Posts Tagged ‘shankar’

வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகி விட்டது….’மகா கேவலமான படம்’, ‘சுமாரான படம்’ என பல கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்த போதும், ரஜினி நடித்த ‘பாபா’, என் வாழ்க்கையின் மூன்று மணி நேரத்தை அபகரித்ததே இல்லை. கடைசியாக பார்க்க முடிவெடுத்தேன்.

நல்ல வேளையாக ஒரு நாளின் 3 மணி நேரத்தை ஒரே மூச்சில் வீணடிக்காமல், 4 நாட்கள், வெட்டியாய் இருந்த போதெல்லாம், இந்த வெட்டிப் படத்தை பார்த்து முடித்தேன். திகில் படமோ எனக்கூட நினைக்க வைத்தது, படத்தின் முடிவில் வந்த ‘தொடரும்’ என்ற அபாய எச்சரிக்கை!
“2002ல வந்த படத்துக்கு இப்ப விமர்சனம் எழுத போறியா மா”, என சலித்துக் கொள்பவர்களுக்கு,
“இல்லங்க…விமர்சனம் இல்ல; எப்பவும் போல என் கடுப்பின் வெளிப்பாடு…கதம் கதம்!!!”

படம் முழுவதும், ‘போதும் தலைவா…அதுதான் பைசா குடுத்து டிக்கெட் வாங்கிட்டோமே”, என தீவிர ரசிகர்களே கெஞ்சும் அளவிற்கு போதனைகள்!!! அதுவும் பிற்போக்குத்தனத்தின் உச்சத்தை தொடும் கொடூரமான பேத்தல்கள்.

உதாரணத்திற்கு,
“பொண்ணு வீட்டுல அடங்கி இல்லனா கெட்டுடுவா..பையன் வீட்ல அடங்கி இருந்தா கெட்டுடுவான்”
வசனம் எழுதிய பிரஹஸ்பதி முட்டாள் எனில், அதை பெருமையாக ‘போதிக்கும்’ கதையின் நாயகன் ஒரு படி மேல். டெல்லி கணேஷின் “ஏன்..வீட்ல இருக்கலாம்ல பாபா”, என்ற கேள்விக்கு தலைவர் (எதுக்குன்னு தான் விளங்கவே இல்ல!!!) வழங்கும் கேவலமான பதில் இது. ஊருக்கே உபதேசம் செய்யும் தலைவர், நிச்சயம் அதற்கு எதிர்மறையான போதனையைத்தான் வீட்டில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
இல்லையெனில் ‘மூன்று’, ‘கோச்சடையான்’ போன்ற திரைப்படங்கள் நம் பார்வைக்கு வந்திருக்காது.

அது போலவே இதுவரைக்கும் இரண்டு படங்களில் கேட்டு புளித்துப் போன அறிவுரை…”நீ காதல தேடிப் போகாத…தேடி வரும் காதலே சிறந்தது”!!
90 சதவிகித தமிழ் கதாநாயகர்கள் அவர்கள் படங்களில் இந்த பரிந்துரையை மதிக்கவில்லை என்பது, மானாவாரியாக கொட்டிக்கிடக்கும் தமிழ் படங்களில் இருந்து தெளிவாகிறது.
இதை எழுதும் போது, மண்டைக்குள் வந்து செல்வதெல்லாம் ‘ஆடுகளம்’ படம் தான். தனுஷ் கதாநாயகியை துரத்தி துரத்தி காதலிக்காமல் இருந்திருந்தால், ‘ஒத்த சொல்லால’ பாடல் நம் காதுகளுக்கு விருந்தாகி இருக்காது. நடன ஆசிரியர் தினேஷ்க்கு விருதும் கிடைத்திருக்காது (அப்படி துரத்தி துரத்தி காதலிப்பதில் இருக்கும் கேவலம்….இன்னொரு பதிவிற்கு)
கடுப்பை தவறாமல் கொழுந்து விட்டு எரிய செய்வது ரஜினியின் “பெண் என்பவள் என்றுமே அடங்கி இருக்க வேண்டியவள்; துள்ளி குதிக்க ஆரம்பிக்கும் போது, அடக்குவது ஒரு பொறுப்புள்ள ஆண்மகனின் கடமை” மாதிரியான காரித் துப்பத் தூண்டும் வசனங்கள்.
‘மன்னன்’இல் துவங்கி, ‘படையப்பா’வரைக்கும் பளிச்சென பல்லிளிக்கும் ரஜினியின் வசனங்கள், தமிழ் திரையுலகிற்கு ஒரு கரும் புள்ளி.
அதற்கு தாறுமாறாக விசிலும் கை தட்டலும் கிடைப்பது பார்த்து, தங்கள் பங்குக்கும் பெண்களை அடக்க போதிப்பவர்கள் விஜய், சிம்பு மாதிரியான வளர்ந்து வரும் திரை உலகின் ஆணாதிக்கக் கலைஞர்கள்.
படங்களில், எவனுமே செய்யாததை செய்யத் துடிக்கும் கதையின் நாயகர்கள், பெண்களை நடத்தும் விதத்தில் மட்டும் “அவன நிறுத்த சொல்லு….நான் நிறுத்தறேன்” approach எடுப்பது கோழைத்தனத்தின் வெளிப்பாடே!!

