Posts Tagged ‘western culture’

தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மாதிரி இங்கு வெளியாகும் ஒரு தினசரி செய்திப் பத்திரிகை ‘தி ஏஜ்’
சென்ற வாரம் ரயில் பயணம் போது படித்த ஒரு பதிவு, ‘Fist bump’ அதாவது இருவர் சந்தித்துக்கொள்ளும் போது , விரல்களை மடித்தபடி, குத்திக்கொள்ளும் ஒரு வழக்கம் பற்றியது. இது நம் ஊரின் வணக்கம் கூறுவது போன்றது…ஆனால் கொஞ்சம் நட்பு ததும்பும் ஒரு வெளிப்பாடு.

இந்த பதிவு படித்த போது, “பரவாயில்லைப்பா…இது மட்டும் ஒரு வழக்கம் ஆச்சுனா ரொம்ப நல்லா இருக்கும்”, என தோணிற்று.

ஏனென புரிந்துகொள்ள, கை குலுக்கலின் மேல் எனக்கு ஏற்பட்டுள்ள குட்டி வெறுப்பை விளக்க வேண்டும்.

corporate துறையின் மீது பல்வேறு காரணங்களுக்கு வெறுப்பு இருக்கும் போதிலும், சில இடங்களில் தலை தூக்கும் பாலின சமத்துவம் எனக்கு பிடித்த ஒன்று. ஊதியம், வேலை உயர்வு போன்றவை பற்றி இங்கு பேசவே இல்லை…ஏனெனில் அவற்றில் சமத்துவம் என்பது, சூரியன் மேற்கில் உதிக்குமா என எதிர்ப்பார்ப்பது போன்றது.
ஒரு கூட்டத்தில், ஆண்களும் பெண்களும் கூடி இருக்கும் போது, புதியதாய் கூட்டத்தில் சேர்பவர், பாகுபாடின்றி அனைவருடனும் கை குலுக்குவார். பெண்களின் கன்னங்களில் முத்தமிடுவது, ஆண்களின் கைகளை குலுக்குவது என்ற வேற்று பராமரிப்பு பெரும்பாலும் நிகழாது.
கை குலுக்குபவரின் கையை குலுக்காது, சும்மா தடவுவது, “கை குடுத்துட்டானே…ஒரு ஹாய் சொன்னா போதாதா”, என்ற தோரணையில் விரல்களை மட்டும் தொடுவது, அவரின் வரவேற்ப்பை அவமதிப்பது போன்றே எனக்கு தோன்றும்.
ஏனெனில் நானே பலமுறை அந்த ‘ரொம்ப சுமார்’ கைகுலுக்கலின் பெருனராய் இருந்திருக்கிறேன். அவரை சந்தித்த மகிழ்ச்சியில் கை குலுக்க விரும்பி இருப்பேன். அவர் வழவழ கொழகொழவென கை கொடுக்கும் போது , “ஏன்டா கை குடுத்தோம்”, என அலுத்துக்கொள்ளத் தோன்றும்.

இது வரை இந்த அனுபவம் மேற்கத்திய மக்களிடமிருந்து எனக்கு கிடைத்ததில்லை (ஒரு முறை எலும்பு முறியும் அளவிற்கு இருக்கமாய் பிடித்த அனுபவம் ஒன்று உண்டு!!)…இந்த கசப்பான அனுபவம் கொடுத்தவர் அனைவரும் நம் நாட்டவரே, ஆண் பெண் வேறுபாடின்றி!

நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனோ என அன்று ராஜிடம் பேசும் போது , அவன் கதையும் இதே! நானாவது அலுத்துக்கொண்டேன், அவன் கடுப்பில் இருந்தான். இனி கூட்டத்தில் இந்தியப் பெண்கள் இருந்தால், முடிந்த வரை கைக்கொடுப்பதை தவிர்க்கப் போகிறேன் என சூளுரைத்தான்! Corporate துறையில் வேலை செய்யும் சில பெண்கள் கை குலுக்கும்போது காட்டும் கூச்சத்தைப் பார்த்து, இங்கும் அச்சம் மடம் நாணத்தை கடைபிடிப்பரோ என பல முறை தோன்றியதுண்டு.
ஆண்களைப் போல் படித்து, நேர்காணலில் பங்கேற்று, அவர்களுக்கு நிகரான ஒரு பொறுப்பில் அமர்ந்த பின், “என்னை ஒரு மென்மையான பொண்ணாத் தான் நீ மதிக்கணும்”, என்ற வீண் எதிர்ப்பார்ப்பு, தகர்த்தெறிந்த ஏற்றத்தாழ்வை மீண்டும் அரவணைத்துக்கொள்வது போன்றது.

இங்கு நினைவுக்கு வருவது, இன்னொரு முகம் சுழிக்க வைக்கும் வரவேற்பு முறை.

நீங்கள் கைகுலுக்க எத்தனிக்கும் போது, கைக்கூப்பி வணக்கம் கூறி, “இதுதான் தமிழ் கலாச்சாரம்” என கூறும் ‘சின்னபுள்ள’ தனம்.
‘ஒருவரின் வரவேற்ப்பு முறையை மதிக்காது, உன் கலாச்சாரத்தை ‘பெருமையாய் வெளிப்படுத்து’ என தமிழ் கலாச்சாரம் வலியுறுத்துகிறதெனில், இதை விட மோசமான கலாச்சாரம் உலகில் இல்லை என்பது நிதர்சனம்.
இப்படி செய்பவர்களிடம், “அப்ப தமிழ் தெரியாத ஒருத்தர், உங்க கிட்ட வேற்று மொழில கேள்வி கேட்டா, “தமிழை என்னுயிர் என்பேன்”னு சொல்லிட்டு தமிழிலியே பதில் அளிப்பீங்களா??”, என கேட்கத் தோன்றும்.

உலகமயமாக்கலை எற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அதுதான் நம் நாட்டின் எதிர்காலமென தீர்மானிக்கப் பட்டுவிட்டது. இதன் பிறகு, உலக மேடையில் பிற நாட்டவருடன் உரையாடும் தருணங்களில், “என் நாட்டுல இதெல்லாம் செய்ய மாட்டாங்க; இங்க மட்டும் நான் ஏன் அத செய்யனும்” என ‘நடிப்பது’ பிற்போக்குத்தனமே! உடனே, “அப்ப என்ன சொல்ற…மத்தவங்க பார்வைல நல்லவனா தெரிய என்ன வேணும்னாலும் செய்யலாமா?”, என கேள்வி எழுப்புவது, ‘கேட்டாகணும் என்பதற்காக மட்டும் கேட்கப் படும் ஒரு உப்புச்சப்பற்ற கேள்வி.

‘Aping’ அதாவது, ஒருவர் செய்வதை அப்படியே திருப்பி செய்வது. ஒருவரின் அங்கீகாரம் கிடைக்க, அவர் செய்யும் மற்றும் செய்ய விரும்பும் செயல்களை நாமும் விருப்பமே இல்லையெனினும் செய்வது, நம் தனித்தன்மையை விட்டுக் கொடுப்பதற்கு நிகர்.

