்தாள் லீலா.

“தனக்கு எல்லாம் தெரிஞ்சா மாதிரி நடப்பான்னு தான் நமக்கு தெரியுமேடி. நீ எதுக்கு தேவையில்லாம tension ஆகற. ஏதோ நம்ம husbands’ friend அவ புருஷன். அந்த ஒரு காரணத்துனால தான் அவள சேத்துக்க வேண்டிய கட்டாயம். if given an option…அவளுக்கு ‘good bye’ சொல்ல நான் எப்பவுமே ரெடி”, என தன் ‘கைய்யறு’ நிலையை நொந்துக்கொண்டாள் கல்பனா.
“இவள பத்தி பேச ஆரம்பிச்சாலே ஒரு bitter endதான் எப்பவும்; சரி எனக்கு டைம் ஆகுது. பையன் ஏதோ video game வேணும்னு கேட்டான். நான் அப்படியே நடைய கட்டறேன்”, என லக்ஷ்மி விடைப்பெற, கோயில் மணி சத்தம் கேட்டு, அனைவரும் கற்பகிரகம் நோக்கித் திரும்பினர்.

“ஆனா கோயில் வந்தா நிம்மதி கெடைக்கும்னு சொல்றது…இதுதான் போல. every week இப்படி உங்களோட பேச chance கெடைக்கறதே கோயில்லதான். ஒரு வாரம் முழுக்க மனசுல புழுங்கிட்டு கெடக்கற விஷயங்கள போட்டு உடைக்கறதுல ஒரு அலாதி சந்தோஷம். எனக்கும் நேரமாச்சு… அவர் வந்துடுவாரு…இன்னிக்கி evening snackக்கு சமோசா செய்யலாமுன்னு இருக்கேன்”, என விடைப்பெற்றாள் கல்பனா.

அலுவலக உண் மேசையில்…

“என்னப்பா இது உங்க பொண்டாட்டிங்க சொல்லி வச்சு பொங்கல் செஞ்சாங்களா? ரெண்டு பெரும் அதையே கொண்டுவந்திருக்கீங்க?”, என உரையாடலுக்கு பிள்ளையார் சுழி போட்டான் கணேசன்.
“இது உனக்கு புரியாது தம்பி. இன்னிக்கி கணவர்களுக்காக மனைவிகள் கடவுளிடம் பிராத்தனை செய்யும் தினம். கட்டின புருஷன் நல்லா இருக்கணும்னு பூஜை செய்வாங்க. வீட்ல வடை, அப்பளம், பொங்கல்…சூப்பர் விருந்து. அதுதான் tiffin box க்கு பதில் இன்னிக்கி 5 அடுக்கு கேரியர்”, என விளக்கம் அளித்தான் சரவணன்.

“இன்னும் என்ன ரெண்டு மாசம் தான…அப்பறம் டும்டும்டும். அதெல்லாம் இப்பவே சொல்லி வச்சுடு கணேசு…அதுவேற இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல…அது இதுனு பேச போறாங்க. நமக்கு க.மு, க.பி ரெண்டும் ஒரே மாதிரி இருக்கணும்னா…நம்ம பொண்டாட்டி நம்ம பேச்ச கேட்டு நடக்கறவளா இருக்கணும். friendsஆ இருக்கலாம், அது இதுனு சொன்னாங்கனு வைய்யு….முதலுக்கே மோசமா போயிடும்”, என ஒரு மனைவியிடம் இருக்க வேண்டிய ‘இன்றியமையாத’ குணாதிசயத்தை முன் வைத்தான் குணசேகரன்.

