Posts Tagged ‘women in tamil cinema’

தமிழ் சினிமாவை கொஞ்சம் ஆர்வத்துடன் கவனிப்பவர்களுக்கு, சென்ற வாரம் ‘ஆரண்ய காண்டம்’ வெளிவந்தது தெரிந்திருக்கும். இன்னும் அதிகமாகவே கவனிப்பவர்கள்…அது சம்பந்தப்பட்ட தணிக்கைக்குழு செய்திகளை அறிந்திருப்பர்.
‘A ‘ சான்றிதழ் அளித்த பிறகும், 2 டஜனுக்கும் மேற்பட்ட பகுதிகளை நீக்கினால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என உத்தரவிட்டது தணிக்கைக்குழு. இதில் உடன்பாடில்லாமல், படத்தின் தயாரிப்பாளர் திரு S.P.B.சரண், மேல் முறையீடு செய்து, வெற்றியும் பெற்று, இரண்டே பகுதிகள் நீக்க ஒத்துக்கொண்டு, படத்தை வெளியிட்டார்…

பெரும்பாலும் ‘எல்லா வயதினரையும் திருப்திபடுத்தும் படம்’, ‘குடும்பத்தோட போய் பார்க்கக்கூடிய படம்’ மாதிரியான விளம்பரங்கள் கொண்ட தமிழ் படங்களை பார்க்கும் பொழுது, “அட நாதாரி நாய்களா…உங்க அகராதில குடும்ப படம்னா என்னனு கொஞ்சம் விளக்கம் தரீங்களா”, என கேட்க தோன்றும்.
“உங்களுக்கெல்லாம் ‘U ‘ certificate கொடுத்த சென்சார் போர்ட செருப்பாலியே அடிக்கணும்”, என திட்டகூட தோன்றும்.
இந்த ஆரண்ய காண்ட சர்ச்சையை படித்த உடன், தணிக்கை குழு பற்றிய என் கருத்துக்களை பதிவாய் எழுதினால் என்ன என தோணிற்று.

முதலில் சென்சார் போர்டு எனப்படுவது என்ன…தெரிந்து கொள்ள ஆசைபட்டேன். அவர்களின் இணையதளத்தில் இருந்த பல அறிக்கைகளும், சொற்றொடர்களும், எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது எனலாம்.
உதாரணத்திற்கு…
“Film censorship becomes necessary because a film motivates thought and action and assures a high degree of attention and retention as compared to the printed word. The combination of act and speech, sight and sound in semi darkness of the theater with elimination of all distracting ideas will have a strong impact on the minds of the viewers and can affect emotions. Therefore, it has as much potential for evil as it has for good and has an equal potential to instil or cultivate violent or good behavior”
மொழியாக்கம்…
‘திரைப்படம் ஒருவரின் எண்ணங்களையும் செயல்களையும் பெரிதும் ஊக்குவிக்கக் கூடியது; ஆகவே திரைப்பட தணிக்கை என்பது அவசியமாகிறது. ஒரு விஷயத்தை படிப்பதனால் ஏற்படும் தாக்கத்தைவிட பெருமளவு தாக்கத்தை எற்படுத்தும் சக்தி திரைப்படங்களுக்கு உண்டு. இருண்ட திரையரங்குகளில் கவனச்சிதறலுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவு; இத்தருணங்களில் நடிப்பும், வசனங்களும், மக்கள் மனதில் மிக ஆழமாய் பதியும் திறன்வாய்ந்தவை. ஒரு திரைப்படம் நன்மைகள் கற்பிக்கும் அதே அளவிற்கு தீய கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் வலிமையுடையது; நல்ல பழக்கங்களுடன், தீய எண்ணங்களையும் தோற்றுவிக்கவல்லவை’
.
பெரும்பான்மையான தமிழ் சினிமாக்களின் தரத்தை பார்க்கும் பொழுது, இந்த சொற்றொடர்கள், அவர்களின் இணையதளத்தில் வெறும் சொற்றொடராக மட்டுமே இருக்கிறது என்ற உண்மை நிலை அம்பலமாகிறது.

தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வரும் சில காட்சிகளை பார்க்கும் பொழுது…தணிக்கைக்குழுவிற்கு எழுதினால் என்ன என தோன்றும். “தேவையில்லை…எம் இணையதளத்தில் ஏற்கனவே பதித்துள்ளோம்”, என சாட்டையடியாய் விழுந்தவை இவை…

“… the CBFC shall ensure that
i) anti social activities such as violence are not glorified or justified
iv) pointless or avoidable scenes of violence, cruelty and horror, scenes of violence primarily intended to provide entertainment
vii) human sensibilities are not offended by vulgarity, obscenity or depravity;
viii) such dual meaning words as obviously cater to baser instincts are not allowed;
ix) scenes degrading or denigrating women in any manner are not presented”

மொழியாக்கம்..
“தணிக்கைக்குழுவானது, திரைப்படங்களில்
* வன்முறை போன்ற சமூகவிரோத நடவடிக்கைகள்
* தேவையற்ற வன்முறை காட்சிகள், வதைத்தல், பொழுதுபோக்கிற்காக மட்டுமே திணிக்கப்பட்ட வன்முறை காட்சிகள்
* மனித உணர்சிகளை புண்படுத்தும் காட்சிகள்
* இரட்டை அர்த்தம் கொண்ட சொற்களின் பயன்படுத்தல்
* பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள்
போன்றவற்றை தடுப்பதில் கவணம் செலுத்தும்”.

முழு பட்டியலை படித்து முடிக்கும்பொழுது, உங்களுக்கும், “என்னடா இது…அப்ப இந்த படம் தொடங்கறதுக்கு முன்னாடி வரும் U , A , U /A எல்லாம் வெறும் கண்துடைப்புதானா”, என தோன்ற வாய்ப்புகள் மிக அதிகம்.

வன்முறை பற்றிய விதிமுறைகளை படித்த பொழுது, என் கண்முன் வந்துபோனதெல்லாம், 10 -15 சுமோ கார்களும், அதில் இருந்து மந்தைமந்தையாய் குதிக்கும் அரிவாள் ஏந்திய குண்டர்களும், துப்பாக்கி சூடுகளும், குத்துயிரும் கொலையுயிருமாய் கிடக்கும் ஜூனியர் அர்டிச்ட்களும் தான். பெரும்பாலும் திரைப்படங்களில் வரும் நாட்டாமைகள் மற்றும் வில்லன்களின் சக்தியையும், அவர்களின் ஆள்பலத்தையும் காட்டமட்டுமே உலாவரும் வெத்து காட்சிகள் இவை. தேவையோ தேவையில்லையோ, இதனை ‘பிரமாண்டம்’ என விளம்பரப்படுத்துவதில் தொடங்கி, ‘ஜனரஞ்சகமான படம்’ என கூவி விற்று, 100 வது நாள் விழாவில் வந்து முடியும்.

