Posts Tagged ‘marriage’

“எனக்கு நினைவில்ல…தினேஷ் அவன் கல்யாணத்துக்கு பார்ட்டி குடுத்த போது வந்த நியாபகம். அது 201ல தான?”, என வினவியபடி மதுபானக் கடையில் வீற்றிருந்த நண்பர் கூட்டத்தில் சேர்ந்தான் இளங்கோ.
“5 வருஷத்துக்கு ஒரு மொறை ஆஜர் ஆற உனக்கு…இந்த ‘மலரும் நினைவுகள்’ எல்லாம் ரொம்ப அவசியமா??”, என ஒரு கடுப்பில் வரவேற்றான் பிரபாகர்.
“என்ன பிரபா…இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கான்…இதெல்லாம் தேவையா? சொல்லு இளங்கோ Facebookல பாக்கற updates தான். வேலை எல்லாம் எப்படி போகுது”, என சூழ்நிலையின் சூட்டை தனித்தான் சுகுமார்.
“வேலை கொஞ்சம் மந்தமாத்தான் இருக்குப்பா. இன்னொரு 6 மாசத்துல contract renew செஞ்சா…இந்த கம்பெனி; இல்ல திரும்ப கோட் சூட் எல்லாம் தூசு தட்டி போடா ஆரம்பிக்கணும். ஆமாம் பிரபா ஏன் இன்னிக்கி இவ்வளவு கடுப்புல இருக்கான்?”, என பதிலளித்து கேள்வி எழுப்பினான் இளங்கோ.
“யாராவது அந்த பேச்ச ஆரம்பிக்க மாட்டாங்களான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கான்…இன்னிக்கி நீ மாட்டிகிட்ட; நம்ப நண்பன் ‘இல்லற வாழ்க்கையில’ நொழைய போறான். அதுதான் எல்லாருகிட்டயும் எரிஞ்சு விழறான்”, என பிரபாவின் வெறுப்பிற்கு ‘செயல் விளக்கம்’ அளித்தான் சுகுமார்.
“வாழ்த்துக்கள் மச்சி! பொண்ணு பாத்தாச்சா…இல்ல இனிமே தானா?”, என மகிழ்ச்சியில் பிரபா கையை குலுக்கினான் இளங்கோ.

“இல்லப்பா…இன்னும் பொண்ணு பாக்கல; சினிமால வர்றா மாறி தான் பொண்டாட்டி அமைய போறா…திரும்பவும் தண்ணியும் கையுமாத்தான் நிக்க போறேன்னு ஒரு வாரமா பொலம்பிகிட்டு இருக்கான்”, இது ஜோதிபிரகாஷ்.
“இதெல்லாம் கொஞ்சம் ஓவர்…இன்னும் பொண்ணையே பாக்கல, அதுக்குள்ள இப்படித்தான் இருப்பான்னு முடிவு செஞ்சிட்டியா? உங்க அம்மா-அப்பாவ எனக்கு தெரிஞ்ச வரைக்கும், “நாங்க பாக்கற பொண்ணத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்”னு சொல்ற மாதிரி தெரியலியே”, என இளங்கோ கூற,
“அதையே தான் நாங்களும் சொல்லிக்கிட்டு இருக்கோம். “பேசி பழகு பொண்ண புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ”னு சொல்றோம். “நல்ல பொண்ணு மாதிரி நடிச்சு, கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் பஜாரியா மாறிடுவா”னு புதுசு புதுசா கவலை படறான்”, என ஜோதி அலுத்துக்கொண்டான்.
“என்ன பிரபா ரொம்ப விவரமானவன்னு நினைச்சேன்…இப்படி ஒன்னும் நடக்கறதுக்கு முன்னாடியே பயப்படற; என்ன மாதிரி பொண்ணு எதிர்ப்பாக்கறனு கிளியரா இரு. compromise பண்ணாத…அப்பறம் compromise ஆப்போறது உன் life தான்”, என கூறி முடிக்கும் போது சுடசுட சிக்கன் 65யும், வறுத்த மசாலா கடலையும் மேசைக்கு வந்தது.
“சாரி மச்சி, இவ்வளவு நாள் கழிச்சு வர…ரொம்ப கேவலமா பேசிட்டேன். என் expectation என்னனு எனக்கே தெரியல. Homelyயா வந்துட்டு அப்பறம், எங்கயாவது வெளில போலாம்னா….”இல்லங்க வீட்லியே இருக்கேன்”னு சொன்னா எனக்கும் BP ஏறும். வேலைக்கு போகணும்னு சொன்னா அப்பறம் “பையன் என்னடா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு கறாரா இருக்கான்”னு சொல்லுவாங்க”, என அடுத்த குறையை கூற முயன்றபோது, இளங்கோ பிரபாவிடம் “கொஞ்சம் மூச்சு விடப்பா”, என செய்கை செய்தான்.
“தமிழர் வாய்ல மாட்டிகிட்டு முழிக்கிற பல இங்கிலீஷ் வார்த்தைல இந்த ‘homely’யும் ஒன்னு. வீட்டுக்கு ஏத்த பொண்ணுன்னு நினைச்சிகிட்டு எல்லாரும் அந்த வார்த்தைய use பண்றாங்க. அன்னிக்கி வெட்டியா dictionary ய பொரட்டிகிட்டு இருந்தேன். Homelyனா ‘unattractive’ அதாவது அழகற்ற, ‘lacking in physical attractiveness’ அதாவது பார்க்க கொஞ்சம் ரொம்பவே சுமார், ‘not having elegance or refinement’ அதாவது நாகரீகமற்ற. சத்தியமா இது நம்ம ஊர் பசங்களோட விருப்பமா இருக்காது. சரி matterக்கு வரேன்…இந்த matrimonial columnsல பொண்ணு வீட்டுக்காரங்க கேக்காததையா நீ கேட்டுட…ரெண்டு பேர் சேந்து குடும்பம் நடத்தும் போது , ரெண்டு பேரும் சம்பாதிச்சா வசதியா இருக்கும்னு நீ நினைக்கற. அதுல என்ன தப்பு இருக்க போகுது. அப்பறம் யாரு தப்பா நினைச்சா என்ன…அந்த பொண்ணுக்கு ஓகே வா …perfect. இல்லையா…நீங்க ரெண்டு பேரு சேர்றது சரி பட்டு வராது.

