Posts Tagged ‘indian society’

திருமணம், திருமணத்தில் அமையும் கணவன் மனைவி உறவு…இவைகள் என்றோ ஒரு முறை நகைச்சுவையாய் கிண்டல் அடிக்கப்படும் போது , உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைக்கும். அதுவே, நகைச்சுவை என்றாலே திருமணங்களை கிண்டல் செய்வது தான், என்றாகும் போது, சற்று அதிகமாகவே சலிப்பு தட்டுகிறது.

திரைப்படங்களில் மட்டும் அல்லாது, whatsapp, facebook என அனைத்து சமூகத்தளங்களிலும்…அவை உலா வரும் போது , “திருமணம் என்ற ஒரு உறவு, நையாண்டி செய்யப் படக் காராணம் யார்”, எனக் கேட்கத் தோன்றுகிறது.
யோசித்து பார்த்தால், அந்த மாதிரியான ‘காமெடி’ காட்சிகளுக்கு சிரிப்பவர்கள் பெரும்பாலும், தம் தரப்பிலிருந்து, அவர்களின் திருமணம் வெற்றி அடைய முயற்சிகள் எதுவும் எடுக்காதவர்களே.
இந்த பதிவு, நம் ஊரில் நடக்கும் திருமணம் என்ற சடங்கில் இருக்கும் கேவலங்கள் என்ன, மேற்கில் அதற்கு ஒரு மாற்றுச் சடங்கு உள்ளதா, என வாதிக்காது. தான் விரும்பிய படிப்பைப் படித்து, தனக்கு விருப்பமான வேலையில் இருந்தும் கூட, நம்மூரின் சிலரால், தம் மண வாழ்க்கையை தம் விருப்பத்திற்கு ஏற்ப ஏன் மாற்றிக்கொள்ள முடிவதில்லை என்பது பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி. பதிவு சற்று நீளமாகிவிடும் என்பதனால், ஒவ்வொரு காரணமாக எடுத்துக்கொண்டு, பதிவுத் தொடர் ஒன்றை கொடுக்க விரும்புகிறேன்.

>> “பெரியவங்க பேச்சுக்கு மரியாதை குடுக்கணுமா வேண்டாமா ..?”

21 வயது கடந்தவர்களுக்கு நாட்டை யார் ஆள வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை அளிக்கப் படுகிறது. ஆபாசமோ, வன்முறையோ…திரைப்படங்களில் இடம்பெறும் போது, அதை ஆராய்ந்து உட்கொள்ளும் சுதந்திரமும் ‘adults’ என அழைக்கப் படும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப் படுகிறது.
அதுவே ஒரு குடும்பச் சூழலில் வரும் போது , பெண்ணுக்கோ ஆணுக்கோ அந்த ‘adult’ பதவி வழங்கப் படுவதில்லை.

பள்ளிப் பருவத்திற்குப் பிறகு படிக்க வேண்டுமா வேண்டாமா, ஆசைப் பட்டால் என்ன படிக்க வேண்டும், திருமணம் வேண்டுமா வேண்டாமா, வேண்டுமெனில் எந்த வயதில் செய்துக் கொள்ள வேண்டும், யாரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் அவசியமா, பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், எந்த வயதில் பெற்றுக் கொள்ள வேண்டும், எத்தனை பெற்றுக்கொள்ள வேண்டும் மாதிரியான ஒரு ஆணோ பெண்ணோ அவர்கள் விருப்பத்திற்கு மட்டும் ஏற்ப எடுக்க வேண்டிய முடிவுகள், பெரும்பாலும் பெற்றோர்களால் மட்டுமே முடிவு செய்யப் படுகிறது.
அதற்கு கொடுக்கப் படும் ‘விளக்கங்கள்’ பல…

“புடிச்ச பொம்மையும், புடிச்ச சைக்கிளும் வாங்கிக்கொடுத்த அப்பாக்கு உனக்கு புடிச்ச மாப்பிள்ளைய பாக்க தெரியாதா”?

“பெத்தெடுத்து, படிக்க வச்சிருக்கோம்…இது வரைக்கும் ஒன்னும் கொறை வைக்கலியே. இப்ப என்ன புதுசா, “நான் பாத்துக்கறேன்”னு சொல்ற?”

