Posts Tagged ‘பெண்ணடிமைத்தனம்’

“பரவாயில்ல மனோஜ் நான் பின்னாடியே உக்காந்துக்கறேன்”, என கூறியபடி, மகிழுந்தின் பின் இருக்கையில் அமர்ந்தான் சதிஷ்.
இருக்கைப் பட்டியை போட்டுக்கொள்ள நினைவு படுத்தியபடி, வண்டியை கிளப்பினான் வருண்.

“காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது;
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டால்…”, என ரட்சகன் படப்பாடல் வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
“போச்சுடா திரும்பவுமா…???”, என அலுத்துக்கொண்டான் சதீஷ்.
“என்ன ஆச்சு பாஸ்…நல்ல பாட்டு தான? infact ஸ்ரீனிவாஸ் பாடினதுல, என் favorite இதுதான்”, என கூறினான் மனோஜ்.

“காலைல டீ கடைல இருக்கும் போது, “அம்மான்னா சும்மா இல்லடா…அவ இல்லனா யாரும் இல்லடா” பாட்டு.
அப்பறம் பக்கத்து டெஸ்க் ல இந்த தினேஷ்…”நானாக நானில்லை தாயே…”, பாட்ட போட்டு மெய்மறந்து ரசிச்சிட்டு இருந்தான்.
அதுல நடுவுல ஒரு வரி…”கோயில் தொழும் தெய்வம்…நீ இன்றி நான் காண வேறில்லை”

போதும்டா சாமினு டெஸ்க் ல இருந்து எஸ்கேப் ஆனா…இப்ப கார்லயும்!!! பாட்டுக்கு situation எதுவும் சரியா அமையலனா, உடனே “தாய்ப்பாசம் தீம் தான்ப்பா”னு எழுத ஆரம்பிப்பாங்க போல”, என புலம்பி முடித்தான் சதிஷ்.
“நீங்க இப்பிடி பேசுவீங்கன்னு நான் எதிர்பாக்கல. ஒரு குழந்தைய பெத்து வளக்கறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா…அத தனி ஆளா நம்ம அம்மாக்களும் மனைவிமார்களும் செய்யும் போது, அத புகழறதுல என்ன தப்பிருக்கு?”, என ஒரு வருத்தத்துடன் தன் கோபத்தை வெளிப்படுத்தினான் மனோஜ்.

“தனி ஆளா எல்லாத்தையும் செய்யறா”னு சொல்றீங்கல…அதுதான் பிரச்சனையே! ஒரு கொழந்தை உருவாக தேவையான உடல் அமைப்பு பொண்ணுக்குத்தான் இருக்கு; அந்த வேலைய அவ செய்யும் போது, நம்ம society அவளோட உடல் தளர்வ மட்டும் தான் பாக்குது. அவங்களால முடிஞ்ச ரெண்டு மூணு வீட்டு வேலைய பண்ணிட்டு, இது மாதிரி, “சூப்பர் மா நீ…”, “நான் கண்ட தெய்வம்”னு மெலடி பாடிட்டு, அவங்க அவங்க வேலைய பாக்க போய்டுறாங்க”, என சதீஷ் கூறி முடிப்பதற்குள்,

“வேற என்ன பண்ண முடியும் சொல்றீங்க…நாலு மாசம் பொண்ணு சொமக்கட்டும், அப்பறம் ஒரு 5 மாசம் அவ புருஷன் சொமந்தா சரியா இருக்குமா?”, என புத்திசாலித்தனமாய் பேசியதாய் நினைத்து, கொள்ளென சிரித்தான் மனோஜ்.

வேறு யாரும் காரில் சிரிக்கவில்லை எனக்கண்டு, சிரிப்பதை நிறுத்தினான்.
“seriously சதிஷ்…நீங்க சொல்ற வேலைகள தவற husbands என்ன ஹெல்ப் செய்யணும்னு சொல்றீங்க? என் wife pregnant ஆ இருந்த போது, பாத்திரம் தேய்க்கறது or வேற எந்த கஷ்டமான வேலையா இருந்தாலும் நான்தான் செய்வேன். அத தவற, அவ டாக்டர்/scan appointments க்கு கூட்டிகிட்டுப் போவேன். ஏதோ சொல்ல வரீங்கனு தெரியுது. ஹோட்டல் வந்தாச்சு. சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்”, என அமைதியாய் பதிலளித்தான் வருண்.

உணவகத்தில், அவரவர் விருப்பத்துக்கேற்ப, மதிய உணவை உத்தரவிட்டனர்.
“சாரி பாஸ்…நீங்க ஏதோ சீரியசா பேச வரும் போது, நான் அப்பிடி சிரிச்சிருக்கக் கூடாது…நீங்க சொல்லுங்க”, என மீண்டும் உரையாடலை தொடங்கினான் மனோஜ்.

“ஒன்னும் பிரச்சனை இல்ல மனோஜ். ‘Post natal depression’ பத்தி நீங்க யாராவது கேள்வி பட்டிருக்கீங்களா?”, என்ற கேள்விக்கு, அமைதி மட்டுமே பதிலாய் வர, தொடர்ந்தான் சதிஷ்.
“கர்ப்பிணி பெண்களுக்கு usual ஆ டெலிவரிக்கு அப்பறம் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அது என்ன, எதுனால வருதுன்னு தெரியாது…தெரிஞ்சிக்க ஆசைப்படவும் இல்ல. ஆனா போன வாரம், என் schoolmate ஓட மனைவிக்கு, அந்த கண்டிஷன் ரொம்ப மோசமாகி, ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணினாங்க.
அதுக்கு அப்பறம் internet ல அத பத்தி படிக்கும் போது தான், அது ஒரு சீரியசான கண்டிஷன்னு புரிஞ்சது”, என சதிஷ் ‘பிரசவத்திற்கு பிந்தைய மனஅழுத்தம் பற்றி பேச ஆரம்பித்தான்.

“இந்த மாதிரிதான் ஒரு கண்டிஷன் பத்தி மலரோட டெலிவரிக்கு அப்பறம் டாக்டர் பேசினாங்க. சாரி மனோஜ், மலர் என் மனைவி. அது postpartum depression னு நினைக்கறேன்”, என தனக்கு தெரிந்ததை கூறினான் வருண்.
“அட…ஆமாம். ஒரு form குடுத்து fill up பண்ண சொன்னாங்க. மலரோ நானோ அத பெருசா பொருட்படுத்தல”, என சட்டென நினைவுக்கு வந்ததையும் உரையாடலில் இணைத்தான்.

“ஆமாம் வருண்…அத postnatal இல்ல postpartum depression சொல்லுவாங்க. கர்ப்பமா இருக்கும் போது வர்ற மனத்தளர்ச்சிய antenatal depression னு சொல்லுவாங்க. இந்த கண்டிஷனுக்கான அறிகுறிகள் நெறையா இருக்கு…ஆனா எல்லா அறிகுறியும் எல்லா பெண்களுக்கும் ஏற்படறது இல்ல. உதாரணத்துக்கு ஒரு காரணமும் இல்லாம அழுவாங்க, தூக்கம் சரியா வராது; சில சமயங்கள்ல ரொம்ப அதிகமா தூங்குங்க, ரொம்ப சோர்ந்து போய் இருப்பாங்க, காரணமே இல்லாம சுத்தி இருக்கறவங்க கிட்ட எரிஞ்சு விழுவாங்க. இதெல்லாம் அந்த மனத்தளர்ச்சியோட வெளிப்பாடுனு டாக்டர்ஸ் சொல்றாங்க”, என PPD யின் அறிகுறிகளை எடுத்துரைத்தான் சதீஷ்.

“என்ன பாஸ் சொல்றீங்க?? காரணமே இல்லாம அழறதெல்லாம் இந்த depression ஓட symptoms ஆ??மாசமா இருந்த போது, என் wife அப்படி இருந்து பாத்திருக்கேன். “ரொம்ப பயமா இருக்குங்க”, னு சொல்லுவா. அப்பறம் திடீர்னு ‘ஓ ‘னு அழுவா. நான் ஒவ்வொரு தடவையும், “சும்மா மனச போட்டு வருத்திக்காத…எல்லாம் டெலிவரி ஆனா சரி ஆய்டும்”, னு அவ வாய அடைச்சிடுவேன்.
எங்க அம்மா கூட, “புள்ளத்தாச்சி பொண்ணு சும்மா சும்மா அழக்கூடாது. கண்ண தொடைச்சுக்கோ”, னு தான் சொல்லுவாங்க. அவ்வளவுதான்”, என சோகம் படர்ந்த முகத்துடன், தன் மனைவி கற்பித்திருந்த போது இருந்த நிலைமையை பற்றி விவரித்தான் மனோஜ்.

“அந்த நேரத்துல பயத்துக்கு நெறய காரணம் இருக்கும்…தாய்ப்பால் சரியா சுரக்குமான்னு இருக்கலாம், இல்ல இந்த குழந்தைய ஒழுங்கா பாத்துப்போமான்னு அவங்க மேலயே ஒரு சந்தேகம் ஏற்படலாம். கொழந்தை வர்றதுக்கு முன்னாடி நல்லா active ஆ இருந்திருப்பாங்க…திடீர்னு வீட்லியே அடைஞ்சு கெடக்கறதுனால ஏற்படற விரக்தி கூட பயமா உருவெடுக்கலாம்”, என தனக்கு தெரிந்த சில காரணங்களை முன்வைத்தான் சதிஷ்.

“கொஞ்சம் பயமா இருந்த விஷயம்னா, இந்த மனத்தளர்ச்சிய கண்டுபுடிச்சு சரியா சிகிச்சை செய்யலைனா , ரொம்ப severe நிலைமைக்கு போக வாய்ப்புகள் இருக்காம். அந்த மாதிரியான depression ல அம்மா தவிக்கும் போது, பொறந்த குழந்தையோட எடை, அறிவுத்திறன் கூட பாதிக்கப்படுமாம்”, என சதிஷ் கூறி முடிக்க,

“இதெல்லாம் எனக்கு புதுசா இருக்குங்க சதிஷ். இப்ப கொழந்தை பொறந்து ரெண்டு வருஷம் ஆனதுக்கு அப்பறமும் அவளுக்கு உடல் தளர்ச்சி, கோவம் எல்லாம் தலைத்தூக்கத்தான் செய்யுது. அதுவும் இந்த postnatal depression ஓட தொடர்ச்சியா இருக்குமோ?”, என ஆர்வத்துடன் வினவினான் மனோஜ்.

“நான் கூட அதப்பத்தி யோசிச்சேன். ஒரு குழந்தை வளர்ப்புல பெருசா யாரோட பங்கும் இல்லாத போது, உள்ளுக்குள்ளேயே போட்டு புழுங்கறதோட வெளிப்பாடுதான் இந்த கோவம், எரிஞ்சு விழறது எல்லாம் போலனு. அது உண்மையா மட்டும் இருந்தா, மனைவிய திட்டற மாதிரி சினிமா ல வர்ற பாட்டுகளும், கோவப்படற மனைவிய நக்கல் அடிக்கறா மாதிரி social media ல வர்ற forwards எல்லாம் ரொம்ப தப்புங்க”, என பதிலளித்தான் சதிஷ்.
ஒரு நிமிடத்திற்கு காரில் நிசப்தம்.
“ரட்சகன் பாட்டுல ஆரம்பிச்சு, இவ்வளவு serious ஆ போகும்னு நான் எதிர்பாக்கவே இல்ல. சாரி guys”, என உண்மையான வருத்ததுடன் அமைதியை உடைத்தான் சதிஷ்.
“இல்ல சதிஷ்…இந்த topic கொண்டு வந்ததுக்கு, நாங்க தான் உங்களுக்கு thanks சொல்லணும். Honestly ரொம்ப நல்ல கணவனா, மலரோட எல்லா தேவைகளையும் புரிஞ்சு நடக்கறதா ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். வாங்கிக்கொடுக்கற நகை, துணில வர்ற அந்த புன்னைகைய பாத்துட்டு, எல்லாம் சுமூகமாத் தான் போயிட்டு இருக்குனு நினைச்சிருக்கேன். அவ இன்னிக்கி working from home. முடிக்க வேண்டிய ரெண்டு வேலைய finish பண்ணிட்டு, இன்னிக்கே போய் பேச ஆரம்பிக்கறேன். once again thanks சதிஷ்”, என ஒரு சிறு புன்னகையுடன் கூறினான் வருண்.
“ப்ளீஸ்…thanks எல்லாம் எதுக்கு வருண்எ; னக்கு தெரிஞ்சத ஷேர் பண்ணிக்கிட்டேன்”, என சதிஷ் விடையளிக்க,
“ஆமாம் சதிஷ்…thank you. but நான் வருண் மாதிரி திடுதிப்புனு பேச ஆரம்பிச்சா, என் wife, “என்னங்க உடம்பு ஏதாவது சரியில்லையா…டாக்டர் கிட்ட போகணுமா”, னு கேப்பா. நான் இதை பத்தின வீடியோ ஏதாவது play பண்ணி, அவ கருத்த கேக்கப்பாக்கறேன்”, என கூறிக்கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்த மனோஜ், “சரி…எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு…அப்படியே கிளம்பறேன்”, என கார்பார்க்கில் வண்டி நின்ற உடன் விடைப்பெற்றுக்கொண்டான்.
“ஆமாம் நானும் கிளம்பறேன் வருண்”, என விடைபெற சதிஷ் எத்தனிக்க,
“வந்துட்டேன்…ஒரு நிமிஷம்”, என கூறியபடி வண்டியை வருண் அணைக்கும் போது,
“ஆழம் எது அய்யா…அந்த பொம்பள மனசு தான்யா”, என்ற பாடல் வானொலியில் ஒலித்தது.
இரு நண்பர்களும், ஒரு புன்னைகையை பகிர்ந்தபடி, அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

*************************************************************************************

சிறுகதை ஒலிப்பதிவு வடிவில்: 

பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தம் பற்றிய என் கருத்துக்கள், ஒலிவடிவில்: 

PPD பற்றிய ஆவணப்படம்:

PPD பற்றிய துண்டு வெளியீடுகள்: 

http://www.healthtranslations.vic.gov.au/bhcv2/bhcht.nsf/PresentDetail?Open&s=Sad_feelings_after_childbirth_-_a_hidden_problem_

 

 

 

 

 

 

 

 

 

நிறைய நாட்கள் கழித்து…மீண்டும் பிதற்றல் பக்கம் தலை வைக்கிறேன்!! இம்முறையும் எதுவும் புதிதாக எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், சமீபத்தில் tamiltalkies தளத்தில், இறைவி பட விமர்சனத்திற்கு இட்ட பின்னூட்டத்தையே பதிவாக பதிக்க உள்ளேன்.