இன்னொன்னு ரொம்ப முக்கியம்னு நான் நினைக்கறது…
என்ன தான் அம்மா அப்பா சொல்றத கேட்டு நடக்கற பொண்ணா இருந்தாலும், தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல சுயமா சிந்திக்கிற பொண்ணு தான் உனக்கு சரிப்பட்டு வரும். அட்லீஸ்ட் காலேஜ்ல இருந்து எனக்கு தெரிஞ்ச பிரபாக்கு”, என விளக்கி முடித்தான் இளங்கோ.
“புத்திசாலி பொண்ணா?? சரி பட்டு வரும்னு எனக்கு தோணலப்பா; எதித்து பேசுவானு பயம் எல்லாம் இல்ல….ரெண்டு பேர் சேந்து முடிவு எடுக்க வேண்டிய விஷயதிலயும்…எனக்கெல்லாம் தெரியும்னு சொன்னா ஒரு healthy conversation இல்லாம போய்டும்”, என ஒரு சோகம் கலந்த குரலில் விடையளித்தான் பிரபா.
“அதுவும் கரெக்ட் தான் மச்சி….வீட்டு finance பாத்துக்க நாம வேலைக்கு போறோம், வீட்டு வேலைய பாத்துக்கறதுக்கும், கொழந்தைன்னு ஒன்னு வந்தா, அத பாத்துக்கறக்கும் புதிசாலித்தனம் எல்லாம் எதுக்குப்பா”, என வழி மொழிந்தான் ஜோதி.
“புத்திசாலித்தனம்னா நல்லா படிச்சிருக்கணும், வேலைக்கு போகணும்…அதெல்லாம் சொல்லலப்பா .அது ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விருப்பம். street smart சொல்லுவாங்கல …அதத்தான் சொல்றேன். வீட்லியே இருந்தா கூட விவரம் தெரிஞ்சு நடக்கற பொண்ணுங்களும் இருக்காங்க….நல்லா படிச்சு வேலைக்கு போனா கூட…எந்த விஷயத்துக்கும் புருஷன் தான் முடிவு எடுக்கனும்னு இருக்கற பொண்ணுங்களும் இருக்காங்க. வீட்டு வரவு செலவ தெரிஞ்சிக்க ஆர்வம் காட்டனும், ஏதாவது பிரச்சனைனா, காது குடுத்து கேக்கணும், தன் கருத்தையும் சொல்லணும்; நம்ம பாத்து செலவு பண்றா மாதிரி அவங்களும் வீட்டு வரவுக்கு ஏத்தா மாதிரி செலவு செய்யனும். என்ன பொருத்தமட்டும், இது தான் street smartness. இதுக்கு ஒரு டிகிரி படிச்சிருக்கனும்னு அவசியம் இல்ல”, என நீண்ட நெடும் பதிலை முன் வைத்தான் இளங்கோ.
“கேக்க சூப்பரா தான் இருக்கு….ஆனா அப்பறம் வீட்ல நமக்கு அந்த குடும்ப தலைவன் கெத்து கொறைஞ்சிசிடும்ல”, என ஜோதி மற்றும் பிரபா ஆமோதிக்க, குரலை உயர்த்தினான் சுகுமார்.
“அப்ப நீங்க தான் முடிவு பண்ணனும்…ஆபீஸ் டென்ஷன் கூட வீட்டு பிரச்சனையும் சேத்து , ஸ்ட்ரெஸ், BP எல்லாம் ஜாஸ்த்தி ஆறது betterஆ…இல்ல life partnerஅ எல்லாத்திலயும் partner ஆக்கி டென்ஷன பகிர்ந்துக்கறது பெட்டரா?”, என இளங்கோ சட்டென விடையளிக்க, பட்டென அமைதி ஆனது நண்பர் கூட்டம்.