“ஒவ்வொரு வரனையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா…நீ ஆசைபடும் போது , ஒரு நல்ல வரன் கெடைக்காது”

“என்ன செட்டில் ஆகணும்…செட்டில் ஆகணும்னு பொலம்பிகிட்டு இருக்க? நானும் உன் அப்பாவும் அப்படி நெனைச்சிருந்தா, நீங்க பொறந்திருக்கவே மாட்டீங்க. ஏனா இன்னிக்கி வரைக்கும் ஒரு சொந்த வீடு கெடையாது. சம்பாதிச்சத எல்லாம் உங்க படிப்புக்கே செலவழிச்சாச்சு”

“உன் கூட படிச்சவங்க எல்லாம் கல்யாணம் ஆகி, ரெண்டு கொழந்தைங்க வச்சிருக்காங்க…நீ என்னனா, பாத்துக்கலாம், பாத்துக்கலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்க”

“உங்க ஆசை இருக்கட்டும்…எங்களுக்கு பேரன் பேத்திய கொஞ்சனும்னு ஆசை இருக்காது? நம்ம வம்சம் தழைக்க வேண்டாமா?”

இப்படியான ’emotional blackmail’ வசனங்களை கேட்கும் போது, “நெஜமாவே உங்க புள்ள பாசத்துக்கு அர்த்தம் தான் என்ன”, என கேட்கத் தோன்றுகிறது.

“அவங்க விருப்பப் படி dress போடட்டும், friends கூட நல்லா கும்மாளம் அடிக்கட்டும்…இதுக்கு மேல என்ன சுதந்திரம் வேணும்? அந்த புள்ள மேல பாசம் இருக்கறதுனால தான, என்ன வேணும்னாலும் வாங்க காசு குடுக்கறேன்”, என்ற ‘புள்ள பாசம்’ பொருள் விளக்கம் சற்று நெருடலாகவே உள்ளது.
“அவங்களுக்கு புடிச்சதெல்லாம் வாங்கித் தரோம். அப்ப எங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கணும், கொழந்தை பெத்துக்கனும்னு ஆசை படறதுல தப்பென்ன”, என நீங்கள் கூறுவது,
“புல்லு கட்டும், தீவனமும் போட்டு வளக்கறேன்…பலி குடுக்கறது என் உரிமை”, போன்றுள்ளது.

emotional blackmailக்கு ஆயுதமாய் பயன்படுத்தப்படும் இன்னொரு பயங்கரமான ஆயுதம், பெற்றோரின் அழுகை.
அதன் கூட,

“ஒரு வேளை சோறு கூட வீட்டுல இருக்காது…ஆனா பையன் பசி தாங்க மாட்டான்னு, கடன ஒடன வாங்கி வடிச்சு போடுவேன்”

“அப்பா ஒரு ஓட்டை சைக்கிள் வச்சிருந்தாரு. ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கினது கெடையாது. ஆனா பொண்ணு கூட்ட நெரிசல்ல காலேஜ் போறாளேனு வண்டி வாங்கிக்கொடுத்தோம்”

“கல்யாணம் காட்சிக்கு போனா…அவ அவ பாட்டி ஆயிட்டேன், பொண்ணு பிரவசத்துக்கு வந்திருக்கான்னு அளக்கறா. நான் அவங்க முன்னாடி வாய மூடிட்டு இருக்க வேண்டியிருக்கு.”

சமூகத்தின் ‘கெட்டப் பெயரை’ சம்பாதித்துவிடக் கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் செயல்படும் பெற்றோரிடம், வாய் திறந்து பேசவோ, விளக்கவோ முயற்சிக்காத போது, பதிவின் துவக்கத்தில் கூறப்படும் ‘சண்டை சச்சரவு நிறைந்த திருமணங்கள்’, ‘உற்றார் உறவினருக்காக குழந்தைகள்’ போன்ற கசப்பான நிகழ்வுகள் நிதர்சனம் ஆகும்.

இவ்வாறு சமூகத்தின் தேவைகேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கணவன் மனைவியரே, திரைப்படங்களில் வரும் சிவகார்த்திகேயன்கள், சூரிகளின் ‘காமெடி’களுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
“ஏதோ…நாம மட்டும் அவதி படல. கல்யாணம் பண்ணிட்டவன் எவனுமே இந்த நெலமைல தான் இருக்கான்”, என தங்களை திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம்?

