Posts Tagged ‘S.P.உதயகுமார்’

கடந்த சில நாட்களாக கூடங்குளம் பற்றி செய்திகள் சரமாரியாக என் கண்ணில் பட்ட வண்ணம் இருந்தது. இரண்டு மூன்று வாரங்களுக்கு, “இன்னொரு குளறுபொடி” என நினைத்தபடி பெரிதாக செவி மடுக்கவில்லை.

‘Times of India ‘ பத்திரிக்கையின் ஒரு பதிவை படித்த பொழுதுதான்…இன்னும் இதை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று.

அணுசக்தி பற்றி பள்ளியில் படித்ததுடன் சரி. அதன் பிறகு அணு உலைகளினால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேடுகள், பொதுமக்களுக்கு ஏற்படும் உடல்நல குறைவுகள் பற்றி எல்லாம் தெரிந்துக்கொள்ள எத்தனித்ததில்லை
அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வெகு சில குரல்களில், தனித்து நின்றவை…திரு.S.P.உதயகுமார் மற்றும் Dr.புகழேந்தி அவர்களது.

திரு.S.P.உதயகுமார் தலைமை ஏற்று நடத்தும் ‘People movement against Nuclear energy’ அல்லது PEMA என அழைக்கப்படும் போராட்டக்குழு, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்வைக்கும் காரணங்கள் இவை

“அணுசக்தியால் மட்டுமே ‘இருண்டு கிடக்கும் தமிழ்நாட்டை’ காக்க முடியும்”, “இப்படியே எல்லாத்துக்கும் எதிர்ப்பு சொல்லிக்கிட்டு இருங்க…அப்பறம் எப்பதான் இந்தியா வல்லரசு ஆகும்”,என புலம்பிக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கு…
–> சுற்றுப்புற தாக்கம் குறித்த மதிப்பீடு (Environmental impact assessment), தள மதிப்பீடு குறித்த அறிக்கை (site assessment report) மற்றும் பாதுகாப்பு அலசல் அறிக்கை (Safety Analysis Report) ஆகிய எதுவும், கூடங்குளம் மக்களிடமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ, செய்தி ஊடகங்களிடமோ அளிக்கப்படவில்லை.இந்த செயல்திட்டத்தில், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் பொதுமக்களின் சம்மதம் கோரப்படவில்லை.
–> புகுஷிமா மாதிரியான சீற்றம் கூடங்குளத்தில் நடக்குமெனில், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் (காற்று, பல கிலோமீட்டர்களுக்கு அணுசக்தி கழிவினால் பழுதடைந்து இருக்கும் போது…மக்களை எங்கு பாதுகாப்பாக வைப்பார்கள் என்பது அடுத்த கேள்வி)
–> “ரொம்ப safe தாங்க”, “புகுஷிமா மாதிரி எல்லாம் இங்க ஒன்னும் நடக்காது; கொஞ்சம் அறிவியலையும் நம்புங்க”, என கூறும் நீங்கள்….எந்த நம்பிக்கையில் இந்த அறைக்கூவலை விடுக்கிறீர்கள்? இந்த நம்பிக்கையில் தான் ‘Chernobyl’ மற்றும் ‘Three mile island’ இல் இருந்த அணு உலைகள் இயங்கி வந்தன.
–> ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான 2008 ரகசிய அணுமின் ஒப்பந்தத்தின் படி, விபத்துகள் ஏற்படுமெனில், அனைத்து சேதாரங்களுக்கும், மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளுக்கும் NPCIL (Nuclear Power Corporation of India) மட்டுமே பொறுப்பு வகிக்கும். அணுசக்தி கதிர்வீச்சினால் ஏற்படும் புற்றுநோய்களின் சிகிச்சைக்கு, லட்ச கணக்கில் செலவாகும். நம் நாட்டில், இலவச வேட்டி சேலை திட்டங்கள் கூட பல இழுபறிகளுக்கு பிறகு, அரசியல்வாதிகள் மனம் வைத்தால் மட்டுமே நடக்கும் சூழ்நிலையில், நோய்வாய்பட்டு, வலியில் கிடப்பவர், இழப்பீடு வருவதற்குள், செத்து ஒழியலாம் என மனம் ஒடிவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
–> அணுசக்தியினால் புதிய சாதனை செய்ய வேண்டும் என களத்தில் இறங்கிய பல நாடுகள், புகுஷிமா விபத்திற்கு பிறகு…யோசிக்கின்றனர். சில நாடுகள், இன்னும் சில ஆண்டுகளில், தத்தம் நாட்டில் உள்ள அணு உலைகளை மூடி விட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலோ ஒரு 6 அணு உலைகளாவது கூடங்குளத்தில் அமைத்து விட வேண்டும் என பேச்சு வார்த்தை நடக்கிறது.