“முன்னாடி எல்லாம் ஒரு பொறந்த நாள், anniversary மாதிரியான விசேஷங்கள celebrate பண்ண குடிப்போம். இப்ப என்னனா…டென்ஷனா இருக்கு, கடுப்பா இருக்குனு குடிக்கறீங்க. இந்த டென்ஷன wife கிட்ட ஷேர் பண்ணிக்கும் போது , உங்க மூளை கொஞ்சம் clear up ஆகும்.
ஆனா இதெல்லாம் கேக்கறதுக்கு wife நல்ல listenerஆ இருக்கணும். “அம்மா சொன்னங்க இதெல்லாம் தப்புன்னு…நீங்க பண்ணக் கூடாது”, “பக்கத்து வீட்ல வாங்கும் போது , நம்மளால முடியாதா”னு ஊர் சொல்றத வேத வாக்கா நினைக்கற பொண்ணு ஆட்டத்துக்கு ஒத்து வர மாட்டா”, என கூறியபடி பிரபாவை பார்த்தான் இளங்கோ. ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.
“சாரி மச்சி…உன்ன confuse பண்ணனும்னு இந்த lecture குடுக்கல. நெஜமாவே கல்யாணம் ஒரு பெரிய பொறுப்பு தான். ஆனா வர்ற wife உம் அந்த பொறுப்ப உணரும் போது, ரெண்டு பேருக்கும் சுமூகமான உறவா இருக்கும். பட் இது எல்லாம் நடக்கணும்னா, அதுக்கு மொதல் படி ரெண்டு பேரும் ஓப்பனா பேசறது”, என சொற்பொழிவை முடித்துக்கொண்டான் இளங்கோ.
“அடிச்சதெல்லாம் தெளிஞ்சே போச்சு…நக்கலா சொல்லலப்பா. partner எப்படி இருக்கணும், எப்படி இருக்கக்கூடாது, பொண்ணு கிட்ட என்ன பேசப் போறேன் ஒன்னும் idea வே இல்ல. ஆனா இது சும்மா பொண்ணு பாக்க போய் , பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு பொருத்தம் பாத்து முடிக்கிற விஷயம் இல்லன்னு மட்டும் தெளிவா புரிஞ்சு போச்சு. எனக்கு ஒரு தெளிவு கெடைச்சத கொண்டாடறோம்….அடுத்த ரவுண்டு என் treat “, என 32 பல்லும் தெரியும் படி, சிரித்தான் பிரபா.
“மச்சி இங்க முடிச்சிட்டு, அந்த பஸ் ஸ்டாப் பக்கத்துல ஒரு மெஸ் இருக்கமே….இன்னும் இருக்கா? ஒரு பிரியாணியோட நாள முடிக்கலாம்னு நினைச்சேன்”, இது இளங்கோ.
“ஆனா இந்த டைம் account வைக்கக் கூடாது…நம்ம பழைய பாக்கியையும் செட்டில் பண்ணனும்”, என ஜோதி கண்ணடித்தபடி கூற, கூட்டத்தில் குபீர் சிரிப்பு சத்தம் வெடித்தது.
அருகில் இருந்த மேசைகளில் இருந்து கோபக்கணைகள் வருவதைப் பார்த்து, சிரிப்பொலி அடங்கியது; பில் செட்டில் செய்யும் வேலையில் இறங்கினர் நால்வரும்.

அடுத்த முறை, “என்னடி …உன் பொண்ணு பரட்டை தலையோட அங்க பசங்க கூட விளையாடிகிட்டு இருக்கா. விளக்கு வைக்கற நேரம், நல்லா ரெட்டை ஜடை பின்னி போட்டு, பூ வச்சு அழகு பாப்பியா…”, என அடுத்த வீட்டு ‘நலன் விரும்பி அறிவுரை வழங்கினால்,
“ஜடை பின்னி பூவச்சு வீட்டுல மொடங்கி கெடக்கனும்னா, ஒரு பொம்மைய வாங்கி இருப்பனே ஆன்ட்டி. கொழந்தை எல்லாம் எதுக்கு. அவளுக்கும் பெருசா அது பிடிக்கல…என் ஆசை, ஊர் ஆசைக்காக எல்லாம் அந்த கொழந்தைய படுத்த விரும்பல”, என யதார்த்தமாய் விடையளியுங்கள்.

அடுத்த முறை, “இத பாருமா….பொண்ணு பெரியவளாயிட்டா, கொஞ்சம் வெக்கம், அடக்கத்த எல்லாம் சொல்லி குடு. தாந்தோனியா திரிஞ்சுகிட்டு இருந்தா…கல்யாணம் பண்ணி வைக்கறது குதிரை கொம்பாயிடும்…தெரிஞ்சுக்க”, என பக்கத்து வீட்டு மூதாட்டி காதில் ஓதினால்,
“என்ன பாட்டி….பல்லு மொளைக்கற மாரி …இதுவும் அவ ஒடம்புல நடந்திருக்கற புது விஷயம். “அது நடந்தாச்சு….இனி இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்”னு சொல்லி அவள கொழப்ப விரும்பல”, என சாதரணமாய் பதிலளியுங்கள்.