படங்களுக்கு வெளியில், மேலே குறிப்பிட்டுள்ள ரஜினியோ, சிம்புவோ, முற்போக்கு சிந்தனைகள் பேசிக் கேட்டதில்லை. அப்படி பெரியார் கருத்துக்களை கேட்டது, சத்யராஜின் பேச்சுகளில். அவரும், ‘வயித்துப் பொழப்புக்கு நடிக்க வேண்டி இருக்குங்க’ என சப்பக்கட்டு கட்டுவார் என நினைக்கிறேன்….இந்த பாடலுக்கு.

இந்த இடத்தில் ‘விலை உயர்ந்த மெசேஜ்’ கூறும் ஷங்கரை பற்றி சொல்லாமல் விட்டால், பதிவு முழுமை பெறாது (அந்த விதத்தில், நான் திரைப்படங்களிலுள்ள ஆணாதிக்கத்தனத்தை பற்றி எழுதும் வரை, ஷங்கரின் பேர் நிலைத்து நிற்கும்). ஒரு மெசேஜ் சொல்கிறேன் என எடுக்கும் படங்கள் அனைத்திலும், ‘நகைச்சுவை’ என்ற பெயரில், பெண்களை இழிவு படுத்துவதை மிகவும் லாவகமாக செய்பவர் இவர்.

மேற்கின் சில பிரபலமான பாப் பாடகர்கள், பாட்டுக் கச்சேரி இல்லாத மேடைகளில், சமூகம் பற்றி தம் கருத்துக்களை பதிவு செய்வர். “ஏன்டா பேச விட்டோம்”,என தொகுப்பாளர்களே அலுத்துக் கொள்ளும் அளவிற்கு!

அப்படியான பேத்தல் பேச்சுக்களுக்கு பெரிதாக செவிமடுப்பது மேற்கில் அரிது. ஒரு கலைஞனை அவனின் கலைக்கு மட்டுமே மதிப்பது ஒரு பெரும்பாலான வழக்கம். நம் ஊரில் அதற்கு நேர் எதிர்.
கதாநாயகர்கள் ஒரு கருத்து கூறினால் (திரைப்படத்திலோ அதற்க்கு வெளியிலோ), அது அவரின் சுயமான கருத்து என நம்பும் அறியாமை நிலவுகிறது.
ஒருவர் புகைப்பிடிக்கும் ஸ்டைலும், கண்ணடிக்கும் ஸ்டைலும், வசனம் பேசும் அழகும் பிடித்திருந்தால், அவர் பேச்சில் உள்ள கீழ்த்தனமான கருத்துக்களும் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்குமோ எனக்கூடத் சில சமயங்களில் தோன்றும்.
நாங்கள் திரைப்பாடல்களின் விமர்சனத்திற்கு Milliblog என்ற பதிவை கொஞ்சம் நம்புவோம். அந்த பதிவர் இளையராஜா பிரியர் எனக் கேள்விப் பட்டுள்ளேன். அது ‘உளியின் ஓசை’ படப் பாடலின் விமர்சனம். ஆஹா ஓஹோ என விமர்சித்திருந்ததால், ‘டவுன்லோட்’ செய்து கேட்டோம்.
இளையராஜாவின் இசையா என பல முறை சந்தேகம் வந்தது….1 நிமிடத்திற்கு மேல் எந்த பாடலையும் கேட்க முடியவில்லை. அன்று தோன்றிய சந்தேகம் தான் இது, “திரை உலகில் ஒருவரை பிடித்திருந்தால், அவரின் காரியங்கள் என்ன கேவலமாக இருந்தாலும், விரும்ப வேண்டிய கட்டாயம் உண்டோ”
ரசிகர்களின் அந்த நம்பிக்கையை நம்பியே அரசியலில் கால் பதித்தவர்கள் M.G.R, விஜய்காந்த், சரத்குமார் போன்றவர்கள். மக்களின் நம்பிக்கையை சூரையாடுபவையே ஈமு கோழி, சென்னை அமிர்தா, ஜாய் அலுக்காஸ் மாதிரியான விளம்பரங்கள்.
நினைத்துப் பாருங்கள், சென்னை அமிர்தாவின் தலைமை செயலாளர் அவ்விளம்பரத்தில், அவர் நிறுவனத்தை புகழ்ந்து பேசினால், எவ்வளவு பெற்றோர் அவர்கள் பிள்ளைகளை அந்த நிறுவனத்தில் சேர்ப்பர்?

