இழப்பு ஒன்று: பிழைப்பு 50

Posted: பிப்ரவரி 21, 2012 in சிறுகதை
குறிச்சொற்கள்:, ,

“எங்கப்பா ஞானவேல காணோம்…10 மணிக்கு மீட்டிங் வச்சுக்கலாமுன்னு நேத்தே மெயில் அனுப்பினேனே”, என காலில் சுடுநீர் கொட்டியது போல் அவசர அவசரமாய் ஞானவேல் இருக்கை நோக்கி வந்தான் ஜகன் என்கிற ஜகன்நாதன்
“மீட்டிங் இருந்தா வந்திருப்பாரே…நேத்து அவரோட நண்பர் ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லை…hospital போகணும்னு சொல்லிட்டு இருந்தாரு; நீங்க மெயில் எப்ப அனுப்பினீங்க?”, என கணினியை பார்த்தபடியே குரல் எழுப்பினான் முருகன்.
“நாள் முழுக்க meetings; computer முன்னாடி எல்லாம் வேலை நேரத்துல உக்கார எங்க டைம் பாஸ்; வீட்டுல இருந்து ராத்திரி 10 மணிக்கு அனுப்பினேன். அவருக்கு முடியாதுனா ஒரு மெயில் அனுப்பி இருக்கலாம்”, என அலுத்துக்கொண்டான் ஜகன்.
“அதுதான…நெனச்சேன். சார் நீங்க தான் நாள்பூரா வேலைய கட்டிக்கிட்டு அழறீங்க. எல்லாருமே அப்பிடி இருக்கணும்னு நெனைச்சா நியாயமா? ஆமாம்…நான் கூட ரொம்ப நாளா கேக்கனும்னு நெனைச்சேன்…இப்படி வேலை நேரத்துக்கு வெளில வேலை செஞ்சா O.T பணம் எப்படி வாங்கறது?”, என முருகன் வினவ,
“கிண்டல் தான பாஸ்…O.T எல்லாம் எதுவும் கெடையாது. ஏதோ இது மாதிரி தீயா உழைக்கறத காரணம் காட்டி corporate ladderல முன்னேறலாம்னு பாத்தா..”, என புத்திசாலி போல் பேசுவதாய் நினைத்து பல்லிளித்தான் ஜகன்.
“எனக்கு குடுத்த வேலைய…ஒழுங்கா செய்யறேன். அடுத்த முறை ஏதாவது பெரிய போஸ்ட் காலி ஆனதுனா…என் திறமையயும், என் வேலைல நான் சாதிச்சதையும் எடுத்து சொல்ல போறேன். அத புரிஞ்சுகிட்டு முடிவெடுக்கற மேனேஜரா இருந்தா…தானா வேலை உயர்வு கெடைக்க போகுது. அத விட்டுட்டு, கூஜா தூக்கறது, வேலை நேரத்துலியே முடிச்சிருக்க வேண்டியத இழுத்து அடிச்சு நடுராத்திரி வேலை செய்யறா மாதிரி ‘act’ போடறதுல எனக்கு உடன்பாடில்ல. எவனோ ஒரு முதலாளி கோடிகோடியா சம்பாதிக்க, கரும்பு போல தூக்கத்த விட்டுட்டு கொரங்கு போல கொட்டகொட்ட முழிச்சுகிட்டு இருக்கவும் விரும்பல”, என சிறிது கோபத்துடன் சீறினான் முருகன்.
“அப்ப…என்ன சொல்ல வரீங்க பாஸ்…நாங்கெல்லாம்…”, என தன் தரப்பு வாதத்தை முன் வைக்க ஜகன் துவங்கும் வேளையில், ஞானவேல் தன் ‘cubicle’இனுள் நுழைந்தான்.
ஞானவேல் பைய்யினை மேசை மேல் வைத்துவிட்டு இருக்கையில் அமர்வதற்குள், “என்ன பாஸ்…நான் 10 மணிக்கு மீட்டிங் வச்சுக்கலாம்னு மெயில் அனுப்பினா…ஒரு பதிலையும் காணோம். அந்த கோடிங் இந்த வாரத்துக்குள்ள முடிச்சாகணும் பாஸ்”, என மீண்டும் புலம்ப ஆரம்பித்தான் ஜகன்.