அப்படி இல்லாமல், அந்த ஊர் கலாச்சாரத்தை தெரிந்து கொள்வது, அதற்கேற்ப நம்முடைய சில பழக்கங்களை மாற்றிக் கொள்வது, அவ்வூர் மக்களுடன் நல்ல நட்புக்கும், பொழுதுபோக்கான கலந்துரையாடல்களுக்கும் வழிவகுக்கும்.
உதாரணத்திற்கு, ரயிலில், பேருந்தில் இங்கு பயணம் செய்யும் போது , பார்க்கும் ஒரு பழக்கம், தொடர்ந்து மூக்கு உறிஞ்சிக்கொண்டே இருப்பது. நம் ஊரில், அது இன்னொரு சத்தமென மறைந்தாலும், மேற்கில், பொது இடங்களில் அதனை ஒரு அநாகரீக செயலாகவே பார்க்கின்றனர். இன்றும் எனக்கு நினைவில் இருப்பது, ரயிலில் அன்று நடந்த ஒரு சம்பவம். இந்தியர் ஒருவர், தொடர்ச்சியாக மூக்கு உறிஞ்சிக் கொண்டிருக்க, அருகில் இருந்த பெண்மணி ஒருத்தி, காகித கைக்குட்டை ஒன்றை நீட்டினார்.இவரோ, “இல்ல பரவாயில்ல”, என கூறி, மூக்கு உருஞ்சலை தொடர்ந்தார்!
இது போன்றே பொது இடங்களில் சத்தமாக பேசுவது இங்கு ஒரு அநாகரீகமாகவே பார்க்கப் படுகிறது. இதை பெரும்பாலும் ரயில்களிலும், உணவகங்களிலும் பார்க்க முடியும். 10 இல் 8 முறை உரக்க பேசும் கூட்டம் ஒரு உணவகத்தில் இருந்தால், அம்மேசையில் இந்தியர்களே இருப்பர் . அதுவே மேற்கத்திய மக்களாய் இருந்தால், மது அதிகமாகி, நாகரீகத்தை போதையில் தொலைத்த கூட்டமாக இருக்கும்.

“என்னங்க friends கூட சாப்பிட வந்திருக்கோம், சத்தமா பேசினாத்தான் என்ன?”, என வினவுபவர்களுக்கு, அந்த உணவகத்தில், உங்களைப்போல், நல்ல உணவு உண்ணவும், நண்பர்களுடன் நட்பு பாராட்டவும் வந்திருப்பவர்களுக்கு, உங்கள் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதில் அக்கறை இல்லை. ஆதலால் அந்தந்த மேசையில் இருப்பவர்க்கு மட்டும் கேட்பது போல் பேசுவது, வந்துள்ள அனைவருக்கும் ஒரு இனிய அனுபவத்தை அளிக்கும்.

இன்னொரு வெறுப்பளிக்கும் நிகழ்வை திரை அரங்குகளில் காண முடியும். படத்தில் ஒரு நல்ல காட்சியோ, வசனமோ ஒளிபரப்பாகும் போது, ஆரம்பிக்கும் ‘வீரென’ ஒரு குழந்தையின் அழுகுரல். சத்தம் வரும் திசை நோக்கி அனைவரும் திரும்பிப் பார்த்து, யாராவது குழந்தையை வெளியில் அழைத்து செல்வார்களா என எதிர்பார்ப்பர். மேற்கில் பொதுவாக விவரமறியா வயதில் உள்ள குழந்தைகளை திரை அரங்குகளுக்கு அழைத்து வருவதை தவிர்ப்பர். உங்களுக்கு படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், குழந்தையை வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதற்காகவும், அரங்கில் இருக்கும் மற்றவர்கள் கொஞ்சம் ‘adjust’ செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது அராஜகம்.
நான் இங்கு ஆஸ்திரேலியா வந்த போது , ராஜ் சில விஷயங்களை சுட்டிக் காட்டி இருக்கிறான். மற்றபடி, மக்களிடம் பழகும் போதும், பொது இடங்களில் பார்ப்பத்தில் இருந்தும் தெரிந்து கொண்டவை பல. நான் சந்தித்த பெரும்பாலான மேற்கத்தியர் அயல்நாட்டவரின் பழக்கவழக்கங்கள், அவர்கள் உணவு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தவர்கள். அந்த விதத்தில், பல சமயங்களில், அவர்கள் வழக்கம் பற்றியும் கேள்விகள் எழுப்பி உள்ளேன். மகிழ்ச்சியாய் விடைகளும் வந்த வண்ணமே இருக்கும்.

