Posts Tagged ‘healthy living’

உடற்பயிற்சி கூடங்கள் (gymnasium) போக ஆரம்பித்த காலத்தில், நான் கூட இந்த கேள்வியைத் தான் எழுப்பி இருப்பேன். அந்த காலகட்டத்தில் என் எண்ணம் எல்லாம் இதுதான், “ஒல்லி ஆகணும்னா ஓடனும் இல்ல கார்டியோனு சொல்ற நீச்சல் அடிக்கறது, நடக்கறது மாதிரியான உடற்பயிற்சி செய்யணும். அதுவே நல்ல பயில்வான் மாதிரி ஆகணும்னா எடை தூக்கி பயிற்சி (weights training) பண்ணனும்”

இதனால் திருமணத்திற்குப் பிறகு ராஜ் (என் கணவன்) நிறைய முறை எடைப் பயிற்சியில் ஈடுபட சொன்ன போதுகூட, எனக்கே உரிய, “இல்ல எனக்கு பிடிக்கல…எனக்கு tread millல ஓடினா போதும்”, என்ற வறட்டு பிடிவாத பதிலை அளித்தேன்.
இந்த பிடிவாதம் ஒரு பக்கம் இருந்த போதும், இன்னொரு பக்கம் இங்கு ஒளிபரப்பாகும் தொலைகாட்சித் தொடர்களில் வரும் பெண்களின் ‘இருதலைதசை’ (biceps) பார்த்து வியந்ததுண்டு. சில சமயங்களில், அவர்கள் அதனுடனே பிறப்பர் என்று கூட நினைத்ததுண்டு.
இன்னும் கூட எனக்கு எந்த உந்துதலின் பேரில் எடைப் பயிற்சி ஆரம்பித்தேன் என்பது நினைவுக்கு வரவில்லை.
நிச்சயம் என் கணவனின் பங்களிப்பு இருந்திருக்கும்; நானும் ‘செஞ்சு பாப்போம்…புடிக்கலனா இருக்கவே இருக்கு treadmill”, என ஆரம்பித்தேன்.
வாழ்க்கையில் நானே விரும்பி ஏற்றுக் கொண்ட சில விஷயங்களில் இன்று இந்த எடைப் பயிற்சியும் சேர்ந்துள்ளது.

“ஆம்பளைங்க நல்லா தசை போடணும்னு பண்றாங்க…அங்கயும் சமத்துவப் போட்டியா”, என தட்டிக்கழிக்கப் போகிறீர்களெனில், தனி மனிஷியாய் அடைந்த நற்பலன்கள் இவை:
(நாளை உங்கள் மனைவியோ, தங்கையோ அல்லது தோழியோ, எடைப் பயிற்சி பற்றி கருத்து கேட்டால், இவை உதவக்கூடும்)

## tread மில்லில் நடப்பது/ஓடுவது மகிழ்ச்சியை அளித்த போதும், “எப்படா evening ஆகும் gym க்கு போவோம்”, என்ற எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை. ஆனால் எடைப் பயிற்சி ஆரம்பித்ததில் இருந்து, உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல ஒரு புதிய உத்வேகம் பிறந்தது; தற்பெருமை போல் இருப்பினும், பயிற்சிக் கூடத்தின் எடைப் பயிற்சி பிரிவுக்கு செல்லும் போது, treadmill இல் நடந்துகொண்டிருக்கும் பெண்களில் சிலரும், எடை பயிற்சி செய்து கொண்டிருக்கும் சில ஆண்களும் ஒரு நொடி நிமிர்ந்து என்னை பார்க்கும் போது, ஒரு அலாதி மகிழ்ச்சி! Leg press செய்யும் போது, 10 கிலோ தான் அதிகபடியான எடையாக செய்திருப்பேன்; இந்த கவன ஈர்ப்பின் காரணமாக 15 கிலோவிற்கு உயர்த்துவேன்.

## எடைப் பயிற்சிக்கும், அதிக எடை தூக்குவதற்கும் புரதச் சத்து மிக அவசியம்; எப்பொழுதுமே மாட்டிறைச்சி மீதும் கோழி இறைச்சி மீதும் இருந்த விருப்பு, இதனால் பன்மடங்கு பெருகியது. கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தேடி உண்ண ஆரம்பித்தேன்.