“சார்…மனிஷன் இப்ப தான வந்திருக்காரு…அதுக்குள்ள…”, என ஜகனை வாயை மூட சொல்லியபடி, “உங்க friend எப்படி இருக்காரு வேலு..என்ன சொல்றாரு டாக்டர்?”, என ஞானவேலிடம் விசாரித்தான் முருகன்.
“சேகருக்கு நேத்து ராத்திரியே brain dead ஆயிடிச்சு; ஆனா அவங்க அம்மாதான் இன்னும் பையனுக்கு உயிர் துடிப்பு இருக்கு…எந்த நிமிஷமும் கண் முழிச்சிடுவான்னு அழுதுட்டு இருந்தாங்க; சேகர் தன்னோட உடல் உருப்புகள தானம் செய்யனும்னு சொல்லி இருந்தான். அதுதான் இன்னிக்கி காலைல அவங்க அம்மாவ சமாதானம் செஞ்சு, life சப்போர்ட நிறுத்தி, தேவையான உடல் உறுப்புகள் வெளில எடுத்துட்டு, உடம்ப அமரர் ஊர்தில ஏத்திட்டு வரேன். evening அடக்கம் பண்ண போறாங்க”, என அமைதியாய் பதிலளித்தான் ஞானவேல்.
“உடல் தானமா…எல்லாத்தையும் வெளிய எடுத்ததுக்கு அப்பறம், கர்ண கொடூரமா இருந்திருக்குமே…அவங்க வீட்ல எப்பிடி ஒத்துகிட்டாங்க?”, என சற்றும் கவலையின்றி கேள்வி எழுப்பினான் ஜகன்.
மீண்டும் கோபத்துடன் பதிலளிக்க வாய்திறந்த முருகனின் தோளில் தட்டியபடி, “அப்படின்னு யார் உங்களுக்கு சொன்னாங்கனு தெரியல…உறவினரோட உணர்ச்சிகள மதிச்சு, தேவையான உடல் உருப்புகள வெளில எடுத்துட்டு, கட்டெல்லாம் போட்டு, அவங்க தம்பி கிட்ட ஒப்படைச்சாங்க. மூளைச்சாவுனால உயிர் பிரிஞ்ச கொடையளிப்பவர் அதாவது donor, அதிகபட்சம் 50 பேருக்கு உடல் உறுப்பு தந்து உதவ முடியும்னு டாக்டர் சொன்ன போது, அவங்க அம்மா கண்ணுல ஒரு பெருமிதம் தெரிஞ்சுது; சுத்தி இருந்தவங்க எல்லாருக்குமே ஆச்சரியம்”, என பதிலளித்தான் ஞானவேல்.
“50 பேரா சொன்னீங்க வேலு…நான் கூட படிச்சிருக்கேன்…ஆனா பெருசா அத பத்தி தெரிஞ்சிக்கணும், என்னையும் பதிவு செஞ்சுக்கணும்னு தோணினதே இல்ல”, என கவலையும், தன் மீதே சிறிது கோபமும் கலந்த குரலில் நொந்துகொண்டான் முருகன்.
“எனக்கு கூட அப்படித்தான் முருகா; பதிவு பண்ணனும்னு ஆசை இருக்கு ஆனா அதுக்கான முயற்சி எதுவும் எடுத்ததே இல்ல. ரயில்ல வரும்போது தான் இணையத்துல பாத்திட்டு இருந்தேன். இந்தியால 1991ல இருந்து 2001 வரைக்கும், பிணங்கள்ல இருந்து செய்யற உறுப்பு மாற்றுதல் (organ transplant) மொத்தமே 426 தான் நடந்திருக்காம்…அதாவது ‘on an average’ 50 உறுப்பு மாற்றுதல்கள் தான் நடக்குது. கடந்த 5 வருஷத்துல, இந்தியால 20ல இருந்து 30 லட்சம் இறப்புகள் உடல் உறுப்பு மாற்றுதல் வசதி இல்லாததுனால மட்டுமே நடந்திருக்க வாய்ப்புகள் இருக்காம். இன்னிக்கி வீட்டுக்கு போன உடனே அத பத்தி இன்னும் கொஞ்சம் படிச்சிட்டு, பதிவு செய்யனும்; எரிக்கவோ, பொதைக்கவோ போற இந்த ஒடம்பு ஒரு 10 பேருக்கு உதவியா இருக்கும்னு தெரிஞ்சதுக்கு அப்பறம், நம்ம விருப்பத்த பதிவு செய்யறதுக்கான முயற்சி எடுக்கலனா…எனக்கென்னவோ அது சரியா படல”, என தனக்கு தெரிந்த உடல் தானம் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டான் ஞானவேல்.