“சொல்ல மறந்துட்டேனே…’நீயா நானா’ ல அடுத்து ‘கணவன் மனைவி…நண்பர்களாய் இருப்பது சரியா தவறா’னு ஒரு தலைப்பு போல. பங்கேத்துக்க interest இருந்தா தொடர்பு கொள்ள சொல்லி எங்கயோ படிச்சிருக்கா. நானும் போறேங்கன்னு கேட்டா.எனக்கு அப்படியே தூக்கிவாரி போட்டுச்சு. இவ ‘அவர் தான் ஒசத்தி’னு பேசினாலும், அந்த பக்கத்துல இருக்கறவங்க, இல்ல guest பேசறத கேட்டுட்டு வீட்டுக்கு வந்து “நீங்க இன்னிக்கி கொஞ்சம் சமையல பாத்துக்கோங்களேன்”, “கொஞ்சம் தலை வலிக்குது…காபி போட்டு குடுக்க முடியுமா”னு கேட்டாங்க….கதை அதோகதிதான். அதெல்லாம் ஷூட்டிங் அது இதுனு நாள் முழுக்க போயிடும். அப்பறம் tired ஆயிடுவ”னு ஒரு வழியா அவ வாய அடைச்சேன்”, என கரையை தாக்க வந்த புயல் பற்றியும், அது சுமூகமாக கரை கடந்த அழகையும் விவரித்தான் சரவணன்.

“நீங்க ரெண்டு பேரும் சொல்றத பாத்தா…கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போலவே”, என தலையை சொரிந்தான் கணேசன்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு எந்த கோமாளியோ சொல்லிவச்சுட்டான். அதெல்லாம் ஒன்னும் இல்ல. நாம நடந்துக்கறதுல தான் இருக்கு. அவங்க கேக்கறதெல்லாம் வாங்கி கொடுக்கணும். ரொம்ப அன்பா நடந்துக்கணும்…சுமாரா இருந்தாலும் அவங்கள “நீ தான் சூப்பர்…நீ போட்டில இல்லாத ஒரே காரணத்துனால தான் ஐஸ்வர்யா பட்டத்த வாங்கினா”, அது இதுனு அளக்கனும். அவ்வளவுதான்…அப்படியே விழுந்து விழுந்து கவனிப்பாங்க பாரு…”, என உபதேசங்களை சரமாரியாக அவிழ்த்து விட்டான் சரவணன்.

பேசிக்கொண்டே இருக்கையில், கணேசனின் அலைபேசி ‘காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்’ என பாட, “நம்பினா நம்பு…உன்ன பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன்…நீயே கால் பண்ணிட்ட”, என கூறிக்கொண்டே நழுவினான் கணேசன்.

மாலை…சரவணன் வீட்டில்

“கல்புமா…சமோசா தான…வாசனை மூக்கத்தொளைக்குதே”, என கூறியபடி வீட்டினுள் நுழைந்தான் சரவணன்.

“என்னங்க இன்னிக்கி சீக்கிரம் போல…சமொசாவா…ஆமாங்க…ஏதாவது differentஆ பண்ணலாமுன்னு…”, என குழைந்தாள் கல்பனா.
“சரி…கைக்கால் அலம்பிட்டு freshen up ஆகிட்டு வரேன்”, என குளியலறையில் நுழைந்தான் சரவணன்.

சமயலறை நோக்கி நடந்த கல்பனாவின் கண்கள் உண் மேசை பக்கம் திரும்பியது. ஏதோ வண்ண அட்டை தென்பட்டது; கையில் எடுத்தாள். எடுத்து படித்த மாத்திரத்தில்….முகத்தில் ஒரு 1000 watts புன்னகை. “For the sweetest woman in the world” என வாழ்த்து அட்டையின் வரிகளை படித்த படி, “என்னங்க…எனக்கா இது? எதுக்குங்க இதெல்லாம்”…என குளியறையிலிருந்து வந்த சரவணன் நோக்கி ஓடினாள்.

“உனக்கு தான் என் தங்கமே. கணேசன் அவன் would-beக்கு card வாங்கனும்னு சொன்னான். நானும் கூட போனேன். இது அங்க கண்ணுல பட்டது. உன் ஞாபகம் வந்தது. அதுதான்”, என சாதாரணமாய் விடை அளித்தான் சரவணன்.

“போங்க…எனக்கு வெக்கமா இருக்கு”, என தலை குனிந்த படி, கால் விரல்களால் கோலம் போட்ட வண்ணம், வாழ்த்து அட்டையை முத்தமிட்டாள் கல்பனா.