## cardio பயிற்சிகள் செய்யும் போது கலோரிகள் (calories) குறையும்; 30 நிமிடம் செய்கிறோமெனில், நம் உடல் அமைப்பிற்கு ஏற்றபடி கலோரிகள் குறையும்; செய்து முடிக்கும் போது , கலோரிகள் குறைவதும் நின்று விடுகிறது. அதே 30 நிமிடம் எடை பயிற்சி செய்யும் போது, அந்த 30 நிமிடம் குறையும் கலோரிகளுடன் சேர்த்து, முடித்த பிறகும் கலோரி குறைப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எடைப் பயிற்சியின் தீவிரத்திற்கு ஏற்ப, 1 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை கலோரி குறைப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். 30 நிமிடம் ஒரே treadmill தரையை தேய்ப்பதற்கு பதில், 15 நிமிடம் treadmill, 5 நிமிடம் ‘free weights’, இன்னொரு 10 நிமிடம் ‘machine weights’ செய்யும் போது, உடற்பயிற்சியில் ஒரு ‘variety’ கிடைக்கும், அதே சமயத்தில் அதிகமான கலோரி குறைப்பும் நடக்கிறது.
ரஜினி பட DVD வாங்க காசு குடுக்குகிறீர்கள்; வீட்டிற்கு வந்து பார்த்தால், இலவச இணைப்பாக ஒரு கமல் படமும் அதில் இருந்தால் கிடைக்கும் ஆனந்தம் அது!!

## “எனக்கு லூசா சொக்காய் போடத்தான் புடிக்கும்” என யாராவது முழு மனதோடு கூறி கேட்டிருக்கீர்களா? யாராவது கூறி இருந்தாலும், அதில் ஒரு ஏக்கமும், “நானும் ஒரு நாள் ‘fitting’ உடைகள் அணிவேன் என்ற வீராவேசமும் இருந்திருக்கும். அதே குட்டையில் ஊறியவள் தான் நானும். என்னதான் “யார் என்ன நினைச்சா என்ன….தொப்பை தெரிஞ்சா தான் என்ன…அப்படித்தான் fitting டிரஸ் போடுவேன்”, என திமிருடன் கூறினாலும், உள்ளே என்னவோ, “உடலும் இளைத்து, அதனை மெருகேற்றும் படி உடை அணிந்தால் அது ஒரு தனி இன்பம் அல்லவா”, என நினைப்பேன். அந்த கனவு நினைவாகவும் எடைப் பயிற்சி உதவியது.
“ஒடம்பு கொறையனும்…அவ்வளவுதான அதுக்கு cardio மட்டும் போதுமே”, என்பவர்களுக்கு, கொழுப்பை குறைக்க வேண்டுமெனில் cardio உதவும்; ஆனால் அதே சமயத்தில் தசையையும் வேண்டியபடி வடிவமைக்க எடைப் பயிற்சி மிகவும் அவசியம்.

## திடீரென ஒரு ஹாட் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட தோன்றுகிறது. “இரவு உணவிற்கு pizza சாப்பிடு” என மண்டைக்குள் ஒரு குருவி கொடைகிறது. நீங்களும் அந்த ஆசைக்கு அடிப்பணிகிறீர்கள் . அடுத்த நாள், சாப்பிட்ட கலோரிகள் அனைத்தும் கண் முன் எண்களாய் வந்து நிற்கின்றன; உதாரணத்திற்கு முந்தைய நாள் இரவில் சாப்பிட்ட பொருட்களில் இருந்து 700 கலோரிகள் கிடைத்தது என வைத்துக்கொள்ளலாம். சாப்பிட்ட கைய்யுடன் தூங்கச் சென்றிருந்தால், அந்த கொழுப்பெடுத்த கலோரிகள் அனைத்தும் உடலில் கொழுப்பாய் மாற வாய்ப்புகள் நிறைய உண்டு! இங்கு தான் எடைப் பயிற்சி மீண்டும் உதவி கரம் நீட்டுகிறது.
அந்த 700 கலோரியை கரைக்க, குறைந்தது 1 மணி நேரமாவது tread மில்லில் ஓட வேண்டும்; அல்லது 1.30 மணி நேரம் வேகமாக நடக்க வேண்டும். அதற்கு பதில், 15 நிமிடம் கார்டியோ உடன், ஒரு 20 நிமிடத்திற்கு தீவிர எடைப் பயிற்சி செய்யும் போது, சாப்பிட்ட 700 கலோரிகள் கரையும். பயிற்சி முடிந்த பின்னரும் கலோரி குறைப்பு நிகழ்வதனால், மதிய உணவிற்கு ஒரு கோழி பிரியாணி சாப்பிடுவதாய் இருந்தாலும், எந்த மனக் கசப்புமுமின்றி புசிக்கலாம்!