செவிடன் காதில் ஊதும் சங்காய் இருக்குமெனினும், இந்த கதாநாயகர்களுக்கும், அவர்களை இயக்கம் இயக்குனர்களுக்கும் என் வேண்டுகோள் இது.
1. ‘மெசேஜ்’ கொடுக்கப் போவதாய் இருந்தால், முதலில் ‘முற்போக்கு என்ற தமிழ் சொல்லின் (ஆம்…அது தமிழ் சொல் தான்!) பொருளை அறிந்துக் கொள்ளவும்.
முற்போக்குச் சிந்தனையாளர்கள் எழுத்துக்களைப் படியுங்கள். சமூக மறுமலர்ச்சிக்கான ‘மெசேஜ்’ கூறுவதாய் இருந்தால், பெரியாரைப் படியுங்கள். உழைப்பாளர்களுக்கு ‘மெசேஜ்’ கூறப் போவதாய் இருந்தால், கார்ல் மார்க்ஸ் உங்களுக்கு உதவலாம்.
புதுசா எதையாவது செய்யும் போது, ஒரு வழி காட்டுதல் தேவை பாருங்க!!
2. “கால காலமா இத சொன்னாத்தான் படம் ஹிட் ஆகுது; நாம ஏன் அத மாத்தணும்”, என்ற எண்ணத்தை துறக்கவும்.
3. “ரொம்ப கஷ்டமா இருக்கும் போலவே…”, என இயக்குனருடன் சேர்ந்து தலையை சொரிகிரீர்கள் எனில், இந்த மெசேஜ் வழங்கும் எண்ணத்தை கை விடவும்.
கோடிக்கணக்கில் ரூபாய் செலவு செய்ய தயாராக இருக்கும் தயாரிப்பாளரை கண்டுபிடியுங்கள். பொழுதுபோக்கை மட்டும் குறிக்கோளாக வைத்து படங்களை எடுத்துத் தள்ளுங்கள். “பொழுதுபோக்குக்காக படம் எடுக்கறீங்க…சமூகத்த மாத்த இல்லியே; அதனால உங்களுக்கு எது வருமோ அத மட்டும் செய்ங்க”

இந்த பதிவு எழுத தூண்டுதலாக இருந்ததெனில்…நிறைய விஷயங்களை சொல்லலாம். ‘நண்பன்’ திரைப்படம், அதன் 100 வது நாள் திருவிழா , சாதாரணமாகவே ஷங்கரின் திரைப்படங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எனினும், என் கருத்துக்களை, பதிவாக பதிவு செய்ய தூண்டியதெனில், ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியை சொல்லலாம்.
‘சத்யமேவ ஜெயதே’ அதாவது ‘உண்மை மட்டுமே கடைசியில் வெல்லும்’ – இந்த வரியில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை. அதனால், இந்த தலைப்பு கொண்ட நிகழ்ச்சி பார்ப்பதிலும், பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. ஒளிபரப்பு ஆக ஆரம்பித்ததிலிருந்து தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் அது பற்றிய பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்த போதிலும், ஒரு வாரமாவது பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. அன்று மருத்தவரை பார்க்க காத்திருந்த போது..நேரம் கழிக்க படித்த பதிவு இது

அதன் பிறகு….இந்நிகழ்ச்சி பற்றிய இன்னும் பல பதிவுகளை படித்தேன். பெண் கருக்குழவிச்சிதைவு (female foeticide) பற்றி ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலையும் பார்த்தேன்.
இத்தலைப்பு பற்றிய உரையாடலை பார்ப்பதற்கு முன், படித்த பதிவுகள் மற்றும் அவற்றிற்கு அளிக்க பட்ட பின்னூட்டங்களில் பெரும்பாலும் பார்த்த கருத்து, “என்னதான் ஆமிர் அத பத்தி ஒன்னும் சொல்லல…இதுக்கு ஒரு வழி சொல்லல’னு சொன்னாலும்….யாருமே பேச தயங்கற ஒரு தலைப்ப தைரியமா டிவில பேசினதுக்கு, ஆமிருக்கு ஒரு சபாஷ்”
20-30 வருடங்களாக…இந்த சமூகக் கொடுமையைப் பற்றி பேசுபவர்களும், விவாதிப்பவர்களும் இருந்த வண்ணம் இருக்க…ஆமிர் கானின் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த பாராட்டுக்கள்….சிறிது ஆச்சரியத்தை தான் தருகிறது.
உதாரணத்திற்கு, இந்த இரு ஒலிபரப்புகளும், பெரியார் பெண் விடுதலை, திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமை படுத்தும் தமிழ் சமூகத்தின் நிலைப்பற்றி (1970 களில்) பேசும் தொகுப்புகள். நகைமுரண் என்னவெனில், இவை இன்றைய சமூக சூழலுக்கும் பொருந்தும் என்பதே.


