Posts Tagged ‘honour killing’

சாக்கடை

Posted: ஜூலை 23, 2010 in சிறுகதை
குறிச்சொற்கள்:, , ,

“ஆறுமுகம் திரும்பவும் சொல்றேன், பொண்ணு காலேஜ்க்கு போறதுக்குள்ள இளநிய வெட்டு. அது குடிக்காம போச்சு, உன் பொண்சாதி பிரசவ செலவுக்கு கொடுக்கறேன்னு சொன்ன காச மறந்துடு. இவ 4 மணி நேரமா சமையல்கட்டுல என்னதான் வெட்டி முரிப்பாளோ…பொண்ணுக்கு சாப்பாடு தயாராடீ?”, என கண்ணில் பட்டவரை டாம்பீகமாக மிரட்டிக்கொண்டிருந்தான் ரத்தினம்.
“ஏன்டீ…”, என மீண்டும் தொடங்க…
“இத பாருங்க…ஊர் உலகத்துல எல்லாப் புள்ளைங்களும் தான் காலேஜ்க்கு போகுதுங்க. இப்படி நீங்க தினமும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தேவையில்ல. தமிழ் குளிச்சு வரும் போது எல்லாம் தயாரா இருக்கும்”, என கணவனின் வெட்டி பேச்சை நிறுத்தினாள் காமாட்சி.
“இளநீ வெட்டிட்டேன்மா “, என ஆறுமுகம் சமையலறை வெளியே நின்று அறிவித்தான்.
“நீ தப்பா நினைக்காதே ஆறுமுகம். உன் அப்பார கேட்டா சொல்லுவாரு. கல்யாணமாகி ஆறு வருஷம் கழிச்சுதான் தமிழ் பொறந்துச்சு. அவருக்கு அந்த பொண்ணு மேல அவ்வளவு பிரியம். ஒரு தடவை கொழம்புல கொஞ்சம் காரம் தூக்கலா இருந்தது. தமிழ் எதேச்சையா தண்ணி கேக்க, உன் கொழம்பு சாப்பிட்டு தான் தண்ணி கேக்கறான்னு கூச்சல் போட்டு என்ன வெட்டவே வந்துட்டாருனா பாத்துக்கோ”, என ஆறுமுகத்திற்கு ஆறுதல் தெரிவித்தாள் காமாட்சி.
“காமாட்சி பொண்ணு வந்துட்டா பாரு. சாப்பாடு தயாரா..? ஏன்மா அந்த பக்கம் தான் நானும் போறேன். வழில வேணும்னா இறங்கிக்கிரியா?”, என முதல் வரியின் அவசரமும் ஆவேசமும் இரண்டாம் வரியில் சற்றும் தெரியாதபடி தமிழரசியிடம் வினவினான் ரத்தினம்.
“இல்லப்பா கமலாவோட போறேன். ரெண்டு பேரும் வாய்க்கால் வழியா பொடி நடையா நடந்து போயிடுவோம்”, என அமைதியாய் பதிலளித்தாள் தமிழரசி.

ஒரு மணிநேரத்திற்கு பிறகு,

“சரிப்பா நான் கெளம்பறேன்…போயிட்டு வரேன்மா. வரேன் அண்ணே”, என விடைப்பெற்றபடி கல்லூரிக்கு புறப்பட்டாள் தமிழரசி.
“சரிம்மா சாக்கிரதையா போயிட்டு வா”, என மகளை வழி அனுப்பிவிட்டு, “பாத்தியாலே…எங்க வம்சத்துக்கு கிடைச்ச மாணிக்கம்லே..சாதிக்காரன் ஒவ்வொருத்தன் வவுறும் பத்திக்கிட்டு எரியும்லே…அவன் அவன் போட்டி போட்டுக்கிட்டு பையங்கள டாக்டர்க்கு படிக்க வக்கிறான் கலெக்டர் ஆக்கணும்னு சொல்றான்… எதுக்குன்னு நினைக்கற…எல்லாம் என் பொண்ணுக்கு கட்டிகொடுக்கலே”, என ஆறுமுகத்திடம் தன் மகளின் பெருமையை பேசி பூரிப்படைந்தான் ரத்தினம்.