உலகம் ஒரு சர்வதேச கிராமம் ஆன பின், ‘குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது தான் எனக்கு பிடிச்சிருக்கு” என இருப்பது, காலத்திற்கு ஒத்துவராத ஒன்று.
“அதெல்லாம் பாத்துக்கலாம்” என இருக்கமாய் இருக்க விரும்பும் மக்கள், அந்த விலங்குகளை கழற்றி எரியும் வரையில், அவர்களிடம் கைகுலுக்க எத்தனித்து ஏமாந்து போக எனக்கும் விருப்பம் இல்லை.

“TV பாத்துக்குட்டே தண்ணி குடும்மானு கேப்பேங்க “break வரட்டும்…கொண்டு வரேன்னு சொல்லுவா”,
“சோறு போட சொல்லி கேட்டா, 10 தடவை கேட்டதுக்கு அப்பறம் மெதுவா எழுந்திருப்பாங்க”. இந்த ஞாயித்துக்கிழமை நீயா நானா பாத்திருந்தீங்கனா…இது ‘எழுத்து வடிவத்தில் மறு ஒளிபரப்பு’னு நினைப்பீங்க. பாக்காதவங்களுக்கு,
இந்த வார தலைப்பு…வீடுகள்ல தொலைகாட்சிகளின் தாக்கம் பத்தினது
வந்திருந்த சில ஆண் சிங்கங்கள் வேலை முடிச்சிட்டோ, கல்லூரில இருந்தோ வீடு திரும்பும் போது, வீட்டுத்’தலைவிகள்’ அதாவது ‘homemakers’, அந்த தொலைக்காட்சிய கட்டிக்கிட்டு அழுதுட்டு இருப்பாங்களாம். அந்த நேரத்துல இந்த ஆண் மகன்கள் அப்படியே நிற்கதியா கவனிப்பார் இல்லாம நின்னுகிட்டு இருப்பாங்களாம். இதுல சிலருக்கு அந்த மாதிரி கோபம் வருமாம்…ஒரு பிரஹஸ்பதி டிவி யவே உடைச்சுட்டானாம்.
இந்த நிகழ்ச்சிய பாக்கும் போது, இங்க என்னோட வேலை செய்யற ஒரு பெண் தோழி அவங்க பையன பத்தி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அவங்க பையனுக்கு ஒரு 7-8 வயசு இருக்கும். அவன் T.V பாத்துக்கிட்டோ இல்ல சும்மா பொழுத கழிச்சுகிட்டு இருக்கும் போது, “ரொம்ப தாகமா இருக்கு”னு சொல்லுவானாம். என் தோழி உடனே, “தண்ணி குடிச்சா தாகம் தணியும்; அங்க டேபிள் மேல தான் இருக்கு”னு சொல்லுவாங்களாம். “சின்ன வயசுல இருந்தே ‘மத்தவங்கள வேலை வாங்கினாத்தான் என்ன’ மாதிரியான எண்ணங்கள வளர விடாம தடுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்; ஆனா parents தான சொல்லி குடுக்கணும்”னு என்கிட்ட சொன்னாங்க.
நினைச்சு பாத்தீங்கனா, நம்ம ஊர்ல ‘கலாச்சார சீரழிவு’ பத்தி எப்பெல்லாம் பேசபடுதோ, அப்பெல்லாம், மேற்கு உலகம், அங்க இருக்கும் பழக்கவழக்கங்கள் பத்தின பேச்சு அடிப்படாம இருக்காது.