## Endorphin என்ற ஒரு இயக்குநீர் (hormone) பற்றி அறிந்திருப்பீர்.உடற்பயிற்சி செய்யும் போது , மூளையில் இது சுரக்கிறது; மன உளைச்சல் பெருமளவில் குறைகிறது. வேலை பளுவின் காரணமாக உடல் உளைச்சலும், மன உளைச்சலும் ததும்ப வீட்டிற்கு வருவேன்; இரவு சாப்பாடு கூட தேவையில்லை…தூங்கினால் போதும் என தோன்றும். அதே சமயத்தில், நண்பர்களுடன் இரவு உணவு அல்லது படம் என மறுக்க முடியாத வேண்டுதல்கள் என் முன் வைக்கப் படும். வேலையின் களைப்புடன் சென்றால், உணவையும் ரசிக்க முடியாது, $20 குடுத்து விட்டு, திரை அரங்கில் தூங்கி விழும் நிலையும் வரும். இங்கு விடிவெள்ளியாய் வருவது மீண்டும் எடைப் பயிற்சியே! சட்டென உடற்பயிற்சி உடைகளை அணிந்து, 30 நிமிடம் பயிற்சி முடித்து வரும் போது, “உளைச்சலா…களைப்பா…யாருக்கு???”, என கேட்கத் தோன்றும்.

## எலும்புகளின் வலிமைக்கும் தசை வலிமை மிக அவசியம் என்று விரிவாய் படித்த போது , இன்னொரு புத்துணர்ச்சி. எப்பொழுதும் புதியதாய் எடுக்கும் முயற்சிக்கு, நம்மிடம் ஏற்கனவே இருக்கும் ஒரு திறமை உதவுமெனில், அளவற்ற மகிழ்ச்சி தானே! அந்த விதத்தில், தசை வலிமைக்காக எடுத்துக் கொண்ட எடைப்பயிற்சி, எலும்பு வலிமைக்கும் வழி வகுக்கும் என தெரிந்த போது, அது சொற்களால் விளக்க முடியாத ஒரு ஆனந்தம்!

## வருடத்தின் ஆரம்பத்தில் கொல்லைப்புறத்தில் (backyard) ஒரு ஷெட் கட்ட முடிவு செய்தோம். இங்கு DIY என்ற முறையின் படி, கட்டுமான பொருட்களை வாங்கி நாமே வேண்டிய பொருளை உருவாக்கலாம். அதன் அடிப்படையில், புல் அறுக்கும் இயந்திரம் (Lawn mower), ஏணி, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படும் pipe வகைகளை பத்திரப்படுத்த ஒரு ஷெட் நல்ல முடிவாய் தெரிந்தது.
கட்டுமான பொருட்களுடன் வந்த ‘instruction manual’ குறைந்தது இருவராவது வேலையில் இறங்கினால் மட்டுமே கட்டி முடிக்க முடியும் என கூறியது. நண்பர்களால் வர முடியுமா என கேட்க நினைத்தபோது, ராஜ் “ஏன் நாம ரெண்டு பேர் போதாதா”, என வினவ, “அட ஆமாம்ல…எடைப் பயிற்சி, தசை வலிமை எல்லாம் எதுக்கு, தேவை ஏற்படும் போது கைக்குடுக்கத்தான”, என துணிச்சலாய் நானும் இறங்கினேன். “வெற்றிக்கொடிகட்டு மலைகளை முட்டும் வரை முட்டு” பாடல் பின்னணியில் ஓடாதது மட்டும் தான் குறை! இருவர் மட்டுமே சனி ஞாயிறு வேலை செய்து, ஷெட் கட்டுமான பணிகளை முடித்தோம்.
6 மாதங்கள் ஆகப் போகிறது; சென்ற மாதம் அடித்த புயல் காற்றில், ஷெட் கதவு மட்டும் சிறிது ஆட்டம் கண்டது…மற்றபடி, ஷெட் கிண்ணென நிற்கிறது!