“அட போங்க சார்…உடல் தானம் செய்ய பதிவு செஞ்சிருக்கோம்னு தெரிஞ்சு, வைத்தியம் செய்யற டாக்டரே ஏதாவது மருந்து குடுத்து நம்மள close பண்ணிட்டாருனா…இதெல்லாம் வம்ப விலைகுடுத்து வாங்கற வேலை”, மீண்டும் ஜகன்.
“ரொம்ப பெருசா இத பத்தி எனக்கு தெரியாட்டியும், உடல் தானம்….இயற்கையான இறப்பு இல்ல மூளைச்சாவு மாதிரியான சமயங்கள்ல தான் செய்ய முடியும். அதுவும், உடல் உறுப்புகள் திரும்பவும் பயன் படும் நிலைமைல இருக்கான்னு பரிசோதனை எல்லாம் செஞ்சதுக்கு அப்பறம் தான் உடல் பாகங்கள வெளில எடுப்பாங்க. internetல இத பத்தின மேலும் பல தகவல்கள், பதிவு செய்ய வேண்டிய இடங்கள்னு எல்லாமே இருக்கு. நேரம் கெடைச்சா படிச்சு பாருங்க”, என விளக்கினான் ஞானவேல்.
“நேரம் கெடைச்சா…அப்ப பாத்துக்கலாம். சொல்லுங்க..உங்களுக்கு அந்த மீட்டிங் எப்ப சரிபட்டு வரும்..இன்னிக்கி afternoon முடியுமா?”, என அலைப்பேசியை பார்த்தபடி கேள்வி எழுப்பினான் ஜகன்.
சங்கூதுவது போல் முருகன் சைகை காட்ட, பக்கத்தில் இருந்த இன்னொருவர், “காது கேக்கலப்பா”, என பதிலளித்தான். “அட ஏன்பா…அவர நக்கல் பண்ணிக்கிட்டு”, என மெல்லமாய் இருவரிடமும் கூறிவிட்டு, “ரெண்டு மணிக்கு உங்க deskல மீட்டிங் வச்சுக்கலாம் சார்”, என ஜெகனுக்கு பதிலளித்தான் ஞானவேல்.

பின்னூட்டங்கள்
  1. கீதமஞ்சரி சொல்கிறார்:

    அறியாமையால்தான் உடல் உறுப்புகள் தானம் பற்றி மக்களுக்குத் தெரியாமல் இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதைப் பற்றி அறிந்தும் கூட அலட்சியப்படுத்தும் ஜகன் போன்ற சில படித்த மனிதர்களோடு ஒப்பிடுகையில் தான் பெற்றப் பிள்ளையைப் பறிகொடுத்த வேளையிலும், அதன் அருமை உணர்ந்து பெருமிதத்துடன் மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய சம்மதித்த தாய் மிகவும் உயர்ந்துவிட்டாள்.

    விழிப்புணர்வுடன் கூடிய மனம் தொட்ட கதைக்குப் பாராட்டுகள் அனு.

  2. கீதமஞ்சரி சொல்கிறார்:

    தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html

    • அனு சொல்கிறார்:

      வலைச்சரத்துல அறிமுகமப்படுத்தினதுக்கு நன்றிங்க கீதா:) படித்ததில் பிடித்தவைகளை…நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நல்ல ஒரு வழிதாங்க! வாழ்த்துக்கள்!

பின்னூட்டமொன்றை இடுக