அடுத்த முறை, “என்ன சார், இத்தனை மார்க் வாங்கி இருக்கு பொண்ணு…ஒரு Arts collegeல போய் சேத்து விட்டிருக்கீங்க “, என ஏளனமாய் வேலையில் நண்பர் ஒருவர் குரல் எழுப்பினால்,
“சார்…அவ future, அவளுக்கு என்ன படிக்கணும்னு தோணுதோ படிக்கட்டும்; மார்க் எடுத்திருக்கானு..இன்ஜினியரிங் படி னு compel பண்ண எங்களுக்கு விருப்பம் இல்ல. அவளே விரும்பி செலக்ட் பண்ணும் போது , விரும்பி படிப்பா பாருங்க”, என புன்னகை ததும்ப விடையளியுங்கள்..

அடுத்த முறை, “அடக்கம்னா கிலோ எவ்வளவு வெலைனு கேப்பா போல உன் பொண்ணு…சரியான ராங்கினு நினைக்க போறாங்க. பொண்ணு கேட்டு ஒருத்தன்கூட தலை வச்சு படுக்க மாட்டான், என ஒரு ‘பெருசு’ வீராவேசமாக சபித்தால்,
“எங்க பொண்ண இப்படித்தான் வளத்திருக்கோம். அவளுக்கும் இப்படி இருக்கத்தான் பிடிச்சிருக்கு; அப்ப…அது மாதிரியான பொண்ண விரும்பறவன் தான அவளுக்கு suit ஆகும். அத விட்டுட்டு…”உன்னை மாத்திக்கோ மா…அப்ப தான் உனக்கு கல்யாணம் ஆகும்”னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கறது…வீண் பேச்சா தோணுது. அப்படியே அவள பிடிச்சு போய் ஒருத்தன் வந்தா கூட…அவளுக்கு புடிச்சிருக்கான்னு பாக்கறது தான மொறை “, என எளிமையாக விளக்குங்கள்.

அடுத்த முறை, “பையன் வேற ஜாதி போல…நேத்து shopping mallல பாத்தேன்…ஊர் என்ன பேசும் சசி”, என வருத்தத்துடன் ஊர்வம்பு பேச உம் தோழி எத்தனிக்கையில்,
“புரியல கவி…அவளுக்கு புடிச்சிருக்கு. அதுதான முக்கியம். ஒரு responsible parentஆ, 24 வருஷம் அவ கூட இருந்ததுனால, அவளுக்கு ஏத்தவனா னு வேணும்னா பாக்கலாம். அதுல கூட என் judgement எவ்வளவு சரியா இருக்கும்னு தெரியல. Above all she is an Adult. இவ்வளவு வருஷம் கெடைச்ச school education, உலக அறிவ வச்சு முடிவு எடுக்க வேண்டியது அவ பொறுப்பு. ‘அனுபவசாலிங்க’ னு சொல்லிக்கிட்டு, எங்க ஆசைய அவ மேல திணிக்க விரும்பல கவி”, என சட்டென விடையளியுங்கள்.

அடுத்த முறை, “ஒரு நாள் கெழமை அதுவுமா..ரெண்டு நகை நட்டு போட்டு, பொடவை தாவணி ஏதாவது கட்டிக்க கூடாது. ‘என்ன வளத்திருக்கா ஆத்தாகாரி ‘ னு ஒன்னைதான் பேசுவாங்க”, என உங்கள் நாத்தனார் தூற்றினால்,
“பொடவை, நகை எல்லாம் போட்டுக்கறது பாத்துட்டு, “சரி நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு”, “நல்ல அடங்கி ஒடுங்கி இருப்பா”,னு முடிவு பண்ணுவாங்க வைங்க…அது மாதிரி ஒரு வேஷம் என் பொண்ணுக்கு தேவையே இல்லங்க. வீட்டு நெலமைய புரிஞ்சிகிட்டு தனக்கு புடிச்ச சுதந்திரமான வாழ்க்கைய வாழறா…கல்யாணம் ஆனதுக்கு அப்பறமும் அதுதான் continue ஆகணும்னு நாங்க விரும்பறோம்”, என பட்டென பதிலளியுங்கள்.