“இது எப்ப வாங்கினது? ஒரு நாலு பவுன் இருக்குமா…?”, என அனிதாவின் கழுத்துச் சங்கிலியை தொட்டு பார்த்தபடி கேள்விக்கணைகளை தொடுத்தாள் லக்ஷ்மி.
“ஒ அதுவா…மாமியாருக்கு chain வாங்க போயிருந்தோம். நீயும் ஏதாவது வாங்கிக்கன்னு அவர் சொன்னாரு (ஒரு வெட்கத்தில் சற்றே அனிதாவின் தலை குனிந்தது) அதான். இது ஏதோ புது designனு சொன்னாங்க. சரி வாங்குவோமுனு…”, என ‘வாங்கிய பலனை அடைந்துவிட்டோம்’ என்ற பெருமிதம் சிறிதும் வெளியே தெரியாதபடி அலுத்துக்கொண்டாள் அனிதா.

“ஓகே லேடீஸ்….என்னுடைய அடுத்த படைப்பு ரெடி. Blogல update பண்ணீட்டேன். படிச்சிட்டு comments விடுங்க”, என தன் பெருமையை சபையில் சமர்ப்பித்தாள் லீலா.
“இந்த முறை என்னம்மா…திரும்பவும் ஏதாவது வாயில நுழையாத பேர்ல ஸ்வீட்டா?”, என வார்த்தைகளை நெய் போல் ஊற்றி பெருமை தீயை கொழுந்து விட்டு எரியச்செய்தாள் கல்பனா.
“பேர் வாயில நுழையலனா என்ன…அன்னிக்கி kaaju kathliய கட்டு கட்டுன்னு கட்டினது நெனவிருக்குல…? அதுக்கும் இப்படி தான் சொன்ன”, என முழங்கைய்யால் கல்பனாவை லேசாக இடித்தாள் லீலா.

“சரி அதெல்லாம் விடுங்கடி…நம்ம வினோதினி கிசுகிசு ஏதாவது?”, என நிகழ்ச்சி நிரலில் புதியதாய் ஒன்றை நுழைத்தாள் அனிதா.
“அட நான் கூட phone பண்ணி விஷயத்த சொல்லனும்னு நெனச்சேன். அன்னிக்கி அவள பஸ்ல பாத்தேன். அவ புருஷனும் இருந்தான். பஸ் கூட்டமா இருந்ததுனால பேசல. என்னமா கொழையறா புருஷன் கிட்ட. பஸ்ல எல்லாரும் அவங்களத்தான் பாத்துகிட்டு இருந்தாங்க. என்னவோ காதல் ஜோடிங்க மாதிரி…அவன் ஏதோ காதுல சொல்றான்; அவ கெக்கபெக்கன்னு சிரிக்கிறா…சகிக்கல”, என பஸ்ஸின் நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்தாள் லக்ஷ்மி.

“கொஞ்சம் ஓவராவே ஆடராடி அவ…என்னோட அந்த ‘motichoor laddu ‘ recipe ..அதுக்கு comment கூட 150 தாண்டிச்சே!! அதுக்கு ஒரு comment விட்டிருக்கா பாரு…அதுவும் private கமெண்ட்; இரு iphoneல காட்டறேன்”, என தன் அலைபேசியில் அந்த பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் தேடி எடுத்தாள்.
“படிக்கிறேன் கேளு…”லீலா ஒரு ‘சமையல் queen’ஆ மாறிட்டு வர. வாழ்த்துக்கள்!! நெறையா பேர் உன் பதிவுகள follow பண்றாங்கன்னு பாத்தாலே தெரியுது. நீ சமையல் மட்டும் இல்லாம பொது விஷயங்கள் பத்தின உன் கருத்துக்களயும் எழுதலாமே…படிக்க வர்றவங்க அவங்க நினைக்கறத தெரிவிப்பாங்க…அப்படியே ஆரோக்கியமான விவாதங்களுக்கு உன் blog நல்ல தளமா அமையும்னு நான் நினைக்கறேன். சமையல் குறிப்பு அல்லாத விஷயங்களில் உன் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கும் உன் ரசிகை வினோதினி :)”…அம்மா சொல்லிட்டாங்களாம்…நாம கேட்டு நடக்கனுமாம். நான் சொல்லட்டுமா…அவளுக்கு கடுப்பு…வேற ஒன்னும் இல்ல”, என சரமாரியாக வினோதினியை திட்டி முடித்தாள் லீலா.