************************************************************************************************

“நீயா நானா”வில் சென்ற வாரம் பார்த்த ஒரு விவாதத்தின் தாக்கம் இச்சிறுகதை. ‘கணவரே கண் கண்ட தெய்வம்’ என வாதாடிய அணியில் இருந்த சில பெண்களின் விவாதங்கள்…சிரிப்பை விட கோபத்தையே வரவழைத்தது. அந்த கோபமானது அப்பெண்களின் மீதானதல்ல என்று மட்டும் தெளிவாக புரிந்தது. ஆரம்பத்தில் ‘கணவனே உன் பாதுகாவலன்’, ‘அவர்களின் விருப்பத்திருக்கு இணங்கி நடப்பது…திருமணத்திற்கு பின் உன் தலையாய கடமை’ என சமூகத்தினால் சாவிக்கொடுத்து பழக்கப்பட்ட பெண்கள்…இன்று எவர் துணையுமின்றி தமக்குத்தாமே விலங்கணிந்துக் கொள்வது….சமூகத்தின் வெற்றியே!!

“நான் சிந்திக்கிறேங்க…அதுனால தான் பாத்திரம் கழுவறது என் வேலை…அவர் செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சிருக்கு”
“நான் M .B .A படிச்சா தான் என்ன…அவர் ஆம்பளை..கட்டாயமா என்னவிட உலகறிவு ஜாஸ்த்தியா இருக்கும்”
“அவர்கிட்ட சரணாகதி அடையறது எனக்கு பிடிச்சிருக்குங்க”, போன்ற வாக்கியங்கள் கேட்டமாத்திரத்தில் ஒரு ஏமாற்றமும் வருத்தமுமே தோன்றியது.

“இப்படி செயல்படுவதே ஒரு ‘குடும்பத்தலைவி’க்கு பெருமை சேர்க்கும்” என மறைமுகமாக போதிக்கும் சமூகமும், அவள் விரும்பி அடிமையாய் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டாத ஆண்மகனும்…அவளின் கிணற்றுத்தவளை கோலம் கலையாமல் இருக்கவே விரும்புகின்றனர்.

இச்சூழ்நிலையில்…அந்த பெண், “தனிமனிஷியாய் எனக்கு என்ன பிடிக்கும்”, “பிறர் திருப்தி அடைய பற்பல வேலைகளை செய்த நான்…எனக்கென என்ன செய்துகொண்டேன்”, போன்ற கேள்விகளை கேட்பதின் மூலமும், அதற்கான விடைகளை அடைய செயல்படுவதின் மூலமுமே அப்பாழ்கிணற்றிலிருந்து விடுபடுகிறாள்.

சென்ற வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ பார்த்தேன். பெண்ணியம் என்ற தலைப்பில், பெண்ணியவாதிகளுக்கும் , பெண்ணியத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையே ஆன விவாதம்.
சல்மா மற்றும் ஓவியா அவர்களின் வார்த்தைகள் பெண்ணடிமைக்கு சாட்டையடி. எனினும் சமூகத்தில் பெண்ணியத்திற்கு ஆதராவாகவும் எதிராகவும் பேசும் ஆண்கள் இருக்கையில், விவாதத்தில் ஒருவர் கூட பங்கேற்காதது வருத்தமே.
“பெண்ணியவாதிகள் குடும்பத்திற்கு உகந்தவர்கள் அல்லர்”, என பேசும் ஆண்கள், ‘சமூகக் கோட்பாடு’, ‘கலாச்சாரம்’ போன்ற ஆயுதங்களால், அவர்கள் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கின்றனர்.
அப்பெண்களும் தம் அடிமை நிலை அறியாது, பெண்ணியம் என்பதையே ஒரு இழுச்சொல்லாக பார்க்கின்றனர்.
இத்தகைய பெண்களின் பின் மறைந்து நின்றபடி குளிர்காயும் கோழைகளுக்கு….

“தொங்கத் தொங்க தாலியோட நடந்து வந்தா…அந்த அம்மனே நேருல வந்தா மாதிரி இருக்கு”, என நீ கூற,
குனிந்த தலை நிமிராமல் வெட்கத்துடன் சிரித்தாள் அவள்;
“அடக்கி வச்சோம்ல…எவன் இனி route உட நெனைப்பான்”, என நிம்மதி பெருமூச்சு விட்டாய்!