Tamiltalkies தளத்தில் இடம்பெற்ற இறைவி படத்தின் திரைவிமர்சனம் இது…

என் ஆதங்கம் கலந்த பின்னூட்டம் பின் வருமாறு…

வணக்கம் தமிழ் டாக்கீஸ்! நானும் என் கணவனும் நீங்க திரை விமர்சனம் செய்ய ஆரம்பிச்ச காலத்துல இருந்து விமர்சனங்கள பாத்துட்டுவரோம். முழுக்க முழுக்க உங்க விமர்சனங்கள்ல உடன்பாடு இல்லாட்டியும், பெரும்பாலான படங்கள்ல ஒத்துப்போவோம். சில படங்களுக்கு எல்லாம் பயங்கர ‘hype’ இருக்கும் போது …உங்க குழு என்ன சொல்றாங்கனு விரும்பிப் பாப்போம். அந்த மாதிரி பாத்து புடிச்ச விமர்சனங்கள் பட்டியல்ல…’கடல்’, ‘ஜில் ஜங் ஜக்’ சொல்லலாம்.

பெரும்பாலும் நீங்க வியாபார கோணத்துல தான் விமர்சனம் பண்ணுவீங்கனு தெரியும்…ஆனா இந்த படத்த நேத்து பாத்ததுக்கு அப்பறம் உங்க கருத்து என்னனு தெரிஞ்சிக்க…விமர்சனத்த பாத்தோம். கர்ணன் பட விநியோகஸ்த்தர் நினைக்கறேன்…அவரோட உரையாடல், தேர்தல் போது இடம்பெற்ற தொகுப்பு எல்லாம் பாத்துட்டு…ஏனோ, நீங்க ஒரு விரிவான சமூக சிந்தனை உள்ளவங்க, ஒரு நல்ல முயற்சில இருக்கற தப்புகள சுட்டிக்காட்டுவீங்க…ஆனா எடுத்த முயற்சிய பாராட்டுவீங்கனு நினைச்சுட்டேன்!

இந்த படத்துல இடம்பெற்ற பெண் கதாப்பாத்திரங்கள பத்தி நீங்க விமர்சிச்சது, உங்க குழு மேல வச்சிருந்த மரியாதைய ரொம்ப கீழ கொண்டுவந்துடுச்சு.

பூஜா கதாப்பாத்திரத்த பத்தி பேசும் போது…”ரொம்ப தவறான முறைல செயல் படுது” னு சொல்றீங்க. ஆனா அதே மாதிரியான ஒரு கதாப்பாத்திரதுல மாதவன் இறுதிச் சுற்றுல வரும் போது, அது பத்தின பேச்சே இல்ல. அது எப்படி, “ஆண்கள் செஞ்சா…ஒரு விஷயமே இல்ல…ஆனா அதே ஒரு பொண்ணு செஞ்சா…அது அராஜகமா?” அவ வாழ்க்கைய எப்படி நடத்தனும்னு சமூகத்து கிட்ட கேட்டு தான் அவ முடிவு எடுக்கனுமோ??

அப்பறம் பெண்கள பத்தி பேசும் போதெல்லாம்…”பண்ணுது”, “செய்யுது”…னு ஒரு வாயில்லா பொருள பத்தி பேசறா மாதிரி விமர்சிக்கிறீங்க….ஆனா S.J. சூரியா கதாப்பாத்திரம் பத்தி சொல்லும் போது…”அவரு”, “செஞ்சாரு” னு மரியாதை. இதுல அந்த கதாபாத்திதோட குடிப் பழக்கத்துக்கு ஒரு சப்பக்கட்டு கட்றீங்க பாருங்க….செமையா இருக்கு! அது எப்படி..”இவ்வளவு மாசங்கள், வருஷங்கள் குடிச்சா தான் அவன் ஒரு குடிகாரன்…அப்ப தான் அவன் பொண்டாட்டிக்கு சண்டை போடற உரிமை இருக்கு. பத்து நாள், ஒரு மாசம் எல்லாம் ஒரு matter ஏ இல்ல, அதுவும் எவ்வளவு மனசு ஒடிஞ்சு போய் இருக்காரு…அதுக்கெல்லாம் மேலையும் கீழையும் குதிச்சா அது தப்பு ல?”

அப்பறம் அஞ்சலி கதாப்பாத்திரம்…”புருஷன எதித்து கேட்டு…அவளே அவ மரியாதைய கெடுத்துகிட்டா”! அது எப்படிங்க…ஒரு கேவலமான ஆளு அவன் (விஜய் சேதுபதி கதாப்பாத்திரம்)…வீட்ல இருக்கற பொண்டாட்டிய பத்தி கவலை படாம….நண்பர்களுக்காக ஜெயிலுக்கு போறான். அவன மதிச்சு, அவன் எவ்வளவு கீழ்த்தனமான கேள்வி கேட்டாலும்…அதுக்கு அவ “ஆமாங்க…இல்லீங்க” னு பதில் அளிக்கனுமா? இதே மாதிரி தான் கல்யாணம் ஆன புதுசுல…அவன் அவகிட்ட..”நான் இப்படி தான்…புடிச்சா இரு”னு சொல்லுவான். அத நீங்க “அவனையே நம்பி வந்த பொண்ண இப்படி நடத்தறானே”னு விமர்சிக்கல…..அப்ப இங்க மட்டும் எதுக்கு?

பத்தோட பதினொன்னா இருக்கப் போகுது இந்த பின்னூட்டம்னு தெரிஞ்சும்….ஏன் எழுதறேன்னு தெரியல. ஏதோ இவ்வளவு நாளா பாத்துட்டு இருக்கோமே…நம்ம கருத்தையும் பதிப்போம்னு ஒரு ஆதங்கம் தான்.

இதுல என்ன காமெடினா…சில படங்கள் விமர்சிக்கும் போது, heroine எப்பவும் போல…லூசு மாதிரி வந்துட்டு ‘போகுது’னு விமர்சிக்கறீங்க….ஆனா அவளுக்கு சரின்னு படறத பேசும் போது , தப்பானவ, மரியாதை தெரியாதவ னு சொல்றீங்க!

உங்க விமர்சனக் குழுவுல…”அச்சம் மடம் நாணம்….இவை பெண்களுக்கு அவசியமானவை”, “புருஷன மதிக்க தெரியாதவ….நல்ல பொண்டாட்டியே இல்ல” மாதிரியான கருத்துக்கள முழுமையா நம்பும் ஆண்களும் அதுக்கு சப்பக்கட்டு கட்டும் பெண்களும் தான் இருக்காங்க போல. ‘முற்போக்கு சிந்தனை’னு சொன்னா…”ஓ அடுத்த வாரம் release ஆற படமா”னு கேப்பாங்க போல! எப்ப பாரு…”சமுதாயத்துல சரி னு சொல்றத மட்டும்…வேதவாக்கா எடுத்துகிட்டு, அது படி இருக்கற படம் தான் நல்ல படம்…இல்லனா தேறாது” மாதிரியான நிலைப்பாடு வேணாமே.

அரைச்சு மாவையே அரைக்காம புதுசா வர்ற படங்களே ரொம்ப கம்மி நம்ம கோலிவுட் ல. அதையும்…”எதுக்கு தம்பி…வேற வேலை இருந்தா பாரு” னு நீங்க தட்டி கழிச்சா…அப்பறம் உங்க விமர்சனத்த பாத்துட்டு, பாக்க போறவனும் வேணாம்னு முடிவு செய்வான், அப்பறம் என்ன ஆகும்னு உங்களுக்கே தெரியும்.

அதுக்காக இந்த படம். “ஒரு trendsetter ‘, ‘இத விமர்சிக்க ஒரு தனி அறிவு வேணும்”னு எல்லாம் நான் சொல்லல. இந்த படத்துல, கடசில திணிக்கப் பட்ட பெண்ணிய கருத்துக்களாகட்டும், படத்தோட நீளம் ஆகட்டும், ரொம்ப சுமாரான பாடல்களாகட்டும், நெறைய விஷயங்கள் எங்களுக்கும் கசப்பாத் தான் இருந்தது. அதுக்காக ரெண்டு மூணு கொறைய வச்சு, படத்தையே தள்ளுபடி செய்யறது சரி இல்ல.

நாலு லைன் எழுதுவேன்னு நினைச்சேன்…ஒரு கதையே எழுதிட்டேன். எனக்கு சொல்லனும்னு தோணினத சொல்லிட்டேன். நன்றி!

இன்று….அதேதான் வெட்டியாய் இருந்த ஒரே காரணத்தினால் இந்த கர்ணகொடூரமான ப(ப்)டத்தை பார்க்க நேர்ந்தது.

நல்ல வேளையாக…30 நிமிடத்திற்கு மேல் பார்க்கவில்லை!

பணம் இருக்கும் ஒரே காரணத்தினால் ‘நடிக்கும்’ உதயநிதி ஸ்டாலின், வெள்ளை தோல் இருக்கும் ஒரே காரணத்தினால் ‘நடிக்கும்’ ஏமி ஜக்சன்..என நடிப்புக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத நாயகனும் நாயகியும்! படம் பார்த்த ஒவ்வொரு நிமிடமும்…இதற்கு 120 ரூபாய் கொடுத்து திரையரங்கில் பார்த்த மக்களை நினைத்து வருத்தம் படாமல் இருக்க முடியவில்லை.

இந்த நிறவெறி ததும்பும் காட்சியில், நூலகத்தில் இருந்து திருடிய புத்தகங்களை திருப்பிக் கொடுக்க குழையும் கதாநாயகி; 3 புத்தகங்களை தன் தோழியிடம் கொடுத்திருப்பதாகவும், அவள் ‘கும் ‘ என இருப்பாள் எனவும் சொல்லி, அவளை பார்க்கச் செல்கின்றனர்..கதாநாயகன், கதாநாயகி மற்றும் கதையில் ‘காமெடி’க்கென உலாவரும் கருணாகரன்.

அந்த தோழி வீட்டிலிருந்து வெளியில் வருகிறாள். தமிழ் திரைப்படங்களின் ‘காமெடி கலர்’ என பட்டம் வாங்கிய கருப்பு நிறத்தில் இருக்கிறாள்.

அவளை பார்த்த உடன் இடம்பெறும் வசனங்கள் பின் வருபவை…

“இதுதான் உன் கும்மா??? பாக்கறதுக்கு ட்ரம் மாதிரி இருக்கா”

அந்த தோழியிடம் இருந்த புத்தகங்களை வாங்கி, தலைப்பை நாயகன் படிக்க, counter அடிக்கிறார் நம் ஆணழகன் கருணாகரன்….

புத்தகப் பெயர்: ‘தலையணை மந்திரம்’
கருணாகரன் – “தலகாணி மாதிரி இருந்துட்டு தலையணை மந்திரம் கேக்குதா”

புத்தகப் பெயர்: ‘கணவனை கைக்குள் வைத்திருப்பது எப்படி’
கதாநாயகன் – “ஏன்மா உனக்கு கல்யாணம் ஆய்டுச்சா”
தோழி – “இன்னும் ஒரு தடவை கூட ஆகலங்க”
கருணாகரன்: “ஒருவாட்டியாவது ஆகுதான்னு பாப்போம்”

பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சட்டென தோன்றியவை….

“ஏன்டா டேய்…அந்த பொண்ணு உன் கலர் தான் தெரியும் ல; இது காமெடி னு பேசற உனக்கும் வெக்கம் இல்ல; அத பக்கத்துல இருந்து பாத்துகிட்டு நிக்கற ஆணழகனுக்கு(நம்ம கதாநாயகன்..யப்பா அதுவும் ஒரு பூனை கண்ணு மாதிரி ஏதோ வச்சுக்கிட்டு!!!) வெக்கம் இல்ல; உங்கள வச்சு படம் எடுக்கற இயக்குனருக்கும் வெக்கம் இல்ல; இந்த கோஷ்டிய வச்சு படம் எடுக்கற தயாரிப்பளார்….ஓ அதுவும் கதாநாயகன் தான்ல…”

“உங்கள எல்லாம், “நீ கருப்பா இருந்தா என்ன செவப்பா இருந்தா என்ன…நீ ஆண் சிங்கம் டா!”, “பொட்டச்சிங்க நீ கிண்டல் செய்யறதுக்கும் அடக்கி ஆளறதுக்கும் பொறந்தவங்க; கருப்பா இருந்தான்னுவை, இன்னும் சூப்பர்…காமெடி செஞ்சு கூத்து அடி டா”, னு வளத்து ரோட்ல திரிய விட்ட சமூகத்த சொல்லணும்”

இந்த படத்தின் இன்னொரு ‘சிறப்பம்சம்’….”கருப்பானவன் தான் வில்லனாய் இருக்க மிக தகுதி ஆனவன்” என்ற தமிழ் திரைப்படத்திற்கே உரிய உண்மையை நிலைநாட்டியது!!!

அதன் காரணமே, கால்பந்து வீரர் விசயனுக்கு அடித்த ஜாக்பாட்…படத்தின் கொடூரமான வில்லன் பதவி!!!!

இந்த இடத்தில் என் கணவன் கூறியது தான், பதிவுக்கு தகுந்த முடிவாக இருக்கும்…

இதையெல்லாம் பார்க்கும் எமி ஜாக்சன் கட்டாயம் நினைப்பாள், “நம்ம ஊருல நிறவெறினு பேசறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல போலவே! இந்த ஊரு என்னடா இப்படி நிறவெறி ல ஊறி கெடக்கு???”

 

 

வருடத்தின் கடைசி வாரங்கள்… ஊர் சுற்றுவது, படங்கள் பார்ப்பது என செலவு செய்ய முடிவு செய்திருந்தேன். அவ்வாறே நகர்ந்தும் கொண்டிருந்தது. ஆனால் ஓரிரு வாரங்களாக பல தமிழ் திரைத்துறை சம்பந்தப் பட்ட விஷயங்கள், “எடுறீ பேனாவ….எழுதுறீ பதிவ” என எனக்குள் இருந்த வெறுப்பையும், கடுப்பையும் வெளிக்கொணரத் தூண்டியது.

