Posts Tagged ‘tamil culture’

தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மாதிரி இங்கு வெளியாகும் ஒரு தினசரி செய்திப் பத்திரிகை ‘தி ஏஜ்’
சென்ற வாரம் ரயில் பயணம் போது படித்த ஒரு பதிவு, ‘Fist bump’ அதாவது இருவர் சந்தித்துக்கொள்ளும் போது , விரல்களை மடித்தபடி, குத்திக்கொள்ளும் ஒரு வழக்கம் பற்றியது. இது நம் ஊரின் வணக்கம் கூறுவது போன்றது…ஆனால் கொஞ்சம் நட்பு ததும்பும் ஒரு வெளிப்பாடு.

இந்த பதிவு படித்த போது, “பரவாயில்லைப்பா…இது மட்டும் ஒரு வழக்கம் ஆச்சுனா ரொம்ப நல்லா இருக்கும்”, என தோணிற்று.

ஏனென புரிந்துகொள்ள, கை குலுக்கலின் மேல் எனக்கு ஏற்பட்டுள்ள குட்டி வெறுப்பை விளக்க வேண்டும்.

corporate துறையின் மீது பல்வேறு காரணங்களுக்கு வெறுப்பு இருக்கும் போதிலும், சில இடங்களில் தலை தூக்கும் பாலின சமத்துவம் எனக்கு பிடித்த ஒன்று. ஊதியம், வேலை உயர்வு போன்றவை பற்றி இங்கு பேசவே இல்லை…ஏனெனில் அவற்றில் சமத்துவம் என்பது, சூரியன் மேற்கில் உதிக்குமா என எதிர்ப்பார்ப்பது போன்றது.
ஒரு கூட்டத்தில், ஆண்களும் பெண்களும் கூடி இருக்கும் போது, புதியதாய் கூட்டத்தில் சேர்பவர், பாகுபாடின்றி அனைவருடனும் கை குலுக்குவார். பெண்களின் கன்னங்களில் முத்தமிடுவது, ஆண்களின் கைகளை குலுக்குவது என்ற வேற்று பராமரிப்பு பெரும்பாலும் நிகழாது.
கை குலுக்குபவரின் கையை குலுக்காது, சும்மா தடவுவது, “கை குடுத்துட்டானே…ஒரு ஹாய் சொன்னா போதாதா”, என்ற தோரணையில் விரல்களை மட்டும் தொடுவது, அவரின் வரவேற்ப்பை அவமதிப்பது போன்றே எனக்கு தோன்றும்.
ஏனெனில் நானே பலமுறை அந்த ‘ரொம்ப சுமார்’ கைகுலுக்கலின் பெருனராய் இருந்திருக்கிறேன். அவரை சந்தித்த மகிழ்ச்சியில் கை குலுக்க விரும்பி இருப்பேன். அவர் வழவழ கொழகொழவென கை கொடுக்கும் போது , “ஏன்டா கை குடுத்தோம்”, என அலுத்துக்கொள்ளத் தோன்றும்.

இது வரை இந்த அனுபவம் மேற்கத்திய மக்களிடமிருந்து எனக்கு கிடைத்ததில்லை (ஒரு முறை எலும்பு முறியும் அளவிற்கு இருக்கமாய் பிடித்த அனுபவம் ஒன்று உண்டு!!)…இந்த கசப்பான அனுபவம் கொடுத்தவர் அனைவரும் நம் நாட்டவரே, ஆண் பெண் வேறுபாடின்றி!

நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனோ என அன்று ராஜிடம் பேசும் போது , அவன் கதையும் இதே! நானாவது அலுத்துக்கொண்டேன், அவன் கடுப்பில் இருந்தான். இனி கூட்டத்தில் இந்தியப் பெண்கள் இருந்தால், முடிந்த வரை கைக்கொடுப்பதை தவிர்க்கப் போகிறேன் என சூளுரைத்தான்! Corporate துறையில் வேலை செய்யும் சில பெண்கள் கை குலுக்கும்போது காட்டும் கூச்சத்தைப் பார்த்து, இங்கும் அச்சம் மடம் நாணத்தை கடைபிடிப்பரோ என பல முறை தோன்றியதுண்டு.
ஆண்களைப் போல் படித்து, நேர்காணலில் பங்கேற்று, அவர்களுக்கு நிகரான ஒரு பொறுப்பில் அமர்ந்த பின், “என்னை ஒரு மென்மையான பொண்ணாத் தான் நீ மதிக்கணும்”, என்ற வீண் எதிர்ப்பார்ப்பு, தகர்த்தெறிந்த ஏற்றத்தாழ்வை மீண்டும் அரவணைத்துக்கொள்வது போன்றது.

இங்கு நினைவுக்கு வருவது, இன்னொரு முகம் சுழிக்க வைக்கும் வரவேற்பு முறை.

நீங்கள் கைகுலுக்க எத்தனிக்கும் போது, கைக்கூப்பி வணக்கம் கூறி, “இதுதான் தமிழ் கலாச்சாரம்” என கூறும் ‘சின்னபுள்ள’ தனம்.
‘ஒருவரின் வரவேற்ப்பு முறையை மதிக்காது, உன் கலாச்சாரத்தை ‘பெருமையாய் வெளிப்படுத்து’ என தமிழ் கலாச்சாரம் வலியுறுத்துகிறதெனில், இதை விட மோசமான கலாச்சாரம் உலகில் இல்லை என்பது நிதர்சனம்.
இப்படி செய்பவர்களிடம், “அப்ப தமிழ் தெரியாத ஒருத்தர், உங்க கிட்ட வேற்று மொழில கேள்வி கேட்டா, “தமிழை என்னுயிர் என்பேன்”னு சொல்லிட்டு தமிழிலியே பதில் அளிப்பீங்களா??”, என கேட்கத் தோன்றும்.

உலகமயமாக்கலை எற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அதுதான் நம் நாட்டின் எதிர்காலமென தீர்மானிக்கப் பட்டுவிட்டது. இதன் பிறகு, உலக மேடையில் பிற நாட்டவருடன் உரையாடும் தருணங்களில், “என் நாட்டுல இதெல்லாம் செய்ய மாட்டாங்க; இங்க மட்டும் நான் ஏன் அத செய்யனும்” என ‘நடிப்பது’ பிற்போக்குத்தனமே! உடனே, “அப்ப என்ன சொல்ற…மத்தவங்க பார்வைல நல்லவனா தெரிய என்ன வேணும்னாலும் செய்யலாமா?”, என கேள்வி எழுப்புவது, ‘கேட்டாகணும் என்பதற்காக மட்டும் கேட்கப் படும் ஒரு உப்புச்சப்பற்ற கேள்வி.

‘Aping’ அதாவது, ஒருவர் செய்வதை அப்படியே திருப்பி செய்வது. ஒருவரின் அங்கீகாரம் கிடைக்க, அவர் செய்யும் மற்றும் செய்ய விரும்பும் செயல்களை நாமும் விருப்பமே இல்லையெனினும் செய்வது, நம் தனித்தன்மையை விட்டுக் கொடுப்பதற்கு நிகர்.