அடுத்த முறை, “என்ன பாஸ்…ஊர் கெட்டு போயிருக்கு…பொண்ண public transportல எல்லாம் போக சொல்லாதீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா”, என நல்லெண்ணத்தில் அடுத்த வீட்டு uncle அட்வைஸ் வழங்கினால்,
“என்ன சொல்றீங்க சார்….பஸ் ல மட்டும் தான் இந்த கொடுமை எல்லாம் நடக்குதா…நாளைக்கே அவ பைக்ல போறான்னு வைங்க..ஒரு அசம்பாவிதமும் நடக்காதுன்னு என்ன நிச்சயம்? பொண்ண தைரியமா வளத்திருக்கோம். ஏதாவது பிரச்சனை வந்தா பயந்து நிக்க மாட்டா…ஊர கூட்டி கூச்சல் போடுவா அப்படியே பிரச்சனை பெருசா போனா கூட….போலீஸ் கிட்ட போறதுக்கோ, கோர்ட்க்கு போறதுக்கோ பயப்பட மாட்டா”, என ‘straight forward’ஆக பதிலளியுங்கள்.

டெல்லி சம்பவம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆக உள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்கு, ஆயுள் தண்டனை, இரவு வேளையில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போன்ற பல கோரிக்கைகள் முன் வைக்கபட்டாலும், ‘root cause’ எனப்படும் ‘அடிப்படை காரணத்தை தீர்க்காமல், அரசு முன் வைக்கும் எந்த தீர்வும், ஒரு நிரந்தர தீர்வாகப் போவதில்லை.
‘பொத்தி பொத்தி வளர்ப்பது’, ‘அடக்க ஒடுக்கமாய் வளர்ப்பது’ போன்ற பழைய பஞ்சாங்கத்தின் படி பெண்களை வளர்க்கும் போது, வெளி உலகில் தலை நிமிர்ந்து நடக்கும் அந்த துணிச்சல் முடங்கியே கிடக்கிறது. வேலை இடத்திலோ, அல்லது பொது இடங்களிலோ பிரச்னையை எதிர்கொள்ள துணிவில்லாமல், சூழ்நிலை கைதியாக மாறுகின்றனர். சிறு வயதிலிருந்தே, சுயமாய் யோசிக்கும் திறனையும், தவறென தோன்றும் செயல்களை தட்டி கேட்கவும் அவளுக்கு சொல்லித் தரும் போது , முதிர் பருவத்தில் (adulthood), தனக்கு சரி என படும் முடிவுகளை எடுப்பாள். அதற்கு பதில், ‘சமூகம் விடுத்த ‘நல்வழியில்’ அவளை வளர்ப்போம்…நல்ல தாய், தந்தை என பட்டம் வாங்குவோம்’, என உம் சுயநலத்திற்கு உங்கள் மகள் அடிமையாகும் போது , சமூகத்தில் தடி எடுத்தவன் அனைவரும் தண்டல்காரனாவான்…உம் மகளின் அடிமை நிலை வீட்டிற்கு வெளியும் தொடரும்.

இந்த பதிவ எழுதனும்னு நினைச்சது…வினவுல சமீபத்துல வெளிவந்த ஒரு பதிவ படிச்சபிறகு. நம்ம ஊர்ல குவிஞ்சு கெடக்கும் எண்ணிலடங்கா கொடுமைகள்ல ஒன்னான வரதட்சணை கொடுமை பத்தியது.

“இவங்கள எல்லாம் என்ன பண்ணலாம்”, “ஜெயில்ல தான் போடணும்”, “தூக்கு தண்டனை கொடுக்கணும்”னு நடைமுறைக்கு சாத்தியமே ஆகாதா யோசனைகள பட்டியலிட்டு உங்க நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்க விரும்பலங்க.

திருமணத்துல சம்பந்தப்பட்ட பொண்ணும் பையனும் சேந்து, அவங்களுக்கு சரின்னு தோன்ற முடிவ எடுக்கரவரைக்கும் இந்த கேவலமான கல்யாண வியாபாரம் நடந்துகிட்டே தான் இருக்கும். ‘உனக்கு எதெல்லாம் நல்லதுன்னு தோணுதோ, அது எல்லாத்தையும் சந்தேகக்கண்ணோட பாக்கற சமூகத்த…திருப்திபடுத்தவே முடியாது. அத புரிஞ்சிக்காம…மாமாவ சந்தோஷப்படுத்தறேன், சித்தப்பாவ திருப்திபடுத்தறேன்னு தொடங்கினா…ஒரு நிமிஷம் நின்னு பாக்கும்போது …உன்னோட ‘இலையுதிர் காலத்த’ ரீச் பண்ணியிருப்ப. அந்த ‘நலன் விரும்பி’ சமூகம் குத்தம் கண்டுபுடிக்கறத மட்டும் நிறுத்தி இருக்காது. இதெல்லாம் தெரிஞ்சும் ‘கலாச்சாரத்த காப்பாத்தறேன் கள்ளச்சாராயத்த காச்சறேன்’னு இருக்கும் சில பேர்வழிங்க இன்னும் எத்தனை ‘வரதட்சனை கொடுமை’ கதைகள படிச்சாலும் திருந்தாதுங்க.