பதிவை பிரசுரிப்பதற்குள் புது வருடம் பிறந்து விட்டது. புது வருடத்தை ஒரு புலம்பல் பதிவுடன் ஆரமிக்க வேண்டுமா என நினைத்தேன் …பின்னர், “பொலம்பனும்னு முடிவெடுத்தாச்சு….அப்பறம் புது வருஷம் என்ன பழசென்ன என்ன”, என பிரசுரிக்கிறேன்!

ஒவ்வொன்றாக இனி…

Beep சாங் + இளையராஜா

சமீபத்தில் தமிழகத்தை ஆட்கொண்ட மழை வெள்ளத்திற்கு நிவாரண நிதி வழங்கும் ஒரு விழாவில் பேசுகிறார் இளையராஜா…
“இயற்கை ஆண்டவனின் வேலை ஆள்; “அவங்க மனசெல்லாம் சரியில்ல..சரி செஞ்சுட்டு வா”ன்னு இயற்கைய அனுப்பிச்சு நமக்கு ஒரு தண்டனைய கொடுத்தான் இறைவன்”.

மழை வெள்ளத்தில் இறந்த 300 க்கும் மேற்பட்டப் பேரில், அவருக்கு வேண்டியவர்கள் இருந்திருந்தால், இப்படி ஒரு கேவலமான ‘தத்துவத்தை’ சபையில் பேசியிருப்பாரா?

மக்களுக்கு சரியான சாலைகளையும், வடிகால் வசதிகளையும் செய்து கொடுக்காத அரசாங்கத்தை தண்டிக்காமல், அவதிப்படும் மக்களை, மேலும் தண்டித்த அந்த வேலை ஆள் துப்புகெட்டவனென்றால், அவனை வேலை ஆளாக வைத்திருக்கும் அந்த ஆண்டவனை என்னவென்று சொல்லுவது???

“நான் அவதிப்படல….வேற யாரு எப்படி போனா எனக்கென்ன…ஏதோ எனக்கு கைத்தட்டல் கெடைச்சா சரி”, என்ற கீழ்த்தனமான எண்ணத்தின் வெளிப்பாடே இது.

‘Beep ‘ சாங் பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரும் இளையராஜாவும்

‘Beep ‘ சாங் பற்றி கருத்து கூற விரும்பவில்லையெனில், ‘விருப்பமில்லை’, எனக்கூறி அடுத்த கேள்விக்கு நகர்ந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, “உனக்கு அறிவு இருக்கா?”, “முதல…நீ வந்து என் கூட பேசறதுக்கு…”, போன்ற செருக்கு நிறைந்த விடை அளித்தார்.
“இந்த தெனாட்டு எல்லாம் எப்ப சார் உங்களுக்கு வருது?”, என கேட்கத் தோன்றுகிறது.


“கோபம் இருக்கற எடத்துல குணம் இருக்கும்”, “சரக்கு இருந்தா கொஞ்சம் செருக்கு இருக்கத் தான் செய்யும்”, போன்ற உப்புச் சப்பற்ற சப்பக்கட்டுகள் தேவையற்றவை.
ஒருவருக்கு பணிவோ தன்னடக்கமோ இல்லாத போது, அவர் மீது இருக்கும் மரியாதை குறைவதோடு, அவர் மீது ஒரு வெறுப்பும் தோன்றுகிறது.

இளையராஜாவின் ஆணவ பதிலுக்கு கங்கை அமரினின் விளக்கம்:

‘Beep ‘ சாங் – இளையராஜா சர்ச்சை பற்றி கங்கை அமரனிடம் கேட்ட போது,

“பிரேமானந்தா கிட்ட கேக்க வேண்டியத இளையராஜா கிட்ட கேட்டா என்ன நியாயம்?”
“அவர் பொது நிகழ்ச்சிகள்ல கலந்துக்க மாட்டாரு. இனிமே நீங்க இளையராஜாவ பாக்க முடியாது”
என சரமாரியாக உளறல்களை உமிழ்ந்தார்.

கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து, பல கோடி பண சேதம் நிகழ்கிறது என வைத்துக் கொள்வோம். அப்பொழுது, கட்டடக் கலை வல்லுனர்கிட்ட கருத்து கேக்காம, கணக்கு வாதியார் கிட்டயா கருத்து கேப்பாங்கப்பு???

“இனிமே அவர பாக்க முடியாது”….இதை கேட்டவுடன், என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதினால்…

“சார் சார் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! ஒரு கலைஞரா இளையராஜா தன்னோட கலைய மக்கள் முன்னாடி கொண்டு வந்தாரு. என்னமோ அவர் கோவிச்சிக்கிட்டு வீட்ல அடைஞ்சு கெடந்தா, இசைக்கு வேற வழி இல்லாம மக்கள் தவிப்பாங்கனு நீங்களே தப்பு கணக்கு எல்லாம் போடாதீங்க. நீங்க இப்படி பேசினது அவருக்கு தெரியுமா?? அடுத்த வாரம் கூட ஒரு கச்சேரிக்கு கை நீட்டி காசு வாங்கி இருக்காரு போல”

‘Beep ‘ சாங்:

தாமரை எழுப்பிய அதே கேள்விகள் தான் என் மனத்திலும் தோன்றியது. வழி வழியாக பெண்ணை இழிவு செய்வதை ஒரு சாதரணமான விஷயமாக பார்த்து வரும் தமிழ் திரைத் துறையில், சிம்புவின் இன்னொரு இழிவான வெளிப்பாடுதான் இந்த ‘Beep ‘ சாங்.

அடக்கம், அச்சம், மடம், நாணம் என்ற பெயரில் பெண்ணை அடிமைப் படுத்தும் சமூகத்திற்கு இனிதே துணைப் போகும், தமிழ் திரைப்படங்களுக்கு….இது ஒன்றும் புதிதில்லையே!

சமூகப் பிரச்சனைகளில் இருந்து விலகியே இருக்கும் தமிழ்  சினிமா-1

சமூகப் பிரச்சனைகளில் இருந்து விலகியே இருக்கும் தமிழ்  சினிமா-2

சமூகப் பிரச்சனைகளிலிருந்து விலகியே இருக்கும் தமிழ் சினிமா – 3

இது மாதிரியான ‘கலைநயம் மிகுந்த’ வெளிப்பாடுகளில் மூழ்கிக் கிடக்கும் சமூகமும்….இதை ஒரு பெரிய விஷயமாகவே கருதவில்லை.

இப்படி இருக்க…இந்த அனைத்து சர்ச்சையும், போராட்டமும் ….செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே எனக்கு தோன்றுகிறது!

அப்படியே இந்த சர்ச்சைகளைப் பார்த்து, தமிழ் திரைத்துறை திருந்துமானால், ‘item’ பாடல்களும், பெண்களை இழிவு படுத்தும் இரட்டை அர்த்த ‘நகைச்சுவைகள்’, போன்ற ‘சுவாரசியமான’ விஷயங்களும்…சுவடின்றி அழிய வாய்ப்புண்டு.

அஜித் பற்றி…

“இதெல்லாம் எதுக்கு எழுதிகிட்டு..,ரொம்ப offensive comments எல்லாம் வரப்போகுது”, என ராஜ் கூறிய போதும், புலம்ப ஒரு பதிவு எழுத முடிவு செய்துவிட்டேன்…வெகு நாட்களாக புலம்ப நினைத்த இதைப் பற்றியும் எழுதுவோமே என…

சமீபத்தில் வேதாளம் திரைப்படம் பார்த்தேன் (அதே தான்…வெட்டியாய் இருந்த போது, காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்த்தது!!)

அவரின் முந்தையப் படங்களைப் போல், இதிலும் அஜித் நடிக்க எத்தனித்து, அபாரத் தோல்வி அடைந்திருந்தார்.

ஒவ்வொரு முறை அஜித் திரையில் வரும்போதும், “நம்ம ஊரு ஜார்ஜ் க்ளூனி (George Clooney)” என்ற ‘பாராட்டு’ தான் நினைவுக்கு வந்தது. ஜார்ஜ் க்ளூனி மாதிரி சால்ட் & பெப்பர் நிறத்தில் முடி இருந்த ஒரே காரணத்தினால், இந்த ஒப்பீட்டை செய்தவர், ஒன்று ஜார்ஜ் க்ளூனியை பார்த்திருக்க மாட்டார் அல்லது வயதான தோற்றத்தில் இருந்த அஜித்தின் புகைப்படத்தைக் காட்டி ஜார்ஜ் க்ளூனி என யாரோ அவரை ஏமாற்றி இருக்கிறார்.

சரமாரியாக அஜித்க்கு வழங்கப் படும் இன்னொரு ‘பாராட்டு’, “அவர் ரொம்ப நல்லவர்”

(இங்கு ‘நல்லவன்’ என்பதற்கான அளவுகோல் என்ன என்பது இன்னொரு புறம்)

அவர் சொந்த வாழ்க்கையில் நல்லவராகவே இருக்கட்டும்…ஆனால் அது எப்படி அவரின் தடுமாற்றம் நிறைந்த ‘நடிப்பை’ நியாயப்படுத்தும்?
இது எப்படி இருக்கிறதென்றால்…ஒருவர் வேலை செய்யும் அலுவலகத்தில், செய்யும் வேலை, பிழைகள் நிறைந்ததாக இருக்கிறது; இதனால் வேலையில் கணிசமான பண நஷ்டமும் ஏற்படுகிறது. அதற்கு விளக்கம் கேட்கப் படும் போது , ‘என்னங்க நான் எவ்வளவு சமூக சேவை செய்யறேன் தெரியுமா…எனக்கு ‘நல்லவன்’ ன்னு ஒரு பட்டப் பெயர் கூட இருக்கு தெரியுமா?”, எனக் கூறுவதுபோல் உள்ளது.

“இப்படி புலம்புவதால்…என்ன நடக்கப் போகிறது?”, என பின்னூட்டமிட விரும்புபவர்களுக்கு…
“இந்த பதிவுல விமர்சிக்கப் பட்டவங்க இத படிப்பாங்களா, படிச்சிட்டு ஏதாவது change ஆகணும்னு யோசிப்பாங்களா, சரியான பேத்தல்னு தூக்கி எறிவாங்களா, இங்க எழுதப் பட்ட பிரமுகர்களின் ரசிகர்கள் என்ன நினைப்பாங்க, என்னனு பின்னூட்டம் இடுவாங்கனு யோசிச்சு இந்த பதிவ எழுதல. ரொம்ப நாளா புழுங்கிகிட்டு இருந்த விஷயங்கள பதிவா தொகுக்க ஆசைப்பட்டேன். அவ்வளவுதான்!

அந்த இனம் புரியாத பயம்:

“எங்க அனு …கொழந்தை எல்லாம் ஆனதுக்கு அப்பறம் பார்ட்டி எல்லாம் no chance. மனிஷனுக்கு குளிக்க டைம் கெடைச்சா…அதுவே பெரிய விஷயம்”
“இல்லப்பா நான் வரல…கொழந்தைக்கு பால் ரெடி பண்ணனும், நேரத்துக்கு தூங்க போடணும். இன்னொரு 5 வருஷம் கழிச்சு வேணும்னா பாக்கலாம்”
“தண்ணியா…காமெடி கீமடி பண்றியா அனு? கொழந்தை எப்ப வந்ததோ, அப்பவே என் ‘கொ.மு’…அதாவது கொழந்தைக்கு முந்தைய லூட்டி எல்லாம் மூட்டை கட்டியாச்சு”
இவை தாய் பதவி ஏற்ற என் தோழிகளின் புலம்பல்கள். பலவேறு காரணங்களுக்காக குழந்தையின் வரவை ஒத்தி வைத்திருந்தாலும், கூடுதலாக இந்த புலம்பல்கள் ஒரு இனம் புரியாத பயத்தை நிச்சயம் உண்டாக்கியது.
குழந்தையின் சிரிப்பு, அதன் மழலை போன்ற அழகு நிறைந்த விஷயங்களை பார்க்க, எனக்கு பிடித்தமான விஷயங்களில் நேரம் செலவழிப்பதை குறைத்துக் கொள்ள அல்லது முற்றிலுமாய் நிறுத்திக் கொள்ள வேண்டும் என யோசித்த போதே வயிற்றை பிரட்டியது.

பெண்ணியம் பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்னமே, பள்ளி படித்த காலத்தில், ஒரு பொருளற்ற நெருடலாய் இருந்த விஷயம்…நம் ஊரில் தாய்மார்கள் அழைக்கப்படும் விதம். எங்கள் காலனியில் பரணியின் தாய் பரணி அம்மா, என் தாய் அனு அம்மா, ஜவஹரின் தாய் ஜவஹர் அம்மா என்றும் அழைக்கப் பட்டனர். மேலோட்டமாக பார்த்தால், “இதுல என்ன இருக்கு” என தோன்றிடினும், ஒரு பெண்ணின் அடையாளம் இன்னொரு முறை அவளிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டதோ என தோன்றுகிறது. திருமணம் முடிந்த பின் ‘திருமதி.பழனிச்சாமி’, திருமதி.முருகன் என அழைக்கப்படும் பெண், குழந்தை பிறப்பின் பின், ‘இன்னாரின் அம்மா’, ‘இன்னாரின் தாய்’ என அழைக்கப்படுவது, அந்த பெண்ணை, கூட இருப்பவர்களை சார்ந்த ஒரு பொருளாய் மட்டுமே பார்ப்பது போல் தோன்றுகிறது.
என் திருமணத்திற்குப் பிறகு, பெயருக்குப் பின் கணவன் பெயரை இணைக்கவோ, பெயருக்கு முன் ‘திருமதி’ பட்டத்தை இணைத்துக் கொள்ளவோ நிர்பந்தம் ஏற்படவில்லை.
அப்படி இருக்க, தாய் என்ற பொறுப்பு வந்த உடன், என் அடையாளம் தொலைந்துவிடுமோ என்ற பயம் மட்டும் பின் மண்டையில் ஓடிய வண்ணமே இருந்தது.