அப்படி இல்லாமல், அந்த ஊர் கலாச்சாரத்தை தெரிந்து கொள்வது, அதற்கேற்ப நம்முடைய சில பழக்கங்களை மாற்றிக் கொள்வது, அவ்வூர் மக்களுடன் நல்ல நட்புக்கும், பொழுதுபோக்கான கலந்துரையாடல்களுக்கும் வழிவகுக்கும்.
உதாரணத்திற்கு, ரயிலில், பேருந்தில் இங்கு பயணம் செய்யும் போது , பார்க்கும் ஒரு பழக்கம், தொடர்ந்து மூக்கு உறிஞ்சிக்கொண்டே இருப்பது. நம் ஊரில், அது இன்னொரு சத்தமென மறைந்தாலும், மேற்கில், பொது இடங்களில் அதனை ஒரு அநாகரீக செயலாகவே பார்க்கின்றனர். இன்றும் எனக்கு நினைவில் இருப்பது, ரயிலில் அன்று நடந்த ஒரு சம்பவம். இந்தியர் ஒருவர், தொடர்ச்சியாக மூக்கு உறிஞ்சிக் கொண்டிருக்க, அருகில் இருந்த பெண்மணி ஒருத்தி, காகித கைக்குட்டை ஒன்றை நீட்டினார்.இவரோ, “இல்ல பரவாயில்ல”, என கூறி, மூக்கு உருஞ்சலை தொடர்ந்தார்!
இது போன்றே பொது இடங்களில் சத்தமாக பேசுவது இங்கு ஒரு அநாகரீகமாகவே பார்க்கப் படுகிறது. இதை பெரும்பாலும் ரயில்களிலும், உணவகங்களிலும் பார்க்க முடியும். 10 இல் 8 முறை உரக்க பேசும் கூட்டம் ஒரு உணவகத்தில் இருந்தால், அம்மேசையில் இந்தியர்களே இருப்பர் . அதுவே மேற்கத்திய மக்களாய் இருந்தால், மது அதிகமாகி, நாகரீகத்தை போதையில் தொலைத்த கூட்டமாக இருக்கும்.

“என்னங்க friends கூட சாப்பிட வந்திருக்கோம், சத்தமா பேசினாத்தான் என்ன?”, என வினவுபவர்களுக்கு, அந்த உணவகத்தில், உங்களைப்போல், நல்ல உணவு உண்ணவும், நண்பர்களுடன் நட்பு பாராட்டவும் வந்திருப்பவர்களுக்கு, உங்கள் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதில் அக்கறை இல்லை. ஆதலால் அந்தந்த மேசையில் இருப்பவர்க்கு மட்டும் கேட்பது போல் பேசுவது, வந்துள்ள அனைவருக்கும் ஒரு இனிய அனுபவத்தை அளிக்கும்.

இன்னொரு வெறுப்பளிக்கும் நிகழ்வை திரை அரங்குகளில் காண முடியும். படத்தில் ஒரு நல்ல காட்சியோ, வசனமோ ஒளிபரப்பாகும் போது, ஆரம்பிக்கும் ‘வீரென’ ஒரு குழந்தையின் அழுகுரல். சத்தம் வரும் திசை நோக்கி அனைவரும் திரும்பிப் பார்த்து, யாராவது குழந்தையை வெளியில் அழைத்து செல்வார்களா என எதிர்பார்ப்பர். மேற்கில் பொதுவாக விவரமறியா வயதில் உள்ள குழந்தைகளை திரை அரங்குகளுக்கு அழைத்து வருவதை தவிர்ப்பர். உங்களுக்கு படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், குழந்தையை வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதற்காகவும், அரங்கில் இருக்கும் மற்றவர்கள் கொஞ்சம் ‘adjust’ செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது அராஜகம்.
நான் இங்கு ஆஸ்திரேலியா வந்த போது , ராஜ் சில விஷயங்களை சுட்டிக் காட்டி இருக்கிறான். மற்றபடி, மக்களிடம் பழகும் போதும், பொது இடங்களில் பார்ப்பத்தில் இருந்தும் தெரிந்து கொண்டவை பல. நான் சந்தித்த பெரும்பாலான மேற்கத்தியர் அயல்நாட்டவரின் பழக்கவழக்கங்கள், அவர்கள் உணவு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தவர்கள். அந்த விதத்தில், பல சமயங்களில், அவர்கள் வழக்கம் பற்றியும் கேள்விகள் எழுப்பி உள்ளேன். மகிழ்ச்சியாய் விடைகளும் வந்த வண்ணமே இருக்கும்.

உலகம் ஒரு சர்வதேச கிராமம் ஆன பின், ‘குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது தான் எனக்கு பிடிச்சிருக்கு” என இருப்பது, காலத்திற்கு ஒத்துவராத ஒன்று.
“அதெல்லாம் பாத்துக்கலாம்” என இருக்கமாய் இருக்க விரும்பும் மக்கள், அந்த விலங்குகளை கழற்றி எரியும் வரையில், அவர்களிடம் கைகுலுக்க எத்தனித்து ஏமாந்து போக எனக்கும் விருப்பம் இல்லை.