“தனக்கு எல்லாம் தெரிஞ்சா மாதிரி நடப்பான்னு தான் நமக்கு தெரியுமேடி. நீ எதுக்கு தேவையில்லாம tension ஆகற. ஏதோ நம்ம husbands’ friend அவ புருஷன். அந்த ஒரு காரணத்துனால தான் அவள சேத்துக்க வேண்டிய கட்டாயம். if given an option…அவளுக்கு ‘good bye’ சொல்ல நான் எப்பவுமே ரெடி”, என தன் ‘கைய்யறு’ நிலையை நொந்துக்கொண்டாள் கல்பனா.
“இவள பத்தி பேச ஆரம்பிச்சாலே ஒரு bitter endதான் எப்பவும்; சரி எனக்கு டைம் ஆகுது. பையன் ஏதோ video game வேணும்னு கேட்டான். நான் அப்படியே நடைய கட்டறேன்”, என லக்ஷ்மி விடைப்பெற, கோயில் மணி சத்தம் கேட்டு, அனைவரும் கற்பகிரகம் நோக்கித் திரும்பினர்.

“ஆனா கோயில் வந்தா நிம்மதி கெடைக்கும்னு சொல்றது…இதுதான் போல. every week இப்படி உங்களோட பேச chance கெடைக்கறதே கோயில்லதான். ஒரு வாரம் முழுக்க மனசுல புழுங்கிட்டு கெடக்கற விஷயங்கள போட்டு உடைக்கறதுல ஒரு அலாதி சந்தோஷம். எனக்கும் நேரமாச்சு… அவர் வந்துடுவாரு…இன்னிக்கி evening snackக்கு சமோசா செய்யலாமுன்னு இருக்கேன்”, என விடைப்பெற்றாள் கல்பனா.

அலுவலக உண் மேசையில்…

“என்னப்பா இது உங்க பொண்டாட்டிங்க சொல்லி வச்சு பொங்கல் செஞ்சாங்களா? ரெண்டு பெரும் அதையே கொண்டுவந்திருக்கீங்க?”, என உரையாடலுக்கு பிள்ளையார் சுழி போட்டான் கணேசன்.
“இது உனக்கு புரியாது தம்பி. இன்னிக்கி கணவர்களுக்காக மனைவிகள் கடவுளிடம் பிராத்தனை செய்யும் தினம். கட்டின புருஷன் நல்லா இருக்கணும்னு பூஜை செய்வாங்க. வீட்ல வடை, அப்பளம், பொங்கல்…சூப்பர் விருந்து. அதுதான் tiffin box க்கு பதில் இன்னிக்கி 5 அடுக்கு கேரியர்”, என விளக்கம் அளித்தான் சரவணன்.

“இன்னும் என்ன ரெண்டு மாசம் தான…அப்பறம் டும்டும்டும். அதெல்லாம் இப்பவே சொல்லி வச்சுடு கணேசு…அதுவேற இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல…அது இதுனு பேச போறாங்க. நமக்கு க.மு, க.பி ரெண்டும் ஒரே மாதிரி இருக்கணும்னா…நம்ம பொண்டாட்டி நம்ம பேச்ச கேட்டு நடக்கறவளா இருக்கணும். friendsஆ இருக்கலாம், அது இதுனு சொன்னாங்கனு வைய்யு….முதலுக்கே மோசமா போயிடும்”, என ஒரு மனைவியிடம் இருக்க வேண்டிய ‘இன்றியமையாத’ குணாதிசயத்தை முன் வைத்தான் குணசேகரன்.

“சொல்ல மறந்துட்டேனே…’நீயா நானா’ ல அடுத்து ‘கணவன் மனைவி…நண்பர்களாய் இருப்பது சரியா தவறா’னு ஒரு தலைப்பு போல. பங்கேத்துக்க interest இருந்தா தொடர்பு கொள்ள சொல்லி எங்கயோ படிச்சிருக்கா. நானும் போறேங்கன்னு கேட்டா.எனக்கு அப்படியே தூக்கிவாரி போட்டுச்சு. இவ ‘அவர் தான் ஒசத்தி’னு பேசினாலும், அந்த பக்கத்துல இருக்கறவங்க, இல்ல guest பேசறத கேட்டுட்டு வீட்டுக்கு வந்து “நீங்க இன்னிக்கி கொஞ்சம் சமையல பாத்துக்கோங்களேன்”, “கொஞ்சம் தலை வலிக்குது…காபி போட்டு குடுக்க முடியுமா”னு கேட்டாங்க….கதை அதோகதிதான். அதெல்லாம் ஷூட்டிங் அது இதுனு நாள் முழுக்க போயிடும். அப்பறம் tired ஆயிடுவ”னு ஒரு வழியா அவ வாய அடைச்சேன்”, என கரையை தாக்க வந்த புயல் பற்றியும், அது சுமூகமாக கரை கடந்த அழகையும் விவரித்தான் சரவணன்.