பல விடை தெரியாத கேள்விகள் இருக்கும் பொழுது, சில ‘படித்த’ இந்திய பிரஜைகளின் கருத்து இவை…
//Eminent scientist like our former President Mr. A.P.J.Abdul Kalam and many experts have told the plant is safe. For me it is sufficient.//
மொழிப்பெயர்ப்பு – திரு.கலாம் மற்றும் இன்னும் பல வல்லுனர்கள், இது பாதுகாப்பானது என சொல்கின்றனர். எனக்கு அது போதும் (“தம்பி…நீ பல ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி இருக்க…கூடங்குளத்துல விபத்து ஏற்பட்டா கூட…உனக்கு ஒன்னும் ஆகாது…அறிவுரை வழங்கின திரு கலாம் அவருக்கும் ஒன்னும் ஆகாது”)

//we shout “Garibi hatao” but shoo away any industrial development which can actually provide employment to thousands of people and help them provide education to their next generation//
மொழிபெயர்ப்பு – ‘வறுமை அழியவேண்டும்’ என குரல் எழுப்புகிறோம்; அதே சமயத்தில் இது மாதிரியான வளர்ச்சிப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த செயல்திட்டத்தின் மூலம் ஆயிர கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளும், அடுத்த தலைமுறையினருக்கு கல்வி வாய்ப்புகளும் கிடைக்கும் (“புரிஞ்சிக்க கண்ணு..வாயால மொழம் போடறாங்க; எதுவுமே எழுத்துல இல்ல. புற்றுநோய் வசப்பட்டவருக்கு தேவை….சரியான சிகிச்சையும், அதுக்கு தேவையான பணமும்; அவர் கிட்ட வேலை குடுக்கறேன், படிப்பு குடுக்கறேன்னா…காரித்துப்புவாரு”)

//we should try to neglect the voices of pushparayan, udayakumar and other half knowledged literates of idindhakarai who mislead the innocent public by instigating fear psycosis and punish them under national security act.//
மொழிப்பெயர்ப்பு – புஷ்பராயன், உதயகுமார் மற்றும் சில அரைகுறையாக படித்தவர்களின் பேச்சிற்கு, நாம் செவி மடுக்கக்கூடாது. இவர்களின் வேலை…பாமர மக்களுக்கு தேவையில்லாத பயத்தை உண்டாக்குவது தான் (“தம்பி…நீ தான அங்க புகுஷிமா பக்கம் போன வருஷம் திரிஞ்சுகிட்டு இருந்த…அம்மா அப்பாவ இழந்துட்டு அனாதையா நிக்கற குட்டி பசங்க உன்னதான் தேடறாங்க”)

//The Koodankulam reactors are the safest designs in the world, according to IAEA, and technologically more superior and controllable as compared to Fukushima-type reactors that have become technologically obsolete. This group has to be booked under National Security Act in addition to conventional IPC sections for creating trouble and instigating social disorder.//

மொழிப்பெயர்ப்பு
– IAEA கூற்று படி கூடங்குளம் அணு உலைகள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டவை; புகுஷிமா உலைகளை விட தொழில்நுட்ப ரீதியாக தரமானவை, சுலபமாக கட்டுப்படுத்தப்படக்கூடியவை (“பின் விளைவு எதுவுமே உனக்கில்லாத போது…வெட்டி பேச்சுக்கெல்லாம் தலையாட்டுவ; கூடங்குளத்துல அணு உலைல இருந்து 4 km , 5 km ல குடிசை போட்டு வாழறாங்க தம்பி; இவங்க போராடறது…உனக்கு ‘சமூக விரோத’ செயலா தெரியுதுல? நாளைக்கே ‘மின்சார வெட்டுக்களை கட்டுப்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி அணு உலை பொருத்தப்படும்”னு அரசு சொன்னா…பதறி அடிச்சிகிட்டு எழ மாட்ட நீ???)

