Posts Tagged ‘whiting’

ஒரு முன்கதை நிச்சயம் இங்கு தேவை. மாட்டிறைச்சி அந்தாதியும், கோழிக்கறி அகவலும் பாடிய எனக்கு, கடல் வாழ் உயிரினங்களான மீன்கள் மீது ஒரு சின்ன வெறுப்பு இருந்த வண்ணமே இருந்தது. இன்று அவைகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்த பிறகு, ஏன் இத்தனை வெறுப்பு என பல சமயங்களில் யோசித்ததுண்டு.

திரும்ப திரும்ப நினைவுக்கு வருவதெல்லாம், நான் பள்ளிப்பருவத்தில் குடியிருந்த காலனியும் அங்கு பெரும்பாலும் சனி-ஞாயிறு நாட்களில் மிதிவண்டியில் வரும் இறால் கூடைகளும் தான். அதனை விற்று வருபவர் எழுப்பும் ‘எற ரா எற ரா ஏற ராஉ’ கூப்பாடும், அதனை என் தம்பி கிண்டல் செய்வதும் வேடிக்கையாக இருந்திருக்கு. ஆனால் அந்த இறால் கூடை திறந்திருக்கும் போது வெளியேற்றும் நாற்றம் என் வயிற்றை பிரட்டிய தருணங்கள் என்னை ஒரு முடிவுக்கு வரவழைத்தது. “கடல்/நதி வாழ் உயிரினங்கள் அனைத்துமே இந்த குமட்ட வைக்கும் வாசம் உடையவையே”

திருமணத்திற்கு பிறகு, கணவனும் என் நண்பர்களும் பல முறை மீன் ருசியின் துதி பாடிய போதும், என் முடிவில் திடமாக நின்றேன். மாட்டிறைச்சி, கோழிக்கறி சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன் திமிராக உரைத்த அதே உப்பு சப்பற்ற வாக்கியம், “இல்ல எனக்கு பிடிக்காது…சைவ சாப்பாடுல இருக்கற சுவை போதும்; மைசூர் ரசத்துல இல்லாத சுவையா மாமிசத்துல வரப் போகுது”. இந்த வாக்கியத்தை கேட்ட பலரும் மனதில் மட்டும் நினைத்திருப்பர்…வாய்விட்டு கேட்டதென்னவோ என் கணவன் மட்டும் தான், “நீ சாப்பிட்டதே இல்லன்னு சொல்ற, அப்பறம் அது பிடிக்காதுன்னு எப்படி சொல்லுவ” . என் ஈகோ அன்று சுளீரென அறை வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது. சப்பக்கட்டு கட்ட எதுவும் யாரும் துணை இல்லாத காரணத்தினால், தோல்வியை ஒத்துக்கொண்டேன். அன்று அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால், சிக்கன் 65, beef rendang, மட்டன் பிரியாணியின் சுவைகளை என் நாவு ருசிக்காமலே இருந்திருக்கும்.

சரி திரும்ப பதிவு தலைப்புக்கு…
இறாலால் நீர் வாழ் உயிரினங்களையே வெறுத்த நான்…முதன் முதலில் உண்டதென்னவோ இறால் தான்.
இங்கு சிறப்பு அங்காடிகளில் (supermarket), கடல் உணவு (sea food) வாங்கும் இடத்தில் வரிசையில் நிற்கும் போது, பெரும்பாலும் இறால் வாங்காமல் வந்ததில்லை. இறால் தொக்கு, இறால் fried rice, சிம்பிள் இறால் stir fry என அன்று சமைக்கும் moodக்கு ஏற்றது போல், இறால் பதார்த்தமும் மாறும். இறாலை பொடி பொடியாய் நறுக்கும் போது அந்த தெளிந்த நீரோடையின் வாசம்…ஒரு நிமிடம், நம் சமையலறை தான்…குளக்கரைக்கு நகர்ந்து விட்டதோ என நினைக்கத் தூண்டும். ஆனால் இன்றும் அந்த கூடையில் இருந்த இறால் மட்டும் அத்தனை துர்நாற்றத்தை ஏன் வெளியேற்றியது என்பது புரியாத புதிர்:(