“பவி எழுந்திருமா….நேரம் ஆகுதுல. போய் சமத்தா குளிச்சுட்டு வருவியாம்..அம்மா கண்ணுக்கு புடிச்சதெல்லாம் செஞ்சு தருவேனாம்…சீக்கிரம் சீக்கிரம்”, என பவித்ராவை படுக்கையை விட்டு எழுப்ப முயன்றாள் தனலட்சுமி.
“கொஞ்சம்…கொஞ்சம் தூங்கறேன் மா”, என மழலை கலந்த குரலில், தூக்கம் சற்றும் விடைபெறாத நிலையில், சிணுங்கினாள் பவி.
“அம்மாக்கு நேரமாச்சு பாரு…இன்னிக்கி பவிக்கு புடிச்ச உளுந்து வடை, பாயாசம் எல்லாம் தயாரா இருக்கு…குளிச்சிட்டு வந்தா எல்லாம் உண்டு”, என அன்பு கட்டளையிட்டாள் தனம்.
“வடையா…இன்னிக்கி என்னம்மா….சாமிக்கு பர்த்ரேயா”, என சட்டென தோன்றிய உத்வேகத்தில் கேள்வி எழுப்பினாள் பவி.
“பர்த்டே இல்லடி என் கண்ணு…சுமங்கலி பூஜை செய்ய போறோம் சாமிக்கு”, என் பதிலளித்தாள் தனம்.
திருதிருவென பவி விழிப்பதைக்கண்டு, “உனக்கு சைக்கிள், பொம்மை எல்லாம் யாரு வாங்கி தராங்க….அப்பாதான…அதுதான் சாமிகிட்ட அப்பாவ நல்லா பாத்துக்க சாமின்னு கேக்க போறோம்…அதுக்கு தான் சாமிக்கு புடிச்ச வடை, பாயாசம் எல்லாம்”, என பவியை அணைத்தபடி முத்தங்களை உதிர்த்தாள் தனம்.
“ஐ…சாமிக்கும் என்ன மாதிரி புடிக்குமா? எனக்கு இருக்குல மா?”, என ஏக்கத்தில் பவி கேட்க,
“ஒனக்கு இல்லாமயாடி என் தங்கமே…குளிச்சு புது சொக்கா போட்டுக்கிட்டு வருவியாம், அம்மா எல்லாம் குடுபேனாம்”, என தனம் சமயலறைக்கு நடந்தபடியே பதிலளித்தாள்.

குளித்து முடித்து, புத்தாடையில் மிடுக்காய் சமையலறையினுள் நுழைந்த பவி, தனத்தின் சேலையை லேசாக இழுத்தாள்.
சற்றே குனிந்தபடி, பவியை தழுவிக்கொண்டு, கையில் ஒரு வடையை கொடுத்தாள் தனம்.
“சாமிக்கு குடுக்கட்டுமா…அப்பத்தான் அப்பாக்கு பைசா தருவாரு, அப்பா எனக்கு அந்த கொரங்கு பொம்மை வாங்குவாரு”, என பூசையறை நோக்கி ஓடினாள் பவி.
“சாமிக்கு குடுத்தாச்சுடி கண்ணு…இது ஒனக்குத்தான்”, என கூறியபடி கழுத்தில் இருந்த தாலிகொடிக்கு மஞ்சள் தேய்த்தாள் தனம்.
“எனக்கு மா…புதுசு chain”, என பவி தனத்தின் கையை இழுக்க,
“இதுவா கண்ணு….என் செல்லக்குட்டிக்கு கல்யாணம் ஆகும்போது அம்மா போடுவாங்களாம்”, என பவியின் தலையை தடவிக்கொடுத்தாள் தனம்.
சில நொடிகள் ஏதோ யோசித்து, “மணி கூட விளையாடறேன் மா ப்ளீஸ்”, என கோரிக்கையை தனம் முன் வைத்தாள் பவி.
“அஞ்சலி அக்கா பிஸியா இருப்பாங்க…டிவில dora பாரு…பாத்துகிட்டே இரு…அப்பா வந்துடுவாரு, அப்பறம் நாம பீச்க்கு போவோம்; அங்க அப்பா என்ன வாங்கித்தறேன்னு சொன்னாரு…”, என எதிர் வீட்டிற்கு போவதை தடுக்க வழிதேடினாள் தனம்.
“ப்ளீஸ் மா…ப்ளீஸ்….கொஞ்ச நேரம்…அப்பா வண்டி சத்தம் கேட்டா வரேன்”, என சொல்லிகொண்டே வாசலுக்கு விரைந்தாள் பவி.
இனி ஒன்றும் செய்யலாகாது என தோல்வியை ஒப்புக்கொண்ட தனம், மீண்டும் சமையலறையினுள் நுழைந்தாள்