திறனின் வருகை:

மிகுந்த மகிழ்ச்சியுடன், திறனின் வருகை நடந்தது. குடும்பத்தில் புது வரவாக இருந்த போதிலும், வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே, பசக்கென எங்களில் ஒருவனான். அவன் வருகைக்கு காத்துக் கொண்டிருந்த போது, வேலையில் இருந்தவர்கள், குழந்தை வளர்ப்பு டிப்ஸ் கொடுத்ததோடு, ‘காரணம் எதவும் இன்றி கூட குழந்தைகள் அழும்’ என ‘heads up’ வழங்கினர். இருந்த போதிலும், சில சமயங்களில் அவனின் அழுகையை பார்த்து, “இல்லங்க…நல்லா பாருங்க, பையன் பொறக்கும் போது , கூடவே ஏதாவது குறிப்பு புத்தகம் வந்திருக்கும். எடுக்க மறந்துட்டீங்களா?”, என மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்கலாமா என தோன்றியதுண்டு.
ஆனால்….அழுகை என்னும் புரியாத புதிருக்கு, திறனின் அம்மா அப்பாவாக விடை கண்டுப்பிடிப்பது, அழகிய பொழுதுபோக்காக மாறியது ஒரு இன்ப அதிர்ச்சி!
முதல் 3-4 வாரங்கள், குழந்தையின் தேவைகளை புரிந்துக் கொள்வது, தாய்ப்பால் கொடுத்து பழகுவது என நகர்ந்தது.

திறனின் வரவுக்குப் பின் நான்…

வேலை, நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது, கணவனுடன் திரையரங்கில் படங்கள் பார்ப்பது என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், வெளியில் சுற்றித் திரிந்த நான், 3 வாரங்கள் வீட்டிலியே அடைந்து கிடந்தது…சற்று நெருடலாகவே இருந்தது. அந்த நெருடல் ஓரிரண்டு முறை….கண்ணீராகவும் வெளி வந்தது (ஆனால் எதற்கு அழுகிறோம் என்று புரியாமலே!)
இந்த மனப் புழுக்கத்தை சரியாய் உணர்ந்த ராஜ் (என் கணவன்), திறனை என் பெற்றோரிடம் விட்டுவிட்டு, மகிழுந்தில் ஒரு சுற்று அழைத்துச் சென்றான். வெளியில் வந்த அந்த தருணம்….4 வாரங்கள் எதை தவற விட்டேன் என்பதை உணர்த்தியது. அந்த நேரம் என் அம்மா கூறிய நம் ஊரின் ஒரு வினோத பழக்கம் நினைவுக்கு வந்தது. குழந்தை பெற்றெடுத்த உடன், அந்த தாயானவள், குழந்தையுடன் 6 மாதங்களுக்கு வீட்டினுள் அடைந்திருக்க வேண்டுமாம். அவளுக்கு வீட்டில் உள்ளவர்கள், வேளைக்கு உணவு அளிப்பார்களாம். அவளும் அதை உண்டுவிட்டு ,குழந்தைக்கு தாய்ப்பால் குடுத்துக் கொண்டு, காலத்தை கழிக்க வேண்டுமாம். 6 மாதங்கள் முடிந்து வரும் போது , அந்த பெண் ஒரு 3 மூன்று சுற்று பெருத்திருப்பாளாம். நம் ஊரில் இருந்த வரை ‘Post natal depression ‘என்பது ஒரு புரியாத ஒன்றாகவே இருந்தது. இங்கு மகப்பேறு வகுப்புகள் போனதின் விளைவாகவும், குழந்தை பெற்றெடுத்த காரணத்தினாலும், இதன் பொருள் நன்றாகவே புரிந்தது.
குழந்தைப் பிறப்பிற்கு பின், இப்படி ஒரு மனரீதியான பிரச்சனை பெண்ணுக்கு நிகழும், சரியான குடும்பச் சூழல் அமைந்து, அந்த பெண்ணின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போது , அந்த பிரச்சனை விலகி ஓடும், என்ற பல விஷயங்கள் எனக்கு விளங்கியது. அவைப் பற்றிய ஒரு பதிவு நிச்சயம் எழுதுவேன்.
அதுவரை…

அன்று மகிழுந்தில் சென்று வந்த உத்வேகமா தெரியவில்லை, சில பெற்றோர் கூறுவது போல், “ஒரு குழந்தை வந்த உடன், வாழ்க்கை அதைச் சுற்றித்தான்”, என்ற கருத்து எனக்கு ஏற்றதில்லை என முடிவு செய்தேன். midwifes எனப்படும் மகப்பேறு செவிலியர்கள் உதவியுடன், குழந்தை வளர்ப்பை சீர் படுத்த எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ‘குழந்தையை நிதமும் அதே சமயத்தில் தூங்கப் போடவேண்டும்’, ‘எல்லா அழுகையும் பசிக்கான அழுகை இல்லை’, ‘உணவு-விளையாட்டு-தூக்கம்’ என்ற வழக்கத்தை கடைப் பிடிக்கவேண்டும்’ போன்ற குறிப்புகள் கேட்கும் போது எளிமையாக இருந்த போதும், செயல் படுத்தும் போது, “என்னடா இது”, என கடுப்பாய் இருந்தது. ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதை செயல் படுத்திய உடன், எனக்கென செலவழிக்க நேரம் மெதுவாய் கிடைக்க ஆரம்பித்தது. குழந்தை பிறப்பிற்கு முன்னிருந்த அளவிற்கு இல்லை எனினும், இதோ இப்பொழுது இந்த பதிவு எழுத நேரம் கிடைத்தது. ராஜ் வீட்டில் இருந்த ஒரு நாள், முடியை குட்டையாய் வெட்டிக்கொள்ள செல்ல முடிந்தது. 3 வாரங்களுக்கு முன், திறனையும் அழைத்துக் கொண்டு, திரையரங்கில் ‘தனி ஒருவன்’ பார்த்தோம்.

அன்று மீண்டும் அந்த சின்ன வயதின் நெருடல் நினைவிற்கு வந்தது. என்னையும் மற்றவர், ‘திறன் அம்மா’ என அழைத்தால் கோபித்துக் கொள்வேனா என நினைத்தேன். இல்லையே…குழந்தை வரவின் பின், என் வேலையானது குழந்தை பரமாரிப்பு மட்டுமே என மாறி இருந்தால்….இந்த ‘பட்டம்’, நான் பயந்ததில் தவறே இல்லை என நிரூபித்திருக்கும். ஆனால், குழந்தை பிறப்பிற்கு முன் இருந்த வேலைப் பட்டியலில், இன்னொன்றாய் குழந்தை பராமரிப்பு சேர்ந்திருப்பதால், ‘திறன் அம்மா’…என்ற பட்டம், ஒரு பெண்ணாய் நான் ஏற்றுக்கொண்டிருக்கும் பலவேறு பணிகளில், ஒன்றிற்கு கிடைத்த முகவரியாக எடுத்துக்கொள்கிறேன். மிகுந்த பெருமையுடன்!

வெளிவந்து பல வாரங்கள் ஆன போதிலும், இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியே ஆக வேண்டும் என முடிவு செய்தேன்.
இந்த பீடிகை 36 வயதினிலே படத்தில் இடம் பெறும் ‘வாடி ராசாத்தி’ பாடலுக்குத்தான்.

படத்தின் பாடல்கள் வெளிவந்த போதே, என் மனத்தைக் கவர்ந்த பாடல் இது. சிறிய பாடல் என்ற போதிலும், பளிச்சென தென்பட்டு, கேட்பவரை ஒரு நிமிடம் நிறுத்தி யோசிக்க வைக்கும் வரிகள் இவை…

“தங்கமுனு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்
டிண்டுகல்லு பூட்டு மாட்டி பூட்டி வைக்கும்”

“பொட்ட புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும்
முட்டு சந்து பாத்து அந்த ரோடு போய் நிக்கும்
படம் காட்டும் ஏமாத்தி; கலங்காத ராசாத்தி”

இந்த வரிகள் கேட்கும் போதெல்லாம், கண் முன் வந்து நிற்பவை என் கல்லூரி நாட்களும், வேலை செய்ய தொடங்கிய நாட்களும் தான்.
சிறிது நன்றாகவே படிப்பேன்; நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன். மதிப்பெண் பட்டியலை வீட்டில் காட்டிய போதெல்லாம், பாராட்டுகளை தொடர்ந்து, பெரும்பாலான நேரம் இடம் பெரும் ஒரு வசனம், “எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா அனு. கல்யாணம் கட்டி குடுக்கும் போது, பொண்ண நல்லா வளத்தோம்னு ஊரே மெச்சிக்கும். படிப்புல காட்டற இதே ஆர்வத்த, போற வீட்லயும் காட்டி, நல்ல பேர் வாங்கணும்”. இது என் அம்மா மட்டும் அல்லாது, அந்த தருணத்தில் உடன் இருக்கும் பெரியம்மாக்களும், மற்ற பெண் உறவினர்களும்.
“இது மாதிரியே மார்க் எடுத்து மேலும் மேலும் படிச்சு, உனக்கு பிடிச்ச வேலைல உக்காரணும்”, என்ற வசனத்தை அன்று எதிர்பார்த்தேனா தெரியவில்லை…அனால் இன்று யோசிக்கும் போது , ஏன் ஒருவர் கூட அதை சொல்லவில்லை என நினைக்கத் தோன்றுகிறது.
இப்படி பெண்ணடிமைத்தனத்தை தவறாமல் புகட்டிய, புகட்டிக் கொண்டிருக்கும் ‘அனுபவம்’ நிறைந்த பாட்டிகளும், அம்மாக்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், மூதாட்டிகள் சேர்ந்து,
“ஊரே யாருன்னு கேட்டா, உன் பேர மைக்கு செட்டு போட்டு உறுமி காட்டு”, எனப் பாடுவது, ஒரு மருமலர்ச்சியாகவே எனக்கு தோணிற்று.
“ஆமாம்ல…ரொம்ப கேவலமான சிந்தனைகளோட நாங்க எங்க வாழ்க்கைய கழிச்சிட்டோம். இனியாவது யாரும் எங்கள மாதிரி கெணத்து தவளையா இருக்காதீங்க”, என இந்த தலைமுறை பெண்களுக்கு சென்ற தலைமுறையினர் கூறுவது போல் இப்பாடல் அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஓரிரு முறை அவ்வரிகள் ஒலிக்கும் போது, என் கண்கள் கலங்கியது மறுக்க/மறைக்க முடியாத உண்மை.

36 vayathinile

என்னை பெரிதாக மகிழ்ச்சியில் ஆழ்த்திய அடுத்த விஷயம், இப்படத்தின் பாடலாசிரியர். விவேக் என்ற ஒரு புதிய கலைஞர். முதலில் கேட்ட போது, தாமரையின் கைவண்ணமாக இருக்கும் என நினைத்தேன். இப்பொழுதுதான், ஓரிரு வாரங்கள் முன்னர் விவேக்கின் வரிகள் என தெரிந்தது.
பெண்ணியம் பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே, “பெண்ணடிமைத்தனத்தை அகற்ற, ஆண்களின் பங்களிப்பு மிக அவசியம்”, என்ற எண்ணம் என் மனதில் பதிந்திருந்தது. “புத்திசாலி பொண்டாட்டியா…ஆள விடுப்பா“, “பெண்ணியம் எல்லாம் பொம்பளைங்க பிரச்சனை பாஸ்“, “புருஷலட்சணமா…Bullshit” போன்ற பதிவுகள் கூட அவ்வெண்ணத்தின் வெளிப்பாடே.
அதனாலேயே பெண்ணியம் அல்லது பெண் விடுதலை பற்றி பாடல் வரிகள் எழுதும் பாடலாசிரியர்கள் மீது எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு.
இந்த பாடலில், ‘பெண்ணே விழித்திடு’, ‘முன்னேறிச்செல்’ என்ற வரிகளை, சமூகத்தின் ஏமாற்று வேலையை முன்வைத்து அழுத்தமாக கூறியது…அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது.

இந்த இரு அம்சங்களை பாராட்டும் அதே நேரத்தில், இந்த பாடல், பட்டி தொட்டிகளில் ஒலிக்க வைத்த சந்தோஷ் நாராயணனுக்கும், இப்பாடல் இடம் பெற 36 வயதினிலே என்ற ஒரு அழகிய படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸையும் பாராட்டியே ஆக வேண்டும்.

இப்பாடலும், படமும் குறுஞ்சி மலர் போல் இல்லாது, இன்னும் பல பெண் எழுச்சி திரைப்படங்களுக்கு அடிக்கல் நட்டால், பெருமகிழ்ச்சி அடையும் கூட்டத்தில், நானும் நிச்சயமாய் இருப்பேன்.

இந்திய அரசியலை அவ்வப்போது கவனிப்பவர்கள் 2007இல் வெளிவந்த இந்த ஒளிப்பதிவை பார்த்திருப்பர் . இது 2002இல் கோத்ராவில் நடந்த சம்பவம் பற்றி தெஹெல்கா பத்திர்க்கை ரகசியமாக பதிவு செய்த ஒளிப்பதிவுகள் .

2002இல் கோத்ராவில் நடந்த ரயில் தீவைப்பிற்கு பழி வாங்குவதாய், ஜன்சேவக் ஹிந்து வெறியர்கள், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை உயிருடன் எரித்த சம்பவம் இது. அந்த கோரச் செயலை வழி நடத்திய பாபா பஜ்ரங்கின் பெருமை ததும்பும் ‘வாக்குமூலம்’ இந்த ஒளிப்பதிவு

இது போன்றே ஒரு ரகசிய ஒலிப்பதிவு நம் ஜகஜால இயக்குனர் சங்கருடன் செய்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன்…கற்பனை இனி பதிவாக…

ஷங்கரின் இல்லத்திற்கு வெளியில்,

“எதுவும் பயப்படாத…ஏற்கனவே நீ இன்னிக்கி புது assistantஆ வரப் போறன்னு அவனுக்கு தெரியும். சாதரணமா உள்ள போ, பேச ஆரம்பி, நல்லா நம்பிட்டான்னு தெரிஞ்சதுக்கு அப்பறம், மெதுவா உன் கெள்விகள ஆரம்பி”, என ஒலிநாடாக்களை சரி செய்துக் கொண்டிருந்தவர்கள் ஆறுதல் கூற,

“பயமெல்லாம் ஒன்னும் இல்லப்பா…ரொம்ப நாளா எதிர்பாத்த ஒரு விஷயம் இது; உணர்ச்சிவசப்பட்டு கை ஓங்கிடுவேனொன்னு தான்”, என ஷங்கரின் வீட்டினுள் நுழையத் தயாராகும் கண்ணன் கூறினான்.
சட்டையினுள் இருந்த ஒளிப்பதிவு செய்யும் இயந்திரத்தை சரி செய்தபடி, ஷங்கர் வீட்டின் வாழறையை அடைந்தான் கண்ணன்.