Prawns

என்னதான் கோழிக்கறி ருசியானது எனினும், ‘சும்மா சும்மா’ கோழி குழம்பையும், கோழி பிரியாணியையும் உண்ண முடியாது. அதே போன்று, இறாலுடன் நிறுத்தி விட்டால் கடல் அன்னையின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும் என பயந்து, என் நாவிற்கு அறிமுகம் செய்தவை…கெண்டை, காள, கெளத்தி போன்ற மீன் வகையறாக்கள். ஒரு மீன் வகையென கூறி இன்னொன்றை கொடுத்தால் தெளிவாக வித்தியாசம் சொல்ல முடியுமா தெரியாது, ஆனால் முடிந்த வரையில் புதுப்புது வழிகளில் மீனை சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக உள்ளேன்.
அன்று அப்படித்தான்…basa எனும் மீன் வகை (கெளத்தியா என சரியாய் தெரியவில்லை) வாங்கி, இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என இணையத்தை புரட்டிக்கொண்டிருந்த போது, கண்ணில் பட்டது தான் basa fish cake.
கொஞ்சம் வேலைப்பாடு இருந்த போதிலும் (முதலில் மீனை ஓவனில் bake செய்து, அதனை உதிர்த்து, வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் போடி, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து வடை போல் தட்டி, பொறிப்பதே fish cake செய் முறை)
இரவு சாப்பாட்டிற்கு வேலை பளு அதிகம் என்ற போதிலும், ரைஸ் noodles உடன் அந்த basa fish cake கூட்டணி வெற்றிக் கூட்டணி!

basa fish cakes with asian noodles

கடல் உணவின் இன்னொரு சிறப்பம்சம், அதனை சமைக்க எடுக்கும் நேரம். 2 மணி நேரம் மசாலா வகைகளை தயார் செய்ய எடுத்துக்கொண்டாலும், அந்த மீன் துண்டுகளை சட்டியில் போட்ட 10வது நிமிடம், “நான் தயார்”, என பல்லிளித்தப்படி காட்சி அளிக்கும்.
சாதாரணமாக உறைந்த (frozen) மாட்டிறைச்சி அல்லது கோழிக்கறி, குறைந்தது அரை நாளாவது உருக வைக்க வேண்டி இருக்கும். ஆனால் மீனோ, 2 மணி நேரத்தில், “சமையலுக்கு நான் தயாருங்கோ”, என நிற்கும்.
எல்லாவற்றையும் விட முக்கிய சிறப்பம்சம், அதில் இருக்கும் சத்தும், உண்பதனால் கிடைக்கும் நல் பயன்களும். கோழி இறைச்சியில் கொழுப்பு நிறைந்த வகை, கொழுப்பு குறைந்த வகை என இரண்டு உண்டு. அதே போன்று மாடு, ஆடு இறைச்சியிலும் உண்டு. ஆனால் பெரும்பாலான மீன் வகைகளில், கொழுப்பு என்பது மிகவும் குறைவு, புரதச்சத்தில் குறைவேதும் இல்லாமல். பிறகென்ன, மீன் குழம்பு தாறுமாறாக இருக்கும் தருணத்தில், இரண்டு மூன்று துண்டு அதிகமாக உண்டாலும், தீங்கொன்றும் இல்லை…(ஏற்கனவே 10-12 துண்டுகள் உள்ளே போய் விட்டதெனில், இன்னும் அதிகம் திணிக்க வேண்டுமா என்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம்)

food pics - collage

வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது கடல் உணவு உண்பது நல்லது என டாக்டர்களும் கூறும் போது, வேறு என்ன விளக்கம் தேவை?
இத்தனை நற்குணங்களையும் தன் உள் கொண்டு, வாய்ப்பேசா ஜீவனாக நீரினுள் மூழ்கி இருக்கும்…கடல் வாழ் வள்ளல்களுக்கு, ஒரு புகழாரம் செலுத்தாது பதிவினை முடிப்பது நல்லதன்று.
“உன்னை வெறுத்தேன்;
உன்னை உண்பவரை கடிந்தேன்
வாழக்காய் பஜ்ஜி இருக்க இந்த
கடல் வாழ் பட்சி எதற்கு என திமிரில் அலைந்தேன்
தரையில் உள்ளவையைத்தான் விடவில்லை, கடல் நதியில் திரிவதையுமா என ‘சைவ’ சித்தாந்தம் பேசினேன்
பருப்பு வகையறாக்களில் கிடைக்காத புரதச் சத்தா, என புலம்பித் தள்ளினேன்
“என் மேல் இறக்கம் இல்லையா”, என இறால் குரல் எழுப்பும் வரையில்.
கொழுப்பின்றி புரதமா என வியந்தேன்
இரண்டே மணி நேரத்தில் தடபுடல் சமையல் தயாராவதைக் கண்டு திகைத்தேன்
இரவு சாப்பாட்டிற்கு செய்த மீன் குழம்பு அடுத்த நாள்
அதிக ருசியாய் இருப்பதை கண்டு கொஞ்சம் நிலை தடுமாறினேன்
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமும் என முடிவு செய்தேன்
மடிக்கணினியில் ஒரு பதிவும் எழுதி முடித்தேன்”