“சுச்சு…என்னடா”, என நாய்க்குட்டியை கொஞ்சியபடி, “அக்கா…வடை சாப்பிடுவானா இவன்”, என ஆர்வத்துடன் அஞ்சலி வீட்டினுள் நுழைந்தாள் பவி.
“குடு குடு…என்ன விசேஷம் வீட்ல”, என அஞ்சலி வினவ,
“அப்பா நல்லா இருக்கணும்னு சாமிக்கு செஞ்சாங்க”, என அஞ்சலிக்கு பதிலளித்தபடி, நாய்குட்டிக்கு வடையை கொடுத்தாள் பவி.
“சரி மணிக்கு குடுத்துட்டு இங்க வா…உனக்கு புடிச்ச முறுக்கு வாங்கி வச்சிருக்கேன் பாரு”, என கூறியபடி வாழறை நோக்கி நடந்தாள் அஞ்சலி.
“சூப்பர்..சூப்பரா இருக்குக்கா; நேத்து கூட ஸ்கூல்க்கு கிரண் கொண்டுவந்தான்”, என ரசித்து தின்றபடி, வாழறையை நோட்டமிட்டாள் பவி.
சுவற்றில் மாட்டி இருந்த, அஞ்சலி மற்றும் அவள் கணவரின் புகைப்படத்தை பார்த்த மாத்திரத்தில், “அக்கா உங்களுக்கு கல்யாணம் ஆச்சுதான. ஆனா செயின் ஒன்னுமே போடல; அம்மா போட்டிருக்காங்க”, என கேள்வி எழுப்பினாள் பவி.
“உங்க அப்பா ஏன் போட்டுக்கல”, என சிரிப்பை அடக்கியபடி எதிர் கேள்வி கேட்டாள் அஞ்சலி.
“நான் அம்மா கிட்ட கேக்கறேன்…இன்னிக்கி நீங்க சாமிக்கு ஒன்னும் குடுக்கலியா”, என அடுத்த தலைப்பிற்கு தாவி குதித்தாள் பவி.
“அண்ணனுக்கா…அவரே பாத்துப்பாரு பவி; அவர் என்ன குட்டி பாப்பாவா சொல்லு”, என பவியின் கன்னத்தை கிள்ளினாள் அஞ்சலி.
மணி சற்றே தூங்க தயாராவது கண்டு, “வீட்டுக்கு போறேன்கா…அம்மா தேடுவாங்க”, என கிளம்ப எத்தனித்தாள் பவி.