“சார்”, எனக் கூறியபடி, வாழறையில் ஏதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த ஷங்கர் அருகே சென்றான்.
“யாருப்பா….வாசல்ல செக்யூரிட்டி இல்ல?”, என வாசலை நோக்கி பார்வையை திருப்பினான் ஷங்கர்.
“இல்ல சார்…நான் தான் கண்ணன்; நேத்து போன்ல உங்க assistant கிட்ட பேசி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கினோம். இன்னிக்கி 1 மணிக்கு வரச் சொன்னாங்க”, என கண்ணன் எடுத்துரைக்க,
“ஓ …நீ தானா அது. என்ன விஷயம்? 45 நிமிஷத்துக்கு மேல நேரம் ஒதுக்க முடியாது. அடுத்த பட வேலையெல்லாம் தலைக்கு மேல இருக்கு”, என ஒரு அவசரம் கலந்த குரலில் பதிலளித்தான் ஷங்கர்.

“இல்ல சார்…உங்க ஐ படத்த நாலாவது தடவையா இன்னிக்கி பாத்தேன். என்ன படம் சார்…எப்படியாவது மீட் பண்ணி பாராட்டனும்னு முடிவு பண்ணினேன். அது சம்பந்தமா ரெண்டு நிமிஷம் பேசிட்டு என் நடைய கட்டுவேன். அப்பறம் இன்னொரு நாள்…உங்கள இம்ப்ரெஸ் செஞ்சு, assistant சான்ஸ் கேக்கலாமுனு…”, என தலையை சொரிந்தான் கண்ணன்.

ஒரு பெருமிதம் கலந்த சிரிப்புடன், “அது இல்லப்பா…என்ன பேர் சொன்ன, கண்ணன்…இன்னிக்கி அடுத்த படத்தோட கதை டிஸ்கஷனுக்கு assistant ரெண்டு பேர வரச் சொல்லி இருக்கேன். ஐ படத்துக்கு மக்கள் கிட்ட வரவேற்பு பெருக, பெருக, producers கிட்ட இருந்து அடுத்த படத்துக்கான ப்ரெஷரும் பெருகீட்டே போகுது. மீட்டிங்க்கு இன்னும் ஒரு 45 நிமிஷம் இருக்கு…நீ சொல்லு”, என புகழாரத்திற்கு அலைவது தெரியாதது மாதிரி அலைந்தான் ஷங்கர்.
“என்ன படம் சார் அது….மெரிசலாயிட்டோம் நாங்க. படத்துல பெஸ்ட் சீன் எதுன்னு பட்டியலிட ஆரம்பிச்சு, படத்துல இருக்கற எல்லா சீனயும் எழுதிட்டோம்னா பாருங்க. ஏமி ஜாக்சன் தான் இனி பசங்களோட கனவுக் கன்னி…அவங்க நெஜமாவே அவ்வளவு அழகா, இல்ல அதுவும் உங்க கைவண்ணம் தானா?”, என முதல் ஐஸ் கட்டி இறக்கினான் கண்ணன்.
தொலைப்பேசியில் யாரிடமோ பேசி, இருவருக்கும் காபி கொண்டு வரும்படி கூறிவிட்டு, “போட்ட கதாநாயகியையே திரும்ப திரும்ப போட்டா, நம்ம படத்துக்கான தனித்துவம் கொறைஞ்சிடுமே. அதுதான், ஒரு foreign பொண்ண இந்த தடவை use பண்ணலாமுன்னு”, என பல்லிளித்தான் ஷங்கர்.
“அப்பறம் அந்த ரஜனி ஐடியா எப்படி தோணிச்சு? அதுதான் படத்துல நெத்தியடி”, என அடுத்த அம்பை தொடுத்தான் கண்ணன்.

“செம பஞ்ச்ல அது…அதுல இருக்கற காமெடிய ரசிக்காம, “எங்கள எப்படி ஷங்கர் நக்கல் பண்ணலாம்”…அது இதுனு கூச்சல் போடுதுங்க. ஐ படத்த பாக்காத நெறைய பேருக்கு இவங்க போட்ட கூச்சலுக்கு அப்பறம் தான் இது மாதிரி காமெடி இருக்குனு தெரிய வந்துச்சு. அதுக்கெல்லாம் ரோஸ் வகையறாக்கு தான் thanks சொல்லணும்”, என பெருமூச்சு விட்டான் ஷங்கர்.

இந்த உரையாடலை வெளியில் ரகசிய ஒளியேற்றி (microphone) வழி கேட்டுக்கொண்டிருந்த கண்ணனின் கூட்டாளிகள், எந்த வித ஆச்சரியமோ, கோபமோ வெளிப்படுத்தாமல், அடுத்த கேள்விக்கு காத்துக் கொண்டிருந்தனர்.

“ஆனா உங்களுக்கு அமைஞ்ச நடிகர்களோட wavelength பக்காவா மேட்ச் ஆச்சுல…இல்ல விக்ரம் ஏதாவது எதிர்ப்பு தெரிவிச்சாரா?”, என முகத்தை ‘சீரியஸ்’ ஆக வைத்தபடி அடுத்த கேள்விய முன்வைத்தான் கண்ணன்.
“எதிர்ப்பா…காமெடியா பண்ற…? ரெண்டு மூணு எடத்துல அவரே improvise பண்ணினாரு. சந்தானம் தம்பி தான் செம காமெடி. அந்த ‘ரூம் 9’ காமெடி எல்லாம் அந்த தம்பியோடது தான். தியேட்டர்ல கன்னாபின்னான்னு விசில் சத்தம் பறந்துச்சு”, என 1000 வாட் பல்பு கணக்கில் முகம் மலர பெருமிதம் அடைந்தான் ஷங்கர்.

“அது எப்படி சார் கரெக்டா audience எதுக்கு சிரிப்பாங்கனு தெரிஞ்சு காமெடி track எழுதறீங்க? சிவாஜி படத்துல கருப்பான பொண்ணுங்கள கிண்டல் அடிக்கறது ஆகட்டும், பாய்ஸ் படத்துல பொதுவா பொண்ணுங்கள கிண்டல் செய்யறது ஆகட்டும், இப்ப ஐ ல திருநங்கைகள ஆகட்டும், எல்லாத்துக்கும் தியேட்டர் அப்படியே அதிருது. அதுக்கான secret என்ன சார்?”, என கூர்ந்து கவனித்தபடி அடுத்த கேள்வியை முன்வைத்தான் கண்ணன்.
“அய்யய்யே secret எதுவும் இல்ல…சமூகத்த புரிஞ்சு வச்சிக்கறது தான் அதுக்கு மெயின் காரணம். இப்ப பாரு….ஆண்-பெண் சமம் எல்லாம் சரியான பேத்தல். அத சீரியஸா எடுத்துக்கற பசங்கள, வெரல் விட்டு எண்ணிடலாம். பெரும்பாலான ஆம்பள பசங்க…ஒரு பொண்ணுனா அவனுக்கு கட்டுபட்டுத் தான் இருக்கணும்னு நினைக்கறானுங்க; சடனா அவன் வேலைலயும், ஸ்கூல்லயும், காலேஜ்லயும், அவன விட ஒரு பொண்ணு நல்லா வர்றத பாக்கறான். அவள தோக்கடிக்க அறிவோ, வாய் சாதுரியமோ அவனுக்கு இல்ல. அதுதான் படங்கள்ல அவள நக்கல் பண்ணும் போது, வயிறு வலிக்கற மாதிரி சிரிக்கறான். அது அவன் வைத்தெரிச்சலோட வெளிப்பாடு மட்டும் தான். ஒன்னு சுய புத்தி இருக்கணும்…இல்ல சொல் புத்தி இருக்கணும்.
அவனோட அந்த mindset தப்புன்னு உணர்த்த யாரும் இல்ல. அப்பன்காரனும் சேர்ந்து சிரிக்கிறான்; அவன் அம்மாவுக்கு சமையல் கட்டுல அடுத்த வேளை சாப்பாடு பத்தின தீவிர சிந்தனை.இந்த நெலை மாறாம இருக்கற வரைக்கும் என் கல்லா நெறைஞ்சுகிட்டே தான் இருக்கும்.

கருப்பா இருக்கற பொம்பள புள்ளைங்கள கிண்டல் பண்றதுக்கும், சமூகத்தோட வரவேற்பு இருக்கு. கருப்பா இருக்கறது கேவலமுனு காலகாலமா லேடீஸ்க்கு கற்பிக்கப் பட்டிருக்கு. புருஷனோ, அம்மா அப்பாவோ, கலர் பத்தி எல்லாம் கவலை படாதனு சொன்னா கூட, சமுதாயமும் மீடியாவும் அவள அத ஏத்துக்க விடாது. அவளே அத உணர்ற வரைக்கும், fair & lovelyயும், fairever கிரீமும் மார்க்கெட்ல கொடிகட்டிப் பறக்கும்.

இந்த நெலமைல, கலர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கற பொண்ணுங்க…”அப்பாடா…நான் அப்படி கருப்பா இல்ல”னு நினைச்சு சந்தோஷப் படறாங்க. அதுதான் கருப்பான பொண்ணுங்கள கிண்டல் அடிக்கும் போது, அவங்களுக்கும் அந்த கேவலத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி சிரிக்கிறாங்க. பசங்கள பத்தி கேக்கவே வேணாம்… பொண்களோட எந்த qualityய கிண்டல் அடிச்சாலும் தனக்கே கெடைச்ச வெற்றி மாதிரி சிரிப்பானுங்க. இந்த நெலை சீக்கிரம் மாறும்னு நினைக்கற?? No chance!
அப்ப அவங்க மாற மாட்டாங்க….நான் மட்டும் ஏன் என் அப்ரோச்ச மாத்திக்கணும்?”, என ஒரு முழு நீள விளக்கத்தை தந்து முடித்தான் ஷங்கர்.

அந்த விடையினை சற்றும் எதிர்பார்க்காத கண்ணன், “என்ன சொல்றதுனே தெரியல சார்…அப்ப ஒரு நாள் மக்கள் மாற ஆரம்பிச்சா, உங்க காமெடி டிராக்ஸ்க்கு தீவனம் இல்லாம போயிடாது??” என அடுத்த கேள்வியை எழுப்பினான்.
“அது அப்படி மாறும்போது…கவலைப்பட வேண்டிய விஷயம். அப்ப ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் எடுக்கறத இன்னும் கொஞ்சம் இழுத்து, 3 வருஷம் ஆக்கிட வேண்டியதுதான்”, என சாதரணமாக விடை அளித்தான் ஷங்கர்.

“”மக்கள் அவன் படத்த விரும்பி வந்து பாக்கறாங்க….அப்ப அதையே ஒரு நல்ல வாய்ப்பா பயன்படுத்தி, முற்போக்கு கருத்துக்கள சொல்ல முயற்சிக்கலாம்ல”…நான் இல்ல சார், எங்க க்ரூப்ல ரெண்டு மூணு பேர் சொல்ற கருத்து இது”, என அடுத்த குற்றச்சாற்றை முன்வைத்தான் கண்ணன்.
“அந்த பசங்கள மட்டும் assistant வாய்ப்புக்கெல்லாம் கூட்டிகிட்டு வந்திராத…பொழைக்க தெரியாத பசங்களா இருப்பாங்க போல. நான் இந்த தொழிலுக்கு வந்தது பணம் பண்ண…மக்கள திருத்தறதுக்கு இல்ல. இது மாதிரி societyல இருக்கற சண்டை சச்சரவு தான்…என் படங்களுக்கு தீனி போடுது. அத போய் சரி பண்ண சொல்ற. அதுதான் படத்துக்கு படம் ஒரு மெசேஜ் சொல்றேன்ல”, என ஒரு வெறுப்பு கலந்த குரலில் பதிலளித்தான் ஷங்கர்.

“ஆனா அதெல்லாம் பொது மக்களுக்கு எந்த விதத்துல உதவுதுன்னு நினைக்கறீங்க? லஞ்சம் வாங்கினா, இந்தியன் தாத்தா வந்து உயிர எடுப்பாரு, சட்டத்துக்கு புறம்பா செயல்பட்டா, அந்நியன் வந்து சாவடிப்பான்னு சொல்றதெல்லாம், கொழந்தைங்க கிட்ட, “சோறு தின்னலனா பூச்சாண்டி வந்து புடிச்சிட்டு போவான்”னு அம்மாக்கள் சொல்ற மாதிரி இருக்கே. இதுனால பயன் அடைஞ்சது என்னவோ, அந்த படத்த எடுத்த நீங்க, அதுல நடிச்சவங்க அப்பறம் அந்த படத்த தயாரிச்சவங்க. பைசா குடுத்து பாக்க வந்த மக்களுக்கு உறுப்படியா எதுவுமே கெடக்கலியே”, என கொந்தளித்தான் கண்ணன்.
“அதுதான் சொல்லிட்டேன்ல பிசினஸ் பண்ண வந்திருக்கேன். எது சொன்னா வண்டி ஓடுமோ, அத லாவகமா பயன் படுத்தறேன்…மக்களும் அது போதும்னு சொல்ராங்கல…”, என கூறும் போதே, சற்று யோசித்தபடி, “அமாம் நீ சடனா மாறிட்ட மாதிரி பேசற தம்பி…என்ன நடக்குது இங்க?”, என உயர்த்திய புருவத்துடன் வினவினான் ஷங்கர்.