‘பால் நிர்ணயம்'(sex determination) செய்யும் மருத்துவமனைகளை மூடினால்…இந்த சமூகக் கொடுமைக்கு தீர்வு கண்டுவிட முடியும்…என்ற ஆமிர்கானின் அணுகுமுறை, ஒரு நெருடல். இதுவே இந்நிகழ்ச்சி மீது ஒரு நம்பிக்கையின்மையை வரவழைக்கிறது.
சமூக பிரச்சனைகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி எனில், அது சமூகத்தில் உள்ள சிக்கலை, சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் தரப்பிலிருந்தும் ஆராய்ந்து, அந்த பிரச்சனையை உருவாக காரணமாய் இருந்த விஷயங்களையும், அப்பிரச்சினையால் சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளையும், மக்கள் முன்னிறுத்த வேண்டும். பார்க்கும் மக்கள்…இவற்றை உள் வாங்கி, தம் தரப்பிலிருந்து, அப்பிரச்சனையை தீர்க்க முடிந்தவற்றை செய்ய முன் வர வேண்டும் (ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால்)
இம்மாதிரியான நிகழ்ச்சிகளிலும், சமூகத்தில் வேரூன்றி இருக்கும் பிரச்சனைகளுக்கு, திரைப்பட கதாநாயகர்கள் போல், ‘இதுவே சரியான தீர்வு’ என தண்டோரா அடித்து…மக்களின் யோசித்து முடிவெடுக்கும் திறமையை மழுங்கடிப்பது…நிகழ்ச்சியின் சரிவே!!
இந்நிகழ்ச்சி மூலம், ஆமிர் அளிக்கும் ‘fast food’ தீர்வுகளுக்கும், ‘Rich gets richer,poor gets poorer’ பிரச்சனைக்கு, ஷங்கர், தன் ‘சிவாஜி’ திரைப்படத்தில் அளிக்கும் தீர்வுக்கும், வித்யாசம் பூஜ்ஜியமே.

சாதரணமாக, சமூக இன்னல்கள் பற்றிய நிகழ்ச்சிகள் பார்க்கும் போது அல்லது இணையத்தில் படிக்கும் போது, நம் தமிழ் திரைஉலகம் இது பற்றி தெரிவித்த கருத்து என்ன என நினைப்பேன்.
பெண் சிசு கொலை, பெண் எனும் ஒரு பிறவியை ஒரு பாரமாக, தேவையற்ற பொருளாக இச்சமூகம் பார்ப்பதை கண்டித்தோ அல்லது அது ஒரு பிற்போக்கான எண்ணம் என்றோ…சாடியதாக ‘கருத்தம்மா’ தவிர எந்த படமும் நினைவுக்கு வரவில்லை.
ஒரு பெண்ணை சமூகத்தில் ஒரு சக மனிஷியாக மதிப்பது, அவளின் விருப்பு வெறுப்புகளுக்கு மரியாதை கொடுப்பது…போன்ற யதார்த்தமான விஷயங்களை, வெள்ளித்திரையில் கொண்டு வந்த படங்கள் எனில், சட்டென நினைவுக்கு வருபவை ‘வீடு’ மற்றும் ‘அவள் அப்படித்தான்’
இது வருத்தமான நிலையெனில், பெண்களை கேலிப்பொருளாக, சிற்றின்பப்பொருளாக மட்டுமே திரைப்படங்களில் சித்தரிப்பது…மிகவும் ஆபத்தானது.
அந்த விஷயத்தில்…ஒரு படம் விடாது, தன் அனைத்து படங்களிலும், பெண்களை அல்லது பெண்ணின் உடல் அங்கங்களை கேலி செய்வதையோ, அல்லது அவர்களுக்கு ‘அறிவுரை’ வழங்குவதையோ வழக்கமாக கொண்டுள்ள இயக்குனர் ஷங்கர் முதலிடம் வகிக்கிறார் என்பதில் ஐயமில்லை.