“Housewife தான”, என நண்பன் கூற,
“homemaker னு சொல்லு டா”, என்றாய்;
அவள் ‘food-maker ‘ ஆக மட்டும் அடுப்படியில் தேங்கிக்கிடக்க,
‘Pleasure taker ‘ ஆக ஒரு துரும்பும் அசைக்காமல் பல்சுவை உணவினை அனுபவித்தாய்!

“வீட்ல எப்படி இருக்காங்க”, என பெரியவர் விசாரிக்க,
“எங்க வீடு மகாலட்சுமிங்க அவ”, என பெருமிதத்துடன் கூறியபடி அவள் பெயர் கொண்ட கடனட்டையை சட்டைப்பையினுள் திணித்தாய்!

வீட்டுவேலைகளை அவள் கவனிக்க, நீ நண்பர்களுடன் கும்மாளம் அடித்தாய்;
“அவளுக்கும் தோழிகள் உண்டு; அவர்களுடன் நேரம் செலவழிக்க ஆசையும் உண்டு”, என்ற யதார்த்த கருத்துக்கு,
“அதுதான் நான் இருக்கேன்ல…அவளுக்கு துணையா”, என உளறினாய்!

மாதம் பத்து சுமந்து, குழந்தையை ஈன்றெடுத்து, அதற்கு சகல விதமான தேவைகளையும் பூர்த்தி செய்பவள் அவள்;
“உங்க contribution என்ன சார்”, என்றால்,
“என்ன பேசறீங்க…ஆம்பிளை சிங்கம் நான் இல்லேனா அந்த சிங்கக்குட்டி எப்படி சார்”, என வாய் சௌடால் விட்டாய்!

வேலையிலிருந்து வந்ததும் வீட்டுவேலைகளை முடித்து, குழந்தைகளை கவனித்துவிட்டு, படுக்கையறையில் நீ உரச தயாராக இருப்பவள் அவள்;
“எட்டு மணி நேரம் உழைச்சிட்டு வரோம்ல; மனிஷன நிம்மதியா இருக்க விடுங்கப்பா”, என சப்பக்கட்டு கட்டினாய்!

“படிச்சவன் தானப்பா நீ…அந்த பொண்ணும் வேலைக்கு பொயிட்டு வருது…கொஞ்சம் வீட்டு வேலைல ஒத்தாசையா இருக்கக்கூடாது?”, என்ற கேள்வி எழும்பும் முன்னமே,
“இது ஒன்னும் புதுசு இல்லீங்களே…குடும்ப பொண்ணு செய்ய வேண்டிய வேலைங்க தான; எங்க பாட்டி, அம்மா எல்லாம் வழிவழியா செஞ்சுட்டு வர்றதுதானே”, என முந்திக்கொண்டாய்!

ஏன்டா நாயே… கணவன் மனைவிய ‘life partners ‘னு சொல்லி கேட்டதில்லை?
Partnership ல கொடுக்கல் வாங்கல் இருக்கும்னு தெரியும்;
இங்க என்னடானா அவ எல்லாத்தையும் கொடுக்கறா, நீ வக்கனையா சூடு சொரணை இல்லாம வாங்கற!

நீயெல்லாம் கல்யாணம் பண்ணலன்னு யாரு அழுதா…
நீ வித்திட்டு உருவாற வாரிசுகளும் உன்ன போல தான் இருக்கும்!
மானே, தேனே, அம்மா, ஆத்தான்னு ஏமாத்தினது இனி போதும்!

என்ன தயங்கற…ஓ பசிதான…hourly rate மாதிரி மாதந்திர சந்தா இருக்கான்னு பாரு; முடிஞ்சுது ஜோலி!

அவளையும் ஒரு மனிஷியா மதிச்சு, அவளோட உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்து குடும்பம் நடத்த முடிஞ்சா நடத்து…
இல்ல நடைய கட்டு!

“அம்மா காபி”, என்று தனக்கே உரிய தோரணையில் சுமித்ரா முறையிட, சற்றே நிலை தடுமாறிய மீனா, சமையலறையிலிருந்து படுக்கை அறைக்கு விரைந்தாள்.

“நேத்து போதை உனக்கு தலைக்கு மேல ஏறிடுச்சு; இங்கயே தூங்கட்டும்னு நான்தான்…”, என சுமித்ராவின் ‘நான் எங்கே இருக்கேன்’ என்ற குழப்பத்திற்கு விடையளித்தாள் மீனா.