அடுத்து மனித உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட விதிமுறைகளுக்கு வருவோம்…
புணர்ச்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு கால் பங்காவது மனித உணர்ச்சிக்கு கொடுத்திருந்தால் தமிழ் திரையுலகம் இன்றைய கேவலமான நிலைமையை அடைந்திருக்காது.
ஒரு தலை ராகத்தின் ‘பொழுதோட கோழி கூவுற வேளை’ தொடங்கி, திருடா திருடி ‘வண்டார்குழலி’, பருத்திவீரன் ‘ஊரோரம் புளியமரம்’ வரை, திருநங்கைகளை கேலி செய்யும் ஒரு மோசமான வழக்கம் தமிழ் திரையுலகில் இருந்திருக்கிறது; இன்னும் தொடரும் என்பதில் ஐயமில்லை.
உடல் பருமனானவர்களையும், குள்ளமானவர்களையும் கீழ்த்தனமான நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் நம் நாட்டினருக்கே உரியது.
பெண்களை ஒரு கேளிக்கை பொருளாக…கேமரா முன் உலாவ விடும் பழக்கத்தின் முன்னோடியும் நாமே!!
“ஆம்பளைங்கனா நெஞ்ச நிமித்திகிட்டு சும்மா கைய வீசிக்கிட்டு கம்பீரமா நடக்கணும்; பொம்பளைங்கனா தலைய குனிஞ்சிகிட்டு அடக்கமா இருக்கணும்”
“பொம்பளைனா பொறுமை வேணும்; கோவப்படகூடாது; அடக்கம் வேணும்…ஆத்தரபடக்கூடாது….மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்”
“…பொண்ணா லட்சணமா ஒரு சேலைய கட்டி இழுத்து போத்திகிட்டு வந்தேன்னு வச்சுக்க…ஆம்பளைங்கலாம் உன்ன மகாலச்சுமியா கையெடுத்து கும்பிடுவாங்க”
கதாநாயகர்கள் ஆணாதிக்கத்திற்கு தீவணம் போடும் ஒரே நோக்கத்தில் பெண்களுக்கு வழங்கும் ‘அறிவுரைகளும்’, தலைவர் சொல்லி முடித்தவுடன் திரையரங்குகளில் காதை பிளக்கும் விசில் சத்தங்களும், ஓயப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்!

இது மாதிரியான காட்சிகள் மிகச்சாதாரணமாய் திரைப்படங்களில் உலா வருவதற்கு…ஒரு காரணம் வேண்டுமானால் இருக்கலாம். தற்போதைய விதிமுறைப்படி ‘மனித’ உணர்ச்சிகள் புண்படுவதுதானே கண்டனத்திற்குரியது….சமூகம் பெண்களையும், திருநங்கைகளையும் மனிதர்களாக மதிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என தணிக்கைக்குழு நினைக்கிறதோ என்னவோ!

தனிமனித விஷயங்களைத்தான் கண்டு கொள்ளவில்லை என்றால்….சமூக முழுமைக்கும் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இந்த மெத்தனப்போக்கை கைவிட தயாராக இல்லை தணிக்கைக்குழு.
கொஞ்சம் சமூகபொறுப்புடன் செயல்பட்டிருந்தால், சாதிகளின் துதிபாடுவதை மட்டுமே மையக்கருத்தாய் கொண்ட படங்கள் தலை தூக்காமல் இருந்திருக்கும். ஒரு தேவர் மகனின் புகழ் பாடவும், சின்ன கௌண்டனின் வாழ்க்கை வரலாறை விவரிக்கவும், தடை விதிக்காத தணிக்கைக்குழு, மேல்சாதியினர் கையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தலித்துகளின் வேதனையை படம் எடுத்தால் தடைவிதிக்க முந்தியடித்து வருவது…double standards எனப்படும் அணுகுமுறையாகவே தோன்றுகிறது.

இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம்…”ஒரு படம் வெளிக்கொணரும் செய்தியினால் நாட்டில் அமைதி குலையுமெனில்…அதை தடுப்பது தணிக்கைக்குழுவின் தலையாய கடமையாகும்”

“அமைதி ஏற்கனவே கொலஞ்சு போயாச்சுடா!! அரசியல் மிருகங்களால நெலைகொலைஞ்ச சாமானிய மக்களோட துயரங்கள, அவங்க அனுபவிக்கும் நரகவேதனைய, உன் அரசும், கைக்கூலி செய்தி ஊடகங்களும்…வெளியாகாம பாதுகாக்கும் போது…ஏதோ திரைப்படம் மூலமா ஊருக்கு உண்மைய விளக்கலாமுனா…அதுக்கும் தடை விதிச்சா எப்படி!!”, என்ற யதார்த்தமான கேள்விக்கு இன்னும் பதிலில்லை.