“இனி எனக்கு சொல்றதுக்கு ஒன்னும் இல்ல சார். நீங்கதான் எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சுட்டீங்களே. இனி இத மக்களுக்கு கொண்டு போய் எப்படி சேக்கறதுனு யோசிக்கணும். அவங்க அத பொருட்படுத்துவாங்களா தெரியல; ஆனா உங்கள மாதிரி, “அவங்க திருந்தட்டும்…அப்பறம் பாத்துக்கலாம்”னு சொல்ல மாட்டோம். நூத்துல ஒரு ரெண்டு பேர் கேட்டாலும், எங்க முயற்சிக்கு கெடைச்ச வெற்றியா நினைப்போம் சார்”, என கூறியபடி சட்டையினுள் மாட்டப் பட்டிருந்த ஒலியேற்றியை கழற்றினான் கண்ணன்.
என்ன நடக்கிறது எனப் புரியாமல், குழம்பிய ஷங்கர், “டேய் நாதாரி நாயே…நில்லு டா. செக்யூரிட்டி இப்ப பாத்து எங்கடா போன…அவன நிறுத்துடா”, என கூவி முடிப்பதற்குள், கண்ணனின் நண்பர்கள் வண்டியை கிளப்பினர்.

வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகி விட்டது….’மகா கேவலமான படம்’, ‘சுமாரான படம்’ என பல கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்த போதும், ரஜினி நடித்த ‘பாபா’, என் வாழ்க்கையின் மூன்று மணி நேரத்தை அபகரித்ததே இல்லை. கடைசியாக பார்க்க முடிவெடுத்தேன்.

நல்ல வேளையாக ஒரு நாளின் 3 மணி நேரத்தை ஒரே மூச்சில் வீணடிக்காமல், 4 நாட்கள், வெட்டியாய் இருந்த போதெல்லாம், இந்த வெட்டிப் படத்தை பார்த்து முடித்தேன். திகில் படமோ எனக்கூட நினைக்க வைத்தது, படத்தின் முடிவில் வந்த ‘தொடரும்’ என்ற அபாய எச்சரிக்கை!
“2002ல வந்த படத்துக்கு இப்ப விமர்சனம் எழுத போறியா மா”, என சலித்துக் கொள்பவர்களுக்கு,
“இல்லங்க…விமர்சனம் இல்ல; எப்பவும் போல என் கடுப்பின் வெளிப்பாடு…கதம் கதம்!!!”

படம் முழுவதும், ‘போதும் தலைவா…அதுதான் பைசா குடுத்து டிக்கெட் வாங்கிட்டோமே”, என தீவிர ரசிகர்களே கெஞ்சும் அளவிற்கு போதனைகள்!!! அதுவும் பிற்போக்குத்தனத்தின் உச்சத்தை தொடும் கொடூரமான பேத்தல்கள்.

உதாரணத்திற்கு,
“பொண்ணு வீட்டுல அடங்கி இல்லனா கெட்டுடுவா..பையன் வீட்ல அடங்கி இருந்தா கெட்டுடுவான்”
வசனம் எழுதிய பிரஹஸ்பதி முட்டாள் எனில், அதை பெருமையாக ‘போதிக்கும்’ கதையின் நாயகன் ஒரு படி மேல். டெல்லி கணேஷின் “ஏன்..வீட்ல இருக்கலாம்ல பாபா”, என்ற கேள்விக்கு தலைவர் (எதுக்குன்னு தான் விளங்கவே இல்ல!!!) வழங்கும் கேவலமான பதில் இது. ஊருக்கே உபதேசம் செய்யும் தலைவர், நிச்சயம் அதற்கு எதிர்மறையான போதனையைத்தான் வீட்டில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
இல்லையெனில் ‘மூன்று’, ‘கோச்சடையான்’ போன்ற திரைப்படங்கள் நம் பார்வைக்கு வந்திருக்காது.

அது போலவே இதுவரைக்கும் இரண்டு படங்களில் கேட்டு புளித்துப் போன அறிவுரை…”நீ காதல தேடிப் போகாத…தேடி வரும் காதலே சிறந்தது”!!
90 சதவிகித தமிழ் கதாநாயகர்கள் அவர்கள் படங்களில் இந்த பரிந்துரையை மதிக்கவில்லை என்பது, மானாவாரியாக கொட்டிக்கிடக்கும் தமிழ் படங்களில் இருந்து தெளிவாகிறது.
இதை எழுதும் போது, மண்டைக்குள் வந்து செல்வதெல்லாம் ‘ஆடுகளம்’ படம் தான். தனுஷ் கதாநாயகியை துரத்தி துரத்தி காதலிக்காமல் இருந்திருந்தால், ‘ஒத்த சொல்லால’ பாடல் நம் காதுகளுக்கு விருந்தாகி இருக்காது. நடன ஆசிரியர் தினேஷ்க்கு விருதும் கிடைத்திருக்காது (அப்படி துரத்தி துரத்தி காதலிப்பதில் இருக்கும் கேவலம்….இன்னொரு பதிவிற்கு)
கடுப்பை தவறாமல் கொழுந்து விட்டு எரிய செய்வது ரஜினியின் “பெண் என்பவள் என்றுமே அடங்கி இருக்க வேண்டியவள்; துள்ளி குதிக்க ஆரம்பிக்கும் போது, அடக்குவது ஒரு பொறுப்புள்ள ஆண்மகனின் கடமை” மாதிரியான காரித் துப்பத் தூண்டும் வசனங்கள்.
‘மன்னன்’இல் துவங்கி, ‘படையப்பா’வரைக்கும் பளிச்சென பல்லிளிக்கும் ரஜினியின் வசனங்கள், தமிழ் திரையுலகிற்கு ஒரு கரும் புள்ளி.
அதற்கு தாறுமாறாக விசிலும் கை தட்டலும் கிடைப்பது பார்த்து, தங்கள் பங்குக்கும் பெண்களை அடக்க போதிப்பவர்கள் விஜய், சிம்பு மாதிரியான வளர்ந்து வரும் திரை உலகின் ஆணாதிக்கக் கலைஞர்கள்.
படங்களில், எவனுமே செய்யாததை செய்யத் துடிக்கும் கதையின் நாயகர்கள், பெண்களை நடத்தும் விதத்தில் மட்டும் “அவன நிறுத்த சொல்லு….நான் நிறுத்தறேன்” approach எடுப்பது கோழைத்தனத்தின் வெளிப்பாடே!!

படங்களுக்கு வெளியில், மேலே குறிப்பிட்டுள்ள ரஜினியோ, சிம்புவோ, முற்போக்கு சிந்தனைகள் பேசிக் கேட்டதில்லை. அப்படி பெரியார் கருத்துக்களை கேட்டது, சத்யராஜின் பேச்சுகளில். அவரும், ‘வயித்துப் பொழப்புக்கு நடிக்க வேண்டி இருக்குங்க’ என சப்பக்கட்டு கட்டுவார் என நினைக்கிறேன்….இந்த பாடலுக்கு.

இந்த இடத்தில் ‘விலை உயர்ந்த மெசேஜ்’ கூறும் ஷங்கரை பற்றி சொல்லாமல் விட்டால், பதிவு முழுமை பெறாது (அந்த விதத்தில், நான் திரைப்படங்களிலுள்ள ஆணாதிக்கத்தனத்தை பற்றி எழுதும் வரை, ஷங்கரின் பேர் நிலைத்து நிற்கும்). ஒரு மெசேஜ் சொல்கிறேன் என எடுக்கும் படங்கள் அனைத்திலும், ‘நகைச்சுவை’ என்ற பெயரில், பெண்களை இழிவு படுத்துவதை மிகவும் லாவகமாக செய்பவர் இவர்.

மேற்கின் சில பிரபலமான பாப் பாடகர்கள், பாட்டுக் கச்சேரி இல்லாத மேடைகளில், சமூகம் பற்றி தம் கருத்துக்களை பதிவு செய்வர். “ஏன்டா பேச விட்டோம்”,என தொகுப்பாளர்களே அலுத்துக் கொள்ளும் அளவிற்கு!

அப்படியான பேத்தல் பேச்சுக்களுக்கு பெரிதாக செவிமடுப்பது மேற்கில் அரிது. ஒரு கலைஞனை அவனின் கலைக்கு மட்டுமே மதிப்பது ஒரு பெரும்பாலான வழக்கம். நம் ஊரில் அதற்கு நேர் எதிர்.
கதாநாயகர்கள் ஒரு கருத்து கூறினால் (திரைப்படத்திலோ அதற்க்கு வெளியிலோ), அது அவரின் சுயமான கருத்து என நம்பும் அறியாமை நிலவுகிறது.
ஒருவர் புகைப்பிடிக்கும் ஸ்டைலும், கண்ணடிக்கும் ஸ்டைலும், வசனம் பேசும் அழகும் பிடித்திருந்தால், அவர் பேச்சில் உள்ள கீழ்த்தனமான கருத்துக்களும் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்குமோ எனக்கூடத் சில சமயங்களில் தோன்றும்.
நாங்கள் திரைப்பாடல்களின் விமர்சனத்திற்கு Milliblog என்ற பதிவை கொஞ்சம் நம்புவோம். அந்த பதிவர் இளையராஜா பிரியர் எனக் கேள்விப் பட்டுள்ளேன். அது ‘உளியின் ஓசை’ படப் பாடலின் விமர்சனம். ஆஹா ஓஹோ என விமர்சித்திருந்ததால், ‘டவுன்லோட்’ செய்து கேட்டோம்.
இளையராஜாவின் இசையா என பல முறை சந்தேகம் வந்தது….1 நிமிடத்திற்கு மேல் எந்த பாடலையும் கேட்க முடியவில்லை. அன்று தோன்றிய சந்தேகம் தான் இது, “திரை உலகில் ஒருவரை பிடித்திருந்தால், அவரின் காரியங்கள் என்ன கேவலமாக இருந்தாலும், விரும்ப வேண்டிய கட்டாயம் உண்டோ”
ரசிகர்களின் அந்த நம்பிக்கையை நம்பியே அரசியலில் கால் பதித்தவர்கள் M.G.R, விஜய்காந்த், சரத்குமார் போன்றவர்கள். மக்களின் நம்பிக்கையை சூரையாடுபவையே ஈமு கோழி, சென்னை அமிர்தா, ஜாய் அலுக்காஸ் மாதிரியான விளம்பரங்கள்.
நினைத்துப் பாருங்கள், சென்னை அமிர்தாவின் தலைமை செயலாளர் அவ்விளம்பரத்தில், அவர் நிறுவனத்தை புகழ்ந்து பேசினால், எவ்வளவு பெற்றோர் அவர்கள் பிள்ளைகளை அந்த நிறுவனத்தில் சேர்ப்பர்?

செவிடன் காதில் ஊதும் சங்காய் இருக்குமெனினும், இந்த கதாநாயகர்களுக்கும், அவர்களை இயக்கம் இயக்குனர்களுக்கும் என் வேண்டுகோள் இது.
1. ‘மெசேஜ்’ கொடுக்கப் போவதாய் இருந்தால், முதலில் ‘முற்போக்கு என்ற தமிழ் சொல்லின் (ஆம்…அது தமிழ் சொல் தான்!) பொருளை அறிந்துக் கொள்ளவும்.
முற்போக்குச் சிந்தனையாளர்கள் எழுத்துக்களைப் படியுங்கள். சமூக மறுமலர்ச்சிக்கான ‘மெசேஜ்’ கூறுவதாய் இருந்தால், பெரியாரைப் படியுங்கள். உழைப்பாளர்களுக்கு ‘மெசேஜ்’ கூறப் போவதாய் இருந்தால், கார்ல் மார்க்ஸ் உங்களுக்கு உதவலாம்.
புதுசா எதையாவது செய்யும் போது, ஒரு வழி காட்டுதல் தேவை பாருங்க!!
2. “கால காலமா இத சொன்னாத்தான் படம் ஹிட் ஆகுது; நாம ஏன் அத மாத்தணும்”, என்ற எண்ணத்தை துறக்கவும்.
3. “ரொம்ப கஷ்டமா இருக்கும் போலவே…”, என இயக்குனருடன் சேர்ந்து தலையை சொரிகிரீர்கள் எனில், இந்த மெசேஜ் வழங்கும் எண்ணத்தை கை விடவும்.
கோடிக்கணக்கில் ரூபாய் செலவு செய்ய தயாராக இருக்கும் தயாரிப்பாளரை கண்டுபிடியுங்கள். பொழுதுபோக்கை மட்டும் குறிக்கோளாக வைத்து படங்களை எடுத்துத் தள்ளுங்கள். “பொழுதுபோக்குக்காக படம் எடுக்கறீங்க…சமூகத்த மாத்த இல்லியே; அதனால உங்களுக்கு எது வருமோ அத மட்டும் செய்ங்க”

இரண்டு வாரங்களுக்கு முன், வேலையில் நண்பர் ஒருவர், அவர் விரும்பி கேட்ட போட்காஸ்ட் (podcast) ஒன்றை நான் கேட்கும் படி விருப்பம் தெரிவித்தார். englishtamil தளத்தின் podcast, RJ பாலாஜியின் திரை விமர்சனங்கள், மருதையன் பேச்சுக்கள் தவிர பெரிதாக போட்காஸ்ட் கேட்டதில்லை என்பதனால், தளத்தின் முகவரியை வாங்கிக்கொண்டேன்; வெகுவிரைவில் கேட்டு என் கருத்தை கூறுகிறேன் என்ற வாக்குறுதியுடன். போட்காஸ்டின் சாராம்சத்தை கூறாமல், பெண்ணியம் பற்றிய கலந்துரையாடல் என மட்டும் கூறி இருந்தார். வேலை விட்டு வீடு திரும்பும் போது கேட்க முடிவுசெய்தேன்.