“நீங்க ரெண்டு பேரும் சொல்றத பாத்தா…கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போலவே”, என தலையை சொரிந்தான் கணேசன்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு எந்த கோமாளியோ சொல்லிவச்சுட்டான். அதெல்லாம் ஒன்னும் இல்ல. நாம நடந்துக்கறதுல தான் இருக்கு. அவங்க கேக்கறதெல்லாம் வாங்கி கொடுக்கணும். ரொம்ப அன்பா நடந்துக்கணும்…சுமாரா இருந்தாலும் அவங்கள “நீ தான் சூப்பர்…நீ போட்டில இல்லாத ஒரே காரணத்துனால தான் ஐஸ்வர்யா பட்டத்த வாங்கினா”, அது இதுனு அளக்கனும். அவ்வளவுதான்…அப்படியே விழுந்து விழுந்து கவனிப்பாங்க பாரு…”, என உபதேசங்களை சரமாரியாக அவிழ்த்து விட்டான் சரவணன்.

பேசிக்கொண்டே இருக்கையில், கணேசனின் அலைபேசி ‘காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்’ என பாட, “நம்பினா நம்பு…உன்ன பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன்…நீயே கால் பண்ணிட்ட”, என கூறிக்கொண்டே நழுவினான் கணேசன்.

மாலை…சரவணன் வீட்டில்

“கல்புமா…சமோசா தான…வாசனை மூக்கத்தொளைக்குதே”, என கூறியபடி வீட்டினுள் நுழைந்தான் சரவணன்.

“என்னங்க இன்னிக்கி சீக்கிரம் போல…சமொசாவா…ஆமாங்க…ஏதாவது differentஆ பண்ணலாமுன்னு…”, என குழைந்தாள் கல்பனா.
“சரி…கைக்கால் அலம்பிட்டு freshen up ஆகிட்டு வரேன்”, என குளியலறையில் நுழைந்தான் சரவணன்.

சமயலறை நோக்கி நடந்த கல்பனாவின் கண்கள் உண் மேசை பக்கம் திரும்பியது. ஏதோ வண்ண அட்டை தென்பட்டது; கையில் எடுத்தாள். எடுத்து படித்த மாத்திரத்தில்….முகத்தில் ஒரு 1000 watts புன்னகை. “For the sweetest woman in the world” என வாழ்த்து அட்டையின் வரிகளை படித்த படி, “என்னங்க…எனக்கா இது? எதுக்குங்க இதெல்லாம்”…என குளியறையிலிருந்து வந்த சரவணன் நோக்கி ஓடினாள்.

“உனக்கு தான் என் தங்கமே. கணேசன் அவன் would-beக்கு card வாங்கனும்னு சொன்னான். நானும் கூட போனேன். இது அங்க கண்ணுல பட்டது. உன் ஞாபகம் வந்தது. அதுதான்”, என சாதாரணமாய் விடை அளித்தான் சரவணன்.

“போங்க…எனக்கு வெக்கமா இருக்கு”, என தலை குனிந்த படி, கால் விரல்களால் கோலம் போட்ட வண்ணம், வாழ்த்து அட்டையை முத்தமிட்டாள் கல்பனா.

************************************************************************************************

“நீயா நானா”வில் சென்ற வாரம் பார்த்த ஒரு விவாதத்தின் தாக்கம் இச்சிறுகதை. ‘கணவரே கண் கண்ட தெய்வம்’ என வாதாடிய அணியில் இருந்த சில பெண்களின் விவாதங்கள்…சிரிப்பை விட கோபத்தையே வரவழைத்தது. அந்த கோபமானது அப்பெண்களின் மீதானதல்ல என்று மட்டும் தெளிவாக புரிந்தது. ஆரம்பத்தில் ‘கணவனே உன் பாதுகாவலன்’, ‘அவர்களின் விருப்பத்திருக்கு இணங்கி நடப்பது…திருமணத்திற்கு பின் உன் தலையாய கடமை’ என சமூகத்தினால் சாவிக்கொடுத்து பழக்கப்பட்ட பெண்கள்…இன்று எவர் துணையுமின்றி தமக்குத்தாமே விலங்கணிந்துக் கொள்வது….சமூகத்தின் வெற்றியே!!