வேறு என்ன, உடல் எப்பொழுதும் வலிமையாக இருப்பதனால், சோர்ந்து போய் அடிக்கடி டாக்டரிடம் செல்வதில்லை; ஒரு நாளில் முடிக்க நினைக்கும் அனைத்து வேலைகளுக்கும் உடல் ஒத்துழைக்கிறது; “ஒரு பொண்ணுனா…பூ மாதிரி”, என்ற கேவலமான ‘புகழ்ச்சியினை’ தகர்த்தெறிய முடிகிறது.
இதற்கும் மேல் ஏதாவது ‘நற்பலன்கள்’ இருக்கா என எதிர்பார்ப்பது, சோம்பேறியாய் உட்கார தேடும் ஒரு வீண் முயற்சி மட்டுமே!

“இப்படி பயந்து கிட்டே இரு. இன்னிக்கு மதியம் coffee கூட என்ன தின்னா தெரியுமா?? சுட சுட சமோசா. அந்த பொண்ணாவது ஒடறதாவது. ஏதாவது கேக் இல்ல ஐஸ்கிரீம் கடை தாண்டி போகும் போது, மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பு; அவ்வளவுதான், வேலை முடிஞ்சுது. அவ ஓடறதும் ஓடாம இருக்கறதும் நம்ம கைல தான் இருக்கு. 25-30 வருஷமா சும்மாவே இருப்பாளாம். திடுதிப்புன்னு ஏதோ முடிவு செஞ்சு ஓட நினைப்பாளாம்…நாம ஒத்தொழைக்கனுமாம்!!! “, என கண்ணுக்கு ஆறுதல் வழங்கியது வயிறு.

“என்னவாம்…ரெண்டு மூணு நாளாவே பொலம்பிகிட்டு இருக்கு கண்ணு”, என  பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தது கல்லீரல்.
“இல்லப்பா எல்லாம் இந்த பொண்ணு  தான். ரெண்டு மூணு நாளா ஓடறது பத்தின விஷயங்கள internet ல படிக்குது போல. அதுதான் ‘warning’ குடுத்துட்டு போகுது கண்ணு. ஒரு மீட்டிங் வச்சு பேசணும். எல்லாரும் அவங்க அவங்க பங்குக்கு resist செஞ்சா அந்த பொண்ணு இதெல்லாம் கை விட்டுடும்”, என சற்றே எரிச்சலுடன் விடையளித்தது வயிறு.
“எப்பனு சொல்லி அனுப்பு…நானும் வந்து சேர்றேன். ஏதோ புதுசா தின்னிருக்கு போல இந்த பொண்ணு. உள்ள இருக்கற cells எல்லாம் குய்யோ முறையோனு கத்திகிட்டு இருக்குங்க. நான் என்னனு கவனிச்சிட்டு வரேன்”, என விடைப்பெற்றது கல்லீரல்.