வாய்க்கால் அருகே…

“பாலையென வெறுமையாய் இருந்த நிலத்தை
அரை நொடியில் முல்லையென மாற்றிவிட்டாய்;
குறிஞ்சியின் இரு சிகரங்களை மார்பிலும்
நெய்தலை இதழ்களினுள்ளும் சுமந்தபடி
அமைதியாய் நின்ற இந்த மருதநாயகனை சுக்கு நூறாக்கி விட்டாய்”,
என தமிழரசியை கவிதையுடன் வரவேற்றான் கருணாகரன்.
“ஒரு நாள் இல்ல ஒரு நாள்…வாங்கின கவிதைக்கு கொடுக்க வேண்டிய பாக்கி எங்க தம்பின்னு கேட்டு வந்து நிக்கப்போறாங்க, அன்னிக்கி இருக்கு உனக்கு”, என கேலி செய்தாள் தமிழரசி.
“அய்யகோ…கருணா…உன் தமிழ் புலமை மீதே சந்தேகமா? இதைத்தீர்க்க வேண்டுமெனில் ஒன்று ஆழ்கடலில் மூழ்கி எழ வேண்டும் அல்லது மலை உச்சியிலிருந்து குதித்தெழவேண்டும். அனுமதி உண்டா அரசி?”, என தமிழரசியை சீண்டினான் கருணா.
“போதும் நிறுத்து கருணா.. என்ன யோசிச்சிருக்க? உனக்கு தெரிஞ்ச பசங்க கடைசி நேரத்துல காலவாரமாட்டங்களே? வீடு பாத்துட்டியா?”, என சரமாரியாக கேள்விகளை அடுக்கினாள் தமிழரசி.
“நான் இருக்கும் போது பயம் உன்னைவிட்டு ஒரு 100 அடி தூரம் தள்ளி நிக்க வேணாம்? கவலைபடாதமா.. நான் பாத்துக்கறேன். பசங்க ஒரு வீடு சொல்லி வச்சிருக்காங்க. ரெண்டு நாள்ல தகவல் வரும்”, என தமிழரசியை தன் மார்பில் சாய்த்தபடி தட்டிக்கொடுத்தான் கருணா.
“எனக்கு உங்க வீட்ட நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு…உங்க அப்பா…என்ன ஒரு 6 அடி இருப்பாரா? அவரும் அவர் மீசையும்…என்ன தேர்ந்தேடுதத்துல அவருக்கு சவர செலவு மிச்சம்…ரெண்டு நாள் எங்க அப்பாருகிட்ட பழகிட்டு வந்தா மாப்பிள்ளையும் நானே நாவிதனும் நானே”, என சிரிப்பினை அடக்கிய படி தமிழரசியை பார்த்தான் கருணா.
“நீ இப்பிடியே என் அப்பாவ வம்புக்கு இழுத்துட்டு இரு. அவரோட பழகினாத்தான் அவர் நல்ல மனசு உனக்கு புரியும். எனக்கு பிடிச்சதெல்லாம் அவருக்கும் பிடிக்கும்”, என தந்தையின் புராணம் பாடத் துவங்கினாள் தமிழ்.
கருணா சிண்டுவதும் தமிழ் சினுங்குவதுமாய் 2 மணி நேரம் கடந்த பின்னரே கமலா என்ற பேதை தனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பாள் என நினைவுக்கு வந்தது தமிழரசிக்கு.

சில நாட்களுக்கு பிறகு…

“இது…ரொம்ப நாளா இந்த மாடு இங்க காணோமே..உழுதுட்டு இருந்துச்சா?” என ஆறுமுகத்திடம் கேட்டான் ரத்தினம்.
“இல்லையா..நான் இங்க இல்லாதப்ப சண்முகம் சரியா கட்டி வைக்கல போல..அது அவுத்துக்குட்டு ஓடிருச்சு. நானும் தேடாத இடம் பாக்கி இல்ல…இன்னிக்கி குட்டிசுவத்துக்கு பக்கத்துல மேஞ்சுக்கிட்டு இருந்தது…அதுதான் இழுத்துட்டு வந்தேன்”, என்றான் ஆறுமுகம்.
“ஏலே அறிவில்ல…சோறு தான திங்கற, அதுதான் வீட்டுல போடற நல்லத திங்காம ஊர்மேய போச்சுனா…இவன் அத இழுத்துக்கிட்டு வந்தானாம். நாளைக்கு சந்தைல விக்கும் போது ஊருமேஞ்ச மாடுன்னு சொல்லி எவனும் வாங்கமாட்டான். அப்பறம் என் கௌரதை என்னாகுது. பாத்த இடத்திலியே அத வெட்டி போட்டிருந்தா..”, எனக்கூறி முடிப்பதற்குள் கூரையின் நடுவே இருந்த அரிவாள் ரத்தினத்திற்கு தென்பட்டது.
“அத எடுத்துட்டு வாலே… என் கண் முன்னாடியே இந்த சனியன கண்டம் துண்டமா வெட்டுலே…வீட்டுல பொத்தி பொத்தி வளத்தா தலைகணம் புடிச்சு ஊர்மேய போகுதோ! அந்த தலைய சீவிடுலே… தவிடும் புண்ணாக்கும் போட்டா…சுவத்தொட்டியும் ரோட்டுல கடக்கற புல்லும் எனக்கு போதும்னு போன அந்த கால வெட்டுல.. என் வீட்டு சோத்த தின்னுட்டு ஊர்மேய போச்சுன்னு சொன்னா, என் சாதி மருவாதை என்ன ஆகும்.. நாலு பேர் அப்பறம் என்ன எப்படி மதிப்பாங்க”, எனத் தன் சாதி வெறியினை வெளிச்சம் போட்டு காட்டினான் ரத்தினம்.
“என்னங்க..ஐய்யர வரச்சொல்லி இருந்தீகளாம். வந்திருக்காரு”, என குறுக்கிட்டாள் காமாட்சி, கண்களை துடைத்தபடி.
“இதோ வரேன்னு சொல்லு…நீ எதுக்குடீ கண்ண கசக்கிட்டு நிக்கற? எனக்கு மட்டும் என்ன ஆசையா..பெத்த பொண்ணுக்கு காரியம் செய்யனும்னு… நாய சிங்காரிச்சு நடு வீட்ல வச்சாலும் வாலாட்டிகிட்டு பீ தின்னத்தான் போகும். அது அப்ப எனக்கு தெரியாம போச்சு”, என அலுத்துக்கொண்டான் ரத்தினம்.
அரிவாள் காளை மாட்டின் கழுத்தினை பதம்பார்க்க, இரத்தம் ஊற்றெடுக்க, ஓரிரு துளிகள் ரத்தினத்தின் சட்டை மீது தெரித்தது.
அதை கழற்றிவிட்டு, “இத சுத்தம் செஞ்சுடுலே”, என ஆறுமுகத்திடம் கூறிய படி வீட்டினுள் நுழைந்தான்.