பெண் விடுதலை, முதலாளித்துவம், சமத்துவம்னு எந்த திசைல இருந்து தாக்கினாலும் சமுதாயம், பண்பாடுன்னு ஒரே தேஞ்சு போன ரெகார்ட ஓட்டுவாங்க. வினவு வெளிச்சம் போட்டு காட்டின சதீஷ் மாதிரியான பொணந்திண்ணி நாய்கள கையாள, அதுங்க மாதிரியேத்தான் யோசிக்கணும். தலைய அடமானம் வச்சாவது பொண்ணுக்கு ஊர் மெச்சரா மாதிரி கல்யாணம் பண்ணியேதீருவேன்னு நினைக்கற அம்மா அப்பாக்கள் பின்வரும் யோசனையா வேணும்னா பரிசீலனை பண்ணலாம்.

ஒரு ரெண்டு நாள் முன்னாடி பாத்த தொலைகாட்சி தொடர் தான் நினைவுக்கு வருது. சேர்ந்து வாழற ஆணும், பெண்ணும், திருமணம் செஞ்சுக்கலாம்னு முடிவு பண்றாங்க. பொண்ணோட அம்மாவுக்கு பையன் மேல முழுசா நம்பிக்கை வரல. பொண்ணுகிட்ட ஒரு ‘மணத்தின்-முன்னான ஒப்பந்தம்’ (pre – nuptial agreement ) போட்டுக்க சொல்றாங்க. இது மேற்கு உலகத்துல பரவலா பாக்ககூடிய ஒன்னு. கல்யாணத்துக்கு அப்பறம் ஏதாவது பிரச்சனைனால பிரிஞ்சா இந்தந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பிரியணும்னு முடிவு எடுப்பாங்க. ஒரு விவாகரத்தின் எல்லா அம்சங்களும் இதுலயும் இருக்கும். என்ன வித்யாசம்னா…பிரச்சனை ஏற்பட்டத்துக்கு அப்பறம் வர்றது விவாகரத்து; பிரச்சனை வர்றதுக்கு முன்னாடியே வந்தா என்ன பண்ணலாம்னு பட்டியலிடறது இந்த ‘pre – nuptial agreement ‘. இந்த ஒப்பந்தம் சரியா தவறானு பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு சொல்லப்போறேன்னு நினைச்சீங்கனா…நெவெர்!!

அந்த தொடர்ல பையனுக்கு விஷயம் தெரியவந்து…அவங்க திருமணம் நின்னுபோகுது.
“அட இந்த பொண்ணு என்னடா நம்ம ஊருக்கு ‘pre-nuptial agreement’ எல்லாம் யோசனையா கொடுக்குது”னு பொலம்பும் ‘கலாச்சார பாதுகாவலர்கள்’ மேலே படிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!!
பெருசா நம்ம ஊர்ல சட்டம், நீதிமன்றங்கள் மேல எல்லாம் மக்களுக்கு நம்பிக்கை இல்லாட்டியும், போலீஸ் விசாரணை அதுல எல்லாம் இன்னும் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்யுது. பயத்த விட “எவன்டா கோர்ட்க்கும் ஸ்டேஷன்க்கும் எறங்கி ஏறீட்டு இருப்பான்”னு ஒரு எரிச்சல்னு சொல்லலாம்.