அவசரக் கூட்டம் ஆரம்பம்

“என்ன செஞ்சு இத நிறுத்தப் போறோம்னு பேசறதுக்கு முன்னால…யாருக்காவது சொல்ல வேண்டிய விஷயம் ஏதாவது இருக்கா?”, என கூட்டத்தை துவக்கி வைத்தது வயிறு.
“எனக்கென்னவோ கொஞ்சம் அவசரப் படறோமோன்னு தோணுது. அந்த பொண்ணு படிச்ச சில பதிவுகள்ல  ரொம்ப நல்லாத்தான் போட்டிருந்துச்சு. அந்த பொண்ணு ஓடினா, நம்ம எல்லாருக்குமே ரொம்ப நல்லதாம். தொடர்ந்து ஒடிச்சு வைங்க…நமக்கு அப்ப அப்ப வர்ற சுளுக்கு, காயமெல்லாம் கூட கொறையுமாம் “, என தன் தரப்பு வாதத்தை முன் வைத்தது மூளை.
“அதுதான…உனக்கென்னப்பா உச்சானிக்கொம்புல ஒக்காந்து கிட்டு இருக்க…ஒடப்போறது காலு. ஓடறதுக்கு தேவையான சத்தெல்லாம் மூளைல இருந்து வந்தா பரவாயில்ல. நான் தான் ராப்பகலா ஒழைக்கணும். மூளைனா வாய மூடிகிட்டு மூலைல நில்லு”, என மூளையிடம் கடிந்துக்கொண்டு,
“முதல் வேலை…கால் இது ஒனக்கு. அந்த பொன்னு shoe போடும்போதே உன் வேலைய ஆரம்பி. ‘கணைக்கால் எலும்பு’ இருக்குபாரு.
அத கொஞ்சம் பெசகிக்க சொல்லு. ‘shin splints’ னு சொல்லுவாங்க. கொஞ்சம் வலிக்கும்..ஆனா மூளைக்கு ‘உயிர் போறா மாதிரி வலிக்குது’னு  சிக்னல் அனுப்பு. அந்த பொண்ணு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே உக்காந்துடும்; அப்படி அதையும் பொருட்படுத்தாம ஓட ஆரம்பிச்சது வைங்க, அடுத்து கல்லீரல் நீ..

ஏதாவது செஞ்சு ஒரு சுர்றுனு வலிய வரவச்சுக்கோ. அந்த பொண்ணு அப்படி இப்படின்னு அசைஞ்சு சரிசெய்ய பாக்கும். விடாம வலிக்குதுனு சிக்னல் அனுப்பு மூளைக்கு. கதம் கதம்! இதுவும் சரியாகல வை…நான் சீன்ல ஆஜராறேன்.
இப்பதான ஓட ஆரம்பிக்குது…மொதல் வலிலியே எண்ணத்த கைவிட்டிடும்.
ஏதாவது சொதப்பல் ஆகிடுச்சுனா இன்னும் ஒரு வாரத்துல திரும்ப meet பண்ணுவோம்.
“Any questions?”, என வயிறு கேட்க, ஒன்றுமில்லை என ஆமொத்தித்தப்படி அனைவரும் தம் வேலையை கவனிக்க ஆரம்பித்தன.

ஒரு வாரத்திற்குப் பிறகு,

“அந்த பொண்ணு அலும்பு தாங்கலடா சாமி. முதல் நாள் 1.5 minutes ஒடிச்சு.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா increase செஞ்சு…இப்ப 5 நிமிஷம் தொடர்ந்து ஓடுது”, என தன் வருத்தத்தை வெளிப்படுத்தியபடி கூட்டத்தை துவக்கியது கால்.
“நாம இதுக்கு ஏதாவது முடிவு எடுக்கலன்னு வைங்க, அப்படியே இது increase தான் ஆகும். நேத்து படிச்ச பதிவுல, “முதல் முறையா ஓட ஆரம்பிக்கும் போது  shin splints வர்றது சகஜம்தான். ஓடி முடிக்கும் போது …வழியும் நின்னுடுச்சுனா பிரச்சனை இல்ல’னு போட்டிருந்தது; அதுக்கு அந்த பொண்ணு சிரிச்சத பாக்கனுமே…வாய கேட்டா சொல்லும்”, என தன் தரப்பிற்கு கண்.
பலத்த யோசனையில் இருந்த வயிறு, “எனக்கு என்ன செய்யனும்னு தெரியலியே…என்ன மூளை, இந்த பொண்ணு என்ன பிளான் வச்சிருக்கு?”, என வேறு வழியின்றி மூளையிடம் வினவியது வயிறு.
“சொன்ன உடனே shock எல்லாம் ஆகக்கூடாது. ரெண்டு மாசத்துல ஏதோ 6K run இருக்காம். அதுக்கு தயாராகலாமானு நினைக்குது அந்த பொண்ணு. என்ன பண்ண போகுதுன்னு கவலை படரத விட, அதுனால நமக்கென்ன நன்மைன்னு யோசிச்சா நல்லா இருக்கும்”, என யதார்த்தமாய் பதிலளித்தது மூளை.