“அம்மா…நீ செயின் போட்டிருக்கல. அப்பா என் போட்டுக்கல”, என அஞ்சலியின் கேள்வியை மறுஒலிபரப்பு செய்தாள் பவி.
இனி கடிந்து பேசியாவது…பக்கத்து வீட்டிற்கு போகாமல் பார்த்து கொள்ளவேண்டும் என மனதில் நினைத்தபடி, “அப்பாவும் போட்டிருக்காரு கண்ணு….சட்டை போட்டிருக்காருல, அதுதான் வெளிய தெரியல”, என மழுப்பினாள் தனம்.
“சரி…அப்பா வந்துடுவாரு…வெளிய எட்டி பாத்துகிட்டு இரு”, என அடுத்த கேள்விக்கணை பாய்ந்து வருவதை தடுக்க முயன்றாள் தனம்.
மீண்டும் தோல்வி!!
“அம்மா…அஞ்சலி அக்கா இன்னிக்கி சாமிக்கு ஒன்னுமே செய்யல; நான் கேட்டேன்…சாமி எல்லாம் தேவையில்ல…மகேஷ் அண்ணாவே பாத்துப்பாங்களாம், நீ எதுக்குமா அப்பாக்கு பண்ற?”, என தனத்தின் வார்த்தைகளை காதில் வாங்காமல், அடுத்த சந்தேகத்தை முன் வைத்தாள் பவி.
“அது வந்து கண்ணு…”, என தனம் ஆரம்பிக்க, யாரோ கதவை தட்டுவது கேட்டது.

“என்னங்க…என்னாச்சுங்க…இவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்கீங்க…என்னாச்சுங்க”, என தாரை தாரையாய் கண்ணீர் வடிய, புலம்பியபடி, கணவரை வாழறைக்கு அழைத்துச் சென்றாள் தனம்.
“இங்க தான்க்கா…colony உள்ள நொழையும் போது ஒரு truck இடிச்சிடுச்சு”, என துணைக்கு வந்திருந்த அஞ்சலி கூறினாள்.
“என்னங்க இது…பாத்து வரக்கூடாதா…உறுப்படுவானா அவன்…எங்க பாத்துகிட்டு ஓட்டுறானுங்க”, என புலம்பித்தள்ள,
“ஏதோ நல்ல வேளை…கையில தான் fractureனு டாக்டர் சொன்னாரு. ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லி இருக்காரு”, என தனத்தை அமைதி படுத்தினாள் அஞ்சலி.
“அந்த பாளையத்தம்மன் தான் பாத்துக்கிட்டு இருக்கா. ஏதோ தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சு”, என பெருமூச்சுவிட்டாள் தனம்.

நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பவி, மெதுவாக வாயை திறந்து, “என்னமா சாமி அப்பாவ பாத்துக்கும்னு சொன்ன…இப்படி ரத்தம் வருது? சாமிக்கு வடை புடிக்கலியா?”, என அழுகையும், குழப்பமும் கலந்த குரலில் வினவினாள்.
“அது வந்து கண்ணு…”, என விடையறியாது அஞ்சலியை பார்த்தாள் தனம்.

சென்ற வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ பார்த்தேன். பெண்ணியம் என்ற தலைப்பில், பெண்ணியவாதிகளுக்கும் , பெண்ணியத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையே ஆன விவாதம்.
சல்மா மற்றும் ஓவியா அவர்களின் வார்த்தைகள் பெண்ணடிமைக்கு சாட்டையடி. எனினும் சமூகத்தில் பெண்ணியத்திற்கு ஆதராவாகவும் எதிராகவும் பேசும் ஆண்கள் இருக்கையில், விவாதத்தில் ஒருவர் கூட பங்கேற்காதது வருத்தமே.
“பெண்ணியவாதிகள் குடும்பத்திற்கு உகந்தவர்கள் அல்லர்”, என பேசும் ஆண்கள், ‘சமூகக் கோட்பாடு’, ‘கலாச்சாரம்’ போன்ற ஆயுதங்களால், அவர்கள் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கின்றனர்.
அப்பெண்களும் தம் அடிமை நிலை அறியாது, பெண்ணியம் என்பதையே ஒரு இழுச்சொல்லாக பார்க்கின்றனர்.
இத்தகைய பெண்களின் பின் மறைந்து நின்றபடி குளிர்காயும் கோழைகளுக்கு….

“தொங்கத் தொங்க தாலியோட நடந்து வந்தா…அந்த அம்மனே நேருல வந்தா மாதிரி இருக்கு”, என நீ கூற,
குனிந்த தலை நிமிராமல் வெட்கத்துடன் சிரித்தாள் அவள்;
“அடக்கி வச்சோம்ல…எவன் இனி route உட நெனைப்பான்”, என நிம்மதி பெருமூச்சு விட்டாய்!