கல்யாணமே ஒரு வியாபாரம் ஆனதுக்கு அப்பறம்…ஒரு வியாபாரத்துல இருக்கற விதிமுறைகள கடைப்புடிக்கற்துல தப்பிருக்கறா மாதிரி எனக்கு தோணல.
தன் சொந்த காசுல அனுபவிக்க முடியாத சொகுசுகள், அவங்க பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்து தொலைச்ச காசு…எல்லாத்தையும் வீட்டுக்கு வரும் பலிகடாகிட்ட கரக்கனும்னு நினைக்கற எச்சைகள நாய்ங்க…எவ்வளவு கெடைச்சாலும் நிறுத்த போறதில்லை. இந்த சதீஷ் கதை மாதிரி முதல்ல 100 சவரன் கேப்பாங்க. ஓகே சொன்னா…’பரவாயில்லையே ஒன்னும் சொல்லாம ஒத்துகிட்டாங்களே…கம்மியா கேட்டுட்டோமோ”னு நினைப்பாங்க.
இந்த எடத்துலதான் நம்ம ‘pre-nuptial agreement’ உதவிக்கு வருது. என்ன வேணும்னு கேக்கட்டும், பொண்ணு வீட்டுக்காரங்க செரிப்பட்டு வந்தா ஒத்துகட்டும். ஒரு ஒப்பந்தத்துக்கு வந்த உடனே பத்திரம் போடலாம். ‘final and binding’னு சொல்லுவாங்கல…அது மாதிரி. இத அப்பறம் ஒரு வக்கீல்கிட்ட கொடுத்துட்டு….கல்யாண வேலைய தொடங்க வேண்டியதுதான்.
மவனே…ஒப்பந்தம் போட்டதுக்கு அப்பறம் இன்னொரு கார் கொடு, மேல ஒரு 50 சவரன் போடுங்கனு கேட்டே…வக்கீலும் போலிசும் வந்து உன் கணக்க சரி பண்ணுவாங்க!!
“இதெல்லாம் எப்படிங்க சரிபட்டு வரும். சமூகம் என்ன சொல்லும், பொண்ணுக்கு அப்பறம் எப்படி இன்னொரு வரன் வரும்”னு கேக்கறீங்களோ…
கதையா இருக்கே… அம்பத்தூர்ல ஒரு வீடு வாங்க கெறையபத்திரம் எழுதறீங்க…ஏதாவது பிரச்சனை ஏற்பட்டா கைகழுவிட்டு ஆவடில பாக்க மாட்டீங்க…? அதுமாதிரி தான் இதுவும். என்ன… வீட்டுக்கு பதில் இங்க உங்க வீட்டு பொண்ணு. வேற வீடுதேட ஆரம்பிக்கும்போது அம்பத்தூர் வீட்டு செங்கல் ஒவ்வொன்னு கிட்டயும், “உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே”னு கேக்கவாபோறீங்க…? அதே டீலிங்தான் உங்க பொண்ணுக்கும். என்ன…அந்த செங்கலுக்கும் உங்க வீட்டு பொண்ணுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்…அப்பப்ப வாய் தொறப்பா…சாப்பிடறதுக்கும் கொட்டாவி விடறதுக்கும். அட பரவாயில்லைங்க…வீட்டுக்கு அடங்கின கழுதைதானே…அம்மா அப்பா என்ன சொன்னாலும் கேட்டுக்கும். நாம மேட்டர்க்கு திரும்ப வருவோம்.
உங்க பொண்ணுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சீங்கன்னா…prenuptial agreementல ஒரு ரெண்டு மூணு annexure சேத்துக்கோங்க. நிச்சயத்துக்கு முன், நிச்சயத்துக்கு பின், கல்யாணத்துக்கு பின், கல்யாணம் முடிஞ்சு ஒரு 5 , 10 வருஷத்துக்கு பெறகுனு வேறவேற தோரணைல பட்டியலிடுங்க. கடசீல விவாகரத்து ஏற்பட்டா, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் சேத்து போடுங்க.
தலை தீபாவளி சீர், பேரனுக்கு வெள்ளி அரணாக்கொடி…அப்படி இப்படின்னு பிரச்சனை தலதூக்கிட்டே இருக்கும். ஒரு தொலைநோக்கு பார்வையோட இப்ப செயல்பட்டா எல்லாத்துக்கும் ஒரே வக்கீல வச்சு வேலைய முடிச்சிடலாம்.

“நல்லாத்தான் இருக்கு…ஆனா…கொஞ்சம் சிக்கல் இருக்கும் போலவே…என்ன இருந்தாலும் திருமணம் ரெண்டு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்”ன்னு மண்டைல ஒரு ஓரத்துல தோணிச்சுனா…ஒரு சுலபமான யோசனை கூட இருக்கு. நீங்க சந்தோஷமா இருக்கும் போது குத்தம் கண்டுபுடிச்சு, பிரச்சனை வரும்போது, இருக்கற இடம் தெரியாம ஓடிப்போற சமூகம் பத்தின கவலைய விட்டுத்தள்ளுங்க. நீங்க ஆசையா வளத்த பொண்ணு, அவளோட ஆசைய கொஞ்சம் கேளுங்க. வீட்டுல வரவு செலவுக்கு ஏத்தா மாதிரி திருமணத்த முடிங்க. யோசிச்சு பாத்தீங்கன்னா, உங்க பொண்ண சந்தோஷ படுத்தத்தான் இப்படி சிறுக சிறுக சேமிச்சு தடபுடலா கல்யாணம் பண்றீங்க. கம்மி செலவுல அது நடக்குதுனா…வேற என்ன வேணும் சொல்லுங்க…?

“நல்லா பேச ஆரம்பிச்சிட்டாங்க..ஸ்கூல்க்கு இப்ப அனுப்பினா சரியா இருக்கும்”, என ஒரு குடும்பத் தலைவியின் ‘To do ‘ பட்டியலில் இருந்து ஒன்றை அவிழ்த்து விட்டாள் அம்மா.
“அம்மா ஸ்கூல்க்கு போ வேணாம்…விளையாடனும்”, என மழலை மொழியில் அடம்பிடித்தேன்.
“ஸ்கூல்ல நிறைய பேர் இருப்பாங்க; நல்லா விளையாடலாம்”, என கனிவான பேச்சால் கப்பலை கவிழ்த்தாள்.
கப்பல் கவிழ்ந்ததோடு கேளிக்கை கூத்து அனைத்திற்கும் முற்று புள்ளியும் பிறந்தது.

“ஓடி விளையாடு பாப்பா”, என்ற பாரதியின் வரிகளை நன்று படித்தேன்.
“படித்து தேர்வெழுது பாப்பா…நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா”, என்ற வரிகளை பின்பற்றினேன்.

“ரொம்ப பெருமையா இருக்குமா…இந்த மார்க்குக்கு இன்ஜினியரிங் கட்டாயம் கிடைக்கும்”, சந்தேகம் தேவையில்லை…’To do ‘ பட்டியலின் தொடர்ச்சியேதான்.
“உனக்கு எங்க போச்சு புத்தி”, என்ற உங்களின் ஆவேசக்குரல் கேட்கிறது.