‘nanny state’ என மேற்கு உலகத்தில் கூறுவர். ஒரு நாட்டில் அரசு, மக்களுக்கு எது நல்லது, எது கெட்டது என தானே முடிவெடுத்து, நடைமுறை படுத்தும் போக்கினை இவ்வாறு விமர்சிப்பர். தனிக்கைக்குழுவும் அப்படி ஒரு போக்கினை கையாளுவது போல்தான் தோன்றுகிறது.

‘A ‘ சான்றிதழ் ஒரு படத்திற்கு வழங்கப்படும் பொழுது, 18 வயதிற்கு மேற்பட்டவர் அதை பார்க்கலாம் என்பது விதிமுறை. அதாவது ஒரு வயதிற்கு மேல், மக்கள் எது தமக்கு ஏற்றது, எது தவிர்க்கப்படவேண்டியது, என புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைகின்றனர். அப்பொழுது கண்காணிப்போ, மேற்பார்வையோ தேவையில்லை எனப்பொருள் படுகிறது.

‘தடையிலா திரையிடல்’ என அறிக்கை விதித்தப்பின்னர், ‘நாட்டின் நன்மை பாதிக்கப்படும்’, ‘தற்போதைய அரசின்பால் தீய அபிப்பிராயம் உண்டாகும்’ என எதிர்ப்புகளை முன்னிறுத்துவது, தணிக்கை என்ற பெயரில், மக்கள் மேல் நடத்தும் சர்வாதிகாரமாகவே தோன்றுகிறது.

அமெரிக்காவை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதலாளித்துவம் தலைவிரித்தாடும் நாடு இது. இங்கு தான் ‘capitalism -a love story’ (‘முதலாளித்துவம் – ஒரு காதல் கதை’) என்ற படம் வெளிவந்தது. முதலாளித்துவத்தின் சீர்கேடுகளையும், அதனால் நாட்டு மக்கள் அடையும் துயரங்களையும் எடுத்துரைக்கும் படம். ஒரு நிகழ்வின் சாராம்சம், அதிலிருக்கும் நியாய அநியாயங்கள் அனைத்தும், சம்பந்தப்பட்டவர்கள் மனநிலை மற்றும் அவர்கள் அடைந்த லாப நஷ்டத்தை பொறுத்து மாறும். மக்கள் விவரம் தெரிந்தவர்கள் என முடிவுசெய்து ஒரு படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கிய பிறகு, அனைத்து தரப்பு வாதங்களையும் சமர்ப்பிக்க அனுமதிப்பதுதானே சரி!

தணிக்கைக்குழுவின் இணையதளம் கூறுவதாவது…
“The present certification of films is governed by the 1952 Act, the Cinematograph (Certification) Rules promulgated in 1983 and the Guidelines issued there under from time to time, the latest having been issued on December 6, 1991”
மொழியாக்கம்…
‘தற்போதைய திரைப்பட சான்றழிப்பானது, 1952 ம் ஆண்டு எழுதப்பட்ட ஒளிப்பதிவு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டது. 1983 ம் ஆண்டு வெளியிடப்பட்டு, தொடர்ச்சியாக நிகழ்நிலைப்படுத்தபட்டு வருகிறது. கடைசியாக 1991 ம் ஆண்டு வெளியிடப்பட்டது’.

உலகத்தரத்திற்கு படங்கள் எடுக்கப்பட்டுவரும் இக்காலகட்டத்தில், அதனை மேற்பார்வையிடும் முறைமை உலகத்தரத்திற்கு இல்லாவிடினும்…ஒரு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட முயற்சித்தல் அவசியம். அப்பொழுது தடைகள் எதுவுமின்றி நல்ல ஆரோக்கியமான திரைப்படங்கள் தானாகவே மக்களை சென்றடையும்!!