“ஏன் ஷங்கர்…பேரரசு, K.S.ரவிக்குமார்,..எல்லாருமே அப்படித்தான படம் எடுக்கறாங்க”, என சீறிப் பாய்பவர்களுக்கு
“என் படங்கள் வழியா மக்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லணும்”…இவ்வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் திரு.ஷங்கர் அவர்கள். தன் படங்கள் பற்றிய தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும், அவரின் நேர்க்காணல்களிலும், இவ்வாக்கியம் இடம் பெறாமல் இருந்ததில்லை.
அவர் படங்கள் பார்த்தவரையில், அந்த ‘நல்ல மெசேஜ்’ என்னவென்று இது வரை எனக்கு புரிந்ததில்லை.
“தம்பி…உன்னால சுத்தி நடக்குற அனியாயங்கள தட்டி கேக்க முடியலனா…உனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கற alter ego (மாற்று அகம்)வ எழுப்பு; அவன் கொலை ஏதாவது செஞ்சா கூட, உன்ன மனநல காப்பகத்துல ரெண்டு வருஷம் வச்சுட்டு…வெளியேத்திடுவாங்க”
“சுத்தி இருக்கற வருமைய பாத்து உன் ரத்தம் கொதிக்குதா…நல்ல பைசா வச்சிருக்கற கஜானால கொள்ளை அடி…ஏழைகளுக்கு உதவி செய்”
இவ்வாறு காலனாவிற்க்கு பயனற்ற, யதார்த்த வாழ்க்கைக்கு எள்ளளவும் சரிபட்டு வராத விஷயங்களை…ஆங்கில பட உலகில் ‘fantasy’ என கூறுவர். இந்த ரகம் சார்ந்த ஆங்கில படங்களுக்கும், ஷங்கரின் ‘100 கோடி’ செலவு செய்து ‘நல்ல மெசேஜ்’ வழங்கும் படங்களுக்கும், வித்யாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
“ஏதோ…தினசரி பிரச்சனைகள்ல இருந்து…ஒரு 3 மணி நேரம் விடுதலை குடுக்கறாரு…அத போய் குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கியே”,என கேள்வி எழுப்புபவர்களுக்கு…
உப்புச்சப்பற்ற படங்களை வாரி வழங்கும் ‘low budget’ இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்கள் கிடைப்பதனால் மட்டும், பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் ஷங்கருக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு எறும்பு வெல்லம் சுமந்தபடி மலை ஏறுகிறது…என வெள்ளித்திரையில் காட்டுவது ‘low budget’ இயக்குனர்கள் எனில், அந்த எறும்பிற்கு ‘Peter England’ சொக்காய் அணிவித்து, ‘roller skates’ அணிந்த படி, வெளிநாட்டு இனிப்பு பண்டத்தை தூக்கி போகும்படி ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்’இல் காட்டுவது ஷங்கர். தேவையற்ற பிரம்மாண்டங்களை துண்டித்து விட்டால், அந்நியன், இந்தியன், சிடிசன், சமுராய், ரமணா…அனைத்துமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
இத்தனை பாராட்டுக்கள் ஒரு எரிச்சல் எனில், அவரின் படங்களில் ‘நகைச்சுவை’ என்ற பேரில் இடம் பெரும் சில காட்சிகள்…. சகித்துக்கொள்ள முடியாதவை.
‘Gentleman ‘ திரைப்படத்தில் இடம்பெறும் செல்ல விளையாட்டு என்ற பேரில், பெண்ணை சிற்றின்பப்பொருளாக காட்டும் காட்சிகள், ‘Boys’ திரைப்படத்தில், பெண்ணின் மார்பகங்கள் பற்றி ‘நகைச்சுவையாய்’ பேசப்படும் வெட்டிப் பேச்சுக்கள்…இவை எவையுமே சமூகத்திற்கு தேவையற்றது என தணிக்கைக் குழு முடிவு செய்யாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இவை இயக்குனரின் அறியாமையையும், ‘ஆம்பளை பசங்க இத மட்டும் தான் ரசிப்பாங்க’ என பொதுமைப்படுத்தும் மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.
“இவ்வளவு சீரியஸா எடுத்துக்க வேணாமே”, என ஷங்கருக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு,
“நாலு பொண்ணுங்க…குட்டிச்சுவர்ல உக்காந்துகிட்டு, நடந்து போற நாலு பசங்கள…அவங்க ஆண் குறி சைசுக்கு ஏத்தா மாதிரி…தரம் பிரிச்சு, படுக்கைல எவனுக்கு வீரியம் ஜாஸ்த்தியா இருக்கும்னு ஆலோசிக்கறாங்க”, என ஷங்கரின் எந்த ‘திரைக்காவியங்களிலும்’, ஏன் எந்த தமிழ் இயக்குனரின் படைப்பிலும் பார்த்ததாய் நினைவில்லை.
‘நகைச்சுவை’ ததும்ப படம் எடுக்கிறார் எனில், படம் பார்க்க வரும் ஒரு சாராரை மட்டும் கேலி செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என புரியவில்லை.
“அது எப்படி,’ என இழுப்பவர்களுக்கு…
கேலி செய்வதில் ‘சமத்துவம்’ சரிப்பட்டு வராதெனில் , ஒரு பாலினத்தவரை மட்டும் நகைச்சுவை பொருளாக சித்தரிப்பதை நிறுத்துவது தானே முறை.

அடுத்து ஸ்ரீ.ஸ்ரீ. சங்கரானந்தா ‘அறிவுரை’ வழங்கும் படலம்…

‘Gentleman ‘ திரைப்படத்தில் அர்ஜுனின் வசனம் ஒன்று…
//இழுத்து பொத்திகிட்டு நிக்கறாளே சுஷீலா..இவள யாராவது கைய்ய புடிச்சு இழுத்திருக்காங்களா…இல்லியே;
ஏன்..இவ ஒழுங்கா நடந்துக்கறா
சுதந்திரமா இருங்க…சுண்டி இழுக்காதீங்க
சகஜமா இருங்க..சஞ்சலம் படுத்தாதீங்க//

“முற்போக்கு கருத்துக்கள்” என்றால், “என்னதது…கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வச்சு simulate செய்ய முடியுமா” என வினவும் இயக்குனரிடமிருந்து பெண் விடுதலையை சித்தரிக்கும் காட்சிகளை எதிர்பார்க்க முடியாது. கேட்பதெல்லாம்…பிற்போக்குத்தனமான கருத்துக்களையாவது பரப்பாமல் இருக்க முயற்சி செய்யுங்களேன்…என்று.
அடுத்ததாக…அவரின் பொன்னான திரைப்படங்கள்…வெளிச்சம் போட்டு காட்டும் அவரின் ‘நிற வெறி’…
கருப்பு சாயம் பூசிய ஒரு அக்கா, கருப்பு மகள்களான அங்கவை, சங்கவை…இவற்றை ‘நகைச்சுவை’ என வழங்கும் ஒரு இயக்குனர், எவ்வளவு ஒரு கொடூரமான நிறவெறியராக இருக்க வேண்டும்?
கருப்பாக அந்த பெண்ணை கேலிப்பொருளாய் காட்டுவதோடு, அவர் கதாநாயகர்களை வைத்தே ‘இந்த பெண்கள் திருமணச் சந்தையில் விலை போக மாட்டார்கள்’ என அவர்களின் எதிர்காலம் பற்றியும் தன் கருத்தை தெரிவிக்கிறார்.
தமிழ் திரை உலகில், இவரொரு சிறு துளியே!
இது மாதிரியான சமூகப் பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் முடிந்த வரையில் விலகி இருக்க விரும்பும் பல சிகரங்களை பற்றியும் சிரத்தின் ஒரு மூலையில் கூட மூளை என்ற ஒன்று இல்லாத இயக்குனர்கள் பற்றியும் எழுத விருப்பம்தான். இன்னொரு பாகம் எழுத வேண்டும் 🙂