நைஜீரியாவில் நடக்கும் பள்ளி மாணவிகளின் கடத்தல் பற்றிய பேச்சுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்க, 15வது நிமிடத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிய பேச்சுக்கள் துவங்கின.
சீனா, இந்தியா, ஸ்வீடன் நாடுகளில் பெண்களின் நிலைமை பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடலில் இடம் பெற்றன. Neo liberalism (புதிய தாராளமயமாக்கல்) எப்படி குடும்ப வன்முறைக்கு (domestic violence) அடித்தளம் போடுகிறது என்ற விளக்கங்கள் மெய் சிலிர்க்க வைத்தன. இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவலை தூண்டிய ஒன்று, ஸ்வீடனில் பாலின சமன்நிலைக்கு அறிமுகப்படுத்த பட்டுள்ள Bechdel சோதனை. Bechdel சோதனை என்பது முதலில் தொலைகாட்சி தொடர்களுக்கு ஒரு அளவுகோலாக அறிமுகப் படுத்தப்பட்டது.
தொடரில் ஒரு காட்சியிலாவது பெண்கள் கூட்டம், ஆண்கள் இல்லாத ஒரு தலைப்பைப் பற்றி பேசுவது போல் அமைந்திருந்தால் அத்தொடருக்கு, நம் ஊரின் U /A,U போன்று, ‘Bechdel’சான்றிதழ் வழங்கப் பட்டது. அதையே பின்னர் திரைப்படங்களுக்கும் பொறுத்த ஆரம்பித்தனர்.
அந்த சான்றிதழ் வழங்கும் முறை தமிழ் திரையுலகில் புகுத்தப்பட்டால், எத்தனை படங்கள் தேறும் என யோசித்தேன்.
“ஆண்கள் இல்லாத பேச்சு தான…நகை, பொடவை, சமையல், கொழந்தை வளர்ப்பு பத்தி பேசிட்டு இருங்கன்னா, பேசிகிட்டே இருப்பாங்க. ரெண்டு நிமிஷம் என்ன சார், ஒரு முழு நீள படமே எடுக்கலாம்”, போன்ற ‘தமாஷ்’ பின்னூட்டங்களில் இருக்கும் அறியாமை சொல்லி விளக்க வேண்டியதன்று.
பாடல்கள் அல்லாத காட்சிகளில் பெண்களை பார்ப்பதே ஒரு அரிய விஷயமாக இருக்கும் போது, 2 நிமிடத்திற்கு பெண்கள் மட்டும் கலந்துரையாடும் காட்சிகளா? “கட்டுபடி ஆகாதுங்க” அல்லது, “அதெல்லாம் யாரு பாக்க போறாங்க சார்” போன்ற ரெடிமேட் விடைகள் தயாராக இருக்கும்.

‘ஒரு பெண்ணானவள் ஆணுக்கு ஒரு போகப் பொருளே; சமையலறை ஒரு பெண்ணின் ‘திறமையை’ வெளிப்படுத்த உருவாக்கப் பட்ட ஒரு இடம்; வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் வீட்டில் முக்கிய முடிவுகளில் மூக்கை நுழைக்க மாட்டாள்”, “எதிர்த்து பேச எத்தனிப்பாள் …”நீ இல்லனா நான் எங்க போவேன்”, “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”, என நீ புகழ்ந்து தள்ளியவுடன், பொட்டிப் பாம்பாய் அடங்குவாள்”, இவை ‘ஒரு பெண்ணின் குணாதிசயங்கள்’ என சினிமா வலியுறுத்துபவை. நகைமுரண் இதுதான்…சினிமா யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதனாலோ என்னவோ, நிஜ வாழ்க்கையிலும் சமூகத்தில் ஒரு பெண்ணின் ‘பங்களிப்பு’ இந்த குறுகிய வட்டத்திற்குள் தான் அடங்குகிறது.
“வேலைக்கு போகணும், வீட்ல சமைக்கணும், கொழந்தைகள பாத்துக்கணும்…எனக்குன்னு டைம் செலவழிக்கறதே குதிரை கொம்பா இருக்கு…இதுல அரசியல் பத்தின பேச்சா…காமெடி கீமடி பண்ணலியே”, என்ற மனைவியரின் புலம்பல், மீண்டும் சமூகத்தின் ஆண் ஆதிக்க மனநிலையையும், பாலின ஏற்றத்தாழ்வையையும் உறுதி படுத்துகிறது.
அவளைப் போல், அவனும் திருமணமனாவன், அவனுக்கும் குழந்தைகள் உண்டு, அவனும் வேலை பார்கிறான்; அவனுக்கு அரசியல் பற்றியும், நாட்டு நடப்பு பற்றியும் பேச ‘சந்தர்ப்பம்’ கிடைக்கிறது; ஆனால் அதே தகுதிகள் உடைய பெண்ணுக்கு பொது கருத்துக்கள் பற்றிய உரையாடல்கள், வெட்டிப்பேச்சாக தெரிகிறது.

சிறு வயதிலிருந்தே ஒரு சிறுமி வீட்டில் பார்க்கும் காட்சி இதுதான்…அம்மாதான் அப்பாவிற்கு எல்லா பணிவிடையும் செய்கிறாள்.
வீட்டிலோ அல்லது வெளி தளங்களிலோ சமூகப் பிரச்சனைகள் பற்றிய பேச்சுக்கள் அரங்கேறும் போதெல்லாம், கூட்டத்தில் ஆண்களே உள்ளனர். “அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்”, என்ற பேச்சுக்கள் அவள் காதில் ஒலித்த படியே இருக்கிறது.
அம்மா அரசியலில் இடம் பெறுவது தேர்தல் நேரங்களில் மட்டும்…அதுவும் அப்பா கூறும் கட்சிக்கே அம்மாவின் வோட்டு! அரசியல் மட்டுமின்றி, சமூகம் பற்றிய எந்த கருத்து பரிமாற்றமும் பெரியம்மா, சித்தி, அம்மா கூடி அரட்டை அடிக்கும் போது இடம் பெறுவதில்லை. இதையே பிரதிபலிக்கும் சினிமாக்களிலும், பெண்கள் கூட்டமாய் பேசுவதெல்லாம் ஒன்று ‘கண்ணை பறிக்கும்’ ஆண்மகன், நகை அல்லது ஆடை பற்றியே இருக்கிறது. கொசுறுக்கு, ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘வேலை வெட்டி இல்ல…அதுதான் அரசியல் பேசிட்டு இருக்காங்க”, போன்ற உப்புச்சப்பற்ற மேலோட்டமான கருத்துக்கள்.
பள்ளியில் இவை பாடமாக இல்லாத போதும், சுற்றி நடக்கும் விஷயங்கள் அந்த பெண்ணின் ‘நான் பெரியவள் ஆன பின் , எப்படி இருக்க வேண்டும்”, என்ற கேள்விக்கு செவ்வனே பதில் அளிக்கிறது. அவளுக்கு தெரியாமலே அவளை அந்த ‘வட்டத்திற்குள்’ வாழ தயார் படுத்துகிறது சமூகம்.

feminism and bechdel

“இல்லையே…’அவள் அப்படித்தான்’, அவள் ஒரு தொடர்கதை மாதிரியான படங்கள், பொண்ண ஒரு தையிரியமான கதாப்பாதிரத்துல தான காட்டி இருக்கு”, என கூற இருப்பவர்களுக்கு,
முதலில்,
இன்னும் 1970களில் வந்த படத்தை 2014 இலும் ஒரு விவாதத்தில் பயன்படுத்துவது, தமிழ் சினிமாவின் ஹிமாலய தோல்வியை தெளிவாக காட்டுகிறது. இவ்விரு படங்களும், அக்காலக் கட்டத்தில் (இந்த காலத்திலும்) விதிவிலக்காக இருந்த (இருக்கும்) போதும், இவ்விரு திரைப்படங்களின் முடிவிலும், கதையின் நாயகி விரும்பி ஆசைப்பட்டது கிடைக்காமல் ‘விதியின்’ நாடகத்திற்கு பலி ஆகிறாள்.
இந்த முடிவினால், படம் முழுக்க அவள் வெளிப்படுத்தும் துணிச்சலும், தனக்கு இழைக்கப் படும் அநீதியை தட்டிக்கேட்பதும், ‘தோல்விக்கான ஏணிப்படிகளாகவே’ பார்ப்பவர் மனதில் பதிகிறது.
சிறு வயதில், அவள் ஒரு தொடர்கதையோ அது மாதிரியான துணிச்சல் மிகுந்த கதாநாயகி இருக்கும் திரைப்படமோ பார்த்த நியாபகம். முயற்சி என்ற ஒன்று இருந்தால், வெற்றி போன்று தோல்வியும் சகஜமே. அப்படி அத்திரைப்படத்திலும் நாயகிக்கு ‘தோல்வி ஏற்படுகிறது. “என்னமா ஆட்டம் போட்டா…அதுதான்; நல்லா வேணும்”, இது என் வீட்டு பெரியவர்கள். அங்கு யாரும் எனக்கு “இப்படி இருக்கக்கூடாது”, என சொல்லித் தரவில்லை. ஆனால்
“உனக்கு சரியென படும் கருத்து, சமூகத்திற்கு எதிராய் இருந்தால், அதை அப்படியே பொத்தி வைக்கவேண்டும். வெளி வராமல் இருக்கவோ, முற்றிலுமாக மறக்கவோ முடிந்த வரை முயல வேண்டும்” என்ற ‘பாடம்’ மட்டும் தெளிவாக விளங்கியது.
இந்த இடத்தில் என்னை ஏமாற்றியது என் சுற்றம் மட்டும் இல்லை…அந்த திரைப்பட இயக்கனுரும் தான்.
சினிமாக்களில் இப்படி எனில், இதர சமூக ஊடங்கங்களிலும், அவள் தலை தூக்க நினைக்கும் போது, நறுக்கென குட்ட தயாராக இருக்கிறது சமுதாயம் (ஆணாதிக்கத்தை பெருமையுடன் நிலைநிறுத்த விரும்பும் ஆண்களும், பெண்ணடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பெண்களும்); அந்த மானிட பதர்களை பொருட்படுத்தாமல் தம் கருத்துக்களை எடுத்துரைக்கும் பெண்களும் இருப்பது ஒரு ஆறுதல்.
இப்படி ஒரு தனி மனிஷியாக தலையெடுக்கவே தடுமாறும் பெண்ணினம், ஒரு அணியாய் திரண்டு சமூக பிரச்சனைகளை பேசுவது, சமூகத்தில் ஜீரணிக்க முடியாத ஒன்று தான்.

இங்கு தான் நல்ல திரைப்படங்களின் பங்களிப்பு தேவைப் படுகிறது.
சினிமா என்பது மிகவும் வலிமையான ஒரு ஊடகம்; வளமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க துணை புரியும் ஒரு கருவி சினிமா.
கதாநாயகர்கள் புகை பிடிக்கும் ‘ஸ்டைல்’ஐ ரசித்து, நாமும் முயற்சிக்க வேண்டும் என விபரீத முடிவு எடுத்த இளைஞர் கதைகளும், அவர் “இனி புகைப் பிடிக்க மாட்டேன்’ என முடிவெடுத்த போது, அப்பழக்கத்தை அறவே துரந்த இளைஞர் கதைகளும் உண்டு.
“தணிக்கை குழுவின் நெருக்கடியான விதிமுறைகளுக்கு உற்பட்ட படம் ஒன்று எடுக்க வேண்டும், பணம் போட்ட தயாரிப்பாளருக்கு கேளிக்கை வரி போன்று பிரச்சனைகள் வரமால் பார்த்துக் கொள்ளவேண்டும்”, என இன்னும் பல தடங்கலும் இன்னலும் இருக்கும் வரையில், எங்க ‘கற்பனை குதிரை’ ஓடற வேகத்துக்கெல்லாம் படம் எடுக்க முடியாது..அந்த நெலமை மாறர வரைக்கும், அரைச்ச மாவையே அரைப்போம்; சிங்கம், போக்கிரி, ஒஸ்தி, சிவகாசி மாதிரி படத்த எடுத்துவிட்டுகிட்டே இருப்போம்”, என தப்பித்துக்கொள்ள நினைக்கும் இயக்குனர்கள், நம் கண்முன்னமே மறைவர் என்பதில் ஐயமில்லை.

இந்த இடத்தில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம் பெற்ற இயக்குனர் ராமின் நேர்க்காணல் தான் நினைவுக்கு வருகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை பற்றி பேசும் போது, அதில் சத்யராஜ் கதாப்பாத்திரத்திற்கு அவர் மகள் வேற்று சாதி பையனை விரும்புவது தெரிய வருகிறது. சமூகத்தை திருப்தி படுத்த கோவத்தில் அவளை கொன்றுவிட்டதாக கூறும் அதே வேளையில், பெண்ணையும் பையனையும் ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாமல் குடிவைக்கிறார். ஊருக்காக வேண்டுமெனில், ஒரு தந்தை சாதி கட்டுப்பாடுகளை கட்டிக்காப்பது போல் வேஷம் போட்டாலும், செல்ல மகளின் விருப்பமா, சமூக விதிமுறைகளா என வரும் போது, விதிமுறைகள் விசிறி அடிக்கப் படுகின்றன. தெளிவான கருத்து என்ற போதிலும், படத்தின் முடிவில் மட்டுமே வெளிச்சத்துக்கு வரும் ஒரு உண்மை இது. எத்தனை பேருக்கு விளங்கி இருக்கும் என்றால், அது பார்ப்பவரின் சமூக நிலைமையை பொருத்தது. ராமின் நேர்காணல் பார்க்கும் வரை எனக்கும் அந்த படம் இன்னொரு ‘நகைச்சுவை என்ற பெயரில் 3 மணி நேர பொழுது வீணாக்கல்’ என்றே தோன்றியது. இதையே சத்யராஜ் மாதிரியான ஒரு தந்தை பார்க்கும் போது, சமூகத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டும் என நினைத்திருந்தால் அந்த முடிவை மறு ஆலோசனை செய்ய வாய்ப்புகள் உண்டு; முடிவை மாற்றிக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.
இதே போன்று சமூகத்தின் பல்வேறு தளங்களில் பெண்ணின் பிரச்சனைகளுக்கு, பாதிக்கப் பட்ட பெண்ணே தீர்வு காணும் போது, நிஜ வாழ்க்கையிலும் அந்த பிரச்னையை சந்திக்கும் பெண்ணுக்கு, அந்த கதையின் நாயகி ஒரு நம்பிக்கை ஒளியாய் தெரிகிறாள். ‘விதி விட்ட வழி’ என்பதை மீறி, இன்னொரு வழியும் உண்டு என உணர்கிறாள்.