“நான் சிந்திக்கிறேங்க…அதுனால தான் பாத்திரம் கழுவறது என் வேலை…அவர் செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சிருக்கு”
“நான் M .B .A படிச்சா தான் என்ன…அவர் ஆம்பளை..கட்டாயமா என்னவிட உலகறிவு ஜாஸ்த்தியா இருக்கும்”
“அவர்கிட்ட சரணாகதி அடையறது எனக்கு பிடிச்சிருக்குங்க”, போன்ற வாக்கியங்கள் கேட்டமாத்திரத்தில் ஒரு ஏமாற்றமும் வருத்தமுமே தோன்றியது.

“இப்படி செயல்படுவதே ஒரு ‘குடும்பத்தலைவி’க்கு பெருமை சேர்க்கும்” என மறைமுகமாக போதிக்கும் சமூகமும், அவள் விரும்பி அடிமையாய் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டாத ஆண்மகனும்…அவளின் கிணற்றுத்தவளை கோலம் கலையாமல் இருக்கவே விரும்புகின்றனர்.

இச்சூழ்நிலையில்…அந்த பெண், “தனிமனிஷியாய் எனக்கு என்ன பிடிக்கும்”, “பிறர் திருப்தி அடைய பற்பல வேலைகளை செய்த நான்…எனக்கென என்ன செய்துகொண்டேன்”, போன்ற கேள்விகளை கேட்பதின் மூலமும், அதற்கான விடைகளை அடைய செயல்படுவதின் மூலமுமே அப்பாழ்கிணற்றிலிருந்து விடுபடுகிறாள்.

வீட்டின் எத்திக்கிலும் எனக்கு பிடித்த பொருட்கள்;
தீபாவளி, பொங்கலுக்கு எடுத்த துணிகள் தொடங்கி, அலமாரியில் உள்ள திண்பண்டங்கள் வரை,
அனைத்தும் என் விருப்பத்தை பூர்த்தி செய்பவை;
“வீட்டின் ஒரே பெண் நீ…அதுதான் இத்தனை கவனிப்பு”, என தோழிகள் கூறும்போது,
அளவுகடந்த கர்வம்; இனம்புரியாத மகிழ்ச்சி.

அன்று என் இருபத்திமூன்றாம் பிறந்தநாள்…
இன்னும் நினைவில் உள்ளது….அந்த சிவப்பு நிற பாவாடை;
துணிக்கடையில் இரண்டு நாள் முன்பு உருப்படிவம் அணிந்திருந்தது;
பார்த்த மாத்திரத்தில், “இது என்னை அலங்கரிக்க வேண்டியதாயிற்றே”, என தோன்றிற்று.
மகிழ்ச்சியில் நான் திளைத்தவண்ணம் இருக்க,
எதையோ பறிகொடுத்தது போல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள் என்னை ஈன்றவள்.
என்னாயிற்று என நான் வினவ, “அடுத்த பிறந்தநாளை இன்னொருவனின் மனைவியாக கொண்டாடுவாய்; அம்மாவை நினைவில்கொள்வாயோ”, என
கண்கள் கலங்கியபடி என்னை அணைத்துக்கொண்டாள்.
அம்மாவை அணைத்துக்கொண்டு ஆறுதலாய் தட்டிக்கொடுத்த அதே வேளையில்,
என் கனவு கோட்டைக்கு தளம்போட ஆரம்பித்தேன்.
‘ஜில்லுனு ஒரு காதல்’ சூர்யா மாதிரி ஒரு ஆண்மகன் தான் என் உயரத்திற்கும், நிறத்திற்கும்,
சரியான பொருத்தம் என முடிவு செய்தேன்.

எங்கு வீடு வாங்குவோம், என்ன நிறத்தில் மகிழுந்து வைத்திருப்போம், முதலில் எந்த நாட்டிற்கு
சுற்றுப்பயணம் மேற்கொள்வோம் என, முதல் மாடி, இரண்டாவது மாடி என கோட்டை வான்நோக்கி உயர்ந்தது.
மொத்தத்தில் ஒரு புதுவிதமான உல்லாச வாழ்க்கை கண்முன் நிற்பதாகவே நான் நம்பினேன்.
அம்மா என்னிடம் வந்து உனக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என கேட்டால்,
எதையும் மறந்துவிடாமல் பட்டியலிட பல முறை ஒத்திகை பார்த்தேன்;
தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட…ஒரு நெருடல் கூட இல்லாமல் சொல்லும் வண்ணம் தயாரானேன்.