சென்ற சனிக்கிழமை ‘பீப்ளி (லைவ்)'(Peepli(Live)) என்ற ஒரு ஹிந்தி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பீப்ளி என்ற கிராமத்தில் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலை, அவர்களின் அவலத்தில் குளிர்காயும் வெகுஜன ஊடகங்களின் கூச்சல், விவசாயிகளின் துயரம்பால் அரசியல்வாதிகள் கொண்டுள்ள ‘அக்கறை’, இவையனைத்தையும் யதார்த்தமாய் நம் கண்முன் கொண்டு வரும் கதை. படம் இயக்கப் பட்ட விதம் அருமை! கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு, அவர்களின் துன்ப இன்பங்களின் (?) வெளிப்பாடு – இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் ஒரு சபாஷ்!

நமக்கு பிடித்த பொருள் இன்னொருவரிடம் இருக்கும்பொழுது நம்மிடமும் இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் இயல்பே. அந்த படம் பார்த்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய எண்ணமும் இதுவே. தமிழில் இப்படி சமுதாய சீர்க்கேடுகளை விளக்கடித்து காட்டும் படங்கள்…விரல் விட்டு எண்ணக்கூடியவையே. கடைசியாக என்னதான் வந்தது என யோசிக்கையில் ‘அங்காடி தெரு’உம், ‘கற்றது தமிழ்’உம் தான் சட்டென நினைவுக்கு வந்தது.
ஏன் இது போன்ற படங்கள் வருவதில்லை என சில ‘நல்ல’ இயக்குனர்களை கேட்க விரும்பினேன்.

“இப்ப கொஞ்சம் பிஸி…அப்பறம் வேணும்னா பாக்கலாம்”, என தட்டிக்கழித்தனர். அப்படி என்னதான் செய்கின்றனர் என விசாரித்து பார்த்ததில், ஒருவர் தன் முந்தைய படங்களை விட அதிகம் செலவு செய்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம். ‘உலகத்தரத்திற்கு’ நிகராய் தமிழ் படங்கள் இருக்குவேண்டும் என்ற அவா…இரவு பகல் பாராமல் உழைக்கிறாராம். கோடிக்கணக்கில் செலவு செய்து, ஒரு நிகழ்வை மேலோட்டமாக படம் பிடிப்பதே நம் இயக்குனர்களின் அகராதியில் ‘உலகத்தரத்திற்கு நிகர்’ என புரிந்துக்கொண்டேன்.

மற்றவர்கள் வீட்டில் என்ன கொதிக்கிறது என எட்டிப்பார்த்த எனக்கு, “அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைக்க முடியுமா சார்…எவ்வளவு காலத்துக்குத்தான் வருமைய பத்தியும், சாதிச்சண்டைய பத்தியும், பெண் விடுதலை பத்தியும் படம் எடுக்கறது சொல்லுங்க; ‘காதல்’ என்ற ஒரு புனிதமான உணர்வ இன்னொரு கோணத்துல, யாருமே இதுவர எடுக்காத ஒரு கோணத்துல எடுக்கறோம். 100 நாள் உறுதி சார்”, என்ற காய்ந்து போன ரொட்டித்துண்டே கிடைத்தது.
கொஞ்சம் அக்கறை கலந்த குரலில்,”இல்ல சார்…சமுதாயத்துல இருக்கற அவலங்கள படங்கள்ல காட்டும் போது தான மக்களுக்கு தங்கள சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியும்; அந்த புரிதல் இருந்தாத்தான தவறுகள தட்டிக்கேக்கும் துணிச்சல் அவங்களுக்கு வரும்”, என கேட்டு முடிப்பதற்குள்,

“என்ன பேசறீங்க சார்…நாங்க படங்கள்ல காட்டாத சமுதாய பிரச்சனைகளா?? நடக்கற தப்ப மட்டும் காட்டிட்டு நிறுத்தாம அதுக்கான தீர்வையும் சொல்றோமே “, என வந்தது வீராவேச பதில்.