10 வருடங்களுக்கு ஒன்றாய் இல்லாமல் அவ்வப்போது இது மாதிரியான படம் வெளிவரும் போது, மகளிரின் ‘வெறுமனே’ உரையாடல்களுக்குள் அவை நுழைய வாய்ப்புகள் அதிகரிக்கும். கூட்டத்தில் அதே மாதிரியான பிரச்சனை பேசப்படும் போது, “அந்த படத்துல வர்றா மாறி செஞ்சா என்ன?”, என கூட்டம் பகுத்தறிய ஆரம்பிக்கும். சமூகம் சாமியாக வழிபட வலியுறுத்தும் வீட்டின் ஆண்மகன் துணையின்றி பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க ஒரு துணிவு பிறக்கும். “சரி ஆரம்பிச்சுடுவோம்” என கதையின் நாயகனுக்கு பதில் ஒரு நாயகியை வைத்து, ‘அந்நியன்’, ‘நான் கடவுள்’, ‘சிடிசன்’ மாதிரியான படம் எடுக்க இயக்குனர்கள் விரைவது,
“விடிய விடிய சாதி ஒழிப்பு பற்றி பேசிவிட்டு, சாதி கொடுமையை அழிக்க வந்த விடிவெள்ளி மோடி” என்பது போன்றது. தமிழ் திரையுலகில் இல்லையெனினும், இதர ஊடங்கங்களில் ஆறுதல் கிடைக்கத்தான் செய்கிறது.
“இது படம்” என பெருமிதம் கொள்ள வைத்தது, சமீபத்தில் பார்த்த ஹிந்தி படம் ‘queen’. வெளி உலகை முதன் முதலாய் பார்க்கும் நாயகி, தன் வாழ்வை தன் விருப்பத்திற்க்கேற்ப மாற்றிக்கொள்ளும் கதை.
இதை போன்று, YouTubeஇல் கண்டு ரசித்தவை ‘Havells’சமையல் உபகரணங்களுக்கான விளம்பரங்கள்.

“இது சரியில்லையே”, என முடிவு செய்து, சமூகத்தை எதிர்த்து குரல் எழுப்பும் பெண்கள் மற்றும் ‘பெண் விடுதலை அவசியம்’ என நினைக்கும் சில ஆண்கள் உதவியுடன், பெண்ணடிமைத்தனம் சிறுக சிறுக அழிவது நிச்சயம். இந்த தருணத்தில், தெளிவான பெண்ணிய கருத்து நிறைந்த திரைப்படங்கள், தட்டுத்தடுமாறி முன்னேறி வரும் பெண்ணினத்திற்கு, இன்னொரு ஏணிப்படியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தாலியின் பெருமைகளை தமிழ் மெகா சீரியல்கள் அக்கு அக்காய் பிரித்து வைக்கும் போதெல்லாம் அது பற்றிய என கருத்துக்களை எழுத தோன்றிய போதும், சமீபத்தில் மேற்கொண்ட இந்திய பயணம் அந்த நோக்கத்தை இன்னும் திறன் பட செய்தது.

பெரிதாய் ஆர்வம் இல்லாத காரணமா இல்லை என் சோம்பேரித்தனமா தெரியாது, ஆடம்பரமாக அலங்கரித்துக் கொள்வதிலோ, தங்க நகைகள் அணிவதிலோ பெரிதாக விருப்பம் இருந்ததில்லை. அப்படியே ஒரு திருமணத்திற்கு அல்லது உறவினர் வீட்டிற்கோ செல்லும் போது தங்க நகை அணிவது கட்டாயம் ஆனதெனில், இருப்பதிலேயே மெலிசான ஒரு சங்கிலி அணியவே விரும்பியதுண்டு.

திருமண பேச்சு அடிபட ஆரம்பித்த போதெல்லாம், அந்த படபடப்பு, மகிழ்ச்சி அனைத்தும் இருந்த போதிலும், அந்த தடியான தாலி கொடி கழுத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டுமா என்ற ஒரு கடுப்பு நிச்சயம் இருந்தது; ஏதாவது பேசி ஒரு மெலிசான தாலிக்கு சீக்கிரம் மாறி விட வேண்டும் என முடிவு செய்தேன்.

அனால் மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்த காலத்தில் கூட அந்த தாலியில் என் கணவனின் உயிர் ஊசல் ஆடுகிறது என நினைத்ததில்லை. என்னை ‘தொட்டு தாலி கட்டியவருக்கும்’ தாலி போன்ற சடங்குகளில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அந்த தாலிக் கொடியை கழற்றினேன்.
திருமணத்திற்குப் பிறகு, பகுத்தறிவு சிந்தனைகள் மெல்ல தலை தூக்க ஆரம்பித்த போது, பெரியாரின் பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை விரும்பி படிக்க ஆரம்பித்தேன். பண்பாடு, கலாச்சாரம் என்ற பேரில் ஒரு பெண்ணுக்கு 1008 அடக்குமுறைகளை இந்த சமூகம் செவ்வனே அமைத்திருந்தது புரிந்தது.

பல முறை இந்த ஆணாதிக்க சமூகம் அடைந்துள்ள மாபெரும் வெற்றியை நினைத்து வியந்தது உண்டு.
அந்நேரங்களில் எல்லாம் நினைவுக்கு வருவது இந்த கதை (யாரும் சொல்லிகேட்டதா இல்லை படித்ததா அல்லது மூக்கணாங்கயிறு என யாரோ போட்ட கோட்டில் நான் போட்ட ரோடா என நினைவில்லை!!!)
மாட்டு வண்டி தன் கட்டுப்பாட்டில் இருக்க, வண்டி ஓட்டுபவர் மாட்டிற்கு மூக்காணங்கயிறு அணிவிக்கிறார்; தினந்தோறும் காலையில் இவ்வேலை நிகழ்கிறது. அவர் அதை ஒரு நாள் அணிவிக்க மறக்கும் போது, மாடு அதனை எடுத்து வந்து கொடுக்கிறது; இப்படி அவர் தொடர்ந்து மறப்பதால், அந்த மாடும் இனி இதை கழற்ற வேண்டாம் என தன் மூக்கிலேயே மாட்டிக்கொள்கிறது. சிறிது நாட்களில் தன் வேகத்தின் மீது உள்ள நம்பிக்கை மறைகிறது; அந்த மூக்கணாங்கயிறும் அதை லாவகமாக அசைக்கும் வண்டி ஓட்டுனரும் தான் தன்னை நல் வழி நடத்துகின்றனர் என நம்ப ஆரம்பிக்கிறது.
சில சமயங்களில், வேகமாக செல்லவோ அல்லது வேறு விஷயங்கள் மேல் இருக்கும் கோவத்தை வெளிப்படுத்தவோ, ஓட்டுனர், சாட்டையினால் அடித்தால், அதையும் பொறுத்துக்கொள்ள தன்னை தயார் செய்து கொள்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள், மாட்டு பொங்கல், சில சமயங்களில் சும்மாவேனும் ஓட்டுனர் ஜொலிக்கும் ரிப்பன்களையும் மணிகளையும் மாட்டும் போது, “பரவாயில்லையே என்னமா கவனிச்சுக்கறாரு”, என பெருமிதம் கொள்ள ஆரம்பிக்கிறது.

மூக்கணாங்கயிறுக்கு பதில், ஒரு பெண்ணை அடக்க தாலியை பயன்படுத்துவோம் என முடிவு செய்து, “அய்யோ இவளால வாய் பேச முடியுமே, கொஞ்சம் சிந்திச்சு ஏதாவது கேட்டுட்டா”, என பதறுகிறது ஆண் ஆதிக்க சமூகம்.
ஒரு படி மேலே சென்று, “ஒரு பெண்ணுக்கு அழகு…அச்சம் மடம் நாணம்”, “அடக்கமா இருந்தா அந்த பொண்ண எல்லாரும் கைக்கூப்பி வணங்குவாங்க”, மாதிரியான கோட்பாடுகளை பரப்புகிறது. அதிலிருந்து சிறிது விலகும் பெண்ணை, தூற்றி, ‘பெண் குலத்திற்கே ஒரு இழுக்கு’ என அவளுக்கு பட்டம் கட்டுகிறது. அவளை ‘ஒரு குடும்பப் பெண் எப்படி இருக்கக்கூடாது’ என்பதற்கு ஒரு உதாரணமாய் வருங்கால சந்ததியருக்கு போதிக்கிறது.
முளையிலேயே கிள்ளி விட்டதனால், அந்த குழந்தையே மாற்றுக் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் வரை, சமூகமும் அதன் வழி நடக்கும் பெற்றோரும் வாழ்வியல் கற்பிக்கும் ஆசான், அவர்கள் வகுத்த கோட்பாடுகளே வேதவாக்கு!!

இந்த தெளிவு கிடைத்த பிறகு, அந்த தாலி கயிறும் அது சம்பந்தப்பட்ட சடங்குகளும் பெண்மைக்கு ஒரு இழுக்காக மட்டுமே எனக்கு தெரிகிறது. அதனால் இம்முறை இந்தியா செல்ல தயாரான போதும், அந்த தாலி கயிறுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

‘எதுக்கும் இருக்கட்டும்’ என கைப்பையில் திருமண சான்றிதழை வைத்துக்கொண்டேன் (ஆண் ஆதிக்க அறிவிலி பேய்கள் பிரச்னை செய்தால், பெண் விடுதலை பற்றி பாடம் எடுக்க விரும்பவில்லை)

இந்தியாவில் நான் பார்த்த திருமணமான பெண்கள் நவ நாகரீக உடையோ அல்லது புடவையோ…எது அணிந்திருந்த போதும், கழுத்தில் அந்த தாலி மட்டும் கட்டாயம் தொங்கியது.
நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த பெண்களும், உறவினர் குழுக்களில், ஒரு பெருமையுடன் தாலிக்கொடியினை வெளியே எடுத்த படி அதற்கு கும்குமம் வைப்பதை கண்டேன்.
ஆண்களும் “அது பொம்பளைங்க பிரச்சனை; என் தலைய போட்டு உருட்டாம இருந்தா போதும்”, என நினைப்பார்களோ என்னவோ, அந்த தாலி கயிறுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தான் இருந்தனர். இந்த இடத்தில், “இல்லையே நானே விரும்பித் தான் அத போட்டுக்கறேன்; அந்த தாலி என்ன ஒரு முழு பொண்ணா ஆக்குது”, என பெருமிதம் அடையும் வேறு கிரகத்து பெண்கள் பற்றி எனக்கு பெரிதாக கருத்து இல்லை.

யோசித்து பார்த்தேன்…ஒரு பெண்ணை அடிமைப் படுத்த மட்டும் கண்டுபிடிக்கப் பட்ட இந்த மஞ்சள் நிற மூக்கானங்கயிற்றின் பயன் தான் என்ன…யோசனையின் விளைவு இனி…

குறிப்பு: பின்வரும் வரிகளில், ‘வேலி’ என்ற சொல், ‘செல்வம்’, ‘பாதுகாப்பு’, ‘சப்பக்கட்டு’, ‘அடக்குமுறை’ என பல பொருள் பட்டு வரும். விருப்பத்திற்கு ஏற்ப பொருள் எடுத்துக் கொள்வது வாசகர் விருப்பம்.

தாலி

“லாக்கர்களில் வளையல்களும், அட்டிகைகளும் பதுங்கிக் கிடக்க,
பளபள வென கழுத்தில் மின்னும்போது, கொள்ளை அடிப்பவருக்கு வேலி.

குழந்தைகளின் கல்வி, சொந்த வீடு என சிறுக சிறுக காசை சேர்த்து வைப்பவருக்கு, ‘கடுகு அளவு தங்கம் இன்னிக்கி வாங்கினா, கடல் அளவுக்கு பெருகும்” என அட்சைய திரிதியை என்ற நன்னாளை அறிமுகப்படுத்தியே முதலாளிகளுக்கு வேலி

“அவள் கழுத்தில் தொங்கும் தாலி…நம் உயிர் பத்திரமாக படுத்து தூங்கும் தூளி”, என
100% நம்பிக்கை உடைய அவதாரபுருஷர்களுக்கு வேலி

“வெள்ளை காகம் குட்டிப்போட்டது, தாலிக்கு ஆபத்தாக முடியும்;
பரிகாரம் செய்தாக வேண்டும்”, என குறிசொல்லி, மனைவியரின்
‘அறியாமை கண்களை’ திறந்து வைக்கும் ஜோதிட சிரோன்மணிகளுக்கு வேலி

“என்னதான் ஜீன்ஸ், குர்தா எல்லாம் போட்டாலும், வழி வழியா வரும்
கலாச்சாரத்த கைவிட முடியுமா?? தடியா ஒரு மாடல் கொடி ஒன்னு , மெலிசா செயின் மாதிரி இன்னொன்னு”
என பாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் மங்கையரின் ‘நற்சேவை’யில்
நேரத்தை முதலீடு செய்யும் பொன்கொல்லர்களுக்கு வேலி

“அவ கழுத்துல தாலி போடறது என் ஜோலி…அத பாத்துட்டும் அவள சைட் அடிக்கறவன்
ஆவான் காலி”, என நிம்மதி பெருமூச்சு விடும் தொடநடுங்கி கணவர்களுக்கு வேலி

“அவ முகத்துல முழிச்சாலே பாவம்; வீட்ல ஒரு ஓரமா உக்கார வேண்டியது தான”, என விஷம் கக்கி,
மனிதத் தோலில் உலாவும் பீதிண்ணி நாய்கள், கைம்பெண்களுக்கு போடும் வேலி

“கும்குமம் மஞ்சள அந்த தாலி மேல வைக்கும் போது, அவர் தலை மேல
எம்பெருமான் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வைப்பாரு”, என அனுபவசாலிகளின்
அருள்வாக்கை கேட்டு தலையாட்டும் மனைவியருக்கு வேலி

“தாலி நான் போடமாட்டேன்…என் புருஷன் போடலியே”னு அளக்கரா…எல்லாம் திமிரு”,
என உருப்படியான வேலை எதுவும் இல்லாது ஊர் வம்பு
பேசும் துருப்பிடித்த மூளைக்காரர்களுக்கு வேலி

இப்படி அந்த தாலிக்கொடியுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு ‘நன்மை’ இருக்கும் போது, அந்த சங்கிலி ஒரு திருமணமான, அதிலும் பெண் கழுத்தில் மட்டும் தான் தொங்க வேண்டும் என்பது ஒரு நெருடல். இன்னும் சிறிது யோசித்து பார்த்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த நன்மையும் அந்த பெண்ணிற்கு காலனாவிற்கு பயன்படாது; பின்னர் ஒரு விலங்காய் மட்டும் விளங்கும் அந்த தாலி கொடியை, உயிரைப் போல் பாதுகாக்கும் பெண்களின் வினோத மனப்பான்மை இன்னொரு பெரிய நெருடல்.