அன்று மாலை வாழறையில் திருமணமண்டபம் பற்றி நடந்த உரையாடல் என் செவிக்கு எட்டியது.
ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட உணர்வு; கனவு கோட்டையில் சிறு விரிசல்கூட விழக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்; வாழரைக்கு விரைந்தேன்.
“மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்ய வேண்டாமா…மண்டபம் பற்றிய பேச்சு இப்பொழுதெதற்கு”, என எரிச்சல் கலந்த கோபத்துடன் சீறினேன்.
பட்டாசு சரம் வெடிக்க ஆரம்பித்ததைபோல…சுமார் 5 நிமிடங்களுக்கு சிரிப்பொலி காதைப்பிளந்தது.
என்னை தவிர அனைவரும் சிரிப்பது கண்டு…ஆத்திரத்தில் என் முகம் சிவந்தது.
“ராசாத்தி….உன்னை மணக்க வருகிறான் ஒரு திருமகன்”
“8 பொருத்தம் அமைந்தால் போதும் என கூறிக்கேட்டிருப்பாய்…உம் விஷயத்தில் பன்னிரண்டு பொருத்தங்களும் இனிதே அமைந்துள்ளது என ஜோதிடர் வியந்தார்”
“இது போன்ற ஜாதகப் பொருத்தம் அமைவது திருமாலின் கருணையே”, என ஆளுக்கொருபுறமாய் என்னை மணக்க இருக்கும் ‘சூர்யா’ புகழ் பாடினர் உறவினர்.
என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் முடிவெடுத்தது ஒரு நெருடலாகவே இருந்தது.
அப்பாவின் முகத்தில் குதூகலம் பூத்துக்குலுங்கியது; அம்மா திருமணம் முடிந்த கையுடன் போக வேண்டிய திருத்தலங்கள் பட்டியலை சரிபார்த்துக்கொண்டிருந்தாள்.
என் திருமணத்தை பார்ப்பதற்காக மட்டுமே அமெரிக்காவிலிருந்து என் மாமா வருவதாக பேசிக்கொண்டனர்.

‘புரியாத புதிர்’ ரகுவரனாகவோ, ‘ஆசையில் ஒரு கடிதம்’ ஆனந்த் மாதிரியோ ‘சூர்யா’ இருந்துவிட்டால்…என நினைத்து திடுக்கிட்டேன்.
எனக்கு பிடித்ததை மட்டுமே வாங்கித்தரும் அம்மா அப்பா, மாப்பிள்ளை பார்ப்பதில் மட்டும் குறை வைத்துவிட போகிறார்களா என்ன? கூடவே ஜாதகம் கச்சிதமாக பொருந்துகிறது என அனைவரும் சொல்லும் போது…

இன்னொரு கனவு கோட்டைக்கு தளம்போட ஆரம்பித்தேன். திருமணத்திற்கு எங்கு புடவை எடுக்கலாம், மாப்பிள்ளை அழைப்பிற்கு என்ன மாதிரி உடை அணியலாம் போன்ற கேள்விகள் என் மூளையை துளைக்கத் தொடங்கின.

திருமண நாளும் மிக தெளிவாக நினைவில் உள்ளது, ‘டும் டும் டும்’ படத்தில் ‘ரகசியமாய்’ பாடலில் ஜோ அணியும் திருமண உடைதான் வேண்டும் என முடிவு செய்தேன். அவ்வாறே திருமண மேடையில் வீற்றிந்த தருணம்…32 பற்கள் வெளியே தெரிய சிரித்தது மறக்க முடியாதது!!

அம்மா அழுவதை பார்த்து அழுகை தோன்றிடினும், கண் மை கலைந்து, வந்தவர்கள் முன் அலங்கோலமாய் இருக்குமே என பயந்தததை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது.

அன்று கண் மை கலையக்கூடாது என அழாமல் இருந்ததுதான் தப்போ என இப்பொழுது தோன்றுகிறது. அதன் பிறகு நான் அழாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தமிழ் படங்களைப்போல் ஒரு நாள் அனைத்தும் சுமூகமாய் முடியும் என நினைத்து நான் கடத்திய நாட்கள் எண்ணிலடங்காதவை.