“தப்பு செய்யறவங்க குடி உரிமைய பறிச்சிடனும், பண வசதி படைச்சவங்க அவங்கவங்க விருப்பத்துக்கு ஏத்தபடி கிராமங்கள தத்தேடுக்கனும், குழாய்ல தண்ணி வரலைனா, வீட்டுல ஏதாவது திருட்டு போச்சுனா துண்டு சீட்டு எழுதி ரோட்டோர டப்பால போடணும், வருமைய ஒழிக்கணும்னா எழைகள ஒழிக்கணும், அதுக்கு அவங்களுக்கு ‘இறப்பு’னு ஒரு சன்மானத்த வழங்கணும்…இதுமாதிரியான காலனாக்கு பயனில்லாத தீர்வுகளை தான சொல்றீங்க; படத்துல பாத்து வேணும்னா கைத்தட்டுவாங்க சார்…நடைமுறைக்கு சாத்தியமாக வேண்டாமா? பிரச்சனைய காட்டுங்க சார்…தீர்வு என்னனு அவங்க முடிவு பண்ணிக்கட்டும்”, என நொந்துக்கொண்டேன்.

“இத பாருங்க.. மக்கள் என்ன பாக்கனும்னு விரும்பராங்களோ அதத்தான் நாங்க எடுக்கறோம். நாங்களும் இங்க பத்து தலைமுறைக்கு சொத்து வச்சுட்டு படம் எடுக்க வரல சார்…எங்களுக்கும் பொண்டாட்டி புள்ளங்க இருக்குல”, என தங்கள் பக்கம் உள்ள ‘நியாயத்தை’ முன் வைத்தனர்.

“தம்பி.. 8 மணி நேரம் உழைச்சிட்டு வரோம், நிம்மதியா உக்காரும் போது நாட்டுல ஏதோ ஒரு மூலைல நடக்கற சாதிச்சண்டை, தற்கொலைகள காட்டி இது நல்லதுக்கில்லை, இப்படியே போனா நாடு கதி அதோகதிதான்னு சொன்னா மனிஷன் tension ஆகமாட்டான்??ரெண்டு குத்து பாட்டு, வடிவேலு காமெடி, சென்னைல உக்காந்துக்கிட்டே foreign ல ஒரு டூர்… படம் முடிச்ச உடனே சரவண பவன்ல சாப்பாடு, அப்பறம் நிம்மதியா கட்டைய கடத்தணும்…இதுக்கு மேல வேற என்ன வேணும் தம்பி”, என ஒரு ‘common man ‘இன் இயல்பான தேவைகளை எடுத்து வைத்தார் ஒரு common man .

அதுவும் சரிதான்…8 மணிநேரம் ஏசி யிலியே அமர்ந்திருப்பதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெட்டிக்கதை அடிப்பதும், வீட்டில் இருக்கநேர்ந்தால் தவறாமல் மெகா சீரியல்கள் பார்ப்பதும், “உங்க வீட்ல இன்னிக்கி என்ன சமையல்”, “இந்த புடவை எங்க வாங்கினது”, போன்ற மிக அவசியமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும்…எத்தனை மன உளைச்சலை உண்டாக்கும். இதுனாலதான் மலம் அள்ளரவனுக்கும், கொளத்து வேலை செய்யறவனுக்கும் கொடுக்கற சம்பளத்த விட office ல வேலை பாக்கறவங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கறாங்களா??…இப்பத்தான சங்கதி புரியுது!!

“அப்படியே நாட்டு நடப்ப பத்தி தெரிஞ்சிக்கணும்னா newspaper இருக்கு; நியூஸ் பாக்கறோம். ஒரு பரபரப்ப உருவாக்கனும்னு சாதாரண விஷயத்த ஊதி பெருசாக்காதீங்க தம்பி”, திரும்பவும் நம் common man .

“உள்ளத உள்ளபடி சொல்றோம் சார்…நாட்டுத்தலைவர்கள் மக்களுக்கு சொல்ல ‘விரும்பும்’ கருத்துக்கள ஒரு தூதுவனா இருந்து அவங்க living room க்கே கொண்டுபோய் சேக்கறோம்”, என தங்கள் பொதுநல கோட்பாட்டை முன்வைத்தார் பத்திரிக்கையாளர் ஒருவர்.

“நாட்டுத்தலைவர்கள் சொல்றதெல்லாம் எப்பவுமே உண்மையா இருக்கறதில்லையே; எந்த பிரச்சனையையும் மூடி மறைக்கறா மாதிரி தான பேசறாங்க…உண்மை நிலைமைய மக்களுக்கு சொல்ல வேண்டியது உங்க கடமைன்னு உங்களுக்கு தோணலியா?”, என பணிவாகத் தான் கேட்டேன்.

அதற்கு,” நாட்டு நடப்பெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தான் இப்படி கேக்கறீங்களா…நித்யானந்தா அடிச்ச லூட்டிய தெள்ளத்தெளிவா மக்களுக்கு படம்புடிச்சு காட்டினோம்; அம்மா சேத்து வச்ச சொத்துக்கள அக்குஅக்கா பிரிச்சு வச்ச பெருமை எங்க சேனலையே சேரும்; தேர்தல் நேரத்துல எந்த கட்சி ஜெயிக்கும்னு வாக்கு எண்ணி முடிக்கறதுக்குள்ள 1008 analysis செஞ்சு துல்லியமா கணிக்கறோம்…இப்படி அடுக்கிகிட்டே போகலாம் சார்”, என நாட்டிற்கு மிக ‘அவசியமான’ நிகழ்வுகளை படம்பிடித்தமைக்காக சேனல் சார்பில் பெருமிதம் அடைந்தார் நம் பத்திரிக்கையாளர்.