“போச்சுடா பொண்ண காணோம்னு மேலும் கீழும் குதிப்பாளே ரங்கநாயகி”, என்று கூறிக்கொண்டே வாசலுக்கு விரைந்தாள் சுமித்ரா.

“சாப்பிட்டு போலாமே.. நான் வேணும்னா…”, என்ற மீனாவின் வாரத்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்கானது.

9:00 மணிக்கு முதல் வகுப்பு என்று தெரிந்திருந்தும் ஆடி அசைந்து 11:00 மணிக்கு வகுப்பினுள் நுழைந்தாள் சுமித்ரா.

“என்னடி திருமதி. பழனிசாமி class தான…எங்க ஆள காணோம்”, என நக்கலாய் சுமித்ரா விசாரிக்க,

“அவ புருஷன் துபாய்ல இருந்து வரானாம்…வரவேற்க போய் இருக்கா; செரி நீ சொல்லு, நேத்து செம மப்பு போல…உங்க அம்மாவ காலைல கோயில்ல பாத்தேன்…பொண்ண கொஞ்சம் திருத்துங்கன்னு சொல்லி இருக்கணும்”, என சுமித்ராவை கிண்டல் செய்தாள் நந்தினி.

“அம்மா தாயே அதெல்லாம் எதுவும் செஞ்சுடாதே; ஊருல இருக்கற மாமா, சித்தப்பா எல்லாரையும் கூப்பிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுவாங்க.

‘பெண் விடுதலை’ பத்தி பேசினா…என்னிக்கு வெளியாகுது, யாரு நடிச்சிருக்காங்கன்னு கேக்கறாங்க.

இந்த society என்னிக்கு ஒரு பொண்ணும் தண்ணி அடிக்கலாம், பசங்கள மாதிரி துணி போடலாம், வேலைக்கு போறது, கார் ஓட்டறது எதுவானாலும் ஒரு ஆணுக்கு குறைஞ்சவ இல்லேன்னு உணருதோ… அன்னிக்கித்தான் பெண் விடுதலை சாத்தியமாகும்”, என உணர்ச்சி ததும்ப தன் ‘பரிதாப நிலை’யை விளக்கினாள் சுமித்ரா.

“நீ இப்படியே பேசு…ஒரு நாள் பாருங்கடி…இவ ‘மகளிர் முன்னேற்ற கழகம்’ ஒன்னு ஆரம்பிச்சு ‘பீர் பாட்டில்’ சின்னத்துக்கு வாக்களிக்க சொல்ல போறா”, என கேலி செய்தாள் கலா.

“என்ன தப்புன்னு கேக்கறேன்… கொஞ்சம் modern ஆ துணிபோட்டா, முடிய வெட்டினா உருப்படாதுன்னு ஏசறாங்க; வண்டி ஓட்டினா ‘தெனாவட்டு புடிச்ச கழுதை’னு ஒரு பட்டம். இவங்களோட இந்த கண்ணோட்டம் change ஆற வரைக்கும்… நாம அடிமைகளாவே இருப்போம்”, என தன் தரப்பு வாதத்தை முன் வைத்தாள் சுமித்ரா;

“என் செல்வ செழிப்பை ஊருக்கு தெரியப்படுத்தும் போது நீ குறுக்கிட்டால்…என்னை அடிமை படுத்துகிறாய்; உன் வேலையை கவனி”, என்ற தன் சுயநல கருத்திருக்கு சில பல உதாரணங்களினால் சாயம் பூசி வெளிப்படுத்தினாள்.

“உன் கட்சி வெற்றி பெற எங்கள் நல் வாழ்த்துக்கள்; எனக்கு பசி உயிர் போகுது; யார் வரீங்க canteen க்கு”, என கலா கூற…கலைந்தது பொதுக்கூட்டம்.

6 வருடங்களுக்கு பிறகு

“எவ்வளவு ஆச்சு”, என credit card ஐ நீட்டினாள் சுமித்ரா.

“நீங்க…சுமித்ரா தானே…கே.எம். கல்லூரில படிச்சீங்களா”, என யாரோ பின்னால் இருந்து வினவ, திரும்பினாள் சுமித்ரா.