“Housewife தான”, என நண்பன் கூற,
“homemaker னு சொல்லு டா”, என்றாய்;
அவள் ‘food-maker ‘ ஆக மட்டும் அடுப்படியில் தேங்கிக்கிடக்க,
‘Pleasure taker ‘ ஆக ஒரு துரும்பும் அசைக்காமல் பல்சுவை உணவினை அனுபவித்தாய்!

“வீட்ல எப்படி இருக்காங்க”, என பெரியவர் விசாரிக்க,
“எங்க வீடு மகாலட்சுமிங்க அவ”, என பெருமிதத்துடன் கூறியபடி அவள் பெயர் கொண்ட கடனட்டையை சட்டைப்பையினுள் திணித்தாய்!

வீட்டுவேலைகளை அவள் கவனிக்க, நீ நண்பர்களுடன் கும்மாளம் அடித்தாய்;
“அவளுக்கும் தோழிகள் உண்டு; அவர்களுடன் நேரம் செலவழிக்க ஆசையும் உண்டு”, என்ற யதார்த்த கருத்துக்கு,
“அதுதான் நான் இருக்கேன்ல…அவளுக்கு துணையா”, என உளறினாய்!

மாதம் பத்து சுமந்து, குழந்தையை ஈன்றெடுத்து, அதற்கு சகல விதமான தேவைகளையும் பூர்த்தி செய்பவள் அவள்;
“உங்க contribution என்ன சார்”, என்றால்,
“என்ன பேசறீங்க…ஆம்பிளை சிங்கம் நான் இல்லேனா அந்த சிங்கக்குட்டி எப்படி சார்”, என வாய் சௌடால் விட்டாய்!

வேலையிலிருந்து வந்ததும் வீட்டுவேலைகளை முடித்து, குழந்தைகளை கவனித்துவிட்டு, படுக்கையறையில் நீ உரச தயாராக இருப்பவள் அவள்;
“எட்டு மணி நேரம் உழைச்சிட்டு வரோம்ல; மனிஷன நிம்மதியா இருக்க விடுங்கப்பா”, என சப்பக்கட்டு கட்டினாய்!

“படிச்சவன் தானப்பா நீ…அந்த பொண்ணும் வேலைக்கு பொயிட்டு வருது…கொஞ்சம் வீட்டு வேலைல ஒத்தாசையா இருக்கக்கூடாது?”, என்ற கேள்வி எழும்பும் முன்னமே,
“இது ஒன்னும் புதுசு இல்லீங்களே…குடும்ப பொண்ணு செய்ய வேண்டிய வேலைங்க தான; எங்க பாட்டி, அம்மா எல்லாம் வழிவழியா செஞ்சுட்டு வர்றதுதானே”, என முந்திக்கொண்டாய்!

ஏன்டா நாயே… கணவன் மனைவிய ‘life partners ‘னு சொல்லி கேட்டதில்லை?
Partnership ல கொடுக்கல் வாங்கல் இருக்கும்னு தெரியும்;
இங்க என்னடானா அவ எல்லாத்தையும் கொடுக்கறா, நீ வக்கனையா சூடு சொரணை இல்லாம வாங்கற!

நீயெல்லாம் கல்யாணம் பண்ணலன்னு யாரு அழுதா…
நீ வித்திட்டு உருவாற வாரிசுகளும் உன்ன போல தான் இருக்கும்!
மானே, தேனே, அம்மா, ஆத்தான்னு ஏமாத்தினது இனி போதும்!

என்ன தயங்கற…ஓ பசிதான…hourly rate மாதிரி மாதந்திர சந்தா இருக்கான்னு பாரு; முடிஞ்சுது ஜோலி!

அவளையும் ஒரு மனிஷியா மதிச்சு, அவளோட உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்து குடும்பம் நடத்த முடிஞ்சா நடத்து…
இல்ல நடைய கட்டு!