// If it so, it is time to move koodamkulam reactors to Chennai, Delhi, Amritsar etc. Not on the areas were poor people live//
மொழிப்பெயர்ப்பு – இத்தனை பாதுகாப்பானதெனில்…கூடங்குளத்திற்கு பதில், சென்னை, டெல்லி, அம்ரித்சர் போன்ற இடங்களில் அணு உலையை நிறுவலாமே? எதற்கு வறுமையில் அடிப்பட்ட மக்கள் குடியிருப்புகளில்?

சுவாரசியமான விஷயம் இதுதான்….மேல் கண்ட கருத்திற்கு ’16’ ‘Disagree’ (எதிர்ப்புகள்)!!!

இப்படி ஒரு கூட்டம் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இட்ட வண்ணம் இருக்க, Dr.புகழேந்தி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தினால், சுற்றுப்புறமும், அருகாமையில் வாழும் பாமர மக்களும் அனுபவிக்கும் சீர்கேடுகளை பற்றி 10 வருடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்திருக்கிறார்.
அணுசக்தியினால் ஏற்படும் சீர்கேடுகளையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையையும் அவரின் இவ்விரு ஆவணப்படங்கள் விளக்குகின்றன

“ரெண்டு பக்கம் இருக்கற நியாயத்தையும் சொல்லுவன்னு பாத்தா…நீயும் ஒரு பக்கத்த மட்டும் பேசி நழுவ பாக்கற”, என எண்ணம் தோன்றுதோ??
செய்தி ஊடகங்கள் சொல்லும் செய்திகளை 100% நம்புவீரெனில்…உங்களின் அந்த கேள்விக்கு ‘தேனும் நாட்டுப்பற்றும் கலந்த பதிலை’ அவை வழங்கும்.
உண்மையில் அணு சக்தி ‘பாதுகாப்பானது’ என ஆதாரப்பூர்வமாக உலகில் எங்குமே நிரூபிக்கப்படவில்லை
கடைசியாக, சமீபத்தில் படித்த ஒரு பதிவிலிருந்து

// When Japan was struggling to contain the nuclear meltdown in Fukushima, the climate talks started in June 2011 in Bonn, Germany. On 14th June India tabled its proposal to include ‘nuclear power’ under the green technology when there is a major shift in the global opinion against nuclear power//

புகுஷிமாவில் நடந்த அணு உலை விபத்தினால், ஜப்பான் தள்ளாடிக்கொண்டிருந்த நேரத்தில், ஜெர்மனியில் ஜூன் 2011, தட்பவெப்ப நிலைபற்றிய பேச்சுவார்த்தை நடந்தது. உலகமே அணுசக்தியை கைவிட வேண்டும் என நினைக்கும் சூழ்நிலையில், 14 ஜூன் அன்று, இந்தியா ‘அணுசக்தி’யினை பசுமை தொழில்நுட்பத்திற்கு ஏற்றதொரு யுக்தியாக பரிந்துரைத்தது.
// The pro-nuclear group boasts of the safe history of nuclear projects in India. No nuclear reactor is safe! The nuclear reactor is highly complex system and even a small mishap in one of its subsystem results in a complete breakdown. And further not all accidents occur in the same pattern//

அணுசக்தி ஆதரவாளர்கள்….இந்தியாவின் அணு உலைகளின் ‘விபத்தற்ற’ வரலாற்றினை துதி பாடுகின்றனர். உண்மையில், எந்த உலையுமே பாதகாப்பானது இல்லை. அணு உலைகள் மிகவும் சிக்கலான வடிவமைப்பு கொண்டவை; ஒரு சிறு செயல்பிழை கூட….உலை முழுவதையும் பழுதடையச் செய்யவல்லவை.

இப்பதிவில் என் மனம் கவர்ந்த கேலிச்சித்திரம் இது…

//As Robert Newman (British Comedian & activist) puts it forward “It’s capitalism or a habitable planet – you can’t have both”//

ஆங்கில நகைச்சுவையாளர் மற்றும் செயல் திறனாளர் ராபர்ட் நியூமனின் கூற்று,
“முதலாளித்துவம் அல்லது வாழத்தக்க கிரகம் – இரண்டும் வேண்டுமென்பது…அசாத்தியம்”