“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நாம என்ன செஞ்சாலும், அந்த பொண்ணு rest எடுத்து rest எடுத்து சரி செஞ்சுக்குது. ஒரு வழிதான் இருக்கு. கூட இருக்கறவங்க…’demotivate ‘ பண்றா மாதிரி பேசணும், இல்ல…’ஓடுவதால் ஏற்படும் தீங்குகள்’ மாதிரியான பதிவுகள அந்த பொண்ணு படிக்கணும்.
கால், வாய், காது…நீங்க மூணு பேரும் சேந்து தான் இத செயல்படுத்தணும்.
மூளை…உனக்கு பெருசா வேலை இல்ல. “அவங்களும் செய்ய மாட்டாங்க..செய்யறவங்களையும் செய்ய விட மாட்டாங்க”, மாதிரியான மக்கள் கிட்ட இந்த பொண்ண பேச வைக்கணும். அதுதான் உன் task.

“யப்பா…உன்ன மாதிரி யோசிக்க எனக்கு சுட்டு போட்டாலும் வராது. நீயே example ஏதாவது குடு”, என ஆச்சரியத்தில் வாயை பிளந்தது மூளை.
ஒரு மிடுக்கான சிரிப்புடன்,
“shin splints ஆ? அதெல்லாம் ரொம்ப serious ஆச்சே! வேண்டாம் அனு ..எல்லாரோட உடம்பும் ஓடறதுக்கு வசதியா படைக்கப்படல; வாக்கிங் வேணும்னா பண்ணு”

“நீ ஒடனும்னு ஒரு குதூகலத்துல ஓட ஆரம்பிப்ப ..அவன் அவன் குதிரை மாதிரி ஓடுவான். race ஆரம்பிச்ச உடனே…நீ கடைசி ஆளாயிடுவ”
“எங்கயோ படிச்சேன் டீ…பொண்ணுங்க ரொம்ப ஓடினா…கர்பப்பை இறங்கிடுமாம். அப்பறம் குழந்தை பொறக்கும் போது …தேவை இல்லாத complications எல்லாம் ஏற்படும்”
“இவ்வளவு body weight வச்சுகிட்டு ஓடினா…காலுக்கு தேவையில்லாத strain “
இதுமாதிரி அவளுக்கு தெரிஞ்சவங்க யாரெல்லாம் பேசறதுக்கு வாய்ப்பு இருக்கோ….ஒரு பட்டியல் போடு. அவங்க கிட்ட இந்த பொண்ண ஓடரத பத்தி பேச வை.
அப்பறம் அவங்க responses எல்லாத்தையும் திரும்ப திரும்ப…அவளுக்கு நினைவுபடுத்து. We will be fine “, என தன் தந்திரம் கலந்த யோசனையை முன் வைத்தது வயிறு.
“எனக்கென்னவோ இது சரிப்பட்டு வரும்னு தோணல …எல்லாரும் சொல்றீங்க. அதுனால செய்யறேன். ரெண்டு நாள்ல results என்னனு சொல்றேன்”, என விடைப்பெற்றுக் கொண்டது மூளை.
“கவலை படாம போங்க…6K யாம் 6K …ஒரு கீ.ஓடினா என் பேர மாத்திக்கறேன். அவள சுத்தி இருக்கறவங்க…எப்பவுமே நெகடிவா பேசறவங்களா இருக்கணும் அப்பறம் தன்னம்பிக்கையாவது புடலங்காயாவது”, என அனைவருக்கும் வயிறு ஆறுதல் கூற, கூட்டம் கலைந்தது.