“நாடு முழுக்க விவசாயிகள் நூத்துக்கணக்குல தற்கொலை செஞ்சுக்கராங்களே…அது பத்தி உங்க கருத்து?”, என நேராக matter க்கு வந்தேன்.

“எல்லாம் விசாரிச்சாச்சு சார்…விஞ்ஞானம் இவ்வளவு வளந்திருக்கு…ஆனா அதோட benefits அ புரிஞ்சிக்கிற படிப்பறிவு இந்த விவசாயிகளுக்கு இல்ல. எடுத்து சொன்னாலும் எங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நழுவீடறாங்க. அரசாங்கம் தான் என்ன செய்யும் சொல்லுங்க. தாகம் எடுத்தா தண்ணிய குடின்னு சொல்லலாம்; வாயில ஊத்தணும்னு எதிர்பாத்தா…சரிப்பட்டுவராதுங்க”, என அலுத்துக்கொண்டார் பத்திரிக்கையாளர்.

“பொத்தாம் பொதுவா பேசக்கூடாது தம்பி. மாடுகள வச்சு உளுதுகிட்டு இருந்தோம்; tractor வண்டிய பயன்படுத்த சொன்னாங்க…செஞ்சோம். பம்ப்செட் போட்டா நீர் பாசனம் சுளுவா முடியும்னு சொன்னாங்க; அதையும் ஏத்துக்கிட்டோம். வருஷக்கணக்கா நெல்லு தான் பயிரிடறோம்; நல்ல மழையும் பேஞ்சு, சரியா பாத்துக்கிட்டோம்னா மகசூலுக்கு கொறையே இல்ல. இப்ப என்னடானா நெல்லு வேணாம், பருத்தி பயிரிடுங்க, காய்கறி வகைங்கள பயிரிடுங்கனு புதுசா ஒன்னு சொல்லுதாங்க. இந்த உரத்த வாங்கு, அந்த பூச்சிக்கொல்லிய தெளின்னு புதுசு புதுசா கொண்டு வராங்க. எங்க அப்பாரு காலத்துல இருந்த மருந்துங்க எதையும் இப்ப சந்தைல பாக்கவே முடியறதில்ல. இதுல அவங்க சொல்லறத செய்யலேனா மானியம் கொடுக்க முடியாதுனு பயம் காட்டுதாங்க;

விளைச்சல் இருக்கோ இல்லியோ வாங்கின கடன் மட்டும் குட்டிபோட்டுக்கிட்டே இருக்கு…இப்படியே போச்சுனா பக்கத்துஊட்டு பரமசிவம் நிலைமைதான். இதுல ஒரு நல்ல விஷயம் என்னனா தம்பி…இவங்க கொண்டுவர்ற பூச்சிக்கொல்லிங்க பயிர் வளர உதவுதோ இல்லியோ…மனிஷன் உயிர் போக்க நல்லாவே உதவுது”, என இன்றைய தினத்தில் ஒரு விவசாயி அனுபவிக்கும் அவலங்களை விவரித்தார் ஒரு பெரியவர்.

“இந்த சினிமா காரங்க ஆட்டோ ஓட்டுதா மாரியும் காய்கறி விக்குதா மாரியும் வேஷம் கட்டுதாங்களே, எங்கள மாரியும் வேஷம் போட்டா, டவுன் சனங்களுக்கும் எங்க கஷ்டம் புரியும்.. அதபாத்துபுட்டு ஆராவது ஏதாவது செஞ்சா நல்லா இருக்கும்ல தம்பி”, என்ற பெரியவரின் வார்த்தைகள்…சுருக்கென குத்தின.

சினிமாகாரர்களுக்கும் ‘common man ‘க்கும் இடையில் இருக்கும் நீண்ட இடைவெளி புரிந்ததுடன், ஏதாவது முயற்சி எடுத்தாலும் மசாலா சேக்கெறேன்னு விவசாயி பூச்சிக்கொல்லி குடிச்சிட்டு சாகறதுக்கு முன்ன ஒரு குத்து பாட்ட வைப்பானுங்க இந்த சினிமாக்காரனுங்க. ஏன்டானா அப்பத்தான் எங்க வீட்டுல உலை கொதிக்கும், மக்கள் கூதுகலம் அடைவாங்கன்னு சொல்லுவான்.

உயிரே போனதுக்கு அப்பறம்…கூதுகலமாவது வெளக்கெண்ணையாவது…நீங்க பீப்ளி (லைவ்) மாதிரியான முயற்சி எல்லாம் எடுக்காம இருக்கறதே நல்லது…யதார்த்ததோட கொஞ்சமும் ஒட்டாத படம் எடுக்கறது தான் உங்களுக்கு சரிப்பட்டு வரும். அத கவனிங்க…வேற எந்த ஆணியயையும் புடுங்க வேணாம்!!