‘Aping the west ‘னு சொல்லி கேள்வி பட்டிருப்பீங்க. இந்த நீயா நானா நிகழ்ச்சியிலியே நெறைய தடவை பாக்க முடியும். மேற்கத்திய உடைகள, உணவு பழக்கவழக்கங்கள விரும்பி நம்ம ஊர்ல ஏத்துக்கறத கண்கூடா பாக்கலாம். அத பாக்கும் போதெல்லாம், உணவு உடைகள ஏத்துக்கற மாதிரி, ஏன் மேற்கத்திய குடும்ப அமைப்பு இல்ல அவங்க குழந்தை வளர்ப்பு முறைல இருக்கற நல்ல விஷயங்கள ஏன் ‘ape ‘ பண்ண மாட்றாங்கனு நினைப்பேன்.
“தனி மனிதனா, ஒரு குடும்பமா, ஒரு பொது இடத்துல, சுதந்திரமா இருப்பேன்; சந்தோஷமா இருப்பேன்; ஆனா அது மத்தவங்களுக்கு இடையூறா மட்டும் இல்லாம பாத்துப்பேன்”; இந்த ஊர்ல பெரும்பாலும் மக்கள்கிட்ட இந்த மனப்பானமைய பாக்கலாம். ரயில்ல போகும் போது அலைப்பேசில பேசறதா இருக்கட்டும், இல்ல பயணம் போது பாட்டு கேக்கறதா இருக்கட்டும், பக்கத்துல இருக்கறவங்களுக்கு தொல்லை மட்டும் இருக்காது.
இங்க குழந்தை வளர்ப்புல இவங்களோட அணுகுமுறை ரொம்பவே ஆச்சரிய பட வச்சதுன்னு தான் சொல்லனும்.
இந்தியால இருந்த வரைக்கும் நான் பாத்ததெல்லாம்,
–> ஒரு பொண்ணு கர்ப்பமா இருந்தா…அந்த பத்து மாசத்துக்கு அவ மகாராணிதான். வீட்ல மட்டும் இல்ல…அது ரோடா இருந்தாலும் சரி…கடைகளா இருந்தாலும் சரி. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, யாரா இருந்தாலும்…அந்த பொண்ண ஒரு பூ மாதிரி நடத்தற விதம்…கண் கொள்ளா காட்சி!! ஆனா அந்த குழந்தை வெளிய வந்ததுக்கு அப்பறம்…ஒரு ஈ காக்கா கூட அவள தீண்டாதுங்றது வேற விஷயம்.
–> ஒரு அன்னையானவள்…குடுக்கற அன்பு ரொம்ப அவசியம்; அந்த குழந்தை நல்லவனா இல்ல கெட்டவனா ஆறதுக்கு அவதான் பொறுப்பு”
–> என்னதான் அப்பாக்களுக்கு குழந்தைகள பிடிச்சாலும்…அந்த குழந்தைய வேளாவேளைக்கு சோறு குடுத்து பராமரிக்கறதுல ஒரு தாய அடிச்சுக்க முடியாது”
–> குழந்தைங்கன்னா நல்லா அழத்தான் செய்யுங்க; இது வேணும் அது வேணும்னு அடம் புடிக்கத் தான் செய்யுங்க; மத்தவங்களோட தன் பொம்மையோ, சாப்பாட்டையோ பகிர்ந்துக்கலனா தப்பே இல்ல; சின்ன பசங்க அப்படி தான் இருப்பாங்க
இது மாதிரியான ‘அனுபவசாலிங்களின் அறிவுரைகள’ மட்டும் கேட்டு புளிச்சு போன என் காதுக்கு, என் கூட வேலை செய்யறவங்களோட பேச்சு, ஒரு புது இசையமைப்பாளரோட ராகத்த கேட்ட அனுபவம்!!