“நான் பையனை பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை…அவனின் விருப்பங்களென்ன, எனக்கு பிடிக்காதவை எவை….என ஒருவரை பற்றி ஒருவர் ஒன்றுமே அறியாதபோது…ஜோசியர் எப்படி பன்னிரண்டு பொருத்தங்களை கண்டுபிடித்தார்??”
குமுதம், கல்கியில் வரும் ‘ஆறு வித்தியாசங்களை கண்டுபிடி’ போட்டியில் இரு படங்களின் மேலும் கருப்பு சாயம் பூசி, வித்தியாசத்தை கண்டுபிடிப்பது சொதப்பலென்றால்…இது மகா சொதப்பல்!!
“இரவு சாப்பாட்டுக்கு என்ன பொறியல் வேண்டும், தீபாவளிக்கு என்ன இனிப்புகள் செய்யலாம் என சின்ன சின்ன விஷயங்களிலும் என் விருப்பத்தை கேட்கும் அம்மா, என் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் மட்டும், ‘பெரியவர்கள்’ முடிவு செய்தால் போதும் என ஏன் நினைத்தாள்?”
“நான் விரும்பி ஒன்று கேட்டிருப்பேன்; அது கிடைக்காத காரணத்தினால் அம்மா அதைவிட விலை உயர்ந்த பொருளை வாங்கிவருவாள். எனக்கு பிடித்தே இருப்பினும், அது நான் கேட்டதில்லை என்ற ஒரே காரணத்தினால், அண்டைவீட்டாருக்கு கேட்கும் அளவிற்கு கூச்சல் போடுவேன். சாதாரண விஷயங்களுக்கு ஊரை ரெண்டாக்கிய நான், ஏன் துணைவர் விஷயத்தில் மட்டும் பேசாமல் இருந்தேன்??”

இத்தனை கேள்விகளில் ஒன்றாவது விவாகத்திற்கு முன்பு என் மனதில் தோன்றி இருந்தால்….இந்த விவாகரத்து படலம் வராமல் இருந்திருக்குமோ?
இந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், காயங்கள், மன வருத்தங்கள்…இவை அனைத்திற்கும் காரணம் யார் என்ற கேள்வி மட்டும் என் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது.

சுற்றம் மகிழ்ச்சியாய் இருக்கவும், சமூகத்தில் பெற்றோர் தலை நிமிர்ந்திருக்கவும் மட்டுமே நிகழ்ந்த ஒரு சடங்கிது. எல்லாம் முடிந்த பின்னர், பெண்ணிற்கு இப்படி நடந்து விட்டதே என ஒப்பாரி வைத்தார்கள். எல்லாம் நம் தலையெழுத்து….அடுத்து நடப்பதை கவனிக்க வேண்டியதுதான் என மீண்டும் என் சார்பில் முடிவெடுக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஒரு தலைக்குனிவு ஏற்படக்கூடாது என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருக்கும் அந்த சுயநலம்….எனக்கு விளங்கவே இல்லை.

இம்முறை மாப்பிள்ளை பக்கத்து ஊராம். தங்கமான பையனாம். ஏற்கனவே கேட்டு புளித்துப்போன துதிப்பாடல்கள். முற்போக்குத்தனமாய் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
நிச்சயம் முடிந்த உடன் பையனின் அலைபேசி எண்ணை எனக்கு தருவார்களாம். நாங்கள் பேசி பழகி ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ள….ஒரு நல்ல சந்தர்ப்பமாம்.
“துயரம் மட்டுமே அனுபவித்தேன்; ஏதோ முட்டிமோதி விடுதலை ஆகியுள்ளேன். இனியாவது நிம்மதியாய் அமர்ந்து, நான் செய்ய விரும்புவதைப் பற்றி யோசிக்கவிடுங்கள்”, என கூற ஏங்கினேன். வாயை திறக்காமல் ஏங்க மட்டும் செய்தேன்.

நாளை திருமணம்….கனவு கோட்டை கட்டுமானப்பணிகள் மீண்டும் துவங்கி உள்ளது. என் ஆசைகளையும், கோபங்களையும், வெளியே சொல்ல துணிச்சல் இல்லாத காரணத்தினால்….இம்முறை ஒரே மாடியுடன் முடித்துக்கொள்கிறேன்; விவாரகத்து ஆகாமல் இருந்தால் சரி.