1 மாதத்திற்குப் பிறகு…

“நான் சொன்னேன்ல அந்த பொண்ணு எதுக்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டான்னு. நாம ரொம்ப புத்திசாலித்தனமா பண்றதா நினைச்சோம்; இப்ப அந்த பொண்ணு, 10K, 15K ..அப்பறம் முடிஞ்சா ஒரு half marathon ஓடலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சுடுச்சு”, என  குண்டை தூக்கிப்போட்டது மூளை.
“நீதான் ஆரம்பத்துல இருந்தே அந்த பொண்ணு side இருந்த. இது நாங்க எதிர்ப்பாத்ததுதான்”, என கோபமாய்  விடையளித்தது வயிறு.
“இல்லங்க உண்மையத்தான் சொல்லுது மூளை. “Race ல நான் கடசியா வந்தா கூட பரவாயில்ல. Race organise பண்றவங்களுக்கு பிரச்சனை இல்லனா நான் மட்டும் எதுக்கு கவலை படனும்”னு  பேசுது. வெள்ளம் தலைக்கு மேல போயிடுச்சுன்னு நினைக்கறேன் என மூளையின் கருத்துக்களை வழிமொழிந்தது வாய்.

“நீங்கெல்லாம் ‘ஓடறது’ உங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு தீங்கா ஏன் பாக்கறீங்கன்னு புரியல. கால்…நீ சொல்லு. முதல் ரெண்டு மூணு நாள் கொஞ்சம் கடியா இருந்தது. ஆனா அப்பறம் புடிச்சுபோச்சு தான…
நீ…வயிறு…அந்த பொண்ணு ஓட ஆரம்பிச்சதுல இருந்து, நல்ல சத்தான சாப்பாடுதான் எடுத்துக்குது; கொஞ்சமா சோறு குடுத்து 10K ஓட வைக்கல; carbohydrates நெறைய இருக்கற சாப்பாடு சாப்பிடுது. இதுல இருந்து energy தயாரிக்கறது ரொம்ப easy னு எனக்கு தெரியும்”, என மூளை பேசிக்கொண்டே இருக்கும் போது,
“sorry பா..last ரெண்டு meetingsக்கும் வர முடியல. எல்லாரும் fresh ஆ இருக்கறத பாத்தா செம happy mood போல. ரெண்டு மூணு வாரமா இந்த பொண்ணு ஏதோ பண்ண ஆரம்பிச்சிருக்கு; வேலை கொஞ்சம் overtime போனாலும், செம superஆ இருக்குபா. காலுக்கு சாதாரணமா ரொம்ப கம்மியாத்தான் ரத்தம் அனுப்புவேன். இப்பெல்லாம் லிட்டர் கணக்குல அனுப்பறேன். என்ன நடக்குது பா??”, என மடைதிறந்த வெள்ளம் போல்  கொட்டியது இதயம்.
திருதிரு வென விழித்தபடி  கண்ணையும் வாயையும் பார்த்தது வயிறு.
ஒரு மெல்லிய புன்னகையுடன்,  “அந்த பொண்ணு ஓட ஆரம்பிச்சிருக்குபா. அதுதான் இந்த healthy மாற்றத்துக்கு காரணம்”, என இதயத்திற்கு விளக்கம் அளித்துவிட்டு “Hope we are all on the same page now . நம்ம நல்லதுக்குத்தான் அந்த பொண்ணு இதெல்லாம் செய்யுது. நம்மால முடிஞ்ச ஒத்துழைப்ப குடுப்போம். Team work தானப்பா எல்லாம்”, என அனைவரையும் பார்த்தபடி கூறிவிட்டு, “all good ?”, என கண்ணடித்தபடி வயிறை பார்த்துக் கேட்டது மூளை.
“Yeah sure”, என கூறி, அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டது வயிறு.

இந்த கூத்தெல்லாம் எனக்குள் நடந்தவையே. சென்ற வருடம் ஜூலை யில் ஓட முடிவு எடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ‘Half  marathon ‘ முடித்தேன். ஆரம்பத்தில் சற்று கடுப்பாக இருந்த போதிலும்…இன்று முடித்துவிட்டேன் என்ற பெருமிதத்துடன்…இப்பதிவை எழுதி முடிக்கிறேன்.