நம்ம ஊர்ல குழந்தை பெத்துக்கறதுக்கு, “மாமியாருக்கு வயசாகுது”, “அப்பறம் மலடின்னு ஊர் உலகம் சொல்லும்”, “இப்பவே பெத்துகிட்டாத்தான் பையனோட படிப்பு, கல்யாணம் எல்லாத்தையும் பாக்க முடியும்”, மாதிரியான உப்பு சப்பிலாத, கேக்கவே நாராசமா இருக்கற காரணங்கள சொல்லி கேட்டிருக்கேன். இந்த மாதிரி குப்பைகளுக்கு அடில, ‘ஒரு ஆணும் பொண்ணும்…ஒருவர் மேல ஒருவர் கொண்டிருக்கிற அன்ப வெளிப்படுத்தும் பல வழிகள்ல குழந்தை பெத்துகறதும் ஒன்னு’, என்ற உண்மையான காரணம் பொதைஞ்சே போச்சுனுதான் தோணுது.
அந்த விஷயத்துல மேற்குலகுல தெளிவா இருக்காங்கனுதான் சொல்லனும். அதனால குழந்தை பெத்துக்கணுமா, வேண்டாமா, எப்ப பெத்துக்கணும், மாதிரியான முடிவுகள சம்பந்தப்பட்ட ஆணும் பொண்ணும் மட்டும் எடுக்கறாங்க.
ரெண்டு பேரும் சரின்னு முடிவெடுத்ததுனால…அந்த குழந்தை வளர்ப்புல ரெண்டு பேருக்குமே சம பங்கு இருக்கறதுதான யதார்த்தம்.
அன்னிக்கி என்னோட ஆண் தோழர் ஒருவர், அவரோட குழந்தைய ஆபீஸ்க்கு கொண்டு வந்திருந்தாரு. என்னனு கேட்டதுல, அவர் மனைவியோட மகப்பேறு விடுப்பு (maternity leave )முடிஞ்சு வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்களாம். குழந்தைய ஒரு 6 வாரம் இவர் பாத்துக்கறதா இருக்காராம்.
குழந்தைகளுக்கு இவங்க சொல்லி குடுக்கற மரியாதையாகட்டும் , பழக்க வழக்கங்களாகட்டும், ஒரு பிரமிப்பத்தான் உண்டாக்குது.
இந்தியால என் நண்பர்கள், உறவுகள் வீடுகள்ல 5 -6 வயசு குழந்தைகள பாத்திருக்கேன். தனக்கு ஏதாவது பிடிக்கல, இல்ல கேட்டது வாங்கித்தரலனா, உடனே ஒரு அழுகை இல்ல கோபத்த வெளிப்படுத்தற ஒரு பழக்கம். இங்க மேற்குலகுல, குழந்தைகளுக்கு விரும்பின பொருள் கெடைக்கலனா, அதிருப்திய சாதரணமா அந்த சிறுமியோ, சிறுவனோ பேச்சு வடிவத்துல வெளிப்படுத்துவாங்க. அம்மாவோ அப்பவோ அத அப்பறம் மெதுவா விளக்குவாங்க.
இப்ப சமீபத்துல பாத்த ஒரு வேடிக்கையான விளம்பரம் ஒன்னு நினைவுக்கு வருது; நான் மேல சொன்ன ‘எடுத்து விளக்கர அம்மா அப்பா’ ஒரு ரகம்னா…இந்த அம்மா ஒரு தனி ரகம் 🙂

“என்னம்மா அட்வைஸ் குடுக்கிறியா…கொஞ்சம் அடுப்ப அணைச்சா நல்லா இருக்கும்”,னு பின்னூட்டம் இடப்போறவங்களுக்கு…
நம்ம ஊர்ல வழிவழியா இதுதான் சரி, ‘பெரியவங்க அனுபவத்துல தெரிஞ்சிகிட்டு சொல்றாங்க..தப்பா இருக்காது”னு கடைப்புடிக்க படற பல விஷயங்கள்…இங்க மேற்கு உலகத்துல எவ்வளவு மாறுபட்டு இருக்குனு பாக்கறேன்; அதிசயிக்கறேன்; பதிவா எழுதறேன்.
“இதெல்லாம் வேலைக்கு ஆகாது…படிக்கறதுக்கு வேணும்னா நல்லா இருக்கும்”னு நினைச்சீங்கன்னா free யா விடுங்க.