Posts Tagged ‘ஏமி ஜாக்சன்’

இன்று….அதேதான் வெட்டியாய் இருந்த ஒரே காரணத்தினால் இந்த கர்ணகொடூரமான ப(ப்)டத்தை பார்க்க நேர்ந்தது.

நல்ல வேளையாக…30 நிமிடத்திற்கு மேல் பார்க்கவில்லை!

பணம் இருக்கும் ஒரே காரணத்தினால் ‘நடிக்கும்’ உதயநிதி ஸ்டாலின், வெள்ளை தோல் இருக்கும் ஒரே காரணத்தினால் ‘நடிக்கும்’ ஏமி ஜக்சன்..என நடிப்புக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத நாயகனும் நாயகியும்! படம் பார்த்த ஒவ்வொரு நிமிடமும்…இதற்கு 120 ரூபாய் கொடுத்து திரையரங்கில் பார்த்த மக்களை நினைத்து வருத்தம் படாமல் இருக்க முடியவில்லை.

இந்த நிறவெறி ததும்பும் காட்சியில், நூலகத்தில் இருந்து திருடிய புத்தகங்களை திருப்பிக் கொடுக்க குழையும் கதாநாயகி; 3 புத்தகங்களை தன் தோழியிடம் கொடுத்திருப்பதாகவும், அவள் ‘கும் ‘ என இருப்பாள் எனவும் சொல்லி, அவளை பார்க்கச் செல்கின்றனர்..கதாநாயகன், கதாநாயகி மற்றும் கதையில் ‘காமெடி’க்கென உலாவரும் கருணாகரன்.

அந்த தோழி வீட்டிலிருந்து வெளியில் வருகிறாள். தமிழ் திரைப்படங்களின் ‘காமெடி கலர்’ என பட்டம் வாங்கிய கருப்பு நிறத்தில் இருக்கிறாள்.

அவளை பார்த்த உடன் இடம்பெறும் வசனங்கள் பின் வருபவை…

“இதுதான் உன் கும்மா??? பாக்கறதுக்கு ட்ரம் மாதிரி இருக்கா”

அந்த தோழியிடம் இருந்த புத்தகங்களை வாங்கி, தலைப்பை நாயகன் படிக்க, counter அடிக்கிறார் நம் ஆணழகன் கருணாகரன்….

புத்தகப் பெயர்: ‘தலையணை மந்திரம்’
கருணாகரன் – “தலகாணி மாதிரி இருந்துட்டு தலையணை மந்திரம் கேக்குதா”

புத்தகப் பெயர்: ‘கணவனை கைக்குள் வைத்திருப்பது எப்படி’
கதாநாயகன் – “ஏன்மா உனக்கு கல்யாணம் ஆய்டுச்சா”
தோழி – “இன்னும் ஒரு தடவை கூட ஆகலங்க”
கருணாகரன்: “ஒருவாட்டியாவது ஆகுதான்னு பாப்போம்”

பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சட்டென தோன்றியவை….

“ஏன்டா டேய்…அந்த பொண்ணு உன் கலர் தான் தெரியும் ல; இது காமெடி னு பேசற உனக்கும் வெக்கம் இல்ல; அத பக்கத்துல இருந்து பாத்துகிட்டு நிக்கற ஆணழகனுக்கு(நம்ம கதாநாயகன்..யப்பா அதுவும் ஒரு பூனை கண்ணு மாதிரி ஏதோ வச்சுக்கிட்டு!!!) வெக்கம் இல்ல; உங்கள வச்சு படம் எடுக்கற இயக்குனருக்கும் வெக்கம் இல்ல; இந்த கோஷ்டிய வச்சு படம் எடுக்கற தயாரிப்பளார்….ஓ அதுவும் கதாநாயகன் தான்ல…”

“உங்கள எல்லாம், “நீ கருப்பா இருந்தா என்ன செவப்பா இருந்தா என்ன…நீ ஆண் சிங்கம் டா!”, “பொட்டச்சிங்க நீ கிண்டல் செய்யறதுக்கும் அடக்கி ஆளறதுக்கும் பொறந்தவங்க; கருப்பா இருந்தான்னுவை, இன்னும் சூப்பர்…காமெடி செஞ்சு கூத்து அடி டா”, னு வளத்து ரோட்ல திரிய விட்ட சமூகத்த சொல்லணும்”

இந்த படத்தின் இன்னொரு ‘சிறப்பம்சம்’….”கருப்பானவன் தான் வில்லனாய் இருக்க மிக தகுதி ஆனவன்” என்ற தமிழ் திரைப்படத்திற்கே உரிய உண்மையை நிலைநாட்டியது!!!

அதன் காரணமே, கால்பந்து வீரர் விசயனுக்கு அடித்த ஜாக்பாட்…படத்தின் கொடூரமான வில்லன் பதவி!!!!

இந்த இடத்தில் என் கணவன் கூறியது தான், பதிவுக்கு தகுந்த முடிவாக இருக்கும்…

இதையெல்லாம் பார்க்கும் எமி ஜாக்சன் கட்டாயம் நினைப்பாள், “நம்ம ஊருல நிறவெறினு பேசறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல போலவே! இந்த ஊரு என்னடா இப்படி நிறவெறி ல ஊறி கெடக்கு???”