“ஆமாம் நீங்கே…ஏய் கலா எப்படி இருக்கே. நீ எங்க இங்க. பெங்களூர்லே செட்டில் ஆயிட்டன்னு கேள்விப்பட்டேன்”, என பேச ஆள் கிடைத்த மகிழ்ச்சியை சரமாரியான கேள்விகளால் வெளிப்படுத்தினாள் சுமித்ரா.

“என் கணவருக்கு இடமாத்தம் ஆயிடுச்சு. அதுதான்; இங்க பெசன்ட் நகர்ல தான் இருக்கேன்”, என்றாள் கலா.

தோழிகளின் திருமணங்கள், குழந்தைகள், விவாகரத்துகள் அனைத்தையும் பேசி முடிப்பதற்குள் கடை மூடும் நேரமானது.

“வீட்டுக்கு வர…காபி சாபிட்டுக்கிட்டே பேசறோம்”, என அன்பு கட்டளையிட்டாள் சுமித்ரா.

“நீ மாறவே இல்லே டி…ஆனா ரொம்ப நேரம் இருக்க முடியாது”, என கலா கூற, இருவரும் வெளியில் நின்றிருந்த சுமித்ராவின் toyota car ஐ நோக்கி நடந்தனர்.

“காபி பிரமாதம் சுமி… உன் கணவர் எப்ப வருவாரு…ஒரு வணக்கம் போட்டுட்டு போகலாம்னா…”, என கலா கூறி முடிப்பதற்குள்,

“ஏன்டீ சுமி…எவ்வளவு தடவை இந்த ‘door mat’ அ தூசி தட்ட சொல்றேன்..ஒன்னு சொன்னா உடனே செய்ய உடம்பு வணங்கினாத்தானே. இன்னிக்கி திரும்பவும் தோசை வரட்டி மாதிரி இருந்தது..குழம்புல உப்பே சுத்தமா இல்ல. உன்ன என் தலைல கட்டின அந்த நடராசன சொல்லணும்”, என தன் வருகையையை அறிவித்தான் சேகர்.

“ஏய் சுமி…என்ன பதிலே..”, என பேசிக்கொண்டே வந்த சேகர், கலாவை பார்த்த உடன் அசடு வழிந்தான்; செய்கையினால் ஒரு hello சொன்னான்.

“இந்த சனி-ஞாயிறு பண்ணலாம்னு இருந்தேங்க”, என சேகருக்கு பதில் அளித்துவிட்டு, “கொஞ்ச நேரம் இரு கலா…வீட்ல பண்ணினேன்…சாப்பிட்டு பாரு”, என தோழியை கேசரியுடன் உபசரித்தாள் சுமித்ரா.

“கேக்கறேன்னு தப்பா நினைக்காதே, உன் கணவர் வீட்டு வேலைல help பண்ண மாட்டாரா”, என கலா கேட்டாள்.

“அத ஏன் கேக்கற…நிறைய தடவை சொல்லி பாத்துட்டேன்; office க்கு போயிட்டு வந்து, குழந்தை படிப்ப கவனிச்சு, வீட்டு வேலைய செஞ்சு முடிக்கறதுக்குள்ள… பதினொன்னு-பன்னிரண்டு மணி ஆயிடுது. கொஞ்சம் கோபமா பேசினா…divorce வாங்கிக்கோ, அம்மா வீட்டுக்கு போயிடுனு சொல்றாரு. என்ன பண்ண…வீட்டுக்கு வீடு வாசப்படினு adjust பண்ண வேண்டியதுதான்; infact வேலைய கூட விட்டுடலாமானு பாக்கறேன்”, என அலுத்துக்கொண்டாள் சுமித்ரா.

“பெண் விடுதலை பத்தி…” என ஆரம்பிக்க நினைத்து “நமக்கேன் வம்பு”, என்று அமைதியாய் கேசரியில் முந்திரி வேட்டையை தொடர்ந்தாள் கலா.

“பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?”

—-வினவு இணைய தளத்தில் ‘வாழத்துடிக்கும் பெண்ணினனம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!’ என்ற இடுகையில் இடம்பெற்றுள்ள இவ்வரிகளின் தாக்கமே….கானல் நீர்!