“நீ தனி மரமல்ல; பரந்துவிரிந்த தோப்பின் ஒரு அங்கம். அத்தோப்பின் விதிப்படி நடப்பாயாக”, என்றது ‘சமுதாயம்’.
அச்சமுதாயம் செய்த மூளை சலவையின் காரணமாக சில பல பத்தாம் பசலி சிந்தனைகளை உள்வாங்கினேன்… பொறியியல் படித்தேன்!

“நிறைய மதிப்பெண்களின் பலன் யாதெனில் கண்மூடி
பொறியியல் மருத்துவம் படித்தல்”
“நற்பள்ளி நாடி மதிப்பெண் பெறத்தள்ளாடி அங்கிங்கோடி
பொறியியல் படிப்பதே நற்செயல்”

இத்திருவாசகங்களை மீறி பொறியியல் தவிர வேறொரு படிப்பா…? சமூகத்தின் வெட்டிப்பேச்சுக்கு ஆளாக அன்று நான் தயாராக இல்லை!
விரும்பி படித்தேனா, படித்ததை விரும்பினேனா என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடையுமில்லை!

பிறகு? பிறகென்ன திரும்பவும் அந்த ‘சமுதாயம்’ திருப்தி அடையவும், சமுதாயத்திற்கு பயப்படும் பெற்றோர் திருப்தி அடையவும் படித்தேன்… 4 வருடங்கள் படித்தே கழித்தேன்!
படித்து முடித்தேன், வேலை தேடி அலைந்தேன், நல்ல வேலையில் அமர்ந்தேன், மண வாழ்க்கையினுள் நுழைந்தேன்…நிம்மதி பெருமூச்சு விட்டது சமுதாயமும், அதன் சொல் படி நடக்கும் என் பெற்றோரும்!

திருமணம் முடிந்தது…இனி எனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தாயிற்று; என் விருப்பப்படி அதை கழிப்பேன் என்று நினைத்து முடிப்பதற்குள்…
“கல்யாணம் நல்ல படியா முடிஞ்சது…ஒரு குழந்தையும் கையோட பெத்துட்டா முழுமை(??) அடைஞ்சிடும்”, மீண்டும் அதே குரல்…சமுதாயமும் அதில் அங்கம் வகிக்கும் என் பெற்றோரும்!!

“செல்வத்துள் செல்வம் மழலைச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”
“பூப்படைதல் மணமுடித்தல் குழந்தை சுமத்தல் இவையனைத்தும்
ஒரு பெண்ணுக்கு சேர்க்கும் சிறப்பு”
“தாய் ஆகும் பொழுதுதான்…ஒரு பெண் முழுமை அடைகிறாள்”
“அந்த மழலையின் சிரிப்பில் உன் துக்கம் அனைத்தும் மறையும்”

அய்யோ இந்த சமுதாயத்தின் வாயை மூட இங்கு யாருமே இல்லையா??
குழந்தையின் சிரிப்பு, சினுங்கல், ஏன் அழுகைக்கூட அழகு தான்….அதுக்கு??
தாய் தந்தையுடன் வாழ்ந்த காலத்தில் அவர்களின் விருப்பதிற்கிணங்க நடந்துக்கொண்டேன்;
இப்பொழுது எனக்கென ஒரு தனி வாழ்வு அமைந்தாயிற்று; இப்பவும் வந்து ‘நொய் நொய்’னா எரிச்சலா இருக்காது??

“சமையலறை என்பது பெண்ணின் சொத்து; ஆண் பங்குக்கு வருவது என்பது வெட்டி பேச்சு”
“அச்சம், மடம், நாணம் என்பவை ஒரு பெண்ணானவள் வாங்கி வந்த வரங்கள்; அவற்றிற்கு பங்கம் ஏற்படாமல் பார்த்து கொள்வது அவளின் தலையாயக் கடமை”, இது போன்ற சில பழமையான ‘பொன்மொழிகளின்’ வரிசையில்,
“24 வயதில் திருமணம், மணம் முடித்த 1 வருடத்தில் கையில் குழந்தை”, என்ற ஒன்றும் சமூகத்தினால் திணிக்கப்பட்டது என்பது என் கருத்து.

‘பிதற்றல்’ என முதல் இரண்டை ஒதுக்கித்தள்ளிய எனக்கு….மூன்றாவது மட்டும் எம்மாத்திரம்!

“சமூகமே! என் வாழ்வினை முழுமையடையச்செய்யவும், என் துக்கங்கள் மறையவும், குழந்தை அல்லாத பற்பல வழிமுறைகள் என் கைவசம் உண்டு; மழலைச் செல்வத்தின் வருகைக்கான தருணத்தை நான் முடிவு செய்துக்கொள்கிறேன். உன் அக்கறைக்கு நன்றி! கிளம்பு காத்து வரட்டும்!!”